Showing posts with label காணாமல் போன நண்பர்கள். Show all posts
Showing posts with label காணாமல் போன நண்பர்கள். Show all posts

Friday, June 21, 2013

662. காணாமல் போன நண்பர்கள் - 20 - இங்கே காணாமல் போன பதிவர்கள்






*



அது .. இதுன்னு 8 வருஷம் முடிஞ்சி போச்சு - நான் பதிவராகி.

24.4.2005-ல் முதல் பதிவிட்டிருக்கிறேன். என்ன எழுதணும்னு அன்னைக்கும் தெரியலை; இன்னைக்கும் தெரியலை. ஆனால் இன்னும் விடாம எழுதிட்டு வந்திருக்கிறேன்.

பதிவுகள் போட்ட விவரம் இப்படி இருக்கு....

May (6)
► April (3)
► March (8)
► February (5)
► January (16)

► 2012 (78)

► 2011 (78)

► 2010 (105)

► 2009 (74)

► 2008 (43)

► 2007 (52)

► 2006 (67)

► 2005 (118)

ஆரம்பிச்ச வருஷம் ரொம்ப உன்னிப்பா இருந்திருப்பேன் போலும். 118 பதிவுகள். நிறைய சொந்தக் கதை சோகக் கதை எழுதியிருக்கிறேன். மதங்களைப் பற்றியும் எழுத ஆரம்பித்து விட்டேன். மதங்களைப் பற்றி எழுதினால் பின்னூட்டங்கள் எப்படியிருக்கும்? காட்ட சாட்டமாத்தான் இருந்தது.

2006 - இந்த ஆண்டும் கொஞ்சம் முக்கியமான ஆண்டாக இருந்திருக்க வேண்டும். மூட நம்பிக்கைகளுக்கு எதிர்த்து நிறைய பதிவுகள்; அடுத்து என்னை நீதி மன்றத்திற்கு இழுப்பேன் என்ற அச்சுறுத்தலுக்கு உள்ளான ‘இடப் பங்கீடு’ பற்றிய பதிவுகள்.

2007, 2008,2009 - வேகம் குறைந்த காலம் போல் தெரிகிறது.

2010 - இன்னும் கொஞ்சம் அதிகப் பதிவுகள்.

2011-லிருந்து பதிவுகள் குறைவு தான். (594-ம் எண்ணிக்கைக்குப் பிறகு பல மாதங்கள் மதங்கள் பற்றியேதும் இல்லை !!!)

பழைய பதிவுகளையும், அவைகளுக்கு வந்த பின்னூட்டங்களையும் பார்த்தேன். ஒரு வேற்றுமை நன்கு தெரிந்தது. பழைய காலத்தில் பின்னூட்ட எண்ணிக்கைகள் அதிகம். இதற்கு இரண்டு விஷயங்கள் காரணமாக இருக்கலாம். எழுதிய பதிவுகளின் ‘சூடு’ ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அடுத்து அப்போது பின்னூட்ட எண்ணிக்கைகள் பொதுவாகவே பதிவுலகத்தில் அதிகம். ஆனால் இப்போது பின்னூட்ட எண்ணிக்கைகள் எல்லோருக்குமே மிகக் குறைவு என்று தான் நினைக்கிறேன்.

எண்ணிக்கைகளை விட பழைய பின்னூட்டங்களைப் பார்க்கும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி. நிறைய பின்னூட்டங்கள் வெறுமனே ஒரு கருத்தைச் சொல்லிச் செல்வதற்குப் பதில் தனிப்பட்ட அன்பைப் பல பின்னூட்டங்களில் பார்க்க முடிந்தது. ஏதோ எழுதியிருக்கிறாய் .. நானும் ஏதாவது சொல்லிவிட்டுப் போகிறேன் என்றில்லாமல் எல்லாமே ஈரத்தோடு இருப்பதாகப் பட்டது. Many comments had a very personal touch. I could feel the warmth even when I read it now. மக்க்ள் நெருங்கியிருந்ததாகத் தோன்றுகிறது. பல சச்சரவுகள் இருந்தாலும் .. the stay was pleasant. அதுக்காக இப்போது மோசம்னு சொல்லலை. it is just neutral now! எல்லோரும் வர்ரோம் ... போறோம் அப்டின்றது மாதிரி.

அப்போ இருந்த நண்பர்களில் பலரை இப்போது ‘பார்க்கவே’ முடியவில்லை. போரடித்து ஒதுங்கி விட்டார்களா .. இல்லை.. வாழ்க்கையில் இன்னும் முக்கியமானவைகளில் ஆழ்ந்து ஈடுபட ஆரம்பித்து விட்டார்களா? சிலரை மீண்டும் இழுக்கக்கூட முயற்சித்தேன். அட .. போங்கய்யா .. பொழைக்கிற வழியைப் பார்க்கிறோம்னு சொல்லிட்டுப் போய்ட்டாங்கன்னு நினைக்கிறேன்.

அன்றும் இன்றும் அதே இளமையை எழுத்துக்களில் தொடர்ந்து ஓட விடுவது நம்ம துளசி டீச்சர் மட்டும் தான் என்று நினைக்கின்றேன். கூடாமல் குறையாமல் தன் அனுபவங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவரைப் போல் நெடுநாட்களாக பதிவுலகில் நின்று நல்ல பதிவுகள் கொடுக்கும் பதிவர் வேறு யாராவது உள்ளார்களா? எனக்குத் தெரிந்து வேறு யாருமில்லை.

நெடுநாளாக ’காணாமல்’ போயிருந்த ஜிரா இப்போ வந்து அப்பப்போ எழுதுகிறார். ரொம்ப லேட்டஸ்ட்டா வந்தது  $செல்வன்.  நிறைய எழுதியவர்.இப்போ இந்தியாவுக்கே / கோவைக்கே வந்திட்டார். இனிமே எப்டின்னு பார்க்கணும். இக்பால் செல்வனை வாசிக்கும்போதெல்லாம் இந்த செல்வன் எனக்கு நினைவில் வருவதுண்டு. என்ன காரணமோ தெரியவில்லை. வெளிநாட்டிலிருந்து உள்நாட்டு விஷயங்களில் காட்டிய நாட்டமோ என்னவோ தெரியவைல்லை.

 பதிவுகளிலேயே இருவர் எழுத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர்களைப் பற்றி முன்பே பல முறை சொல்லியுள்ளேன். ஒருவர் இளவஞ்சி.
Oh! .. no .. not Agassi ..!

இவரின் பல பதிவுகளில் முதல் பத்தியை சிரித்துக் கொண்டே படிக்க ஆரம்பிப்போம். ஆனால் பதிவை வாசித்து முடிக்கையில் கண்களில் கண்ணீர் இறங்கி ஓடும். என்ன கலையோ .. மனுஷனுக்கு மனச உருக்குற கலை கைவந்த கலை. நல்ல நகைச்சுவை உணர்வும் இருக்கும். அந்த வகைப் பதிவுகளும் நிறைய எழுதியிருக்கிறார்.
மொட்டும் மலரும்

நிழல்படங்கள் எடுப்பதிலும் வல்லவர். இன்னும் கோவிலுக்குப் போகும் காரைக்குடிப் பெண்களின் தலையில் இருந்த மல்லிகைச் சரப் படம் கண்முன் நிற்கிறது. இவரது கடைசிப் பதிவு: June 22, 2010

அடுத்தவர்  செல்வநாயகி. இவரைப் பற்றி என்னால் அதிகம் சொல்ல முடியாது. காரணம் அவரின் தமிழ். ஒவ்வொரு சொல்லும், எழுத்தும் அழகில் முக்குளித்து மிக்க அழகோடு பிறக்கும். அவரது கவிதை, உரைநடை .. எல்லாமே தனி அழகு. பின்னூட்டங்களில் கூட அவரின் தமிழ் நடைக்கு அழகுண்டு. இவரது பதிவுகள் பற்றிப் பேச, எழுத நல்ல தமிழ் வேண்டும். என்னிடம் அது இல்லை. ஆகவே ‘கழண்டு கொள்கிறேன்’!! இவரது கடைசிப் பதிவு  - ஜூலை 13, 2012.

இவர்கள் இருவரும் அதிகம் எழுதாதது தமிழுக்கு இழப்பு.. Don't attach any trace of  exaggeration to this. I MEAN it. 

இன்னும் பலர் நினைவில் வந்து போகிறார்கள்.

பலருக்கு ஒரு நல்ல ‘பிள்ளையார் சுழி’ போட்டுக் கொடுத்த காசி ...

முதன் முதல் பதிவெழுத வந்த போது உதவிய மதி கந்த சாமி ...


தன் ஒரே ஒரு பதிவால் - இந்து மதம் பற்றிய பதிவு - பலர் மனத்தில் இடம் பிடித்த தங்க மணி ...அப்பதிவை பின்னாளில் நான் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் பதிவுகளையும் காணோம்.

கடும் பின்னூட்டம் மட்டும் இடும் சுடலை மாடன் ...

அறிவு சார்ந்த பதிவுகள் மட்டுமே எழுதும் பத்மா அரவிந்தன் ...

தமிழ் .. திராவிடம் என்று பதிவுலகில் முழங்கிய  முத்து தமிழினி ..

அக்கரைச் சீமையில் இருந்து ஈழத்தமிழர் பற்றிய பல கட்டுரைகளும், நூல்களும் எழுதிய திரு ...

பாடப்புத்தகத்தில் வைக்கும் அளவிற்கு மிகத் தரமான கட்டுரைகள் - ஈழம், காஷ்மீர் போன்ற பல வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கிய கட்டுரைகள் - எழுதிய தமிழ் சசி ...

இதுவரை ஒரு பதிவை வாசித்து மிகச் சத்தம் போட்டு சிரித்தேனென்றால் அது வரவனையானின் பதிவுக்குத் தான்.

flash வைத்து பல புதிர் போட்டிகள் நடத்திய பெனாத்தல் சுரேஷ் ...

சுறுசுறுப்புக்கே பெயர் வாங்கிய பொன்ஸ் ...

நகைச்சுவை, மாமியார் கதை, கும்மிப் பதிவுகள் - என்று பலவற்றையும் கலந்து கட்டிய கண்மணி ...

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் ஒன்றை வைத்து எல்லோரையும் சிரிக்க வைத்த இளைஞர் குழாம் ...

வெண்பா மன்னன் & குறுக்கெழுத்துப் போட்டி என்று உலுக்கியெடுத்த இலவசக் கொத்தனார் ...

என்னை பெரியப்பா என்றழைத்துக் கொண்டிருந்த மருத்துவர் ராமநாதன் ...

சினிமாக்குள் நுழைய முயற்சித்த கதைகளையெல்லாம் எழுதிய வெளிகண்ட நாதர் ...

இனிமையான நட்போடு இருந்த நெல்லை சிவா ...

இந்து மதத்தினைப் பற்றி நிறைய எழுதிய நேசகுமார் ...

நல்ல கருத்துக்களைத் தரமில்லாத வார்த்தைகளால் தந்தமைக்காக தமிழ்மணத்திலிருந்து விலக்கப்பட்ட ஆரோக்கியம் ...

சமயத்தொடர்புள்ள பதிவுகளில் நாட்டம் காட்டிய வசந்தன் ...

 என்னைத் தாத்தா என்றழைத்த மழை ஷ்ரேயா ...

'நல்லா இருங்கடே!!!'  என்று எல்லோருக்கும் ஆசி வழங்கும் ஆசீப் மீரான்...

தனக்கென தனிவழி என்று வாழ்ந்து காட்டி இன்னும் என்னை மிகுந்த பிரமிப்பில் வைத்திருக்கும்  ராமச்சந்திரன் உஷா ...

என்னோடு மதப் பதிவுகளில் வழக்கமாக ஒருவர் பின் ஒருவராய் வந்து என்னோடு வாதாடிய  இஸ்லாமியப் பதிவர்களில் மிக மட்டமான ‘மனிதன்’ - பின் வந்த  நல்லடியார்  -->  இறை நேசன்  --> நண்பன்  --> (இஸ்லாமியப் பதிவர்கள் அனைவரும் புனைப்பெயரில் மட்டுமே எழுதி வந்தபோது தன் சொந்தப் பெயரில் நான் சந்தித்த முதல் இஸ்லாமியப் பதிவர்) சுல்தான்  போன்றவர்கள் ...

என் கருத்துக்களோடு பலமுறை ஒத்திருந்த inomeno

அடிக்கடி என்னோடு ‘சண்டை’ போட்ட வஜ்ரா ..., முகமூடி ...

மாற்றுக் கருத்துகளை அளித்த மதுரைக்காரர் கால்கரி சிவா ...

நிச்சயமாக இன்னும் பலர் உண்டு. இவர்களும் என் காணாமல் போன நண்பர்களின் பட்டியலில் உள்ளவர்கள் தான்.  காணாமல் போன இவர்களையெல்லாம் மீண்டும் பதிவுகளில் ‘பார்க்கும்’ நிலை வந்தால் மிக்க மகிழ்ச்சி.







*


Thursday, June 06, 2013

658. காணாமல் போன நண்பர்கள் - 19 - தம்பியான அண்ணாச்சி!







*


”சித்தாள் வேலை”யைப் பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.

அந்தக் காலத்தில் கல்லூரியில் lecturer post-க்கு முன்னால் tutor அல்லது demonstrator என்ற பணியிடங்கள் உண்டு. இந்த பணியிடங்களுக்கு இளங்கலை முடித்திருந்தால் கூட வேலை கிடைக்கும். ஆனால் முதுகலை முடித்து lecturer ஆக முடியாமல் / கிடைக்காமல் tutor அல்லது demonstrator பணியிடங்களுக்கும் போவது உண்டு. இதில் உள்ள சோகம் என்னவென்றால் இந்த இரு பணியிடங்களில் இருப்பவர்கள் மீது lecturerகளுக்கு மரியாதை பொதுவாக இருப்பதில்லை. துறையில் உள்ள “சின்ன வேலை”களுக்கு இந்தப் பணியாளர்களைப் பயன்படுத்துவதுண்டு. ஆகவே அதில் இருந்த நாங்கள் எங்களை ‘சித்தாள்கள்’ என்று அழைத்துக் கொள்வதுண்டு. கொத்தனார் சொல்றதையெல்லாம் கேட்கணுமே ...

இந்த சித்தாட்களில் பலர் lecturer பதவிகளில் இருப்பவர்களை விட அதிக மதிப்பெண்களோ, அதிகத் திறமையோ கொண்டவர்களாக இருக்கலாம். இருந்தாலும் மரியாதை என்னவோ குறைவு தான். இப்படி சித்தாள்களாக இருப்பவர்களுக்கு அந்தக் காலத்தில் இன்னொரு இடைஞ்சல் இருக்கும். இவர்களை எல்லா கல்லூரிகளிலும் தற்காலிக பணிகளில் மட்டுமே வைத்திருப்பார்கள். 10 A என்று அந்தப் பணியிடங்களுக்குப் பெயர். ஆகவே ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அவர்களை கல்லூரியிலிருந்து ‘கழட்டி’ விட்டுவிடுவார்கள். அடுத்த ஆண்டு மீண்டும் அவர்கள் வேலையில் எடுத்துக் கொள்ளப்படலாம். ஒரு வேளை வேலை தொடராமலும் போகலாம். இதெல்லாம் முந்திய ஆண்டில் அவர்கள் ‘சேவை’ எந்த அளவு இருந்தது என்பதைப் பொறுத்தது. இந்த ‘சேவை’ என்பது அவர்களின் வேலைத் திறமையாக இருக்கலாம்.அல்லது துறையில் தலைமைக்குச் செய்யும் ‘சேவையாகவும்’ இருக்கலாம். அது துறைத் தலைவர் வீட்டில் நடக்கும் விழாக்களுக்கு வாழை மரம் தூக்கிவருவது .. காய்கறி வாங்கி வருவது ... போன்ற பணிகளாகவும் இருக்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி ஆரம்பிக்கும் காலங்களில் ‘சித்தாள்கள்’ பரிதாபமாக கல்லூரியையும், அவர்களின் துறைத்தலைவரின் அறையையும் ‘மந்திரித்து விட்ட கோழிகள்’ மாதிரி சுற்றிச் சுற்றி வருவார்கள். அனேகமாக துறைத்தலைவரின் கையில் தான் இவர்களுக்கு ஒரு கத்தியோ, கைப்பிடி அரிசியோ இருக்கும். துறைத்தலைவருக்குப் பிடிக்கவில்லையெனில் கத்தியை வீசி விடுவார். பாவப்பட்டால் அந்த ஆண்டுக்கு மட்டும் மறுபடி பதவி - கைப்பிடி அரிசி - போடுவார்.

எனக்கு வேலை கிடைக்கும்போது lecturer பதவிக்குத்தான் போனேன். ஆனால் அப்போது அந்த பணிக்கு இடம் இல்லை; இன்னும் சில மாதங்களுக்கு மட்டும் demonstrator வேலையில் சேர்ந்தால் அடுத்த ஆண்டே lecturer பதவி என்றார்கள். சரியென்று சேர்ந்தேன். ஆனால் அடுத்த ஆண்டு கல்லூரி நிர்வாகம் சென்ற ஆண்டு lecturer இல்லாமலே வேலை செய்தீர்களே அதேபோல் தொடர்ந்து இருங்கள் என்று சொல்லி விட்டார்கள். ஆனால் துறையிலும், துறைத்தலைவரிடமும் முதலிலே இருந்தே நல்ல பெயர் வாங்கி விட்டேன். படிக்கும் போது கல்லூரியில் துறைத்தலைவருக்கு செல்லப்பிள்ளை என்றிருந்தேன். அதே போல் இங்கே துறைத் தலைவருக்கும் செல்லப் பிள்ளையாக ஆகியிருந்தேன். அருமையான துறைத்தலைவர். அவரைப்போல் யாரையும் அவ்வளவு உயர்வாகச் சொல்ல முடியாத அளவுக்கு மிக நல்ல பேராசிரியர். பேராசிரியர் நாராயணன். இருந்தும் எனக்கு வாய்ப்பில்லை. ஆகவே demonstrator ஆக நான்கு ஆண்டுகள் அந்தக் கல்லூரியில் இருந்தேன்.

