Thursday, February 26, 2009

296. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததால் பெருமைப் படும் முஸ்லீம்களே !

*

ஆதிரை பரூக் - சார் யாரென்று எனக்குத் தெரியாது; இவர் ஒரு பதிவரா; வலைப்பூ எதுவும் வைத்திருக்கிறாரா என்பதுவும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் முயன்றதில்லை. ஆனாலும் என்னவோ அவர் ஒரு பதிவராகத்தான் இருப்பார் என்ற நினைப்பு. என் மேல் என்ன பாசமோ, இல்லை என்னை இஸ்லாமிய மார்க்கத்துக்குள் சேர்த்துவிட வேண்டுமென்ற ஆவலோ என்னவோ, எனக்குப் பலதடவை தனி மயில்கள் அனுப்பி வந்தார். எல்லாமே இஸ்லாமியக் கோட்பாடுகள் பற்றியது. நானும் உடனுக்குடன் அவைகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு trash-க்கு அனுப்பி வந்தேன். கிறித்துவ மக்கள் கொடுக்கும் tractsகளை இதனாலேயே வாங்காமல் சென்றுவிடுவதுண்டு - அவர்கள் முன்னால் அதைக் கசக்கி எறியவேண்டாமே என்று.

மயில்கள் தொடர்ந்து வர ஆரம்பித்ததும் அலுப்புற்று, மிகவும் பணிவுடன் 'தயவு செய்து', 'பணிவுடன்', 'வேண்டிக்கொள்கிறேன்' என்ற சொற்களோடு அவருக்கு இனி இதுபோன்ற மயில்களை எனக்கு அனுப்ப வேண்டாமென்று மிகவும் பணிவோடு எழுதி சில மயில்கள் அனுப்பிப் பார்த்தேன். அவர் புரிந்து கொள்வது போல் தெரியவில்லை. அவரது மயில்கள் என்னைத் தொடர்ந்து விரட்டிக்கொண்டிருந்தன.

அடுத்த கட்ட முயற்சியாக சில பதில்களை அனுப்பிப் பார்த்தேன். உதாரணமாக, எப்படி //கைதேர்ந்தப் படைப்பாளன் ஏகஇறைவன் மிக நேர்த்தியாக ஒட்டகத்தை வடிவமைத்தான்// அதன் பால் எத்தகைய உயர்வானது, அதனை உண்டு //அந்தக் காலத்தில் அரேபியர்கள் மிகவும் திடகாத்திரமான உடலமைப்புடன் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் //.... என்று வந்த மயிலுக்குப் பதிலாக //இப்படி சிறப்பு மிக்க ஒட்டகத்தைப் படைத்த இறைவன் அதை அரேபிய நாட்டினருக்கு கொடுத்துவிட்டு நமக்கெல்லாம் வெறும் எருமையையும், பசுமாட்டையும் கொடுத்து ஏமாற்றிவிட்டானே... ச்சே!// என்றும், மதங்களைப் பற்றிய என் பதிவில் இஸ்லாத்திற்கு எதிராக எழுப்பியிருந்த கேள்விகளில் ஒவ்வொன்றாகவும் அனுப்பிப் பார்த்தேன்.

அவரது மயிலில் இன்னொன்று, நல்ல interesting-ஆக இருந்தது: //இன்று மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை கண்டிருக்கக் கூடிய நாடுகளுடைய நிலையும் ஏறத்தாழ இறைவனை மறுத்து வாழ்ந்த தோட்டக்காரருடைய வாழ்க்கைக்கு ஒப்பானதாக அமைந்திருப்பதை அறியலாம். நானும் பதிலுக்கு //ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள பல "இறைவனுக்கு இணைகற்ப்பிக்காத தூய வாழ்வு வாழும் நாடுகள்" படு தரித்திரத்தில் காலங்காலமாக இருந்து வருகின்றனவே அவைகளில் அல்லல் படும் மக்களின் பாவங்களை இறைவன் மன்னித்து செல்வத்தை அதிகரிக்கச் செய்யவில்லையே.... அது ஏனுங்க? என்று கேட்டிருந்தேன்!

இவைகளையெல்லாம் நான் அவரிடம் பதில் எதிர்பார்த்து அனுப்பவில்லை; இவனுக்கெல்லாம் நல்லது சொன்னால் பயனேதுமில்லை; உட்டுருவோம் அப்டின்னு சொல்லி ஆளை உட்டுருவார்னு நினச்சித்தான் அனுப்பினேன். ஆனால் மீண்டும் மயில்கள் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருந்தன.

இதில் பயங்கர சோகம் எனக்குக் கடைசியாக வந்த கீழ்க்காணும் கட்டுரைதான். சோகம் ஒரு பக்கம்; அதே போல் இதை என் காதில் வந்து ஊதுவதால் மிகவும் கோபமும் எரிச்சலும் வந்தது. இனியும் இப்படியே விட்டுக்கொண்டிருக்க மனதில்லை. ஆகவே தனி மடல்களாக வந்ததைப் பொதுவில் வைக்கிறேன். அவரது கட்டுரை பச்சை வண்ணத்திலும், என் comments-களை சிகப்பிலும் தந்துள்ளேன்; கடைசியாக என் மனதில் தோன்றியவைகளையும் சொல்லியுள்ளேன்:


================================================================


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

எங்கே செல்லும் இந்தப் பாதை ???

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததால் பெருமைப் படும் முஸ்லீம்களே !ஒரு சினிமா தயாரிக்கப்படுவதற்கு முன் அதில் பங்கேற்கும் கலைஞர்களில் முழுமையாக கதையைக் கேட்கக் கூடியவர்கள் இசயமைப்பாளர்கள் தான் கதையைக் கேட்டு விட்டு சில நேரங்களில் பாடலாசிரியர் எழுதிக்கொடுத்தப் பாடல்களின் வரிகளைக் கூட மாற்றியமைக்கும் அதிகாரம் படைத்தவர்கள் இசையமைப்பாளர்கள்.

பம்பாய் என்னும் திரைப்படக் கதையை கேட்காமல் இசையமைத்துக் கொடுத்து எனது சமுதாயத்திற்கு தீங்கிழைத்து விட்டேன் என்று பின் வாங்க முடியாது பம்பாய் கதையை முழுமையாகக் கேட்டு அதற்கொப்ப இயைசமைத்துக் கொடுத்தவர் தான் ரஹ்மான் எனும் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர்.
பம்பாய் படத்தில் இஸ்லாமோ இஸ்லாமியரோ குறைத்துச் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லையே. எந்த விதத் தீவிரவாதத்திற்கும் எதிர்ப்பான படம்தானே அது.

முஸ்லீம் சமுதாயத்தின் மீது அபாண்டமாக பழிசுமத்தி, பொய்யையும், மதவெறியையும் தூண்டி விட்ட பம்பாய் திரைப்படத்தைப் பார்த்த ஒவ்வொரு முஸ்லீமும் அதை எதிர்த்து நிருத்த முடியாமல் உள்ளத்தால் செத்து மடிந்தான்.
இது உங்கள் பார்வையின் தவறென்றே நினைக்கிறேன்.


அவர் விருது வாங்கியதால் முஸ்லீம் சமுதாயத்திற்கு என்னப் பிரயோஜனம் ? !!!

இன்னும் யாராவது பம்பாய் போன்ற அல்லது அதையும் விஞ்சும் அளவுக்கு படம் தயாரித்தால் அதற்கும் இவர் இசையமைத்துக் கொடுப்பார் !

