Friday, August 19, 2016

906. தினமலரில் என் நூல் பற்றிய ஒரு சிறு குறிப்பு


*

அதிக எண்ணிக்கையில் உள்ள மத நம்பிக்கையாளர்களுக்கு ’எரிச்சல்’ தரும் நம் புத்தகத்தைப் பற்றி எந்த பத்திரிகையும் செய்தி வெளியிடாது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு தமிழ் நாளிதழில்,.. அதுவும் off all dailies தினமலரிலேயே என் நூல் பற்றிய செய்தி வந்ததும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 

மகிழ்ச்சி!

நன்றி

*
Wednesday, August 17, 2016

905. சினிமாவுக்குப் போன சின்னப் பையன்

*

'திண்ணையில உட்காரச் சொன்னா கெடக்கி இரண்டு ஆடு கேட்பானாம்' அப்டின்னு ஒரு பழமொழி உண்டு அல்லவா? நம்ம கேசும் அதே தான். இதுவரைக்கு வாழ்க்கையில் கிடைக்காத ஒரு வசதியான அறை. ஏற்கெனவே சொன்னது போல் இது வரை பார்க்காத மேசை, நாற்காலி வசதி, தலைக்குமேல் சுற்றும் விசிறி … இப்படி எல்லா வசதியும் கிடைத்தது.இத்தனை வசதிக்கு நல்லா படிக்கிற ஒரு நல்ல பையனுக்குக் கிடச்சிருந்தா .. .. படிப்பில பின்னியிருந்திருப்பான்.

நான் இந்த அறைக்கு வந்த பின் என் சீனியர் ஒருவரும் வந்து சேர்ந்து கொண்டார். அவர் ரொம்ப நல்லவரு. அதிகம் பேசமாட்டார். அவர் வீட்டில் ஐந்து பிள்ளைகளாம். இவர் தான் மூத்தவர். இவர் மட்டும் படிப்பில் மட்டம். மற்ற பிள்ளைகள் எல்லோரும் மகா சுட்டிகளாம். வீட்டில் இதனால் இவருக்கு ‘திகுடு ..முகுடா’ நிறைய கிடைக்கும் போலும். ஆகவே இப்படியாவது படிப்போம் என்று சாமியாரிடம் கேட்டு சேர்ந்து கொண்டார்.

எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறை அந்த காம்பஸின் கடைசியில், மேற்கு மூலையில் இருந்தது. அதை ஒட்டி காம்பவுண்டு சுவர். எங்கள் ‘முன்னோர்கள்’ எங்களுக்கு வைத்து விட்டுப் போயிருந்த இன்னொரு வசதி என்னவென்றால், எங்கள் அறையை ஒட்டிய காம்பவுண்ட் சுவற்றில் ஏறிக் குதிப்பதற்குரியவாறு அங்கங்கே செங்கல்கள் பெயர்ந்திருக்கும். நாங்கள் அந்த காம்பஸுக்குள் வருவதற்கு இதுவே சுலப வழி எங்களுக்கு. ஒரு டீ குடிக்கணுமா, ஒரு ‘இழுப்பு’ இழுக்கணுமா, சும்மா ஒரு ஜம்ப்; அவ்வளவுதான். எங்களுக்குத்தான் அத்தனை சுலபம். எல்லாருக்கும் அப்படியெல்லாம் முடியாது. எங்கெங்கே செங்கல்லில் ஓட்டை, இன்னும் பல விஷயம் அதில…லேசுப்பட்ட டெக்னிக் இல்ல.

