Monday, December 23, 2019

1085. WISHES FOR MY BIRTHDAY.

Saturday, December 21, 2019

1077. இந்துக்களே! நீங்கள் R.S.S. வழியில் தான் செல்ல ஆசைப்படுகிறீர்களா?





*

 ”அண்ணன்களின் வழியில் .... வந்ததே புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளேன். அதை வாசித்தால் அதைத் தொடர்ந்து இங்கு நான் எழுதியது புரியும்.

 கிறித்துவர்கள் ஒரே அமைப்பாக இருந்து பின்பு ஒரு பிரிவினர் பிரிந்து சென்றனர் தனிச்சபையாக. அவர்களுக்குப் பெயர் “பிரிவினைக்காரர்கள்”. கத்தோலிக்க மதாச்சாரியார்கள் செய்த பிழைகள் இப்பிரிவுக்குக் காரணம் என்பர் பிரிவினைக்காரர்கள். எப்படியோ இன்னும் அந்தப் பிரிவு உள்ளது. ஆனாலும் மக்கள் கணக்கெடுப்பில் இருவரும் கிறித்துவர்கள் என்ற ஒரே போர்வைக்குள் வந்து விடுவார்கள்.

 முகமதிய மதத்திலும் சன்னி, ஷியா என்று இரு பிரிவுகள்; அஹமதியா என்றும் ஒரு குழு. இன்னும் சில குழுக்கள் இருப்பதாகவும் சொல்லப் படுகிறது. இவர்களும் கிறித்துவர்கள் போலவே இஸ்லாமியர் என்னும் போது ஒரே குழுவினராக வந்து விடுகிறார்கள்.

 இது போன்ற பிரிவு இந்து மதத்திலும் ஏற்பட்டால் அது நல்லதோ என்று எனக்குத் தோன்றுகிறது. நான் பிறப்பால் ஒரு கிறித்துவன் என்றாலும் ஒரு மத, இறை மறுப்பாளன் என்ற நிலையில் நின்றுதான் இதைப் பேசுகிறேன். எங்கள் மதத்தில் உன் தலையீடு எதற்கு என்று இந்துக்கள் கேட்கலாம். இது என் ஆசை. கிறித்துவம், இஸ்லாம் குழுக்களாகப் பிரிந்தாலும் அது அவர்கள் மதத்தையோ அதன் எண்ணிக்கை பலத்தையோ மாற்றவில்லை. ஆகவே மதத்தின் “பலம்” சேதமடையாமல் “வலுவாகவே” உள்ளனர். அது போல் இந்து மதத்திலும் ஒரு பிரிவினை நடக்க வேண்டுமென்பது என் ஆசை. காரணங்கள் ...இதோ சொல்கிறேன்.


 என் கட்டுரையில் சாவர்கரும், கோல்வால்கரும் சொன்ன பெரும் “உண்மைகளை” எத்தனை இந்து மக்கள் அதை அப்படியே ஒத்துக் கொள்வீர்கள்? நிச்சயமாக 3% விழுக்காடு மக்கள் உடனே ஒத்துக் கொள்வார்கள். ஏனெனில் இதைச் சொல்வதும் ஆரியர்கள் என்று அழைக்கப்படும் பிராமணர்கள் என்று நம்புகிறேன். ஆகவே 3% விழுக்காட்டு பிராமணர்கள் இதை உடனே ஒத்துக் கொள்வார்கள். மற்ற பிறரின் நிலை என்ன?

வரலாற்று வழியில் பார்க்கும் போது இன்றைய இந்து மக்களாகவும் அன்று மதம் என்ற ஓர் அடைப்புக்குள் வராத நம் முன்னோர்களுக்கு குலம் காக்க வந்த பல ஆண்களும் பெண்களும் தெய்வமானார்கள். சுடலைமாடனும், கருப்பு சாமியும், அய்யனாரும் கடவுளாக கிராம எல்லைகளில் வீற்றிருந்தார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ancestral worship என்ற வழிமுறைதான் இருந்து வந்துள்ளது. அதன் பின் மக்கள் கணக்கெடுப்பின் போது மதம் என்று ஒன்றைச் சொல்லியாக வேண்டும் எனும் கட்டாயம் ஏற்பட்ட போது எப்போதும் அதிகார பீடத்தில் இருக்கும் பிராமணர்கள் / ஆரியர்கள் இந்த மக்களையும் இந்து என்று அடைப்புக்குள் ஒரு ‘கணக்கிற்காக’ இழுத்து வந்து விட்டனர். எல்லோரும் இந்துக்களாக ஆகி விட்டோம் அல்லது ஆக்கப்பட்டு விட்டோம்.

 இன்று இருக்கும் இந்து மதம் சுத்தமாக ஒரு பிராமணிய மதம். அதன் கடவுள்களை - அதைப் பெரிய கடவுள் என்பார்கள்; முன்னோர் தெய்வங்கள் சிறிய கடவுளாகி mutate ஆகி விட்டார்கள் - பழைய மக்களுக்கு, அதாவது கணக்கெடுப்பு எடுக்க ஆரம்பிப்பதற்கு முன் உள்ள நம் முன்னோர்களுக்கு, இப்போது பிரபலமாக உள்ள இந்துக் கடவுள்களைத் தெரியாது. ஒன்று சொல்ல வேண்டும் .. பிடிக்கிறதோ இல்லையோ .. உண்மையைச் சொல்ல வேண்டுமல்லவா?! பிராமணர்கள் காலங் காலமாய் பெரும் புத்திசாலிகள், அறிவாளிகள். 

