Sunday, August 26, 2012

588. ஆசிரியர்களும் மாணவர்களும் பார்க்கணும் ...

*


சும்மா சொல்லக்கூடாது .. விஜய் தொலைக்காட்சி நல்ல சில விஷயங்களைத் தொடர்ந்து தருகிறார்கள்.

சூப்பர் ஜூனியர் நிகழ்ச்சி .. ரொம்ப ஜவ்வாக இழுக்கிறார்கள். ஆனாலும் கடைசி ஏழு பேருக்கு ஏழு பெரிய இசை விற்பன்னர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி. அதுவும் கெளதம் பாடியதும் அனைவரும் இசைக்கு அளித்த மரியாதையையும், அந்தப் பாடலைப் பாடிய பையனைப் பாராட்டியதும் (இது ஒரு ரியாலிட்டி ஷோ என்ற உண்மை ஒரு பக்கம் இருந்தாலும்) மிக அழகாக இருந்தது.   நல்ல பில்ட் அப் ...

சரவணன் மீனாட்சி .. சும்மா சொல்லக்கூடாது. அழகான கதாநாயகி; விளையாட்டுக்கார கதாநாயகன்; அசத்தலான அப்பா .. நிறைய இளைஞர்களுக்குப் பிடித்த காதல் ...இதையெல்லாம் விட எனக்குப் பிடித்தவைகள் - ஆரம்பத்திலேயே ஜாதகத்திற்கு கொடுத்த அடி ரொம்ப பிடித்தது. எனக்குத் தெரிந்து ஜாதகத்தைத் தூக்கி எறிந்த முதல் நிகழ்ச்சியாகத் தோன்றுகிறது. அதனாலேயே ரொம்ப பிடிச்சிப் போச்சு. அடுத்து வரதட்சணை - அந்த விஷயத்தைக் கையாண்ட வகை பிடிக்காவிட்டாலும் அதையும் அழகர் - இயக்குனர் - ஒரு பிடி பிடித்திருந்தார். ஏமாற்றிய கணவனைத் தூக்கி எறிவது, விவாகரத்து பெற்ற பெண்ணின் அடுத்த திருமணத்தை எளிதான ஒரு நிகழ்வாகக் காட்டியிருப்பது ... எல்லாம் கொஞ்சம் புதிதுதான்.  ஒரு சில சீன்களில் மட்டும் வந்த நண்பன் சுப்பையா, இன்னொரு மீசைக்காரர் ... அசத்தல் நடிப்பு; பாராட்டு.  TRP rating என்பதற்காக இரு பொது நிகழ்ச்சிகளைக் கொண்டாடி சீரியலைப் புது மெருகேற்றியது நல்ல  உத்தி. 

இதையெல்லாம் தாண்டி இப்போது வரும் 7-ம் வகுப்பு C பிரிவு ரொம்ப நல்லா இருக்கு. ஆசிரியர்களும், இளம் மாணவர்களும் கட்டாயம் பார்க்கணும். Sydney Poitier நடித்த TO SIR WITH LOVE படத்தை மிகப் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்திருக்கிறேன். சரி .. அதைப் பார்த்து ஏதோ உல்டா பண்ணப் போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் நிச்சயமாக அந்தப் படத்தை விட இந்த சீரியல் நன்றாக இருக்கிறது.

அங்கே தன்னோடு குத்துச்சண்டை போட வரும் மாணவனை ஆசிரியர் குத்துச்சண்டை பழக்குபவனாக ஆக்குவார். ஆனால் இங்கே சண்டைக்காரப் பையனை ஆசிரியர் அஹிம்சாவாதியாக மாற்றுகிறார். ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களின் நலன் பேரில் எடுக்கும் முயற்சிகள், அவர் மாணவர்களை நடத்தும் முறை ... நன்குள்ளன. நிகழ்வுகளை மிக இயல்பாக வருவதாக அமைத்துள்ள இயக்குனர் ராம் விநாயக்கிற்கு வாழ்த்து. நடிகர்கள் தேர்வும் மிகச் சரியாக உள்ளது. ’இளைய பாரதிராஜா’ மாதிரி வரும் கதாநாயகன் சாதாரணத் தோற்றத்தோடு வந்து, அழகாக, இயல்பாக நடிக்கிறார்.  சரியான  வயதுக்குரிய பிள்ளைகளை நடிக்க வைத்திருப்பது பாராட்டுதற்குரியது. குருவியும், தலைமை ஆசிரியரும் நல்லா செஞ்சிருக்காங்க.  கொஞ்சம் ட்ராமாட்டிக்காக சில காட்சிகள் இருந்தாலும் மொத்தத்தில் எனக்கு மிகவும் பிடித்த சீரியல் இப்போது இதுதான்.

