Sunday, August 18, 2019

1061. எங்க காலத்திலெல்லாம் ..., 7 --நல்லவேளை .. அந்த போலீஸ்காரங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க. பாகம்: 2


*
முந்திய பதிவு; https://dharumi.blogspot.com/2019/08/1060.html

*

மதுரையில் ஒரு தியேட்டர் இருந்தது. தங்கம் தியேட்டர். ஆசியாவிலேயே பெரிய தியேட்டர் என்ற பெயருடன் இருந்தது. பெரிய கால்பந்து மைதானம் மாதிரி பெரிய்ய்ய்ய்ய தியேட்டர். நானும் நண்பன் ஆல்பர்ட்டும் படம் பார்க்கப் போனோம். பால்கனி - அதை பால்கனின்னே சொல்லக்கூடாது; ஏன்னா அது அத்தனை பெருசா இருக்கும். - மெத்தை டிக்கெட். கூட்டமே இல்லாத படம். 

 

அந்தக் காலத்தில் தியேட்டரில்  சிகரெட் குடிக்கலாம். திடீர்னு ஒரு சட்டம் போட்டாங்க .. தியேட்டரில் புகையை நீங்க பிடிச்சா நாங்க உங்களைப்  பிடிப்போம்னாங்க காவல் துறை. இதுக்காக அப்பப்போ போலீஸ்காரங்க தியேட்டருக்கு திடீர் விஜயம் பண்ணுவாங்க. பிடிச்சா பிடுச்சிருவாங்க. அதனால் அப்போ சில தியேட்டர்ல எங்கள மாதிரி குற்றவாளிகளைத் தப்பிக்க வைப்பதற்காக ஒரு சிக்னல் கொடுப்பார்கள். தங்கம் தியேட்டரில் ஸ்க்ரீனுக்கு வலது பக்கம் ஒரு சிகப்பு லைட் ரெண்டு மூணு தடவை விட்டு விட்டு எரியும். புகை  பிடிப்பவர்களுக்கான சிக்னல் அது. போலீஸ்காரங்க வர்ராங்கன்னு அர்த்தம். நானும் நண்பனும் சிகரெட் குடிச்சிக்கிட்டு இருந்தோமா .. அப்போ லைட் எரிஞ்சிது. உடனே வெளிய வெராண்டாவிற்கு வந்துட்டோம். 

 

அந்த வெராண்டாவே அம்புட்டு அகலமா இருக்கும். போலீஸ்காரர் வந்தார். நாங்க வெளிய நின்னு சிகரெட்டு குடிச்சிக்கிட்டு இருந்தோம். அவருக்கு அன்னைக்கி கீழ ரெண்டே ரெண்டு கேஸ் மட்டும் கிடைச்சிருந்தது போலும், மேலே வந்தார். ஆட்களும் கம்மி. நாங்களும் வெளிய நின்னு குடிச்சிக்கிட்டு இருந்தோம். பாத்துட்டு திரும்பிப் போனார். இப்படி கேஸ் கிடைக்கலையேன்னு வருத்தம்னு நினைக்கிறேன். போனவர் திரும்பி எங்ககிட்ட வந்தார். ’வாங்க’ன்னு எங்களைக் கூப்பிட்டார். ‘சார், நாங்க எதுக்கு’ன்னு கேட்டேன். ‘சிகரெட் குடிச்சதுக்கு’ன்னார். நான் உடனே ‘Sir, we are smoking only in the verandah' என்றேன். அவர் உடனே ‘But all புகை went inside' என்றார். கொஞ்சம் சிரிச்சிக்கிட்டார் - அவர் ஆங்கிலத்திற்காக அது இருக்கலாம்னு நினச்சேன். அப்படி இங்கிலீஸ் பேசினதுனால தொடர்ந்து அவர்ட்ட ஆங்கிலத்திலேயே சம்சாரிச்சேன். 

