Posted
inBook
Review
கிறித்துவத்திலிருந்து நாத்திகத்திற்கு நான்
நடந்துவந்த பாதை – நூல் அறிமுகம்
மதுரை ’தி அமெரிக்கன் கல்லூரி’யின்
முன்னாள் விலங்கியல்துறைப் பேராசிரியர் சாம் ஜார்ஜ் ’கிறித்துவத்திலிருந்து
நாத்திகத்திற்கு நான் நடந்துவந்த பாதை’ என்ற தலைப்பில் எழுதியுள்ள இந்நூல்
கிறித்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
பேரா.சாம் ஜார்ஜ் ஏற்கனவே கடவுள் மறுப்புக் கொள்கையினை விளக்கி ’மதங்களும் சில
விவாதங்களும்’, ’கடவுள்
என்னும் மாயை’ ஆகிய இரண்டு புத்தகங்களை தருமி (Dharumi) என்ற புனைப்பெயரில் எழுதியுள்ளார்.
நாத்திகப் பாதையைத் தான் தேர்ந்தெடுத்தற்கான காரணங்களை அவர் தற்போது ‘My Road to ATHEISM
from Christianity’ என்ற இந்த நூலில் எழுதியுள்ளார். கிறித்துவம் உலகளாவிய மதம் என்பதால், ஆங்கிலம் அறிந்த அனைவரும் வாசிக்கும்
வாய்ப்பு இருக்கும் என்ற எண்ணத்தில் சாம் ஜார்ஜ் இந்நூலை ஆங்கிலத்தில்
எழுதியிருக்கலாம். இந்த முக்கியமான நூலினைத் தமிழிலும் அவரே எழுதுவாரெனில், அவரது கருத்துகளை தமிழ் கூறும்
நல்லுலகம் புரிந்து கொள்ள ஏதுவாயிருக்கும்.
மதங்கள்
தோன்றிய காலத்திலிருந்தே இந்த உலகில் மத எதிர்ப்புச் சிந்தனைகளும் உருவாகின.
இந்திய மண்ணில் உலகின் பழமையான வைதீக வேதமதம் தொடங்கிய காலத்திலேயே, அதனை மறுத்து சாங்கியம், சார்வாகம், மீமாம்சம் போன்ற நாத்திகத் தத்துவங்கள்
தோன்றின. நாத்திக சிந்தனையின் பிறப்பிடம் இந்தியா என்று பெருமையுடன் நாம் சொல்லிக்
கொள்ளலாம். மேற்குலகிலும் நாத்திக சிந்தனைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே
இருந்துள்ளதை வரலாறு குறிப்பிடுகிறது. மேற்குலகின் முதன்மையான தத்துவவியலாளர்
சாக்ரடீஸ் காலத்திற்கும் முன்னரே நாத்திக சிந்தனையாளர்கள் இருந்துள்ளனர்.
இன்றைய
உலகில் கிட்டதட்ட பத்தாயிரம் மதங்கள் இருந்தாலும் கிறித்துவம் (31%), இஸ்லாம் (24%), இந்துமதம் (15%), புத்தமதம் (7%) ஆகியன பெரும்பான்மை மதங்களாக
விளங்குகின்றன. உலகில் 16-20% நாத்திகர்கள்
உலகில் உள்ளனர் என்று சமீபத்திய கணக்கெடுப்பு கூறுகிறது. நாத்திகர்கள் எண்ணிக்கை
அதிகரித்து வருவது நம்பிக்கை
அளிக்கின்றது.
ஒரு
குழந்தையின் பெற்றோர்கள் கடைப்பிடிக்கும் மதமே அக்குழந்தையின் மதமாகி விடுகிறது.
அந்தக் குழந்தை பெற்றோரின் அரவணைப்பில் வளர்கிறது, கல்வி பெறுகிறது, சமூகத் தாக்கத்திற்கு உள்ளாகிறது.