இன உணர்வு கொள்வதை இஸ்லாம் வெறுப்பதால் அவரை முஸ்லீம் என்றுப் பாராமல் ஒரு இந்தியனுக்கு கிடைத்தது என்று (சினிமப் பிரியர்கள் முஸ்லீம்களிலும் இருப்பதால்) பெருமைப பட்டுக் கொண்டால் நாம் இதை எழுதப் போவதில்லை.
பின் ஏன் இங்கே இப்படி எழுதியுள்ளீர்கள் என்று சொல்லவேயில்லையே.

இவரைப் போன்றவர்களை ஆதரிப்பவர்கள் பிற்காலத்தில் வருவார்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் முன்கூட்டியே முன்னறிவிப்புச் செய்து விட்டார்கள்.

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்.…. ஆதார நூல்: புகாரி 5590


பட்டுத்துணி, தங்க நகை ஆண்கள் போட்டுக்கக்கூடாது; நின்னுக்கிட்டு ஒண்ணுக்கு இருக்கப்படாது; தாடி வச்சிக்க; குளிக்கும்போதுகூட ஆம்பிள இப்படியிப்படிதான் குளிக்கணும்; பொம்பிள இப்படியிப்படி குளிக்கணும்; துண்டு கட்டாம நாம குளிச்சா சாமிக்கு எப்படியிருக்கும்; இப்படியே நிறைய ... - இதெல்லாமா கடவுள் மனுசப் பயலுக்குக் கட்டளையா கொடுப்பாருன்னு எனக்குத் தோணுது. சரி, உங்க மதம் சொல்றதை நீங்க கண்ணை மூடிக்கிட்டு கேட்டுக்க வேண்டியதுதான்; அதை ஏன் எனக்கும் அனுப்பி கஷ்டப்படுத்துறீங்க. அதனாலதான நான் இப்படி கேக்க வேண்டியதுள்ளது. அதென்ன பட்டுக்கும், தங்கத்துக்கும் ஆண்களின் 'Y' chromosome-க்கும் அப்படி ஒரு ஜென்மப் பகை? யார் கண்டது .. அப்படி ஏதுமுள்ளது என்றொரு கட்டுரையைக் கூட சீக்கிரம் அனுப்பி வைப்பீங்க ..

அவருடைய ஃபீல்டில் அவர் திறமையாக செயல்பட்டார் இளம் வயதில் இரவு பகலாக உழைத்து விருதுபெற்றார். அது அவருக்குப்பெருமை அவருடைய ஃபீல்டைச் சேர்ந்தவர்களுக்குப் பெருமை.

நமக்குப் பெருமையா ?
அதாவது, இஸ்லாமியருக்கு இதில் என்ன பெருமை என்கிறீர்கள்; அப்படித்தானே?

நாம் அந்த ஃபீல்டை வெறுக்கக் கூடியவர்கள் இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் சிந்தனையை சிதறடிக்கக் கூடிய இசையை வெறுத்திருக்கின்றார்கள்.
பின்ன ஏங்க, உங்க பாங்கொலியை மட்டும் இழுத்து நீட்டி 'இசை'யோடு தானே படிக்கிறீங்க? அந்த இசையைக் கேட்கும்போதும் உங்கள் சிந்தனை சிதறடிக்கப் படுகிறதோ?

உமையா கோத்திரமே! இசையை அஞ்சிக் கொள்ளுங்கள். அது வெட்கத்தை அழித்து உடல் உணர்வை தூண்டுகின்றது. மனிதாப மானத்தை மாய்த்துவிடுகின்றது. மதுவைப் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. பெண்களை அதில் அறவே பங்கேற்கச் செய்யாதீர்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அறிவிப்பாளர்: யஸீது பின் வலீது(ரலி), ஆதாரம் : பைஹகீ)
அது வெட்கத்தை அழித்து உடல் உணர்வை தூண்டுகின்றதா ? இல்லையா ?
நிச்சயமா இல்லையே! எனக்குத் தெரிஞ்ச வரை தூளியில் தூங்குற குழந்தையில் இருந்து பாடையில போற வயசில இருக்கவங்க வரைக்கும் இசையை நல்லவிதமாகவே அனுபவிக்கிறதைத்தான் பார்த்திருக்கிறேன். மனசுக்கு எம்புட்டு சந்தோஷம் கொடுக்கிற விஷயம். ஒருவேளை இது உங்கள் பிரச்சனை மட்டுமேயோ என்னவோ?

இன்னொண்ணும் சொல்லணும். எல்லாவித இசையுமே முதலில் கடவுளை வணங்கத்தான் பயன்பட்டது. இசை என்றாலே மனதை சமனப்படுத்தும் அரிய கருவி என்றுதான் எல்லோரும் சொல்வதுண்டு. நான் அனுபவித்ததும் உண்டு. நம் தமிழ்/ இந்தியக் கலாச்சாரத்தில் இசைக்கு மிகவும் உயரிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இல்லை, பூனைக்கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருட்டு என்பதுபோல் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களோ என்னவோ?! எப்படியோ, மனுசப் பிறவி மட்டுமில்லாமல் எல்லா ஜீவராசிகளுமே ரசிப்பது இசை என்றிருக்க உங்கள் மேற்கோள்கள் தனிப் பாதை விரிப்பது வேடிக்கையும் வேதனையுமான விஷயம்தான். இதுலேயும் ஏனுங்க பெண்களைத் தனியே அடக்கி வைக்கிறீங்க- ஒரு special class போட்டு? பெண்ணாய் பிறத்தல் பாவம்தானுங்க. :(


சினிமா என்றத் தீமையில் முன்னிலை வகிப்பது இசை தான். மூன்று மணி நேரம் ஓடக்கூடிய சினிமாவை முயற்சித்தால் சில நிமிடங்களில் மறந்து விடமுடியும்.

ஆனால் சினிமாவில் மூன்று நிமிடம் ஓடக் கூடியப் பாடலை பலவருடங்களானாலும் மறக்க முடிவதில்லை.

பாடலில் வரக்கூடிய ஆபாச வரிகளைக் கூட வெட்க உணர்வில்லாமல் ரோடுகளில் பாடிக் கொண்டுத் திரிவார்கள்,

வீடுகளில் உறவினர்கள் முன்னிலையில் உட்கார்ந்துக் கொண்டு வெட்க உணர்வில்லாமல் ஆபாச விரிகள் அடங்கியப் பாடல்களைப் பாடுவார்கள்.

அதையும் கடந்து கழிப்பறைகளில் மெய்மறந்துப் பாடுவார்கள். அதனால் தான் ( மதுவைப் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. என்றுப் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் )

வீடு, ரோடு, கக்கூஸ் என்று கண்ட இடங்களிலும், கண்ட நேரங்களிலும் இமேஜைப் பற்றி அறவே சிந்திக்காமல் வாய்விட்டுப் பாடுவதற்கு மூளையை ஆக்ரமித்து சிந்தனைத் திறனை செயலிழக்கச் செய்வதில் திரைப்பட இசைக்குப் பெரும் பங்கு உண்டு.