வித்தியாசமான, பாராட்டுகுரிய சீரியல். இந்த சீரியலை எடுத்து அளிக்கும் விஜய் தொலைக்காட்சிக்கு பாராட்டு.

*

 

Friday, August 24, 2012

587. தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்திற்கு என் பாராட்டு

*

அந்தக் காலத்தில்  ....  ஓரிரண்டு தமிழ்ப்பக்கங்களை இணையத்தில் பார்த்திருக்கிறேன். சரி.. தமிழில் கூட இனி கணினியில் எழுதலாம் போலும் என்று மட்டும் அறிந்திருந்தேன். வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் ஏதாவது எழுத வேண்டும் என்ற ஆவலோடு இருந்த காலம் அது. முடிந்தால் நாமும் இதைப் போல் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். தற்செயலாக் சென்னை சென்றிருக்கும் போது சென்னை மரீனாவில் பதிவர் கூட்டம் என்ற செய்தியறிந்து துணிந்து நானும் சென்றேன். நான் ஒரு பதிவனாக இல்லையே; நம்மை அனுமதிப்பார்களா என்று பயந்து போய் அந்தக் கூட்டத்தில் அனுமதி வாங்கி ‘நல்ல பிள்ளையாய்’ வகுப்பில் எப்போதும் உட்கார்வது போல் கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டேன். போனா போகுதுன்னு என்னையும் அந்த மக்கள் ஆட்டையில் சேர்த்துக் கொண்டார்கள். நானூத்திச் சில்லறை பதிவர்கள் இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். ஆஹா .. முதல் ஐந்நூறு தமிழ்ப் பதிவர்களில் ஒருவனாக ஆகிவிட வேண்டுமென்று முடிவெடுத்தேன். 24.4.2005-ல் பதிவனாகவும் ஆனேன். இரண்டாண்டுகள் எழுதி, எப்படியோ ‘நாலு பேருக்கும் தெரிந்த ஒரு பதிவனாக’ ஆனேன்.  ஆகஸ்ட் 5ம் தேதி, 2007ல் சென்னை பதிவர் பட்டறை ஒன்று நடந்தது. மிக ஆவலாகக் கலந்து கொண்டேன். மிக நன்கிருந்தது. எத்தனை அன்பான முகங்கள். ஆவலாகப் பேசிய பதிவர்கள். மிக இனிமையான நாளாக அன்று இருந்தது. நாள் முழுமையும் பல நிகழ்ச்சிகள் மூலம் எல்லோரையும் கட்டிப் போட்டு வைத்திருந்தார்கள். மாலை வந்த போது பிரியும் கவலையும் வந்தது.

26.8.2012. ஐந்து ஆண்டுகள் கழித்து அடுத்து சென்னையில் ஒரு கூட்டம். கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலிருப்பினும் கலந்து கொள்ள முடியாமல் போயிற்று. ஆயினும் நடக்கப்போகும் நல்ல  நிகழ்வுகளுக்குக் காத்திருக்கிறேன். ஆண்டுக்கொரு முறை இப்படி எல்லோரும் கலந்துரையாடினால் மிக நன்றாக இருக்கும் என்றும் தோன்றுகிறது.

இம்முறை பலரும் முனைந்து, முன்கூடி தேரிழுத்து, குழுமத்தைக் கூட்டியிருப்பது கண்டு மகிழ்ச்சி. அதுவும் புலவரய்யா ராமானுஜம் போன்றோரின் ஆக்கப்பணிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

தமிழ் வலைப்பதிவர் குழுமம் இனிதே கூடி, நல்லன பலவும் பேசி, வெற்றிகரமாக, இனிமையாக நடந்தேற எனது வாழ்த்து.*


 

Sunday, August 19, 2012

586. ரம்ஜான் ஸ்பெஷல்


  A  PERFECT  INTROSPECTION  
OF  A  MUSLIM.


*
Have you ever seen Arab Sheikhs protesting the killing of Muslims in Myanmar or their citizens?


*
19.8.2012   THE HINDU - OPEN PAGE
http://www.thehindu.com/opinion/open-page/article3792355.ece

writer's blog: http://www.anindianmuslim.com/2012/08/excessive-emotions-indian-muslims-must.html
================================================================
*
anindianmuslim.com என்ற பதிவில்  indscribeat என்ற புனைப்பெயருடன் எழுதி, 19.8.12-ல் இந்து தினசரியில் வந்த ஒரு கட்டுரையின் சில பகுதிகளை மொழி பெயர்த்துத் தந்துள்ளேன்.