அறிவு வளர்ச்சி பெற்றுச் சுயமாகச் சிந்திக்கும் வரையில் தான் பிறந்து வளர்ந்த
சூழ்நிலையைவிட்டு அந்தக் குழந்தை வெளிவருவதில்லை. குழந்தைப் பருவம் கடந்து
சிந்திக்கும் திறன் பெற்ற பின்னரே மனிதன் தனக்கான மதநம்பிக்கையை, அல்லது மதமறுப்பினைத்
தேர்ந்தெடுக்கிறான். நெருப்பு, பெருமழை, நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு, இருட்டு போன்று இயற்கையில் ஏற்படும்
மாற்றங்களைக் கண்டு பயந்த ஆதிமனிதர்கள், இயற்கையை (Pantheism) வழிபடத் துவங்கினர். இயற்கைச்
சீற்றத்தைக் கண்டு ஆதிமனிதனிடம் உருவான இத்தகைய அச்சமே, மதங்கள் தோன்றக் காரணமானது என
சமூகவியலாளர்கள் கருதுகின்றனர்.
நாகரிகம்
வளர்ந்த பின்னர் மனிதன் தன் வடிவத்தில் தெய்வங்களையும், அவற்றை வழிபடும் சடங்குகளாக
மதங்களையும் படைத்தான். உலகின் ஏராளமான மதங்கள் கீழ்த்திசை நாடுகளிலேயே
தோன்றியுள்ளன. இந்தியாவில் வைதீக இந்துமதம், பௌத்தம், சமணம் ஆகிய மதங்கள் உருவாகின.
அபிராஹாமிய மதங்கள் எனப்படும் ஜுடாயிசம், கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களும்
மேற்காசிய நிலப்பரப்பில் தோன்றின. பைபிளின் ஒரு பகுதியான பழைய ஏற்பாடு (Old Testament) இம்மூன்று மதங்களுக்கும் பொதுவானதாக
இருக்கிறது. கிறித்துவர்களின் புனித நூலாகியுள்ள பைபிள், புதிய ஏற்பாடு (New Testament) எனப்படும் பகுதியையும் தன்னுடன்
இணைத்துக்கொண்டது.
நூலாசிரியர்
தருமி (Dharumi) கல்லூரியில்
படிக்கும் காலம்வரை தான் கிறித்துவராகத் தொடர்ந்ததையும், பின்னர் பகுத்தறியும் ஆற்றல் பெற்றதும்
கிறித்துவக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் நாத்திகராக மாறியதையும் இந்த
நூலில் விளக்குகிறார். தன்னுடைய சிந்தனை மாற்றத்திற்கான கருத்தியல் ஆதாரத்தை அவர்
இந்த நூலில் முன்வைக்கிறார். நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே மனிதன் மதத்தைத்
தழுவி நிற்பதால், மதத்தின்
பிடியிலிருந்து வெளிவருவது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. அதுவே நாத்திகர்கள்
குறைவான எண்ணிக்கையில் இருப்பதற்கான காரணமாகிறது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை
அதிகரித்துக் கொண்டிருப்பதும் உண்மை.
மூன்று
பகுதிகளாக விரிந்து செல்லும் நூலினை வாசகர்களுக்கான இரண்டு கேள்விகளுடன் தொடங்கும்
நூலாசிரியர் தருமியின் முதல் கேள்வி பிரபஞ்சம் குறித்ததாகும். ‘பரந்து விரிந்த
இந்தப் பிரபஞ்சத்தில் பூமி மிகச் சிறிய புள்ளி என்பதை நாம் அறிவோம். இருந்தும்
மதங்கள் போற்றும் கடவுள்கள்
அனைவரும் பூமியைப் பற்றியும், அதில் வாழும் மனிதர்களைப் பற்றிய சிந்தனைகளை மட்டுமே கொண்டிருப்பதேன்? எல்லைகளற்ற பிரபஞ்சம் முழுவதையும்
படைத்த அந்தக் கடவுள்கள் தங்கள் எல்லைகளை இந்தச் சிறு பூமியின்
நடவடிக்கைகளுக்குள்ளாகச் சுருக்கிக்கொண்டதேன்?’
