//பார்த்து முடித்துவிட்டு என்னால் சீராய் மூச்சுவிடமுடியவில்லை.
இந்த பதிவில் என்ன எழுதவென்று சரியாய் தெரியவில்லை.தொடங்க வேண்டும் என்கிற எண்ணம்தான் இருந்தது (இனி அது பார்த்துக்கொள்ளும்)// -
(அய்யனாருக்கு நன்றி)
மலைக்கோட்டை மாதிரி ஒரு தமிழ்ப் படம் பார்த்தோம்; அதற்கு விமர்சனம் ஒன்று எழுதினோம் என்றால் எவ்வளவு சுலபமா இருக்கு. காமெடி பற்றி ரெண்டு வார்த்தை; சண்டை பற்றி வழக்கமா வச்சிருக்கிற டெம்ப்ளேட்ல இருந்து ஒண்ணு; குத்துப் பாட்டு பற்றி ஒண்ணு அப்டின்னு எழுதிட்டு நாற்பதிலிருந்து நாற்பத்தைந்துக்குள் ஒரு மார்க் போட்டுட்டு போய்க்கிட்டே இருக்கலாம். வழக்கமா வர்ர நம்ம தமிழ்ப்படங்களுக்கு விமர்சனம்னு ஏதாவது எழுதிப் பாத்திட்டு, இப்போ இந்த மாதிரி படத்துக்கு முயற்சிக்கும்போதுதான் திரைப்பட விமர்சனம் என்பதே உண்மையிலேயே எவ்வளவு கஷ்டமான விஷயம்னு தெரியுது.
//நம் தமிழ்ப் படங்களை இரண்டே வகையாய் பிரிக்கலாம்; இரண்டுமே படங்கள் எடுக்கும்ஆட்களின் sincerity பற்றியது. முதல் வகை: புத்தியைப் பயன்படுத்தி, கொஞ்சமாவது லாஜிக்கோடு எடுக்கப்படும், அல்லது எடுக்க முயற்சிக்கப்படும் சீரியஸ் படங்கள். இரண்டாவது வகை: முட்டாள்களால், முட்டாள்களுக்காக, முட்டாள்தனமாக எடுக்கப்படும் படங்கள்.//
இது என் பழைய பதிவொன்றில் நான் எழுதியது.
'கற்றது தமிழ்'- இந்தப் படம் நான் சொன்ன இருவகைகளில் முதல் வகையில் வரக்கூடிய படம்தான். என்றாலும் லாஜிக் கொஞ்சம் அதிகமாகவே உதைக்க இடம் கொடுத்துவிட்டார் இயக்குனர் ராம்.
இப்படம் obsessive-compulsive disorder என்ற மனநோய்வாய்பட்ட ஒருவனின் கதை என்று நான் கொண்டுள்ளேன். சிறு வயதிலிருந்தே தொடர்ந்த பல இழப்புகள், கொடூர மரணங்களின் அருகாமை, அதன்பின் ஏற்படும் ஏமாற்றங்கள், அவமானங்கள் எல்லாமே அவனை ஒரு மனநோயாளியாக்குகின்றன என்பது சரியே. தற்கொலை முயற்சியும் தோல்வியடைய முழு மனநோயாளியாகி, பின் ரத்தவெறி ஏறியவனாக மேற்சொன்ன obsessive-compulsive disorder என்ற நிலைக்கு வருகிறான். போதைக்கு அடிமையான ஒருவன் போதைப் பொருள் கிடைக்காத போது அனுபவிக்கும் வேதனையான நிலை - cold turkey - அவனுக்கும் வருவதாக இயக்குனர் காண்பித்துள்ளார். அந்த நிலையில் கொலைவெறி உச்சநிலைக்கு வர தொடர்கொலைகள் செய்கின்றான்.இதுவரை சரியே. ஒரு psychopath-ன் கதை என்று கொண்டிருக்கலாம்.
ஆனால், இந்த அவனது மனநிலைக்கு அவன் தள்ளப் படுவதை உறுதிப் படுத்தவோ என்னவோ, கொடூர மரணங்களை, இழப்புகளை, இகழ்ச்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து காண்பிக்கிறார். அதில் ஒரு செயற்கைத்தனம் வந்துவிடுகிறது. அதோடு பல லாஜிக் இல்லாத காரியங்கள்:
* அப்பாவின் மரணத்திற்குப் பிறகு வந்திருக்கக்கூடிய பணம் அவனது வறுமை நிலையை மாற்றியிருக்க வேண்டுமே?
* துப்பாக்கி, குண்டு எப்படி வாங்கினான்? காசு ஏது?
* தொடர் கொலைகள் செய்தும் - அப்படி ஒன்றும் பிரமாதமாகத் திட்டம் தீட்டி ஏதும் செய்யாதிருந்தும் - எப்படி எதிலும் மாட்டிக் கொள்ளவேயில்லை?