================================================================
*
OUR HEART MUST BLEED FOR EVERYONE ...
NOT JUST FOR MUSLIMS
*
 
Kashmiri Dukhtaran-e-Millat (Daughters of the Nation) activist demonstrate during a protest in Srinagar on August 17, 2012. The demonstrators protested against  sectarian violence on Rohingya Muslims in Myanmar. Myanmar’s government considers the estimated 800,000 Rohingtya in the country to be foreigners while many citizens see them as illegal immigrants from Bangladesh and view them with hostility.

*
***  டெல்லியில்  அக்பராபாதி மசூதிப் பிரச்சனைக்காக நடந்த எதிர்ப்பிலும், மும்பையில்  மையன்மாரில் நடந்த  பிரச்சனைக்கு எதிரான வன்முறையிலும், அஸ்ஸாமில் நடந்த வன்முறையும் இந்திய இஸ்லாமியருக்கு ஒரு விழிப்புணர்வைத் தர வேண்டும்.

***  1970களிலும், 80களிலும் உருது செய்தித்தாட்கள் பலவும் பாலஸ்தீனர்களைப் பற்றி வண்டி வண்டியாக எழுதிக் குவித்தன. அதுவே அவர்களை ஆட்டி வைத்த பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் இந்தியாவில் பாபர் மசூதி விவகாரமோ, குஜராத் விஷயமோ தலையெடுத்த போது எந்த இஸ்லாமிய நாடு இந்திய முஸ்லீம்களுக்காகக் கண்ணீர் சிந்தியது? எந்த நாட்டிலிருந்தும் இவைகளை எதிர்த்து ஏதேனும் குரலெழுந்ததா?

***   நமது இந்துச் சகோதரர்கள் சிறுபான்மையருக்கான நியாயங்களுக்குக் குரல் கொடுத்து வந்துள்ளார்கள்.

*** ஆனால் எங்கோ ஒரு தூர அயல் தேசத்தில் இஸ்லாமியருக்கு ஏதேனும் பிரச்சனையென்றால் இந்திய இஸ்லாமியர்கள் போராட தெருவுக்கு முதல் ஆளாக வந்து விடுகிறார்கள். ஆனால் இஸ்லாமியரே இஸ்லாமியரைக் கொல்லும் போதும், அஹமதியாக்களோ, ஷியாக்களோ இஸ்லாமிய நாடுகளில் வெட்டிக் கொல்லப்படும்போதும் அவ்வாறு அவர்கள் வருவதில்லை.

***   எதற்கெடுத்தாலும் சவுதியை அண்ணாந்து நோக்கும் நம் இஸ்லாமியர்கள் அங்கு பெண்களுக்கோ, சிறுபான்மையருக்கோ, அல்லது அங்கு குடியேறிய இஸ்லாமியருக்கோ குடியுரிமையோ, மனித உரிமைகளோ இல்லாது இருப்பதைக் கண்டு கொள்வதில்லை.

***  அரேபிய ஷேக்குகள்  மயன்மார் தாக்குதல் போன்றவைகளுக்காக எப்போதும் கொடி பிடித்திருக்கிறார்களா? எகிப்திலிருந்து லெபனான் வரையிலும், ஈரானிலிருந்து துருக்கி வரையிலும், கஸ்கஸ்தானிலிருந்து பாஸ்னியா வரையிலும் உள்ள எந்த இஸ்லாமிய நாடாவது பெருமளவில் தெருவிற்கு வந்து மயன்மார் பிரச்சனைக்காகப் போராடியுள்ளார்களா?Vehicles set on fire by demonstrators burn outside the Azad Maiden ground area in Mumbai on August 11, 2012. Two people were killed and 14 others injured when a protest against the riots in Assam and alleged attacks on a minority community in Myanmar turned violent.***  போராட நமக்கு எல்லாவித உரிமைகளும் உண்டு. ஆனால் அதனை நாம் மிகவும் தவறாகப் பயன்படுத்தி வருகிறோம். மற்றவர்களோடு இணைந்து அநீதிக்காகப் போராடுவதில்லை; ஆனால் இஸ்லாமியருக்குப் பிரச்சனையென்று கேட்டாலே  நம் ரத்தம் உடனே கொதிக்க ஆரம்பித்து விடுகிறது.

***  Rohingyas பிரச்சனையில் பங்ளாதேஷ் என்ன செய்து விட்டது? அங்கே எல்லோரும் இஸ்லாமியர்கள் தானே? ஆனால் Rohingyas-களை தங்கள் நாட்டுக்குள் வரவிடுவதுமில்லை; அவர்களுக்காக மையன்மார் அரசிடம் பேசக்கூட முனையவில்லை. உருது பேசும் பீகாரிகளிடமும் இதே போல்தான் அவர்கள் நடந்து கொண்டார்கள். 