வாசகர்களுக்கான
அவரது இரண்டாவது கேள்வி- மதங்கள் உருவாக்கிய கடவுள்கள் அனைவரும் தாங்கள் தோன்றிய
பகுதிகளைத் தாண்டி வெளியில் செல்லவில்லையே – அது ஏன்? விதவிதமான வாகனங்களைக் கொண்டுள்ள
இந்துமதக் கடவுள்களால்கூட இந்திய எல்லைகளைத் தாண்டிச் செல்ல முடியாமல் போனது ஏன்? அதேபோல் ஜுடாயிச, கிறித்தவ, இஸ்லாமிய கடவுள்களும் தாங்கள் தோன்றி
வாழ்ந்த எல்லைப் பகுதிகளைத் தாண்டாதது ஏன்? புராக் எனப்படும் பறக்கும் குதிரைகளில்
பறந்து திரிந்த இஸ்லாமிய தீர்க்கதரிசிகளும் மேற்காசியாவைத் தாண்டவே இல்லை.
அதேபோன்று சர்வவல்லமை கொண்ட ஜுடாயிச, கிறித்துவ தீர்க்கதரிசிகளும் தாங்கள்
தோன்றிய இடத்திலேயே நிலைகொண்டிருந்தனர் – அதுஏன்?
நாத்திகப்
பாதையில் தான் அடியெடுத்து வைத்த தருணங்கள் பற்றி நூலுக்கான முன்னுரையில் ஆசிரியர்
தருமி எழுதுகிறார். எல்லா மதங்களும் ’நம்பிக்கை’ (FAITH) என்ற கல்லின் மேல் கட்டப்பட்டுள்ளன.
அதன் காரணமாக சந்தேகங்கள் எழும்போது கேள்விகளை எழுப்ப தயக்கமும், பயமும் ஏற்படுகின்றன. “என்னுடைய
தயக்கங்களைத் தாண்டி கேள்விகள் கேட்கும் அளவிற்கு நான் ஒரு கட்டத்தில் முதிர்ச்சி
அடைந்தேன். அப்போது எனக்குள் கிறித்துவம் வலியுறுத்தும் இரண்டு அடிப்படைகள்
குறித்த கேள்விகள் எழுந்தன. ”மனிதன் சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமை (Free Will) உள்ளவன். ஆனால் கிறித்துவம் ’கடவுளின்
கட்டளை’ (God’s Will) தவிர்க்க முடியாதது” என்கிறது. இது முரணல்லவா என்ற முதல் கேள்வி எனக்குள்
எழுந்தது.
நூலாசிரியர்: தருமி (Dharumi)
அடுத்ததாக
கிறித்துவம் வழியுறுத்தும் வழிபாடு (Prayer) பற்றிய கேள்வி என்னுள் எழுந்தது.
”உலகில் நடப்பவை எல்லாம் கடவுளால் ஏற்கனவே நிச்சயக்கப்பட்டுள்ளன” என்று சொல்லும்
பைபிளின் வாசகங்களுக்கும், மனிதன்
மேற்கொள்ளும் வழிபாட்டின் வலிமையால் தீமைகள் அழியும்; நல்லவைகள் நடக்கும் எனும்
போதனைகளுக்கும் இடையில் இருக்கின்ற முரண்பாட்டையும் என்னால் ஏற்றுக்கொள்ள
முடியவில்லை. ’வழிபாடு’ குறித்த அவநம்பிக்கை எனக்குள் எழுந்தது. இதுபோன்று
அடுத்தடுத்து எனக்குள் எழுந்த சந்தேகங்கள் என்னுடைய பாதையை மாற்றியமைத்தன. எனக்கான
பத்து கட்டளைகளை நானே உருவாக்கிக் கொண்டேன். அதிலிருந்த இரண்டாவது கட்டளை
பகுத்தறிவு கொண்டு எதையும் ஆய்வுக்கு உட்படுத்துவது என்பதாகும். மதங்களுக்கு
இடையிலான மோதல்களை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இவையனைத்தும் சேர்ந்து
என்னைக் கிறித்துவத்திலிருந்து நகர்த்தி நாத்திகம் நோக்கித் தள்ளின” என்கிறார்
தன்னுடைய முன்னுரையில்.
’என்னுடைய
பாதை’ என்ற தலைப்பிடப்பட்டுள்ள முதல் பாகத்தில் குழந்தைகளுக்கு பைபிள்
வகுப்புகளில் சொல்லித்தரப்படும் கட்டுக் கதைகளை, நரகம்-மோட்சம் குறித்த விவரிப்புகளை
எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்கிறார் நூலாசிரியர். கடவுள் கருணையின்
வடிவம் என்கிறார்கள். பாவம் செய்த மனிதனை தண்டனை என்ற பெயரில், நரகம் எனும் எல்லையில்லா துயரத்தில், அன்பான அந்தக் கடவுள் எவ்வாறு
நெருப்பிலிடுவார்?
