Monday, July 29, 2013

672. கம்ப்யூட்டரும் நானும்


*T.B.R. JOSEPH இருக்காரே .. நல்ல மனுஷன் தான். ஆனால் விவரம் இல்லாதவர். ஏன்னா என்னை மாதிரி வயசான கிழடுகிட்ட போய் ஒரு விஷயத்தைப் பத்தி எழுதுன்னு சொன்னா, நாங்க உடனே அதைப் பத்தி மட்டுமா எழுதுவோம். எங்கள மாதிரி வயசான ஆளுக கிட்ட போய் ஒரு பழைய விஷயத்தைப் பற்றிக் கேட்டா அதுக ஆதாம் காலத்திலிருந்து ... sorry .. sorry.. ஆதிகாலத்திலிருந்து கதை சொல்லிராதுகளா. அதுகள உக்காந்து வாசிக்கணும்னு என்பது பதிவர்கள் தலைவிதியா என்ன? இருந்தாலும் மனுஷன் கேட்டுட்டார். சொல்லாமப் போனா நல்லாயிருக்காது. ஏதோ கொஞ்சம் சொல்றேன் ...

அந்தக் காலத்தில் பள்ளியில் படிக்கிறப்போ அப்பா பள்ளியிலேயே படிச்சேனா .. ரெண்டு பேரும் ஒண்ணா மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருவோம். ஒரே நேரத்தில் சாப்பிடுவோம். அப்பா அப்போவெல்லாம் அம்மாட்ட, என்கிட்ட  எல்லா கதையும் பேசிக்கிட்டே சாப்பிடுவார். அதில நிறைய G.k. விஷயங்கள் இருக்கும். ஒரு நாள் எங்கள் பள்ளிக்குப் பக்கத்தில் இருக்கிற L.I.C. அலுவலகத்தில் ஒரு போராட்டம். எல்லோரும் வெளியே வந்து கோஷம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. அது என்னான்னு அப்பா சொல்லிட்டு இருந்தார். கம்ப்யூட்டர்னு ஒரு மெஷின் வந்திருக்காம்.  ஒரு மெஷினே பல ஆட்கள் வேலையைச் செஞ்சிருமாம். அதை அந்த அலுவலகத்திற்குக் கொண்டு வரக்கூடாதுன்னு கோஷம் போட்டுக்கிட்டு இருக்காங்க அப்டின்னார்.

அது தான் நான வாழ்க்கையில் முதல் முறையா கம்ப்யூட்டர் அப்டின்ற வார்த்தையைக் கேட்டேன். அப்போ வந்த அந்த கம்ப்யூட்டர் ஏதோ punch card operation பண்ணும் என்றார்கள். நீளமான அட்டை ஒன்றில் ஓட்டைகளா போட்டு அந்த அலுவலகத்தில் பார்த்திருக்கேன். அது கம்ப்யூட்டர் செஞ்சது என்றார்கள். data storing என்று ஏதேதோ மக்கள் சொல்லிக் கேட்டிருக்கேன்.

அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து, அமெரிக்கன் கல்லூரியில் சில கம்ப்யூட்டர்கள் வந்திறங்கின. மதுரைக்கு வந்த முதல் கம்ப்யூட்டர் எங்கள் கல்லூரிக்குத் தான் என்று சொல்லிக்கொண்டார்கள். இரண்டாவது கம்ப்யூட்டர் மதுரை மில்லிற்கு வந்தது என்றும் கேள்விப்பட்டேன். அப்போவெல்லாம் இருந்த கம்ப்யூட்டர்கள் ரொம்ப சொகுசானவை. ஏ.சி. ரூம்ல மட்டும் தான் இருக்குமாம். வெளியில வச்சா ஓடாது அப்டின்னாங்க. (இதில ஒரு ஜோக் உண்மையில் நடந்தது. கம்ப்யூட்டர் கொஞ்சம் அதிகமான போது எனக்குத் தெரிந்து சிறுவர் பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியை கம்ப்யூட்டரை பள்ளிக்காகப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அவர் ஒவ்வொரு நாள் மாலையும் நல்ல கம்பிளி போர்வை வைத்து அதை மூடி வைத்துவிட்டுப் போவாராம். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை இதெல்லாம் எதற்கு என்று கேட்டாராம். திறந்து வச்சா வைரஸ் அட்டாக் பண்ணிடும் என்றாராம். தலைமை ஆசிரியை என்னிடம் இதைக் கேட்டு இது உண்மைதானா என்று கேட்டார்.) 

எங்கள் கல்லூரிக்கு கம்ப்யூட்டர் வந்ததும் அதைப் பற்றி ஒரு விளக்க வகுப்பு நடக்கிறது. விருப்பமுள்ளோர் வரலாம் என்று சொன்னார்கள். விளக்கியது ஒரு அமெரிக்க இயல்பியல் பேராசிரியர். அவர் என்னென்னவோ சொன்னார். புரியிறவங்களுக்குப் புரிஞ்சிருக்கும். மசாலா இல்லாத கேசுகளுக்கு ஒண்ணும் புரியலை. இந்த ரெண்டு category-ல் நான் எதில் இருப்பேன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன! வகுப்பு முடிஞ்சதும் இன்னொருத்தரிடம் ‘என்னப்பா இது. கேல்குலேட்டர் மாதிரி இது வேலை செய்யும் போலும்!’ என்றேன். நான் கேட்டது என்னைவிட ஒரு அசமஞ்சம் போலும். ’ஆமாப்பா ... ஆனா இதுல டைப் அடிக்க பெரிய பட்டனா இருக்கு’ அப்டின்னார். இப்படியாகக் கம்ப்யூட்டரின் முதல் தரிசனம் கிடைத்தது.

கொஞ்ச காலம் கழித்து கல்லூரியில் எல்லா துறைகளுக்கும் ஒரு கம்ப்யூட்டர் வந்தது. எனக்கு அதில் டைப்படிக்கும் போது வரும் சத்தம் ரொம்ப பிடித்துப் போயிற்று. கொஞ்ச காலம் பசங்களுக்கு hand out கொடுக்கிற சந்தோஷம் கிடச்சிது. அப்போ intranet என்று கல்லூரிக்குள் கொண்டு வந்தார்கள். உள்ளுக்குள் உள்ள சக ஆசிரியர்களுக்குச் செய்திகள் அனுப்பலாம். அதாங்க மெயில் அனுப்பலாம்னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நண்பர்களுக்கெல்லாம் அனுப்பிப் பார்த்தேன். ஒரு பதிலும் வரலை.

அன்றிலிருந்து இன்று வரை எனக்கு ஒரு பெரிய சோகம். நிறைய பேராசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் மேல் அப்படி என்ன வெறுப்புன்னு தெரியாது. தொடக்கூட மாட்டாங்க. நான்கூட ரெண்டு நண்பர்களைக் கட்டாயப்படுத்தி கம்ப்யூட்டர் கிட்ட கூட்டிட்டு போய் introduce செஞ்சேன். ஒண்ணும் இல்லாட்டி at least சீட்டு விளையாடுங்கன்னு சொல்லி solitaire சொல்லிக் கொடுத்தேன். தலைவிதியேன்னு கொஞ்ச நேரம் முயற்சி செஞ்சிட்டு ஆள உடுப்பான்னு ஓடிட்டாங்க. இன்னைக்கு வரை பல பேராசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் ஒரு தொடக்கூடாத பொருளாக இருந்து வருவதும் பெரிய சோகம்.