இப்படியெல்லாம் ஏறிக் குதித்து, டீ & தம் அடித்து அதோடு சேர்த்து ஏதோ போனா போகுதுன்னு, அப்பப்போ கொஞ்சம் படிக்கவும் செய்வேன். இதுக்கும் மேலே இன்னொரு சோதனையும் சேர்ந்து கொண்டது. பள்ளிப்படிப்பு முடியும் வரை வீட்டுக்குத் தெரியாமல் கள்ளத் தனமாக சினிமா ஏதும் பார்த்த்தில்லை. கல்லூரி வந்த பிறகும் இதே மாதிரி ‘நல்ல பிள்ளை’யாகத்தானிருந்தேன். வீட்டிலும் ‘படிக்கப்’ போனாலும் இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்து விட வேண்டுமென்ற கண்டிப்பு உண்டு. சினிமாவிற்குப் போக வேண்டுமெனில் வீட்டிலிருந்து 6 மணிக்கு முன்பே புறப்படணும் … படம் முடிந்து வீட்டுக்கு எவ்வளவு வேகமாக சைக்கிளில் வந்தாலும் ஒன்பதரையைத் தாண்டி விடும்.

இந்தப் பிரச்சனையை நண்பன் ஒருவனிடம் சொல்லிக் கொண்டிருந்த போது அவனுக்கு ஒரு ‘ஞானோதயம்’! ஆங்கில சினிமாவின் நல்லதும் கெட்டதும் அப்டின்னு ஒரு பிரசங்கம் கொடுத்தான். அப்போதெல்லாம் ஆங்கிலப்படம் என்றால் ரீகல் தியேட்டர் மட்டும் தான். நியூஸ் போட்டு 7 அல்லது ஏழே கால் மணிக்குப் பிறகு தான் மெயின் படம் ஆரம்பிக்கும். எப்படியும் எட்டேமுக்காலுக்குள் படம் முடிந்து விடும். என் வீட்டுக்கும் தியேட்டருக்கும் அந்தக் காலத்தில் 10 நிமிஷத்தில் விரட்டிப் போய்ச் சேர்ந்து விடலாம். இப்படி ஒரு ஐடியா கொடுத்தான். எனக்கு ஒரு பெரிய சந்தேகம். ஒன்றிரண்டு ஆங்கிலப் படம் பார்த்த போது வர்ர ஆளுக மூஞ்சியெல்லாம் ஒரே மாதிரியாகவே தெரியும். ஆக, போன சீன்ல செத்துட்டான்னு நினச்சவன் அடுத்த சீன்ல தலையைக் காட்டுவான். இந்தக் குழப்பம் வேற இருந்தது. அதெல்லாம் பார்க்க சரியாகி விடும் என்றான் நண்பன்.

அதோடு நிற்காமல் ஒரு படம் இப்போ ஓடுது. கட்டாயம் பார்த்து விடு என்றான். நானும் முதன் முதல்ல ஒரு ஆங்கிலப் படம் வீட்டுக்குத் தெரியாமல் ரீகல் தியேட்டருக்குப் போனேன். இந்த தியேட்டரில் அந்தக் காலத்தில் படம் பார்ப்பதே ஒரு பெரிய experience. நிறைய ஆச்சரியங்கள் அங்கிருக்கும். அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள இங்கே கொஞ்சம் போய்ப் பாருங்களேன்.  Rank Organization… Norman Wisdom நடித்த On The Beat  என்ற படம் தான் வீட்டுக்குத் தெரியாமல் நான் பார்த்த முதல் ஆங்கிலப்படம்.
பார்த்த்துமே ‘பச்சக்’குன்னு படம் பிடிச்சிப் போச்சு … என்னா காமெடி .. நாகேஷ் காதலிக்க நேரமில்லை படத்தில் தன் மேசையில் இன்னொரு பெரிய ஹாலிவுட் காமெடி நடிகரான Jerry Lewis பட்த்தை மட்டும் தான் வைத்திருப்பார். ஆனால் அவரின் நடிப்பில் Norman Wisdom சாயல் நிறையவே இருக்கும். A stitch in time என்று நினைக்கிறேன். Norman Wisdom நர்ஸாக நடித்திருப்பார். நாகேஷின் நீர்க்குமிழி படம் என்றும் நினைக்கிறேன். ஏறத்தாழ அதே கதை… ஒரு சிறு குழந்தையோடு – குட்டி பத்மினி? ரொம்ப ஒற்றுமையாக இருக்கும். 