சித்தாள் என்ற வேலை; ஆனால் மரியாதையும், அன்பும் நிறையவே எனக்கு துறையில் நிறையவே கிடைத்து வந்தது. என்ன நேரமோ .. என்னவோ .. நம்ம ஆங்கிலத்திற்கும் அங்கு ஒரு மரியாதை கிடைத்தது. அதுவும் ஆங்கிலத்துறையில் தனி மரியாதை. ஏனெனில் அங்கிருந்த ஆங்கிலத் துறைத்தலைவர் இலங்கையிலிருந்து வந்தவர். நல்ல பண்பாளர். பேராசிரியர் ஆரோக்கிய சாமி. அவர் ஒரு விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட். என்னன்னா ... கல்லூரி வளாகத்தில் அவரிடம் ஆசிரியர்கள் பேச வேண்டுமானால் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும். இல்லாவிட்டால் விரட்டி விடுவார். ஆனால் நான் அவரோடு கல்லூரியில் மட்டுமல்லாது ரயிலிலும் ஒன்றாக, சமமாக உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருப்பேன். அதைப் பார்க்கும் மற்ற ஆசிரியர்களுக்கே ஆச்சரியம். அந்த ஆச்சரியத்தை எனக்கு அனுசரணையாக்கிக் கொண்டேன்!

ஆங்கிலத்துறையில் நிறைய tutors இருப்பார்கள். இதில் சிலர் மட்டும் B.A. ஆங்கிலம் படித்திருப்பார்கள். இவர்களில் பலரும் ‘இங்கிலீஸ்கார குட்டிகள்’ என்ற நினைப்பில் அலைவார்கள். இவர்களோடு M.A. Economics படித்தவர்களும் இருப்பார்கள். இவர்கள் எல்லோருக்குமே ஆங்கிலத் துறையில் step-motherly treatment மட்டும் தான் கிடைக்கும். அதாவது இவர்கள் சித்தாள்கள் மட்டுமல்ல .. orphaned  சித்தாள்கள்! என் சப்போர்ட் எப்பவுமே இந்த இரண்டாம் குழுவின் பக்கம் தான். அதனால் முந்திய க்ரூப் நம்மிடம் கொஞ்சம் வாலாட்டும். ஆனால் நமக்கு அவங்க துறைத் தலைவரே தோஸ்த் ஆச்சே .. அதனால் என்னிடம் ரொம்பவும் வாலாட்ட மாட்டார்கள். ஆட்டிய வாலை ஒட்ட நறுக்கிய சில நிகழ்ச்சிகளும் - எல்லாம் academic விஷயங்கள் தான் - நடந்து, நம்ம கொடியை வானளாவ பரவ விட்டிருந்தேன்!

நான் வேலைக்குச் சேர்ந்த அடுத்த ஆண்டில் முருகேசன் என்ற ஒருவன் ஆங்கிலத்துறைக்கு வேலைக்கு வந்தான். இவன் M.A. Economics. ஆங்கிலத்துறையில் tutor ஆகச் சேர்ந்தான். P.U.C.யில் நாங்கள் ஒரே கல்லூரி - St.Xavier's. இவன் வேலைக்குச் சேர்ந்த பின் தான் எங்களுக்கு இது தெரிந்தது. ஆள் படு உயரமாகவும் பருமனாகவும் இருப்பான். நான் அவனுக்குப் பக்கத்தில் இருந்தால் அவன் தோள் வரைதான் குச்சியாய் ஒட்டிக்கொண்டு இருப்பேன். இவன் சின்ன வயசுக்காரன் என்றாலும் உருவத்தால் பெரிய ஆள் போல் இருப்பான். சுத்த நயம் கருப்பு. நெல்லைக்காரன். அவனை உடல், நிறம், ஊர் எல்லாம் வைத்து கல்லூரியில் அவனை ஏறத்தாழ பலரும் ‘அண்ணாச்சி’ என்று அழைத்து வந்தார்கள். இப்போ தொலைக்காட்சியில் அண்ணாச்சின்னு ஒருத்தர் காமடி நிகழ்ச்சி நடத்தி வர்ராரே அவர் மாதிரியே இருப்பான். நம்ம ஒரு வித்தியாசமான ஆளு இல்லையா ... அதனால் நான் மட்டும் அவனை ‘தம்பி’ என்று அழைப்பேன்.

முதலாண்டு வேலை பார்த்தான். இரண்டாம் ஆண்டு நான் சொன்னது மாதிரி மந்திரிச்சி விட்ட கோழியாக அலைந்தான். வேலை நிச்சயமாக ஆகும் வரை அவன் இருந்தது என் அறையில் தான். காலையில் எழுந்து குளித்து விட்டு நெற்றியில் முகப்பவுடரை வைத்து ஒரு கீற்று போட்டுக் கொள்வான்.

 ’இது எதுக்குடா ..?’ என்பேன். அவன் அப்போவே சாமியெல்லாம் கும்பிட மாட்டான்னு தெரியும்.

‘உனக்கு ஒண்ணும் தெரியாதுடா ... நம்ம மூஞ்சிக்கு இந்த மாதிரி திருநீர் வச்சா கெத்தா தெரியும். உன் ரூம்ல திருநீர் இல்ல. அதான் பவுடர்’ என்பான்.

சொன்னது மாதிரியே அந்தக் கீற்று அவனுக்குப் பொருத்தமா இருக்கும். கல்லூரி போகும் முன்னே அவனைப் பார்க்க நிறைய பேர் வருவார்கள். அப்படி வருபவர்கள் எல்லோருமே அந்த ஆண்டு தன் பையனுக்கு எங்கள் கல்லூரியில் இடம் தேடி வருபவர்களாக இருப்பார்கள். அவர்கள் இவன் மேல் அம்புட்டு நம்பிக்கையோடு பேசிவிட்டு, தங்கள் பையனின் விண்ணப்ப விவரங்களைக் கொடுத்து விட்டுச் செல்வார்கள். அவர்கள் முன்னாலேயே அந்தப் பையனின் பெயர் போன்ற குறிப்புகளை இவனும் ஒரு தாளில் எழுதி வைத்துக் கொள்வான். கட்டாயம் பார்த்துக் கொள்கிறேன் என்பான். ஆனால் உண்மையில் அவனுக்கு அப்போது கல்லூரியிலேயே வேலை கிடைத்திருக்காது.

’இதெல்லாம் எதுக்குடா..?’ என்றால், ‘என்ன பண்ணச் சொல்ற... எனக்கு வேலையே இல்லைன்னு அவங்ககிட்ட சொல்லிட்டு இருக்கணுமா ... என்பான்.

அதே போல் அப்பப்போ அந்த லிஸ்டை எடுத்து சில பெயர்களுக்கு முன்னால் டிக் போட்டுக் கொள்வான். அதாவது அவன் அந்தப் பையனைப் பற்றி துறைத்தலைவருக்கு சொல்லி விட்டானாம். அதே போல் யாராவது ‘சார் .. பையனுக்கு இடம் கிடச்சிருச்சி சார்’ என்றால் உடனே அந்தப் பெயரை அடித்துக் கொள்வான்.

அவனுக்கு உடல் பருமனால் கிடைத்த பெருமை அது. ஆனால் ஆளுக அந்தப் பக்கம் நகர்ந்தால் தனக்கு வேலை கிடைக்குமா இல்லையா என்ற சோகத்தில் இருப்பான். இப்படியாக இரு ஆண்டுகள் அங்கு வேலை பார்த்து தெற்கே வள்ளியூர் என்ற ஊரில் இருந்த புதுக்கல்லூரிக்கு lecturer வேலை கிடைத்து சென்றான். போகும் முன் சேர்ந்து ஒருபோட்டோவெல்லாம் எடுத்துக் கொண்டோம். அதற்குப் பிறகு அவனைப் பார்க்கவேயில்லை .....


*

Tuesday, May 28, 2013

656. காணாமல் போன நண்பர்கள் - 18 - மீண்டும் காணாமல் போன நண்பர்கள் தந்த சோகம்









*








 நண்பர்கள் காணாமல் போவது வாழ்க்கையில் இயல்பு தான். ஆனால் காணாமல் போன நண்பர்களைத் தேடிக் கண்டுபிடித்த பின்  அவர்கள் நம்மிடமிருந்து மறுபடியும் வேண்டுமென்றே காணாமல் போவது பெரும் அதிர்ச்சியாகவும், சோகமாகவும் முடிகிறது.


பூண்டி கல்லூரியில் வேலை பார்த்த போது நல்ல நண்பர்களாக இருந்தவர்களில் சிலரின் முகவரி, தொலைபேசி, இணைய முகவரி என்று கொஞ்சம் தேடியலைந்தேன். சில சோகங்கள் தான் பின்னே வந்தன. என்னோடு வாடா .. போடா .. என்று பழகியவன் அக்கல்லூரியின் முதல்வராக இருந்திருக்கிறான். அவனைப் பற்றி ஒரு நண்பரிடம் கேட்டிருந்தேன். அவர் போய் அவனிடம் கேட்ட போது அவனுக்கு என் பெயரே மறந்து போயிருந்ததாகக் கேள்விப்பட்டேன். இன்னொரு நண்பன். என்னோடு தஞ்சையில் அறை நண்பனாக வேறு இருந்தான். நானும் அவனும் அந்தக் காலத்திலேயே - 1966-70 - blog எழுதி வந்திருந்திருக்கிறோம். எங்களுக்குள் அப்படி ஒரு பழக்கம். நான் அப்போது ஏதாவது துண்டுப் பேப்பர்களில் எழுதும் வழக்கம் இருந்தது. இந்த நண்பன் தன் பழக்கத்தை எனக்கும் சொல்லிக் கொடுத்தான். பேப்பரில் எழுதாமல் ஒரு நோட்டில் எழுதும் பழக்கத்தைக் கற்றுக் கொடுத்தான். பாதி உண்மை; பாதி கதை என்று பலவும் இருக்கும். பஸ்ஸில் பார்த்த பெண்கள் முதல் அக்கவுண்டில் சாப்பிடும் டிபன் வரை எல்லாம் எழுதுவதுண்டு. நல்ல பிடித்த சினிமா பார்த்துவிட்டு வந்தால் இரவு நிச்சயமாக ஒரு ’திரைப்படத் திறனாய்வு’ எழுதி விடுவோம்.


இரு மலர்கள் (சிவாஜி, பத்மினி, கே.ஆர். விஜயா) படமும், விவசாயி (எம்.ஜி.ஆர்.) படமும் ஒரே நாளில் எதிர் எதிர் தியேட்டர்களில் போட்டிருந்தார்கள். இரண்டையும் பார்த்தோம். இரு மலர்கள் கடைசி நாளன்று இரண்டாம் முறையாக படம் பார்க்கப் போனோம். கூட்டமேயில்லை. ஆனால் விசவாயு ... சாரி .. விவசாயிக்கு பெரும் கூட்டம். படம் பார்த்து விட்டு வந்து எங்கள் ‘வயித்தெரிச்சலை’ எழுதித் தொலைத்தோம்.


நான் ஒரு நோட்டு எழுதினால் அவன் இரண்டு மூன்று எழுதி விடுவான். ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து வைத்திருந்தோம். காபி குடித்தால் தம்ளரின் விளிம்பு வரை ஊற்றிக் குடிக்க வேண்டும். சரியான விளிம்பு மனிதன்! அதே போல் தம்மடிக்கும் போது புகையை இழுத்தால் கன்னம் அப்படியே டொக்கு வாங்கி விடும். ஆழமான இழுப்பு!


இன்னொரு நண்பன். ரயிலில் கல்லூரி போகும் போது நானும் இவனும் சேர்ந்தால் மற்ற நண்பர்கள் எல்லோரும் கொஞ்சம் பயப்படுவார்கள். அவர்கள் காலை வாருவதில் எங்களுக்கு அப்படி ஒரு அளப்பறிய இன்பம்! நாங்கள் ஒரு கம்பார்ட்மென்டில் ஏறினால் பலர் அந்த வகம்பார்ட்மென்டையே மாற்றும் அளவுக்கு எங்கள் புகழ் ரயிலளவு நீண்டிருந்தது. இதற்காகவே நானும் அவனும் ரயிலில் கடைசியாகத்தான் ஏறுவோம். மதியம் இவனுக்கு சாப்பாடு வந்து விடும். கேரியரில் மேல் தட்டில் ஒரு சின்னக் கிண்ணத்தில் நெய் வரும். நான் விடுதிக்குச் சாப்பிடப் போகும் நேரத்தில் அந்தக் கிண்ணத்தை ஸ்வாகா செய்வது அடிக்கடி நடக்கும்.


நான் கல்லூரி மாறிப் போனபின் இவர்களோடு தொடர்பு இல்லாமல் போயிற்று. பின் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அவர்களின் தொலைபேசி எண்களுக்கு முயற்சித்து அவைகளும் கிடைத்தன. இருவருக்கும் மகிழ்ச்சியோடு தொலை பேசினேன். அதே ]வைப்ஸ்’ - அலைவரிசை - அந்தப் பக்கம் இல்லாதது போல் தோன்றியது. இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டேன். என் தொலைபேசி அழைப்பிற்குப் பின் அவர்களிடமிருந்து ஏதும் அழைப்பு வரவில்லை. சில நாட்கள் கழித்து இருவருக்கும் மறுபடி தொலை பேசினேன். ஒரே வருத்தமாகப் போய்விட்டது. இருவருமே என் தொலைபேசி எண்ணை save செய்து கொள்ளவில்லை. 
இரண்டாம் முறையும் பேசிய பின்னும் அவர்களிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை. கட்டாயமாக இணையத்தில் இருப்பான் என்று நினைத்த நண்பனுக்கு இணைய முகவரி கேட்டு sms அனுப்பினேன். சேற்றில் எறிந்த கல் ...


மூன்றாவதாக இன்னொரு நண்பன். அவன் வேலையில் ஓய்வு பெற்ற பின் மதுரையில் இருப்பதாக அறிந்து ஆவலோடு land line தொலைபேசி எண் கிடைக்க அழைத்தேன். அருகாமையில் தான் இருந்தான். சில நாட்கள் கழித்து மறுபடி அழைத்தேன். அந்த எண்ணில் யாருமில்லையென்ற தகவல் வந்தது.


மூன்று நண்பர்கள். அவர்கள் பக்கமிருந்து எந்தவித ஈடுபாடும் இல்லாதது மிகுந்த வருத்தமாக இருந்தது. வாழ்க்கையின் சுமைகளில் அவர்களுக்கு பழைய நண்பர்களின் உறவு இப்போது தேவையில்லாமல் போயிற்று என்று எடுத்துக் கொண்டேன். என் பழைய தொலைபேசியோடு அவர்கள் எண்களும் காணாமல் போய் விட்டன. இப்போது நான் ஆசைப்பட்டாலும் உடனே தொலைபேச முடியாது என்றானது.


காணாமல் போய் மீண்டும் கிடைத்த நண்பர்கள் இப்போது மறுபடியும் நிஜமாகவே காணாமலேயே போய்விட்டார்கள் ...



*




Monday, April 15, 2013

651. காணாமல் போன நண்பர்கள் -17 - அப்பாவி ஆறுமுகம் போராளியான கதை.






*

அதீதம் இணைய இதழில் வந்த என் கட்டுரையின் மறுபதிப்பு ....


*


பூண்டிக் கல்லூரியில் நான்காண்டுகள் விரைவாக நழுவிச் சென்றன. வித்தியாசமான வாழ்க்கை. பொதுவாகக் கல்லூரிகளில் துறை சார்ந்த நட்பே அதிகமாக இருக்கும். ஆனால் இக்கல்லூரியில் நான் வேலை பார்க்கும்போது - 1966-70 - உறவுகள் வேறுமாதிரியாக மாறியிருக்கும். காலையும் மாலையும் தஞ்சையிலிருந்து தான் பெரும்பாலும் மாணவர்களும், ஆசிரியர்களும் வருவோம். குடிகாடு என்ற ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அரைக் கிலோ மீட்டர் கல்லூரிக்கு நடக்கவேண்டும். சிலர் குடிகாட்டின் கிழக்குத் திசையிலிருந்து வருவார்கள். காலையும் மாலையும் போக்குவரத்து எல்லாமே ரயில் வண்டிகள் மூலம் தான். மாணவர்களுக்கு ரொம்ப வசதி. செயினைப் பிடித்து இழுத்து, ரயிலை ஏதாவது ஒரு காரணம் சொல்லி, பல சமயங்களில் காரணமே இல்லாமல் நிறுத்தி விடுவார்கள். யாராவது ஒரு மாணவன் சுவர் ஏறிக் குதித்து ரயிலைப் பிடிக்க ஓடிவருவதைப் பார்த்த மாணவர் குழாமிற்கு, ஆஹா! இப்படி ஒரு மாணவன் தன் கல்விச் சூழலை ஒரு நாள்கூட இழக்கலாமா?’ என்ற ஆதங்கத்தில் செயினைப் பிடித்து இழுத்து ரயிலை இழுத்து விடுவார்கள். ஆசிரியர்கள் யாரும் அப்ப்டி ஓடி வந்தால் மாணவர்கள் அப்படியெல்லாம் உதவி, ரயிலை நிறுத்த மாட்டார்கள் என்பது எங்களுக்கெல்லாம் ஒரு சோகம்.


