Sunday, April 27, 2014

748. கடன் வாங்கிய பதிவு -- முகத்திரைக்குள்ளே ....!

*
முகத்திரைக்குள்ளே...!

தஜ்ஜால் ஏகத்துவப் பிரச்சாரம் வீரியமடைந்த பிறகு, பெண்கள் தங்கள் முகம், முன் கைகளைத் தவிர ஏனைய பகுதிகளை மறைக்கும் புர்கா அணியத் துவங்கினர். மார்க்கம் கூறியபடி தங்கள் உடல் அழகை மறைக்காத நிலை தான் பெரும்பாலான முஸ்லிம் பெண்களிடம் இருந்தது. இது வஹாபிஸ வியாபாரிகளுக்குக் கிடைத்த வெற்றிதான்; மறுப்பதற்கில்லை.

ஜனவரி, 2010-ம் ஆண்டு, விஜய் டிவியில், நீயா? நானா? நிகழ்ச்சிக்காக இஸ்லாமியப் பெண்களுக்கிடையே ஹிஜாப் பற்றிய விவாதம் பதிவு செய்யப்பட்டு, ஒலிபரப்பாக இருந்த நேரத்தில் பீஜே குழுவினரின் மிரட்டலால் நிறுத்தப்பட்டது. தங்களது இஸ்லாமியப் பெண்களே உண்மையைக் கூறிவிடுவார்களோ என்ற நிஜமான அச்சம்தான் காரணம்.

ஹிஜாப் இஸ்லாமியப் பெண்களின் மீது சுமத்தப்பட்டதற்கு காரணங்களாகக் கூறப்படும் சில காட்சிகளைக் காண்போம்.

காட்சி-1
முஹம்மதிற்கு, ஜைத் என்றொரு வளர்ப்பு மகன். அவனது மனைவி ஜைனப். பல காரணங்கள் கூறப்பட்டாலும், இறுதியில் மருமகளையே தனது மனைவியாக்கிக் கொள்வதில் முடிந்தது. குர்ஆனில் என்னென்ன கட்டளைகள் இடம்பெற வேண்டுமென்பதை சுமார் மூன்று முறை அல்லாஹ்(!)விற்கே ஆலோசனை கூறியுள்ளார் முஹம்மதுவின் அல்லக்கைகளில் ஒருவர்.

புகாரி 4790 உமர்(ரலி) அறிவித்தார்:
 நான், 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். எனவே, தாங்கள் (தங்களின் துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!' என்று சொன்னேன். அப்போது அல்லாஹ் பர்தா (சட்டம்) தொடர்பான வசனத்தை அருளினான்.

உமர் சொன்னார்; அல்லா கொடுத்தார்………

காட்சி-2
புது மனைவியுடன் பொழுதைக் கழிக்க நினைத்ததில் விழுந்தது மண். முகமதுவின் திருமணம் ஜேனப்போடு முடிந்ததும் உறவினர்கள் சமயம் புரிந்து விலகவில்லை. //இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்!. அவருக்குப் பின் ஒரு போதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது.’’ என்று குர்ஆன் 33:53 வஹி மூலம் இறங்கி விடுகிறது.

முஹம்மதின் மனைவியர்கள் ஹிஜாப் கடைபிடிப்பவர்களல்ல. விருந்திற்கு வந்தவர்கள், அவரை அன்று வெறுப்பேற்றியிருக்கவில்லையெனில் ஹிஜாப்- பர்தா பற்றிய அறிவிப்புகள் வெளியாகியிருக்காது என்பது எளிமையான விளக்கம்.

குர்ஆனின் ஒவ்வொரு வார்த்தையும் இப்பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்பே லவ்ஹுல் மக்ஃபூல் என்ற ஏட்டில் அல்லாஹ் எழுதிவைத்தவாறே வெளியாகிறது என்ற குர்ஆனின் கூற்றை நம்பினால், அல்லாஹ்வின் திட்டப்படி விருந்தினர்கள் முஹம்மதின் வீட்டிற்கு வரவழைப்பட்டு, வீட்டிற்குள் எட்டியும் பார்க்க வைத்து, முஹம்மதுவும் எரிச்சலூட்டப்பட்டார்; பின்னர், முஹம்மதை ஆதரித்தும், தோழர்களைக் கண்டித்தும் குர்ஆன் வசனங்களையும் வெளியிட்டுக் கொண்டான் என்பது தெளிவு நிரம்பிய குர்ஆனின் குழப்பமான விளக்கம்.

இதில் எந்த விளக்கத்தையும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வாசகர்களிடமே விடுகிறேன்.

இதனோடு சொல்ல விரும்புவது, குர்ஆன் 33:53-ம் வசனத்தின் இறுதிப்பகுதி முஹம்மதின் மனநிலையை மிகத் தெளிவாக உணர்த்துகிறது. அதாவது ஜைத்தைக் காணச் சென்ற பொழுது திரை விலகியதாலே மருகளான ஜைனப்பின் மீது காமம் பிறந்தது. அதே முறையில், வேறு ஒருவர் தன் மனைவியர்களையும் கவர்ந்து சென்று விடக்கூடாது என்ற முஹம்மதின் கவலையை அல்லாஹ், வஹியின் மூலம் இங்கு சரிசெய்கிறான்!

முஹம்மது, தனது வயதான காலத்தில் எண்ணற்ற மனைவிகளையும், வைப்பாட்டிகளாக அடிமைப்பெண்களையும் தனது அந்தப்புரத்தில் நிரம்பச் செய்திருந்தார். தானாக முன்வந்து முஹம்மதிற்கு தங்களை தாரைவார்த்துக் கொண்ட பெண்களும் உண்டு. இவர்களில் ஸவ்தாவைத் தவிர மற்றுள்ள அனைவருமே இளம்வயது அழகிகள். இவர்களை கட்டுப்பாட்டில் வைக்க முஹ்ம்மதிற்குத் தெரிந்த ஒரேவழி அல்லாஹ்தான். அவனது தலையில் ஒரு தட்டு தட்டினால் குர்ஆன் வசனங்களைக் அள்ளித் தெளித்துவிட்டுப் போகிறான்!

முஹம்மதின் மீது அபாண்டமாக பழிசுவத்துவதாக நீங்கள் நினைக்கலாம். அவர் பெண்கள் விஷயத்தில் மிக பலவீனமான மனநிலையைக் கொண்டவர்; அவரது மனநிலை எப்படியிருந்தது என்பதை விளக்க இன்னொரு ஹதீஸைக் காண்போம்.

முஸ்லீம் ஹதீஸ் 2718
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். அப்பெண்(ணின் அழகு) அவர்களைக் கவர்ந்தது. உடனே அவர்கள் தம் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் தமக்குரிய ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டுப் பிறகு தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்து, "ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள்; ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள். எனவே, உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து அவள் (அழகு) அவரைக் கவர்ந்து விட்டால் உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்'' என்று கூறினார்கள்.