தங்கள் ஆர்யக் கடவுள்களைப் பொதுக் கடவுளாக்கி விட்டார்கள் - வரலாறு சொல்லும் உண்மை இது. இந்து மதத்தின் கோட்பாடுகளுக்கும், சாதி வித்தியாசங்களுக்கும் எதிராக எழுந்த இரு பெரும் மதங்களையும் பூண்டோடு அழித்த பெரும் பெருமை அவர்களுக்கே. யாரும் மறுக்க முடியாதபடி அத்தனை புத்திசாலிகள். இன்றும் அதை ஒவ்வொரு கட்டத்திலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். 

 இத்தனை இருப்பினும் தங்கள் மதத்தை மக்கள் மீது அழகாகவும் வன்மையாகவும் இருத்தி வைத்து விட்டார்கள், வன்மை என்று ஏன் சொல்கிறேனென்றால் தங்களை மட்டும் உயர்சாதியாக்கி, அனைவரையும் தங்கள் முன் மண்டியிட வைத்து விட்டார்கள். ‘சாமி’ என்று என் சிறுவயதில் கேட்டதை ஒரு பழைய விஷயமாகி ஒரேயடியாக நின்று விட்டதாகவும் சொல்ல முடியாது. இன்றும் அனைத்து I.I.T. களிலும் அவர்கள் தானே “சாமி”! இல்லையா?

தங்கள் உயர்த்திக் கொண்டு மற்றவர்களைப் படிநிலைகளில் வைத்ததால் சண்டை வந்தாலும் அது backward vs most backward, அல்லது most backward vs dalits என்று தான் வருமேயொழிய forward vs non-forward என்று எப்போதும் வரவே வராது. என்னே அவர்களின் ராஜ தந்திரம். இதனால் தான் நான் அவர்களை “அண்ணாந்து” பார்க்கிறேன். சாதியை மறுக்க முடியாத ஓர் ஆயுதமாக நீட்டிக்க வைத்து விட்டார்கள். அதில் என்னையும், உன்னையும் கீழ் நிறுத்தி, தாங்கள் ஏணியில் உச்சத்தில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை மகாத்மா பூலேக்களும், இரட்டை மலைகளும், பெரியார்களும், நாராயண குருக்களும் வந்தாலும் மாற்ற முடியாத சாதி அடையாளத்தை ஒவ்வொருவன் பிறக்கும் போது நெற்றியில் அச்சு குத்தி அனுப்பி விடும் வன்மம் இன்னும் பல காலம் தொடரும். என்றாவது அது முடியுமாவென்றும் தெரியவில்லை.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். சாவர்க்கர், கோவால்கர் சொன்ன “உபதேசங்கள்” எத்தனை பெயருக்குச் சரியென்று படும் என்று கேட்டிருந்தேன். 3% விழுக்காட்டிற்குக் கணக்கு காட்டியாகி விட்டது. அதைத் தவிர இன்னும் எத்தனை விழுக்காட்டிற்கு அந்த இருவர் சொன்னது சரியென்று படும். உங்கள் மனசாட்சிக்கு நீங்களே உண்மையாக இருந்து, அந்த இருவரின் கருத்து சரி என்று உங்களுக்குத் தோன்றினால் இப்பதிவின் கீழ் “ஓம்” என்று பதிவிடுங்கள் - இது பிராமணரல்லாதவர்களுக்கு மட்டும்.

 ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி (சமஸ்கிருதம்), ஒரே கலாச்சாரம் என்பதை வலியுறுத்தும் இந்து மதம் என்னைப் பொறுத்த வரை இன்றைய இந்துக்களில் மிக மிகப் பலருக்குப் புறம்பானதாகவே இருக்கும் .. இருக்க வேண்டும். முன்னோர் வழிபாடு செய்த மக்களின் மேல் திணிக்கப்பட்ட பெரும் வேதக்  கடவுள்களும் புறம்பானவர்களே. இது ஒரு சாதியினரின் அறிவுத் திறனில் விழைந்த விழைவு.

ஒரு வேளை இது நமக்கு (இந்துக்களுக்கு) நன்மை செய்திருந்தால் நலமே. அப்படி என்ன நலம் என்பதை இந்து மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஐயப்பனுக்கும், வெங்கடாஜலபதிக்கும் அளிக்கும் நன்கொடைகளை நம் முருகனுக்குக் கொடுத்தாலும் ‘அந்தத் தமிழ்க் கடவுளும் நாம் கேட்பதைக் கொடுப்பார்’ என்ற நம்பிக்கை அவ்ர்களுக்குத் தானே வர வேண்டும். ஆனால் இதையெல்லாம் விட, இந்து மதம் நம்மை சாதியென்னும் சாக்கடைக்குள் அடைத்து வைத்திருப்பதிலிருந்து வெளிவந்தால் சாதிகளையும், சாதிகளில் உள்ள படிநிலைகளையும் அது உடைத்து விடாதா என்றொரு நப்பாசை. 

ஆனாலும் இந்துக்களின் அடிப்படை உணர்வுகள் தவறு - சாவர்க்கர், கோவால்கர் சொல்வது போல் நம் நாட்டு இந்து மக்கள் அனைவரையும் கட்டுப் படுத்தும் அந்த உணர்வுகள் மிகத் தவறு. இதைத் தெரிந்தும், தெரியாமலும் பலரும் இந்து மதத்தினராக உள்ளார்கள். (இது அனைத்து மதத்திலும் உள்ள நிலைப்பாடுகள் தான். எத்தனை கிறித்துவர்களுக்கு கிறித்துவ மதத்தின் ஆரம்ப கால வரலாறு தெரியும்? கிறிஸ்து கடவுள் என்று எப்படி ஒரு கூட்டம் நிலைப்படுத்தியது என்பது அவர்களுக்குத் தெரியமா? குரானின் “சுத்தம்” பற்றி எழுப்பும் கேள்விகளுக்கான பதிலும், சானா குரான் பற்றிய கேள்விகளும் எத்தனை அடிப்படை இஸ்லாமியவாதிகளுக்குத் தெரியும்?) ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி (சமஸ்கிருதம்), ஒரே கலாச்சாரம் என்பதை வலியுறுத்தும் இந்து மதம் சரியென்று தோன்றுகிறதா? அப்படித் தோன்றினால் ...