 

அவர் கூடவே போனோம். கீழ ஒரு சைக்கிள் ரிக்‌ஷாவில் ரெண்டு பேரு பிடிச்சி ஏத்தி வச்சிருந்தார். எங்களையும் அதில் ஏறச் சொன்னார். நான் 'Sir, we have our vehicle' என்றேன். சரி, அதில ஏறி வாங்கன்னு சொன்னார். அவர் அவர் சைக்கிளில் ஏறினார். நாங்களும் சைக்கிளில் வருவோம்னு எதிர்பாத்திருந்திருப்பார். நாங்கள் ஜாவா பைக்கில் ஏறியதும் ஒரு மாதிரியாக எங்களைப் பார்த்தார். அப்போதெல்லாம் ஊர்ல, நாட்ல பைக் வச்சிருக்கிற ஆளுக கொஞ்சம் கம்மி தானே. நாங்க அவர் கூடவே அப்பப்போ (ஆங்கிலத்திலேயே) பேசிக்கிட்டு வந்தோம். தங்கம் தியேட்டருக்குப் பக்கத்தில் இருந்த ஞாயிற்றுக் கிழமைச் சந்தைக்குப் பக்கத்தில் அல்லது பழைய தேவி தியேட்டருக்குப் பக்கத்தில் இருந்த போலீஸ் ஸ்டேஷன். அங்கே போனோம். வண்டியை நிறுத்தியதும் மீண்டும் வெராண்டாவில் தானே சிகரெட் குடித்தோம் அப்டின்ற லா பாயிண்டை மீண்டும் எடுத்து உட்டேன் - ஆங்கிலத்தில தான். ஸ்டேஷன் வரை வந்ததும் அந்த ரிக்‌ஷாவில் இருந்த ஆட்களை உள்ளே போகச் சொன்னார். நாங்கள் வெளியே இருந்தோம். அந்த ஆட்கள் உள்ளே போனதும் பயங்கர ஒரு புன்னகையோடு ‘நீங்க போகலாம். 'But I leave you only for your English!' என்றார். (எனது ஆங்கிலத்தின் முதல் வெற்றி என்று ‘பொன்னெழுத்து’களால் என் வரலாற்றில் இடம் பெற வேண்டிய வசனம் அது!!!) நான் கைநீட்டி shake hand  கொடுத்தேன். என் பெயரைச் சொன்னேன். அவரும் அவர் பெயரைச் சொல்லி விடை கொடுத்தார். பல வருஷம் அவர் பெயரை நினைவில் வைத்திருந்தேன். ஏதோ ஒரு நல்ல சாமிப் பெயர். வெங்கடசாமி மாதிரி ஒரு பேரு.  இப்போ மறன்னு போயி!

 

 

அவர் போகச் சொன்னதும் அப்படியே வீட்டுக்கா போக முடியும். தியேட்டரில் இருந்தவர்களுக்கு நாங்கள் ‘விடுதலை’ ஆனதைச் சொல்ல வேண்டாமா? பார்க்கிங் லாட்டில் இருந்த ஆளுக்கு எங்களையும் தெரிந்திருந்தது. ஆகவே வண்டியை வச்சிட்டு, கேட்ல இருந்த ஆளுககிட்டயும் சொல்லிட்டு, பாதி டிக்கட்டை காமிச்சிட்டு - எல்லோரும் எங்களை ரொம்ப ஆச்சரியமாகப் பார்த்தார்கள்; அதற்காகத்தானே நாங்களும் மீண்டும் தியேட்டருக்கு வந்தோம்! - மீதிப் படத்தைப் பார்த்துட்டு வந்தோம்.