அந்தப் பெண்ணின் அழகு, முஹம்மதைக் கவர்ந்ததாம் உடனே அவரது உணர்வுகள் கிளர்ந்தெழுந்து விட்டதாம்; அதைத் தணித்துக் கொள்ள தனது மனைவியை நாடி சென்றுவிட்டாராம். எத்தனை கேவலமான மனிதராகக் காட்சிப்படுத்தப் படுகிறார். அல்லாஹ், குர்ஆன் வசனங்களை கூறிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு புலனடக்கம் என்றால் என்னவென்பதை முஹம்மதிற்குக் கற்றுக் கொடுத்திருக்கலாம்.

 புகாரி ஹதீஸ் 29 
 'எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர்.

முஹம்மதிற்கு எப்பொழுதுமே பெண்களின் மீது நல்ல கருத்து இருந்ததில்லை, அவரது இத்தகைய எண்ணங்கள், பெண்களின் மீது அர்த்தமற்ற கட்டுபாடுகளை விதிக்கத் தூண்டியது.

 காட்சி-3
முஹம்மதின் மனைவியர்கள், தங்களது தேவைகளுக்காக சுதந்திரமாக வெளியில் சென்றுவருபவர்களாக இருந்துள்ளனர் என்பதற்கு குர்ஆன் 33:33 நமக்கு போதுமான ஆதாரமாக இருக்கிறது.

புகாரி ஹதீஸ்- 4795
இதில் கூறுவதை வைத்துப் பார்க்ல்கும் போது முஹம்மதின் மனைவியர்கள், வீட்டினுள் அடைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய பொருள் என்பது உமரின் கருத்து என்பது தெளிவாகத் தெரிகிறது.

33:33 ’உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்!... என்ற அல்லாவின் கட்டளையும் முகமதுவின் மனைவியருக்கு மட்டும் வருகிறது. ஆனால் அது அனைவருக்குமாக பின்னால் பொதுமைப்படுத்தப் பட்டு விட்டது.

இஸ்லாமியர்கள் கூறும் ஹிஜாப் நடைமுறைகள் :
ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையிலும், தளர்வான ஆடைகளால் உடலின் பரிமாணங்கள் தெரியாதவாறு மறைத்திருக்க வேண்டும் என்பதே இன்றைய விதியாகும் என்கிறது வஹாபியத் தரப்பு.

 "சீரழிவுக்கு பெண்களின் முகமே ஆரம்பப் புள்ளி" என்று கருதும் மற்றொரு தரப்பான ஆப்கான் மற்றும் தமிழக தாலீபான்களும், பொறுப்பற்று ஊர்சுற்றித் திரியும் தப்லீக்வாதிகளும், முகம் உட்பட முழுவுடலும் கட்டாயமாக மறைக்கப்பட வேண்டுமென்று வாதிடுகின்றனர். அவ்வாறே அவர்கள் தங்களது இல்லப்பெண்களுக்கு, கூடுதலாக கையுறை மற்றும் காலுறைகளை அணிவித்து, மூடி, மூட்டையாகக் கட்டியும் வைத்துவிட்டனர்.

இது பெண்களை அவமதிக்கும் கேடுகெட்ட பைத்தியக்காரத்தனம் என்ற விமர்சனங்கள் எழும்பொழுது, இஸ்லாம் முகம், கை மற்றும் கால்களை மூடி மறைக்கச் சொல்லவில்லை என்று நழுவுகிறது வஹாபிய தரப்பு.... இஸ்லாமியப் பெண்களை அவர்களது நடமாடும் கூடாரங்களிலிருந்து விடுதலையளிக்க முல்லாக்கள் தயாரில்லை.

இஸ்லாமியப் பெண்களை மூட்டைகட்டி வைப்பதற்கு குர்ஆன் 24 அத்தியாயத்தின் 31–ஆம் வசனத்தை மிக முக்கியமான ஆதாரமாகக் காண்பிக்கின்றனர். இவ்வசனம், பெண்கள் தங்கள் உடலின் எந்தப் பகுதியை மறைக்க வேண்டுமென்பதையும், எந்தப் பகுதியை வெளிப்படுத்தலாம் என்பதையும் வரையறை செய்வதாக அவர்கள் கருதுகின்றனர்.

குர்ஆன் 24:31, தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். ... ” khumurihinna ala juyubihinna” என்பது எதைக் குறிக்கிறது?

’கிமார்’ என்ற சொல் எதைக் குறிப்பிடுகிறது என்ற குழப்பம் குர்ஆன் விரிவுரையாளர்களுக்கிடையே இருந்துள்ளது. ...கிமார் என்றால் முகத்தை மூடும் ஆடை என்ற கருத்து தவறானது. தலையை மறைக்கும் துணி என்பதே இதன் சரியான பொருள். கிமார் என்பது முகத்திரை அல்ல. தலைத்துணி தான் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது... கிமார்(khimar)” மறை, மூடு என்று பொருள் கொள்ளலாம். குர்ஆனில் இருப்பதை மறைத்தும் இல்லாததை திணித்தும் அப்பாவி மக்களை ஏமாற்றுவதன் மூலம், தங்களது கடவுளின் மானத்தைக் காப்பாற்ற நினைக்கின்றனர். குர்ஆன் தெளிவானது, நன்கு விளக்கப்பட்ட புத்தகமென்று தன்னைத் தானே சான்றிதழ் வழங்கிக் கொள்வதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உண்மையில், பர்தா-புர்கா-ஹிஜாப் என்ற பெயரில் பெண்களை தலைமுதல் கால்வரை மூடிக்கொள்ளுமாறு குர்ஆன் அறிவுறுத்தவில்லை. ஜைனபுடனான தனது திருமண(வலீமா) விருந்தில், தனது தோழர்களின் செய்கையால் கடுப்பான முஹம்மது, தனது மனைவியரை திரைக்குள் மறைந்திருக்க உத்தரவிட்டார். அதையே காரணமாகக் கொண்டு மற்ற பெண்களின் மீதும் திரையைத் திணிப்பது அர்த்தமற்றது.

ஆப்ரஹாமிய மதங்கள் பிற நாகரீகங்களை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தி; உள்ளூர் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கிய நிகழ்வுகளை வரலாற்றில் காணமுடியும். அவர்கள், தலையில் முக்காடு அணியாத உள்ளூர் பெண்களை நாகரீகமற்றவர்களாக வரையறை செய்தனர்.

’பர்தா’ முறையின் வாயிலாக முல்லாக்கள், தங்களது பெண்களை அறிவற்றவர்களாகவும், தங்களது உடலால் ஆண்களைத் தவறான வழிக்கு கொண்டு செல்பவர்களாகவும், ஆண்கள் அனைவருமே அடக்க முடியாத காமவெறி பிடித்து அலையும் மிருகங்களாகவும் சித்தரிக்கின்றனர். 
வரலாற்றின் சக்கரங்களை பின்னோக்கி இழுக்கும் இவர்களின் செயல், முன்னேறிய ஒரு நாகரீக சமுதாயத்திற்கு அவமானமே!