*** மத்திய கிழக்கு நாடுகளைக் கூட விட்டு விடுங்கள். மலேஷியா - மையன்மாருக்கு அருகில் உள்ள இன்னொரு இஸ்லாமிய நாடு - என்ன செய்து விட்டது இதுவ்ரை? இந்தோனேஷியாவும் இதே போல்தான் மெளனம் சாதிக்கிறது.  ஆனால் நாம் மட்டும் இப்படிப் பொங்கியெழுந்து போராடினால், அதுவும் கைக்கடங்காமல் சென்றால் ... என்ன ஆகும்? இதனால் நாம் மற்றவர்களுக்குச் சொல்லும் செய்திதான் என்ன?

***  மயன்மார் பிரச்சனைக்காக நாம் தலைநகரங்களில் மட்டுமல்ல; சின்னச் சின்ன ஊர்களிலும் போராட்டம் நடத்தினோம். இதெல்லாம் எதற்காக?

***  நாம் வாழுமிடங்களில் உள்ள ஒரு பள்ளிக்கு அரசின் உதவியை நாடுவதற்கு வெறும் இருபது பேர் சேர்ந்து போராடியிருக்கிறோமா? ஆனால் இதுபோன்ற போராட்டங்களுக்கு 2000 பேர் சேர்ந்து விடுகிறோம்! ஆச்சரியமாக இல்லை ??

***  நமது போராட்டங்களால் நம் நாட்டு இஸ்லாமியர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்கள்; அளவுக்கதிகமாக போராடுகிறார்கள்; அவர்கள் தங்கள் சக்தியை வீணாக்காமல் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

*** செய்தித்தாட்களில் வீணாக்கும் விளம்பரப் பணத்தை அஸ்ஸாமின் போடாவினருக்கும், இஸ்லாமியருக்கும் உதவப் பயன்படுத்துவது அதைவிட மிகச் சிறப்பாக இருக்கும்.

*** சில ஆண்டுகளுக்கு முன் உணர்ச்சி பூர்வமாக இஸ்லாமியர் எடுத்துக் கொண்ட முயற்சியால் இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் வில்லன்களாகக் காட்சியளித்தார்கள். ஷாய்ரா பானு வழக்கில் நாம் எடுத்த வினைகள் வலதுசாரி பி.ஜே.பி.யை வளர்க்கத்தான் உதவியது.

*** இவ்வளவு நடந்த பின்னும் இஸ்லாமியத் தலைவர்கள் ஏதும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

*** இஸ்லாமியர்கள் தங்களைப் பற்றி மட்டுமே நினைக்கிறார்கள். அவர்களுக்கு வேறு எதுவுமே முக்கியமல்ல என்று அனைவரையும் நினைக்க வைத்திருக்கிறோம்.

*** இஸ்லாமியருக்கு மட்டுமல்ல; யாருக்கு அநீதி நடந்தாலும் நம் மனம் கசிய வேண்டும். வெறும் இஸ்லாமியருக்கும் அவர்கள் பிரச்சனைகளுக்கு மட்டுமேயல்ல.*
*
*
*
*

Friday, August 17, 2012

585. யாருக்கும் ‘அடிபணியாதவன்’ என்ன ஆனான்? – காணாமல் போன நண்பர்கள் ..2

*  ”அதீதம்” இணைய இதழில் 15.8.12 அன்று வெளியான கட்டுரை.*


1953-ல் ..........

முதல் வகுப்பிலிருந்து முதலாண்டு முதுகலை வரை மதுரை தெற்குவாசல் பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தோம். பெரிய குடும்பம்; சின்ன வீடு. இன்னும் இரு குடும்பங்களோடு ஒட்டுக் குடித்தனம். இப்போதைய நிலைக்கு அந்த வீட்டை நினைக்கும் போது அதை ஒரு ’எலிவளை’ என்றுதான் சொல்ல முடியும். எப்படி அங்கே அத்தனை வருஷம் வாழ்ந்தோம் என்று நினைத்தால் இன்றும் ஆச்சரியம். ஆனாலும் இன்றும் பலரும் அதே போன்ற ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் இன்னொரு வேதனையான விஷயம். சரி… வீட்டு விஷயம் இன்னொரு தடவை பார்ப்போம்.

ங்கள் வீடு மாதிரியே அண்ணன் தம்பி வீடுகளாய் மூன்று வீடுகள் அடுத்தடுத்து இருக்கும். எங்கள் வீடு கடைசித் தம்பியின் வீடு. எங்கள் வீட்டுக்கு ஒரு புறம் இன்னொரு அண்ணனின் வீடு. அந்த வீட்டிலேயும் எங்கள் வீடு போலவே பல குடிகள். எங்கள் வீட்டு உரிமையாளர்கள் தெலுங்கு பேசுவார்கள். (மீக்கு ஒய்ட்டி ஒய்ட்டி தெலுகு தெலுசு …!) எங்கள் மூன்று வீடுகளை விட்டு விட்டால் மற்ற வீடுகள் ஏறத்தாழ இஸ்லாமியர்களின் வீடுகள்.