 

 

 

 

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxW9jHYvapGLN1J6wQWx4HwFxF-WAfsc7cka7L2kWWKz0N8nchufxRlSRFxyyR1KAjJlf3OkWEnKmrO8CGw-E6PzKSnjCfIPhtIZrOLkVwPnyqFUSNrEdquxZ-2Rj_4VShLhXWIQ/s1600/mano.jpg

 

 

R.S. மனோகர் அப்டின்னு ஒரு நடிகர். சினிமாவில் நடித்தாலும் அதை விட நாடகக் காதலர். ஒரு பெரிய நாடகக் கம்பெனி நடத்தினார். புராணக் கதைகள் தான் அவர் கதைக் களங்கள். அவருடைய செட்டிங்ஸ் அந்தக் காலத்தில் மிகப் பிரபலம். நாடக மேடையிலேயே பல வித்தைகள் செய்பவர். மதுரையில் அவரது நாடகக் கம்பெனியிலிருந்து வரிசையாக சில நாடகங்கள்.  டிக்கட் வாங்கிட்டு நானும் நண்பன் ஆல்பர்ட்டும் நாடகம் பார்க்கப் போனோம். நாடகத் தலைப்பு மறந்து போச்சு. முதல் சீன் மட்டும் நன்கு நினைவில் இருக்கு. ஏழு லோகம் காண்பிக்க வேண்டும். ஒருவர் ஸ்டேஜ் ஆரம்பத்திலிருந்து நடந்து கொண்டே போக, அங்கங்கே சீன் மாறி, பல லோகங்களைக் காண்பிப்பார்கள். மெய்மறந்து பார்த்தோம். ஆனால் அது வருண பகவானுக்குப் பிடிக்காமல் போனது. மழை சட்டென்று ஆரம்பித்தது. நனைந்து சில நிமிடங்கள் பார்த்தோம். பெரு மழை. ஆகவே நாடகம் நிறுத்தப் பட்டது. அப்போது ஓர் அறிவுப்பு. இந்த நாடகம் நாளைக்கு நடக்கும் என்று.

 

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFcm_P3gkyhRrwuIn1uPrULjJa59LlmQpWSLqkiREeLyLCD0L7_8TOt1lh_4DQU6SI7Ag1Bpll2TKQwCNnafniY-qXPO_uJhah9NFeha0BDZLA_rLpIxVmrpncbhYiq-bbgK1CPw/s1600/manohar.jpghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgg3pMTr1tQQLCKAIMyWWgaOPhTjXlsZZWSDk_mDGjUdPxXDdmrWgIOQxyOtHdOKMlmAT4-VhWzE81y4to6E59-9cx0JzDAh7JJcTHhqseM8oPrrXNDJJkaPhrYORd-UfcbqC5ing/s1600/manao2.jpg

 

 

அடுத்த நாள் நாடகம் பார்க்கப் போனோம். அனுமதித்தால் பார்ப்போம்; இல்லாவிட்டால் ஏதாவது ஒரு சினிமா போவோம்னு திட்டம் போட்டுக்கிட்டு போனோம். பழைய டிக்கெட் என்பதால கேட்டில் நிறுத்தி வைத்து விட்டார்கள். பழைய டிக்கட் செல்லாது என்றார்கள். எங்களது லா பாயிண்ட் என்னென்னா ... ’நேத்து என்ன சொன்னீங்க? நேத்தைய ட்ராமா இன்னைக்கி இருக்கும்னு சொன்னீங்க.  இந்த டிக்கெட் செல்லாதுன்னு சொன்னீங்களா? சொல்லியிருந்தா நாங்க வந்திருக்கவே மாட்டோம்.அதுனால இன்னைக்கி எங்களை அனுமதிக்க வேண்டும்’ என்றோம். எங்களை மாதிரி பத்து இருபது பேர் சேர்ந்து விட்டோம். நம்ம லா பாயிண்டை எல்லோரும் பிடிச்சிக்கிட்டாங்க. கேட்டில் தகராறு மாதிரி இல்லாவிட்டாலும் கொஞ்சம் கூட்டம் சேர்ந்து போச்சு. போலீஸ் படை வந்தது. எங்களை அப்புறப் படுத்த முயற்சித்தார்கள். 