ஏசு
தன்னுடைய போதனைகளை கதைகளின் (Parables) வழி சொல்கிறார். அந்தக் கதைகளில் நியாய
உணர்வுகள் இருப்பதில்லை என்பது நூலாசிரியரின் கருத்து. ‘தவறிச் செல்லும் மகன்’, மீனவர்களின் வலை, ’லாசரஸின் வறுமை’, ’நோவாவின் கப்பல்’ போன்ற கதைகள்
நீதிக்குப் புறம்பாக இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். பரிசுத்த திரித்துவம் (Holy
Trinity) புரியாத
புதிராகவே இருக்கிறது. ’தந்தை’, ’அவரின் மகன்’, ’புனிதஆவி’
ஆகிய திரித்துவர்களில் யார் உயர்ந்தவர்? யாரை வணங்குவது? இவற்றிற்கெல்லாம் தெளிவான விளக்கங்கள்
எதுவுமில்லை. மனிதனின் தோற்றம் குறித்த கட்டுக்கதை கேலிக்குரிய ஒன்றாக இருக்கிறது.
நான்காம்
நூற்றாண்டில் கிறித்துவ இறையியலாளர்கள் மத்தியில் விவாதங்களும், மோதல்களும் ஏராளமாக நடைபெற்றன.
ரோமானியப் பேரரசர் கான்ஸ்டன்ட்டின் கி.பி.325இல் கிறித்துவ இறையியலாளர்கள்
கூட்டத்தைக் கூட்டி அவர்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை
மேற்கொண்டார். ரோமானிய கத்தோலிக்கத் திருச்சபை தோன்றிய அக்காலத்திலேயே, அதனை ஏற்றுக்கொள்ளாமல் பிரிந்து
சென்றவர்களும் உண்டு. ஆதாம்-ஏவாள் கதையிலும் கடவுள் அறிவுக்கு எதிராக இருப்பதேன்? ”அறிவாளிகளின் அறிவினை நான்
ஏற்றுக்கொள்ளமாட்டேன்” என்று ஏசு மிகவும் வெளிப்படையாகச் (பைபிள் -கொரின்த்தியன்1:!9) சொல்வதேன்?
ஏசு
வாழ்க்கை வரலாற்றின் பலபக்கங்கள் மறைக்கப்பட்டுள்ளன. தன்னுடைய பன்னிரெண்டாவது
வயதில் ’பாஸ்ஓவர்’ எனப்படும் திருவிழாவில் அவர் கலந்துகொள்கிறார். அதற்குப் பிறகு
பதினெட்டு ஆண்டுகள் கழித்தே மீண்டும் வருகிறார். இடைப்பட்ட காலங்களில் என்ன
செய்தார் என்ற விளக்கம் நான்கு நற்செய்திகளிலும் இல்லை. அது குறித்து ஏசு
இந்தியாவுக்கு வந்தார்; நாளந்தா
பல்கலைக்கழகத்தில் தங்கினார்; திபெத் சென்று பௌத்தம் பற்றிக் கற்றுக் கொண்டார் என்றெல்லாம் ஏராளமான
கட்டுக்கதைகளே மலிந்து கிடக்கின்றன.
நூலின் இரண்டாம் பகுதி நற்செய்திகள் (Gospels) குறித்துப் பேசுகிறது. புதிய ஏற்பாடில்
உள்ள மாத்யூ, மார்க், லூக், ஜான் ஆகிய நான்கு பேரின்
நற்செய்திகளின் மூலம் ஏசுவின் வாழ்க்கை வரலாற்றை அறிகிறோம். இன்று நமக்குக்
கிடைத்திருப்பது புதிய ஏற்பாடு நூலின் மூலப்பிரதி அல்ல. மூலப்பிரதி கிடைக்கவில்லை.
இன்றிருப்பது மூலத்தின் எடுக்கப்பட்ட பிரதிகளிலிருந்து எடுக்கப்பட்ட பிரதியே.