 கிறித்துவ மதத்திலும், இஸ்லாமிய மதத்திலும் தோன்றிய இது போன்ற பிரிவு இந்து மதத்திலும் ஏற்பட்டால் அது நல்லதோ என்று எனக்குத் தோன்றுகிறது.


I REPEAT:

அந்த இருவரின் கருத்து சரி என்று உங்களுக்குத் தோன்றினால் இப்பதிவின் கீழ் “ஓம்” என்று பதிவிடுங்கள் - இது பிராமணரல்லாதவர்களுக்கு மட்டும்.


 *


Thursday, December 19, 2019

1076. அண்ணன்களின் வழியில் .... வந்ததே புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா.




ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்து கொண்டிருந்த எனக்கு தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு எழுதும் வாய்ப்பு வந்தது. ‘பிரிட்டிஷ் கால இந்திய வரலாறு’.  ஆசிரியர்: பேரா. சு. வெங்கடேசன். (வர்த்தமானன்).  இதன் மூலம் பல புதிய வரலாற்று நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நூலின் கடைசிப் பகுதிக்கு வந்த போது நம் நாட்டின் சாதிய நிலைகள் பற்றிய பகுதி வந்தது.

சாதிகள் எப்படி எப்போது எந்த வழியில் நம்முள் நுழைந்தது என்பது பற்றிய விவரங்கள் வந்த போது தான் அதிர்ச்சிகள் தொடர்ந்து வர ஆரம்பித்தன. சாவர்க்கர், கோவால்கர், R.S.S. பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை மொழிபெயர்க்கும் காலத்தில் தான்  CAB  திட்டம் அமுலுக்கு வந்தது.  மோடி முதுகைத் தட்டிக் கொடுக்க வேண்டும் என்றே தோன்றியது. சாவர்க்கர், கோவால்கர்  அன்று சொன்னதை இன்று முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். அவர் கடமை உணர்வு இப்படி சிறப்பாக இத்திட்டத்தைக் கொண்டு வந்ததில் இருந்து தெரிய வருகிறது.

1923ல் விநாயக் தாமோதர் சாவர்க்கர் “இந்துத்வா: இந்து என்பவர் யார்?” என்ற நூலை வெளியிடுகிறார்.  சர்க்கார் சொன்னதில் எனக்குப் “பிடித்த” பாய்ண்ட்!!! : இதோ ...
அண்ணன் சாவர்க்கர் சொல்கிறார்: ஆரியர்கள் வரலாற்றின் துவக்க காலத்தில் இந்தியாவுக்கு வந்து குடியேறிய போதே தேசத்தை ஏற்படுத்தி விட்டனர். ... இவர்கள் தனி இனசாதியைச் சேர்ந்தவர்கள், இந்துக்களின் இரத்தத்தில் கலந்திருப்பது “வேதத்தந்தையர்”களின் குருதி தான்.

அண்ணன் சாவர்க்கர் சொன்னது ....

அடுத்த அண்ணன் கோவால்கர்: கேசவ் பாலிராம் ஹெட்கேவார் 1925ல் R.S.S. அமைப்பை ஆரம்பிக்கிறார். அதன் பின் வந்த கோல்வால்கர் 1939ம் ஆண்டில் புது வடிவத்தையும் விளக்கத்தையும் கொடுக்கிறார். அண்ணன் சொன்னதில் எனக்குப் பிடித்தது !!!”

இந்துக்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்லர், இந்திய மண்ணுக்குச் சொந்தக்காரர்கள்.  அவர்களே ஆரியர்கள். வேதகால கலாச்சாரமே ஆரிய கலாச்சாரம். ஆரிய கலாச்சாரமே இந்து கலாச்சாரம். இந்து கலாச்சாரமே இந்திய கலாச்சாரம். ... ஒரு இனம், ஒரு மதம், ஒரு மொழி, ஒரு கலாச்சாரம் கொண்ட ஒற்றை அடிப்படை தேசமே விரும்பத் தக்கது. 

அண்ணன் கோவல்கர் சொன்னது ...
கோவால்கர் ஜெர்மானிய இனவாத அணுகுமுறையால் கவரப்பட்டவர். .ஜெர்மானியர் எவ்வாறு ஓரின வாதத்தை நிலைநாட்டினார்களோ அதே போன்று இந்து இன ஆதிக்கத்தை இந்தியாவில் செய்ய வேண்டும். .. இந்து ராஷ்ட்ரத்தை ஏற்படுத்துவதே இந்து தேசியவாத இயக்கத்தின் குறிக்கோள்.

அன்று அண்ணன்கள் கிழித்த கோட்டை அப்படியே நிறைவேற்ற தொடர்ந்து போராடி வருகிறார்கள் நமது தலைவர் மோடி - ஷா.