ஒன்று புரிகிறது. Beauty is in the eyes of the beholders என்பார்கள். அது அழகுக்கு மட்டுமல்ல; இசைக்கும் இன்னும் எல்லாவற்றிற்கும் பொருத்தமான விஷயம். சினிமா பாட்டென்றாலே உங்களுக்கு வாந்தி வந்தால் எந்தவகைப் பாடல்களுக்கு மட்டும் நீங்கள் முக்கியத்துவம் கொடுத்துவருகிறீர்கள் என்று தெளிவாகப் புலனாகிறது. 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா ...' என்ற பாடலிலிருந்து ஓராயிரம் தத்துவப் பாடல்களையும் இன்னும் பல நல்ல கருத்துக்கள் சொல்லும் 'ஒவ்வொரு பூக்களுமே' போன்ற பாடல்கள் உங்கள் காதுக்குள் இறங்காமல், 'கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா', சின்னவீடு பாட்டுக்களுக்கு மட்டுமே உங்கள் காதுகள் திறந்திருந்தால் அது யார் தவறு? இந்த உலகம் - உங்கள் கடவுளே படைத்திருந்தாலும் - வாழ்க்கையில் நல்லது கெட்டது எல்லாமே கலந்தேயிருக்கும்.(அதுக்கும் காரணம் உங்கள் கடவுளாகத்தானே இருக்க வேண்டும். அப்படிப் படைத்துவிட்டு பிறகு அங்க போகாதே; இதைச் செய்யாதே என்றால் ... இப்படியும் கேட்டுக்கொண்டே போகலாம்.)அதில் நல்லதை எடுத்துப் பழகுங்கள். நல்லவைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டு, தீயவைகளை மட்டும் கேட்டுவிட்டு, தீயவை வழி சென்றுவிட்டு எங்கேயும் தீமை என்று சொல்வது யாருடைய தவறு? நல்லது எதுவும் என் கண்ணில் படாது என்று யாரேனும் சொன்னால், அவர்களின் மனநிலையே அதற்குப் பொறுப்பு.

ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் சீரழிக்கக் கூடிய சினிமாவில் இசை பெரும் பங்கு வகிப்பதால் நம்மால் அதை எதிர்க்க முடியவில்லை என்றாலும் மௌணமாக இருந்து விடலாம் அதை விட்டு தீமைக்குப் துணைப் போகலாமா ? (ஆதரிக்கலாமா) .

ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்; முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்) அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இதுவே உறுதியற்ற இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும்
அது என்ன - உறுதியற்ற இறைநம்பிக்கையின் இறுதிநிலை? அப்படியென்றால் என்ன புரியவில்லையே.) என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்'. அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி). முஸ்லீம்

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்


அதிரை அவர்களே,

நான் இந்தப் பதிவுலகத்திற்குள் நுழைந்தபோது வெறும் ஒரு கடவுள் மறுப்பாளனாகத்தான் இருந்தேன். இங்கு நடைபெற்ற விவாதங்களே என்னை ஒரு மத வெறுப்பாளனாக மாற்றியது. மத நல்லிணக்கம் என்பது எப்படி கிட்டாத ஒரு கானல் நீர் என்பது புரிந்தது. என் மதம் என்று ஒவ்வொரு மத நம்பிக்கையாளர்களும் தங்கள் மதத்தை, அதைவிடவும் ஏதோ பாவம்போல் இருக்கும் அவரவர் சாமிகளை, கடவுள்களைக் காப்பாற்றுவதற்கே தாங்கள் எல்லோரும் பிறவியெடுத்து வந்ததாக நினைக்கும் மத நம்பிக்கையாளர்களும் நிறைந்த இந்த உலகத்தின் 'தரிசனம்' இங்குதான் கிடைத்தது.

ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் கடவுள்களைக் காக்க பிறந்த பிறவிகளாகத் தங்களை நினைத்துக் கொண்டு, தங்கள் மதக் கருத்துக்களே உன்னதமானவை என்ற நினைப்பில் இருக்கும்போது எந்த வித மாற்றுச் சிந்தனையும் அவர்களிடையே எப்படி ஏற்படப் போகிறது? ஒவ்வொரு மதத்தைப் பற்றியும் அடுத்த மதத்தினர் அல்லது என்னைப் போன்ற மத மறுப்பாளன் ஆயிரத்தெட்டு குறைகளையோ, கேள்விகளையோ எழுப்ப முடியும். ஆனால் வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்திருப்பவர்களுக்கு அந்தக் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாது என்பதும் தெரியும்; ஆனால் அதை நம்பிக்கையாளர்கள் ஒத்துக் கொள்வதுமில்லை. எங்கள் மதத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் உண்டு என்ற கூற்று மட்டுமே உண்டு. ஒரு வேத புத்தகம் எப்படி வந்தது; யார்மூலம் வந்தது; எப்படி மாறாமல் இருந்தது என்று சொல்லப்படுவதெல்லாம் முக்கியமல்ல; அதன் content தான் முக்கியம் என்னைப் பொறுத்தவரை. இந்தப் பொருளடக்கங்கள் எல்லா மதத்திலேயும் குறைபாடு கொண்டதாகவே நான் உறுதியாகக் கருதுகிறேன்; ஓரளவு அதை நிரூபித்துமிருக்கிறேன்.

மதங்களும் மாறப் போவதில்லை; மதம் கொண்ட மனிதர்களும் மாறப்போவதில்லை என்பது மட்டும் என்னவோ நிச்சயம். அவரவர்க்கு அவரவர் கொள்கை என்று வறட்டு வேதாந்தம் பேசிக்கொண்டு பேதங்களை வளர்த்துக் கொள்வோம். வேறென்ன செய்ய ... சொல்லுங்கள்.

கடைசியாக மறுபடியும் அதே வேண்டுகோளோடு முடிக்கிறேன்: உங்கள் மெயில்களை இன்னும் எனக்கு அனுப்பி என்னைத் துன்புறுத்தாதீர்கள்; இரக்கம் காட்டுங்கள் தயை செய்து.

நன்றி.*

Tuesday, February 24, 2009

291. கூடல் நகரின் பதிவர் கூட்டமும் "தொடர் ஓட்டமும்" - 3

*
தொடர்புடைய ஏனைய பதிவுகள்:
1.289. கூடல் நகரின் பதிவர் கூட்டம்.
2.290. கூடல் நகரின் பதிவர் கூட்டமும் "தொடர் ஓட்டமும்" - 1
3.293. தமிழார்வலர்களுக்கு ஓர் அறைகூவல்!
*

மதுரைப் பதிவர் கூட்டத்தில் நடந்த தமிழ்ச் சொற்கள், மற்றைய மொழிகளின் ஒலிகள் பற்றிய விவாதம் பற்றியும், அதன் பின் சற்றே நடந்த தொடர் விவாதங்களைப் பற்றியும் மாணவ நண்பனும், இப்போது எங்கள் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் உள்ள கோவிந்தராஜனிடம் (கோவிந்தரானிடம் அல்ல; அவன் 'ஜ' தான் போடுவானாம்.)பேசிக்கொண்டிருந்தேன். அவன் கூறிய கருத்துக்கள் எனக்கு ஒத்துவந்ததுபோல் தெரிந்தாலும் சொன்ன டெக்னிக்கலான செய்திகள் புரியவில்லை. அவைகளை எழுதித் தாயேன் பதிவில் போட்டு விடுகிறேன் என்றேன். மனமுவந்து எழுதிக் கொடுத்துள்ளான். பதிவிடுகிறேன்.

இனி உங்கள் பாடு; அவன் பாடு.

=========================================
OVER TO GOVINDARAJAN ........