மார்க் முதலாம் நூற்றாண்டில் (பொ.ஆ.66 – 110) எழுதிய நற்செய்தியே முதலில் எழுதப்பட்ட
நற்செய்தியாகும். ஜான் எழுதிய நற்செய்தி முதல் மூன்று நற்செய்திகளிலிருந்து மாறுபட்டதாக
இருக்கிறது.
புதிய
ஏற்பாடில் இருக்கும் இந்த நான்கு நற்செய்திகளைத் தவிர தாமஸ், பீட்டர், ஜூடாஸ், ஃபிலிப், மேரிமேக்டலின், ஜேம்ஸ் போன்றோர் எழுதிய நற்செய்திகளும்
கிடைத்துள்ளன. புதிய ஏற்பாடில் இருக்கும் நற்செய்திகள் நான்கும் ஜூடாஸை வில்லனாகவே
சித்தரிக்கின்றன. ஆனால் ஜூடாஸ் ஏசுவுக்கு மிகவும் பிடித்தமான சீடனாக
இருந்திருப்பதாக ஜூடாஸ் எழுதியுள்ள நற்செய்தி கூறுகிறது. ஏசுவை காட்டிக்கொடுத்தது
வெள்ளிக் காசுகளுக்காக அல்ல என்றும் ஏசு கேட்டுக்கொண்டதால்தான் ஜூடாஸ் அவரைக்
காட்டிக் கொடுத்தார் என்றும் ஜூடாஸ் நற்செய்தி கூறுகிறது. இந்த நற்செய்திகளில் எதை
நம்புவது? புதிய
ஏற்பாடு நான்கு நற்செய்திகளை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்ற நற்செய்திகளைப்
புறக்கணிப்பதேன் என்று நூலாசிரியர் தருமி (Dharumi) கேட்கிறார். மற்ற நற்செய்திகள் புதிய
ஏற்பாடு கற்பிதம் செய்யும் ஏசுவின் வாழ்க்கை வரலாறுக்கு மாறானவையாக இருப்பதே
அதற்கான காரணம் என்கிறார்.
தாமஸ்
எழுதியுள்ள நற்செய்தி ஒரு புதிய தகவல் ஒன்றினைக் கொண்டுள்ளது. திரித்துவர்களில் (Trinity) தந்தை, மகன் இருவரையும் அவமதிப்பவன்
மன்னிக்கப்படலாம். ஆனால் புனித ஆவியை அவமதிப்பவன் மன்னிக்கப்படமாட்டான் என்று அந்த
நற்செய்தி கூறுகிறது. அப்படி என்றால் புனித ஆவி மற்ற இருவரையும் காட்டிலும்
உயர்ந்ததா? மூவருக்குள்
ஏன் இந்த வேறுபாடு? அது
புதிரல்லவா?
மேரி
மேக்டலின் எழுதிய நற்செய்தி முழுமையாகக் கிடைக்கவில்லை. சில பகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன.
மேரியின் நற்செய்தி அதிர்ச்சி அளிக்கும் செய்திகளைத் தருகிறது. ஏசுவின் போதனைகளை
மக்களிடையே எடுத்துச் சொல்வதற்கு அவரது சீடர்கள் தயங்கினர். பிரச்சாரத்தில்
ஈடுபட்டால் ஏசுவிற்கு ஏற்பட்ட கதி தங்களுக்கும் ஏற்படுமோ என அஞ்சினர். ஆனால்
ஏசுவின் போதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உறுதியுடன் மேரி
மேக்டலின் இருந்தார். அதனால் ஏசுவின் சீடர்கள் அவர் மீது கோபமுற்றனர். ”ஏசுவின்
சீடர்களாகிய எங்களிடம் சொல்லாத ஒன்றை உன்னிடம் –அதுவும் ஒரு பெண்ணிடம் எப்படி ஏசு
சொல்லியிருப்பார்” என்று ஏசுவின் சீடர்கள் ஆண்ரூஸ் மற்றும் பீட்டர் சண்டையிட்டதாக
மேரி மேக்டலின் எழுதியுள்ளார். இந்தச் சண்டையைத் தவிர்க்கவும், மேரிக்கு ஆதரவாகவும் லெவி (ஏசுவின்
போதனைகளில் நம்பிக்கை கொண்டிருந்தவர்) தலையிடுகிறார். “நமக்குள் சண்டையிடாமல்
ஏசுவின் நற்செய்திகளைப் பரப்பிடுவோம்” என்று சொல்லி மோதலுக்கு லெவி முற்றுப்புள்ளி
வைத்தார் என்று மேரியின் நற்செய்தி கூறுகிறது. ஏசுவின் சீடர்கள்
எப்படிப்பட்டவர்கள் என்பது இதிலிருந்து புலனாவதாகக் கூறுகிறார் நூலாசிரியர் தருமி
(Dharumi).