Friday, December 13, 2019

1075. ஒரு கிழவனின் புலம்பல் ... 2




*


 முந்திய பதிவு:

ஒரு கிழவனின் புலம்பல் ...1



///மனம் சோர்ந்து விட்டது. நாமும் கீழானவர்கள்; நம்மை ஆள்பவர்கள் நம்மை விடக் கீழானவர்கள். மக்களாகிய நமக்குச் சட்ட திட்டங்கள் என்று ஏதுமில்லை; அவைகளை நாம் மதிப்பதோ அதன் வழி நடப்பதோ என்றும் இல்லை. மருந்துகளிலும், உணவுப் பொருளிலும், மாங்காய்களைப் பழுக்க வைப்பதிலும் கூட கலப்படம் செய்யும் அளவிற்கு மனசாட்சையைத் துச்சமாகத் துடைத்தெடுத்த மாக்கள் நாம். எல்லா ஏரிகளிலும் கட்டிடங்கள் ... அதிலும் அரசே கட்டும் கட்டிடங்கள்.  மணல் வாருவதில் நம்மை அடித்துக் கொள்ள ஆட்களே கிடையாது. எப்படி நம் எல்லோருக்கும் சுத்தமாக மனசாட்சியே இல்லை என்று (என்னையும் சேர்த்து தான்!) கேட்டுக் கொள்கிறேன். “என் வேலை - நல்லதோ கெட்டதோ - அது வெற்றிகரமாக முடிய வேண்டும்; அதனால் யாருக்கு என்ன ஆனால் எனக்கென்ன!” என்ற பெரும் வாழ்க்கைத் தத்துவம் நமக்கு. நரி வலம் போனால் என்ன .. இடம் போனால் என்ன.. என் மேல் பாயக்கூடாது” என்றதொரு  பெரும் தத்துவம் நமக்கு.//

கிழவர்களின் புலம்பல்கள் நிற்காது. அது ஒரு நீள் தொடர் கதை தான். நான் மட்டும் விதிவிலக்கா என்ன ...?

தேர்தல் முடிந்து முடிவுகளை எதிர்பார்க்கும் போது என் அச்சங்களைப் பட்டியலிட்டிருந்தேன். அச்சங்கள் நிஜமாக பூதாகரமாக  படையெடுத்து வருகின்றது. அதில் முக்கியமாக ஒன்று சொல்லி அச்சப்பட்டிருந்தேன். //அதுவும் அவருக்கு தமிழ்நாட்டின் மீது ஏன் அத்துணைக் கோபம் .. வஞ்சம் என்றும் தெரியவில்லை. “குறி வைத்து அடிப்பது” என்பார்களே அதை அவர் தொடர்ந்து செய்து வந்திருப்பதாக எனக்குத் தோன்றியது. //  ... என்று எழுதியிருந்தேன். சுற்றியுள்ள நாடுகளிலிருந்து வரும் இஸ்லாமியரல்லாதார் மேல் கரிசனத்தைக் கொட்டிக் கவிழ்த்த மோடி - அமித் ஷா கம்பெனிக்கு ஏன் இலங்கை மறந்து போய் விட்டது, அதிலிருந்து வந்த தமிழர்கள் காலங்காலமாக எவ்வித உரிமைகளும் இல்லாமல் இருப்பது ஏன் அவர்களுக்கு மறந்து போனது? பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் வழியில் திபெத்திய “அகதிகளுக்காக” ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட இடத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு பெரிய tourist center ஆக உள்ளது. பெரிய புத்தர் கோவிலகள் .. குரு மடங்கள் .. எல்லாவற்றையும் விட விவசாயம் செய்ய பெரும் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. அகதிகள் முதலாளிகளாக ஆகி நம்மூர் ஆட்களை வேலைக்கமர்த்தி விவசாயம் செய்கிறார்கள். பல கேள்விகள் எழுந்தன. இப்பதிவில் அவைகளைப் பார்க்கலாம்.

ஹைதராபாத்தில் நடந்த கற்பழிப்புக் கொலைக்கு நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டதும் எங்கிருந்து தான் வந்தார்களோ .. இந்த “செயல்பாட்டாளர்கள்” தங்கள் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்து வந்து விட்டார்கள். பொள்ளாச்சியில் நால்வர் பெண்கள் விஷயத்திற்காக கைதானது, அவர்கள் மேல் வழக்கு விரைந்து நடக்காமல் தூங்கிப் போனது பற்றியெல்லாம் தெரியாமல் இவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த விஷயத்தில் அவர்கள் இன்னும் விழிக்கவில்லை. இப்போது விழித்து பல கேள்விகள் எழுப்பி தங்கள் அறிவுத் திறனைக் கொட்டிக் கவிழ்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

இன்னொரு நல்ல கேள்வி -- சுட்டுக் கொல்லப்பட்ட நால்வரும் ஏழை பாழைகள். சுட்டு விட்டார்கள். பொள்ளாச்சி போல் பணமும் அரசியல் பலமும் இருந்திருந்தால் இப்படி காவல் படை ஒரு என் கவுண்டர் நடத்தியிருக்குமா?  நிச்சயமாக நடந்திருக்காது. கேள்வி கேட்பார் இல்லாதவர்கள் என்பதால் சட்டென்று சுட்டு விட்டார்கள். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் இந்த கற்பழிப்புக் குற்றங்களில் நமது காவல் படைக்கு எப்போதுமே அளவுக்கதிகமான பொறுமை உண்டு. நிச்சயமாக பல கற்பழிப்புகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் ஏழைகள் தான். அவர்கள் வழக்குப் பதிவு செய்யப் போனால் காவல் துறை பொதுவாக அவர்களைக் கீழ்த்தரமாக நடத்துவும், வழக்கப் பதியாமல் இழுத்தடிப்பதும் வழக்கமாகத் தொடர்ந்து செய்கின்றார்கள். உனானே கற்பழிக்கப்பட்ட பெண்ணின் கதையும் அவளின் தந்தை கதியும் எல்லோருக்கும் தெரியும். ஏழைகளாக இருந்தால் பாவம் அவர்கள். அதுவும் ஏழையான தலித் பெண்கள் இன்னும் அதிகமான இளக்காரம் இருப்பது எல்லோரும் அறிந்ததே. 