பெரிய மகள் M.C.A. சேர்ந்தாள். ஆனால் அப்போது தான எப்படியோ வானத்தை வில்லாக வளைத்து ஒரு வீடு கட்டும் கட்டாயத்தில் இருந்தோம். அதனால் அப்போது கம்ப்யூட்டர் ஒரு வானவில்லாகப் போயிற்று. அவள் படிப்பு முடித்து திருமணமும் முடிந்து சென்றாள். அடுத்த மகள் இப்போது M.C.A. படித்தாள். 1999 -2000-ல் கம்ப்யூட்டர் வாங்கினோம். வழக்கம் போல் முதல் வாரம் மட்டுமே பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் உறைகள் எல்லாம் வாங்கி ஆசை ஆசையாய் பயன்படுத்த ஆரம்பித்தோம்.

அந்த சமயத்தில் தான் internet, e mail எல்லாம் பழக்கத்திற்கு அதிகமாக வந்த நேரம். முதன் முதல் ஷம்மி கபூர் அப்டின்னு ஒரு பழைய நடிகர் internet, e mail பற்றியெழுதிய ஒரு கட்டுரை வாசித்தேன். அப்போதெல்லாம் net connectivity என்பது ஒரு பகீரதப் பிரயத்தனைக்குப் பிறகுதான் கிடைக்கும். அவர் அப்போதெல்லாம் இரவு நெடு நேரம் connectivityக்காக விழித்திருந்து ... காத்திருந்து .. அது கிடைத்ததும் உலகே உன் கையில் என்ற நினைப்பு வரும் என்றெல்லாம் எழுதியிருந்தார். நமக்கும் ஆசை வந்திருமே. ஒரு மாணவன் அப்போது இதெல்லாம் தெரிந்து வைத்திருந்தான். கல்லூரியிலும் எங்கள் துறையில் internet எடுத்திருந்தார்கள். ஒரு நாள் கஷ்டப்பட்டு எனக்கு ஒரு மெயில் ஐடி உண்டாக்கிக் கொடுத்தான் - hotmail-ல். என்றைக்காவது உட்காருவேன். dial up connection .. என்னமோ பண்ணுவான் ..கர கரன்னு சத்தம் வரும்... ஒரு சின்ன சதுரத்துக்குள் எண்கள் தட தடன்னு ஓடும். சத்தம் வேறு மாதிரி கேட்கும். இப்போ கனெக்ட் ஆகிடும் என்பான். ஆகாது. இப்படியே முயற்சிக்கணும். திடீர்னு கிடைக்கும். ஒண்ணு ரெண்டு மெயில் அனுப்புவோம். அசுர சாதனை தான்!

கொஞ்சம் கொஞ்சமாக கம்ப்யூட்டர் வளையத்திற்குள் நுழைந்தேன். டிஜிட்டல் காமிரா வந்தது. சூளைக் காற்று மாதிரி கம்ப்யூட்டர் இன்று வரை பெரும் ‘ஆட்டம்’ காண்பிக்கிறது. நாமும் அதோடு ரொம்ப இணைஞ்சாச்சு...

இந்த நேரத்தில் தான் ஒரு மெரீனா பீச்சில் ஒரு கூட்டம்னு போய் உட்கார்ந்து ... வாழ்க்கையே ரொம்ப மாறிப் போச்சு.... //மெரினா பீச்சில், காந்தி சிலைக்குப்பின்னல் ஒரு ப்ளாக்கர்கள் கூட்டம் என்றார்களா கொஞ்சம் adjust பண்ணி சென்னையிலுள்ள மூத்த மகள் வீட்டிற்குப்போய் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்து, அதன்படியே கலந்துகொள்ளவும் செய்தேன். 

அதுவும் ஒரு தப்பாகப் போய்விட்டது. ஒன்று: எல்லோரும் பேசியது ஒன்றும் எனக்குப் புரியவில்லை; Everything was Greek and Latin to me; things were going above my head. நான் என்றைக்கு unicode-யைக் கண்டேன்; என்னமோ template என்றார்கள்; காசி நிர்வகிக்கும் server அப்படி இப்படி என்று பேசப் பேச, ஆஹா, தப்பான முடிவு எடுத்துட்டோமோ என்ற பயம் வந்தது. 

அது போதாதென்று, வந்த 23-ல் (என்னைச் சேர்க்காமல்) 3 பேரைத்தவிர (இராமகி, டோண்டு, மாலன் - அனேகமாக இதே வயது வரிசையில்) மற்ற எல்லோரும் 25-35 வயதுக்குள் இருந்தார்கள்; அந்த முதிர்ந்த மூவரும் கூட என்னைவிட மிகவும் இளைஞர்களே. இந்த 'வலைக்குள்' சிக்கினால் problem of generation gap வந்துவிடுமே என்ற பயமும் சேர்ந்து கொண்டது. ஆரம்பிப்போமா, வேண்டாமா என்று ஒரே குழப்பம். வயதானவன் என்று தெரிந்தால் மரியாதை என்று ஏதாவது காரணம் காட்டி sideline பண்ணிவிடுவார்கள் என்ற பயம். (இப்போகூட பாருங்களேன்; stars for voting in my blog is not working; help me என்று forum-ல் அறைகூவல் விடுத்து நாள் பல ஆயிருச்சு; நாப்பது ஐம்பது பேர் வந்து பாத்துட்டும் போயிட்டாங்க; ம்..ம்..ஒரு சத்தம் வரணுமே.) 

இதில நிறைய பேரு அவங்க அவங்க போட்டோவெல்லாம் போட்டுகிடராங்க (அழகான மூஞ்சு; போட்டுக்கிறாங்க! பழமொழி -வயசுக்கு ஏத்தமாதிரி பழமொழில்லாம் சொல்லவேண்டாமா- பழமொழி ஒண்ணு சொல்லுவாங்களே முடி இருக்க மகராசி...அப்படிமாதிரி) ஆனா, நம்ம கொஞ்ச நாளைக்காவது பெயர், வயது, நிச்சயமா போட்டோ எதுவும் இல்லாமல் வண்டியை ஓட்டிப்பார்ப்போம்; என்னதான் நடக்கும்; நடக்கட்டுமே அப்டின்னு ஒரு மாதிரி ஆரம்பிச்சு வைக்க, நம்மளையும் போனா போதுன்னு இரக்கப்பட்ட ஏழெட்டு நல்ல மனுஷங்க (மனுஷிங்களும்தான்) ஏதோ அப்பப்ப வந்து பாத்துட்டு... போய்க்கிட்டு...// 

 மேலே சொன்ன வரிகள் Saturday, July 16, 2005 அன்று எழுதிய பதிவில் உள்ளவை.  அவைகளை இங்கே லவட்டிக் கொண்டு வந்து விட்டேன்.

அன்றைக்குப் - 24.04.2005 - பிடித்த ‘கிறுக்கு’ இன்னும் இறங்கவில்லை. வீட்டில் முதலில் தங்க்ஸிடமிருந்து நிறைய திட்டு கிடைக்கும். எப்பவும் இதுலேதான் இருக்கணுமான்னு அப்பப்போ ஒரு விரட்டு கிடைக்கும். அதன் பின் பதிவர்கள் நட்புக்கூட்டம் பார்த்து கொஞ்சம் சமாதானமானார்கள். அதைவிட நிச்சயமாக இணையத்தின் மூலமாகவே கிடைத்த அமினா புத்தக மொழிபெயர்ப்பு வாய்ப்பு அவர்களை ‘தட்டிக் கொடுக்க’ வைத்தது. அதுவும் அப்புத்தகத்திற்கு மாநிலப் பரிசு .. கூட்டங்களில் பங்கெடுப்பு .. என்றும், அந்நூலுக்கு ஒன்றுக்கு இரண்டு என்று இரு பரிசுகள் கிடைத்ததும் சுத்தமா மாறிட்டாங்கல்லா ...