=========================================

மொழித்தூய்மை குறித்த விவாதம் நீண்ட வரலாற்றை உடையது. தமிழ்மொழியைப் பொறுத்த அளவில் இவ்விவாதங்களும் அதன் தொடர்ச்சியாக எழுந்த சீர்திருத்தங்களும் மாபெரும் அசைவியக்கத்தை ஏற்படுத்தின. இந்நிலையில் இன்றுவரை அறிஞர்களிடமும், மொழியியலாளர்களிடமும், தமிழ்ப் பற்றாளர்களிடமும் கிரந்த எழுத்தைப் பயன்படுத்தி எழுதலாமா (எடு: ஹ, ஷ, ஜ, ஸ போன்றவை) என்ற விவாதமும் அவ்வாறு இதுவரை எழுதப்பட்டு வந்துள்ள, மக்களிடம் நிலைபெற்றுவிட்ட பல சொற்களுக்குப் புதுத் தமிழ்ச் சொற்களைக் கொண்டு வந்து சேர்க்கலாமா என்ற விவாதமும் சிறப்பான ஓரிடத்தைப் பெற்று வந்துள்ளன. பழந்தமிழர்களிடமும் இதுபற்றிய சிந்தனை இருந்து வந்துள்ளது என்பதை இங்குப் பதிவு செய்ய வேண்டும். தமிழ்மொழியின் முதல் இலக்கணமான தொல்காப்பியத்தில் பின்வரும் இரு நூற்பாக்கள் சிறப்பிடம் பெருகின்றன.

1. இயற்சொல், திரிசொல், திசைச்சொல்; வடசொல் என்று
அனைத்தே செய்யுள் சொல்லே (எச்சவியல்: 1)

2. வடசொற் கிளவி வடஎழுத்து ஓரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே (எச்சவியல்:5)

இயற்சொல் என்பது செந்தமிழ்நாட்டில் வழங்கும் சொற்கள் ஆகும். கேட்டவுடன் பொருள் தவறாமல் புலப்பட வேண்டும். (இது இயல்பான சொ:. எடு - சோறு, பால்)

திரிசொல் என்பது இயற்சொல் திரிந்து வருவது ஆகும். இது கவிதையில் பெரிதும் பயின்று வரும். இதில் எளிதில் பொருள் புலனாகாது.
(எடு - கிளி = கிள்ளை எனத் திரிந்தது.
மயில் = மஞ்ஞை எனத் திரிந்தது.)

திசைச்சொல் என்பது செந்தமிழ் நாட்டைச் சுற்றி 12 நாடுகளில் (நிலங்கள்) பேசப்படும் சொற்கள்.

வடசொல் என்பது வடமொழிச் சொல்.

இங்கு திசைச் சொல்லும், வட சொல்லும் ஆய்வுக்குரியன. தமிழகத்தில் பொங்கர் நாடு, ஒளி நாடு, தென்பாண்டி நாடு, குட்ட நாடு, குடநாடு, பன்றி நாடு, கற்காநாடு, சீத நாடு, பூமி நாடு, மலையமானாடு, அருவா நாடு, அருவா வட தலை நாடு எனப் பன்னிரண்டு பகுதிகளில் பேசப்பட்டு வரும் சொற்கள் திசைச் சொற்கள்.

எடுத்துக் காட்டாக, தென்பாண்டி நாட்டார், எருமை என்பதைப் 'பெற்றம்' என்பர். இங்கு கவனிக்க வேண்டியக் கருத்து என்னவென்றால், சங்க காலத்தமிழ்ப் புலவர்கள் அப்பகுதியில் பேசப்படும் சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளனர்.

அடுத்து, ஓய்மா நாட்டு நல்லியக் கோடன் என்பவனைப் புகழ்ந்து பாடிய புலவர் நத்தத்தனார் அந்நாட்டுப் பகுதியில் பேசப்படும் 'கேணி' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். கேணி என்பது சிறுகுளத்தைக் குறிக்க அந்த ஓய்மாநாட்டுப் பகுதி மக்கள் பயன்படுத்தும் சொல்லை அப்படியே புலவர் தன் பாடலில் பயன்படுத்துகிறார். நத்தத்தனார் சென்னைக்கருகில் உள்ள நல்லூரைச் சேர்ந்தவர்.

ஒரு பகுதியில் சிறப்பாகப் பயின்று வரும் சொல்லை அப்படியே எவ்வித மாற்றமுமின்றிச் சங்ககாலப் புலவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கருத்தாகும். தமிழர்களின் ஆவணப்படுத்துகின்ற, வரலாற்று நுண்ணுணர்வை வெளிப்படுத்துகின்ற ஒன்றாகவே இதை நாம் காணவேண்டும்.

அடுத்து, வடசொல் எனபதற்கு வட மொழியின் ஒலிகளை நீக்கி தமிழ் எழுத்துக்கள் கொண்டு அமைந்த சொற்கள் என்று தொல்காப்பியர் விளக்கம் தருகிறார். அதாவது, வடசொற்களை வடமொழியின் ஒலிகளை நீக்கி எழுதவேண்டும்.

எடுத்துக் காட்டாக, கமலம், திலகம் போன்றவை தமிழ் எழுத்துக்கள் கொண்டு அமைந்த வடசொற்கள். ரிஷபம் என்பதை இடபம் என்றும், ரிஷி என்பதை இருடி என்றும், பங்கஜம் என்பதை பங்கயம் என்றும் எழுத வேண்டும்.

இவ்வாறு எழுதுவதற்கு நன்னூல் விதிகளைத் தந்துள்ளது. (நன்னூல் - 147) விதி இவ்வாறாக இருந்தாலும், பழந்தமிழர் வேற்றுச் சொற்களைத் தமிழ்ப்படுத்தி ஏற்றுக் கொண்டனர் என்பதாலும் சில ஒலிகளை அவ்வாறு எழுதிவந்துள்ளனர் எனத் தெரிகிறது. பழந்தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்களில் இது காணப்படுகிறது.

ஸாலகன் - (கி.மு. 2-ம் நூற்றாண்டு மாங்குளம் கல்வெட்டு)
அஸீதன் - ,, ,,
கோஸிபன் -(கி.பி. 2-ம் நூற்றாண்டு மறுகால்தலை கல்வெட்டு)

இதைக் காணும்போது இரு நிலைகளிலும் சொற்கள் பயன்பட்டு வந்துள்ளன எனத் தெரிகிறது. நாம் வடசொல் அல்லது வேற்றுமொழிச் சொல்லை எழுதும்போது தமிழ் எழுத்து கொண்டு எழுதவேண்டும் என்னும்போது நாம் தமிழ் மொழி அல்லாத சொல்லை இனங்கண்டு கொள்கிறோம். இனம் கண்டு கொண்ட பிறகே சேர்க்கிறோம். இது வரலாற்றுச் சிறப்புத்தன்மை கொண்ட மொழித் தத்துவம். இந்தோ-ஆசிய மொழிகளில் உள்ள பல சொற்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று திராவிட மொழியியல் அறிஞர்கள் எமனோ மற்றும் பந்ரோ நிறுவியுள்ளனர். அவற்றைச் சேகரித்து திராவிட வேர்ச்சொல் அகராதி (Dravidian Ethymological Dictionary) என்ற பெயரில் வெளிக்கொணர்ந்துள்ளனர்.

இங்கு கவனிக்க வேண்டிய மற்றொன்று சில வேற்றுச் சொற்களின் ஒலிகளை மாற்றவேண்டும் என்பதே வலியுறுத்தப்படுகிறது. மொழி பெயர்க்காமல், ஒலிபெயர்த்து (தமிழ் ஒலி) எழுதப் படவேண்டும் என்பது முன்வைக்கப்பட வேண்டியதாகும். கல்வெட்டுக்களில் காணப்படும் பல சொற்கள் கடன் சொற்களாகும்.ஆனால் அவை அனைத்தும் பெயர்ச்சொற்கள். வினைச் சொற்களைத் தமிழ் கடன் வாங்கியதில்லை என்பதை உற்று நோக்கவேண்டும். திரு. ஐராவதம் மகாதேவனின் "Early Tamil Epigraphy" இதனை உறுதி செய்கிறது. கடன் வாங்கப்பட்ட பெரும்பாலான சொற்கள் சமயம் தொடர்பான வேற்றுமொழிச் சொற்கள்.