கற்பழிப்பு வழக்குகளில் முதல் குற்றவாளிகளாக இருக்க வேண்டியவர்கள் வழக்கைப் பதிய காலங்கடத்தும், அல்லது பதியாமலே இருக்கும் காவல் துறை தான்.

முதல் தவறு காவல் துறை என்றால் கடைசித் தவறைச் செய்பவர்கள் நம் “மதிப்பிற்கு அருகதையில்லாத” நீதிபதிகள். எப்படித்தான் இவர்களால் வழக்குகளை இந்த அளவு இழுத்தடிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதில் நம் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் மிகுந்த திறமைசாலிகள் தான். வழக்கு நடக்கும் .. நடக்கும் .. நடந்து கொண்டே இருக்கும். அதன்பின் சாட்சியங்கள் பற்றவில்லை / காவல் துறை சரியான் முறையில் வழக்குப் பதியவில்லை / தவறு செய்தவன் பாவம் .. ரொம்ப சின்னப் பையன்.. அவனை விட்டுருவோம் .. என்றெல்லாம் சொல்லும் நீதியரசர்கள். 

காசுக்காரன் மேல் குற்றம் பதிவிட்டிருந்தால் இந்த அளவிற்குக் கூட வராது. அடுத்து இன்னொரு “திருவிளையாடல்” இருக்கும். தண்டனை கொடுத்த பின்னும் பல ஆண்டுகள் அதைக் கிடப்பில் போட்டு விடுவார்கள். அடுத்து கருணை மனு வரும். முடியாதென்பார்கள். அதன் பின்னும் அது தொடரும் பல காலத்திற்கு. கட்சிக்காரர்கள் என்றால் அவர்களை யாராவது செத்துப் போன ஒரு பெரிய மனுசன் பேரைச் சொல்லி கொலையாளிகளை வெளியே அவிழ்த்து விட்டு விடுவார்கள். இந்த “செயல்பாட்டாளர்கள்” தருமபுரிக் கொலைகாரர்களை விடுதலை செய்ததற்கு என்ன ...தைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஹைதராபாத் என்கவுண்டரில் குற்றம் செய்தவர்கள் காசு பணம் இருப்பவர்களாக இருந்திருந்தால் என் கவுண்டர் நடந்திருக்காது தான். ஆனாலும் நம்மூர் சினிமா போலீஸ்காரர்கள் வில்லனை நேரடியாகத் தண்டிப்பார்கள். ஏனெனில் வழக்கு என்று கோர்ட் படியேறினால் என்னாகும் என்பது யாரும் அறிந்த உண்மை. இந்த காவல் அதிகாரி சஜனார் அது போல் தான். ஆதுவும் இதை அவர் இரண்டாவது முறையாகச் செய்துள்ளார், குற்றப் பதிவு செய்யவே தயங்கும் காவல் துறையில் இப்படி ஒரு அதிகாரி. என் சல்யூட் அவருக்கு. 

“செயல்பாட்டாளர்கள்” காவல் துறை தண்டிக்கும் அதிகாரத்தைக் கையிலெடுப்பது தவறு என்று சொல்வதில் தவறில்லைதான், ஆனால் இந்த சஜனார் என் மதிப்புக்குரியவர். பொள்ளாச்சியில் அவர் பதவியில் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கனவு கண்டு கொண்டுதானிருக்கிறேன். செயலற்ற காவலர்கள், செயல் முறையற்ற நீதிமன்றங்கள் இருக்கும் போது இப்படி ஓரிரு சஜனார்கள் இருப்பது மகிழ்ச்சியே.

  • இதைக் குற்றம் சொல்லும் “செயல்பாட்டாளர்கள்” பொள்ளாச்சி வழக்கைத் தங்கள் கண்ணாடிகளை கழற்றித் துடைத்து நியாயம் விரைவில் கிடைக்க விரைந்தால் மகிழ்ச்சி.
  • அதே “செயல்பாட்டாளர்கள்” தரும்புரி வழக்கில் விடுதலையானவர்களைக் கண்டு கொள்ளட்டும்.
  • இன்னும் கல்வித் துறை “செயல்பாட்டாளர்கள்” .. மூன்றாம், எட்டாம் வகுப்பில் பொதுத் தேர்தல்கள் நடத்துவதைத் தவிர்க்க முயற்சி எடுக்க வேண்டும்.
  • பல மாநில அரசுகள் மத்திய அரசின் பணிகளில் தங்கள் மாநிலத்திற்கென்று இத்தனை விழுக்காடு என்று வரையறை வைத்திருப்பது போல் நம் தமிழ்நாட்டிலும் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும்.


அதென்னவோ தெரியவில்லை. இந்த மூன்றாம், எட்டாம் வகுப்புத் தேர்வுகள், இந்தி ஆதிக்கம், எங்கும் எதிலும் இந்திப் பெயர்கள் (தேஜஸ் ரயில்  .. அப்டின்னா? இனி கம்பர் விரைவு ரயில்.. பாண்டியன் / [பல்லவன் ரயில் போன்ற பெயர்களைப் பார்க்கவே இனி முடியாதோ??(, நீட் தேர்வுகள், அதில் நடக்கும் பித்தலாட்டங்கள்.. காது கம்மலை கழற்றி வைத்து தேர்வு எழுதப் போ என்கிறார்கள்.. ஆனால் நம் ’தெரமசாலிகள்’ ஆளையே மாற்றி விடுகிறார்கள்!), குடியுரிமைச் சட்டத்தில் காணாமல் போன secularism .. இப்படியே பட்டியலிட்டால் நீளமாகப் போய் விடும். 