வண்டி இன்னும் ஓடுது .... 


பி.கு.
இன்னும் இருவரை இதே தலைப்பில் எழுத ழைக்க வேண்டுமாமே .. ஒருவர்
விஜய் முத்தையா; இன்னொருவர்:  அ. வேல்முருகன்:

*

671. நூல் அறிமுகம் - FREUD

*


நண்பர் முனைவர் வின்சென்ட் தமிழாக்கம் செய்த நூலைப்
பற்றிய அறிமுகப் பதிவு இது.

ப்ராய்ட் போன்ற மனோதத்துவ நூல்களை எழுதப்பட்ட மொழியிலேயே படித்துப் புரிந்து கொள்வது சிரமம். ஆனால் அந்த நூலை வய்ப்படுத்தி நம் மொழியில் தருவது என்பது மிகவும் கடினமான பணி. ஆனால் அப்பணியைத் திறம்படச் செய்து நல்ல தமிழ் நூலாகத் தந்துள்ள வின்சென்ட் அவர்களுக்கும், அதை நூலாகத் தந்துள்ள ‘எதிர்’ வெளியீட்டு நிறுவனத்திருக்கும் வாழ்த்துகள். 


ஆசிரியர் வின்சென்ட்  ஏற்கெனவே தான் எழுதிய Zen and the Art of Motorcycle mechanism என்ற நூலின் மொழியாக்க நூலை நீதிபதி அக்பருக்கு வழங்கிய போது எடுத்த புகைப்படம்.


*


 


**

Monday, July 22, 2013

670. மரியான்*


மரியான் என்ற பெயருக்கு ஒரு புதிய பொருள் தந்துள்ளார்கள் - மரணம் இல்லாதவன் - படத்திற்கு ஒரு செக்யூலர் கலர் வரணும்னு சொல்லியிருப்பாங்க போலும்! நானோ மரிய ராஜ் மாதிரி ஒரு கிறித்துவப் பெயரை சுருக்கி மரியான் அப்டின்னு கூப்பிடுறாங்கன்னு நினச்சுக்கிட்டேன். பாலா /ஜேடி குரூஸ் யாருடைய கருத்தோ இது!

பாலாவின் விளம்பரப் படங்கள் பார்த்து வியந்து, அதன்பின் மரியானின் டீசர் பார்த்து விட்டு படம் பின்னுடும்னு நினச்சு போனேன். ரொம்ப ஏமாற்றம். முதல் பாதி வழக்கமான தமிழ் சினிமாக் கதை. எம்.ஜி.ஆர். காலத்துக் கதை. கதாநாயகி நினைத்து நினைத்து மருக, தன் போக்கில் போகும் கதாநாயகன் ஒரு நாள் சட்டுப் புட்டுன்னு விழுந்துடுவார். இதை எந்த டைரடக்கர் எடுத்தாலும் அதே மசாலா வாசனைதான். இதில் என்னத்த மாத்திக் காண்பிக்க.

முதல் பாதி இப்படிப் போச்சு ... இரண்டாவது பாதி ஒரு adventure பகுதி. ஆனால் சரக்கு ரொம்ப கம்மி. வேலை செய்ய வந்த ஆளுங்களைப் பிடிச்சிட்டு அந்தக் கம்பெனிக்காரங்க கிட்ட காசு வாங்கணும் அப்டின்ற நிலமை புரட்சிக்காரர்களுக்கு. அதை ஒழுங்காகவும் காண்பிக்கவில்லை. ஒரே ஒரு போன் காலோடு அதை முடிச்சிக்கிட்டாங்க. அவங்களுக்கு காசும் வரலை .. கதையில் அழுத்தமும் இல்லாமல் போய் விடுகிறது. காசு இல்லாத அந்தப் போராளிகள் தீபாவளி வேட்டு விடுவதுபோல் ஆகாயத்தைப் பார்த்து சுட்டுக்கிட்டேடேடேடே இருக்காங்க. அட ..அதுகூட பரவாயில்லை; ராத்திரி ஒரு குத்துப்பாட்டு போட்டு ஒரு ஆட்டம் ஆடுறாங்க பாருங்க ... எனக்குப் புல்லரிச்சிப் போயிரிச்சி! வேற ஒண்ணும் இல்லை .. சேர்க்கையில் வந்த பழக்கம். எப்படியோ பெரிய டைரடக்கர் அப்டின்னு பெயர் வாங்கிட்ட மணிரத்தினம் தன் படத்தில் அனேகமா ஒரு குத்துப் பாட்டு போடுவாரே .. அதைப் பார்த்து இவரும் சூடு போட்டுக் கொண்டார் போலும். அந்த ‘ஆப்ரிக்கக் குத்துப் பாட்டோடு’  நம்ம தமிழ்ப்பாட்டை synch வேறு பண்ணியிருக்கார் டைரடக்கர்.

படத்தில் நிறைய hallucination வருது. ஒண்ணு மாத்தி ஒண்ணு நிறைய வருதா ... அதுனால் எது hallucination எது உண்மைன்னு நமக்கு சரியா புலப்பட மாட்டேங்குது. hallucination சாப்பாடு சரி ..புலியும் hallucination தானா? கடைசியில் முழங்கால் ஆழத்தில் நின்னு சண்டை போடுறாங்க. ஆனால் வில்லன் செத்ததும் ஆழமான கடலுக்குள் மூழ்கிறார். கதாநாயகன் முதலை மாதிரி. தண்ணிக்குள்ள போனதும் இல்லாத வீரமும், சக்தியும் வந்திருது. சாப்பிடாம நாள் கணக்கில இருக்கிற ஆளு வில்லனைப் போட்டுத் தள்றது ...ஓ! இது ஒரு தமிழ்ப்படமோ? இப்படியெல்லாம் கேள்விக் கேட்கப்படாதுல்லா!
வில்லன் தனியா வரணும் அப்டின்றதுக்காக ஒரு காரணமுமில்லாமல் கூட்டாளியைச் சுட்டுக் கொன்னுடுறாங்க.

கதாநாயகி அழகு. அழகு என்பதோடல்லாமல் நிறைய rich looks or modern looks உள்ள பொண்ணு. இந்தப் பொண்ணுதான் பூ படத்தில் வந்த பெண்ணான்னு ஆச்சரியாக இருந்தது. ஆனால் பூ படத்தில் அந்தப் பெண் கதையோடு மிகவும் ஒன்றியிருந்தது. அழகாக அங்கே தெரியவில்லை; ஆனால் கதாபாத்திரமாக ஒன்றி இணைந்திருந்தார். இங்கே அந்தப் பெண் நன்றாக நடித்திருந்தாலும் படத்தோடு ஒட்டாமல் கதாநாயகி தனித்து நிற்கிறாள். அவளை ஒரு கடற்கரைப் பெண்ணாகப் பார்க்க முடியவேயில்லை. அதோடு எல்லாப் பெண்களும் சேலையில் வர இந்தப் பெண் மட்டும் பாவாடை சட்டையில் வருவது அந்தப் பெண்ணைச் சூழலிலிருந்து ரொம்பவே தனிமைப்படுத்துகிறது.