நாங்கள் தான் இப்படி அத்தனை காலமாக ஒரே வீட்டில் இருந்தோம். மற்றவர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது பக்கத்து வீட்டில் இன்னொரு குடித்தனக்காரர்கள் வந்து சேர்ந்தார்கள். என் வயதில் ஒரு பையன். சிகப்பா, ஒல்லியா இருப்பான். பெயர் ஆஸாத். அவனின் அத்தா ரெயில்வேயில் வேலை பார்த்தார். அப்பா, மகன் இருவருமே ரொம்ப சாந்தமானவர்கள். ஆஸாத்தின் அப்பா என்னிடம் அடிக்கடி பேசுவார். ரொம்ப மெல்லிய குரல். சாந்தமாகப் பேசுவார். என் மூலம் என் அப்பாவும் அவரும் நண்பர்களானார்கள்.

ஸாத் ரொம்ப சாஃப்டான பயதான். ஆனால் ’ஆஸாத் ’ என்ற பெயருக்கு அர்த்தம் ‘அடிபணியாதவன்’ அப்டிம்பான். இந்த மாதிரி பெயரையும் அதன் அர்த்தத்தையும் சொல்லும் போது மட்டும் பய கொஞ்சம் முறப்பா காமிச்சுக்குவான். அம்புட்டுதான்! அவன் அப்பாவும் அவனைத் திட்டும் போதெல்லாம் ‘பேரு வச்சதுக்கு ஏத்த மாதிரி ஊருக்கும், வீட்டுக்கும் அடங்காதவனா போய்ட்டான்’ அப்டிம்பார். ஆனால் பய அப்படியெல்லாம் இல்லை. நல்ல பயல். சீக்கிரமே என்னோட நல்ல நண்பனாய்ட்டான்.

ஸாத்துக்கு, எங்கள் தெருவிற்கு அடுத்த தெருவில், தெற்குவாசலில் உள்ள பள்ளிவாசலுக்கு எதிர்த்தாற்போல் இருந்த அந்தத் தெருவில்  ஒரு நண்பர் இருந்தார். அவர் வயதில் எங்களுக்கெல்லாம் மூத்தவர். அப்போதே பள்ளிப்படிப்பை முடித்து விட்டிருந்தார். ஆஸாத் என்னைச் சிலமுறை அவரைப் பார்க்க்க் கூட்டிப்போனான். எங்களைப் போல் பசங்களை ஒன்று சேர்த்து ஏதோ ஒரு கழகம் ஆரம்பிக்க வேண்டுமென்றார். ஒரு கையெழுத்துப் பிரதி ஆரம்பிக்கலாம் என்றார். நாலைந்து பேர் சேர்ந்து ஏதோ ஒரு பெயரை வைத்தோம். அடுத்த நாளே நான் வீட்டில் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் கலர் பென்சில்கள் வைத்து அந்தப் பெயரை ‘அழகாக’ எழுதி, கலரடித்து வைத்திருந்தேன். ஆஸாத் அது ரொம்ப நல்லா இருக்கு. ’வா, பாய்ட்ட காமிப்போம்’ என்றான். நானும் அவனும் அவரைப் பார்க்கப் போனோம். ’நன்றாக இருக்கு .. ஆனா இப்போ கழகம் எல்லாம் வேண்டாம்’னுட்டார். ஒரே சோகமா போச்சு. வரைஞ்சதை உடனே கிழிச்சிப் போட்டுட்டேன்.

ந்த வருஷ கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தது. இப்போ கடை பூரா அழகழகா செய்த ஸ்டார்கள் எல்லாம் இருக்குமே .. அது மாதிரியெல்லாம் அப்போ கிடையாது. எல்லாம் மூங்கில் குச்சிகள் வைத்து செய்வது தான். அந்த வருஷம் எனக்கு ஸ்டார் செய்யணும்னு ஆசை. ஆஸாத்திடம் சொன்னேன். அவனுக்கு அந்த ‘வித்தை’ தெரியும்னான். இன்னொரு நண்பன் வெங்கட் என்னும் வெங்கடேசன். அவனும் எங்களோடு சேர்ந்துக்கிட்டான்.