 

நானும் நண்பனும் முன்னுக்கு போய் ‘எங்களை நாடகக்காரர்களோடு பேச அனுமதிக்கணும்’ என்றோம். You are making a law & order problem’ என்றார் இன்ஸ்பெக்டர். நான் சொன்னேன்: ‘ சார், இது law & order problem இல்லை; but a problem of justice' என்றேன். ஏன் என்று கேட்க நாங்கள் எல்லோரும் அந்த ஒரே பாயிண்டைப் பிடித்துக் கொண்டோம். நான் இன்னும் கொஞ்சம் மசாலா சேர்த்தேன்.’நாங்கல்லாம் சும்மா கேட்கவில்லை; எல்லாரும் டிக்கெட் வாங்கினவங்க... ஓசி ticket ஏதும் கிடையாது. Tickets .. bought from our hard earned money...'  நான் மேலும் ‘எங்களை கம்பெனி மேனேஜர் யாரையாவது பேசச் சொல்லுங்கள். அது தான் சரி’ என்றேன். எங்கள் கூட்டமும் அதை ஆதரித்தது. 

 

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYvy9yWZmsIqLRdK1byudzJ88ZhQotSo72GDqA3q77qSkTBbph52rEuCTQ1doKGYovQiAcULsL-1__sRJDSNJnsXSSCRorMs6cxxiVtru_EKZnH0BlgRi8e5hAS-l_aPQbPqpPSg/s1600/mano1.jpg

 

 

இன்ஸ்பெக்டர் மேனேஜரோ..யாரோ ஒரு பொறுப்பான ஆளைப் பார்க்க உள்ளே போனார். எங்கள் புரட்சிக் கூட்டம் அனைவரும் போனவர் என்ன சொல்வாரோ என்ற ஆர்வத்தில் காத்திருந்தோம். போலீஸ்காரர் ஒருவரை அழைத்துக் கொண்டு  கேட் வரை வந்தார். ’யாராவது இவரிடம் வந்து பேசுங்கள்’ என்றார் இன்ஸ்பெக்டர். புரட்சிக் கூட்டம் பின் தங்க ஆரம்பித்தது. சரி .. துணிஞ்சி போவோம்னு நானும் நண்பனும் உள்ளே போய் எங்கள் கட்சியைச் சொன்னோம். வந்தவர் எங்களையும் மீதி வெளியே நின்றிருந்த புரட்சி வீரர்களையும் ஒரு பார்வை பார்த்தார். இன்ஸ்பெக்டரிடம் சொல்லி பு.வீ.களை உள்ளே அனுப்ப சொன்னார். எங்கள் இருவரையும் இங்கேயே நில்லுங்கள் என்றார். நாங்களும் சரி, பு.வீ.களும் சரி கடைசி வகுப்பு டிக்கட் தான் வாங்கியிருந்தோம். பு.வீ. எல்லோரும் கடைசி வரிசைக்குப் போனார்கள். நாங்களோ வெயிட்டிங்கில் இருந்தோம். ஆனாலும் எங்களை single out பண்ணி வச்சிருக்கிறதைப் பார்த்ததும் ஒரு சின்ன சந்தேகமும் பயமும் வந்தது. காத்திருந்தோம். 

 

போலீஸ்காரர்கள் எங்களை மானேஜரிடம் விட்டு விட்டுப் போய் விட்டார்கள்.