இந்த ரயில் போனால் தான் கல்லூரி. இல்லையென்றால் ஆசிரியர்களும், மாணவர்களும் எங்கோ ரயில் பாதையில் நின்று கொண்டிருப்போம். நான் இருக்கும்வரை இந்தச் சூழலே இருந்தது. இது மாணவர்களுக்கு ரொம்ப வசதி. யாருக்கோ ஒருவனுக்கு நம் மெக்கலே கல்வியின் மீது ஏதோ ஒரு கோபம் என்றாலும் ரயில் நின்றுவிடும். ஆசிரியர்களில் பலரும், ‘அடடா .. இன்று என் வகுப்பு போச்சே!”, என்று ஆதங்கப்படுவார்கள். அது உண்மையோ என்னவோ தெரியாது. ஆனாலும் தப்பித் தவறி ஆசிரியனான நானும் என் நண்பர்களும் அது மாதிரி சோகத்தில் எங்களை ஆழ்த்திக் கொண்டதேயில்லை.  நான் அக்கல்லூரியை விட்டு போனபின்,  ஆசிரியர்களுக்கு என்று தனியாக ஒரு பஸ் போக்குவரத்து ஏற்பாடுசெய்து விட்டார்களாம். இப்போது ஆசிரியர்கள் வகுப்பிற்கு வந்து தானே ஆக வேண்டும். இதனால் மாணவர்களுக்கு ரயிலில் செய்யும் பராக்கிரமங்கள் எல்லாம் முடிவுக்கு வந்து விட்டன.



ஆனால் நானிருந்த வேளையில் ரயிலும், வகுப்புகளும் சென்டிமென்டலான ஒரு டச்சோடு தான் இருந்தார்கள். இப்படி ரயிலில் வந்து கொண்டிருப்பதால்  துறை சார்ந்த உறவுகள் இல்லாமல் நட்பு வட்டாரங்களில் ஒன்று சேர்ந்து வருவது வழக்கமாக இருந்தது. பொதுவாக bachelors கூட்டம் தனிக்கூட்டமாக இருக்கும். மத்த ‘பெருசுகள்’ எல்லாம் தனி வட்டங்களில் வருவார்கள். துறைத் தலைவர்களிடமிருந்து சிறுசுகள் விலகியே இருப்பதும் வழக்கம். ஆகவே துறைசார்ந்த உறவுகள் இல்லாமல் நட்பு வட்டங்களே பெரிதான் இடம் வகித்தன. இது அரட்டை அடிக்க ஏதுவான வசதியாக இருக்கும். பொதுவாக முதலில் உள்ள ரயில் வண்டிகளில் மாணவர்களின் ராஜாங்கம். அதன்பின் ஓரிரு வண்டிகளில் இளம் ஆசிரியர்கள். கடைசி வண்டியில் பெருசுகள். இப்படியாகத்தான் இருக்கும் ரயில் ராஜாங்கம்.



நான் பார்த்த வரை எங்கள் இளைஞர் கூட்டத்தில் அப்போதெல்லாம் நிறைய பேர் சரியான ’காசு துரத்திகளாக’ இருப்பதைப் பார்த்துள்ளேன். பலரும் இளங்கலை முடித்து சித்தாள் வேலையில் இருப்பவர்கள். ஏறத்தாழ ஒரு தற்காலிக வேலை. அவ்வளவே. இதனால் பலருக்கு ஆசிரியர் தொழில் ஒரு சைட் கிக் தான். கையில் வேறு சில தொழில்களைச் செய்து கொண்டு கல்லூரி வேலையையும் செய்து வந்தனர். பட்டுச் சேலை விற்பவர்கள் நிறைய இருந்ததாக நினைவு. இவர்கள் எல்லோருமே கொஞ்சம் சீரியசான ஆட்கள். இவர்களுக்கு எங்களைப் போன்ற வேறு சிலரைக் கண்டால் கொஞ்சம் அரட்டிதான். யார் காலையாவது வாருவது, வேலை பற்றி சீரியசாகப் பேசுவது என்றிருக்கும் எங்களை அவர்கள் ஒதுக்க முனைவதும், நாங்கள் வேண்டுமென்றே அவர்களைக் கலாய்ப்பதுவும் தொடர் நிகழ்ச்சி. அவர்களைக் கலாய்ப்பது எப்படி அவ்வளவு எளிதாக இருந்தது; எப்படி அவர்கள் அப்படி ‘டமால்’ என்று எங்களிடம் விழுந்து தொலைத்தார்கள் என்பது எனக்கு இன்று வரை பெரிய ஆச்சரியம் தான்.



போன பதிவில் மதிய உணவு நேரத்தைப் பற்றியெழுதியிருந்தேன். அந்த நேரத்தில் பல துறை இளைஞர்களும் சாப்பாட்டிற்காக விடுதி வந்து. அதன் பின் இந்த அறைக்குச் ‘சிரம பரிகாரம்’ - அப்புறம் எப்படி தம் அடிக்கிறது? - செய்ய வந்து விடுவோம். ஏற்கெனவே சொன்னது போல். மதியம் சினிமா பாட்டு வைத்துக் கேட்பது வழக்கம், அதோடு சொந்தக் கதை சோகக் கதைன்னு ஒருத்தர் ஒருத்தரை கலாட்டா செய்து கொண்டிருப்போம். நான் சேர்ந்த அடுத்த ஆண்டு ஆங்கிலத் துறைக்கு ஒரு புதிய நண்பர் வந்தார். மிக மிக நல்ல மனிதர். அப்போது தான் இளங்கலை முடித்து விட்டு ஆங்கிலத்துறையில் சித்தாளாக - ட்யூட்டராக - வந்து சேர்ந்திருந்தார். ஆறுமுகம் என்று பெயர். மதுரைக்காரர்தான். அதுவும் தியாகராசர் கல்லுரியின் பக்கத்திலுள்ள அனுப்பானடிதான் சொந்த இடம். அட நம்ம ஊர் மதுரைக்காரரே என்று நினைத்து நான் அவரிடம் பேச ஆரம்பித்தால் மனிதர் பயந்து ஒதுங்குவார். நமக்கு அம்புட்டு நல்ல பெயர் அப்போதே இருந்திருக்கு!


ஆறுமுகம் ரொம்ப நல்ல மனிதர் என்று சொன்னேனில்லையா? அதனாலேயே அவரை எல்லோரும் ரொம்பவே காலை வாருவார்கள். அவரும் பாவம் போல சிரித்து மழுப்புவார். ஆனால அவர் மழுப்ப முடியாமல் ஒரு விஷயத்தில் எல்லோரிடமும் மாட்டிக் கொள்வார். செக்ஸ் என்றாலே ஆறுமுகத்திற்கு அலர்ஜி. பத்தாதா நம்ம மக்களுக்கு. எதையாவது சொல்லி அவரைக் கஷ்டப்படுத்துவார்கள். எனக்கு எப்போதுமே நாம் ஏதாவது சொல்லி, அதைத் திருப்பிச் சொல்லும் அளவுள்ள மக்களை மட்டும் கலாய்ப்பதில் மட்டும் தான் ஆர்வம். அடிக்கிற ஆளும் கொஞ்சமாவது நம்மைத் திருப்பி தாக்கினால் தானே அந்த விளையாட்டுச் சண்டை நன்றாக இருக்கும்! ஆறுமுகம் அப்படிப்பட்ட ஆளில்லை. ஒரு மாதிரி பாவம் போல் சிரித்து மழுப்புவார். அதனால் அவரைக் கலாய்ப்பதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. மதியம் அவர் வந்ததும் அவரை ஏதாவது சொல்லி கலாட்டா பண்ணுவார்கள்.


இதில் வசமாக ஒரு விஷயத்தில் ஆறுமுகம் மாட்டிக் கொண்டார். அவருக்கு ஒரு சினிமாப்பாட்டு - அப்போதைய ஹிட் பாட்டு அது - மிகவும் அலர்ஜியாகி விட்டது. ‘இவ்வளவு தான் உலகம் இவ்வளவு தான்’ என்ற பாட்டு அது. அதற்கு அப்போதைய செக்ஸ் நடிகை ஒருவர் - பெயர் நினைவில் இல்லை - ஒருவர் இதற்கு ‘அபிநயம்’ பிடிப்பார். அட .. இரட்டை அர்த்தம் உள்ள பாடல் என்று வைத்துக் கொள்வோமே! ஒரு பக்கம் பயங்கர தத்துவம்; இன்னொரு பக்கம் நிறைய செக்ஸ். இந்தப் பாட்டைப் போட்டதும் ஆறுமுகம் காதை இறுகப் பொத்திக் கொள்வார். நண்பர்கள் பாட்டை நிறுத்தி விடுவார்கள். ஆறுமுகம் கையை எடுத்ததும் மறுபடியும் அதே பாட்டு தாலாட்டும். மறுபடி ஆறுமுகம் அதே வேலையைத் தொடர்வார். இந்த விளையாட்டு அனேகமாக ஆறுமுகம் அறைக்கு வரும் நாளெல்லாம் நடக்கும். அவர் அவ்வளவு எளிதாக அந்த அறையையும் தாண்டி விட முடியாதபடி நண்பர்கள் அவரை அணைபோட்டு அறைக்கு கொண்டு வந்து விடுவார்கள்!



எனக்குப் பாவமாக இருக்கும். ஆனால் ஒன்றும் சொல்ல முடியாது. இந்தச் சமயத்தில் ஆறுமுகம் தங்கியிருந்த அறையைக் காலி செய்ய வேண்டியதிருந்தது. உடனே இன்னொரு அறை வேண்டும் அவருக்கு. தயங்கியபடி என்னிடம் வந்தார். ஒரு அவசர உதவியென்றார். கொஞ்ச நாளைக்கு மட்டும் என்றார். நான் சரியென்றேன். அறை நண்பரானார். அவருக்கு பல நல்ல கொள்கைகள். அதில் ஒன்று சினிமாவிற்கு இரவு ஆட்டத்திற்குப் போகக் கூடாது எனப்து. எனக்கு அது தான் வசதி. சனிக்கிழமை ராத்திரி படம் போய்ட்டு வந்து ஞாயிறு எம்புட்டு தூங்க முடியுமோ அம்புட்டு தூங்கலாமே .. அதனால் என் வசதி இரவு சினிமா தான். ஆறுமுகத்தின் armour-ல் முதல் ‘கட்டுடைப்பு’ இது தான். ’ஆமாங்க .. இந்த சிஸ்டம் நல்லா இருக்கு’ என்பது ஆறுமுகத்திடமிருந்து எனக்கு வந்த முதல் ஆறுதலான பாராட்டு இது!


ஆனால் இதைவிட எனக்கு ஆறுமுகம் மதியம் விடுதியறையில் படும்பாடு தான் நினைவிலேயே இருந்தது. நாலைந்து நாள் விடுமுறை வேறு வந்தது. அந்த சமயத்தில் அவரை மெல்ல உருவேற்றினேன்.

”ஏன்’யா உங்களுக்கு அந்தப் பாட்டு பிடிக்கலை?”

“அது கெட்ட விஷயம் சொல்லுது. அதான்”

“வெறும் பாட்டாக அதை ஏன் கேட்கக் கூடாது?”

“அசிங்கமா அந்தப் பாட்டுக்கு அந்தப் பொம்பளை ஆடுதுல்லா?”

”அதை ஏன் நீங்க நினைக்கிறீங்க. பாட்டை மட்டும் கேளுங்க. நல்ல அர்த்தம் அதில் இருக்குல்ல?”

”அதை நினைக்காம எப்படி பாட்டைக் கேட்கிறது?”

நான் ரெண்டு மூணு பாட்டை எடுத்து உட்டேன். இப்போ எல்லாம் உங்களுக்கு நடனமா நினைவுக்கு வருது? நீங்க நினைச்சா அது வந்து தொலையும். இல்லாட்டி பாட்டு மட்டும் தானே கேக்கும்” என்றேன். ஆறுமுகத்தால ஒப்புக் கொள்ள முடியவில்லை.

அடுத்த அஸ்திரத்தை எடுத்து விட்டேன். ”ஏன் ஆறுமுகம்! உங்களை அந்தப் பாட்டை வைத்துக் கேலி செய்வது பிடிக்குதா?”

“என்னங்க .. இப்படிக் கேட்டுட்டீங்க .. இல்லவே இல்லைங்க’.

”அப்போ அதை நிப்பாட்டணுமா வேண்டாமா?” என்று கேட்டேன்.

“கட்டாயமா நிப்பாட்டணுங்க”.

“நான் ஒண்ணு சொல்றேன். கேளுங்க. பய புள்ளைக உங்களைக் கேலி பண்றதையே உட்ருவாங்க” அப்டின்னேன்.

”சொல்லுங்க. செஞ்சுருவோம்” அப்டின்னார் தைரியமாக.

“கொஞ்சம் உங்களுக்குக் கஷ்டம் தான். சிரமப்பட்டு ஒரு நாள் ஒரு நாடகம் போட்டா சரியாயிரும்” என்றேன்.

“சொல்லுங்க ...”

“அடுத்த வாரம் காலேஜ் போறம்ல. அன்னைக்கு மதியம் அந்த அறைக்குப் போனதும் யாரையாவது பாத்து ..’அந்தப் பாட்டை போடுங்க’ அப்டின்னு காஷுவலாகச் சொல்லுங்க. பாட்டைப் போடுவாங்க. ரசிக்கிறது மாதிரி தலையை ஆட்டிக்கிட்டு நீங்க என்னத்தையாவது நினச்சுக்குங்க. ஆனா .. தலையை நல்லா ஆட்டணும்” என்றேன்.

ஒரு வழியா அறையில் உக்காந்து நிறைய “போதித்து” அவரை என் வழிக்குக் கொண்டு வந்தேன்.

அந்தத் திருநாளும் வந்தது. மதியச்சாப்பாடு முடிந்ததும் நான் அவருக்கு முன்னாலே போய் அந்த அறைக்குப் போய் உட்கார்ந்து கொண்டு தம் அடித்துக் கொண்டு இருந்தேன். நம்ம ஆறுமுகம் வந்தார். கையில் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டார். பாட்டு போட்டிக்கிட்டு இருந்த நண்பரிடம், ‘என்னப்பா இந்தப் பாட்டு ... நம்ம பாட்டைப் போடுங்க’ப்பா” என்றார். முகத்திலோ அப்படி ஒரு புன்னகை. ஆனால் ஆறுமுகம் சொன்னதைக் கேட்டதும் உட்கார்ந்திருந்த நண்பர்களுக்கெல்லாம் ஒரே ஷாக்! சரின்னு பாட்டையும் போட்டாங்க. காதைப் பொத்திக்கொள்வதற்குப் பதில் ஆறுமுகம் தலையை ஆட்டிக் கொண்டே புத்தகத்தில் கண்களை மேய விட்டார். மக்களுக்கெல்லாம் ஒரே அதிர்ச்சி. என்னப்பா ஆச்சு ஆறுமுகத்துக்கு என்று ஆச்சரியம். அதைக் கேள்வியாகவும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆறுமுகம் இதையெல்லாம் கண்டுக்கவேயில்லை. நண்பர்களிடமிருந்து திடீரென்று ஒரு குரல்: ‘நினச்சேன் .. இந்தப் பயல் ரூம் மேட் ஆயிட்டாரில்ல ஆறுமுகம். அதுதான் இதற்கெல்லாம் காரணம்’. குரல் கொடுத்தவனைப் பார்த்தேன். அவன் என்னைக் கையைக் காட்டிக் கொண்டிருந்தான். ‘அட போப்பா ... நான் ஒண்ணும் சொல்லலையே’ன்னு அப்பாவியா மூஞ்சை வச்சுக்க முயற்சி செஞ்சி சொன்னேன்.

எப்படியோ ஆறுமுகத்தைக் கலாய்ச்ச ஆளுகளுக்கு இப்போ வேலை இல்லாம் போயிரிச்சி!

நான் அந்தக் கல்லூரியை விட்ட பிறகு, இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆறுமுகம் என் மதுரை வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்தார். அப்போது அவர் ஆங்கிலத்தில் முதுக்லை முடித்து திருச்சி நேஷனல் கல்லூரியில் பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்திருந்தார். பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதற்குப் பின் ஆறுமுகத்தைப் பற்றி இன்னொரு நண்பர் சொன்னது மிக்க ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.



ஆறுமுகம் இப்போதெல்லாம் ஆசிரியர் கழகத்தில் மிகவும் முக்கியமான ஆளாக இருக்கிறார் என்றும், ஆசிரியர் போராட்டங்களில் தீவிரமாக முன்னால் நிற்கிறார் என்ற தகவலே அது. ஆறுமுகம் பெரும் போராளி என்பது எனக்கு மிகவும் இனிப்பாகவும்,  திருப்தியாகவும் இருந்தது.










*

Monday, March 25, 2013

647. காணாமல் போன நண்பர்கள் - 16 - பயந்தான்கொள்ளி பிரபாகரன்







*  
தீதம் இணைய இதழில் வெளிவந்த என் கட்டுரையின் மறுபதிப்பு .....

1966 - 70-ம் ஆண்டுகளில் ....


முதுகலை முடிச்சாச்சி. ஒரு விஷயத்தைப் பல தடவை நானும் சொல்லியாச்சி .. அது என்னன்னா, படிச்சி முடிச்சிட்டோமே அடுத்த என்னென்ன வழி வகைகள் வாழ்க்கையில் இருக்கு; எந்த வழியில் போனால் நல்லது; இல்லை, நமக்குன்னு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தேடல் ... ஆசை இருக்கிறதா? வேறு போட்டித் தேர்வுகள் எழுத முடியுமா? ... இந்த மாதிரி சிந்தனைகள் ஏதுமில்லாமல் மொட்டையாக குடும்பத் தொழிலே ஆசிரியர் தொழில் என்பது போல் அது ஒன்றை மட்டும் மனதில் இருத்திக் கொண்டு கல்லூரி ஆசிரியர் தொழிலை மட்டுமே பற்றி யோசித்துக் கொண்டு, அந்த வேலையை மட்டும் தேடிக்கொண்டு இருந்து தொலைத்தேன். மற்ற வழிகள், முயற்சிகள் பற்றி எனக்கும் ஏதும் தெரியவில்லை. ஆசிரியராக இருந்தும் என் தந்தைக்கும் அதில் என்னை வழிப்படுத்தத் தெரியவில்லை. இதுவரை சொல்லிக்கொடுத்த ஆசிரியப் பெருமக்களில் யாரேனும் ஒருவர்கூட வாழ்க்கையின் பல பக்கங்களை எடுத்துச் சொல்லி வழிப்படுத்தவேயில்லை. இந்த சோகம் என் வாழ்நாள் முழுவதும் எனக்கிருந்தது. என் மாணவர்கள் என்னைக் குறை சொல்லாமலிருக்க சில முயற்சிகளை என் தொழிலில் எடுத்து வந்திருக்கிறேன்.