இதன்மூலம், கூடிய மட்டும் தமிழ்ப்படுத்தி வேற்றுச் சொற்களை எழுதி வந்துள்ளனர் என்றும், அதே வேளையில், வேற்று ஒலிகளை (கிரந்த) எழுத்துக்கள் பயன்படுத்தியும் எழுதி வந்துள்ளனர் என்று தெரிகிறது. மேலும், மொழியில் கடன் வாங்காமல், சொற்பரிமாற்றம் போன்றவை இருந்தால்தான் அம்மொழி பேசியோர் மற்ற நாடுகளுடன் வைத்திருந்த தொடர்பை ஆய்வு செய்ய முடியும். முழுவதுமாக மொழித்தூய்மை பேணப்படும்போது இவ்வாய்ப்பு சாத்தியமற்றுப் போகும். தமிழ் மொழி பேசியவர்கள் மற்ற நாடுகளுடன் கொண்டிருந்த வாணிகத் தொடர்பு, பொருள் தேட வேற்றுநாடு சென்றமை போன்றவை இலக்கியத்தில் பயின்று வந்துள்ள சொற்கள் கொண்டு நம்மால் அறிய முடியும். இவ்வாறான ஆய்வை தமிழ் அறிஞர்கள் எஸ்.வையாபுரிப் பிள்ளை, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், மயிலை சீனி.வேங்கடசாமி போன்றவர்கள் முன்னெடுத்துச் சென்றுள்ளனர். எத்தனை வகையான வேற்று ஒலி, மொழி சொற்கள் ஒரு மொழியில் கலக்கிறதோ அத்தனைக்கும் தனிப்பட்ட வரலாறு உண்டு. அது ஒரு மொழியின் நீண்ட வரலாற்றினைச் செம்மைப்படுத்துவதாகவே அமையும்.

Saturday, February 21, 2009

295. நான் கடவுள் - 2

முந்திய பதிவு:'நான் கடவுள்' படம் பார்த்தேன்.


*

எல்லோரும் அக்கு வேறு ஆணி வேறு என்று அலசிக் காயப்போட்ட விஷயங்களைத் திருப்பித் திருப்பி சொல்ல வேண்டியதிருக்கலாமென்ற காரணத்தாலேயே இந்தப் படம் பற்றி எழுதுவதைத் தவிர்த்து விடலாமென நினைத்தாலும் .. 'தோள்கள் தினவெடுப்பதைத்' தவிர்க்க முடியாததாலும், எழுதியே ஆக வேண்டும் என்ற நினைப்பை இன்னும் தள்ளிப் போட முடியாதென்பதாலும் .. இதோ --

*

என்னைப் பொறுத்தவரை தமிழ்ப்பட இயக்குனர்களில் பாலாவுக்கு ஒரு தனியிடம். பாலா தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்டு வெற்றி நடை நடந்துகொண்டிருக்கிறார். பேசாப் பொருளை யாரும் முயலாத முறையில் பேசத் துணிந்து தொடர்கிறார். அவர் மீது நம்பிக்கை வைக்கும் அளவிற்கு, நான் 'நான் கடவுள்' பார்த்த இரண்டாம் நாள் படம் பார்க்க வந்திருந்த இளம் வயதினர் மீதும் நம்பிக்கை வைத்துள்ளேன். பாலாவின் வரவும் வெற்றியுமே, வேறு சில இளம் இயக்குனர்களை தமிழ் மக்கள்மீது நம்பிக்கையோடு புதிய தளம் காண வழிநடத்துவதாகவும் முழுதாக நம்புகிறேன்.

*

காசியில் நடந்த படப்பிடிப்பு, பிச்சைக்காரர்கள் பற்றிய செய்திகள், மூன்றாண்டு படப்பிடிப்பு, ஆர்யாவின், பூஜாவின் அசத்தலான ஸ்டில்கள் – இப்படி எத்தனையோ. படம் பார்க்க ஆரம்பித்தபோது, ஏதோ நானே என் கைக்காசு போட்டு படம் எடுத்துவிட்டு, படம் என்னாகுமோ என்று பதை பதைப்போடு இருப்பதுபோல் இருந்தது.

*

காசிக் காட்சிகளின் பிரமிப்புகளோடு ஆரம்பித்தது மிக நன்றாயிருந்தது. சுடலை நெருப்பின் சூடு நம்மையே தகித்தது. ஒளி விளையாட்டும், இசையும், ஆர்யாவின் macho தன்மையும் பிரமிப்பைக் கொடுத்தன. நம் பதிவுலக மொழியில்,அந்தக் காட்சிகள் தமிழ்ப் படங்களை அடுத்த நிலைக்கு நகர்த்திச் சென்றன. ருத்ரனின் தந்தை காசி சாமியாரின் காலில் விழுந்து அழும்போது காமிராவிற்காக முகத்தைத் திருப்பி அழுவது மட்டும் நெருடியது. அந்த ருத்ரனின் குருவாக தாடிமீசையோடு ஒருவர் வருகிறாரே அவரைப் பார்த்து அசந்தேன். என்ன அழகு அந்த தாடி மீசையில் இருந்ததோ அதே அளவு கம்பீரமும், களையையும் பார்த்தேன். நல்ல முகம். ருத்ரனின் ஒவ்வொரு still-ம் அங்க அசைவும் அசத்தின.

*

அடுத்து, அழுது அரற்றும் தாய், அவளோடு மோதும் ருத்ரனின் ரெளத்ரம், உடுக்கை ஒலி - இப்பகுதியில், கங்கை ஆற்றங்கரை சுடலை நெருப்பின் சூடு இன்னும் தகித்தது. சித்தரின் வார்த்தைகளால் தாயை விரட்டும் ருத்ரனின் பற்றற்ற நிலை, தாயின் கையறு நிலை எல்லாமே சிறப்பாயிருந்தது. தாய் அணிந்திருந்த உடை, நடிப்பு --ஒவ்வொன்றும் இயக்குனரின் சிரத்தையைக் காட்டியது.

*

இதன்பின், படத்தின் மற்றொரு பக்கம் திறக்கிறது. புதிய பக்கம் - நம் எல்லோருக்குமே. அந்த அநாதைகளை அடைத்து வைத்திருப்பதாகக் காட்டும் இடம், அது உண்மையான ஓர் இடமா இல்லை செயற்கையாக, படத்திற்காகச் செய்ததா?! அதற்குள் முதன் முதல் காமிராவோடு நாம் பயணிக்கும் பயணம் .. அந்த அநாதைப் பிச்சைக்காரர்களின் முகங்கள் ... அந்தப் பிச்சைக்காரர்களின் முதலாளி தாண்டவன் அவ்வப்போது ஆடும் வெறித்தாண்டவம் .. பகலில் தாண்டவனிடம் அடியும் மிதியும் படும் அவர்கள் இரவில் நடத்தும் பாட்டும் ஆட்டமும் ... குறையோடு பிறந்தும் குறும்புக்கு குறைவில்லாத அந்தப் பிறப்புகள், அவர்களுக்குள் இருக்கும் பந்தம், பாசம், அந்நியோன்யம் ... முருகனாக வருபவர் போதையில் இருக்கும்போது மற்றவர்கள் அடிக்கும் கூத்து ... யாருமே நடிப்பதாகவே தோன்றவேயில்லையே. - இந்த எல்லாவற்றிற்கும் என் ஒரே விமர்சனம்: இதெல்லாம் எப்படி பாலா? கொஞ்சம் தவறினாலும் காமெடியாகப் போகக்கூடிய சீரியசான இடங்கள் பல. அதே போல் காமெடியான இடங்களும் நிறைய. அதது அங்கங்கே அப்படி அப்படி இருக்கிறதென்றால் ... எல்லாப் புகழும் பாலாவுக்கே!