அடேயப்பா … On The Beat ஆங்கிலப் படம் பார்த்ததே முதல் பெரிய வெற்றி. நல்ல ஆரம்பம். படம் பிடித்துப் போய் அப்பாவுடன் அடுத்த நாள் மதிய சாப்பாடு சாப்பிடும் போது ஒரு நல்ல சீன் நினைவுக்கு வந்து நான் சிரிக்க … அப்பா என்ன என்று கேட்டதும் எதையோ ஒரு பொய் சொல்லிச் சமாளித்ததும் நினைவுக்கு வருகிறது. முதல் வெற்றிக்குப் பிறகு அடிக்கடி ரீகல் போவது பழக்கமாகி விட்டது.

இப்போது தமிழ்ப்படம் ஓடுவது போல் அப்போது ஆங்கிலப்படங்கள் ஓடின. அதாவது இப்போதெல்லாம் தமிழ்ப்படங்கள் வெள்ளிக்கிழமை வெளிவரும். அடுத்த திங்கட்கிழமை அதே படம் ஓடுமா என்பது நிச்சயமில்லை. இது மாதிரி அந்தக் காலத்தில் வெள்ளி வரும் ஆங்கிலப் படம் ஒரு வாரப் படமாக இருக்கலாம். அல்லது இரு நாட்களுக்கோ மூன்று நாட்களுக்கோ ஓடும். ஒரு வாரத்திற்கு மேல் ஆங்கிலப்படம் ஓடுவது கிடையாது. ஆக வாரத்தில் எப்படியும் ஒரு படமாவது பார்த்திடலாம்.

 கல்லூரி வாழ்க்கையில் ஆங்கிலப்படம் பார்ப்பது மாமூல் விஷயமாகிப் போனது. காமெடி பட்த்தில் ஆரம்பமாகி, war படம் அது இதுன்னு வளர்ந்து போச்சு.

படிப்பு ஒரு ஓரமா ஒதுங்கி நடந்து வந்தது.
*

Wednesday, August 10, 2016

904. கபாலி பாத்துட்டேன் ……. I


*
முதல் பாகம். 

1.    படம் முதலில் துவங்கியதும் ஒரு வாய்ஸ் ஓவரில் ஆரம்பிக்கிறது. யாருடைய உச்சரிப்போ? ஒரு வேளை இயக்குனரின் குரலாக இருக்கலாம். 

எடுபடவில்லை. உச்சரிப்பு, குரலின் எடுப்பு என்று ஏதும் இல்லை. நம்முடைய ப்ளாக் ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால் ஆரம்பமே மொண்ணையாக இருந்தது. 

எனக்கு ஒரு ஐடியா அப்போது வந்தது. நம்ம ஆளு கல்யாண் ஜ்வெல்லர்ஸிடம் கொடுத்துப் பேசியிருக்க வச்சிருக்கலாமேன்னு தோன்றியது. நடிகர் திலகத்தின் சாயலைக் கொண்டு வந்திருக்கலாமேன்னு ஒரு எண்ணம். 

இன்னொரு ஐடியாவும் தோன்றியது. கமல்ஹாசனைப் பேசச் சொல்லியிருக்கலாம். இரண்டு நடிகர்களின் விசிறிகளுக்கும் நன்றாக இருந்திருக்கும். அதோடு விளம்பரமும் அசத்தலாகப் பண்ணியிருக்கலாம். அதிகமான ஆண்டுகள் கழித்து இருவரையும் ஒரே சினிமாவில் கொண்டு வந்திருக்கலாம். 

எப்படியோ அந்த வாய்ஸ் ஓவர் கொஞ்சம் தொல்லைதான். 


2. படத்தின் கடைசி சீன். 

கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் போது roster system பயன்படுத்த வேண்டுமென்று அரசும், பல்கலைக்கழகமும் ஆணையிட்டுள்ளன. அதாவது ஒவ்வொரு major subject-லும் சாதி அட்டவணை முறைப்படுத்த வேண்டும். இதனால் எல்லா சாதியினருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்பது அதன் மத்தியக் கருத்து. 