இன்று தமிழ் நாட்டில் மதவியாபாரிகளின் ”புர்கா போடும் புரட்சி” என்ற பீற்றலுக்கு பின்னால் மறைந்திருப்பது, திருமணச் சந்தையில் தங்களது பிள்ளைகள் விலைபோகாமல், மற்றவர்களால் எங்கே நாம் அவமானப்பட்டு விடுவோமோ என்ற ஒவ்வொரு அப்பாவி முஸ்லீம் பெற்றோர்களின் அச்சம் மட்டுமே!

*

Tuesday, April 22, 2014

747. என் சொந்தக் கதை


* ரொம்ப வருஷத்துக்கு முன்னால ... நான் அப்போது தான் கிறித்துவத்தை விட்டு லேசாக விலக ஆரம்பித்திருந்தேன். அதுவரை கோயிலுக்குப் போறது .. அது இதுன்னு... ரொம்ப பக்தி. என்னிடம் பக்தி குறைஞ்சது எங்க அப்பாவுக்கு முதலில் தெரிஞ்சிது. ‘என்னடா?’ன்னார். ‘ஒண்ணும் இல்லையே’ன்னு சொன்னேன். ஒரு சாமியார் கிட்ட கொஞ்சம் மதங்கள் பற்றிக் கேள்வி கேட்டிருந்தேன். அவர் அப்பாவிடம் ‘ஓதி’ உட்டுட்டார் போல! ’இல்ல ... பாதர் கிட்ட ஏதேதோ கேட்டியாம்; சொன்னார்’ என்றார். ’அதெல்லாம் ஒண்ணுமில்லை’ன்னு ஓடிட்டேன். இருந்தாலும் முதல்ல அப்பாவுக்கு சந்தேகம் உள்ளேயே இருந்திருக்கு.


 அந்த சமயத்தில் வீட்டில ஏதோ ஒரு விசேஷம். அப்பாவின் தங்கச்சிமார்கள் இரண்டு பேர் சிஸ்டரா போய்ட்டாங்க. ரெண்டு அத்தைமார்கள்; ஒரு சித்தப்பா, ஒரு அண்ணன், ஒரு தங்கை, சில மதினிகள் ... ஒருபெரிய பட்டாளமே  நம்ம குடும்பத்தில இருந்து  ‘அந்தப் பக்கம்’ போயிருக்காங்க ... ரொம்ப பக்தியான கீனா குடும்பம்னு வச்சுக்கங்களேன்!! எனக்கு அத்தைங்க. சின்ன வயதில் என்னை வளர்த்ததில் அவர்களுக்கெல்லாம் பங்குண்டு. எங்கிட்ட ரொம்ப பிரியமா இருப்பாங்க. நான் இல்லாதப்போ அப்பா அத்தைகளிடம் என்னமோ சொல்லியிருப்பார் போலும்.


நான் வந்ததும் அத்தைகள் ரெண்டு பேரும் என்னை நடுவில் உக்கார வச்சி மொதல்ல ஏதேதோ கதைகள் பேசினாங்க. அப்டியே மெல்ல சாமி விவகாரத்திற்கு வந்தாங்க. அதாவது சுத்தி நின்னு ‘மந்திரிச்சாங்க’ ... இதுல என்ன ப்யூட்டின்னா.... இந்த சிஸ்டரா போறவங்களுக்கு குருட்டு பக்தி இருக்கும். ரொம்ப ஸ்ட்ராங்கான விசுவாசத்தோடு இருப்பாங்க. ஆனால் பைபிளில் ஒரு கேள்வி கேட்டா ஒண்ணுமே தெரியாது. வாய் வழியா கேட்டு கேட்டு ஒரு நம்பிக்கையோடு வாழ்க்கையை ஓட்றவங்க.


பொதுவாகவே கத்தோலிக்க கீனாக்கள் எல்லோருமே இப்படிப்பட்ட டைப்புகள் தான். பைபிள் வாசிச்சிருக்க மாட்டாங்க... ஆனா பக்தி மட்டும் பெருவெள்ளமா பாயும். பயங்கர விசுவாசிகள்! நம்ம அத்தைகளும் அது மாதிரி தான். ஏதேதோ ஒண்ணு ரெண்டு கேட்டேன். அவர்களிடம் அதுக்கெல்லாம் பதில் இருக்காதுன்னு தெரியும். அது மாதிரி தான் இருந்திச்சு.


’அதெல்லாம் உடு ... என்னைத்தையோ பேசிக்கிட்டு ... ஏசு நமக்காக எப்படியெல்லாம் பாடு பட்டார் ...’ அப்டின்னு தங்கள் வழக்கமான இழுவையை இழுத்தாங்க. நானும் கொஞ்ச நேரம் எடக்கு மடக்கா ஏதேதோ கேட்டேன். இன்னொரு அத்தை; அத்தை வீட்டுக்கார மாமா ... இந்த ரெண்டு பேருமே பயங்கர பக்திமான்கள் தான். அவங்களும் இதில் சேர்ந்துக் கிட்டாங்க.


நான்கு புறத் தாக்குதல்னு வச்சிக்கோங்களேன். மாமா மட்டும் கொஞ்சூண்டு பைபிளில் இருந்து ஏதாவது ஒண்ணு ரெண்டு பேசுவார். நான் அவர்களிடம், “ஏசு .. பாவம் .. அவர் தான் நான் இஸ்ரவேலர் சாதிகளுக்காக வந்தேன்னு சொல்லிக்கிட்டே இருக்காரேன்னு” சொன்னேன் ... அவரே அப்படித்தான் தன்னைப் பத்தி சொல்லிக்கிறார். ஆனா நீங்களோ வேற ‘சாதிக்காரவிய..’ உங்களுக்கும் அவருக்கும் என்ன ஆச்சு .. இப்படியே கொஞ்ச நேரம் போச்சுது. 


நடுவில தங்க்ஸ் வந்து, ‘இப்பல்லாம் இதெல்லாம தேவையா?’ன்னு ஒரு ஸ்பீட் ப்ரேக் போட்டுப் பார்த்தாங்க. நம்ம அப்டில்லாம் உடனே உட்ருவோமா? இன்னும் கொஞ்சம் இழுத்தேன். மாமா ‘இவனை பிசாசு மோசமா பிடிச்சிருக்குன்னு ...’ சொல்லிட்டு எழுந்திருச்சி போய்ட்டார்.