 எப்படியும் மதுரையில் வேலை வேண்டாமென ஒரு ஆசை. குறைந்தது ஒரு 100 மைல் தாண்டி வேலை கிடைக்க வேண்டுமென நினைத்தேன். அதே போல் தஞ்சையில் ஒரு காலியிடம் என்றறிந்து விரைந்தேன். மிக நல்ல துறைத் தலைவர். பார்த்ததுமே வந்திருங்க துறைக்கு என்றார். கல்லூரி முதல்வரிடம் போகச் சொன்னார். அவர் பெயர் பேராசிரியர் முருகன் என்று நினைக்கிறேன். அவர் ஒரு தமிழ்ப்பேராசிரியர். என் மதிப்பெண் பட்டியல்களைக் கொடுத்தேன். முதலில் என் இளங்கலைப் பட்டியலைப் பார்த்தார். தமிழில் முதல் வகுப்பு என்பதைப் பார்த்ததும் வேறு மதிப்பெண்களையே பார்க்கவில்லை. அவரும் சரியென்று சொல்லிவிட்டார். இருந்தும் இன்னொரு படியும் இருந்தது. வீரைய்யா வாண்டையார் என்பவர் தான் கல்லூரியின் தாளாளர்; உரிமையாளர். கல்லூரியிலிருந்து சிறிது தொலைவில் அவர் வீடு. அவரைப் பார்த்து வர ஒரு துணையோடு என்னை அனுப்பினார்கள். அதற்கு முன் விலங்கியல் பேராசிரியர் அவரது ‘டை’ ஒன்றைக் கொடுத்து கட்டிக்கொண்டு போகச் சொன்னார். அன்றுதான் பழைய ஜமீன் தோரணைகளைப் பார்த்தேன். தாளாளரைப் பார்க்கப் போனால் .. அங்கே பெரும் அமைதி. யாரும் பேசாமல் சைகைகளினாலேயே அதிகம் பேசுவதாகப் பட்ட்து. அவருக்காக்க் காத்திருந்து அவரைப் பார்க்கப் போனேன். சீரியஸாகச் சில கேள்விகள். பதில் சொன்னேன். மீண்டும் கல்லூரி. துறை தலைமைப் பேராசிரியர் எனக்கு வேலை கிடைத்து விட்டதாகக் கூறினார். அப்பாடா ... ஆனால் only as demonstrator. இந்த வருடத்திற்கு மட்டும் என்றார்கள். ஆனால் இந்தக் கதை பல ஆண்டுகள் தொடர்ந்தன என்பது ஒரு தனிக் கவலைப் படலம். ஆனால் அன்று அதைப் பற்றிக் கவலைப்படக்கூட எனக்குத் தெரியவில்லையோ??!!


வேலைக்குச் சேர்ந்து ஓரிரு நாட்கள். மதியச் சாப்பாடு அங்குள்ள மாணவர் விடுதியில். முதல் நாள் துறை நண்பர்கள் கூட்டிச் சென்றார்கள். சாப்பிட்டு முடிந்த்தும் விடுதியின் மேற்பார்வையாளர்கள் அறைக்குச் சென்றோம். பெரிய அறை. மூன்று கட்டில்கள். மூன்று மேற்பார்வையாளர்கள் என்றார்கள். அதில் எங்கள் துறையின் ஜகச்சந்திரன் என்பவனும் ஒருவன். அவன்தான் என்னை அவன் அறைக்குக் கூட்டிச் சென்றான். அந்த அறையில் சினிமா பாடல்கள் ஒலிபரப்ப ரிக்கார்ட் பிளேயர், அம்ப்ளிபயர் எல்லாம் இருக்கும். . அப்போவெல்லாம எல்லாம் அகலமான ரிக்கார்டுகள். மாலையில் சிறிது நேரம் பாடல்கள் போடுவார்கள். காலையும் மாலையும் ஆங்கிலச் செய்திகள் ரேடியோவிலிருந்து போட்டு விடுவார்கள். யார் கேட்பாளர்களோ ... யாருக்குப் புரியுமோ!? அதைப் போட்டால் விடுதியில் இரு இடங்களில் உள்ள ஸ்பீக்கர்களில் அலரும். பத்துப் பதினைந்து ரிக்கார்டுகள் இருக்கும். ஆனால் மதியம் உணவு வேளையில் பாட்டுகளைப் போட்டு அந்த அறைக்குள் போட்டுக் கொள்ளலாம்.

ஒரு நாள் மதியம் சாப்பிடத் தனியாக விடுதி நோக்கி சென்று கொண்டிருந்தேன். பின்னாலில் இருந்து ஒரு அழைப்பு. M.A. Economics முடித்து விட்டு ஆங்கிலத் துறையில் சித்தாள் வேலை பார்ப்பது அப்போதெல்லாம் ஒரு வழக்கம். அதாவது ஆங்கிலம் எம்.ஏ. முடித்தால் சட்டென்று அப்போது ஆங்கிலத்துறையில் வேலை கிடைக்கும். எக்கச் சக்க டிமாண்ட். ஆனால் M.A. Economics முடித்தால் அவ்வளவு எளிதில் வேலை கிடைக்காது. அதனால் ஆங்கிலத்துறையில் சித்தாள் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். ஆஹா.. சித்தாள் வேலைன்னா என்னன்னு சொல்லவில்லையே. P.G. முடித்திருந்தாலும் lecturer வேலை கிடைக்காத்தால் அறிவியல் துறைகளில் demonstrator வேலைக்கோ, மொழித் துறைகளில் tutor வேலையோ கிடைக்கும். இவர்கள் எல்லோரும் lecturer வேலைக்குத் தகுதி படைத்திருந்தாலும், அந்த வேலை கிடைக்காததால் tutor அல்லது demonstrator வேலைக்குச் சேர்ந்திருப்போம். ஆனால் துறைகளில் lecturer ஆக இருப்பவர்கள் இவர்களைக் கீழ்த் தரத்தில் வைத்து நடத்துவார்கள். அவர்களெல்லாம் கொத்தனார்கள் என்றால், tutor, demonstrator எல்லோரும் சித்தாள்களாக நடத்த்ப்படும் பரிதாபம் தொடர்ந்து நடக்கும். நானும் lecturer பதவிக்கு வந்திருந்தாலும் அப்போது காலியாக இருந்த சித்தாள் வேலையில் தான் சேர்ந்தேன்.

மீண்டும் விட்ட இடத்திற்கு வருவோமா? பிரபாகரன் என்று ஒருவன். ஒல்லியாக, ஜாலியாக இருக்கும் ஒருவன். அன்றுதான் அவனை முதல் முறையாகப் பார்க்கிறேன். அவன் என்னைப் பற்றி ஏற்கெனவே தெரிந்து வைத்துள்ளான். ’எங்கே போகிறீர்கள்?’ என்று ஆங்கிலத்தில் கேட்டான். ஆரம்பிக்கும்போதெல்லாம் ஆங்கிலம் தான்! பதில் சொன்னேன். பின் எங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டோம். தான் விடுதியில் மேற்பார்வையாளராகவும் இருப்பதாகக் கூறினான். ஓரிரு நிமிடங்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு கேள்வி கேட்டான். பயங்கர ‘A’ கேள்வி. யாரும் பழகிய நாலைந்து நிமிடங்களில் கேட்கக்கூடாத கேள்வி என்று வைத்துக் கொள்வோமே! அப்படி ஒரு கேள்வி. ஒரு சில வினாடிகள் கழித்து அவன் கேள்விக்கு straight forward பதில் ஒன்றை சட்டென்று கொடுத்தேன். என் பதில் அவன் கேள்வியை விட ரொம்ப வெளிப்படை. பயல் ஆடி விட்டான். ’தலைவா .. நீ எங்கேயோ போய்ட்ட...’ என்று தமிழில் ஒற்றைப்படை மரியாதையுடன் பேச ஆரம்பித்தான். பயல் வழக்கமாக புதிதாக வரும் என்னை மாதிரி இளம் வயசு ஆளுகட்ட பழக ஆரம்பித்ததும் இந்தக் கேள்வியைக் கேட்பானாம். வழக்கமாக அவர்கள் அனைவரும் வெருண்டு ஒதுங்கி விடுவார்களாம். அவனைப் பார்த்தாலே பயத்துடன் ஒதுங்கி விடுவார்களாம். என்னைக் கேட்ட்தும் நான் பட்டென்று பதில் சொன்னது அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்ட்து என்றான்.same vibes ...!

அதன் பின் நல்ல நட்பு. அக்கல்லூரியில் அப்போது இருந்து வந்த வழக்கம் நண்பர்கள் ஒரு டீம் போட்டுக்கிட்டு மத்தவங்களைச் சதாய்க்கிறது. இதில் பயங்கர தீவிரவாதி இவன். அதோடு 1965-ல் தமிழ்நாட்டில் இந்திப் போராட்டம் தீவிரமாக மாணவர்கள் மத்தியில் நடந்தது. அதில் மதுரையில் கொஞ்சம் அதிகமாகவே நடந்தது. ஜீப்பெல்லாம் எரிச்சோம்ல ... அதிலும் எங்கள் தியாகராசர் கல்லூரியின் மாணவர்களான காமராசர், காளிமுத்து என்ற இருவரும் தான் இந்தியச் சட்ட்த்தை எறித்து, கைதாகி ... பின்னாளில் அதனாலேயே பெரும் இடங்களுக்கு வந்தார்கள். முன்னவர் ஒரு கவிஞராகவும், அடுத்தவர் அமைச்சர், சட்டசபைத் தலைவர் என்றும் ‘முன்னேறி’ விட்டார்கள். அதனால் நான் சேர்ந்த அக்கல்லூரியில் மதுரைக்காரர்களுக்கு ஒரு ‘தனி இடம்’ – அதைப் பயம் என்றும் சொல்லலாம் - உண்டு; அதிலும் நான் தியாகராசர் கல்லூரி மாணவனா .. எனக்கு இரட்டை கிரீடம் சூட்டி விட்டது போலாயிற்று.

இந்தப் பின்னணியில் பிரபாகரன் என்னிடம் ரொம்பவே ஒட்டி விட்டான். ஆனால் பின்னால் தான் தெரிந்தது இந்தப் பயல் வாய்ப்பேச்சில் வீரன். ஆனால் சரியான பயந்த பயல் என்று. என்னடாவென்றால் அவனுக்குத் திருமணம் சொந்தத்திலேயே முடிந்திருந்தது. பெண் படிப்பை முடிக்கவும், இவன் சித்தாள் வேலையிலிருந்து கொத்தனார் வேலைக்கு உயரவும் பெற்றோர்கள் முடிவு செய்து இருவரையும் பிரித்தே வைத்திருந்தனர். பயலுக்கு சாந்தி முகூர்த்தம்னா என்னன்னு தெரியாம உக்காந்துகிட்டிருந்தான். அவன்  விடுமுறைக்கு வீடு போகும் முன் நாங்கள் அவனை கொஞ்சம் திரியேத்தி அனுப்புவோம். பெரும் வெற்றி முழக்கத்தோடு திரும்பி வருவான். என்னடான்னு கேட்டால், ஒரு தடவை ‘எப்படி படிக்கிற?’ அப்டின்னு கேள்வி கேட்டு, அது என்னமோ பெரிய இமய மலையைத் தொட்ட மகிழ்ச்சியோடு சொல்வான். அடுத்த தடவை கைவிரல்களை லேசாகத் தொட்டுட்டேன் என்பான். பாவப்பட்டபயல் தான்.

அவன் விடைத்தாள் திருத்துவதும் வேடிக்கையாக இருக்கும். அங்கங்கே விடைத்தாளிலோ, கட்டுரை நோட்டிலோ ஒரு பெரிய வட்டம் போடுவான். என்னடான்னு கேட்டா .. இந்தப் பெரிய ரவுண்டுக்குள் எப்படியும் ஒரு தப்பு இருக்கும்’டா... கேட்டா அதைக் காண்பிப்பேன். ஆனாலும் ஒரு பயலும் எங்கிட்ட வரமாட்டான்’டா என்பான்.

மதியம் சாப்பாடு முடித்து அவர்கள் அறைக்குச் செல்லும் மக்களை ஏதாவது கலாட்டா பண்ணுவது அல்வா சாப்பிடுறது மாதிரி. இந்த மாதிரி வேடிக்கை வேலைகளுக்காகவே என்னை மாதிரி ஆட்களோடு ஜோடி சேர்ந்துக்குவான். அவனோடு இருந்தால் நேரம் போறதே தெரியாத மாதிரி அரட்டை அடிப்பான். ஆனாலும் clean guy. அடுத்த இரண்டு வருடம் கழித்து கொத்தனார் வேலையும் மனைவியும் அவனுக்குக் கிடைத்தார்கள்!!



*


Friday, March 15, 2013

643. காணாமல் போன நண்பர்கள் - 15 - அவனுக்கென்னப்பா ...





*

அதீதம் இணையப் பத்திரிகையில் வந்த பதிவின் மீள் பதிவு: 



 அது என்னமோ .. வாத்தியார் பிள்ளை மக்கு என்பார்களே .. என் விஷயத்தில் ரொம்ப சரி. இளங்கலை முடிந்தது. அடுத்து என்னன்னு ஏதாவது யோசிக்கணுமே. ஒண்ணும் கிடையாது. புதுசா வந்த மருத்துவக் கல்லூரிக்கு ஒரு சின்ன முட்டு முட்டி கிடைக்காம போச்சா... அதற்கு முந்தியே நினைத்தது மாதிரி பிடிக்காமல் படித்து முடித்த விலங்கியலை முதுகலையில் தொடர்ந்தாச்சு. அடுத்து வேற ஏதாவது செய்யலாமா என்பது மாதிரியான சிந்தனைகள் சுத்தமாக இல்லை. ஏதோ யாரோ கோடு போட்டுக் கொடுத்து அந்தக் கோட்டிலேயே நடந்து போனது மாதிரி போயாச்சு. மாற்று முனைப்பு என்பதே இல்லாத வாழ்க்கை!

முதுகலை சேர்ந்தாச்சு. முதுகலைப் பேராசிரியர் எங்களுக்கு இளங்கலையில் வகுப்பெடுக்கவில்லை. அதனால் அவர் மட்டும் தெரியாது. இளங்கலையிலிருந்து நான் மட்டுமே முதுகலை வகுப்பில் சேர்ந்திருந்தேன். ஆக நான் மட்டும் ஆசிரியர்களுக்குத் தெரிந்த ஒரே மாணவன். எல்லோரும் இளங்கலையில் என்னிடம் அன்போடு இருந்த ஆசிரியர்களே. முதுகலைப் பேராசிரியரிடம் இரண்டு மூன்று முறை மாட்டிக் கொண்டேன். படிக்கட்டுக்கு கீழே முதுகலை மாணவர்கள் தம்மடிக்கிற இடம். அதில் ஒரு முறை வசதியாக மாட்டிக் கொண்டேன். வகுப்பு மாணவிகளிடம் சண்டை போட்டு, அவர்கள் இல்லாத நேரம் பார்த்து, அவர்கள் உட்கார்கிற பெஞ்சு மேசைகளில் என் அம்பாசிடர் ஷூவை நன்றாக அழுக்காக்கி அவர்கள் உட்காரும் மேசை மேல் தடம் பதிய நடந்து கொண்டிருக்கும் போது தானா அவர் எங்கள் வகுப்பைக் கடக்க வேண்டும். இப்படியாக அவரிடம் மாட்டிக் கெட்ட பெயர் வாங்கி, அவரும் எல்லோரிடமும் என்னைப் பற்றி புகார் கூறியிருந்தார். இரண்டாம் ஆண்டுதான் அவர் எங்களுக்கு வகுப்பெடுக்க வருவார். அதற்குள் முதலாண்டுத் தேர்வின் மதிப்பெண்களை வைத்து என்னிடம் பயங்கர பிரியமாகி விட்டார். அதன் பின் அவரது ஏகோபித்த செல்ல மாணவன் ஆனேன்.

We, the seniors with our Juniors - 1965-66


இது ஆசிரியர்கள் பாகம். எங்கள் மாணவர் பாகம் சொல்லணும்னு தான் ஆரம்பிச்சு எங்கேயோ போய்ட்டேன். எங்கள் வகுப்பில் 15 மாணவர்கள். எட்டு பசங்க .. ஏழு பொண்ணுங்க. எட்டு பசங்கன்னு சொல்லக்கூடாது. ஏன்னா எங்க வகுப்பில் ஒரு அண்ணன், அவருக்கு கல்யாணம் ஆகி பையனும் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்திருந்தான். அவரும் சில ஆண்டுகள் வேலை பார்த்து இங்கே மீண்டும் படிக்க வந்திருந்தார். எட்டு பசங்களில் நாலு நாலு பேரா கொஞ்ச நாளிலேயே பிரிஞ்சிட்டோம். எல்லாரும் பேசிக்கொள்வோம். ஆனா அந்நியோன்யம் எங்க நாலு பேரு .. அவங்க நாலு பேரு என்றானது. எஙக குரூப்ல ஒருத்தன் நாகர்கோவில்; இன்னொருவன் நாகர்கோவில் பக்கமிருந்து வந்த மலையாளி. ஆனாலும் தமிழ் பேசுவான். இந்த ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சா பொண்ணுக எங்களைப் பாவமா பார்ப்பாங்க. ஏன்னா அவங்க ரெண்டு பேரும் பேசுற தமிழ் இந்த மக்களுக்குக் கொஞ்சம் கூட புரியாது. நாளான பிறகு கொஞ்சம் மாறியது.’சினிமாய்க்கி போயி சாடி, சவட்டி டிக்கெட் எடுத்தோம்’னு நாகர்கோவில்கார கண்ணன் பேசினது அவங்களுக்குப் புரிய ரொம்ப நாளாச்சு.இவனும், நானும் முதலிலிருந்தே ஒட்டிக்கிட்டோம். இந்த நண்பன் காணாமல் போகவில்லை. படித்து முடித்த பிறகு அவ்வப்போது என்று சில முறை இவனைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அடுத்த நண்பனின் நட்பு முதுகலையோடு நின்று போனது. படித்த பின் இவனைப் பார்க்கவே இல்லை. அவன் நம்ம மலையாளிப் பயல் - மணிகொண்டான் தம்பி. Manikondan Thampi என்றுதான் எழுதுவான்.