அடுத்து சொல்றதைப் பார்த்து நிறைய பேருக்கு என் மேல் கோபம் வரலாம். ஆனால் மனசில பட்டதைச் சொல்லிடுவோம். படத்தில் நான்கு பாட்டுகள் என்று நினைக்கிறேன். முதல் மூன்று பாடல்கள் எனக்கு ஒட்டவில்லை. நாலாவது பாடலான நெஞ்சே எழு பாடல் முதலிலேயே கேட்டு பிடித்தது. மூன்றாவது பாட்டு படத்தில் வந்ததும் யார் இசைன்னு நானே கேட்டுக்கிட்டேன். ரஹ்மான் அப்டின்னு ஞாபகத்திற்கு வந்தது. அப்போ மனசில ஓடுனது இது: - எல்லோரும் சொல்ற அளவு ரஹ்மான் இல்லையோ? ஏத்தி விட்டு ரொம்ப ரசிக்கிறாங்களோன்னு தோன்றியது. அதோடில்லாமல், கடைசியில் கடல் சண்டை ஒண்ணு நடக்குது. சீன் ஆரம்பிச்சதும் கோவில் மணி ஒசை கேக்குது BGM-ல. வேணும் வேண்டாம்னு இல்லை ... இளையராஜா நினைவுக்கு வந்தார். rerecording அப்டின்னா அது அவர் மட்டும் தானா? ..... இப்படியெல்லாம் மனசுக்குள்ள நினப்பு வந்துட்டுப் போச்சு ..!

காமிரா யாரோ வெளிநாட்டுக்காரராம். நம்ம உள்ளூர்ல நல்ல ஆளாகப் பிடித்திருக்கலாம். கடலுக்குள் எடுத்த சில காட்சிகள் நன்றாக இருக்கு. ஆனால் பாலைவனத்தை எடுத்ததில் பாலைவனத்தின் grandeur எதுவும் தெரியவில்லை. ஏதோ background-க்கு screen போட்டு எடுத்த மாதிரி தெரியுது. vast space இருக்கிறமாதிரியே படம் எடுக்கவில்லை. நம்ம ஆளுக கிட்ட விட்டிருந்தா நல்லா எடுத்திருப்பாங்க.

 பயங்கரமான பாலைவனம்.முதலில் தரையெல்லாம் பிளந்து கிடக்கு. அதன் பிறகு ஒரே மணல் மேடு. ஆனால் ஒரு மணல் மேடுதாண்டியதும் அங்கே ஒரு கடல்! எங்க  கடலும், பாலையும் இப்படி இணைந்து இருக்குன்னு யோசிச்சேன்.  ஒண்ணும் தெரியலை!

சுருக்கமா சொல்லணும்னா ...

தனுஷ் மேல ஆடுகளம், மயக்கம் என்ன? படங்களிலிருந்து ஒரு தனி மரியாதை. கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார். ஆனால் இந்த ஆடுகளம் சரியாக அமையவில்லை. முதல் பாதி .. காதல் கதைன்னு சொன்னேனா.. பழைய அவியலை மிகப் பழைய பாத்திரத்தில் தர்ராங்க. 

இடைவேளையில் மனதில் தோன்றியது: இந்த மாதிரி படத்தில் நடிக்கிறதுக்கு தனுஷ் எதுக்கு? நம்ம விஜய் பத்தாதா?
இரண்டாம் பாகம்: அழுத்தமான பகுதி. நன்றாக எடுத்திருக்க வேண்டும். ஆழமில்லாமல் பாலா தவற விட்டுட்டார்.*


Thursday, July 18, 2013

669. அது போன மாசம் .. இது இந்த மாசம் ...! - 2

தருமி பக்கம் - அது போன மாசம் .. இது  இந்த மாசம் ...! - 2*


*சென்ற வாரம் அழகர் கோவிலுக்கு ஒரு விசிட். ஏற்கெனவே அங்கு சென்று வந்த நண்பன் நிறைய பட்டாம் பூச்சிகளைப் பார்த்தேன். படம் எடுக்கலாம் என்றான். சென்றோம் .. படம் எடுத்தோம். பறந்து பறந்து போன பட்டாம் பூச்சிகளை ஓடி ஓடி படம் எடுத்தோம்.

 படம் எடுக்கும்போது கொஞ்சம் ரீவைண்ட் ....’எங்க காலத்தில’ அதாவது முப்பது வருஷத்துக்கு முந்தி இதே மாதிரி படம் எடுத்திருப்போம். மிஞ்சிப் போனால் அழகர்கோவில் பட்டாம்பூச்சி புராஜெக்ட் என்ற கணக்கில் ஒரு ரோல் படம் என்று பட்ஜெட் போட்டிருப்போம். அதாவது 35 படங்கள் .. 35 mm. நடுவில் குரங்கு, மனுஷன் அப்டின்னு நாலைந்து ப்ரேம்களை ஒதுக்கியிருந்தால் மீதி 30 ப்ரேம்கள். இதில் எத்தனை எத்தனை படம் ஒழுங்காக வந்திருக்கும்? இப்போ மாதிரி ஓடி ஓடி எத்தனை படம் எடுக்க முடியும்? எடுக்கும் படத்தில் எத்தனை படம் ஒழுங்காக போகஸ் ஆகியிருக்கும்? எத்தனை ஒழுங்கான ஒளியோடு படமாகி இருக்கும்? இதையெல்லாம் தாண்டி நெகடிவை டெவலப் செய்யும் போது அதில் எத்தனை குளறுபடி? ஆனால் இப்போதோ ... நினைத்ததை, பார்த்ததை அப்படி அப்படியே தொடர்ந்து கிளிக்கிக் கொண்டு இருக்கிறோம். இப்படி நினைத்துக் கொண்டிருந்தவன் படம் எடுத்துக் கொண்டு இருக்கும்போதே  ‘டிஜிட்டல் காமிரா கண்டுபிடித்தவன் வாழ்க’ அப்டின்னு சத்தமா ஒரு சவுண்டு கொடுத்தேன்! எல்லாம் ஒரு நன்றிக் கடன் தான்!

வாழ்க்கை தான் எப்படியெல்லாம் மாறிப் போச்சு ...

நிறையவே வாழ்க்கை மாறிப் போச்சு. அதை என் மாதிரி வயசான ஆளுகளுக்கு எவ்வளவு நிதர்சனமாகத் தெரிகிறது. எங்கும், எதிலும் மாற்றங்கள். சின்ன வயதிலிருந்து நினைத்துப் பார்த்தால் வாழ்க்கை ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது.

பள்ளிக்குப் போகும் சிறு குழந்தைகளில் பாதிக்கு மேல் அழுதுகொண்டே போகும் காட்சிகள் தான் அப்போதெல்லாம் நிறைய. இப்போது அப்படியேதும் பார்க்க முடிவதில்லை. அதே போல் கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் பள்ளிக்குப் போவதும் வருவதும் தாங்களே  என்றுதான் இருந்தோம். இப்போது பல பிள்ளைகளுக்கு பஸ் வரை தாய்மார்கள் பிள்ளைகளின் புத்தகப்பைகளையும் தூக்கிக் கொண்டு துணைக்கு வருகிறார்கள். பெற்றோர்கள் இப்போது அப்படி பிள்ளைகளைப் ‘பொத்தி’ வளர்த்து வருகிறார்கள் போலும். தூக்க முடியாத பொதி சுமையை நாங்கள் பள்ளிக்குத் தூக்கிச் சென்றதில்லை. படித்த பாடங்களும் இத்தனை அதிகமுமில்லை; இவ்வளவு ஆழமுமில்லை. தப்பிப் பிழைத்தேன்!