 எனக்கும் கொஞ்சம் போரடிச்சிது. அப்படியே எழுந்து மூணு அத்தைமார்களிடம், ‘இப்படியெல்லாம் இருந்திச்சி ... ஆனா .. என்னைக்கி நான் அந்த ‘ஒளி’யைப் பார்த்தேனோ ... அப்பவே எல்லாமே மாறிடிச்சி’ அப்டின்னு சீரியஸா மூஞ்சை வச்சி சொல்லிட்டு... வர்ரேன் அப்டின்னு சொல்லி என் ரூமுக்குப் போய்ட்டேன். சும்மா ஒரு விளையாட்டுக்குத்தான் அந்த புருடா விட்டேன். சும்மா ஒரு leaving note மாதிரி.


 கொஞ்ச நேரம் கழிச்சதும் அத்தை மூணு பேரு .. இன்னொரு சித்தி எல்லோரும் என்னைப் பார்க்க வந்துட்டாங்க. என்னடான்னு பார்த்தேன். அவங்க எல்லோரும் ரொம்ப சீரியஸா ‘என்னப்பா ... ஒரு ஒளி பார்த்தேன் சொன்னியே ... என்னய்யா அதுன்னு?’ ரொம்ப சீரியஸா கேட்டாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. ஆனாலும் அதை அப்படியே டொம்முன்னு போட்டு உடைக்கவும் மனசில்ல.


’அதெல்லாம் விடுங்க ... ‘ அப்டின்னு சொல்லிப் பார்த்தேன். என்னை அப்படியே விட அவங்களுக்கு மனசில்லை. எப்படியோ என்னத்தையோ டெம்போ விடாமால் ஏதேதோ சொல்லி விடுபட்டேன்.


 அப்போ நான் ஏதாவது ஒரு ’கதை’ எடுத்து விட்டிருந்தாலும் அப்படியே நம்பிட்டு எனக்கும் ஒரு க்ளின் சர்டிபிகேட் கொடுத்துட்டு, என் தலையைச் சுத்தி ஒரு halo போட்டுட்டு போயிருப்பாங்க ...


 நம்பிக் கையாளர்களை
 நம்பிக்கைகளை வைத்தே
 ஏமாற்றுவது எவ்வளவு எளிது
 என்பது மட்டும் அன்று புரிந்தது. .... ஆமென்!
 *

Monday, April 21, 2014

746. அஹமதியா மதம் பிறந்த கதை*


பஞ்சாபில் உள்ள காதியன் என்ற கிராமத்தில் 13 பிப்ரவரி 1835-ல்பிறந்த மிர்ஸா குலாம் அகமது கிறித்துவத்தையும், இந்து மதத்தையும் எதிர்த்து நிறைய எழுதினார். 1880ல் Barahin-i-Ahmadiyah என்ற நூலின் நான்கு பகுதிகளில் இஸ்லாமிய மதத்தை ஆதரித்தும், கிறித்துவ மிஷனரிகளை எதிர்த்தும், ஆர்ய சமாஜை எதிர்த்தும் எழுதினார். 1886இல் ஹோசியார்பூர் என்ற ஊருக்கு சென்ற போது தன்னிடம் இறைவசனங்கள் இறங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார். அந்த நேரத்தில் சூபி ஞானிகள் செய்யும் சில்லா நாசினித்தில் (பெரும்பாலும் இந்திய ஈரானிய சூபிகளிடம் இருக்கும் பழக்கம்) ஈடுபட்டிருந்தார். இது தனிமையில் ஒரு வட்டத்துக்குள் இருந்து 40 நாட்கள் தூக்கமும் உணவும் இல்லாமல் இருப்பதாகும். இது இயேசு நாற்பது நாட்கள் வனத்தில் இருந்ததையும், மோஸஸ் சினாய் மலையில் நாற்பது நாட்கள் இருந்ததற்கும், எலிஜா என்ற தீர்க்கதரிசி நாற்பது நாட்கள் பட்டினியாக இருந்ததோடும் ஒப்பிடப்படுகிறது. ஆனால், குலாம் மிர்ஸா பட்டினியுடன் இருக்கவில்லை. அவ்வப்போது உணவு உண்டதாகக் கூறுகிறார். இந்த காலத்தில்தான் அவருக்கு ஒரு மிகச்சிறப்பான மகன் பிறக்கப்போவதாக இறைவன் கூறியதாகக் கூறினார்.

பின் தன்னையே ‘வாக்களிக்கப்பட்ட இரட்சிப்பாளர்’ என்று அழைத்துக்கொண்டார். தானே ஏசுவின் ஆன்மா, அல்லாவின் தூதுவர், கிருஷ்ண பரமாத்வாவின் மறு அவதாரம் என்றெல்லாம் தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ள ஆரம்பித்தார்.

இதற்குப் பின்னர் தன்னை ஒரு முஜாதித் (சீர்திருத்தவாதி) என்று கூறிக்கொண்டு தன்னை இஸ்லாமிய நபியாக முன்னிருத்திக்கொண்டார். இறுதித்தீர்ப்பு நாளன்று இயேசு வருவார் என்ற இஸ்லாமிய நம்பிக்கையை முன்னிருத்தி தன்னையே அப்படிப்பட்ட இயேசு என்று கூறிக்கொண்டார். இஸ்லாமியர்கள் எதிர்பார்ப்பது போல மிலிட்டரி தலைவராக இயேசு வரமாட்டார் என்றும் ஆன்மீகத் தலைவராகவே வருவார் என்றும், இனி ஜிஹாத் என்னும் இஸ்லாமிய போர் இந்த காலத்தில் தேவை இல்லை என்றும் அறிவித்தார். இது அப்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த வெள்ளையர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது; அரசின் ஆதரவும் இவருக்குக் கிடைத்தது.

ஆயினும் இவர் சொன்ன பல தீர்க்க தரிசனங்கள் தவறாகவே இருந்தன. தான் நான்கு பகுதிகளில் எழுதிய நூலை 50 தொகுதி கொண்டதாக எழுதப்போவதாகச் சொன்னார். ஆனால் வெறும் 5 பகுதிகள் மட்டுமே எழுதினார். அதுவும் அந்த ஐந்தாவது புத்தகம் எந்தச் சிறப்புமற்ற நூலாக இருந்தது. உருது, அராபிய மொழியில் ஐந்துக்கும் ஐம்பதுக்கும் ஒரே ஒரு புள்ளி மட்டுமே வித்தியாசமாக இருந்தது. இதை வைத்து சமாளிக்க முயற்சித்தார்!

கிறித்துவர்களையும், இந்துக்களையும் போட்டிக்கழைத்த அகமது பின்னாளில் இஸ்லாமியரையும் போட்டிக்கழைத்தார். இதனால் இஸ்லாமியர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். கடவுள் தனக்கு எல்லா தூதுவர்களைப் பற்றியும் தன்னிடம் பேசியுள்ளதாகக் கூறினார். ’ஆதாம், நோவா, இப்ராஹீம், ஐசக், யாக்கோபு, இஸ்மாயில், மோசஸ், தாவூது, ஏசு, முகமது – என்ற எல்லா தூதுவர்களாக வந்ததே தானே என்று கூறிக்கொண்டார்.