ஆனால் சில கல்லூரிகளில் முக்கியமான subjects - like chemistry, maths, physics – இவைகளில் பெருஞ்சாதியினருக்கு பெரும்பகுதியை அமுக்கி விடுவார்கள். அமுக்கப்பட்ட சாதியினருக்கென்றே இருப்பது போல் சில துறைகள் உள்ளன.

பல்கலைக்கு ஒவ்வொரு ஆண்டும் எந்த துறைகளில் யார் யாருக்கு அனுமதி கொடுக்கப்பட்டது என்பதை அனுப்ப வேண்டும். ஆனால் இப்படி செய்யப்படும் கல்லூரிகளில் மொத்த சீட்களும், அனுமதிக்கப்பட்டவரின் கூட்டுத் தொகையும் அனுப்பப்படும். எந்தெந்த துறைகளுக்கு யார் யாருக்குக் கொடுக்கப்பட்டது என்பதே தெரியாது. 

உடனே பல்கலைக்கழகத்திலிருந்து அந்தக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் போகுமாம். உடனே அக்கல்லூரிகளிலிருந்து உடனே ஒரு பதில் போகுமாம். இந்த ஆண்டு தவறி விட்டது; அடுத்த ஆண்டிலிருந்து அப்படி அனுப்பி விடுகிறோம் என்று ஒரு பதில். அதாவது நான் அடிப்பது போல் அடிக்கிறேன்; நீ அழுவது போல் நடி என்ற தத்துவம் செயல்படுத்தப் படுகிறது. 

கடைசி சீனில் கபாலியிடம் ஒரு இளம்பெண் கேட்பாள். ‘நாங்க கல்லூரிக்குப் போனாலும் நாங்கள் கேட்காத ஏதோ ஒரு துறையில் தான் கொடுப்பார்கள். நாங்கள் அதைப் படித்தும் பயனில்லாமல் போய் விடுகிறது’ என்பாள். 


ஒரு கல்லூரி ஆசிரியனாக  பல்கலையில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்த நண்பர் சொன்ன சேதியைப் பங்கிட்டுக் கொண்டேன். இது  பல்லாண்டுகளாக நடக்கும் ஒரு அநீதியை அந்தப் பெண் போட்டு உடைக்கிறாள்

அனேகமாக,  “இது அடிபட்ட ஏதோ ஒரு உள்ளத்தின் பாவமான  ஓலம்” என்றே அதை நினைக்கிறேன்.


 அடுத்த பாகம் விரைவில் ……… 


 *

Monday, August 08, 2016

903. தமிழ் நாளிதழ் இந்துவிற்கு நன்றியும் பாராட்டும்.

நம்மூர் பெயர்களை ஆங்கில ‘துரைமார்கள்” எப்படியெல்லாம் மாற்றினார்கள் என்பது பற்றி தமிழ் இந்துவில் சமஸ் என்ற பத்திரிகையாளர் நடுப்பக்கக் கட்டுரை எழுதியிருந்தார். அந்தப் பட்டியலில் மதுரை வரவில்லை. எனவே நான் என் வலைப்பூவில் ஒரு கட்டுரை “எங்க ஊர் பெயர் தெரியுமா?” என்று எழுதினேன். சரி.. அந்தப் பத்திரிகையாளரும் தெரிந்து கொள்ளட்டும் என்ற சாதாரண நோக்கில் அதை அவரது மெயில் முகவரிக்கு இரவில் அனுப்பினேன். அடுத்த நாள் காலையிலேயே அவரது பதில் எனக்கு வந்தது. அதில் என் கருத்தை ‘ஆசிரியருக்குக் கடிதங்கள் ’பகுதியில் அச்சிடுகிறோம் என்ற தகவலுடன் பதில் எழுதியிருந்தார். 