*

அடுத்தது அம்சவல்லி(வள்ளி?) மேக்கப் சீராக இல்லாமலிருந்ததுவும், அவள் பாடும் பாடல்கள் வெவ்வேறு குரல்களில் ஒரிஜினல் பாடல்களாக இருந்ததும் நிரடல்கள். ஒரே குரலில் அந்தப் பாடல்களை ரீமேக் செய்திருக்கலாம் - குறைந்த orchestra-வோடு. பொருந்தியிருந்திருக்கும். தூக்கிவரப்பட்டதும் துடிக்கும் அந்தப் பெண்ணை மற்ற பிச்சைக்காரர்கள் தங்களுக்குள் ஒருத்தியாக அணைத்துக் கொள்ளும் அன்பு, அப்போது பேசப்படும் வசனங்கள் எல்லாமே நன்கு பொருந்தியிருந்தன.

*

இந்தப் பகுதியில் வரும் காவல்நிலையத்தில் நடக்கும் கூத்தும் ஆட்டமும் நமக்குத் தேவையில்லை. பாலாவுக்கும்தான். பிதாமகனில் விநியோகஸ்தர்களுக்காகச் சேர்த்த பகுதியாக சிம்ரன் வரும் பகுதியைச் சொன்னார்கள். அதில் ஒரு relief இருந்தது உண்மை. ஆனால் இங்கே அந்த இடைச்செருகல் எரிச்சலைத்தான் தந்தது.

*

எனக்கு இதுவரை தமிழ்ப்படத்தில் பிடித்த சண்டைக் காட்சி பிதாமகனில் வரும் புரோட்டா கடை சண்டை. raw power தெரியும். இதிலும் அது குறைவில்லை. சண்டைக் காட்சி நன்றாக வந்திருக்கிறது. ஆர்யா மட்டுமல்ல அந்த தாண்டவனின் உடலும், போடும் சண்டையும் நிறைவாயிருந்தன.

*

நந்தாவில் ராஜ்கிரனுக்கு ஒரு புதிய முகம் கிடைத்தது. புதுக் கோணத்தில் அவரைப் பார்க்க வைத்தார் பாலா. பிதாமகனில் கஞ்சாத் தோட்டத்து உரிமையாளராக வரும் அந்த தெலுங்கு நடிகரின் நடிப்பு பிரமிப்பைத் தந்தது. அதே போல் இந்தப் படத்தில் வரும் தாண்டவன் என்னும் ராஜேந்திரன் என்ற நடிகரின் நடிப்பு படம் முழுவதுமே மிகச் சிறப்பாக இருந்தது. சின்னச் சின்ன வேஷங்களில் வந்தவரிடமிருந்து இப்படி ஒரு நடிப்பைக் கொண்டுவந்தது, இதைப் போலவே ஒவ்வொரு பாத்திரப் படைப்பையும் முழுவதுமாகச் செய்து அவர்களிடமிருந்து தேவையானதை மட்டும் வெளிக்கொணர்ந்த பாலாவுக்கு ஒரு "ஓ"!

*

பாலாவிற்கு உறுதுணையாக ஜெயமோகன், ஆர்தர் வில்ஸன், ராஜா - இதே வரிசையில் நின்று
தங்கள் 'கைவரிசையை'க் காண்பித்திருக்கிறார்கள்.

*

பாலாவின் முந்திய மூன்று படங்களிலும் அந்தக் கடைசி நிமிடங்கள்தான் படத்திற்கு உயிரையே கொடுக்கும். ஆனால் அது இந்தப் படத்தில் இல்லாமல் போய்விட்டது. கதையை மாற்றியதாலா, இல்லை, அது சொல்லும் கருத்து உடன்பாடான கருத்தாக இல்லாததாலா ... எதனால் என்று தெரியவில்லை.

அதோடு, தனிப்பட்ட முறையில், காசியில் நடக்கும் ஆரம்பக் காட்சிகள் மனதை மிகவும் ஈர்த்துவிட்டதால் படம் முழுவதும் மீண்டும் எப்போது காசி வரும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. வராமலேயே போய்விட்டதால் ஏற்பட்ட ஒரு emptiness, ஏமாற்றம் எல்லாமுமாகச் சேர்ந்து படத்தில் இறுதியில் வழக்கமாக பாலா தரும் punch இல்லாததுபோல் ஆகிவிட்டது.

*

பாலாவின் உழைப்பு, ஒவ்வொரு ப்ரேமையும் செதுக்கி செதுக்கி எடுத்திருப்பது, ஒவ்வொரு பாத்திரத்தையும் முழுமையாக்கியிருப்பது என்று தனித்தனியே பார்க்கும்போது பிரமிப்பைக் கொடுக்கின்றன. ஆனால் மொத்தத்தில் ஏதோ ஒரு வெறுமை.

The film is great in parts; but something is missing on the whole.

படங்களில் வழக்கமாக இறுதிக்காட்சிக்கான பில்டப் ஆரம்பித்திலிருந்து வந்து இறுதியாக அந்த punch இருக்க வேண்டும். ஆனால் இந்தப் படத்தில் ஆரம்பித்தில் இருக்கும் ஈர்ப்பு கடைசிக்காட்சிகளில் குறைந்துவிட்டது.

கரும்பை நுனியிலிருந்து சுவைக்க ஆரம்பித்து அடிக்கரும்புக்கு வந்தால்தான் சுவை. ஆனால்'நான் கடவுள்' பார்த்த அனுபவம், அடிக்கரும்பிலிருந்து நுனிக்கரும்பு வரை சுவைத்தது போலாகிவிட்டது.

=============================


மன உறுதி கொண்டோர் இந்தப் படங்களையும் பார்த்துக்கொள்ளுங்கள்:

Third Face Worshippers Of Lord Shiva-AGHORIES

*
அகோரமான அகோரிகள்

(இதில் மொத்தம் ஆறு பாகங்கள்)

*

SHIVA'S FLESH*

Friday, February 20, 2009

294. 'நான் கடவுள்' படம் பார்த்தேன்.

*

நம் பதிவுலக மக்களின் விமர்சனங்களை, அதுவும் கதை, திரைக்கதை, வசனம் என்று இன்னும் பலப்பல காரியங்களைப் புட்டு புட்டு வைக்கும் நம்ம உண்மைத் தமிழனின் விமர்சனம் வாசிக்கும் முன் 'நான் கடவுள்' படம் பார்த்துவிட வேண்டுமென ஏற்கெனவே நினைத்து வைத்திருந்தேன். இருந்தும் வெள்ளிக்கிழமை மாலை தமிழ்மணம் திறந்தபோது உ.த.வோடு சேர்ந்து இன்னும் இருவர் பயமுறுத்தவே தவ்வி தமிழ் மணத்துக்கு வெளியே குதித்து ஓடிவிட்டேன். இருந்தும் முதலில் நினைத்தது போல் அன்றே படம் பார்க்க முடியவில்லை.