பொண்ணுகளோடு படிக்கிறது நிறைய பேருக்கு இதான் முதல் தடவை. அதுனால கொஞ்ச நாள் பலருக்கும் ஒரே ஜிவ்வு! அதன் பின் அவர்களோடு ஒட்டியும் ஒட்டாமலும் ஒரே பிரச்சனைகள். அப்போ தம்பிக்கு - முதலிலிருந்தே co-ed படிச்சவனாம் - எங்களைப் பார்த்தால் ஒரே வேடிக்கையாக இருக்கும். அவன் தான் பெண்களோடு சாதாரணமாகப் பழகணும்னு ட்யூஷன் எடுத்தான். பெண்களுக்கும் சொல்லிக் கொடுத்தான். அவன் முதலில் பெண்களோடு சாதாரணமாகப் பேசுவதே எங்களில் பலருக்கு பயமா, ஆச்சரியமா இருக்கும். தல எப்பவுமே ஒய்ட் & ஒய்ட் தான்.




 தம்பி ஒழுங்காக மலையாள மனோரமா வாராந்தரி வாங்கிடுவான். ஒரு நாள் ஒரு மனோரமாவையும், குமுதத்தையும் எடுத்து வைத்தான். அட்டை டூ அட்டை விமர்சனம் செய்தான். வாராந்தரியில் உள்ளூர், வெளியூர் அரசியல், அறிவியல் அது இதுன்னு இருந்தது. நம்ம ஊர் நூலில் கொஞ்சூண்டு லோக்கல் அரசியல், அடுத்து அனைத்தும் சினிமா என்றிருந்தது. ’ஏண்டா உங்க ஊர் பத்திரிகைகள் இவ்வளவு கேவலமா இருக்கு? எங்க ஊர் இதழில் எம்புட்டு விஷயம் இருக்கு?’ அப்டின்னான். அன்றும் அந்தக் கேள்விக்குப் பதில் இல்லை; இன்றும் இல்லை.




வகுப்பில் நான், இவன், கண்ணன், வரதன் நால்வரும் ஒரு செட். ஆனாலும் வரதன் எங்களுக்கு அண்ணனாகி கொஞ்சம் விலகியிருந்தார்.மீதி நாங்க மூணு பேரும் ஒண்ணா சுத்துவோம்.
படிப்பிலும் நல்ல பெயர் வாங்கினோம்.



ஒரு நாள் நானும் தம்பியும் கல்லூரிக்கு நடந்து வந்து கொண்டிருந்தோம். அரசமரத்து பிள்ளையார் கோவில் இருக்குமே அதுக்குப் பக்கத்தில் ஒரு புத்தம் புது அம்பாசிடர் கார். வெள்ளை வெளேர்னு பளிச்சின்னு ரோட்ல நின்னது.

‘புது கார்’டா’ என்றேன்.

‘நல்லா இருக்கு’ அப்டின்னான்.

’இது மாதிரி ஒரு கார் நம்ம லைப்ல வாங்க முடியுமா’டா?” என்று கேட்டேன். கேட்ட என் குரலிலேயே என்னால அது முடியாது அப்டின்ற அர்த்தம் நிறைய இருந்தது. ஏன்னா எனக்கு சுத்தமா அந்த நம்பிக்கையே இல்லை. ஆனால் தம்பியிடமிருந்து ரொம்ப நம்பிக்கையான, அதைவிட ஒரு matter of fact தொனியில்,

‘ஏண்டா .. இம்புட்டு படிச்சிட்டு இதுகூட வாங்காமலா போவோம்’ அப்டின்னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டுப் போனான்.

இது என் மனசுக்குள்ள ரொம்ப வருஷம் ஒரு நிறைவேறா ஆசையாக அப்ப்டியே நின்னுது. நாம எல்லாம் கார் வாங்கிறதாவது என்ற நப்பாசைதான் மனதில் எப்படியோ ஓடிக்கொண்டிருந்தது.  ஒரு வழியாக அந்த ஆசை கனவாக மாறுவதற்குள் ஏறக்குறைய ஓய்வு பெரும் வயது நெருங்கியிருந்தது. ஆனால் இந்தப் பயல் நிச்சயமாக ரொம்ப சீக்கிரமே கட்டாயம் ஒரு கார் வாங்கியிருந்திருப்பான். அவன் குரலில் ஒலித்த நிச்சயமும் தன்னம்பிக்கையும் இன்றும் என் நினைவில் நன்கிருக்கிறது. பல ஆண்டுகள் கழித்து அவன் பெயரில் ஒரு பாடப்புத்தகம் வெளியாயிருந்தது. திருவனந்தபுரம் பல்கலையில் வேலை பார்த்திருந்திருப்பான் போலும் அவன் பெயரில் Marine Ecology என்று ஒரு நல்ல புத்தகம் வெளியாகி இருந்தது.




அவனுக்கென்னப்பா ... புத்தகம் எல்லாம் போட்டவன்.  எப்பவோ கார் வாங்கமலா இருந்திருப்பான்?



*


Wednesday, March 13, 2013

642. காணாமல் போன நண்பர்கள் - 14 - டாக்டர் கேசவன்






*
அதீதம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரையின் மறுபதிப்பு ....


1961 - 64-ல் ...........

 B.Sc. முடித்து விட்டு முதுகலை போக நினைத்திருந்தேன். அந்த சமயத்தில் B.Sc. முடித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சில இடங்கள் என்று அறிவிப்பு ஒன்று வந்தது. அட .. இப்படி ஒரு சான்ஸா என்று நினைத்து நானும் எனது B.Sc. வகுப்பு நண்பர்கள் இருவரும் நேர்முகத் தேர்வுக்கெல்லாம் போனோம். சென்னைக்கு மூவரும் ஒன்றாகப் போனோம். அந்த இரு நண்பர்கள் - மாணிக்க வாசகம். மதுரையில் இவரது வீடு என் வீட்டுக்குப் பக்கத்தில். ஆகவே சைக்கிளில் தினமும் கல்லூரிக்கு ஒன்றாகப் போவோம். இவர் இளம் வயதிலேயே காலமாகி விட்ட செய்தி கிடைத்தது. இன்னொருவன் I. கேசவன். ஜாலியான பயல். வகுப்பில் இவனுக்கு dissection சரியாக வராது. இருவரும் செய்முறை வகுப்புகளில் அடுத்தடுத்த வரிசையில் இருப்போம். அந்தக் காலத்தில் அடிக்கடி தவளையை அறுத்து என்னென்னமோ பண்ணுவோம். அநேகமாக தலையில் உள்ள நரம்புகளை - cranial nerves - எடுத்து தொடர்புகளை அழகு படுத்தணும். கேசவன் திடீரென்று என்னைப் பெயர் சொல்லி அழைப்பான். அப்படி அழைத்து விட்டால் அவன் எடுக்க வேண்டிய நரம்பை அறுத்து விட்டான் என்று அர்த்தம்.

மூன்றாமாண்டு படிக்கும் போது நானும் அவனும் ஒட்டிக் கொண்டோம். முக்கிய காரணம் ‘தம்’. இருவரும் வகுப்புகளுக்கு நடுவில், மாலையில் கல்லூரிக்குப் பக்கத்தில் உள்ள ஒரு டீக்கடையில் ஒன்றாகச் செல்வோம். நான் அதுவரை திருட்டுத் தம் மட்டும் அடித்தவன் மூன்றாமாண்டில் ‘ஓப்பன்’ டைப்பாகி விட்டேன். இருவரும் அங்கே போவோமா .. அங்கே எனக்கு ஒரு புதுப் பழக்கம் சொல்லிக் கொடுத்தான். டீ வாங்கணும் ... மெல்ல உறிஞ்சிக் குடிக்கணும் .. பாதி டீ குடித்ததும் ஒரு சிகரெட் பற்ற வைக்கணும் .. அடுத்த இரண்டு மூன்று உறிஞ்சில் டீ முடிஞ்சிடணும் .. பின் இன்னும் ரசித்து சிகரெட் இழுக்கணும். ஆஹா ... நல்லா இருந்தது. ஆனால் பிரச்சனை என்னடான்னா ... இதுவரை அப்பப்போ திருட்டு தம் அடிச்ச நான் இப்போ டீ + சிகரெட் இரண்டுக்கும் - ஒரு காம்போ எஃபெக்ட் - சேர்ந்து அடிமையாக ஆய்ட்டேன். பின்னாளில், அட மாபாவி கேசவா இப்படி பண்ணிட்டியேடா ... அப்டின்னு அடிக்கடி நினச்சிக்குவேன்.

 மருத்துவக் கல்லூரி நேர்முகத் தேர்வுக்குப் போனோம். அங்கு எங்கள் ஆசிரியர் ஒருவரும் எங்களோடு நேர்முகத் தேர்வுக்கு வந்தார். அவர் B.Sc. முடித்து எங்களுக்கு தாவரயியலில் ஓராண்டு ஆசிரியராக - demonstrator - இருந்தார். மொத்த மதிப்பெண்கள் எல்லோருக்கும் ஒன்றாக இருந்தது - B Grade. ஆனால் தமிழ் ஆங்கில மதிப்பெண்களும் சேர்த்துப் பார்ப்பதாகச் சொன்னார்கள். அப்படியென்றால் எங்கள் நால்வரில் எனக்கு மதிப்பெண்கள் கொஞ்சம் பெட்டர்.

அதிக நம்பிக்கையில்லாமல் நேர்முகத் தேர்வுக்குப் போனோம். கேசவனுக்கு நேர்முகத் தேர்வை விட நாங்கள் அதிகம் அப்போது கேள்விப்பட்டிருந்த புகாரி ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்று குறியாக இருந்தான். நேர்முகத் தேர்வு நடக்கும் இடத்திற்கு அதற்கு முந்திய நாள் போய்விட்டு அதன் பின் புகாரி போக முடிவு செய்திருந்தோம். புகாரி ஹோட்டலைத் தேடி போனோம். சர்வர் மெனு கார்டை வந்து கொடுத்தார். இரு குருவிகள் BH என்ற எழுத்துகளைத் தூக்கி செல்வது போல் அட்டையில் ஒரு படம். நீளமான அந்த அட்டையைக் கொடுத்தார்.குருவிப்படம் அது இதெல்லாம் பார்த்தவுடன் கேசவனுக்குக் குழப்பம். இவர் எதற்கு எனக்கு ஏதோ அழைப்பிதழ் எல்லாம் கொடுக்கிறார் என்று முழித்தான். அவன் குழப்பம் எனக்குப் புரிந்தது. சர்வரை அனுப்பி விட்டு கேசவனிடம் ‘டேய் .. இது மெனு’டா’ என்றேன். அதுவும் அவனுக்குப் புரிபடவில்லை. திறந்து காண்பித்தேன். பட்டியல் என்று புரிந்தது. ‘ஓ .. இதுவா?’ என்று சொல்லி உள்ளே பார்த்தோம். ஒன்றும் புரியற மொழியில் இல்லை! ஏதோ சொல்லி எதையோ சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம்.
வெளியே வந்ததும் கேசவன், ‘டேய் .. ஏதாவது ஒரு புரோட்டா கடைக்குப் போய் சாப்பிடுவோமா ... நல்லா பசிக்குது’ என்றான்.

நான் நேர்முகத் தேர்வுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே போய்விட்டேன். என் அப்பா நேர்முகத் தேர்வு அன்று சென்னை வந்தார். நேர்முகத் தேர்வு முடிந்த அன்று மாலை ஒரு உறவினர்  சுகாதார அமைச்சரின் (அப்போது ஜோதி வெங்கடாசலம் அமைச்சர் என்று நினைக்கிறேன்.) செயலர் எனக்குத் தெரியும். ஆனால் இப்போ ரொம்ப லேட் என்றார். சரி .. ரிசல்ட் பாத்து சொல்லுங்க என்றோம். அடுத்த நாள் கல்லூரிகளில் பட்டியல் போட்டிருவாங்க. ஆனால் அதற்கு முந்திய நாள் பட்டியலில் என் பெயர் இருப்பதாக அவர் சொன்னார். ஆஹா .. மகனுக்கு மருத்துவ சீட் கிடச்சிருச்சி அப்டின்னு என்ற சந்தோஷத்தோடு அப்பா அன்றே மதுரைக்குப் பயணமானார். நான் போய் எல்லாம் தயார் பண்றேன்’டா அப்டின்னு சந்தோஷமா சொல்லிட்டு அப்பா மதுரைக்குப் புறப்பட்டாச்சு.

நான் அடுத்த நாள் நண்பர்களோடு ரிசல்ட் பார்க்கப் போனேன். நான் நமக்குத்தான் சீட் கிடைச்சாச்சேன்னு போய் பார்த்தேன். லிஸ்ட் இருந்துச்சி... ஆனா அதில் என் பெயரைத்தான் காணோம். தங்கியிருந்த உறவினர் வீட்டிலிருந்து சீட் கிடச்சுதுன்னு சொன்னவருக்குப் பேசினோம். அவர் தம்பி பெயரை நான் முந்திய நாள் மாலை பார்த்தேன். ஆனால் ராத்திரி அமைச்சர் கடைசி நிமிட மாற்றல் சில செய்தாராம். அதில் எப்படியோ இப்படி ஆகிப் போச்சு என்றார். அதற்கு ஒரு கதையும் சொன்னார்.  சோகமாக மதுரை வந்தோம்.

 கேசவன் மிகவும் எளிதாக இந்த நேர்முகத் தேர்வை எடுத்துக் கொண்டது போல் தெரிந்தது. ஆனால் அடுத்த வருஷம் முதலிலேயே சில ஏற்பாடுகளைச் செய்தான். அந்த வருஷம் அவனுக்கு மருத்துவ சீட் கிடச்சிது. மதுரையில் சேர்ந்தான். அதற்குள் நான் முதுகலை முதலாண்டு முடித்திருந்தேன். சில தடவை மருத்துவக் கல்லூரிக்குச் சென்று கேசவனைப் பார்த்து விட்டு வந்தேன். ‘நீ மெடிக்கல் முடிப்பதற்குள் நான் முதுகலை முடித்து Ph.D. முடிச்சிர்ரேண்டா. ரெண்டு பேரும் ஒண்ணா டாக்டர் பட்டம் வாங்கிருவோம்’ என்றேன். ஆனால் அது வெறும் வார்த்தையாகவே போச்சு. எங்களுக்குள் தொடர்பும் அதன் பிறகு விட்டுப் போச்சு ...


*

Monday, February 25, 2013

639. காணாமல் போன நண்பர்கள் - 13 - சயன்டிஸ்ட் ராமசாமி







*
அதீதம் இணைய இதழில் வெளியான என் கட்டுரையின் மறு பதிப்பு

*

1961-'64 ம் ஆண்டுகளில் ...


எதையோ படிக்க ஆசைப்பட்டு, எதோ ஒரு துறையில் சேர்ந்து இளங்கலைப்  பட்டப் படிப்பையும், முதுகலைப் பட்டப் படைப்பையும் இந்த ஐந்து ஆண்டுகளில் முடித்தேன். இளங்கலையில் முன்பே சொன்னது போல் சயன்டிஸ்ட்  ராமசாமி ஒரு நல்ல நண்பனாகவும், படிப்பில் ஒரு போட்டியாளனாகவும் இருந்தான். மேஜர் பாடங்களில் என்னைத் தோற்கடிப்பது என்றால் அவனுக்கு அம்புட்டு ஆசை. கல்லூரி விடுதியில் தங்கியிருந்தான். வகுப்பில் நிறைய கேள்வி கேட்பது இவனும், இன்னொரு நண்பன் -பால சுப்ரமணியன், ஏற்கெனவே  ஆசிரியராக வேண்டுமென்ற ஆவலில் ஆங்கிலத்தில் அடிக்கடி பேச முயலும் நண்பன் என்று கூறியிருந்தேனே அவன் தான் - இந்த இருவரும் தான். இந்த இருவரில் பாலு அதிகம் என்னோடு பழகியதில்லை. ஆனால் நம்ம சயன்டிஸ்ட்  ராமசாமி என்னோடு நல்ல நட்போடு இருந்தான்.

இளங்கலை முடித்ததும் நானும் இன்னும் இரு வகுப்புத் தோழர்களும் மருத்துவக் கல்லூரியில் சேர ஒரு முட்டு முட்டினோம். அதைப் பற்றி பிறகு பேசுவோம். அந்த சோகக் கதை முடிந்ததும் மீண்டும் தியாகராஜர் கல்லூரியிலேயே முதுகலைக்குச் சேர்ந்தேன். அந்த ஆண்டு நான் மட்டுமே முதுகலை வகுப்பில் அங்கேயே படித்த ஒரே பழைய மாணவன்.

இதுவ்ரை தொடர்பில் இல்லாதிருந்த P.G. Professor, Dr. கண்ணன் என்னை ஓரிரு ‘வால் தனமான நேரங்களில்’ பார்த்து விட்டார். என்னைப் பற்றி பிற ஆசிரியர்களிடமும், என் சீனியர் மாணவர்களிடமும் நிறைய புகார் பட்டியல் கொடுத்திருக்கிறார். முதலாண்டில் அவரைக் கண்டாலே எனக்கு அரட்டியாகி விட்டது. பலரும் என்னை மிகவும் பயமுறுத்தி வந்தார்கள். ஆனால் முதலாண்டில் அவரிடம் மிகவும் பயந்து போயிருந்தேன். அந்த ஆண்டின் மதிப்பெண்கள் எங்களுக்குக் கிடைக்காது. இரண்டாம் ஆண்டின் இறுதியில் தான் மதிப்பெண்கள் எங்களுக்குத் தெரியும். ஆனாலும் என் முதலாண்டு மதிப்பெண்கள் நன்றாக இருந்ததாகக் கேள்விப்பட்டேன். தலைவர் காதிற்கும் அது போயிருக்கிறது, இதனால் இரண்டாமாண்டிலிருந்து நான் தலைவரின் செல்லப் பிள்ளையாகி விட்டேன். எதற்கும் தலைவர் என்னைத்தான் கூப்பிடுவார். நிறைய செல்லம் ... நிறைய உரிமை ... அதனாலேயே அந்தக் கல்லூரியிலேயே நான் ஆசிரியனாகச் சேர வேண்டுமென்று அவரே எனக்காக முயற்சித்தார். ஜாதியோ .. காலமோ ... கடவுளோ (???) .. வேறு விதமாக முயற்சிக்க எனக்கு அங்கு வேலை கிடைக்காமல்  போயிற்று.