இதில் நான் மிகவும் ஆச்சரியப்பட்ட விஷயம் என்னவெனில், வேலைப்பளு அதிகமாக இருக்கும் ஒரு பத்திரிகையாளர் என் கட்டுரையை வாசித்து அதற்கு உடனே பதிலும் அனுப்பிய வேகம் தான். 


நானும் ஒரு பதில் எழுதினேன். நமக்கு வால் கொஞ்சம் நீளம் தானே…. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இன்னொரு விஷயத்தையும் அவர் காதிற்குக் கொண்டு போனேன். 


நமது பதிவர்-நண்பர் பிரபு ராஜதுரை குஜராத்தில் தலித்துகளின் போராட்டம் ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டு இதை நமது ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன என்று கவலையாக முகநூலில் எழுதியிருந்தார். அதைக் குறிப்பிட்டு சமஸ் அவர்களுக்கு என் பதிலில் சொல்லியிருந்தேன். 


அடுத்த ஆச்சரியம் … இந்தக் கடிதத்திற்கும் உடன் பதில் வந்தது. வரும் திங்களன்று மருதன் என்பவர் இதைப்பற்றிய கட்டுரை ஒன்று தமிழ் இந்துவில் வரும் என்ற தகவலையையும் தெரிவித்திருந்தார்.


தமிழ் இந்துவிற்கு நன்றி. நமது மாநில ஊடகங்கள் இதை இருட்டடிப்பு செய்த போது அதைப் பற்றிய கட்டுரையை மட்டுமல்லாது, இந்தப் போராட்டத்தைப் பற்றி அமெரிக்க The Newyork Times என்ற செய்தித் தாளில் வந்துள்ள தலையங்கத்தையும் தமிழில் மொழிபெயர்த்துப் போட்டிருக்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன். தமிழ் இந்துவிற்கு நன்றி. அதனோடு கட்டுரை எழுதிய மருதனுக்கும் எமது பாராட்டுகள்.


ஆனாலும் இதிலும் ஒரு சின்ன வருத்தம் உள்ளோடி உள்ளது. மருதன் கட்டுரையிலும், அமெரிக்க ஆங்கிலச் செய்தித்தாளிலும் இந்த “ஆசாதி கூச்” (சுதந்திரத்திற்கான நடைப்பயணம்) எவ்வளவு முக்கியமானது என்று எழுதியிருந்தாலும் இப்போராட்டத்தின் ஆணிவேரான தலித்திய பரிதாபகர நிலை பற்றி கொடுத்த முக்கியத்துவத்தை விட எப்படி இந்த ப் போராட்டம் மோடி இது வரை கண்கட்டி வித்தையாகக் காட்டிக் கொண்டிருக்கும் ‘குஜராத் மாடல்’ என்பதை உடைத்து நொறுக்கி விட்டது என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். 

 “குஜராத்தை ஒரு கனவுப் பிரதேசமாக, இந்தியா முழுமைக்கான ஒரு வலுவான உதாரணமாக முன்னிறுத்தியவர் அவர்தான்.(மோடி). இப்போது நம் கண்முன்னால் அந்தப் பெருங்கனவு சரிந்து கொண்டிருக்கிறது.” 
ஆனால், மருதனின் இந்த வரிகளை விட …

 “மேல்சாதி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, மெய்யான சுதந்திரத்தை அடைய வேண்டும் என்னும் எளிமையான கனவு இதில் புதைந்திருக்கிறது.” என்ற மருதனின் வரிகளே முக்கியம். 


 இன்னொரு “மன்றாட்டு”: தலித்துகளை மேம்படுத்த வேண்டும் என்று உழைக்கும் இடதுகளும், தலித்துகளுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்று உழைக்கும் திருமாவளவனும் மருத்துவர் கிருஷ்ணசாமியும் ஒரே ஒரு நோக்கத்தில் செயல் பட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தலித் மக்கள் உயரமுடியும். அதைச் செய்யுங்கள் என்று அவர்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். 


