Sunday, May 26, 2024

1276. லவ்வர் ... திரைப்பட விமர்சனம்


**

ஜெய்பீம், குட்னைட்  படங்களுக்குப் பிறகு லவ்வர் படம் பார்த்தேன். நினைத்தபடி கதையை முடித்த விதம் பிடித்திருந்தது.

காதல் உன்மத்தம் தலைக்கேறிய இளைஞனின் ஏறத்தாழ ஒரே மாதிரியான எதிர் வினைகளை வைத்தே ஒரு படம் எடுத்திருந்தாலும் திரைக்கதையை அலுக்காமல் கொண்டு சென்ற இயக்குநருக்குப் பாராட்டுகள்.

இப்போது வரும் படங்களில் “ex” என்ற பதம் அடிக்கடிப் பயன்படுவதைப் பார்க்கும் போது காதல் தோல்வியால் தாடி வளர்க்காமல் “break up” என்பதைத் தாண்டி இளைஞர்கள் எளிதாகச் செல்லும் “நல்ல” வழியைக் காண்பிக்கும் நல்லதொரு நாகரிக முன்னெடுப்பு என்றே நினைக்கின்றேன்.

விஜய் சேதுபதியிடமிருந்து விலகி மெல்ல மணிகண்டனை நோக்கி நடை போட ஆரம்பித்திருக்கிறேன்.




Thursday, May 23, 2024

1275. சில பல திரைப்படங்கள் ....



*

நான்கைந்து நாட்கள். வேலை ஏதும் செய்யாமல் அக்கடாஎன்று படுத்துக் கிடந்தேன். ஆனாலும் அப்படியே சும்மாவா படுத்திருக்க முடியும். இருக்கவே இருக்கு ..OTTக்கள் வா ... வா என்று அழைத்துக் கொண்டே இருந்தன. இரண்டு, மூன்று படங்கள் முழுதாகவும்,… சில “சில்லறைப் படங்களைஅரை குறையாகவும் பார்த்து நொந்து கொண்டேன்.







முழுதாகப் பார்த்த முதல் படம் ஒரு வெப்சீரீஸ். வசந்த பாலனின் “தலைமைச் செயலகம்”. முதல் இரண்டு மூன்று எபிசோடுகளைப் பார்த்ததும் உடனே எழுந்து போய் முக நூலில் நல்லதாக நாலு வார்த்தை எழுதிட்டு வரணும்னு ஓர் உந்துதல். முதல் சீனிலேயே ஒய்ட் ஆங்கிள் ரவிச்சந்திரன் படத்தோடு ஒட்ட வைத்து விட்டார். ஹீரோ ஆடுகளம் கிஷோர்; கதாநாயகி எனக்குப் பிடித்த இரு நடிகைகளில் ஒருவரான ஷ்ரேயா ரெட்டி (வெயில் படத்திலிருந்தே …) இருவரின் தோற்றமே நன்கிருந்தது. இருவரும் கண்களால் தங்கள் நடிப்பைக் கொண்டு வந்தது போலிருந்தது. நான்கைந்து எபிசோடுகள் அலுப்பில்லாமல், நன்றாக சென்றது. கடைசி மூன்று,நான்கு எபிசோடுகளை எப்படி முடிப்பது என்று தெரியாமலோ, திரைக்கதை எழுதுவதிலோ ஒரே குழப்படி  செய்து, நம்மை வைத்து செய்து விட்டார்கள்’.  நன்றாக ஆரம்பித்து இறுதியில் சொதப்பலாக,  சோக அவியலாக முடிந்த சோகம் அந்தப் படம். ஆனாலும்  பல மாதங்கள்/ ஆண்டுகளுக்கு முன்பு ஏறத்தாழ இதே மாதிரியான இன்னொரு படம் ஓடிடியில் பார்த்தேன். அது சிவகாசி என்று நினைக்கின்றேன். அதில் பரம்பரையாக இருந்த ஓர் அரசியல் குடும்பத்தை வைத்து இதே போன்ற கதையாக்கத்தோடு – அரசியல்வாதி அப்பாவை மகளோ மகனோ கொன்றுவிடும் கதையாக – பார்த்த நினைவு வந்தது. முதலில் பார்த்த அந்தப் படமே பரவாயில்லை என்று இப்போது தோன்றுகிறது. அழகாக ஆரம்பித்து தடுமாறி முடித்து விட்டார், ஜெமோ இதற்கு அதிகமாகப் பங்கு கொடுத்த்திருப்பார் போலும்.