இது பல இஸ்லாமிய தலைவர்களை இவருக்கு எதிராக திருப்பியது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு உதவியாக முஸ்லீம்களின் ஜிஹாத் உணர்வை மழுங்கடிக்க இவர் பயன்படுத்தப்பட்டார் என்று இதர முஸ்லீம் தலைவர்கள் இவரைக் குற்றம் சாட்டுகிறார்கள். இஸ்லாமியர்கள் இவரை முழுமையாக எதிர்த்ததால் இவரும் இவரை நம்பியோரும் புதிய குழு ஒன்றை அமைத்துக் கொண்டனர். இவர்கள் அஹமதியா என்று தங்களை அழைத்துக் கொண்டனர். ’அஹமதியா’ என்பது முகமதுவின் இன்னொரு பெயர்; அஹமதுவின் பெயருக்காக இப்பெயரை வைக்கவில்லை என்பது அவர்களது விளக்கம். இஸ்லாமியர்கள் இவர்களை ‘காதியர்கள்’ என்று அஹமது பிறந்த ஊரின் பெயரை வைத்து அழைத்தனர்.

தன்னை இறுதி மெஹ்தியாகவும், வாக்களிக்கப்பட்ட மெசியாவாகவும் அறிவித்துக் கொண்ட பின்னால், பல முஸ்லீம் தலைவர்கள் இவரை காபிர் என்றும், இவரையும் இவரது சீடர்களையும் கொல்லத் தகுந்தவர்களாக அறிவித்து பத்வா விதித்தனர். அந்த பத்வா இந்தியாவெங்கும் எடுத்து செல்லப்பட்டு, 200க்கும் மேற்பட்ட முஸ்லீம் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

ஈத்-உல்-அதா திருவிழாவன்று 1900இல் இவர் அரபிய மொழியில் ஒரு மணிநேரம் தியாகத்தைப் பற்றி உரையாற்றினார். இந்த உரை இறைவனால் அவருக்கு அளிக்கப்பட்டது என்று அவரை பின்பற்றுபவர்கள் கொண்டாடுகின்றார்கள். இந்த உரையின் போது அவர் குரல் மாறியதாகவும், அவர் ஒரு மோன நிலையிலிருந்து இந்த உரையை ஆற்றியதாகவும் கூறுகிறார்கள். இந்த உரையை பற்றி பின்னால் மிர்சா குலாம் எழுதும்போது ‘ஒரு தேவதூதன் என் நாவின் மூலமாகப் பேசியது போலிருந்தது’ என்கிறார்.

அல்லாஹ் சுமார் 7000 வருடங்களுக்கு முன்னால், முதல் மனிதரான ஆதாமை உருவாக்கியதாகவும் அதன் பின்னால் முகம்மது நபி 4508 ஆண்டுகளுக்கு பின்னால் தோன்றியதாகவும் கூறியிருக்கிறார். (Lecture Sialkot – Page 11, Lecture Sialkot – Page 15) இருந்தாலும் இன்றைய அஹ்மதியா பிரிவினர் பரிணாமவியலை ஒப்புகொள்வதாக கூறுகின்றனர்.

இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி இயேசு இரண்டாம் முறை வரும்போது டமாஸ்கஸ் நகருக்கு கிழக்கே வெள்ளை மினாரட்டுக்கு அருகே உதிப்பார் என்று இருப்பதாகக் கூறிய இவர், தன்னையே இயேசு என்று கூறிகொள்வதால், தனது ஊரான குவாதியான் நகரிலேயே 1903இல் வெள்ளை மினாரட் கட்ட அஸ்திவாரம் போட்டார். இந்த மினாரட் 1916 இல் கட்டி முடிக்கப்பட்டது. இது அஹ்மதியா இஸ்லாமின் சின்னமாக கருதப்படுகிறது.

இவரது காலத்திலேயே ஏராளமான முஸ்லீம்கள் இவரைப் பின்பற்றினர். இவரது காலத்துக்கு பின்னர் அந்த இயக்கம் இரண்டாக உடைந்தது. ஒன்று லாகூர் அஹ்மதியா இயக்கம்; அடுத்தது அஹ்மதியா முஸ்லீம் இயக்கம். அஹ்மதியா முஸ்லீம் இயக்கம் இன்று 200 நாடுகளில் உள்ளது. இந்த இயக்கத்தில் சுமார் இரண்டு கோடிக்கு மேல் பக்தர்கள் உள்ளனர். லாகூர் அஹ்மதியா இயக்கம் 17 நாடுகளில் உள்ளது. 1974ம் ஆண்டு இக்குழுவினர் காபிர் என்று பாகிஸ்தான் அரசால் சட்டம் இயற்றப்பட்டது. இவர்கள் மெக்காவிற்குச் செல்லவும் தடை செய்யப்பட்டார்கள். என்றாலும் அவர்கள் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே உள்ளது. பாகிஸ்தானின் ஒரே நோபல் பரிசு விஞ்ஞானி அப்துஸ் சலாம் அஹ்மதியா பிரிவை சேர்ந்தவர்.

மிர்ஸா குலாம் அஹ்மதுவுக்கு டெம்போரல் வலிப்பு நோய் இருந்திருக்கலாம் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. முதலாவது அவர் தன்னை கடவுளோடு உரையாடுபவராகக் கூறிக் கொள்கிறார். ’நீ என்னுடைய ஒருமையைப் போல இருக்கிறாய். என்னுடைய தனித்துவத்தை போல இருக்கிறாய். என்னுடைய ஆசனம் போல இருக்கிறாய். என்னுடைய மகனைப் போல இருக்கிறாய்’ என்று கடவுள் இவரிடம் சொன்னதாக எழுதியுள்ளார். இவருக்கு வலிப்பு நோய் இருந்திருப்பதை இவரது மருத்துவரும் மற்றவர்களும் குறித்து வைத்துள்ளனர். அஹமதுவே தனக்கு இருந்த வலிப்பு நோய் போல இயேசுவுக்கும் இருந்திருக்கிறது என்று எழுதியிருக்கிறார். (Jesus had actually become insane due to epilepsy. - (Roohani Khazain, Satt Bachan – Volume 10 – Page 295)