தலித்துகளின் முதல் வேலை … தலையில் சமூகத்தால் கட்டப்பட்ட, தங்கள் பாரம்பரிய, தரம் தாழ்ந்த வேலைகளை விட்டு அவர்கள் விரைவில் வெளியேற வேண்டும். இது ஒன்று மட்டுமே அவர்களை உய்விக்கும் ஒரே வழி. 


தலித் நலம் பற்றி நான் எழுதிய சில பதிவுகளில் இக்கருத்தை மட்டுமே முன்னணியில் வைத்து இதுவரை எழுதியுள்ளேன். 

அந்தக் கட்டுரைகள் கீழே ….. 

http://dharumi.blogspot.in/2016/05/blog-post.html http://dharumi.blogspot.in/2005/06/16_03.html http://dharumi.blogspot.in/2013/02/637.html http://dharumi.blogspot.in/2012/10/597_15.html http://dharumi.blogspot.in/2012/10/596.html http://dharumi.blogspot.in/2011/06/509.html    IN THE HINDU
http://dharumi.blogspot.in/2010/09/438.html http://dharumi.blogspot.in/2006/08/174-if-i-were.html http://dharumi.blogspot.in/2005/11/110.html http://dharumi.blogspot.in/2005/07/25.html
 *


902. Meet Jignesh Mevani, the man behind the current Dalit unrest in Gujarathttps://www.youtube.com/watch?v=JpMWIbFoEvc

Friday, August 05, 2016

901. எங்க ஊரு பேரு தெரியுமா உங்களுக்கு ….?
*


சமஸ் எழுதும் நல்ல நடுப்பக்கக் கட்டுரைகளை தமிழ் இந்துவில் வாசிக்கத் தவறுவதில்லை. இன்று (5.8.16) ”மேற்கை வெட்டுதல்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் ‘தூத்துக்குடியை டூட்டுகொரின் என்றும், தரங்கம்பாடியை டிராங்கோபார் என்றும் … திருச்சியை டிருச்சி என்றும் சேலத்தை சலேம் என்று எழுதுகிறோம்’ என்று எழுதியுள்ளார். மதுரையிலிருந்து இதை எழுதும் சமஸ் முக்கியமாக மதுரையின் பழைய பெயரை விட்டு விட்டாரே என்று எனக்கு ஒரு கவலை. அது என் பழைய நினைவுகளையும் கிளறி விட்டது. மதுரையில் ஆங்கிலேயர் விட்டுப் போன பழைய பெயரும் உச்சரிப்பும் என்னவென பலருக்கும் தெரியாதென நினைக்கிறேன். வயசான ஆளுகளுக்குத் தானே அது தெரியும். அந்தப் பெயர் – மெஜுரா.  ஆங்கிலத்தில் என்னமோ அன்றும் இன்றும் Maduraiதான்.  அதிலும் சிலர் Madura என்றும் எழுதுவதுண்டு. ஆனால் அந்தக் காலத்தில் ரொம்ப ஸ்டைலாகச் சொல்வதென்றால் மெஜுரா அப்டின்னு சொல்லணும்னு எங்க அப்பாகிட்ட இருந்து படித்தேன். படித்த நேரம், காலம், இடம் எல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