அடுத்த நாள் இரவுக் காட்சிக்கு சென்று விடுவது என்று முடிவெடுத்து மாலையே புலன் விசாரணையில் இறங்கினேன். வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த குரு தியேட்டரில் படம் ஓடியது. மாலையே அங்கே போய் விசாரித்தேன். வெளிச் சுவரில் இருந்த ஒரு ஜன்னல் மாதிரியான ஓட்டையைக் காண்பித்து அங்கு முதல் வகுப்புக்கு 9.30-க்கே டிக்கெட் கொடுத்துவிடுவார்கள்; 70 ரூபாய்; 10 மணிக்குத்தான் மற்றைய அனுமதிச் சீட்டுகள் கொடுக்கப்படும் என்றார் வாயில் காப்பாளர். சரியாக 9.20-க்கெல்லாம் தியேட்டருக்கு வந்துவிட்டேன்.காத்திருக்க வேண்டியதிருக்குமென்பதால் வாசிக்க புத்தகம் ஒன்றும் எடுத்துவிட்டு வந்துவிட்டேன். என்ன புத்தகம்' என்ன அதில் சொல்லியுள்ளது என்பதெல்லாம் தொடர் பதிவில் எழுத நினைத்திருக்கிறேன் - ஜாக்கிரதை!

நேரே அந்த ஓட்டைக்குப் பக்கத்தில் அல்லது எதிர்த்தாற்போல் நிற்க கொஞ்சம் தயக்கமாக இருந்தது. யாரும் அப்போது அங்கு நிற்கவும் இல்லை. ஓரிரு பேர் வந்து நிற்பதைப் பார்த்ததும் நானும் அப்படியே மெல்ல நகர்ந்து ஓட்டைக்குப் பக்கத்தில் போனேன். ஏற்கெனவே நின்று கொண்டிருந்த இருவருமே இளைஞர்கள். என்னைப் பார்த்ததும் எனக்காக இடம் விட்டதுபோல் உணர்ந்தேன். ஆக நான்தான் டிக்கெட் கவுண்டரில் முதல் ஆளாக நின்று கொண்டிருந்தேன். ஆனாலும் யாரும் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக நிற்காமல் தள்ளி தள்ளி நின்றுகொண்டிருந்தோம். அதற்குள் இன்னும் இரு வரிசைகளில் கூட்டம் நிறைய சேர ஆரம்பித்து விட்டது. வருவோர்கள் எங்களிடம் இது எத்தனை ரூபாய் டிக்கெட்டுக்கான வரிசை என்று கேட்டு பல சந்தேகங்களைக் கிளப்ப ஆரம்பித்து விட்டனர். 9.45க்கு டிக்கெட் கவுண்டர் திறக்கப் போவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் அதற்குள் மற்ற டிக்கெட்டுகளைக் கொடுக்க ஆரம்பித்து எங்களுக்கு சூடேற்றி விட்டு விட்டனர். இதோ இப்போது கொடுக்கப் போகிறார்கள் என்று வாயில் காப்பாளர் வந்து சொல்லிவிட்டுப் போக நான் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தேன்.ஏனெனில் இப்போது கவுண்டரைப் பார்த்து, கையில் தயாராக காசோடு நிற்கவேண்டியதாயிருந்தது. இரண்டாம் நாள் .. இரவுக் காட்சி .. அதில் முதல் டிக்கெட் ... என்னவோ ஒரு தயக்கம் .. வெட்கம் .. ஏறக்குறைய 35 வருஷத்துக்கு முந்தி 'சவாலே சமாளி' படம் பார்க்க தேவி தியேட்டரில் டிக்கெட்டுக்காக என்னை வரிசையில் நிற்க வைத்துவிட்டு, நண்பன் ஆல்பர்ட் வழக்கமாகச் சொல்லும் பொய்யோடு - (C.T. Office அப்டின்னு சொல்லிக்கிட்டு போவான்; அவன் ராசி .. ஒருத்தரும் அவனைக் கண்டுகொள்ளாம விட்டுருவாங்க .. டிக்கெட் எடுத்துட்டு வந்திருவான்; நான் வரிசையிலிருந்து பிரிந்து அவனோடு சேர்ந்து கொள்வேன்; அது அந்தக் காலம்) - அந்த நினப்பெல்லாம் வந்தது. அதன் பின் அதே மாதிரி பாரதி ராஜா படத்துக்கு முதலிரு நாட்களிலேயே படம் பார்க்க முனைந்தது உண்டு. விமர்சனம் எதும் கேட்கும் முன் படம் பார்த்திரணும்னு ஒரு நினப்பு. ஆனால் 80களில், 90 களில் தயாராக டிக்கெட்டு எடுத்துத் தர ஆட்கள் ஏற்பாடு செஞ்சிட்டு போறதுதான். ஆனால், இப்போ இத்தனை வருசத்துக்கு அப்புறம் .. இந்த வயசில இப்படி வந்து நிற்கிறோமேன்னு ஒரு ஓரத்தில ஒரு சின்ன நினப்பு; தயக்கம். அடுத்து நிக்கிற இளைஞனை முதல் டிக்கெட் எடுக்கச் சொல்லிவிட்டு, இரண்டாவது டிக்கெட்டை வாங்கிட வேண்டியதுதான் அப்டின்னு நினச்சிக்கிட்டு நின்னப்போ, திடீர்னு 70 ரூபாய் டிக்கெட்டுக்கு இங்க உள்ளே வாங்கன்னு ஒரு அறிவிப்பு வர, கூட்டமா அங்கே உள்ளே போனால், அங்க கம்பி வலைக்குள்ள இருந்த ஒரு தற்காலிக கவுண்டர் வழியே டிக்கெட் குடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இங்கே க்யூவாவது ஒண்ணாவது .. நானும் கொஞ்சம் க்யூ மாதிரி ஒண்ணை ஆரம்பிக்கலாமேன்னு தயங்கி பின்னால நின்று கொண்டிருக்கும்போதே டிக்கெட் முடிஞ்சிருச்சின்னு சொல்லிட்டாங்க.

நமக்கு வந்த சோதனை அப்டின்னு நினச்சிக்கிட்டு இருக்கும்போது மீண்டும் காவலர் வந்து அடுத்த 60 ரூபாய் டிக்கெட்டை உள்ளே இருந்தே, வெளியேயிருந்து வரிசையில் வராமலேயே வாங்கிக் கொள்ள அழைத்துப் போனார். அங்கே ஏற்கெனவே வரிசையில் வந்து சீட்டு வாங்கிக் கொண்டிருப்பவர்கள் தகராறு செய்தால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது வாயில் காப்பாளரே மனது வைத்து என்னிடம் இருந்து காசை வாங்கி டிக்கெட் எடுக்க காத்திருந்த தம்பதிகளிடம் கொடுத்து 'சாருக்கும் ஒரு டிக்கெட் வாங்கிக் கொடுத்திருங்க' என்றார். என்ன முகராசியோ அப்டின்னு நினச்சிக்கிட்டேன். எப்படியோ டிக்கெட் வாங்கியாச்சி.