பு.வீ.கள் போய் அமர்ந்ததும் எங்கள் இருவரையும் அந்த மானேஜர் அழைத்துக் கொண்டு ஸ்டேஜ் பக்கம் சென்றார். தனியா கூட்டிட்டு போய் ... இப்படி ஒரு கற்பனை ஓடியது. ஆனாலும் தைரியத்தை கைவிடும் ஆட்களா நாங்கள்! அவரோடு சென்றோம். கூட்டிட்டு ஏறத்தாழ ஸ்டேஜ் வரை போய் விட்டோம். அங்கே போனதும் முதல் வரிசையில் உள்ள இரு சீட்களில் உட்காரச் சொன்னார். எங்களுக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. இல்லைன்னு சொல்லிட்டு மூணாவது நாலாவது வரிசையில் உட்கார்கிறோம் என்று சொல்லி அங்கே அமரப் போனோம். பின்னாலிலிருந்து ஒரு பெரிய விசில் சத்தம். திரும்பிப் பார்த்தோம். எங்கள் பு.வீ.கள் எங்களுக்கு கையை ஆட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். நாங்களும் கை ஆட்டி விட்டு உட்கார்ந்தோம். தற்செயலாகவோ வேண்டுமென்றோ இன்ஸ்பெக்டர் அந்தப் பக்கம் வந்து எங்களைப் பார்த்து சிரித்து தன் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார்.

 

 

இப்படியெல்லாம் இருந்தது. ஆனால் என் திருமணத்திற்குப் பின்னால் ஒரு நாள் மனைவியோடு கடைப் பக்கம் சுத்தி விட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தோம். அப்போது விளக்குத் தூண் பக்கத்தில் உள்ள மொட்டைப் பிள்ளையார் கோவில் பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் முன்னால் ஒரு சிறு கூட்டம். காவல் கோட்டத்தில் கூட இந்த இடம் பற்றி வருமே. அந்த இடத்தில் ஒரு சிறு குழந்தையோடு ஒரு பெண் நின்று அழுது கொண்டிருந்தாள். என்னவென்று கேட்டேன். அந்தப் பெண்ணும் கணவரும் குழந்தையோடு தெருவில் நடந்து போகும் போது ஒரு போலீஸ் ஜீப் அவர்களைக் கடந்து போயிருக்கிறது. அந்த ஜீப்களில் பக்கவாட்டில் தான் ஸ்டெப்னி இருக்கும். குழந்தையோடு போனவரின் கையில் அந்த டயர் ஒட்டி உறசியிருக்கிறது. பயத்தில் அவர் ஒரு கெட்ட வார்த்தையைச் சொல்லி விட்டார். திரும்பிப் பார்த்திருக்கிறார். போலீஸ் ஜீப். மன்னிப்பும் கேட்டிருக்கிறார். அவரை ஸ்டேஷன் வரை இழுத்துக் கொண்டு போய் உள்ளே வைத்து போலீஸ்காரனையே கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுவாயா என்று சொல்லி அவரை வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். அங்கிருந்து நான் என் மனைவியால் கடத்தப் பட்டேன். அதோடு ஒரு பயங்கர வார்னிங் வந்தது. யார்ட்ட விளையாண்டாலும் போலீஸ்காரங்க கிட்ட விளையாடாதீங்க அப்டின்னு.

அப்பீல் உண்டா என்ன? நானும் கேட்டு “நல்ல பையனாக” அன்றிலிருந்து மாறி விட்டேன் அல்லது மாற்றி விட்டார்கள். 

 

ஆனாலும் போலீஸிற்கும் நம் எல்லோருக்கும் வாழ்க்கையில் எப்படியும் ஒரு ஒட்டு ஏதாவது ஒரு சமயத்தில் வந்து விடுமல்லவா? போன ஆண்டு கூட எங்கள் குடியிருப்பில் உள்ள பூங்காவைப் பற்றிய ஒரு சின்ன தகராறில் போலீஸ் நல்லாவே உரசினாங்க. என்ன பண்ண .. அனுபவிச்சி தான ஆகணும். அதிலும் ஒரு சின்ன வயது போலீஸ்காரர் ... அடேயப்பா .. அம்புட்டு அதிகாரமும் அவர் பைக்குள் என்பது போல் அடாவடித்தனமாக பேசினார். எனக்கும் பழைய வேகம் கொஞ்சம் வந்தது. நண்பர்கள் என்னை அள்ளிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வெளியே கொண்டு போய் விட்டார்கள். போலீஸ் போலீஸ் தான். இல்லீங்களா?! ஏதோ என் ராசி.. அந்தக் காலத்தில .. நான் பார்த்த போலீஸ்காரங்க அம்புட்டு நல்லவங்களா இருந்திருக்காங்க.