அப்பா தூய மரியன்னை உயர்நிலைப் பள்ளி ஆசிரியர். அந்தக் காலத்து ஆசிரியர்களுக்கான உடையும் ‘ஆங்கிலோ-தமிழ் ஸ்டைல்’ தான். கீழே அனேகமாக வேட்டி தான். சிலர் மட்டும் pantsம் போடுவதுண்டு. மேலே சட்டை. அதை வேட்டிக்குள் அல்லது pantskகுள் ‘இன்’ செய்திருப்பார்கள். அதை அரைக்கைச் சட்டையாகவோ முழுக்கை சட்டையாகவோ இருக்கும். காலர் பட்டன் எல்லாம் கிடையாது. இதற்கு மேல் ஒரு கோட்டு. சில தமிழாசிரியர்கள் இதோடு ஒரு தலைப்பாகை வைத்துக் கொள்வார்கள். காலில் ஒரு பழைய செருப்பு. சிலருக்குக் கையில் ஒரு குடை ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் மாதிரி இருக்கும்.
நினைவுக்கு வந்த பழைய விஷயம் என்று சொல்ல ஆரம்பித்தேனே… அது அனேகமாக 60 ஆண்டுகளுக்கு முந்திய நிகழ்வுகள். எனக்கு பத்துப் பன்னிரெண்டு து வயது இருந்திருக்கும். மதுரையிலிருந்து திருநெல்வேலி- தென்காசி வழியில் நடுவில் உள்ள ஆலங்குளத்தில் பேருந்தில் போய் இறங்கி அங்கிருந்து  இரண்டு மூன்று மைல் இருக்கும் எங்கள் கிராமத்திற்கு கூடு வைத்த மாட்டு வண்டியில் அல்லது நடந்தே போய்ச் சேருவோம். பொதுவாக குடும்பத்தோடு போனால் மாட்டு வண்டி. அம்மா என் சிறு வயதிலேயே இறந்து போனதால் அடுத்த அம்மா வந்து விட்டார்கள். குடும்பத்தோடு கிறிஸ்துமஸ் லீவுக்கும், கோடை லீவுக்கும் தவறாமல் போய் விடுவோம். ஊருக்கு வரும் போதெல்லாம் அப்பா வேட்டி சட்டை மட்டும் தான் போடுவார்கள். Pants are ruled out. அதிலும் இப்போது யாரும் அப்படி வேட்டி கட்டியது போல் பார்க்கவில்லை. எப்படியோ இரட்டையாக எட்டு முழ வேட்டியைக் கட்டுவார்கள். உள்ளே ஒரு சுற்று. அது முழங்காலுக்குக் கொஞ்சம் கீழே இருக்கும்.  அடுத்தது வெளிச்சுற்று. இப்படிக் கட்டுவதும் படித்தவர்கள் மத்தியில் தான். அதுவே அப்போ படித்தவர்கள் மத்தியில் இருந்த பேஷன். அப்பா எப்போதும் அந்த தட்டுச்சுற்று வைத்து தான் வேட்டி கட்டுவார்கள். ஊருக்குப் போகும்போதே அப்பா அங்கிருக்கும் மக்கள் கூட்டத்தின் நடுவில் தனியாகத் தெரிவார்கள். Standing out from the crowd!

அப்பாவின் ஊருக்குத் தான் முதலில் போவோம். அங்கு சில நாள். பிறகு அங்கிருந்து பத்துப் பதினைந்து மைல் தொலைவிலுள்ள அம்மா ஊருக்குப் போவோம். என்னைப் பெற்ற, வளர்த்த இரு அம்மாக்களின் வீடும் ஒரே ஊரில் தான். அங்கு என்னை பெத்த அம்மா வீட்டிற்கு சில நாட்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இது தான்  வழக்கம். சில சமயம் நானும் அப்பாவும் மட்டும் பேருந்தில் என் அம்மா வீட்டிற்குப் போவோம். அப்பா என்னை விட்டு விட்டு ஒரு அரை மணி நேரம் அந்த தாத்தா பாட்டி வீட்டில் இருந்து விட்டுப் போய்விடுவார்கள்.

இதுபோல் ஊருக்கும் போகும் போது இரண்டு வேளைகளில் அப்பா பேஷன் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக மாறும். கிறிஸ்துமஸ் அன்றைக்கு எங்கள் கிராமத்தில் இரவு கோவிலுக்குப் போவோம். அப்போது அப்பா அந்த பேஷனுக்கு மாறுவார்கள். இன்னொரு சமயம் எப்போது என்றால் என் தாத்தா-பாட்டி வீட்டுக்கு அப்பா வரும்போதும் அந்த பேஷன் வந்து விடும். கீழே தட்டுச்சுற்று வேட்டி. மேலே முழுக்கைச் சட்டை. இடது தோளில் அங்கவஸ்த்திரம்  என்பார்கள். அட … அது என்ன என்று இந்தக் காலத்து ஆட்களுக்கு விளக்கமாகச் சொல்லணுமே!