என் சிறு வயதில் நிறைய அயல்நாட்டுக் கார்கள் இருக்கும். தூரத்தில் பார்த்து அது என்ன கார் என்று கண்டுபிடிப்பது எங்களுக்கு ஒரு விளையாட்டு. அதன் பின் மூன்றே கார்கள் - Ambassodor, Fiat, Standard. இப்போது வகை வகையாக கார்கள். அந்தக் கால கார்கள் இரண்டே வண்ணத்தில் வரும் - கறுப்பு, வெள்ளை. இப்போது வண்ண வண்ணமாகக் கார்கள். பைக்குகளும் மூன்று தான் - Bullet, Java, Rajdoot. இப்போது சொல்லி மாள முடியுமா? ஒரு ஸ்கூட்டர் வாங்க  பிரிமியம் கட்டி அதன் பின் ஆறு வருடம் காத்திருக்க வேண்டும். இப்போது ரோட்டின் ஓரத்தில் கூறு கட்டி பைக் விற்கிறார்கள்!

வீட்டில் ரேடியோ இருப்பதுவும், அதில் சிலோனிலிருந்து ஒலிபரப்பப்படும் பாட்டுகளைக் கேட்பதுவும் பெரிய அதிர்ஷ்டம். எல்லோர் வீடுகளிலுமா ரேடியோ இருந்தது? அதுவும் வெள்ளிக்கிழமை இரவு 10 -10.30 வரை திருச்சியிலிருந்து ஒலிபரப்பப்படும் சினிமாப் பாட்டுகள் மீது எங்களுக்கு எத்தனை வாஞ்சை. வீட்டு விளக்குகள் அனைத்தையும் அணைத்து விட்டு ரேடியோவின் டயல் விளக்கு மட்டும் தெரிய, வீட்டில் யாரும் சத்தமிடாமல் பாட்டுக் கேட்ட காலங்கள் ...

எல்லாவற்றிலும் தொலைத்தொடர்புகள் வளர்ந்த விதம் மிகவும் ஆச்சரியம். ஒரு வேளை ராஜிவ் காந்தி செய்த ஒரே நல்ல காரியம் - Sam Pitroda-வை தொலைத் தொடர்புகளுக்காகத் தேர்ந்தெடுத்ததாக இருக்குமோ? நேரில் பார்த்த ஒரு நிகழ்வு. நண்பன் ஒருவன் போன் பூத் வைத்திருந்தான். அவன் கடையில் ஒரு இரவில் தம்மடிக்க உட்கார்ந்திருந்தோம். மணி 10 இருக்கும். ஒரு வயதானவர் வந்தார். போன் பண்ணலாமா? என்றார். அவர் நண்பனுக்கு நன்கு தெரிந்தவர். சரி என்றான். உள்ளே போனவர் கொஞ்சம் பத பதைப்போடு  இருந்தார். டயல் செய்து மிக உன்னிப்பாக காது கொடுத்துக் கேட்டார். அங்கிருந்து சத்தம் வந்ததம் மிக வேகமாக, ‘நான் தான் அப்பா பேசுறேண்டா’ என்று சொல்லிவிட்டு டக்கென போனை வைத்து விட்டார்.  வெளியே நின்ற நண்பன் விளக்கம் சொன்னான். அவரின் பையன் அமெரிக்காவில் இருக்கிறான். பூத் காலியாக இருக்கும் வேளை வந்து போன் செய்து தன் இருப்பைக் காட்டிக் கொள்வார். ஓரிரு நிமிடங்களில் பையனிடமிருந்து போன் வரும்; பேசுவார் என்றான். அவர் இங்கிருந்து சில வினாடிகள் பேச சில ரூபாய்கள் ஆகிவிடும். இப்போது என்னடாவென்றால், போன் மட்டுமா .. video chat... அது இதுன்னு என்னென்னமோ வந்து விட்டது. எங்கள் வீட்டுக்கு போன் வர நாங்கள் காத்திருப்பது ஐந்தாறு வருடங்கள் வரை. இப்போ ஐந்து நிமிடத்தில் கைத் தொலைபேசி ....

இப்போது தான் தந்தியை ஒழித்து விட்டதாக செய்தி வந்தது. அந்தக் காலத்தில் தந்தி அனுப்புவதோ, அதை போஸ்ட் மேனிடமிருந்து வாங்குவதோ ஒரு தனி அனுபவம். தந்தி என்றாலே பயம் தான். ட்ரங்க் கால் பேசுவதும் இன்னொரு தனி அனுபவம். காத்திருந்து .. காத்திருந்து  ... கத்திக் கத்தி பேசுவதெல்லாம் இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. அதென்னவோ .. அந்தக் காலத்தில் நூத்துக்குப் பத்துப் பதினைந்து ‘ராங் நம்பர்’ என்றிருக்கும். பதினான்கு பதினைந்து வயதில் நான் முதல் முதல் ’பேசிய’  என் போன் கதை ஒண்ணு இருக்கு. வாசித்துப் பார்த்துக்குங்க ...!

காலம் எப்படி மாறிப் போச்சு .. இன்னும் எப்படியெல்லாம் மாறிக்கிட்டு இருக்குன்னு என்ன இப்படி நினைக்க வச்சது  பதிவர் மணிகண்டனின் இடுகை தான். ரோபோ பற்றி எழுதியிருக்கிறார். உளவாளிகளுக்கு ஏதுவான ரோபோக்கள் பற்றிச் சொல்லிவிட்டு நம் உடம்புக்குள்ளே போய் ‘செப்பனிடும்’ ரோபோக்கள் வந்து விட்டன என்று சொன்னதைப் படித்ததும் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்னால் வாசித்த ஒரு கதைப் புத்தகமும் - A  Fantastic Voyage - அதை சினிமாவாக எடுத்த படத்தை மதுரை பரமேஸ்வரியில் மூச்சைப் பிடித்துக் கொண்டு பார்த்த அனுபவமும் நினைவுக்கு வந்தது. விஞ்ஞானி ஒருவரின் மூளையில் உள்ள ரத்தக்கட்டியை உடைக்க ஆட்களை மிகச் சிறிதாக்கி அவர் உடலினுள் செலுத்தி குணமாக்குவார்கள். ஒரு சீனில் அவர்கள் காதின் உட்புறம் செல்வார்கள். ஏதாவது சத்தம் கேட்டால் அது செவிப்பறையில் மூலம் பெரிதாக்கப்பட்டு அவர்கள் தூக்கி எறியப்படலாம் என்று இருக்கும். கதையிலும், படத்திலும் மிக அழகாக அதைச் செய்திருப்பார்கள். சத்தமே இருக்கக்கூடாது என்றால் இங்கே தியேட்டரும் பயங்கர அமைதியோடு உறைந்து இருந்தது. இது கதை - 30 வருஷத்திற்கு முன். இன்று அது ஏறத்தாழ உண்மையாகி விட்டது. நம் உடம்புக்குள்ளும் ஒரு ரோபோ. கதையில் வருவது போன்ற சிகிச்சை.இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து ‘உங்கள் வீட்டில் எத்தனை வேலைக்காரர்கள்?என்று பணக்காரர்கள் கேட்டுக் கொள்வதிற்குப் பதில் ‘உங்கள் வீட்டில் எத்தனை ரோபோக்கள்?என்று கேட்கும் காலம் வந்து விடலாம். Homo sapiens-களுக்கு உதவ  Robo sapiens வந்தாச்சு!அட .... நாம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறோம். இன்னும் என்னென்ன மாற்றங்களோ ... என்னென்ன ஆச்சரியங்களோ ...! பழைய விஞ்ஞானக் கதைகளில் மனித உறுப்புகளைச் செய்து அதை வேண்டிய ஆட்களுக்குப் பொருத்துவது போல் கதை எழுதுவார்கள். ஆனால் இன்றைய செய்தி ஒன்றில் Stem cells-களிலிருந்து மனித ஈரலைச் செய்து, அதை எலியில் பொருத்தி அது மிகச் சரியாக மனித உடலில் செய்யும் பணிகளைச் செய்ய ஆரம்பித்து விட்டதாம்!  சீக்கிரம் மால்களில் புதிய கடை போட்டிருப்பார்கள். அங்கே மனிதர்களுக்கு வேண்டிய உறுப்புகளை நேரடியாகக் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்!