 

 

பி.கு. எனக்குத் தெரிந்து காவல் துறையில் british legacy என்று சொல்வார்களே அந்த அடிமைத்தனம் உறைந்து நின்று விட்டது. ஆர்டர்லிகள் இருப்பதைப் பார்த்தாலே தெரியும். அதோடு கீழே உள்ளவர்களின் தலையில் தான் அதற்கு மேல் பதவியில் இருப்பவர்களின் கால்கள் இருக்கும். இந்த அடிமைத்தனத்தால் தான் அவர்களால் பொது மக்களின் நண்பராக இருப்பதற்கு முடியவே முடியவில்லை என்று நினைக்கின்றேன். அந்த காக்கியை அணிந்ததும் கீழே உள்ளவர்களைத் துச்சமாகக் கருதும் வழக்கம் இன்னும் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது. 

 

வாழ்க காவல் துறை. அவர்களிடமிருந்து விலகியே இருந்தால் நாமளும் வாழ்க ..

 

 

 

 



Friday, August 16, 2019

1060. எங்க காலத்திலெல்லாம் ... 6 - நல்லவேளை .. அந்த போலீஸ்காரங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க. பாகம்: 1




*
அடுத்த பதிவு: 
https://dharumi.blogspot.com/2019/08/1061-2.html   

*


நெருப்போடு பழகிறது மாதிரி ராசாக்கள் கூட பழகணுமாம். சொல்லியிருக்காங்க. ஆனா நாம எங்கே ராசா கூட பழகிறது. அட மந்திரியோடு கூட பழக முடியாது. முடிஞ்சதெல்லாம் போலீஸ்காரங்க கிட்ட மட்டும் கொஞ்சம் பழகியிருக்கோம்... கஷ்டப்பட்டிருக்கிறோம். ஆனா அப்படியே ரீவைண்ட் பண்ணப்போ ஒரு காலத்தில் நம்ம ராசி செமயா இருந்திருக்கு. போலீஸ்காரங்க கிட்ட கொஞ்சம் உரசல் அது இதுன்னு இருந்தாலும் ‘சூடு’ எதுவும் வாங்காம பொழச்சிக்கிட்டேன். நல்ல காலமா .. இல்ல அந்தக் காலத்தில இருந்த போலீஸ்காரவுங்க அம்புட்டு நல்லவங்களான்னு தெரியலை.




 கொஞ்சூண்டு ரீ வைண்ட் பண்ணினேன். போலீஸ்காரங்க கிட்ட உரசினதெல்லாம் நாலஞ்சி ஞாபகத்துக்கு வந்தது. அதெல்லாம் இப்போ பண்ணியிருந்தேன்னா உசிரு பொழச்சிருக்காதுன்னு தெரிஞ்சது.  யோசிக்கும் போது . இன்னொண்ணும் நினைவுக்கு வந்திச்சி. என்னன்னா .. ரீ வைண்ட்ல வந்த நிகழ்ச்சி எல்லாமே என் கல்யாணத்துக்கு முந்தினது. அதாவது 1973க்கு முந்தினது. இதுல ஒரு சின்ன குழப்பம் ... கல்யாணத்துக்கு முந்தி தைரியமா இருந்து போலீஸ்காரங்கட்ட கூட தைரியமா இருந்திருக்கிறேன். ஆனால் கல்யாணத்துக்குப் பிறகு அந்த தைரியமெல்லாம் ஒரேயடியாகப் போயிருச்சோன்னு தோணுச்சி. எப்படியோ பொழப்ப ஓட்டிட்டு இருக்கேன். ஓடட்டும் ...