இளங்கலை முடித்து விட்டு சயன்டிஸ்ட்  ராமசாமி ஓராண்டு ஆசிரியர் வேலைக்குப் போய் விட்டு,  அதன்பின் என் ஜூனியராக முதுகலைக்கு வந்தான். Ph.D. என்ற குறிக்கோளோடு படிக்க ஆரம்பித்தான். முதுகலை முடிந்ததும் நான் கல்லூரி ஆசிரியனாக தஞ்சைக்கருகில் உள்ள பூண்டி வாண்டையார் கல்லூரியில் சேர்ந்து, நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தேன்.

முதுகலை முடிந்த பிறகு எனக்கும் சயன்டிஸ்ட்  ராமசாமிக்கும் தொடர்பில்லாமல் இருந்தது. ஆனால் அவன் என்னைத் தேடி நான் அமெரிக்கன் கல்லூரியில் வேலை பார்ப்பது தெரிந்து ஒரு தடவை என்னைப் பார்க்க வந்தான். சயன்டிஸ்ட்  ராமசாமி இப்போது போலீஸ்கார  ராமசாமியாக ஆகியிருந்தான். கல்யாணம் ஆகியிருந்தது.  தமிழ்நாட்டுக் காவல் துறையில் ஒரு D.S.P. ஆகியிருந்தான்.  போலீஸ்காரனாகவே என்னைப் பார்க்க கல்லூரிக்கு தனது ஜீப்பில் வந்திருந்தான்.  எங்கள் துறைக்குப் பக்கத்தில் இருவரும் ஜீப்புக்கு அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். அவனுக்கு என்னைப் பார்த்துப் பொறாமை! இப்படி ஒருஆசிரியனாக ஆகாமல் போய் விட்டேனே என்று கவலைப் பட்டான். எனக்கு அவனைப் பார்த்து- இப்படியெல்லாம் பெரிய ஆப்பிசராக இல்லாமல் போய்விட்டோமே என்று -  பொறாமை !!



அவன் பார்த்துப் பேசிவிட்டுச் சென்ற பின் நண்பர் ஒருவர் 'யாரது' என்றார். சொன்னேன். அவர், ‘நீங்க ரெண்டு பேரும் பேசாம வேலையை மாத்திக்கலாம்’  என்றார்.

 ’ஏன்?’

‘இல்லை .. ரெண்டு பேரும் நிற்கும் போது அவர் நல்ல மனுஷன் மாதிரி கையைக் கட்டிக்கிட்டு softஆன ஆள் மாதிரி நின்று பேசிக்கொண்டிருந்தார். ஆனால் நீ ... பெருசா அந்த ஜீப்பே உன்னுடையது மாதிரி சாஞ்சு நின்னுக்கிட்டு பந்தா பண்ணிக்கிட்டு இருந்தது மாதிரி தெரிந்தது. அவரு வாத்தியாரா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்’ அப்டின்னார்.

அவரிடம் அவனது ஆசை, கவலை பற்றிச் சொன்னேன்.

அதற்குப் பிறகு சயன்டிஸ்ட்  ராமசாமியை ... இல்லை .. இல்லை ... போலீஸ் ராமசாமியைப் பார்க்கவேயில்லை. பெரிய அதிகாரியாக ஆகி இப்போது ஓய்வு பெற்றிருப்பான்.

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் ...!!!



















*



Monday, January 21, 2013

635. காணாமல் போன நண்பர்கள் - 12 - கருப்பு ராமசாமி






*

 அதீதம் இணைய இதழில் வெளியான என் கட்டுரையின் மறு பதிப்பு


*


1961-'64 ம் ஆண்டுகளில் ...


1961-ல் P.U.C. படிப்பை முடித்து விட்டு, அந்த சேவியர் கல்லூரியிலேயே எனக்குப் பிடித்த பொருளாதாரத்திலும் சேர்ந்து விட்டேன். அது B.A.வகுப்பு. எனக்கு அப்போது மிகவும் பிடித்த பாடம். ஆனால் என் அப்பாவுக்கு நான் B.Sc. வகுப்பில் சேர வேண்டுமென்ற ஒரு ‘தவறான’ ஆசை. ஆசிரியராக இருந்தும் B.A.-யை விட B.Sc. பெரிது என்ற எண்ணம் அவர்களுக்கு. மறுத்தும் கேளாமல், மதுரை தியாகராஜர் கல்லூரியில் மிகவும் கடைசி நேரத்தில் எது கிடைத்ததோ அதில் சேர வேண்டுமென்ற கட்டாயத்தில், கிடைத்த ஒரே இடமான விலங்கியலில் சேர்க்கப்பட்டேன். (‘சின்னூண்டு நெத்தியில் ஆண்டவன் எப்படியெல்லாம் எழுதி வச்சிர்ரான் – காதலிக்க நேரமில்லை.)

பிடித்ததோ பிடிக்கவில்லையோ .. தலைவிதியேன்னு வகுப்பில் சேர்ந்தேன். நான் சேரும் போது கல்லூரி ஆரம்பித்து வெகு நாட்கள் ஆகியிருந்தது. வகுப்பில் சேர்ப்பதற்கான கடைசி நாளன்று தான் நான் சேர்ந்தேன். இதற்குள் கல்லூரி வகுப்பில் எல்லோரும் நண்பர்களாக இருந்தார்கள் - என்னையும் எனக்கு முன் ஓரிரு நாட்களுக்கு முன் சேர்ந்த யோகேந்திரனையும் தவிர. யோகேந்திரன் இலங்கையிலிருந்து வந்தவர். பெரிய ஆள். நல்ல திடகாத்திரமான உடம்பு. எங்களை விட எல்லாம் வயது அவருக்கு அதிகமாக இருக்கும். எனக்கு வகுப்பில் கடைசி எண். எனக்கு முந்திய எண் அவருடையது. செய்முறை வகுப்புகளில் நானும் அவரும் ஒன்றாக இருப்போம், அதனால் எங்களுக்குள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா நட்பு உண்டு. இன்னொரு காரணமும் பின்னால் வந்து சேர்ந்தது. கல்லூரியில் இருக்கும் போதே வைகை ஆற்றுக்குள்ளிருந்து சினிமா பாட்டு சத்தம் அடிக்கடி கேட்கும். நம்ம நண்பருக்கு சரோஜாதேவின்னா அப்படி ஒரு உசுரு. அதுவும் அவர் நடக்கிறதை பின்னால இருந்து காண்பிப்பாங்களே ... அதுன்னா தலைவருக்கு அம்புட்டு ‘இது’ ! அவர் நடித்த பாட்டுன்னா போதும் ... என்னைக் கூப்பிடுவார் ... எப்டி என்பார் .. இசை மயக்கத்தில் கொஞ்ச நேரம் இருப்பார்.

 மேஜர் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளில் எங்களோடு Physics, Chemistry பசங்களுக்கும் ஒன்றாக தமிழ் ஆங்கில வகுப்புகள் இருக்கும். நாங்கள் அந்த வகுப்புகளில் உட்காருவதை வைத்தே யார் நல்லா படிக்கிற பசங்கன்னு சொல்லிடலாம்! ஏன்னா ... இரு வரிசை பெஞ்சுகளில் Physics மொதல்ல உக்காந்திருப்பாங்க; அடுத்து Chemistry; நாங்க எல்லோரும் கடைசி பெஞ்சுகளில். எங்களைப் பார்த்தால் அந்தப் பசங்களுக்கே கொஞ்சம் தெனாவெட்டாக இருக்கும்.

நான் சேர்ந்து சில நாட்களிலேயே எங்களுக்குக் காலாண்டுத் தேர்வு வந்து விட்டது. வகுப்பில் இதுவரை நான் ஒரு தனிக்காட்டுப் பறவை மாதிரிதான். அதிகம் நண்பர்கள் கிடையாது. இரண்டே இரண்டு நண்பர்கள். ஒருவர் பக்கத்துத் தெரு. பெயர் மாணிக்க வாசகம். நாங்கள் இருவரும் சைக்கிளில் கல்லூரிக்கு ஒன்றாக வர ஆரம்பித்தோம். அதன் மூலம் நண்பரானார். (ரொம்ப வருஷத்துக்கு முன்பே அவர் இறந்த செய்தி வந்தது.) இன்னொருவன் ராமசாமி. எங்கள் வகுப்பில் அப்போது மொத்தம் 3 ராமசாமிகள். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பெயர் வைத்தோம். நம்ம தோஸ்த் ராமசாமி நல்ல கருப்பு. அதனால் அவனுக்குப் பெயர் கருப்பு ராமசாமி. இன்னொருத்தர் சிகப்பா இருப்பார். கொஞ்சம் வயது எங்களை விட கூட இருக்கலாம். அதிகமாக யாரோடும் பேச மாட்டார். ஆனால் எப்போதும் சிரித்த முகம். அவருக்குப் பெயர் சிகப்பு ராமசாமி. இன்னொருத்தன். அவனுக்கு வைத்த பெயர் scientist ராமசாமி; ஏன்னா எல்லா வாத்தியாரிடமும் நிறைய கேள்வி கேட்பான். நல்லா படிக்கணும் ... முதுகலை போகணும் ... க்ல்லூரி வாத்தியாராக வேண்டும் ... இதெல்லாம் அவனது ஆசைகள். எல்லோரிடமும் இதைச் சொல்வான். சரி ... அவன் என்ன ஆனான் என்பதை பிறகு சொல்கிறேன்.

 காலாண்டுத் தேர்வு நடந்தது. அதில் நான் பயந்தது zoology practical-க்கு மட்டும் தான். ஏனெனில் தேர்வுக்குள் எனக்கு இரண்டே இரு வகுப்புகள் மட்டுமே இருந்தன. அதில் ஒரே ஒரு practical - தவளையில் arterial system & venous system இரண்டு மட்டுமே செய்திருந்தார்கள். ஆனால் இதில் நான் venous system மட்டும் செய்திருந்தேன். அதிலும் எனக்கு ஒரு தகராறு. நான் செய்தது அதுவா .. இதுவான்னு ஒரு தகராறு. அதாவது எது arteries எது veins என்று குழப்பம். தவக்காளையில் எது மேல் பக்கம் (dorsal) எது கீழ் பக்கம் (ventral) என்றும் ஒரு தகராறு. எது எதுன்னு தெரியாம எது எதை நான் செய்றது அப்டின்னு ஒரே குழப்பம். தேர்வு அன்னைக்கி யோகேந்திரனிடம் சொல்லியிருந்தேன். சந்தேகம் கேட்பேன் என்று சொல்லியிருந்தேன். arterial system செய்யச் சொல்லிக் கேள்வி வந்ததும் யோகேந்திரனிடம் எதைச் செய்யணும்; மேலேயா கீழேயா என்று கேட்டேன். அவர் மேலே என்றார். அதாவது அவர் dorsal என்ற பொருளில் சொல்ல, நான் தவக்காளையை ஓப்பன் செய்ததும் மேலே உள்ள (ventral) உள்ள venous system செய்து வைத்து விட்டு வந்திட்டேன்.

 மதிப்பெண்கள் வந்தன. மேஜரில் ஆசிரியர் சொல்லும் போது fifty and fifteen என்றார். அதாவது தியரியில் 50; செய்முறையில் வெறும் 15. ஊத்திக்கிரிச்சி. ஆனாலும் நம்ம புகழ் அதற்குள் ‘திசையெங்கும்’ பறந்து விட்டது. ஏன்னா .. தமிழில் எல்லோரும் ஓரளவு மதிப்பெண்கள் வாங்கியிருந்தோம் . ஆனால் ஆங்கிலத்தில் பலருக்கும் ‘ஊத்திக்கிச்சி’! எங்கள் வகுப்பில் நிறைய பேருக்கு ஆங்கிலத்தில் ரொம்ப மோசமான மார்க். ஆனா ... நான் மட்டும் இரண்டாவது மார்க் - அதாவது Physics, Chemistry, zoology மூன்று வகுப்பிலும் இரண்டாவது மார்க். முதல் மார்க் ஒரு Physics பயல். மேஜரில் 50 மார்க் நல்ல மார்க்காகவே இருந்தது. (ஐம்பது மார்க் என்பதெல்லாம் நல்ல மதிப்பெண்கள் என்று இந்தக் காலத்து ஆட்களுக்கு எங்கே தெரியப் போகுது!)

என்னடா .. நேத்து வந்த பயல் இப்படி மார்க் வாங்கிட்டானேன்னு எங்க வகுப்பில் எல்லோருக்கும் ரொம்ப ‘இது’! அதுவும் ஆங்கிலத்தில் நல்ல மார்க் வாங்கினது நம்மள எங்கேயோ தூக்கிட்டுப் போயிரிச்சி. நம்ம கருப்பு ராமசாமிக்கு இப்போ இன்னும் கூட நெருங்கிட்டான். பால சுப்ரமணியன் என்ற பாலு என்பவனுக்கும் ஆசிரியர் ஆக வேண்டுமென்ற ஆவல் நிறைய. அதற்காகவே அவன் அடிக்கடி ஆங்கிலத்தில் பேச முயல்வான். (அவன் படித்து முடித்து ஆசிரியராக ஆனான் என்பதும் தெரியும்.) அவனுக்கும் என்னிடம் புதியதாக நட்பு பிறந்தது.

நானும் சும்மா சொல்லக் கூடாது. மொழிப்பற்று எக்கச் சக்கம் தான். நான் ஆங்கிலம், தமிழ் இரண்டிற்கும் எடுத்த முயற்சிகளை என் மேஜர் பாடத்திற்குக் கொடுத்திருந்தால் ஒரு வேளை கொஞ்சம் பெரிய ஆளாக ஆயிருந்திருப்பேன். ஆனால் எனக்கோ ஆங்கிலத்தில் எல்லோருக்கும் வழக்கமாக இறுதித் தேர்வில C Grade தான் போடுவார்கள். B grade கிடைப்பது மிகவும் அரிது. எனக்கு ஆங்கிலத்தில் B grade; தமிழில் A grade வாங்கி விட வேண்டுமென்று ஆவல் அதிகம். அதற்காகவே இரு பாடங்களில் மிகுந்த சிரத்தை எடுத்தேன்.

தமிழ், ஆங்கில வகுப்புகள் அனேகமாக எல்லோரும் சேர்ந்து பெரிய வகுப்பாக இருப்பதால் கொஞ்சம் கலாட்டாக்கள் இருக்கும். அதுவும் தமிழ் வகுப்புகளில் இன்னும் கொஞ்சம் அதிகம். ஆனால் எனக்கு வந்ததில் செய்யுள் எடுத்த ஆசிரியரிடம் பாச்சா பலிக்காது. ரொம்ப அழகாகப் பாடி பாடம் எடுப்பார். ஒரு செய்யுளை ராகத்தோடு பாடிவிட்டு, அதே ராகத்தில் உள்ள ஒரு சினிமாப் பாட்டையும் பாடுவார். இன்னொரு ஆசிரியர். அவர் பின்னாளில் கல்லூரியின் முதல்வரானார். அவர் வகுப்பில் கொஞ்சம் கலகலப்பு இருக்கும் - மாணவர்களிடையே. ஒரு நாள் எல்லோரும் ஏதேதோ கத்திக் கலாட்டா செய்து கொண்டிருந்தோம். ஆசிரியர் நான் உட்கார்ந்திருந்த பெஞ்சின் பக்கத்தில் வந்து என் அருகில் நின்று, என்னைப் பார்க்காமலேயே, ‘நீங்கள் எல்லாம் முதல் வகுப்பு வாங்கக் கூடிய மாணவன் என்று நினைத்திருந்தேன் ... நீங்களுமா இப்படி’, என்றார். அதிலிருந்து அவர் வகுப்பில் ரொம்ப நல்ல மாணவன்.

இன்னும் இரு பேராசிரியரர்கள். அவர்கள் இருவரும் அப்பா, பிள்ளைகள். பிள்ளை ஆசிரியர் கல்லூரி விட்டு விலகி சென்னை சென்று இறுதியில் துணை வேந்தர் ஆனார். அப்பா-ஆசிரியர் நிறைய நூல்கள் எல்லாம் எழுதியவர் தான். ஆனாலும் அவர் வகுப்பென்றால் எங்களுக்குக் கொண்டாட்டம் தான்.

ஆங்கில ஆசிரியர்களில் நான் மாடலாக எடுத்துக் கொண்ட ஆசிரியர் பேரா. சக்தி வேல். வகுப்பில் பாடம் மட்டும் இருக்காது. அவர் வகுப்பில் அமர்ந்திருப்பதே நன்கிருக்கும். இவரை நான் பதினைந்து ஆண்டுகள் கழித்துப் பார்த்த போது என் பெயரைச் சொல்லி எப்படி இருக்கீங்க என்று கேட்டார். ஜன்மம் சாபல்யமடைந்தது! அவ்வளவு மகிழ்ச்சி. அத்தனை ஆண்டுகள் கழித்தும் என்னை நினைவில் வைத்திருக்கிறாரே என்று மிக சந்தோஷப்பட்டேன்.