இவர் எதிர்காலத்தில் நடக்கப்போவதாக நிறைய சொல்லியிருக்கிறார். அந்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தையும் அல்லாவே தன்னிடம் கூறியதாகச் சொன்னார். இது போன்ற ஏராளமான வாசகங்களை அவர் எழுதிய நூற்றுக்கும் மேலான புத்தகங்களில் காணலாம். இவர் கூறிய பல தீர்க்க தரிசனங்கள் அவரது வாழ்க்கைக் காலத்திலேயே தவறாகிப் போய் விட்டன. தான் ’காதலித்த’ முகமதி பேகம் என்ற பெண்ணை மணக்க அவர் எடுத்துக் கொண்ட நம்பிக்கைகளும், முயற்சிகளும் மிகவும் வேடிக்கையானவை. முகமது நபி ஜேனப் என்ற பெண்ணை மணக்க அல்லா உதவியது போல் தனக்கும் உதவுவார் என்ற நம்பிக்கையில் தான் இத்தனை முயற்சிகள் எடுத்திருக்கிறார்! தன் வாழ்க்கைக் காலத்திலேயே கிறித்துவ மதம் அழிந்து விடும் என்றார்; அதுவும் நடக்கவில்லை; இது போன்ற அவரது தீர்க்க தரிசனப் பட்டியல் மிக நீளம் ....
http://www.answering-islam.org/Gilchrist/Vol1/9c.html

http://news.bbc.co.uk/2/hi/8711026.stm

*

Thursday, April 17, 2014

745. மோர்மன் பிரிவு பிறந்த கதை


*
”திண்ணை” இணைய இதழில் R.கோபால் என்பவர்  “கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார்”  என்ற தலைப்பில் 11 கட்டுரைகள் எழுதியுள்ளார். பொருளடக்கம் எனக்கு மிகவும் பிடித்தமையால், இக்கட்டுரையை என் இணையப் பக்கத்தில் வெளியிட விருப்பம் கொண்டேன். திரு கோபாலுக்கு தனி மயில் மூலமும், பின்னூட்டம் மூலமும் இக்கட்டுரையைப் பதிவிட சிலமுறை அனுமதி கேட்டேன். இதுவரை பதிலேதும் இல்லை; திண்ணை எடிட்டரிடமும்  அனுமதி கேட்டேன். பதிலேதும் இல்லை.

அரை மனத்துடன் அவர் பதிவுகளைச் சிறிது சுருக்கி இங்கு பதிவிடுகிறேன். ஒருவேளை அவர் அனுமதி மறுத்தால் அடுத்த கணம் இதனை எடுத்து விடுகிறேன்.  திரு. R.கோபாலுக்கு மிக்க நன்றி.* மோர்மன் பிரிவு என்பது கிறிஸ்துவ அடிப்படைவாதத்தில் தோன்றி, மருவி தனியொரு மதமாக பரிணமித்த ஒரு அமெரிக்க மதம்.  இன்று அமெரிக்காவைத் தாண்டி உலகமெங்கும் பரவியிருக்கிறது. இந்த மதத்தை தோற்றுவித்தவர் ஜோஸப் ஸ்மித் ஜூனியர். அமெரிக்காவில், வெர்மாண்ட் மாநிலத்தில், 1805 ஆம் ஆண்டு, ஜோஸப் ஸ்மித் சீனியர் என்பவருக்கும், லூசி மாக் ஸ்மித் என்பவருக்கும் ஐந்தாவது குழந்தையாக ஜோஸப் ஸ்மித் ஜூனியர் பிறந்தார்.

அவருக்கு 17 வயதாக இருக்கும்போது அவருக்கு ”காட்சிகள்” தோன்ற ஆரம்பித்தன. அவரிடம் மொரோனி (moroni) என்ற ஒரு தேவதை வந்து புதைக்கப்பட்டிருக்கும் தங்க ஏடுகளை காண்பிப்பதாகவும், அதன் மூலம் கிறிஸ்துவத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் கோரியது என்று தன் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கூற ஆரம்பித்தார். 1830இல் (அவருக்கு 25 வயதாக இருக்கும்போது) மோர்மன் புத்தகம் (Book of Mormon) என்பதன் ஆங்கில மொழிபெயர்ப்பை பிரசுரித்தார். அதாவது, அதன் மூலம் தங்க ஏடுகளில் இருந்தன. ஒரு எகிப்து மொழியும், எபிரேயமும் கலந்த ஒரு புராதன மொழி என்று கூறிக்கொண்டார். அந்த மொழியை மொழிபெயர்க்க அவருக்கு அந்த தேவதை வலிமை கொடுத்தது என்றும் அந்த தங்க ஏடுகளை மொழிபெயர்த்து அவர் ஆங்கில புத்தகமாக வெளியிடுகிறார் என்றும் கூறினார்.

அவர் தங்கியிருந்த கிராமத்துக்கு அருகே இருந்த குமோரோ என்ற மலையில் ஒரு கல்லாலான பெட்டியின் உள்ளே இந்த ஏடுகள் இருந்தன என்று இவர் கூறினார். இன்றும் அந்த மலை மார்மன் கிறிஸ்துவர்களின் புனிதத் தலமாக இருக்கிறது. மீண்டும் ஆரம்பகால தூய வடிவில் சர்ச்சை நிறுவனப்படுத்த தன்னை கடவுள் தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார். இந்த சர்ச்சுக்கு சர்ச் ஆஃப் லேட்டர் டே செயிண்ட்ஸ் அல்லது சர்ச் ஆஃப் மோர்மன் என்ற பெயர் சூட்டப்பட்டது.

இந்த காலகட்டம் ஐரோப்பாவிலிருந்து துரத்தப்பட்ட, அல்லது வெளியேறிய ஐரோப்பியர்கள் அமெரிக்கா வந்து குடியேறும் காலகட்டம். இந்த காலகட்டத்தில் ஏற்கெனவே ஒரு இடத்தில் வந்து சேர்ந்தவர்களுக்கும், புதியதாக வந்து சேர்பவர்களுக்கும் இடையே சண்டைகள் அவ்வப்போது நடந்தன. 1831இல் இவரிடம் கணிசமான சீடர்கள் சேர்ந்திருந்தார்கள். ஆகவே ஸ்மித் இவர்களை கூட்டிக்கொண்டு ஒஹையோ மாநிலத்தில் கிர்ட்லாந்த் என்ற நகரில் ( Kirtland, Ohio ) ஜியான் (Zion) என்னும் புனித நகரை ஸ்தாபிக்க அழைத்துச் சென்றார். ஆனால், அங்கே ஏற்கனவே இருந்தவர்கள் இந்த புதிய வரவாளிகளை துரத்திவிட்டனர். ஏற்கெனவே வடக்கு மிஸோரி மாநிலத்துக்கு இவர்கள் சென்றனர். இந்த காலகட்டத்திலேயே, மோர்மன்களின் அதிகரிப்பை கண்டு பயந்தவர்களும் மோர்மன்களோடு போர் புரிந்தனர். இது 1838 ’மோர்மன் போர்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் மோர்மன்கள் தோற்றனர். அதனால், மிசோரியிலிருந்து மோர்மன்கள் துரத்தப்பட்டனர். ஸ்மித் சிறை பிடிக்கப்பட்டார். மிசோரி சிறையிலிருந்து தப்பிய ஸ்மித் மோர்மன்களுடன், இல்லினாய் மாநிலத்தில் நாவோ பகுதியில் (Nauvoo, Illinois) குடியேறினார்கள். அங்கு அவர் மேயராகவும், பிறகு மோர்மன்களின் மிகப்பெரிய போர்ப்படைக்கு தலைவராகவும் இருந்தார்.