Future Shock எழுதிய Alvin Toffler கூட இது போன்ற ஆச்சரியங்களை எதிர்பார்த்திருப்பாரோ என்னவோ ... நீங்களும் காத்திருங்கள்.

YOU WILL ALSO BE SHOCKED ONE DAY LIKE ME ...!*
*

Monday, July 15, 2013

668. என் பொழப்பு ஓடணும்....


தருமி பக்கம் (1) – என் பொழப்பு ஓடணும்..*
என்னமோ அந்தக் காலத்திலேயே பெரியவங்க ஒண்ணு சொல்லிட்டு போய்ட்டாங்க … ‘உபகாரமா இல்லாட்டியும் உபத்திரவா இருக்காதே’ன்னு! இதில் இருந்து எனக்குத் தெரிய வர்ரது என்னன்னா … எப்பவுமே, அந்தக் காலத்திலேயும் சரி, இந்தக் காலத்திலேயும் சரி, நம்ம ஆளுக அடுத்தவங்களுக்கு உபகாரமா இல்லாம உபத்திரவமாத்தான் இருந்திருக்காங்க. அது கொஞ்சமும் மாறாம நாமும் இன்றைக்கும் நல்லா அதைக் கடைப்பிடிச்சிருக்கோம். இதுல படிப்பு, வயசு, பழக்க வழக்கம், சமூக நிலை எதிலேயும் எந்த வித்தியாசமும் இல்லாம நாம எல்லோருமே உபத்திரவமான ஆட்கள் தான். இது நம்ம உடம்போடு .. அல்லது நம்ம ஜீனோடு பிறந்த வியாதின்னு தான் நினைக்கிறேன். நம்ம எல்லாத்துக்கும் நம்ம வசதி .. நம்ம வாழ்க்கை .. இது பற்றி மட்டும் தான் நினைப்பு. சுத்தி இருக்கிறவங்களைப் பத்தி நினைக்கிற புத்தியே நமக்கு இல்லை. அட .. அவங்களுக்கு உதவுவதற்காக அவர்களைப் பத்தி நினைக்கணும்னு நான் ஒண்ணும் சொல்லலை. அவங்களுகு உபத்திரவம் இல்லாம இருக்கணும்னு நினைக்கிற புத்தி கொஞ்சூண்டு எட்டிப் பார்த்தாலே போதும்.

ரொம்ப பிடிக்காம போன விஷயம் ஒண்ணு ரெண்டு இருக்கு. அது எப்படி ஒரு வண்டியில போற ஆளு சடார்னு லெப்ட் .. ரைட்டுன்னு திரும்பி எச்சில் துப்பிட்டு போறாரு என்பது எனக்கு மிக ஆச்சரியமான விஷயம். பேருந்துகளைத் தாண்டும் போதெல்லாம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போக வேண்டியதிருக்கு. எந்த வினாடி எங்கிருந்து எவன் துப்புவானோ என்று பயந்து கொண்டே தாண்டணும். எச்சில் துப்புறதே தப்பு .. ஆனால் அதை இடம் பொருள் என்றில்லாமல் எங்கெங்கும் செய்வோம்னு கங்கணம் கட்டிட்டு மக்கள் தொட்ர்ந்து செய்வதைப் பார்க்கும் போது ஆச்சரியமும் வேதனையும் மிஞ்சுகிறது.

என் வயசு ஆளு… ஸ்கூட்டரில் போய்க்கொண்டே படக்கென துப்பினார். பின்னால் வந்த நான் ’என்னங்க இப்படித் துப்புறீங்க’ என்றால், ’பின்னால் வர்ரவன் பார்த்து வரணும்’ என்றார். அடப் பாவி மக்கா ..! இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு தான்.

சைக்கிள், கார், பைக் .. எதுவாக இருந்தாலும் அதை நிப்பாட்டும் போது அது அடுத்த ஆளுக்கு இடைஞ்சலா என்று பார்ப்பது நம் வழக்கமே கிடையாது. நான் என் வண்டியை நிப்பாட்டணூம் .. நிப்பாட்டிட்டேன் – இது தான் நம் வழக்கமான philosophy! அட .. அடுத்த வண்டியை வழி மறிச்சி நிப்பாட்றோமே .. ம்ம் .. அந்த மாதிரி நினைப்பே வர்ரதேயில்லை. அப்போ நீங்க அங்க நின்னு, ஏங்க இப்படி நிப்பாட்றீங்கன்னு கேட்டா ஒரு ரெடிமேட் பதில் ஒண்ணு வரும். ’இதோ .. ஒரு நிமிஷத்தில வந்திருவேன். அதான் இப்படி நிப்பாட்டியிருக்கேன்.!

எங்க ஊர் மதுரையில் இன்னும் ஒரு பெரிய விஷயம். சத்தத்தையும் எங்களையும் வேறுபடுத்தி யாராலும் பிரிச்சிப் பார்க்க முடியாது. cone speaker வச்சா சத்தம் ரொம்ப இருக்கேன்னு பொட்டி speaker வைக்க சொன்னாங்க. வச்சாங்க பாருங்க எங்க ஊர்க்காரங்க ..
கும்கி சைஸ்களில் box speakers. என்னா சைஸ்! சத்தம் பிச்சி உதறும். இதில் என்ன ஜோக்குன்னா… அம்மாம் பெரிய ஸ்பீக்கர் முன்னால் எங்க ஊரு ஆளுக நின்னு ‘பூ .. இதெல்லாம் என்ன சவுண்டு!’ அப்டின்னு எனக்கென்னன்னு நிப்பாங்க.

இன்னொரு விஷயமுங்க. அந்த வியாதி எனக்கும் உண்டுன்னு ஒத்துக் கொள்கிறேன். எங்கே போனாலும் முதல் ஆளா நான் இருக்கணும்; அடுத்தவனை முந்தணும் அப்டின்ற ஒரு மன நிலை நம்மில் பலருக்கு. பலருக்கா இல்லை எல்லோருக்குமா என்று நீங்களே கேட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். கூட்டமான போக்குவரத்து இடங்களில் நான் முந்தி .. நீ முந்தி என்று நாம் போட்டுக்கொள்ளும் அவசரமே நம் போக்குவரத்து பிரச்சனைகளுக்கு முதல் காரணம். அஞ்சு வண்டி நிக்கும்போது கூட பச்சை விளக்கு வருவதற்குள் சிகப்பு விளக்கு இருக்கும்போதே புறப்பட்டுப் போகணும். சந்திப்புகளில் உனக்காக நான் எதற்கு வழி விடணும் அப்டின்ற ‘உயர்ந்த’ புத்தி நமக்குள். எல்லாம் ஒரு ego தானோ?

வண்டிகளில் ஒலிப்பான் ஒண்ணும் இருக்குமே .. அது எதுக்குன்னே நம்ம மக்களுக்குத் தெரிவதில்லைன்னு நினைக்கிறேன். என் வண்டி .. என் horn ..நான் எப்படியும் சத்தம் போட்டுட்டு போவேன் அப்டின்றது நம்மூர் philosophy! கியர் போடுறதை விட horn அடிச்சிக்கிட்டே போறது தான் மக்கள் வழக்கம். ஒரு முறை மதுரை – சென்னை – பெங்களூரு – கோவா என்றொரு பயணம். ரொம்ப மகிழ்ச்சியான ஒரு விஷயம். இந்த ஊர்களில் வரிசைக்கிரமமாக ஒலிப்பான் சத்தம் குறைந்து கொண்டே வந்தது.