கிறிஸ்துமஸுக்கு பத்து நாளைக்கு முன்பே ஒரு நீள மூங்கில் பட்டை ஒன்று விலைக்கு வாங்கினோம். அதை தண்ணீரில் போட்டு பதமாக்கணும் என்றார்கள். எங்கள் வீட்டில் குளிக்கிற இடத்தில் ஒரு ஓரத்தில் போட்டு வைத்தோம். எப்படி போட்டாலும் முழுப்பட்டையும் நனையற வழியைக் காணோம். நாலைந்து நாள் தண்ணீரில் கிடந்தது. பிறகு அதை சீவி, சின்ன துண்டுகளாக ஆக்கினோம். ஆறு குச்சிகளை ஒரே மாதிரி சீவி எடுத்து … அதை ஸ்டார் மாதிரி தரையில் படம வரைந்து … அதன் மேல் இந்தக் குச்சிகளை வைத்து .. ஓரங்களைக் கட்டி … இப்போ ஒரு சைட் ஸ்டார் ரெடி. அதே மாதிரி இன்னொரு ஸ்டார் கட்டி … இரண்டு ஸ்டாரையும் ஒன்றாகக் கட்டி …. அம்மாடி.. உலகமே வெறுத்துப் போச்சு. அதிலேயும் கடைசியாக அந்த இரண்டு ஸ்டாரையும் ஒட்டி ஒட்டிப் பார்த்தோம். என்ன டெக்னிகல் பிரச்சனையோ .. எங்களால் முடியலை. அதைக் கட்டி அதற்கு மேல் கலர் கண்ணாடி பேப்பர் ஒட்டணும். நமக்காகிற வேலையில்லைன்னு பாதியிலேயே உட்டுட்டோம். அதற்குள் நாள் கணக்கா நாங்க மல்லாடுறதைப் பாத்து பெருசுக சண்டைக்கு வந்திருச்சிங்க … வழக்கமா இருக்கிற பல்லவிதான் ..’படிக்கிற வழியக் காணோம் .. அதுக்குள்ள என்ன ஸ்டாரு’ அப்டின்னு கோவிச்சிக்கிட்டாங்க. கிறிஸ்துமஸுக்கு முன்னால வேற ’அரைப் பரிட்சை’ வந்திரும். அதைப் படிக்கப் போங்கன்னு விரட்டி விட்டுட்டாங்க. ஆனா எங்க மூணு பேருக்கும் ஒரு ட்ரெய்னிங் கிடச்சிப் போச்சு. அதனால் எப்படியும் அடுத்த வருஷம் கட்டாயம் நல்ல ஒரு ஸ்டார் செஞ்சிரலாம்னு ஒரு நம்பிக்கையோடு எங்க ‘ஸ்டார் ப்ரோஜெக்ட்’டை சோகமாக நிறுத்திட்டோம். அதிலும் ஒரு சின்ன சோகம் அடுத்த வருஷம் வந்தது.

ஸாத் வேறு பள்ளியில் ஐந்தாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். என் அப்பா தூய மரியன்னை பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்காள். (அப்போ மதுரையில் அது தான் பெரிய்ய்ய பள்ளி. அதனோடு அப்போது S.S.L.C. தேர்வுகளில் போட்டியிடுவது இன்னும் ஒரே ஒரு பள்ளிக்கூடம் தான். செளராஷ்ட்ரா பள்ளி.) நான் ஆஸாத்திடம் சொல்லி, ஆஸாத் அவங்க அத்தாட்ட சொல்லி, அவர் எங்க அப்பாட்ட சொல்லி … ஆஸாத் ஆறாம் வகுப்பிற்கு எங்கள் பள்ளிக்கே, எனது செக்‌ஷனுக்கே வந்திர்ரது என முடிவு செஞ்சிருந்தோம்.

னா அடுத்த வருஷம் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிறதுக்கு முன்பே அவங்க அத்தாவுக்கு செங்கோட்டைக்கு ட்ரான்ஸ்பர் வந்திருச்சி. திடீர்னு அப்படியே உட்டுட்டுப் போய்ட்டான்.

நான் சொந்த ஊருக்குச் செல்லும் போது ரயிலில் போகும்போது தென்காசி வழியாகப் போவோம். அடுத்த ஸ்டேஷன் செங்கோட்டை என்னும் சொல்லும் போதெல்லாம் எனக்கு ஆஸாத் ஞாபகம் வரும். ஆனால் அவன் மதுரையை விட்டுப் போன பின் நான் அவனைப் பார்க்கவேயில்லை. அந்த கிறிஸ்துமஸுக்குப் பிறகு நானும் வெஙகட்டும் நாலைந்து தடவை ஸ்டார் சேர்ந்து செஞ்சோம். அப்போவெல்லாம் கட்டாயமா ஆஸாத்தை ஞாபகம் வச்சிக்கிட்டதுண்டு. இப்பவும் கூட கிறிஸ்துமஸ் ஸ்டார் வீட்ல கட்டும்போது முதலில் நாங்க செஞ்ச, செய்ய முனைந்த  ஸ்டார் நினைவுக்கு வரும். அப்போதெல்லாம் பல முறை ஆஸாத்தை நினைத்திருக்கிறேன்.