இவைகளைப் பற்றி ஓரளவாவது தமிழ் நாட்டில் பேசுகிறோம். ஏன் ஏனைய மாநிலங்கள் மெளனமாக இறுகி நிற்கின்றன. இந்தித் திணிப்பைப் பற்றி தென் மாநிலங்கள் ஏதும் மூச்சு விடுவது கூட கிடையாதே .. இது ஏன்? எப்படி? இப்படியே தான் எல்லாம் இருக்குமோ .. இதெல்லாம் ஒரு கிழவனின் புலம்பலில் மட்டும் தான் இருக்குமா? தமிழ்நாட்டு இளைஞர் கூட்டம் ஏதும் செய்யாது சுரணையற்று தான் இருக்குமோ?  எப்படியோ என்ன காரணமோ .. ஜல்லிக்கட்டுவிற்கு ஒரு கூட்டம் எப்படியோ சேர்ந்தது. அவ்வளவு தான். இனி எல்லாம் தனிப் பகல் கனவுதானா?????









 *

Sunday, December 01, 2019

1074. சில திரைப்படங்கள்.






*


 ஐந்து நாள் சென்னைப் பயணம். முதலிரு நாள் பேரப் பிள்ளைகள். அதன் பின் எல்லாரும் படிக்கப்போய்ட்டாங்க. மொழி பெயர்ப்புக்காக புத்தகத்தையும் பேப்பர்களையும் கையோடு எடுத்துச் சென்றிருந்தேன். முதல் நாள் நாலு பக்கம் எழுதினதோடு சரி. ஊர் சுத்தலை. ஆளை முழுசா முழுங்கிடுமே .. அந்த சோபாவிற்கு உள்ளே கை காலு எல்லாத்தையும் தூக்கி அதன் உள்ளே போட்டுக்கிட்டு ஒரே ஒரு பாரமான விஷயத்தை மட்டும் கையில் எடுத்துக்கிட்டேன் - ரிமோட். பிள்ளை வீட்ல டிவி சீரியல் கிடையாது  ஆனால் netflicks, prime video ரெண்டுமே இருந்துச்சா  .. வரிசையா பல படங்கள்... ரெண்டு நாள் ...



1. ஜல்லிக்கட்டு

நடிகர்கள் யாரும் இல்லை. சொல்லப்போனால் ஒரே ஒரு மாடு மட்டும் தான் படத்தில் வரும் முக்கிய பாத்திரம். ஆனாலும் அந்த மாடு மாதிரி படமும் வேகமாகப் போனது. ஒரே ஒரு செருப்பில் ஒரே நடிகர்; இங்கே பலர் வருவாங்க .. போவாங்க .. ஆனா மாடு  மட்டும் தான் நமக்குத் தெரிந்த ஒரே charecter. அது தான் ஹீரோ; கிராமத்துக்காரங்க அனைவரும் ஹீரோவைத் துரத்தும் வில்லன்கள்.

2. TO LET

நிறைய பரிசுகள் வாங்கிய படங்கள். படப்பிடிப்பு. நடிப்பு, இயல்புத் தன்மை படத்தில் பிடித்த விஷயங்கள். வாடகை வீடு தேடுவதில் ஒரு பாவப்பட்ட உதவி சினிமா இயக்குநரின் பொருளாதார இயலாமையைப் பார்க்க பாவமாக இருந்தது. Just a very plain movie. காசில்லா மக்களுக்கு வரக்கூடிய ஒரு சாதாரண விஷயம் என்பதால் படம் என்னைத் தொடவில்லை.

3. அசுரன்

படத்தில் தனுஷின் நடிப்பு, அவரது இரு பிள்ளைகளின் நடிப்பு  என்று நிறைய பேர் எழுதி விட்டார்கள். ஆனால் படத்தின் மையப் புள்ளியை எல்லோரும் தவற விட்டு விட்டார்களோ என்று தோன்றுகிறது. காலம் காலமாய் இருந்து வரும் பஞ்சமி நிலத்தைப் பற்றிய புரிதல் விட்டுப் போனது போல் பல திரைப்ப்ட திறனாய்வுகளைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றியது.
இந்தக் கம்பு சுத்ற வேலையைத் தமிழ்ப்படங்கள் கைவிடுவதாகவே இல்லை. சுற்றி நிற்கும் அனைவரையும் கதாநாயகன் தனுஷ் ஒற்றை ஆளாய் - சின்ன மகன் அப்போது நன்றாகவே வேடிக்கை பார்க்கிறான்! - அடித்துக் கொல்லும் போதும், கை ஈட்டி நெஞ்சில் குத்தி முதுகு வழியே எட்டிப் பார்த்த பிறகும் ஹீரோ நெத்தியில ஒரு சின்ன ப்ளாஸ்டருடன் வரும் போது .. வெற்றிமாறனோ வேறு எந்த இயக்குநரோ படம் யார் எடுத்தாலும் இந்தக் காட்சிகள் தான் தமிழ்ப்படங்களில் தொடருமா என்ற கேள்வி மனதில் எழுந்தது. என்னமோ போங்க ...
இந்தப் படம் நன்றாக இருக்கிறது.. நடிப்பு ரொம்ப சூப்பர்னு சொன்னாங்கன்னு தான் பார்த்தேன். பார்த்ததும் பரவாயில்லை என்று நினைத்தேன் அடுத்த படம் பார்க்கும் வரை ...