இது மாதிரி ‘எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன .. என் பொழப்பு ஓடணும்; அம்புட்டுதான்’ அப்டின்ற philosophy-ல் இன்னும் நிறைய விஷயம் இருக்கு. ஏழு ஊருக்கு கேக்குறது மாதிரி கைப்பேசியில் ரிங் டோன்; பாட்டுகளைச் சத்தமாக வைத்து பாட்டு கேட்கும் இசைப் பித்தர்கள்; கழுத்தை வளைத்து கைப்பேசியில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டிச் செல்லும் முட்டாள் சர்க்கஸ்காரர்கள்; என் வீட்டுக் குப்பையை உன் வீட்டின் முன்னால் கொட்டுவேன் என்று சொல்லும் சுத்தக்கார மக்கள் …. இப்படியே பட்டியல் நீண்டு கொண்டே போகும். இந்தப் பழக்கங்களையெல்லாம் எப்படி மாத்துவது? எனக்கு இது ஒரு பெரிய கேள்வி. எல்லாமே சமூகம் சொல்லிக் கொடுக்கும் என்பது உண்மைதான். ஆனால் சமூகமே இப்படி கேடு கெட்டுக் கிடக்கும் போது எங்கிருந்து யார் யாருக்குச் சொல்லிக் கொடுப்பது?

பிள்ளைகளை வைத்து இருசக்கர வண்டிகளில் செல்லும் தகப்பன்மார்கள் எல்லா சாலை விதிகளையும் மீறி வண்டி ஓட்டிச் சென்றால் அந்தப் பிள்ளைகள் எதைக் கற்றுக் கொள்ளும்? சின்னக் குழந்தைகளை முன்னால் வைத்து, அப்போதும் கைப்பேசியில் பேசிக்கொண்டு செல்லும் பெற்றோர்களிடமிருந்து குழந்தை எதைக் கற்றுக் கொள்ளும்?
*

Friday, July 12, 2013

667. புத்தரைக் காண ....

*


பெங்களூரு - கூர்க் பயணத்தடத்தில் இன்னொரு இடம் - குஷால் நகர். திபேத்தியர்களுக்கென்று கொடுக்கப்பட்ட இடமாம். எங்கும் சிகப்பாடை அணிந்த புத்த பிக்குகள். எல்லா வயதிலும் நடமாடிக்கொண்டு  இருந்தார்கள். சின்னப் பையன்களாக பலரும் இருந்தனர்.அது சரி ... சின்ன வயதிலேயே ‘ஆணி’ அடித்தால் தானே ‘மதம்’ உள்ளே இறங்கும்.  ஒரு சின்ன சந்தேகம். பெண் பிக்குணிகளும் இருப்பார்களோ?
பெண் பிக்குணிகள் ..???
ஏனெனில் பல ஆண்களுக்கு நடுவில் சில பெண்கள் பிக்குணிகள் மாதிரி தோன்றினார்கள். மிக அழகான இளம் வயதுப் பெண்கள் சிலரை அப்படிப் பார்த்தேன்.  அவர்களின் கைகளிலும் -அதற்கு என்ன பெயர் என்று தெரியாது; எனக்குத் தெரிந்த பெயரைச் சொல்கிறேன். - ஜெபமாலை, ஆண்கள் போலவே வைத்திருந்தார்கள். இதென்ன இந்த ஜெபமாலை எல்லா மதத்தினரும் வைத்து உருட்டுகிறார்கள். ஜெபமாலையின் பரிணாமம் படிக்க யாராவது முயற்சிய்ங்களேன்!


 
முன் வாசலில் இடது பக்க படத்தில் இருப்பது போன்ற ஒரு தோரண வாயில். அதில் ஒருவரது படம் பெரியதாக இருந்தது. அவர் யார்? லாமா இல்லை அவர் என்பது மட்டும் தெரிந்தது.

அவர்கள் கோவில். உள்ளே பெரிய டமாரம் ஒன்று இருந்தது. நாங்கள் போகும்போது சின்ன புத்த பிக்குகள் எல்லோரும் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தார்கள். அதிலிருந்த சின்னப் பையன்களைப் பார்க்கும் போது எனக்குப் பாவமாக இருந்தது.பீடங்களில்  பல புத்தர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். யார் கெளதம புத்தர், மற்றவர்களெல்லாம் யார் யார் என்று தெரியவில்லை.
*

பல புத்தர்களின் கைகளில் தொலைப்பேசி இருந்தன.

அழகான கட்டிடங்கள். திபேத்திய கலாச்சாரத்தில் கட்டப்பட்டு நன்கு பேணப்பட்டு வருகின்றன.

இக்கட்டிடங்களுக்கு வெளியே நிறைய நிலங்கள் அவர்களுக்காகக் கொடுக்கப்பட்டு நன்கு விவசாயம் நடக்கிறது. எப்படி நடக்கும் என்றேன். வங்கிகள் நன்கு கடன் கொடுப்பதாகக் கூறினார்கள். நிலங்களில் கூலிக்காக வேலை செய்வது நமது மக்கள் தான். அவர்கள் மேற்பார்வை மட்டும் பார்ப்பது போல் தோன்றியது.


*
இடம் பார்த்து முடிந்ததும் பல கேள்விகள்:

*  திபேத்தியர்களுக்கும் சீனாவிற்கும் நடுவே  நிறைய குழப்பங்கள்.  அரசியல் நிலையில் இவர்களுக்கு தங்கும் இடம், நிலம், பண உதவி, வங்கிகளின் உதவி அளிப்பது எதற்காக?

*  இந்த உதவிகள் யாரைத் திருப்தி படுத்த? ஏன்? அரசியல் காரணங்கள் உண்டா?

*  திபேத் இருப்பதோ வடக்கே எங்கேயோ? அவர்களுக்கு கர்னாடகாவில் ஏன் இந்த இடம் கொடுக்கப்பட்டது?

*  பாவம் .. சின்னப் பசங்க. அதாவது இளம் வயது பிக்குகள். பெற்றோரை விட்டு இவ்வளவு தொலைவில் ...

*  இந்த உதவிகளுக்கு சீனாவின் எதிர்வினை ஏதும் உண்டா இல்லையா? (இல்லாமல் இருக்காது என்றே நினைக்கிறேன்.)

இன்னொரு முக்கிய கேள்வி. இங்கு இருக்கும் திபேத்தியர்கள் இந்தியாவின் அகதிகள் தானே? இவர்களுக்குத் தரப்படும் சலுகைகள் கர்நாடக அரசு கொடுப்பதா .. இல்லை மத்திய அரசு கொடுப்பதா?

இவர்களுக்கு இவ்வளவு சலுகைகள் செய்யும் அரசு ஏன் தமிழ்நாட்டில்  இருக்கும் இலங்கை அகதிகளுக்கு இத்தனை உபச்சாரம், உதவி செய்வதில்லை? அவர்களைப் பேணுவதில்லை. தீண்டத்தகாதவர்கள் போல் ஏன் அவர்களை வைத்திருக்கிறோம்?

*
இன்னும் சில படங்களைக் காண .. இங்கே வாருங்கள் ....