 


இந்தப் படத்திலிருந்து தப்பி இன்னொரு படத்திற்குத் தாவினேன். தங்கர் பச்சானின் படம். :கருமேகங்கள் கலைகின்றன” தலைப்பெல்லாம் நன்கு கவித்துவமாகவே இருக்கிறது.  பாரதி ராஜா கதாநாயகன். யோகி பாபு துணைக் கதாநாயகன். எஸ்.சி (அதாவது தளபதி விஜய்யின் அப்பா),  கெளதம் வாசுதேவன், அதிதி பாலன் ... என்று ஒரு பெரிய பட்டாளம்.  பாரதி ராஜாவிற்கு ஒரு கதை; யோகிபாபுவிற்கு இன்னொரு கதை; வாசுதேவனுக்கு ஒரு கதை ... என்று பல துணைக்கதைகளை வைத்து மகாபாரதம் போல் ஒரு நீண்ட படம். இதில் ஏதாவது ஒரு கதை – பாரதி ராஜாவின் கதை மட்டும் – வைத்து ஒரு படமெடுத்திருந்தால் உட்கார்ந்து பார்த்திருக்கலாம்.

 

THE TRAIN என்று ஓர் ஆங்கிலப்படம். WW II காலத்துப் படம். பிரான்சிலுள்ள பெரும் ஓவியர்களின் படங்களையெல்லாம் அள்ளிக் கொண்டு செல்ல நினைக்கின்றார் ஒரு ஜெர்மானிய அதிகாரி. அதைத் தடுத்து நிறுத்தி தங்கள் நாட்டின் கர்வத்தையும். பெருமையையும் காப்பாற்றுகிறார் கதாநாயகன்



Burt Lancaster, எப்படி ரயிலை டைரக்ஷன் மாத்துனாங்கறது மட்டும் புரியலை. ஆனா படம் நல்லா இருந்தது.

இதோடு நிறுத்தியிருக்கலாம். THE BOYS அப்டின்னு ஒரு தமிழ்ப்படம் ஓடிடியில். யாரோ செந்தில்குமார் அப்டின்னு ஒரு தயாரிப்பாளராம். காசு எப்படியோ வந்திருக்கும் போலும், அதைக் கண்டபடி செலவு பண்ணியாகஆணும்னு ஒரு வரம் வாங்கிட்டு வந்திருக்கார் போலும். அதுக்காக இப்படி ஒரு படம் எடுத்து ... கடவுளே ... தாங்கலடா சாமி.

இன்னும் இது மாதிரி ஓடிடியில் சில தமிழ்ப்படம் முயற்சித்து,தப்பித்து ஓடி வந்துட்டேன். பலரும் தமிழில் ஓடிடியில் காசை தர்ப்பணம் செய்யவே படம் எடுக்கும் பரிதாபத்தையும் பார்த்தேன்.

 


Wednesday, May 15, 2024

1274. ஆவேசம்னு ஒரு படம் ...


ஏதோ ஒரு மலையாளப் படத்தில் பகத் பாசில் (அப்போது அவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது) ஒரு narcist-ஆக, தன் அழகைத் தானே ஆராதிக்கும் ஒரு பார்பராக வருவார். அதில் முதல் கட்டத்தில் அவர் தன்னையே ஒரு கண்ணாடியில் பார்த்துக் கொண்டு,  கண்ணாடியிலிருந்து விலகி ஓரிரு அடி எடுத்து வைத்து, பின் மீண்டும் கண்ணாடிக்குச் சென்று தன் மீசையை ஒதுக்கிக் கொள்வார். சில வினாடிகள் வந்த அந்த சீன் எனக்கு மிகவும் பிடித்தது. சரியான நடிப்பு அரக்கன்என்று அன்று நினைத்தேன்.

இது ஒரு பழைய கதை.

புதிய கதை என்னன்னா ... இன்று ஆவேசம்என்று ஒரு தர்த்தி படம் பார்த்தேன். சும்மானாச்சுக்கும்எடுத்த ஒரு படமாகவே எனக்குத் தோன்றியது. ஆனால் மதிப்பிற்குரிய இரு நண்பர்கள் இந்தப் படத்தை ஆஹா ... ஓஹோ என்று புகழ்ந்திருந்தனர். அதிலும் பெரிய எழுதாளராக ஆக வேண்டிய ஒருவர் -இன்று வரை வெறும் பதிவராக மட்டுமே இருக்கிறார் – பகத்தை ஒரு நடிப்பு ராட்சசன் என்றும் அழைத்துப் புகழ்ந்திருந்தார். அடி வயித்திலிருந்து ஏறத்தாழ ஒரு பத்து தடவை காட்டுத் தனமாக உச்சஸ்தாயில் கத்தினார் பகத். அதையெல்லாம் நடிப்பின் உச்சமான்னு எனக்குத் தெரியலை .. புரியலை ...

அதோடு எனக்கு ஒரு பெரிய சந்தேகம். இது ஒரு டான் படமா? அல்லது காமெடி படமா?   இன்னும் சந்தேகம் தீரவில்லை.

இன்னொரு சந்தேகமும் வந்தது, இந்த இரு பூமர் அங்கிள்களுக்கு மிகவும் பிடிக்கிற இந்தப் படம் pre-boomer தாத்தாவான எனக்குப் புரிபடவில்லையோன்னு ஒரு சந்தேகம்.

படமா இது? சோதித்து விட்டார்கள்.