 *
 

Thursday, August 16, 2012

584. ENZOY - AN INTERVIEW OF OUR RULER

* *

Thursday, August 02, 2012

583. சிவகுமார்… எங்கேடா இருக்கே? – காணாமல் போன நண்பர்கள் (1)
*

இந்த வார அதீதம் இணைய இதழில் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது.

பதிப்பித்தோருக்கு மிக்க நன்றி.

**
1952-ல் ...........

இந்தக் கதையை ஆங்கிலத்தில் அப்போதே எழுதியிருக்கிறேன். பெயரைத்தான் கொஞ்சம் மாற்றிவிட்டேன் போலும். முதலில் எழுதியதில் தான் நண்பனின் பெயரைச் சரியாகச் சொல்லியிருந்திருக்கிறேன். அதையே இங்கு மறுபடி மாற்றி விடுகிறேன். நண்பனின் பெயர் சூர்யகுமார் இல்லை .. சிவகுமார். சென்ற வாரம் தாராசிங் இறந்த போது தினசரிகளில் வந்த செய்தி இந்த வாரம் இறந்த இந்தியாவின் முதல் ‘சூப்பர் ஸ்டார்’ ராஜேஷ் கன்னாவிற்கு வந்ததை விட அதிகமாக இருந்தது எனக்கு ஒரு ஆச்சரியம்தான் — எப்படி தாராசிங்கிற்கு இவ்வளவு கவரேஜ் என்று.

இந்த இரு செய்திகளும் வாழ்க்கையில் பழைய பக்கங்களைச் சிறிது புரட்டிப் பார்க்க வைத்தன. ராஜேஷ் கன்னா ’ஆராதனா’ என்ற படத்தில் போட்டு பிரபலமான கலர் குர்தாக்களை (தைரியமாக) அணிந்து ஊர் சுற்றியது, அதனால் நடந்த ஒரு சண்டையும் நினைவிற்கு வருகிறது. (இந்தப் பதிவில் ‘அந்தச் சண்டை’ இருக்கிறது!) தாராசிங் நினைவுகள் அதற்கு ரொம்ப முந்தியது. முதல் நிகழ்வு கல்லூரியில் வேலை பார்த்த போது, எழுபதுகளின் ஆரம்பத்தில் நடந்தது. தாராசிங் காலம் நான் மூன்றாவது, நான்காவது வகுப்பு படித்த போது நடந்தது.

மூன்றாம், நான்காம் வகுப்பு படித்த போது தாராசிங் பெயர் எங்கள் மத்தியில் பிரபலம். அப்போது மதுரையில் இந்த பயில்வான்களின் போட்டிப் பந்தயங்கள் நடைபெற்று வந்தன. கிங்காங், சிகப்புத் தேள் … இப்படிப் பல பெயர்கள். இப்போது WWF மாதிரி அப்போ இது!

எங்கள் பள்ளியில் ஒரு நாள் திடீரென்று மதியத்தில் பயங்கர சலசலப்பு. எல்லோரும் பக்கத்திலிருக்கும் பெரிய மாதா கோவிலுக்குப் படையெடுத்தார்கள். மாணவர்கள் மட்டுமல்ல … ஆசிரியர்களும் தான். எங்கள் வகுப்பு ஆசிரியர் எங்களையும் கூட்டிக் கொண்டு ஓடினார். கோவில் பூட்டியிருந்தது. ஆனால் ஜன்னல் வழியே நாங்கள் பார்த்த போது ‘செந்தேள்’ – இவர் ஒரு அயல்நாட்டு பயில்வான் – மட்டும் கோவிலுக்குள் ஜெபம் செய்து கொண்டிருந்தார். அவர் ஆஸ்த்ரேலியா நாட்டுக்காரர்னு சொன்னதாக் ஞாபகம். அவரும் வந்துட்டு போனார்.

ஆனால் தொடர் கதையாக அந்தப் பயில்வான்களின் சண்டைகள் பற்றி பெரியவர்கள் வீட்டில் சொன்னதையெல்லாம் வைத்து மாணவர்கள் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நண்பன் ‘கிடுக்கிப் பிடி’ என்று ஒன்று சொல்லிக் கொடுத்தான். என் பின்னால் நின்றுகொண்டு, என் கைகளுக்குக் கீழே அவன் கைகளைக் கொண்டு போய் … அப்படியே அவன் தன் கைகளை என் கழுத்துக்குப் பின்னால் சேர்த்து பிடித்துக் கொண்டான். என்னைத் தப்பிக்கச் சொன்னான். முயன்றேன். முடியவில்லை. பாடம் நடத்தினான். அப்படியே குனிந்து பின்னால் இருப்பவனை முதுகுக்கு மேல் தூக்கி அந்தப் பக்கம் டமார்னு போடணும் என்றான். இப்போது அவன் அந்தப் பிடியை என்னிடம் போட மாட்டேன் என்று சொல்லி விட்டான். ட்ரெய்லருக்குக் கூட ஒரு சான்ஸ் கிடைக்காமல் போனது.