* முதல் கொலையைச் செய்துவிட்டு சர்வ சுதந்திரனாக எலெக்ட்ரிக் ரயிலில் கையில் வழியும் ரத்தத்தோடு செல்வது ...
* வெறும் பலூன் சுடும் ஏர்கன் சத்தத்தோடு துப்பாக்கி சத்தத்தையும் இணைத்து இரண்டு பேரைச் சுட்டுக் கொல்வது..
* ஒரு காவல் துறையதிகாரியை ஒரு வாரம் தொடர்ந்துவிட்டு குருவியைச் சுடுவதுபோல் எவ்விதத் தடயமின்றி சுட்டுவிட்டுச் செல்வது...
* இவனது திடீர்வருகை நியாயமாகத் தரக்கூடிய அதிர்ச்சியோ, ஆனந்தமோ ஆனந்திக்கு ஏற்படாதது ...
* "தற்செயலாக" மறுபடியும் ஆனந்தியைச் சந்தித்து, காப்பாற்றி, சர்வ சாதாரணமாக அங்கிருந்து அவளோடு வெளியேறுவது ...
* படத்தின் கடைசியில் சில இடங்களில் அழகான ஆங்கிலம் பேசுவதாகக் காண்பித்ததை முதலிலேயே காண்பித்திருந்தால் ப்ரபாகருக்கும் அவனது கம்ப்யூட்டர் அறை நண்பனுக்கும் இடையில் உள்ள தராதர வித்தியாசத்தைக் காட்டியிருக்கலாமே...
* அல்லது 1100 மார்க் வாங்கிய ப்ரபாகரின் அந்த அறைத் தோழன் 890 மார்க் மட்டுமே வாங்கியவன் என்று காண்பித்தும் வித்தியாசத்தைக் கோடிட்டிருக்கலாமே ...
* எல்லாம் முடிந்து "முதன்முறை கதவு திறந்ததே" என்று பாட்டு பாடிவிட்டு, மறுவாழ்க்கை நோக்கிச் செல்ல முடிவெடுத்த பிறகும் எதற்காக தன் பழைய கொலைகளை விலாவாரியாக விவரித்து அதைப் படமாக்கி தொலைக்காட்சி நிலையத்திற்குத் தானே நேரே போய் கொடுக்க வேண்டும்?
- பட்டியலை இன்னும் நீட்டலாம் ...
2500 ஆண்டுகாலத் தமிழ் படித்தவனை விட 25 வருஷ கம்ப்யூட்டர் படித்தவனுக்குக் கிடைக்கும் சம்பளம், BPO வேலைக்குக் கிடைக்கும் சம்பளம், உலகமயமாக்கலினால் ஏற்பட்டுள்ள ஏற்றத் தாழ்வுகள் - இன்ன பிற பல சமூகக் காரியங்களை அவனது மனப் பிறழ்வுக்குக் காரணம் காண்பிப்பதற்காகவே படத்தில் இயக்குனர் திணித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அவன் வாழ்க்கையில் நடந்த இழப்புகளும் சோகங்களும் மட்டுமே போதுமே அவன் மனநிலை பாதிக்கப் படுவதற்கு. இவையெல்லாம் எதற்கு?
எனக்குப் பிடித்த நல்ல விஷயங்களையும் ஒரு பட்டியலிடலாம்.
* அந்த ருத்ர தாண்டவம் மிகவும் பிடித்தது.
* ராஜஸ்தான் காட்சிகளும், ஆனந்தியோடு செய்யும் பயணமும், அந்த மலைகளுக்கிடையே நீண்டு கிடக்கும் சாலையும் மிக அழகு
* யதார்த்தமான இடங்கள் -அது ஆனந்தி வசிக்கும் ஒட்டுக் குடித்தன வீடாகட்டும்; ப்ராபகர் தங்கியிருக்கும் பிரம்மச்சாரிகளின் விடுதியாகட்டும் - உண்மையோ, ஆர்ட் டைரக்டரின் படைப்போ எல்லாமே மிக பொருத்தமாக உள்ளன.
* அந்த தமிழ் வாத்தியார்தான் அழகன் பெருமாளாமே .. இயல்பான இறுக்கமான பாத்திரப் படைப்பு. (இயக்குனர் தன் ஆசிரிய-நண்பரின் பெயரைக் கதாநாயகனுக்கு வைத்ததாகக் கேள்வி (?). அதற்குப் பதிலாக அந்த தமிழ்வாத்தியாருக்கு அந்தப் பெயரை வைத்திருக்கலாமோ?)
* புதுமுகம் அஞ்சலியின் யதார்த்தமான நடிப்பு
* ஜீவாவின் நடிப்பு
* தரமான படப் பிடிப்பு
* ஆடியன்ஸ் இருக்கும் இடத்தில் கருணாஸை உட்கார வைத்திருக்கும் உத்தி. இயக்குனர் படம் பார்ப்பவர்களைத் தொடர்பு கொள்ளும் அந்த உத்தி, கருணாஸைப் பார்த்து ப்ரபாகர் கேள்வி கேட்பது, பலவற்றிற்கு அவர் (நானும்தான்!) பதில் தெரியாமல் முழிப்பது - பிடித்தது.