1844இல் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். நாவோ எக்ஸ்போஸிடர் என்ற பத்திரிக்கை ஸ்மித் பலதார மணம் புரிந்திருப்பதை விமர்சித்தது. இதனால், நாவோ நகர கவுன்ஸில் அந்த பத்திரிக்கை அழிக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. இதனால் நடந்த குழப்பத்தின் இறுதியில், நாவோ பகுதியில் ராணுவ சட்டம் என்று (martial law) அறிவித்தார். பிறகு இல்லினாய் கவர்னரிடம் சரணடைந்தார். வழக்கை எதிர்பார்த்து இருக்கும்போது அவர் இல்லினாய் மாநிலத்தில் கொல்லப்பட்டார்.

ஸ்மித்தின் சீடர்கள், அவர் எழுதியது எல்லாவற்றையும் இறைவனால் கொடுக்கப்பட்டவையாக கருதுகிறார்கள். கடவுளின் தன்மை, குடும்பம் எப்படி இருக்க வேண்டும், அரசியலமைப்பு, மதம் ஒரு கட்டுக்கோப்பான ராணுவம் போல இருக்க வேண்டும் என்ற எல்லாவற்றையும் இறை வாக்குகளாக கருதுகிறார்கள். மோஸஸ், எலிஜாவுக்கு நிகராக அவரையும் ஒரு தீர்க்கதரிசியாக கருதுகிறார்கள்.

அவரது மறைவுக்கு பின்னால், மோர்மனிஸம் பல பிரிவுகளாக பிரிந்திருக்கிறது. அதன் முக்கிய பிரிவு சர்ச் ஆஃப் ஜீஸஸ் கிரிஸ்ட் ஆஃப் லாட்டர் டே செயிண்ட்ஸ் ( Church of Jesus Christ of Later-day Saints ) என்று அழைக்கப்படுகிறது. மிசோரியில் ஒரு பிரிவு தன்னை கம்யுனிட்டி ஆஃப் கிறிஸ்ட் என்று அழைத்துகொள்கிறது. அதிகாரப்பூர்வமான இந்த இரண்டு சர்ச்சுகளும் பலதார மணத்தை தாங்கள் இனி போதிக்க மாட்டோம் என்று அமெரிக்க அரசாங்கத்திடம் உத்தரவாதம் கொடுத்ததினால், இதிலிருந்து பல மோர்மன்கள் பிரிந்து சென்று பலதார மணத்தை ஆதரிக்கும் பல மோர்மன் உப பிரிவுகளை உருவாக்கிக்கொண்டனர்.

ஜோஸப் ஸ்மித்தின் பெற்றோரும் அவரது தாய்வழி தாத்தாவும், அடிக்கடி தங்களிடம் கடவுள் பேசுவதாக கூறிகொண்டனர். இந்த டெம்போரல் லோப் வலிப்பு மரபணு ரீதியாகவும் வரலாம் என்பதை கருத்தில் கொள்ளலாம். இப்படிப்பட்ட குடும்ப சூழ்நிலையில் வளர்ந்த ஸ்மித் தனக்கும் இந்த டெம்போரல் வலிப்பு வந்ததை இறைவனின் வசனம் தன்னிடமும் இறங்குவதாக கூறிகொண்டதில் ஆச்சரியமில்லை. தன்னிடம் இறைவனின் தூதரும் இறைவனும் வந்து பேசியதாக ஸ்மித் எழுதியிருக்கிறார். இவரிடம் மோரோனி என்ற தேவதை கொடுத்த தங்க ஏடுகளை அவர் ஒரு பாதுகாப்பான அறையில் பூட்டி வைத்ததாகக் கூறிக்கொண்டார். மோரோனி தேவதை அந்த ஏடுகளை யாரிடமும் காட்டக்கூடாது என்றும், அதன் மொழிபெயர்ப்பை மட்டுமே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஆணையிட்டிருப்பதாக கூறிக்கொண்டார். இவரது வார்த்தையை நம்பி பலர் இவரிடம் மொழிபெயர்ப்பு வேலை செய்ய வந்தனர் அப்போதிலிருந்து அந்த பழங்கால ஏடுகளிலிருந்து மொழிபெயர்க்கும் திறன் போய்விட்டதாக கூறினார்.

பிறகு 1828இல் இவருக்கு மீண்டும் அந்த திறன் கொடுக்கப்பட்டதாகவும் கூறிகொண்டார். பலர் இந்த தங்க ஏடுகளை பார்க்க விரும்பினர். ஆனால், மோரோனி தேவதை மற்றவர்கள் பார்க்ககூடாது என்று கூறிவிட்டதால் காண்பிக்கவில்லை என்று கூறிவிட்டார். அவரது நெருங்கிய உறவினர்கள் 11 பேர் அந்த தங்க ஏடுகளை பார்த்ததாக சாட்சியமளித்தனர். இவை இப்போதும் பிரசுரிக்கும் மோர்மன் புத்தகம் என்ற இந்த பிரிவின் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