4. ARTICLE 15

இந்திப் படம். தலித்துகளின் நிலையைச் சொல்லும் படம். மூன்று பெண்கள் .. அதில் இருவர் மரத்தில் தொங்குகிறார்கள்; gang raped. இன்னொரு பெண் காணாமல் போய் விடுகிறாள். தகப்பன்கள் விரட்டப் படுகிறார்கள். காவல் துறை எல்லாம் தெரிந்தும்  கண்களை மூடிக்கொள்கிறது. புதிதாக ஒரு ஐ பி எஸ் ஆபிசர் வருகிறார். ஒரு பிராமணர். தன் தந்தையின் ஆசைக்காக தேர்வு எழுதி இப்பதவிக்கு வருகிறார். அவருக்கும் அவரது காதலிக்கும் நடுவில் வாட்சப்பில் மூலம் நடக்கும் விழிப்பூட்டல்களும் விவாதங்களும் மிக அழகு.
வெகு இயற்கையான படம். செயற்கைத்தனம் ஏதுமில்லா படம். படம் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று நினைக்க வைத்த படம். தமிழ் உலகம் எப்போது அந்த நிலைக்கு உயருமோ தெரியவில்லை. விரைந்து நடக்கும் என்றே நினைக்கின்றேன்; எதிர்பார்க்கின்றேன். அதில் போராட்டக்காரராக வரும் தலித்திய தலைவர் ஓர் இளைஞர். தலை சாய்க்க நேரமில்லாமல் போராட்டக் களத்தில் இருப்பவர். சுட்டுக் கொல்லப்படுகிறார். அவரது கடைசி வசனம் மனதைத் தைத்தது.

you're  a sweeper  என்று எடுத்தெறிந்து பேசுபவரை எதிர்த்து How long I have to be a sweeper என்று சொல்லும் பதில் படத்தின் அடிப்படையைப் பேசுகிறது

சகதிக்குள் இறங்கி பெண்ணைத் தேடிய ஆபிசர் அதன் பின் காய்ந்த ஜீன்ஸ் போட்டிருந்த ஒரு தவறு மட்டும் தான் கண்ணில் பட்டது. படம் முழுவதும் நம்மைக் கட்டிப் போட்டு வைக்கிறது. படம் பார்த்ததும், பரியேறும் பெருமாள் படம் நினைவுக்கு வந்தது. நாம் ஒன்று ஒரேயடியாக ஒண்ணுமில்லாமல் போகவில்லை. ஆனால் பரி.பெரு. மாதிரி படங்கள் நிறைய வரணும் - both in content and quality.


5.கும்பளாங்கி இரவுகள் - KUMBALANGI NIGHTS

தீவுக்குள் இருப்பது போல் கேரளாவில் சுற்றி தண்ணீர் இருக்கும் வீடு ஒன்றில் நான்கு சகோதரர்கள். ஆனால் அவர்களின் அப்பா, அம்மாவிற்குள் சில கலாட்டாக்கள் .. குளறுபடி. ஒரேஅப்பாவுக்கு இரண்டு மனைவிகளிடமிருந்து   இரு பிள்ளைகள் என்பது மாதிரி கலாட்டாக்கள். வெட்டிச் சண்டை போடும் அவர்களுக்குள் ஒரு சகோதரனின் காதல்-கல்யாணத்திற்காக ஒற்றுமை வருகிறது. ஒரு பெரிய ஹீரோ .. சின்ன ரோலில் வருகிறார். அவர் பெயர் ... சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஹீரோவாக வருவாரே .. அவர் தான். பெயர் நினைவுக்கு வந்த பிறகு அதைச் சேர்த்து விடுகிறேன்.
மிக அழகான இடங்கள்.. வெகு அழகான படப்பிடிப்பு. ஓடிப்போய் அந்த இடத்திற்குப் போவோமா என்று நினைக்க வைக்கும் இடங்களை அத்தனை அழகாகப் படம் பிடித்திருந்தார்கள். Smooth and lovely movie.


6. VERTIGO

அந்தக் காலத்தில் பார்க்கத் தவறிய ஹிட்ச்காக் படம். இரண்டாவது சீனிலேயே ஹிட்ச்காக் இடமிருந்து வலமாக ஸ்க்ரீனில் நடந்து செல்வார். முதல் சஸ்பென்ஸ் அப்படி மிக எளிதாக நிறைவேறியது. அதன் பின் படம் சாதாரணமாகச் சென்றது. பணக்கார மனைவியைக் கொன்று முழுச் சொத்தையும் அபகரிக்க எண்ணும் கணவன் கதாநாயகனை உளவறிய அனுப்புகிறான். இறுதியில் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டது போல் தெரிகிறது. ஆனாலும் கதாநாயகனுக்கு சில ஐயங்கள். துப்பறிவைத் தொடர்கிறார். இறந்தாகக் கருதப்பட்ட பெண்ணைக் கண்டுபிடிகிறார் - இது நம்ப முடியாத ஒரு ’சினிமா நிகழ்வாக’த் தோன்றியது. அவளைத் தொடர்கிறார். புதிய பறவையில் சரோஜா தேவி செய்தது போல் இங்கே கதாநாயகன் செய்கிறார். அந்தப் பெண் நடிக்க வந்தவர். கதாநாயகன் இதைப் புரிந்ததும், இந்தப் பெண்ணும் தற்கொலை செய்து கொள்கிறார் - அது ஏனென்று தெரியவில்ல; அது தேவையுமில்லை. கடைசி ட்விஸ்ட் இது தான். ஹிட்ச்காக் படம் என்று அது நிருபிக்கிறது. அந்தக் காலத்தில் கேள்விப்பட்டது போல் அத்தனை நன்றாக இல்லை. சாதாரண படம்.