*


 

Wednesday, July 10, 2013

666. பறவைகளை நாடி ....*  பெங்களூரிலிருந்து கூர்க் செல்லும் வழியில் ரங்கன் திட்டு. இவ்விடம் பற்றி  ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறேன். பறவைகளின் சரணாலயம் என்று அந்தக் காலத்திலேயே மதுரையிலிருந்து படம் எடுக்க நண்பர்கள் சென்றது பற்றித் தெரியும்.
இப்போது எனக்கும் ஒரு வாய்ப்பு.

ஒரு பெரிய பூந்தோட்டம். அதற்கு எதிர்த்தாற்போல் மரங்கள் அடர்ந்த பகுதி. வரும் பறவைகள் ஆங்காங்கே மரங்களின் மீது அமர்ந்திருந்தன. நடுவில் நீர்த் தேக்கம். இந்தப் பக்கம் வந்தால் நர மனிதர்கள் இருப்பார்களே என்ற அச்சத்தில் பறவைகள் இப்பக்கமே வருவதில்லை. நடுவில் இருந்த நீர்ப்பரப்பில் முதலைகள் உண்டு என்று ஒரு பயங்கரச் செய்தியால் படகுப் போக்குவரத்துப் பக்கம் நாங்கள் போகவேயில்லை.                                                                                       


மீன் .. மீன் .. மீன்
இவ்வளவு தூரத்திலிருந்து அவைகளை எப்படிப் படம் எடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு இளைஞர் கூட்டம் படா படா காமிராக்களோடு படையிறங்கியிருந்தார்கள். அனேகமாக எல்லோரும் Canon காமிரா தான். பலரும் 500 mm வைத்திருந்தார்கள். ம் .. ம் .. அவர்கள் காமிரா வழியே கூப்பிட்டால் தூரத்து பறவையும் பக்கத்துப் பறவையாகி விடுமே என்று ஒரு சின்ன ஏக்கப் பெருமூச்சு ...


முயன்று பார்ப்போமே என்று சில படங்கள் எடுத்தேன்.
வந்தவை இவை .......                                     

NO CRASH LANDING ...GOOD PILOTING ...!
நிஜம் .. நீர் ... நிழல்
LOVELY  LANDING ........
பறக்கும் .. பறவை பறக்கும் .... 


மேலும் சில படங்களைக் காண .. இங்கு செல்க  -->


  *

Monday, July 08, 2013

665. வண்ணத்துப் பூச்சிகளைத் தேடி ....

*
கூட்டம் கூட்டமாக வண்ணத்துப் பூச்சிகள் இருக்கு .. போட்டோ எடுக்கப் போகலாமா என்ற நண்பர்களுடன் பல ஆண்டுகள் கழித்து அழகர்கோவிலுக்குச் சென்றோம்.

நான் மாணவனாக இருந்த காலத்தில் insect collection  என்ற பெயரில் ‘பூச்சி பிடிக்கப்’ போனது நினைவுக்கு வந்தது. அதன் பின் பல ஆண்டுகள் மாணவர்களை அழைத்துப் போனதும், அப்போதெல்லாம் நடந்தவைகளும்  நினைவுக்கு வந்தன.


அப்போதெல்லாம் கீழே ஒரு தெப்பம் இருக்கும். அதிலிருந்து தனியாக ஓடை ஒன்றில் தண்ணீர் மலையிலிருந்து வந்து கொண்டு இருக்கும். அந்தப் பாதை வழியாகவே செல்வோம். இப்போது அந்த ஓடை இருக்கிறது. தண்ணீர் அதிகமில்லை. பாதி வழி காரில் ஏறி அந்த ஓடையில் ஒரு காலத்தில் வண்ணத்துப் பூச்சிகள் நிறைய இருக்கும் இடத்திற்கு முதலில் சென்றோம். ஏற்கெனவே வண்ணத்துப் பூச்சிகள் நிறைய இருக்கும் இடம் என்று ரவி சொன்ன இடம் அதற்கு சிறிது மேலே கருடன் சாமி கோவிலுக்கு எதிரில் இருந்தது.
அனுமார் கோவிலுக்கு வழிகாட்ட ஓர் உடைந்த உருவத்தில் ...
 அதற்கு எதிர்த்தாற்போல் ஆஞ்சநேயர் சாமி கோவில். கோவில் போகும் இடத்தில் வழிகாட்ட ஒரு உடைந்த சிமண்ட் சிலை பரிதாபமாகக் கீழே கிடந்தது. 

நாங்கள் கருடன் சாமி கோவிலுக்குப் போனால் பெரிய ஏமாற்றம் நாலைந்து பூச்சிகள் மட்டுமே கண்ணில் பட்டன. அவைகளை ஓடிப்பிடித்து படம் எடுக்க முயன்றோம். இன்று ஏன் பூச்சிகள் இல்லை என்றதும் அவைகளின் biological clocks  நினைவுக்கு வந்தது. வெயில் ஏற ஏற பூச்சிகள் வரும் என்பது தெரிந்ததும் மலை மேலே தீர்த்தத் தொட்டி வந்தோம்.  நிறைய குரங்காட்டம் பார்த்தோம்.
பயமா இருக்குல்ல ...?!

FEEDING THE BABY
அன்னையின் மடியில் ....
பெரிய்ய்ய்ய சைஸில் பழ்ந்தின்னி வவ்வால்கள் ஒரு பெரிய மரத்தில் தொங்கிக் கிடந்தன. தனி வவ்வாலைப் படம் எடுக்க முடியவில்லை.

மயில் பீலி வைத்து ஆசிர்வாதம் பண்றார் .... ஆனால் யாரும் ‘தட்சணை’ போடலை .. பாவம்!
தீர்த்தத் தொட்டியில் இருந்து குளித்து வருவோருக்கு மயில் பீகை வைத்து ஆசிர்வாதம் பண்ணிக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர். பாவி மனுசங்க .. யாருக்கும் அவருக்கு காணிக்கை போட மனசில்லை. நான் நினைச்சேன் .. ஆனால் போடலை! பாவமா இருந்திச்சு ..மொட்டை போட்டாச்சு ...  சந்தனம் எங்கே...!?

வெயில் ஏறியதும் கீழே இறங்க ஆரம்பித்தோம். தீர்த்தத் தொட்டிக்குக் கொஞ்சம் கீழேயே  சாலை ஓரத்திலேயே கூட்டம் கூட்டமாக இரண்டு புள்ளிகளில் நிறைய்ய்ய்ய வண்ணத்துப் பூச்சிகள் வருவதும் .. பறப்பதும் ... என்று வேடிக்கை காட்டின. படம் எடுப்பதை விட அவைகளை வீடியோவில் எடுத்தோம்.

 கூட்டம் கூட்டமாக இருப்பது mud sipping  - தண்ணீர் குடிக்கவாம். அப்போதெல்லாம் நாம் எவ்வளவு பக்கம் போனாலும், நம் காமிராவை எவ்வளவு பக்கத்தில் கொண்டு போனாலும் சாதுக்கள் மாதிரி நம்மை அவைகள் ஒன்றும் கண்டுகொள்வதில்லை. ஆனால் தனியாக இருக்கும்போது பக்கத்தில் போவதிற்குள் பறந்து விடுகின்றன. Some animal behaviour....


அதன்பின் கருடன் கோவிலுக்கு வந்தால் நல்ல வேட்டை. ... அதன்பின் அனுமார் கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த ஓடையிலும் நிறைய வண்ணத்துப் பூச்சிகள் - தனியாகவும் ... கூட்டம் கூட்டமாகவும் ....
 


*
பொறுமையாக கொடுத்த போஸிற்கு நன்றி
உடைந்த நிழல் ...

பச்சைச் செடிகளுக்கு நடுவில் அப்படி ஒரு சிகப்புஇன்னும் கொஞ்சம் அதிக படங்களுக்கு செல்க .....