இவரையும் இன்னொருஆசிரியரையும் நான் ரொம்ப கொடுமைப் படுத்துவேன் ! வேறொன்றுமில்லை. ஆங்கிலத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமென்பதற்காக இரு bazar notes வாங்கி, அதை வைத்து நானாக essays எழுதி திருத்தி வாங்குவேன். ஒரு நோட்ஸ் - EASY GUIDE - சுப்ரமணியன் B.A., L.T. - இவர் பள்ளிக்கூடங்களில் நோட்ஸ் போடுவதில் வல்லவர். கல்லூரிக்கு போடும் நோட்ஸ் ரொம்ப ரொம்ப சிம்பிளாக இருக்கும். இன்னொரு நோட்ஸ் - MINERVA GUIDE - பரசுராமன் M.A. - இவரது நோட்ஸ் ரொம்ப ரொம்ப கஷ்டம். ஒவ்வொரு வாக்கியத்திலும் நாலைந்து வர்த்தைகள் புரியாத வார்த்தைகளாக இருக்கும் படி ‘ப்யங்கரமா‘ எழுதியிருப்பார். Shakespeare-க்கு Banerji அப்டின்னு பெரிய ஆளு .. அதோடு இன்னொரு நோட்ஸ். ஆசிரியர் BARNES என்றோ என்னவோ ஒரு பெயர். திருவள்ளுவருக்கு பரிமேலழகர் மாதிரி Shakespeare-க்கு இவர் என்பார்கள். இவைகளையெல்லாம் வாங்கி எல்லாவற்றையும் வாசித்து, நானாக ஒரு கட்டுரை எழுதி ஆசிரியர்களிடம் எழுதிக் கொடுத்து, அவர்களை அனத்து என்று அனத்தி திருத்தி வாங்குவேன்.

ஆங்கிலத்திற்கு இத்தனை நோட்ஸ் வாங்குவேன். அப்போது தமிழுக்கு கோனார் நோட்ஸ் மிகப் பிரபல்யம். நான் தமிழுக்கு மட்டும் எந்த நோட்ஸும் வாங்க மாட்டேன். தமிழுக்குத் தனி நோட்டு போட்டு நானே பொழிப்புரையும் மற்றவைகளையும் எழுதிய சிரத்தையுள்ள ஒரே தமிழ் மாணவனாக இருந்திருப்பேன் என்று நினைத்துக் கொள்வேன். தேர்வுகளிலும் முதல் பக்கத்தில் ஐந்து இலக்கணக் குறிப்புகள் கேட்பார்கள். அதில் மார்க் குறைக்க முடியாது. ஐந்தும் முதல் பக்கதில் எழுதி சுளையாக 10 மார்க் வாங்குவது ஒரு வழக்கம்.





இப்படியெல்லாம் இரு மொழிகளுக்கும் சிரத்தை எடுத்துப் படித்தேன்....




ஆனாலும் இவ்வளவு சிரத்தை எடுத்தும் இறுதியில் பாதிக் கிணறு தான் தாண்டினேன். ஆங்கிலத்தில் C Grade தான். ஆனால் தமிழில் கல்லூரியிலேயே இருவர் மட்டும் முதல் வகுப்பு - A grade - வாங்கினோம். இன்னொருவர் ஆங்கிலத் துறை மாணவன். அவர் இன்னும் நன்கு படித்து I.A.S. ஆனதாக அறிந்தேன். நான் வழக்கம் போல தரிசு ஆய்ட்டேன்.

நம்முடைய மொழிப்புலமையால் (!) என்னிடம் கருப்பு ராமசாமிக்கு ஏக ஈர்ப்பு. ரிகார்ட் நோட்ல படமும் அவனை விட நல்லா நான் வரைவேன். படிப்பில் உதவி கேட்பான். டிகிரி முடித்ததும் B.Ed. முடித்து ஆசிரியரானான். நான் கல்லூரி செல்லும் சந்தைப் பேட்டையில் தான் குடியிருந்தான். அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தோம். ஆனால் படிப்போடு இருவருக்கும் தொடர்பின்றிப் போனது. படிக்கும் போது அடிக்கடி வீட்டிற்கும் வருவான். என் வீட்டிற்குப் பக்கத்தில் எனக்கு இருந்த distraction அவனுக்கும் தெரிந்ததா ...

அப்போ கேட்டான்: ‘ஏண்டா ... இதையெல்லாம் வச்சிக்கிட்டே இப்படி படிக்கிறியே .. இதுவும் இல்லாட்டி ரொம்ப நல்லா படிப்பியோ?’

தெரியலையே ’ப்பா ... !



*

Saturday, January 12, 2013

629. காணாமல் போன நண்பர்கள் - 11 - தப்பு செஞ்சா பயந்துகிட்டே செய்யணும் !





*

அதீதம் இணைய இதழில் வெளி வந்த பதிவு

*


1961 - 62 ஆண்டில் ...

P.U.C. படிப்பை முடித்து விட்டு, அந்த சேவியர் கல்லூரியிலேயே எனக்குப் பிடித்த பொருளாதாரத்திலும் சேர்ந்து விட்டேன். அது B.A.வகுப்பு. ஆனால் என் அப்பாவுக்கு நான் B.Sc. வகுப்பில் சேர வேண்டுமென்ற ஒரு ‘தவறான’ ஆசை. மறுத்தும் கேளாமல், மதுரை தியாகராஜர் கல்லூரியில் மிகவும் கடைசி நேரத்தில் எது கிடைத்ததோ அதில் சேர வேண்டுமென்ற கட்டாயத்தில், கிடைத்த ஒரே இடமான விலங்கியலில் சேர்க்கப்பட்டேன். (‘சின்னூண்டு நெத்தியில் ஆண்டவன் எப்படியெல்லாம் எழுதி வச்சிர்ரான் - காதலிக்க நேரமில்லை.)

 பிடித்ததோ பிடிக்கவில்லையோ .. தலைவிதியேன்னு வகுப்பில் சேர்ந்தேன்.

P.U.C. விடுதியில் என்னோடு படித்த மாணவன் ஒருவனை தற்செயலாக மதுரை தூய மரியன்னை கோவிலில் சந்தித்தேன். அவனின் இரண்டாவது பெயர் மைக்கிள். முதல் பெயரும் ஏதோ ஒரு ஆங்கிலப் பெயர். என்னைப் போல் நல்லவனாக (!) அவனும் சாமி கும்பிட அங்கே வந்திருந்தான். பழைய அறிமுகத்தையும், நட்பையையும் அங்கே புதுப்பித்துக் கொண்டோம். எங்கள் வீட்டுக்கும் அழைத்திருந்தேன். அதன்பின் அவன் அவ்வப்போது கோவிலுக்கும் வீட்டுக்கும் வர ஆரம்பித்தான்.

அவன் மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருந்தான். ஆள் செம குச்சி. நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. தம் அடிக்க ஆரம்பித்திருந்தான். எங்கேயாவது சேர்ந்து, ஒளிந்திருந்து அடிப்போம். அதற்காகவே அவனும் அடிக்கடி கோவிலுக்கும் இதற்கும் சேர்ந்து வர ஆரம்பித்திருந்தான். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் ஒரு சின்ன சந்து இருக்கும். அதில் உள்ள ஒரு குறுக்குச் ச்ந்துதான் எங்கள் புகைப்பிடமாக இருந்தது.

ஒரு வாரம் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தான். இருவரும் ஆளுக்கொரு சைக்கிளில் எங்கள் மறைவிடம் தேடிப் போய்க்கொண்டு இருந்தோம். இருட்டத் தொடங்கிய மாலை நேரம். தெற்குவாசல் பக்கத்தில் ஒரு டீக்கடையின் வாசலில் ஒரு போலீஸ்காரர் நிற்பது தெரிந்தது. அப்போதெல்லாம் சைக்கிளில் விளக்கு இல்லையென்றால் போலீஸ் புடிச்சுக்கும். என் வண்டியில் டைனமோ இருந்தது. ஆனால் அவன் சைக்கிளில் டைனமோ லைட்டோ மண்ணெண்ணெய் விளக்கோ எதுவும்  இல்லை. அதற்காகவே நானும் என் சைக்கிளில் விளக்கைப் போடவில்லை.

 சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்தவர்கள் ‘தல’யப் பார்த்ததும் மரியாதையாக இறங்கி சைக்கிள்களை உருட்டிக் கொண்டு வந்தோம். ஆனால் தல எங்களைக் கண்ணி வச்சி பிடிச்சிட்டார். ‘யார்ரா நீங்க?’ அப்டின்னார். மைக்கிள் வேகமாக ‘இருவரும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்’ என்றான். அப்போதெல்லாம் மக்களிடையே மருத்துவக் கல்லூரி மாணவர் என்றால் பெரிய கித்தாப்பு தான். தல அதுக்கு மேல எங்கட்ட பேச விரும்பலை; எங்க ‘ஸ்டேட்டஸ்’ அப்டி ஆகிப் போச்சு!.

ஆனாலும் ’வாங்க .. ஸ்டேஷனுக்கு வந்து ஐயாட்ட சொல்லிட்டு போங்க’ அப்டின்னு பக்கத்தில் இருக்கிற தெற்குவாசல் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போனார். நாங்க ரெண்டு பேரும் தலைக்குப் பின்னால் போகும் போது அட்ரஸ் எல்லாம் கேட்டா பெயரை மாற்றிக் கொடுத்துர்ரதுன்னு பேசி முடிவு பண்ணிட்டோம்.

அங்க போனா ‘ஐயா’ இல்ல. ரைட்டர் மட்டும் இருந்தார். இப்போ எங்களுக்கு ரைட்டர் தலையாயிட்டார். ’என்ன கேசு?’ என்றார்; ’லைட் இல்லாம போனாங்க’ என்றார் போலீஸ்காரர். ‘நீங்க யாரு ... என்ன செய்றீங்க?” என்று எங்களைப் பார்த்து ரைட்டர் கேட்டார். ‘மருத்துவக் கல்லூரியில் படிக்கிறோம்’. ரைட்டர் இது பெரிய கேஸ் அப்டின்னு நினச்சுட்டார் போலும். உங்க முகவரி கொடுத்துட்டு போங்க .. நாளைக்கு வந்து ஐயாவைப் பார்க்க வாங்க’ அப்டின்னார். எங்கள் பெயர், முகவரி எல்லாம் கேட்டார்.

நான் ஏற்கெனவே அந்த சமாச்சாரங்களை ரெடி பண்ணி வச்சிருந்தேன். ஒரு பெயர், ஒரு இனிஷியல், இனிஷியலுக்கு ஏத்த மாதிரி ஒரு அப்பா பெயர் ... இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்னால் விருதுநகருக்கு அப்பாவுடன்சென்று வந்திருந்தேன். அங்கே ஒரு தெப்பக்குளம் பார்த்திருந்தேன். வடிவேலுவிடம் பார்த்திபன் துபாய் முகவரி சொன்னது மாதிரி நானும், வீட்டு நம்பர், தெப்பக்குளம் மேலத்தெரு, விருது நகர் அப்டின்னு சொல்லிட்டேன். எழுதிக்கிட்டார்.

ஆனால் அடுத்த நம்ம நண்பனைக் கேட்டார். பயல் எதுவும் யோசிச்சி வைக்கலை போலும். தனது சரியான இனிஷியலைச் சொல்லித் தொலைத்தான். அடுத்தது அப்பா பெயர் கேட்க இவன் ஏதோ ஒரு பெயர் சொன்னான். எனக்கு உதைப்பு. அப்பா பெயரும் இனிஷியலும் ஒத்துப் போகலைன்னு இன்னைக்கு தலயும், நாளைக்கு ‘ஐயா’வும்  கண்டு பிடிச்சிட்டா என்ன பண்றதுன்னு பயம். ஆனால் இப்போ தல கண்டு பிடிக்கலை.

’போய்ட்டு நாளைக்கு வந்து ஐயாவைப் பாருங்க’ என்றார் ரைட்டர்.

வெளியே வந்ததும் ‘ஏண்டா இப்படி மடத்தனம் பண்ணுன ..?’ அப்டின்னு கேட்டேன்.

’ஏண்டா .. என்னாச்சு?’ என்றான்.

‘இனிஷியல் ஒண்ணு; அப்பா பேரு வேற ... நாளைக்கு இன்ஸ்பெக்டர் மாட்டப் போறார்’ என்றேன்.

’அட போடா ... நாளைக்கு வந்தாதான ...’

‘அப்போ வர வேண்டாமா?’

எனக்குப் பயம். வீடு வேற பக்கத்தில இருக்கு. மறுபடி போலீஸ் கண்ணுல பட்டா என்ன ஆகும்னு பயம்.

’அட போடா! அதெல்லாம் ஒண்ணும் ஆகாது’ என்றான் தைரியமாக. ஆனால் அவன் தைரியமெல்லாம் எப்டின்னு தெரியுமா ...? அதுக்குப் பிறகு வீட்டுக்கு வருவதை உட்டுட்டான். அவனை அதற்குப் பிறகு பார்க்கவே இல்லை. போலீஸ்காரங்க புண்ணியத்தில் ஒரு நண்பன் காணாமல் போய்ட்டான்!!
*



அந்தக் காலத்தில் சாலைகளில் விளக்கு அதிகம் இருக்காது, சைக்கிளில் லைட் இல்லாமல் போனால் விபத்து நடக்க வாய்ப்புகள் அதிகம். ஆகவே
இந்த லைட் எல்லாம் பார்த்திருக்கீங்களா? கொஞ்சூண்டு தேங்காய் எண்ணெய்யும், மண்ணெண்ணெயும் சேர்த்து போட்டு எரிய வைக்கணும். காத்து வேகமா அடிச்சா அணைஞ்சிரும். அத ‘உயிரோடு காப்பாத்தி’ போறதே பெரிய வேலை !!!


சைக்கிளில் கட்டாயம் லைட் தேவை.  அப்போ இதெல்லாம் எனக்குப் புரியலை.

அன்னைக்கும் இன்னைக்கும் ஒரு பெரிய வித்தியாசம். நாங்களும் அப்போவெலலாம் தப்பு செஞ்சோம். லைட் இல்லாம இரவில் சைக்கிள் ஓட்றது ... டபுள்ஸ் போறது ... NO ENTRY-ல் போறது .... ஆனால் தப்பு செய்றோம் அப்டின்ற பயத்தில் பயந்து பயந்து போவோம். மனசாட்சி குத்தும்.

இப்போ மக்களுக்கு இது மாதிரி தப்பு செய்யும் போது  கொஞ்சம் கூட பயம் இல்லையே.

ஏன்?



*

Monday, December 24, 2012

618. காணாமல் போன நண்பர்கள் - 10 - இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பு







*


அதீதம் டிசம்பர் மாத இரண்டாம் இணைய இதழில் இடம் பெற்ற ?????




 1960 -61 ஆண்டில் .... 

படிப்பு முழுவதுமே வீட்டில் இருந்து படித்தது தான் - ஒரே ஒரு வருஷம் மட்டும் ஹாஸ்டலில் இருந்து படித்தேன். 1960-61 - Pre-University Course.  ’நவீனத்துவம் அப்டின்னா ரொம்ப ரீசன்டான விஷயம்னு அர்த்தம். பிறகு அதில எப்படி பின்நவீனத்துவம்னு ஒண்ணு இருக்கும்?’ அப்டின்னு ஒரு பெரிய எழுத்தாளர் - 1960-80 - கேட்டார். ரொம்ப நியாயமான கேள்வியாக அது இருந்துச்சு. அது மாதிரிதான் இதுவும். இந்த வகுப்பை நடத்துவது Universityதான். ஆனால் அதுக்குப் பேரு மட்டும் Pre-University. எப்படியோ இதுவும் பின் நவீனத்துவம் மாதிரி ஒரு Oxymoron ! 

படிச்சது St. Xavier's College, Palaymkottai. பெரிய ஆளுக எல்லாம் க்ளாஸ்மேட்டாக இருந்திருக்காங்கன்னு பின்னால தெரிஞ்சுது. ரொம்ப green horn ஆக இருந்த ஆண்டுகள் - எல்லா விஷயத்திலும். கால் சட்டை பத்தாமப் போய், நீளக் கால்சட்டை அதிகமாக இல்லாமல், ஈடு கட்ட நாலு முழ வேஷ்டி ஒண்ணு ரெண்டு .. அதையும் கட்டத் தெரியாது; கட்டினாலும் முதல் நாளே கட்டத் தெரியாம கட்டி கால் கிட்ட வேட்டி கிழிந்து விடும்.  என்னத்தையோ போட்டுக்கிட்டு ஒப்பேத்தின ஆண்டு. இதில் ஹாஸ்டல் வாழ்க்கை வேறு, உலகமும் புரியாம, வாழ்க்கையும் பிடிபடாமல் ரொம்ப வித்தியாசமா இருந்த வருஷம். இதில் புதிதாக  ஹாஸ்டல் வாழ்க்கை.வீட்டோடும் ரொம்ப ஒட்டு இல்லாமல் இருந்த வருஷம். என்னை நானே நினச்சிப் பார்த்தா ரொம்ப பாவமான பையனாக இருந்திருக்கிறேன். 

Britto Hostel - இது கத்தோலிக்க கிறித்துவ மாணவர்களுக்கானது. அதனால் காசு கொஞ்சம் கம்மி. அதோடு சாப்பாடு சமாச்சாரமும் கொஞ்சம் கம்மின்னு சொல்லுவாங்க. ஆனாலும் மொதல் மொதல்ல வீட்டை விட்டு வெளியே சாப்பிடுற அனுபவம். ரொம்ப வித்தியாசமா இருந்தது. அதுவும் ஞாயிற்றுக் கிழமை காலையில் ஊத்தப்பம் போடுவாங்க. ஆளுக்கு மூணோ .. நாலோ போடுவாங்க. அதைத்  தட்டில் வச்சதும் நடுவிலே ஒரு குழி போடுவோம். அதில தண்ணியா ஒரு கறிக்குழம்பு ஊத்துவாங்க. எப்டின்னே தெரியாது. கறித்துண்டுகள் கடுகு சைஸில் அப்பப்போ கையிலேயோ வாயிலேயோ தட்டுப் படும்.ஆனால் எங்க எல்லோருக்கும் அது ரொம்ப பிடிக்கும். இன்னும் ஞாபகத்தில் இருக்குன்னா .. பார்த்துக்குங்களேன்!