மன்னித்துக் கொள்ளுங்கள். பூமர் அங்கிள்களே ..!

Tuesday, May 14, 2024

1273. தனிநபர் நாடகம்: "க"வின் "ஜ"

அமெரிக்கன் கல்லூரி பழைய மாணவர் குழு ஒரு விசித்திரமான தலைப்பு கொண்ட ஒரு நாடகத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார்கள் என்பது தெரியும். அது  மதுரையில் நடந்து கொண்டிருந்தது என்பதும் தெரியும். ஆனால் திடீரென சென்னையில் நடக்கிறது என்றும், அதுவும் என் இருப்பிடத்திற்கு  அருகிலேயே நடக்கிறது என்று தெரிந்ததும்,  “பல சீரியசான திட்டங்கள்” தீட்ட ஆரம்பித்தேன். வயதைக் காரணம் காட்டி  குடும்பம் ஏறக்குறைய வீட்டுச் சிறையில்’  வைத்து விட்டார்கள். இரண்டு மணி நேரம் அதிலிருந்து தப்பிப்பதற்காக, காலையிலிருந்தே  வீட்டில் நல்ல பிள்ளையாகநடக்க ஆரம்பித்து, மாலையில் அப்போதுதான் அந்த விளம்பரத்தைப் பார்த்தது போல் நடித்து ... ஒரு வழியாக அமெரிக்கன் கல்லூரியின் மீது பாரத்தைப் போட்டு, அவர்கள் நடத்தும் ஒரு சிறு கூட்டம் என்று சொல்லி, (நாடகமெல்லாம் இந்த வயதில் போய் பார்க்கணுமா? என்று கேள்விக்கணைகளுக்கு அஞ்சி...) புறப்பட்டுப் போனேன். சரியான நேரத்தில் இடத்தைக் கண்டுபிடித்து முதல் ஆளாகப் போனேன். நல்ல வேளை மற்றவர்களும் விரைவில் வந்து சேர நாடகம் ஆரம்பமானது.



கவின் ஜ ”என்பது நாடகத்தின் தலைப்பு. தலைப்பே வித்தியாசமானது தான். அதுவும் முழு நீள நகைச்சுவை தனிநபர் நாடகம் என்று விளம்பரம் கூறியது. ஒரு விஷயத்தை உடைத்து விடுகிறேனே ... தலைப்பை முழுவதுமாக விளக்கி விடுகிறேன். “கந்தவேலின் ஜட்டி”  என்பதே முழுத் தலைப்பு. நாமெல்லோரும் நம் உள்ளாடைகளை அதன் பெயரை வெளிப்படையாகச் சொல்வதே வெகு unparliamentary . என்றல்லவா நாம் நாகரிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே முதலில் சில நிமிடங்களில் ரொம்பவுமே கஷ்டப்பட்டு கந்தவேல் ஜட்டி” என்ற சொல்லை மிகவும் வெட்கப்பட்டுக் கொண்டே சொல்கிறார். 


இந்த நாடகத்தை நான் முழுவதுமாகச் சொல்லி அதன் நயத்தைக் கெடுக்க விரும்பவில்லை. ஆனால் விளையாட்டுத் தனமாக ஆரம்பித்து... மெல்ல மிகவும் முக்கியமான, ஆழமான காம வக்கிரங்களை நோக்கி கதை நகர்கிறது. இறுதியில் கந்தவேல் ஒரு கடிதம் வாசிக்கிறார். ஒரு பெண்ணின் தந்தையான அவர் தன் பெண்ணை நினைத்து அஞ்சி, ஆண்களின் வக்கிரப் புத்திக்கான காரணங்களை நம் முன் வைக்கின்றார்.  கேள்வியும் பதிலுமாக நாடகம் ஒரு serious tone-ல் முடிகிறது.




ஆனந்த குமார் தனி நபராக நிறைவாக நடித்துள்ளார். இறுதியில் கலங்கும் கந்தவேல் நம்மையும் கலங்க வைத்து விடுகிறார்.




இளம் பிள்ளைகள் இந்த நாடகத்தைப் பார்ப்பது பல் நல்வினைகளை விளைவிக்கும் என்றே நம்புகிறேன்.







நண்பர்கள் பாஸ்கர், சுதன் எடுத்த படங்களுக்கு நன்றி.

பி.கு. அதென்னவோ, அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கு அந்தக் கல்லூரிமேல் எப்போதுமே  அத்தனை காதல்!  நாடகம் நடந்த அறையில் பெரும் நடிகர்கள் சிலரின் புகைப்படங்கள் அலங்காரமாக மாட்டப்பட்டிருந்தன. அத்னோடு எங்கள் கல்லூரியின் கலைரசனையோடு கட்டப்பட்டுள்ள மணிக்கூண்டின் படமும் அவைகளோடு தொங்கியதில் அந்தக் காதல் வெளிப்பட்டது. மகிழ்ந்தேன். அதனை வீடியோவாக எடுத்தேன். பதிந்திருக்கிறேன்.