அந்தக் கால பஸ்ஸில கடைசி வரிசையில் ஆறு பேர் உட்கார்ரது மாதிரி நீள சீட் ஒண்ணு இருக்கும். பஸ்ஸில் ஏறுவதற்கான வாசல் இந்த வரிசைக்கு முன்னல தான் இருக்கும். இந்த சீட் ரொம்ப அடக்கமான சீட்.  எவ்வளவு கூட்டம் வந்தாலும் நமக்குத் தொந்தரவு கிடையாது. கதவு பக்கத்தில இருக்கிறதுனால காத்து சும்மா ஜில்லுன்னு வரும். காலை கைய யாரும் மிதிக்க மாட்டாங்க. ஏன்னா ஏறும் படியை ஒட்டி ஒரு அடைப்பு இருக்கும். அதற்குள் தான் சொன்ன அந்த கார்னர் சீட். ராசா மாதிரி உக்காந்துட்டு வரலாம். அதனால் தனியா வர்ரவங்க, சுமை ஏதும் இல்லாதவங்க டக்குன்னு மொதல்ல பிடிக்கிற சீட் இது தான். ஒரு நாள் எங்கிருந்தோ மதுரைக்குப் போகும் பயணம். முதல்ல ஏறினதுனால அந்த சீட் கிடைச்சிது. ஏறி உக்காந்திட்டேன். ஆட்களும் ஓரளவு  வந்திட்டாங்க. 

அப்போ ஒரு போலீஸ்காரர் - முழுக்கால்சட்டை போட்டிருந்தார். ஏன்னா அப்போவெல்லாம் கான்ஸ்டேபிள்களுக்கெல்லாம் அரைக்கால் சட்டை தான் - அவரு இன்ஸ்பெக்டராக இருந்திருக்கணும். பஸ்ஸில ஏறினார் . ஒரு லுக் உட்டார். பாதிக்கு மேல் பஸ்ஸில ஆட்கள் இருந்தாங்க. எனக்கு அடுத்த சீட்டும் காலியாக இருந்தது. ஏறியவர் என்னைப் பார்த்து ‘அங்க தள்ளி உக்காருங்க’ன்னு சொல்லிட்டு என் சீட்டைப் பிடிக்கப் பார்த்தார். நான் நல்லா தள்ளி நான் இருந்த சீட்டில் உக்காந்திட்டு, பக்கத்து சீட்டைக் காண்பிச்சேன். ‘அங்க உட்காருங்க’ன்றதை அப்படி செஞ்சேன். அவருக்குக் கோபம் வருமா வராதா? வந்திச்சி. ‘ஏன் நீங்க அங்க உட்கார மாட்டீங்களா?’ன்னார். நான் உடனே “ஏன் நீங்க அங்க உட்கார மாட்டீங்களா!’ன்னு கேட்டேன். அது இன்னைக்கி நடந்திருந்தா ... சரி.. அந்தக் கற்பனை இப்போது எதுக்கு? அன்னைக்கி என்ன நடந்திதுன்னா ... இன்ஸ்பெக்டர் முன்னால ஒரு ஜன்னல் சீட் பார்த்து அங்க உக்காரப் போய்ட்டாரு. நல்லவரு தானே?