மொதல்ல கொஞ்ச நாளைக்கு போடுற சாப்பாடு பத்தாது. ஆனால் சீனியர் அண்ணன்கள் சாப்பிட முடியாம மிச்சம் வைப்பாங்க. அதில் அப்படியே ஐக்கியமாகி சில P.U.C. பசங்க அந்த அண்ணன்மார்களோடு சாப்பிட சேர்ந்து போவோம். பூரி வச்சா அதில ஒண்ணு .. ரெண்டு  நம்ம ப்ளேட்டுக்கு வந்திரும். அதே மாதிரி இட்லிலேயும் பங்கு வந்திரும். ஆனால் இதெல்லாம் அரைப் பரிட்சை வரைதான் .. அதுக்குப் பிறகு அவங்க வைக்கிறதே போதும்னு எங்களுக்கும் ஆயிடும்.   மீன் குழம்புன்னு ஒண்ணு வைப்பாங்க; வீட்ல அந்த மாதிரி மீன் சாப்பிட்டதில்லை. அதாவது ஒரே ஒரு துண்டு மீன் வைப்பாங்க. அதில் முள் .. கிள் எதுவும் இருக்காது. என்ன மீனோ.. அது மாதிரி முள் இல்லாத மீன் வீட்ல சாப்பிட்டதேயில்லை. சரி .. சாப்பாடு பத்தி இப்ப என்ன .. நம்ம கதைக்குப் போவோம் ...

கழிவறை வரிசையாக இருக்கும். ‘தம்’மடிக்கிற ஆளுகளுக்குன்னு சில அறைகள் உண்டு. தீக்குச்சி .. தீப்பெட்டி சைடு எல்லாம் அங்கங்க இருக்கும். ஒரு தடவையோ ரெண்டு தடவையோ போனேன். இழுக்கிற சுகத்தை விட வார்டன் சாமியார்  வந்து பார்த்திருவாரோன்ற பயம் ரொம்ப. அதினால் அங்கே தம் அடிக்கிறதை விட்டாச்சு. குளிக்கிறது எல்லாம் வெளியில ஒரு பெரிய தொட்டி இருக்கும். எப்போதும் தண்ணி நிறைஞ்சிருக்கும். மொத ரெண்டு போணி தண்ணி ஊத்துறது எல்லாமே ஒரே ஸ்டைல் தான். டொம்முன்னு பெரிய சத்தத்தோடு போணியை அடித்து குளிர்ந்த நீரை மேல ஊத்திக்குவோம்.

நண்பர்கள் அப்டின்னும் ரொம்ப கொஞ்ச பேருதான். ஹாஸ்டலில் தேவராஜ் அப்டின்னு ஒருத்தன். என் வகுப்பு கிடையாது. ஆனால் என் விடுதியறையிலிருந்து நாலைந்து அறை தாண்டி இருப்பான். விளையாட்டு நேரத்தில் ஒண்ணா இருப்போம். ரிங் டென்னிஸ் சேர்ந்து விளையாடுவோம்.  சாப்பிடச் செல்லும் போது சேர்ந்து போகும் நண்பன். ஒரு விடுமுறைக்கு வீட்டுக்கு போய்ட்டு வந்த அவன் ஒருநோட்டைக் குடுத்துப் படி அப்டின்னான். ஒரு கதை எழுதியிருந்தான். ஒரே காதல் கதை தான். நம்ம சினிமாவும் கதைகளும் காதலைத் தாண்டி எப்போதோன் வெளிய போயிருக்கு ...? வாசிச்சேன். நல்லா புரிஞ்சுது. பய எதுலேயோ உழுந்துட்டான். சொந்தக்காரப் பொண்ணு. ஆனாலும் எங்க பழக்கத்தில அதையெல்லாம் அவன்கிட்ட நான் கேட்கவில்லை. ஆனா கதை வாசித்ததும் அதைப் பற்றிக் கேட்டான்.

அவன் சாப்பாடு சாப்பிட உட்கார அந்தப் பெண் பரிமாறுகிறாள். கழுத்துச் சங்கிலி அவன் கண்முன்னால் ஆடுகிறது. ... இப்படியெல்லாம் போகும். நான் அந்தக் கதையைத் தொடர்ந்து .. அந்தச் சங்கிலி ..  இன்ன பிற  .. சில ‘உணர்ச்சி பூர்வமான’ after thoughts பத்திச் சொன்னேன். அது அவனுக்கு ரொம்ப பிடிச்சிது. என் கதையைத் தொடர்ந்து அதை எழுதுன்னான். நானும் எழுதினேன். அதை வாங்கிட்டு போய், அதுவும் அடுத்த லீவுக்கு வீட்டுக்குப் போய்ட்டு வந்ததும், மறுபடி அவன் எழுதி என்னிடம் கொடுக்க ... நான் தொடர ... மறுபடி அவன் எழுத ... ஆகா .. அப்டி இப்டின்னு ரெண்டு குயர் நோட்டு ஒண்ணு நிறம்புறது மாதிரி ஒரு ‘மகா காவியம்’ ரெண்டு பேரும் சேர்ந்து படைச்சோம்.  ஒரே ஒரு வாசகன் எங்களுக்கு. தேவராஜின் ரூம் மேட். அவனும் ஆஹா .. ஓஹோன்னான். என்னிடம் தனியா அவன், ‘இந்தப் பய தேவராஜ் காதல்ல உழுந்துட்டான் .. அதைப் பத்தி எழுதுறான் ... நீ எப்டிடா.. எதிலயும் உழாமலே வெளுத்துக் கட்டுற?’ அப்டின்னான். 

இப்படிப்பட்ட ஒரு ’மஹா காவிய’த்தை யார் வெச்சுக்கிறதுன்னு ஒரு பேச்சு வந்தது. தேவராஜ் அது தனக்கு வேணும்னுட்டான். எழுத ஆரம்பித்ததும் அவன். முக்கிய சரக்கெல்லாம் அவனுடையது. நான் எப்படி அதைக் கேட்க முடியும்? இந்தக் காலம் மாதிரி இருந்திருந்தா at least  ஒரு photocopy  எடுத்திருப்போம். அதெல்லாம் அந்தக் காலத்தில் ஏது. அதனால் நான் படைத்த ஒரு மஹா காவியத்தின் நகல் கூட என்னிடம் இல்லாது போயிற்று. நண்பனின் தொடர்பும் இல்லாது போயிற்று.

ச்சே .. தமிழ் இலக்கிய உலகிற்கு எவ்வளவு பெரிய இழப்பு ...?! 

மலரும் ஒரு எழுத்தாளன் அங்கே செத்து விட்டான் என்பது தான் ஒரு மாபெரும் சோகம்.  :(


அப்போ நம்ம படைப்பெல்லாம் அப்படி ஆச்சுன்னா ...
 

                                                 ......  இப்போ நம்ம நிலைமை இப்படி ஆகிப் போச்சு !!!


*


*

Sunday, December 09, 2012

613. காணாமல் போன நண்பர்கள் - 9










*

அதீதம் இணைய இதழில் வெளியான என் கட்டுரையின் மறுபதிப்பு.



*


பள்ளிக்கூடத்தில் எத்தனை எத்தனை நண்பர்கள். ஆனால் இப்போது, காலம் கடந்த காலத்தில் அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் வெகு சில பெயர்கள் மட்டுமே நினைவுக்குள் வருகின்றன. பெயர்கள் இல்லாத சில முகங்களும் நினைவுக்கு வருகின்றன. அதிலும் ஆரம்ப வகுப்புகளில் நினைவுக்கு வந்த அளவு கூட உயர் பள்ளி நாட்களில் பெயர்கள் நினைவுக்கு வரவில்லையே என்று வருத்தமாகத்தான் இருக்கிறது. அப்படி கொஞ்சம் நினைவுக்கு வரும் சில நண்பர்களின் தொகுப்பு தான் இது.


ஆறாம் பார்மில் எனக்கு அடுத்ததாக பெஞ்சில் அமர்ந்திருந்தவனின் முத்ல் பெயர் நினைவுக்கு வரவில்லை. இரண்டாவது பெயர் பார்க்கர். சிகப்பா, உயரமா, ஒல்லியா இருப்பான். பய .. செம காட்டான். என் கூட அடிக்கடி சண்டை போடுவான். பக்கத்தில் வேறு இருப்பானா ... எப்போதும் என்னை நெருக்கி இடித்துக் கொண்டு எனக்கு அடுத்த பக்கம் இருப்பவனோடு என்னை மோத விடுவான். ஆனால் என்னை அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும். நான் இட்ம் மாறுகிறேன் என்றால் நாலைந்து நாளைக்கு ஒழுங்காக இருப்பான். பிறகு பழைய கதையை ஆரம்பித்து விடுவான். நிறையகதைவிடுவான். ஒரு. கதை மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது. பல் விளக்க பேஸ்ட் தீர்ந்து போய் விட்டால் நீம் சோப்பில் பிரஷை நனைத்து தேய்த்துக் கொள்வேன் என்பான். உண்மையோ என்னவோ தெரியாது ... ஆனால் அவன் பல் நல்ல வெள்ளையாகத் தானிருக்கும்!


எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் ஒரு பெரிய பையன்இருப்பார். அவரது பெயர் அப்துல்லா. எங்கள் தெருப்பக்கம் இருந்து தான் வருவார். ஒரு வேளை வயதும் அவருக்கு அதிகமாக இருக்கலாம். வகுப்பில் வெகு சிலரிடம் மட்டுமே பேசுவார். எங்களுக்கெல்லாம் அவர் தொடர்பில்லாத மனிதர். ஆசிரியர்கள் கூட அவரை அதிகமாகத் திட்ட மாட்டார்கள். ஆனால் பள்ளிக்கூடம் படித்து முடிந்ததும் அவரை நான் அடிக்கடி பார்ப்பேன். தெற்குவாசல் மார்க்கெட்டில் முதல் கடை அவர்களுடையதாக அப்போது இருந்தது. மாம்பழம் விற்பார்கள், இவர் கடையில் இருக்க மாட்டார். எப்போதாவது கடைக்கு வெளியே முதலாளியாக நிற்பார். நான் அந்தப் பக்கம் போனாலும் அவர் என்னைக் கண்டுக்க மாட்டார். நானும் ஒதுங்கி வந்து விடுவேன். தெற்குமாரட்டு மார்க்கெட்டை அவர் டென்டர் எடுத்திருப்பார் போலும். தினமும் ஒர் சின்ன காக்கிப் பை ஒன்றை கையில் வைத்துக் கொண்டு தெருவில் இருக்கும் ஒவ்வொரு கடையாக காசு வசூலித்துக் கொண்டிருப்பார். நாங்கள் பள்ளி முடித்து ஓரிரு வருஷங்களில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த போஸ்ட் ஆபிசுக்கு எதிர்த்தாற் போல் ஒரே மாதிரியாக இரண்டு பெரிய வீடுகள் கட்டினார்கள். கட்டியதும் ஒரு நிக்காஹ் ... நமது வகுப்புத் தோழருக்குத் தான். உள்ளதே பெரியஆளாக இருப்பார். திருமணம் ஆனதும் இன்னும் பெரிய ஆளாக மாறி விட்டார். அதன்பின் அவர் என் வகுப்புத் தோழர் என்பதை நான் மறந்தும் விட்டேன்; மறைத்தும் விட்டேன்.


 எங்கள் வகுப்பில் ஒரு வட இந்தியப் பையன். பெயர் என்னவோ ஒரு லால். மதுரையில் ஒரு பெரிய ரெடிட்மேட் கடை அவர்களுடையது. இவரை ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன் லயன்ஸ் கிளப் ஒன்றிற்கு நான் பேச்சாளனாகப் போயிருந்த போது பார்த்தேன். மீட்டிங் முடிந்து காபி சாப்பிடும்போது அவர் பெயரைச் சரியாகச் சொல்லி நாங்களிருவரும் வகுப்புத் தோழர்கள் என்றேன். அவருக்கு நினைவில்லை. அன்று நான் ஷூ போட்டிருந்தேன். அவர் செருப்பு போட்டிருந்தார். அட ... எதற்கு இதைச் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? பள்ளியில் படிக்கும்போது இவன் அடிக்கடி கருப்பு ஷூ போட்டு வகுப்பிற்கு வருவான். எட்டாவது வகுப்பில் என் அப்பாவிடமும் இவன் ஒரு மாணவன். ஒரு முறை என் அப்பாவிடம் எனக்கும் அவனை மாதிரி ஷூ ஒண்ணு வாங்கிக் கொடுங்கள் என்றேன். என் அப்பா, ‘அடச் சீ ... போடா ... உன் அப்பன் ஒரு மாசத்தில் சம்பாதிக்கிறதை, அவன் அப்பன் ஒரு மணி நேரத்தில் சம்பாதிக்கிறான். அவன் மாதிரி ஷு கேக்குதா உனக்கு!என்றார், அவரை லயன்ஸ் மீட்டிங்கில் பார்த்ததும் இந்த நிகழ்ச்சிதான் என் நினைவுக்கு வந்தது.


அருட்பிரகாசம் அப்டின்னு ஒரு நண்பன். இவனை எனக்குப் பள்ளியில் படிக்கும்போது தெரியாது. அவன் வேறு செக்‌ஷன். பள்ளி முடித்து நான் கல்லூரி போன போது படிக்கிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு பள்ளி வளாகத்திற்கு வந்து விடுவேன். என்னைப் பார்த்து பரிதாபப் பட்ட ஒரு ஃபாதர் எனக்குப் படிக்க ஒரு அறை கொடுத்தார். அப்போது என்னோடு பள்ளியை முடித்த அருட்பிரகாசம் அரட்டை அடிக்க அந்த அறைக்கு வருவான். அவன் அப்போது பள்ளியில் வேலைக்கு சேர்ந்து விட்டான். ஏழ்மை தான் காரணம். அவனுக்குப் படிக்க நிறைய ஆசை. வழியில்லாது போயிற்று., நன்றாகப் பாடுவான். அதிலும் அவன் பாடும் சமரசம் உலாவும் இடமேஎன்ற சீர்காழி பாடிய, படத்தில் சுடுகாட்டில் பாடும் அந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். அடிக்கடி அதைப் பாடச் சொல்லிக் கேட்பேன். அது ஒரு காலம் ...!



இன்னொரு நண்பன். செளந்திர ராஜன். அவனும் எட்டாவது வகுப்பில் அப்பாவிடம் ட்யூஷன் படித்தான். எனக்கும் க்ளாஸ் மேட். சாதாரண பையன் தான். ஆனால் அவன் ஒன்பதாவது வகுப்பு போனவுடன் குழந்தையில்லாத அவன் பெரியப்பா அவனை தத்து எடுத்துக் கொண்டார். ஒரு வருஷத்தில் என்ன மாற்றம். தியேட்டர் ஓணர் .. அது இதுன்னு பெரிய ஆளாக ஆகி விட்டான். பின்னாளில் ஒரு கல்லூரியையே ஆரம்பித்த மதுரையின் பெரிய ஆளாகி விட்டார். ஆண்டுப் பிறப்பன்று ஓரிரு ஆண்டுகள் வீட்டுக்கு வந்து அப்பாவைப் பார்த்து, டைரி, கால்ண்டர் எல்லாம் கொடுத்துவிட்டுப் போன பழக்கம் இருந்தது. பின்னால் நின்று போனது


மதுரையில் உள்ள ஒரு பெரிய பேக்கரியின் உரிமையாளரின் மகன். என்னைவிட ஓரிரு ஆண்டுகள் மூத்தவர். அவரின் பெயர் மாரிமுத்து. அவர் எங்கள் வீட்டுக்கு அப்பாவிடம் ட்யூஷன் பயில வருவார். அந்தக் காலத்தில் வரும் சைக்கிள்கள் எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மூணே மூணு வகையாக வேண்டுமானால் பிரிக்கலாம். 24 இஞ்ச்; 22 இஞ்ச்; & 18 இஞ்ச். அனேகமாக எல்லார் சைக்கிளும் 22 இஞ்ச் தான். சிலர் பெரிய வண்டியாக, உயரமாக 24 இஞ்ச் வைத்திருப்பார்கள். இப்போது அது இல்லாமலே போய் விட்ட்து. இந்த 18 இஞ்ச் சைக்கிள்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப ரேர். பணக்கார வீட்டுப் பசங்க மட்டும் வைத்திருப்பாங்க; அதனால் இந்த சைக்கிளுக்குக் ரொம்ப மதிப்பு.. இந்த அண்ணன் எங்கள் வீட்டுக்கு அந்த சைக்கிளில் தான் வருவார். எனக்கு அப்போ 22 இஞ்ச் சைக்கிளில் குரங்குப் பெடல் போட்டு மட்டும் ஓட்டத் தெரியும்.  இந்த் சைக்கிள் ஓட்ட செம ஆசை. ஆனால் அந்த அண்ண்னிடம் கேட்டு வாங்கினால் அப்பாவுக்குத் தெரிந்தால் செமையா எனக்கு ஏதாவது கிடைக்கும். ஒரு நாள் அவர் வந்து சைக்கிளை வாசலில் நிப்பாட்டும் போது நான் ஜொள்ளு விட்டு நிற்பதைப் பார்த்து விட்டார். சைக்கிள் ஓட்றியா?ன்னு கேட்டார். வேண்டாம்னு சும்மானாச்சுக்கும் சொன்னேன். இல்லடா ... ஓட்டு ... அப்பாட்ட சொல்ல்லைன்னார். ஆஹா ... சைக்கிளை வாங்கி குரங்குப் பெடலிலேயே ஓட்ட ஆரம்பித்தேன். சின்ன சைக்கிளா .. அது கஷ்டமாயிருந்த்து. அப்படியே சும்மா ஜாலியா காலை பார் மேலே போட்டேன். பயமா போச்சு ... ஆனா நல்லா ஓட்ட முடிந்தது. அப்டியே சீட்ல ஏறி உட்கார்ந்த்தேன். அட்டே ... அன்னைக்குத்தான் முதல் தடவையா சைக்கிளை முழுசா சீட்ல உட்கார்ந்து ஓட்டப் பழகினேன்.


*