மொழிபெயர்ப்பு முடிந்ததும், அந்த தங்க ஏடுகளை மோரோனி எடுத்துகொண்டு சென்றுவிட்டதாக ஸ்மித் கூறிவிட்டார். தான் வன்முறையை விரும்பவில்லை என்று ஸ்மித் அடிக்கடி கூறிகொண்டாலும், மோர்மன் மதத்தை காக்கவும், மோர்மன் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக ராணுவப்போருக்கு ஆட்களை அழைக்க வேண்டும் என்றும் விரும்பினார். இவரது சில போதனைகள் பல முன்னுக்குப் பின் முரணாக இருப்பவை. ஒரு காலகட்டத்தில் வந்த போதனைகளை பின்னொரு காலத்தில் அதனை மறுத்து வேறொரு கருத்தை கடவுள் தன்னிடம் சொன்னதாக கூறிவிடுவார். உதாரணமாக அடிமைமுறையை ஆதரித்து 1836ல் பேசினார். பின்னர் கடுமையாக அடிமைமுறையை எதிர்த்திருக்கிறார். அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட போது, 1850ஆம் ஆண்டில் அடிமைமுறையை ஒழிக்கப்போவதாகவும், ஏற்கெனவே அடிமைகளை வைத்திருந்தவர்களுக்கு நஷ்ட ஈடாக, பொது நிலங்களை விற்று பணம் தரப்போவதாகவும் வாக்குறுதி அளித்தார். மோர்மன் மதத்துக்குள் அடிமைகள் வரலாம். ஆனால், அந்த அடிமைகளின் எஜமானர்கள் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதே நேரத்தில் கருப்பினத்தவரும், வெள்ளையினத்தவரும் திருமணம் செய்வதை தடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். ஜனநாயகமே சரி என்று ஒரு சமயத்தில் கூறியிருக்கிறார். பின்னர் மோர்மன் மத அடிப்படையிலான மத அரசாங்கமே ஒரு நாட்டை அரச வம்சத்தால் ஆளப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அமெரிக்கா பல நாடுகளையும் ஆக்கிரமித்து ஆள வேண்டும் என்று கூறியிருக்கிறார். பின்னால், அந்த ஆக்கிரமிப்பு என்பது சகோதரத்துவ ஆக்கிரமிப்பு என்று அழைத்திருக்கிறார். மனிதர்கள் உருவாக்கிய சட்டத்தை விட கடவுள் கொடுக்கும் சட்டமே உன்னதமானது என்றும், இறைவசனத்தின் மூலம் வரும் சட்டத்தையே மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இது அவரது கருத்து. ”ஒரு இடத்தில் கொல்லக்கூடாது என்று கடவுள் சொல்லியிருக்கிறார்(பைபிளில்). மற்றொரு இடத்தில் அழித்து முடி என்றும் சொல்லியிருக்கிறார். நேரத்துக்கு தகுந்தாற்போல வரும் இறைவசனங்கள் மூலமாகத்தான் அரசாங்கம் நடைபெற வேண்டும். இந்த அரசாங்கத்தின் மூத்த தலைவர்களுக்கு இறைவனிடமிருந்து வரும் கட்டளைகள் மூலமாகத்தான் அரசாங்கம் நடைபெற வேண்டும். கடவுள் என்ன கேட்கிறாரோ அதுவே சரி. மற்றவர்கள் இந்த கட்டளைகளை என்ன கேவலமாக கருதினாலும்….” என்று கூறுகிறார். பலதார மணமே சிறந்த மணம் என்றும் அதுவே மனிதனை கடவுளாகக்கூட ஆக்ககூடிய விஷயம் என்றும் கூறியிருக்கிறார். ================


 இன்னும் சில கடவுள் தரிசனம் பெற்றோரின் பட்டியல்:

செயிண்ட் பிர்கிட்டா (1303-1373) ஸ்வீடனின் முக்கியமான செயிண்டாக அறியப்படுகிறார். இவர் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே இப்படிப்பட்ட காட்சிகளை அனுபவிப்பவராக இருந்தார். இவரது கல்லறையில் இருந்த அவரது மண்டையோடு ஆராயப்பட்டிருக்கிறது. அதில் இவருக்கும் மெனிஞ்சியோமா என்ற வியாதி இருப்பது தெரியவருகிறது. இது வலிப்புகளை உருவாக்கும் வியாதி. ஆனால், இது டெம்போரல் லோபுக்கு பரவாமல் இருந்தாலும் அதிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். காட்சி பிரமைகளும் தானாக உருவாக்கிக்கொண்ட psychogenic non-epileptic seizures, or a combination இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.


ஜோன் ஆஃப் ஆர்க் (Joan of Arc அல்லது The Maid of Orléans) என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற பிரஞ்சு வீராங்கனையும் இது போல அடிக்கடி காட்சிகளை பிரமையாக கண்டவர் என்று கூறப்படுகிறது.


அவில்லாவின் செயிண்ட் தெரஸா Saint Teresa of Ávila, also called Saint Teresa of Jesus, baptized as Teresa Sánchez de Cepeda y Ahumada, (March 28, 1515 – October 4, 1582) இவர் ஸ்பெயினில் பிறந்தார். மிகச்சிறிய வயதிலேயே நோய்வாய்ப்பட்ட இவர் Tercer abecedario espiritual,” translated as the Third Spiritual Alphabet (published in 1527 and written by Francisco de Osuna) என்ற புத்தகத்தை படிக்கும்போதெல்லாம் காட்சிகளையும் பிரமைகளையும் அடைந்தார். இப்படிப்பட்ட காட்சிகளின் போது பேரானந்தத்தையும் அதீதமான அழகைப் பார்த்ததால் பெருகும் கண்ணீரையும் அனுபவித்ததாக எழுதுகிறார்.


 உலக மக்கள் அனைவருக்கும் சொல்வதற்காக, ஒரே மூச்சில் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட செய்தியை, தங்களது சூழ்நிலைக்கு ஒரு சம்பந்தமும் இல்லாத செய்தியை, இப்படிப்பட்ட ”இறைவனால் வழிநடத்தப்படுகிறவர்கள்” சொல்வதில்லை. இவர்களுக்கு வரும் ஒவ்வொரு செய்திக்கும் அந்தந்த சூழ்நிலையே காரணமாகிறது. அந்த தனிநபரின் நெருக்கடிகளின் போது அவருக்கு தோன்றும் கருத்துக்களே இறைவனின் வாசகங்களாக அவர்களால் கூறப்படுகின்றன.

இதுவே ஜோஸப் ஸ்மித், அஹமதியா, ஜோன் ஆப் ஆர்க் இன்னும் இது பலரின் பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுகிறது. முகமதுவிற்கு வஹி தொடர்ந்து வந்தது 23 வருடங்களுக்கு. இதுவே இவர்களை அவநம்பிக்கையோடு மற்றவர்கள் அணுக முகாந்திரமாகவும் அமைந்துவிடுகிறது.

பெந்தகொஸ்தே கூட்டங்களில் கத்துதலும், தாறுமாறாக நடந்துகொள்ளுதலும், அன்னிய பாஷை பேசுவதாக கூறிகொண்டு பேசுவதும், வலிப்பு வந்தாற்போல நடந்துகொண்டு பரிசுத்த ஆவி வந்ததாக கூறிக்கொள்வதும் பார்க்கலாம். இதனை self induced epileptic seizure என்று அழைக்கிறார்கள்.

அன்னிய பாஷை பேசுவதாக கூறினாலும் இது pseudo-language என்று அறிவியல் ஆய்வுகளில் வரையறுக்கப்படுகிறது. இது கிறிஸ்துவத்தின் ஆரம்ப காலத்தில் கிறிஸ்துவ போதகர்கள் தாங்கள் பரிசுத்த ஆவியால் அன்னிய தேசங்களின் பாஷைகளை பேச சக்தி கொடுக்கப்பட்டோம் என்று காண்பிக்க இவ்வாறு பொய்யான மொழி பேசுவது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்று அன்னியபாஷை என்பது உலகத்தில் எங்குமே பேசப்படாத மொழிகளைப்போல பொய்யாக பேசுவது. அதனாலேயே இது பொய்மொழி என்று அறிவியல் வரையறுக்கிறது. இவ்வாறு பொய்மொழியை பேசுவது சில மணிநேரங்கள் பழக்கப்படுத்திகொண்டாலே யார் வேண்டுமானாலும் பேசலாம் என்று ஆராய்ச்சிகளில் நிரூபித்துள்ளனர்.

 *