அடுத்து, அந்தக் காலத்தில மதுரையில கால்பந்து வருஷா வருஷம் நடக்கும். அண்ணா பத்தி அப்டின்ற கம்பெனி நடத்தும். எங்களுக்கெல்லாம் அது திருவிழாக் காலம். மாலையில பஸ்ஸைப் பிடித்து தமுக்கம் மைதானத்துக்குப் போய் அந்தக் காலரியில் உக்காந்து பார்த்தா ... அடடே..! அதிலும் அந்தப் பக்கத்தில் தேர்முட்டியில் கடை வச்சிருக்கிற கூட்டம் நிறைஞ்சி இருக்கும். எல்லாம் கடை முதலாளிகள். வயசும் நாப்பதைத் தாண்டி இருக்கும். அவங்க பக்கத்தில இருந்து மேட்ச் பார்க்கிறது ரொம்ப நல்லா இருக்கும். அப்படி லூட்டி அடிப்பாங்க. எல்லா டீம் பற்றியும் தெரிஞ்சி வச்சிருப்பாங்க. பிளேயர்களின் பெயர்களெல்லாம் அத்து படி. மதுரைக் கூட்டத்திற்கே அப்போ கூர்க்கா டீம், அடுத்து பெங்களுரிலிருந்து வரும் H.M.T. டீமிற்குத்தான் விசிறிகள் அதிகம். எங்க காலேஜ் விளையாட்டு வாத்தியார் லைன் அம்பயரா வருவார். அவருக்கு தலை வழுக்கை. அத வச்சி அவருக்கு ஒரு பட்டப் பெயர் - டைனமோ தலையான்னு கத்துவாங்க. 

சரி .. விளையாட்டு ஒரு பக்கம் இருக்கட்டும். நம்ம கதைக்கு வருவோம். ஒரு நாள் டைம் ஆகிப் போச்சு. கீழ வெளி வீதியில பஸ்ஸில அவசரமா போறோம். பஸ்ஸில நிறைய கால்பந்து ரசிகர்கள் தான். கீழவாசல் ஸ்டாப். அப்போவெல்லாம் டிவிஎஸ் தான் பஸ் ஓட்டிச்சின்னு நினைக்கிறேன். அவங்க பஸ் ஓட்டும் போது யாராயிருந்தாலும் பின்னால் இருந்து தான் ஏறணும்... முன் வழியில தான் இறங்கணும். அன்னைக்கி பாவம் ஒரு பிள்ளைதாய்ச்சி. பெரிய வயிறோடு கஷ்டப்பட்டு, முன் பக்கம் ஏற பார்த்தாங்க. நடத்துனர் கண்டிஷனா சொல்லிட்டார். பின்னால் போய் ஏறும்மா என்றார். அந்த அம்மாவால நடக்க முடியலை. பஸ்ஸும் கிளம்பியிருச்சி. அடுத்த ஸ்டாப். அப்போதிருந்த சிந்தாமணி தியேட்டர். இப்போ அங்க ராஜ்மகல் துணிக்கடை. அங்க பஸ் நின்னுது. பஸ் புறப்படும் போது முன் வழியா ஒரு போலீஸ்கார அய்யா - அரைக்கால் சட்டையோடு - முன்னால ஏறினார். நடத்துனர் என் பக்கம் நின்று கொண்டிருந்தார். அவர் அதைத் தடுக்கவில்லை. பஸ் புறப்படப் போச்சு. நான் சத்தமா நடத்துனரிடம் ’பாவம் அந்தப் பொம்பிளைய ஏத்தலை; இப்போ இவரை மட்டும் ஏத்துறீங்க’ன்னு கேட்டேன். இது நடந்தது அந்தக் காலத்தில இல்லையா? இப்போன்னா எல்லோரும் அவரவர் வேலையப் பார்த்துக்கிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. ஆனால் அப்போவெல்லாம் அப்படியெல்லாம் கிடையாது. பலபேர் எனக்கு சப்போர்ட் பண்ணி சவுண்டு உட்டாங்க. போலீஸ்காரர் என்னன்னு கேட்டார். சொன்னோம். நான் இறங்கிக்கிறேன் சொல்லி அவரே இறங்கி விட்டார். 


நல்ல போலீஸ்காரர். 

நியாயத்துக்கு ஆதரவளிக்கும் மக்கள்

அன்று அப்படி ... இன்று எப்படி ...?


இன்னும் தொடரும் ....

*