7.REVELATION

மிக அழகான ஒரு தமிழ்ப்படம். பாட்டில்லை .. நடனமில்லை .. யோகி பாபு காமெடி இல்லை. இதனாலேயே இப்படம் ஒரு நல்ல படம் என்பதை நிரூபிக்க முடியும் போலும். சேத்தன் ஹீரோ...விஜய் ஜெயபால் இயக்குநர். ஒரு கேள்விக்குள்ளான குறும்பட நாயகியாக நடித்த லஷ்மிபிரியா கதாநாயகி. என்னைக் கட்டிப் போட்ட படம். இப்படி ஒரு தமிழ்ப்படமா என்று ஆச்சரியப்பட வைத்த அழகான, ஆழமான படம். நாயகன் - நாயகி மத்தியில் நாமும் மாட்டிக் கொள்கிறோம். கல்கத்தா நகரை நேரில் பார்த்த அனுபவம்.மென்மையான மனித உணர்வுகள், தனிப்பட்ட குணவியல்புகள், ஒவ்வொரு கதாபாத்திரங்களோடு ஒன்றி விடுகிறோம். மக்களின் வாழ்வில் இருந்த சின்னச் சின்ன சிக்கல்கள், அதனால் ஏற்படும் இணைப்புகளும் பிரிவுகளும் நம்மையும் உள்ளே இழுத்துக் கொள்கின்றன.

இயக்குனர் ஜெயபால்


லஷ்மிபிரியா நல்ல நடிகை என்பதால் அவர்களைப் போன்றவர்களைத் தமிழ்ப் பட உலகம் புறந்தள்ளி வைத்து விட்டதோ? இந்தப் படத்தைப் பார்த்து முடித்ததும் இன்னும் சில நாளில் விஜய் ஜெயபால் போன்ற இயக்குநர்கள் எண்ணிக்கையில் கூடி விடுவார்கள் என்ற ஒரு நம்பிக்கையும், அட்லீ போன்ற இயக்குநர்கள் தர்த்தியான விஜய் போன்ற நடிகர்களை வைத்து எடுக்கும் படங்கள் குறைந்து விடும் என்ற ஒரு சின்ன நம்பிக்கையும் நெஞ்சில் மெல்ல எழுந்தது.

பரிசிற்குச் செல்லும் இப்படங்கள் ஏன் மக்களுக்குச் சென்றடைவதில்லை?


8. ஆரஞ்சு மிட்டாய்

விஜய் சேதுபதி எழுத்திலும் நடிப்பிலும் தயாரிப்பிலும் உருவான மிக மிக வித்தியாசமான படம். படத்தில் கதை இல்லை. வித்தியாசமான, விட்டேத்தியான ஒரு கிழவர். பெருங்குடும்பத்தில் பிறந்த நிறைய திமிர் பிடித்த அந்தக் கிழவரின் அட்டகாசமும் ஆர்ப்பாட்டமும் நம்மைஅவரின் மீது ஈர்ப்பு கொள்ள வைக்கிறது.  பார்வையாளர்கள் போலவே மருத்து உதவியாளராக வரும் ரமேஷ் திலக்கையும் அந்தக் கிழவர் ஈர்த்து விடுகிறார்.  இந்த நடிகரை அந்தக் காலத்தில் கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் வந்த முதன் முதல் சீனிலேயே எனக்குப் பிடித்தது. விஜய் சேதுபதியின் மகனிடம் தன் தந்தை பற்றிப் பேசும் இடமும், கடைசி சீனில் பாறையில் அமர்ந்து கொண்டு விஜய் சேதுபதியிடம் பேசும் இடம் என்று ஒவ்வொன்றும் மிக அழகாக அமைக்கப் பட்டிருந்தன.


“Life ... is a tale
Told by an idiot, full of sound and fury,
Signifying nothing.” என்ற ஷேக்ஸ்பியரின் மேற்கோள்களைத் தெறிக்க விட்டிருந்தார்கள் 

ஏனிந்த படம் என்னை ஈர்த்தது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு சீனையும் ரசித்துப் பார்த்தேன். விஜய் சேதுபதி என்ற நடிகரையும், மனிதரையும் பிடித்துப் போனதால் ஏற்பட்ட விளைவா என்றும் தெரியவில்லை. எப்படியோ என் இதயம் அப்படிப் பேசுகிறது. இந்தப் படத்தை எடுத்த சேதுபதியின் தைரியத்திற்கும் என் பாராட்டுகள். இரு பாடல்கள் - ஜஸ்டின் பிரபாகரின் (எங்கள் கல்லூரி மாணவர்) இசையமைப்பு பிடித்தது; பின்னணியில் அவரது இசை பொருத்தமாக இருந்தது.




9. EQUALIZER 2

Denzel Washington பிடிக்கும் என்பதால் இப்படத்தை தேர்ந்தேன். ரிட்டையர்ட் சூப்பர் ஏஜெண்டாக வருகிறார். அடிதடி சண்டை .. அது இதுன்னு தீவிரமாகப் போச்சு. கடைசி சீன்ல மழையும் புயலுமாய் கடற்கரையில் அடிக்கும் சண்ட மாருதத்தில் துப்பாக்கி சண்டை. சண்டைன்னு வந்துட்டாலே நம்ம ஹீரோக்கள் அடிக்கிற அடிகளை என்னால் தாங்க முடியாது.






 *