- இன்னும் உள்ளன.
படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்பதை விடவும் படங்களின் நீளத்தைக் குறைத்தால் வரிவிலக்கு கொடுக்கலாமென்று ஏற்கெனவே ஒரு பழைய பதிவில் எழுதியிருந்தேன். அதைப் போல இந்தப் படம் இரண்டரை மணி நேரம் ஓடுவதற்குப் பதில் ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஓடும் படமாக எடுத்திருந்தால், அந்த BPO ஆளைப் புரட்டி எடுக்கும் நீள காட்சியோ, கம்ப்யூட்டர் அலுவலகத்தில் நடத்தும் ஆர்ப்பாட்டம் - (அந்தக் காட்சி எதற்கு? கடைவாயின் ஓரத்தில் ஓர் அலட்சியப் புன்னகையால் உணர்த்த வேண்டிய காட்சிக்கு இத்தனை நீளமா?)- இவைகளையும், இன்னும் சில காட்சிகளையும் வெட்டியிருந்தால் கதையின் தேவையற்ற பல கூறுகளைத் தவிர்த்திருக்கலாம். நடுவில் சிலரது பேட்டிகள் படத்தை ஒரு செய்திப் படமாக மாற்றக்கூடிய நிலையைத் தவிர்த்திருக்கலாம். அதோடு இவைகள் படத்தைத் தூக்கி நிறுத்துவதைவிடவும், கதையை அதன் மய்யக் கருத்திலிருந்து விலக்கி எடுத்துச் செல்லத்தான் காரணமாயுள்ளன.
ஒருவேளை
இந்த சந்தைப் படுத்தப் படும் சமுதாயத்தின் அவலங்களையும்,
உலகமயமாக்கலின் தாக்கம் எளியவர்களை எப்படி வருத்துகிறது என்பதையும்,
உண்மையான புத்திசாலிக்கு மரியாதை இல்லை,
நுனிநாக்கு ஆங்கிலத்திற்கு இருக்கும் மரியாதை நம் தாய்மொழிக்கு இல்லை,
- என்பது போன்ற விஷயங்களைத் தனது கதைக்களனாக, மய்யக் கருத்தாகக் காண்பிக்கத்தான் இந்த கதையமைப்பை இயக்குனர் தேர்ந்தெடுத்திருப்பாரோ என்று நினைத்தேன். அப்படி நினைத்திருந்தால் கதையில் ப்ரபாகரின் இளம்வயது சோகங்கள் எதற்கு என்று கேள்வி வந்தது. அவனது மனப் பிறழ்விற்கான காரணங்கள் அந்த இளம் வயது சோகங்களே என்றுதான் தோன்றுகிறது. அப்படியெனில் இந்த மற்றைய சமூகக் காரணிகளை, பதில் கொடுக்காமல் கேள்விகளை மட்டும் எழுப்பும் காட்சிகளின் தேவை என்ன?
இவைகளையெல்லாம் தாண்டி, இயக்குனரைப் பாராட்ட பலவிஷயங்கள் உள்ளன. ஒவ்வொரு ஃப்ரேமிலும் இயக்குனரின் sincerity and seriousness தெளிவாகத் தெரிகிறது. நம் இயக்குனர்கள் வழக்கமாக commercial compromises என்ற ஒன்றின் பின்னால் தங்கள் குறைகளை ஒளித்துக் கொண்டு தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் மேல் பழியைத் தூக்கிப் போட்டு போவது போல் இல்லாமல் முதல் படத்திலேயே எந்த காம்ப்ரமைஸ் இல்லாமல் எடுக்கப் பட்டிருப்பதே இந்த இயக்குனரை தனிப் படுத்துகிறது. கனவு டூயட் கிடையாது. பாடல்களும் பின்புலப் பாடல்களாக - montage type - வருகின்றன. கதாநாயகிக்கு மேக்கப் கிடையாது. ஹீரோ மேல் எந்தவித ஹீரோயிசமும் திணிக்கப் படவில்லை. இப்படி பல நகாசு வேலைகள் செய்து தன் திறமையை முதல் படத்தில் காண்பித்திருக்கிறார். The parts are quite good but not the whole.
கடைசி சீனில் சிறுவயதில் ஆனந்தி கொடுத்த அந்த இறகை மீண்டும் அவளிடமே கொடுக்க, பறக்கும் இறகைச் சிறு வயதில் துரத்தி ஓடும் காட்சி - அதைப் பார்க்கும்போது Tom Hanks நடித்த Forrest Gump படம் நினைவுக்கு வந்தது.
Is the feather an eternal eluding thing to Prabhakar and Ananthi...?
.