இடது தோளில் போட்டால் அது முன்னால் ஒரு அடி அளவிற்கும். முதுகில் ஒரு அரை அடி சேர்த்து ஒன்றரை அடி நீளமும் துண்டு போல் தொங்கும். ஆனால் அது துண்டு போல் இருக்காது. வேட்டி மாதிரி மல் துணி. அதில் ஒரு ஜரிகை பார்டர் இருக்கும், அதை எப்படித்தான் அந்த காலத்தில் அப்படி அழகாக iron செய்வார்களோ தெரியாது. நம் கைவிரலின் மூன்று விரல் அகலத்திற்கு ஒன்றிற்கு மேல் ஒன்றாக மடிப்புகள் வருவது போல அடுக்கடுக்காக தேய்த்திருப்பார்கள். இரண்டு பக்கமும் ஜரிகை பளபளக்கும். மாப்பிள்ளை ஜபர்தஸ்து போலும். கட்டாயம் முதல் தாத்தா-பாட்டி வீட்டிற்கு வரும்போது இது தான் அப்பா போட்டிருக்கும் உடை.

எதற்கு அப்பா போட்டிருந்த உடையைப் பற்றி சொல்கிறானே என்று நினைப்பீர்கள். எனக்கு சமஸின் கட்டுரை வாசித்ததும் அடடா …’மெஜுரா’வை விட்டு விட்டாரே என்று நினைவுக்கு வந்த போது என் அப்பா எப்போதெல்லாம் மெஜுரா என்று சொல்வார்கள் என்பது நினைவுக்கு வந்தது. ஒரு முறை அப்பா  என்னை மட்டும் அப்பா ஊரிலீருந்து அம்மா ஊருக்கு அழைத்துக் கொண்டு பேருந்தில் போனார்கள். ஊருக்குப் போகும் போதெல்லாம் அப்பா பேருந்தின் கடைசி இருக்கையில் அனேகமாக நடுவே உட்கார்வார்கள். அதில் இருந்தால் தான் ஒரு கெத்து மாதிரி தெரியும்னு நினைக்கிறேன். பஸ்ஸில் இருப்பவர்கள் நடுவே நடுநாயகமாக உட்கார்ந்து  போல் இருக்கும். அதுவும் அந்தக் காலத்தில் பஸ்ஸின் இடது பக்கம் இப்போது போல் இல்லாமல் ஜன்னல்களை ஒட்டி ஒரே ஒரு நீள சீட்டாக பஸ்ஸின் முழு நீளத்திற்கு இருக்கும். அந்த sitting arrangementல் அப்பா தான் நடுநாயகமாக எனக்குத் தெரியும்.

அப்பா வேட்டி கட்டியிருப்பது … தோளில் அங்கவஸ்த்திரம் போட்டிருப்பது … எல்லாமே அப்பாவைத் தனியாகக் காட்டி விடும். நிச்சயமாக பஸ்ஸில் இருப்பவர்களில் யாராவது ஒருவராவது ‘சார்வாள் … எந்த ஊர்க்காரவிய நீங்க?’ அப்டின்னு ஒரு கேள்வி கட்டாயம் வந்து விடும். அப்பா அப்படியே ரொம்ப ஜெண்டிலாக ‘மெஜுரா’ என்பார்கள். அனேகமாக கேள்வி கேட்டவருக்கு மெஜுரா அப்டின்னா எந்த ஊர்னே தெரியாது. உடனே அப்பா ’மதுரை’ என்பார்கள். இது போல் சில முறை நடந்தது என் நினைவில் இன்னும் இருக்கிறது.சமஸ் இதை அடிமைத் தனத்தின் எச்ச ருசி என்கிறார்.  Yes, remnants of British legacy!

 *