உள்ளே போனால் ஏ.சி. எல்லாம் போட்டிருந்தார்கள். முன்பு பாரதியார் படம் பார்க்கப் போனபோது பால்கனியில் மட்டும் தான் ஏ.சி. இருந்ததாக நினைவு. ஏ.சி.யை மட்டும் நம்பக்கூடாதுன்னு நினச்சி, மின்விசிறி எல்லாம் பார்த்து வசதியாக ஒரு இடம் பிடித்து உட்கார்ந்தேன். கையில் இருந்த புத்தகத்தில் இரண்டு மூன்று பக்கம் வாசிக்கும்போதே வெளிச்சம் குறைக்கப் பட சுற்றியுள்ளவர்களைப் பார்க்க ஆரம்பித்தேன். எல்லாரும் முப்பது முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்டவர்கள்; அதிலும் இளைஞர்கள் அதிகம்; பெண்கள் அனேகமாக 1% இருக்கலாம். எனக்குப் பக்கத்தில் ஒரு சீட் காலி. அடுத்து ஒரு இளைஞன்; அடுத்து ஒரு சீட் காலி. இரண்டு நண்பர்கள் சேர்ந்து எங்கள் வரிசைக்கு வந்தார்கள். அருகருகே உட்கார எண்ணி, நடுவில் இருந்த அந்த இளைஞனை ஒரு சீட் தள்ளி உட்காரச் சொல்லிக் கேட்டார்கள். என்ன ஆச்சரியம். அதற்கு அவன் முடியாதென்றான். வந்தவர்கள் சொல்லிப் பார்த்தார்கள்; இவனோ கேட்பதாயில்லை. இந்த மாதிரி நேரத்தில் ஏதாவது சண்டைக்கிழுத்த நினைவு வந்தது. ஆனால் வந்தவர்கள் நல்ல மாதிரி போலும். அடுத்த வரிசைக்குச் சென்று விட்டார்கள். என்ன இது; பாலா மாதிரி டைரக்டர் படம் பார்க்க வந்திருக்கிறான்; இருந்தும் இப்படி இருக்கிறானேன்னு தோன்றியது. சில நிமிடங்களில் அடுத்து அதே போல் இருவர் வர, அவன் தள்ளி உட்கார மாட்டேனென்று சொல்ல, அவர்களும் வேறிடம் பார்த்துச் செல்ல... எனக்கு அவனிடம் ஏதாவது கேட்டுவிடலாமெவென தோன்ற ... அடக்கிக் கொண்டேன். ஆனால் எனக்கு அவனை விடவும், சாதுவாக சென்றவர்கள் மீது கொஞ்சம் எரிச்சல் வந்தது.

படம் ஆரம்பித்து, பார்த்து, முடிந்து வெளியே வரும்போது இரு சக்கர வண்டியை எடுக்க நெடுநேரம் காத்திருக்க வேண்டியதிருந்தது. அவ்வளவு இளைஞர் பட்டாளம். காத்திருந்த போது காதில் விழுந்த சில விஷயங்களில் ஒன்று: இந்தப் படம் எடுக்க எதுக்கு எட்டு வருஷம்? ஆனால் மற்றபடி பலரும் ஒரு இறுக்கத்தோடு சென்றதாகவே தோன்றியது.


*

Saturday, February 14, 2009

293. தமிழார்வலர்களுக்கு ஓர் அறைகூவல்!

*

கூடல் நகரின் பதிவர் கூட்டமும் "தொடர் ஓட்டமும்" - 2


எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்னும் நம்மவர்களுக்கு ஆர்வக்கோளாறு என்பது கொஞ்சம் அதிகம்தானென்றே நினைக்கிறேன். பொருட்குற்றம் வந்தாலும் பரவாயில்லை சொற்குற்றம் வந்துவிடக்கூடாதென்ற நினைப்போ என்னவோ, சென்னையில் ஒரு பொதுவிடத்தில் நான் பார்த்த ஒரு தமிழாக்கம் என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது. சாதாரண ஒரு தமிழனை விட சிறிதளவாவது எனக்குத் தமிழ் அதிகமாகத் தெரியும் என்ற நினைப்பில் வாழ்ந்து வரும் எனக்கு, அந்தத் தமிழாக்கம் பார்த்ததும் முதலில் திகைப்பும், பின் சிரிப்பும் கடைசியில் 'அடப் பாவிகளா' என்றும்தான் தோன்றியது.

அந்தத் தமிழாக்கத்தை இங்கு தருகிறேன். யாராவது அதற்கு என்ன பொருள் என்று கூற முயன்று பாருங்களேன். நானும் நாலைந்து பேரிடம் கொடுத்துப் பார்த்தேன். பாவம் அந்தத் தமிழர்களுக்கு அதன் பொருள் புரியவில்லை; அவர்களும் என்னைப் போன்றே மொடாக்குகள் போலும். எங்கே, நீங்களும் முயற்சி செய்யுங்களேன்.


மெய்ப்புல அறைகூவலர்களுக்கு ..


உங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்.

மேற்கூறியதற்கான ஆங்கில அறிவிப்பைப் பின் தருகிறேன்.


அடடா! ஏதோ நான் தான் முதலில் பார்த்ததுபோல் அதை ஒரு பதிவாகவும் போட்டுட்டேன். முன்னோடிகள்தான் எத்தனை பேர்!


http://elavasam.blogspot.com/2008/08/blog-post_28

http://amarkkalam.blogspot.com/2008/12/cinema-paradiso.html


http://ilayapallavan.blogspot.com/2008/10/blog-post_7520.html

http://govikannan.blogspot.com/2008/12/blog-post_17.htmlஇப்போது இன்னொரு கேள்வி:
//தமிழ்ப்படுத்த வேண்டியதுதான், அதற்காக இப்படியெல்லாமா 'படுத்துவது'?
- தட்ஸ் தமிழ் // -- இதனோடு முழுவதுமாக ஒத்துப் போகிறேன்.ஆனால் கோவி //இதைச் அனுகூலம் ஆக்கிக் கொண்டு தமிழ் எதிர்பாளர்கள்...நக்கலாக சிரித்து...'பாருங்கய்யா தமிழை' என்று சொல்ல ஆரம்பித்துவிடுவர்.// என்கிறார். நானும் அப்படித்தான் சொல்கிறேன்:'பாருங்கய்யா தமிழை' அதோடு ஒரு கேள்வியையும் உங்கள் முன் வைக்கிறேன்: இது தேவையா?

இதில் இன்னொன்றும் தெரியவருகிறது. நம் பதிவர்களுக்குத்தான் எப்படி ஒரேமாதிரியான சிந்தனை!

சென்னை விமானநிலையத்துக்காரர்களுக்குத் தமிழில் மட்டும் இப்படிப்பட்ட ஈடுபாடு" என்றில்லை; ஆங்கிலத்திலும்தான் போலும். ஒரு - electronic notice board-ல் - இருந்த ஒரு ஆங்கில அறிவிப்பு -- அடடே! என்ன ஒரு ஆங்கிலப் புலமை! கைத்தொலை பேசியில் படமெடுக்க நினைத்தும் காத்திருக்க முடியாததால் விட்டு விட்டேன்.*


பட உதவி (படம் ஆட்டை போட்டது): இ. கொத்ஸ்.


*

Saturday, February 07, 2009

292. முத்துக் குமரனின் வேண்டுகோளுக்காக ...

முத்துக் குமரா,
நீ உன்னைச் சாகடித்துக் கொண்டதில் எனக்கு முழுவதுமாக உடன்பாடில்லை. இருந்து போராடியிருக்க வேண்டியவன் இறந்து போராட நினைத்தது தவறு. இருப்பினும் உன் உணர்வுகளுக்குத் தலை வணங்குகிறேன்.

நீ கேட்டுக்கொண்டதன்படி (நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் ) உன் கடிதத்தின் நகலை என் பதிவிலிடுகிறேன்.ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்: (தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழ்மக்களுக்கு முத்துக்குமரன் அளித்த இறுதி மடல்)
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2009, 12:43.55 PM GMT +05:30 ]

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

============================

இதனையொட்டிய எனக்குப் பிடித்த இன்னொரு பதிவினை - பிரபு ராஜதுரையின் பதிவு - உங்கள் பார்வைக்குக் கொண்டுவர ஆவல்.*