 என் வகுப்பில் என் நண்பன் சிவகுமார். எங்கள் வீடும் அவன் வீடும் ஒரே பக்கம் இருந்தது. இருவரும் சேர்ந்து பள்ளியில் இருந்து ஒன்றாகத் திரும்பி போவோம். நல்ல நண்பன். அவன் அம்மா ஒரு பள்ளியின் ஆசிரியரோ .. தலைமை ஆசிரியரோ தெரியவில்லை. ஆனால் குடை பிடித்துக் கொண்டு எங்கள் வீட்டைத் தாண்டி போவார்கள். அவர்களைப் பார்த்தால் எனக்கு எப்பவுமே கொஞ்சம் பயம் தான். டீச்சராச்சே …!

சிவகுமார் மட்டுமல்ல அவனது அம்மாவும் கொஞ்சம் குட்டைதான். சிவகுமாரிடம் நான் படித்த ‘புதுப் பாடத்தை’ நடத்திக் காண்பிக்க ஆசை வந்தது. நான் அவனைக் கிடுக்கிப் பிடியில் இறுக்கிப் பிடித்தேன். தப்பிக்கச் சொன்னேன். அவனால் முடியவில்லை. அடுத்து அவன் என்னைப் பிடித்தான். என்னை விட அவன் குட்டை என்பதால் என்னால் அவனை என் முதுகுக்குப் பின்னால் தூக்கி முன்னால் டொம் என்று போட முடிந்தது. ஆனாலும் பயல் ரொம்பவே டொமால் ஆகிவிட்டான். பாவி … இப்படியா விழுவான். தூக்கிப் போட்டதும் அப்படியே விழுந்து தொலைத்தான். நல்ல அடி .. அவனுக்குக் கொஞ்சம் அழுகை; எனக்கு நிறைய சிரிப்பு. நானோ சிரிச்சிக்கிட்டே வெற்றிக் களிப்பில் இருந்துட்டேன்.

அதுக்குப் பிறகு பள்ளி அன்று முடியும் வரை பேசினான். ஆனால் .. கள்ளப்பயல் … வீட்டிற்குப் போனதும் அவன் அம்மாவிடம் சொல்லி விட்டான். அடுத்த நாள் அவர்கள் அம்மா பள்ளிக் கூடத்திற்கே வந்து விட்டார்கள் சிவகுமார் அவன் அம்மா என்னைக் கூப்பிட்டதாகச் சொன்னான். போனேன். . நன்கு திட்டினார்கள். ஏன் அவனை அப்படி கீழே தள்ளினாய் என்று கடிந்து கொண்டார்கள். அதைவிட உலகத்திலேயே அதிகம் பயப்படும் தண்டனை ஒன்றைச் சொன்னார்கள்; அதாவது இப்படியெல்லாம் செய்தால் என் அப்பாவிடம் சொல்லி விடுவேன் என்றார்கள். புளியைக் கரைத்தது.

அன்றிலிருந்து சிவகுமாரிடம் நான் பேசவில்லை. அவனும் பேசவில்லை. வாழ்க்கையில் உடைந்த முதல் நட்பு இதுதான் … ஆனால் இன்னும் நானும் அவனும் நட்பாயிருந்தது; நாங்கள் ’குஸ்தி’ போட்ட அந்த வேப்ப மரத்தடி; ஓடிப்போய் கோவிலுக்குள் சேர்ந்து எட்டிப் பார்த்தது … எல்லாமே பசுமையாக நினைவில் இருக்கிறது.

இப்போதும் தூய மரியன்னை கோவிலுக்குப் போனால் (கோவிலுக்குப் போற அந்த நல்ல காரியம்லாம் அடிக்கடி செய்வோம்ல .. தங்க்ஸூக்கு ட்ரைவர் வேலை பார்க்கும் போது ....) அந்தக் கோவிலைச் சுற்றி வருவது வழக்கம். அந்த மரம், காம்பவுன்ட் சுவர் இப்போது இல்லை.  ஆனால் நினைவுகளில் அவைகள் இன்னும் இருக்கின்றன!


சிவகுமார்… எங்கேடா இருக்கே?*