புதிய
ஏற்பாடில் இல்லாத பல நற்செய்திகளில் மற்றொன்று ஃபிலிப் எழுதிய நற்செய்தி. இதுவும்
ஏசுவின் வாழ்க்கை வரலாற்றில் நாம் அறியாத பக்கத்தின் மீது வெளிச்சம்
பாய்ச்சுகிறது. ஏசுவிற்கும், மேரி மேக்டலினுக்கும் இடையிலிருந்த உறவின் ரகசியம் என்ன? அவர்கள் இருவரும் தோழர்கள் மட்டும்தானா? அல்லது அதையும் தாண்டிய நெருங்கிய உறவு
இருந்ததா? ஃபிலிப்ஸ்
எழுதிய நற்செய்தி ஏசுவுக்கும், மேரி மேக்டலினுக்கும் மிக நெருக்கமான உறவு இருந்ததையும் இருவரும் அடிக்கடி
முத்தங்களைப் பறிமாறிக் கொண்டதையும் குறிப்பிடுகிறது என்கிறார். சமீபத்தில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்திய டான் பரவுனின் நாவல் ’டா வின்சி கோடு’ இந்த மர்மத்தை மையமாக
வைத்து எழுதப்பட்ட நாவல் என்பது யாவரும் அறிந்ததே.
நூலின்
இறுதிப் பகுதியில் கிறித்துவர்களாகப் பிறந்து நாத்திகர்களாக வாழ்ந்த பலரின்
சிந்தனைகளையும் நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் நூலாசிரியர். ரிச்சர்டு டாக்கின்ஸ்
எழுதிய ’The God of Delusion’, பெர்ட்ராண்டு ரஸ்ஸல் எழுதிய ’Why I am not a Christian’, கிறிஸ்டோபர் எரிக் ஹிட்சன்ஸ் எழுதிய ’God is not Great’, எலைன் பேஜஸ் எழுதிய (The Gnostic
Gospels), சாம்
ஹாரிசன் எழுதிய ‘The End of Faith’ ஆகிய நூல்கள் வழி தருமி (Dharumi) தனது கடவுள் மறுப்புக் கொள்கையை
நிறுவுகிறார். ரிச்சர்டு டாக்கின்ஸ் ”எல்லா மதங்களின் எதிரி பகுத்தறிவாகும்’
என்கிறார். உயிரினங்களின் தோற்றங்கள் குறித்து டார்வினின் பரிணாமக் கொள்கை
வெளிவந்த பின்னரும், அனைத்து
மதங்களும் உயிரினங்களின் தோற்றம் குறித்து விதவிதமான கட்டுக்கதைகளைக் கூறுவது
அபத்தமாகவே உள்ளது. தங்கள் குடிமக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்திட, மதங்களை ஆட்சியாளர்கள் கருவியாகப்
பயன்படுத்துகின்றனர்” என்கிறார்.
”சொர்க்கத்தில்
இன்பம்; நரகத்தில்
கொடூரம்” என்று அச்சுறுத்தும் மதங்களின் போதனைகளுக்குப் பயந்து நல்லவனாக இருப்பது
எப்படி மனிதமாகும்?” என்ற
கேள்வி எழுப்புகிறார் ஐன்ஸ்டீன். “ஆயிரக்கணக்கான மக்களை அரசியல் கொன்றுள்ளது.
ஆனால் மதங்களோ பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளன” என்கிறார் ஐரிஷ்
நாடகாசிரியர் சீன் ஓ’கேஸி. The Sins of Scripture என்ற நூலில் பிஷப் ஜான் செல்பி ஸ்பாங்
என்பவர் பைபிளின் ’பழைய ஏற்பாடில்’ கடவுளின் பெயரால் எத்தனை கொடூரங்கள் நடந்துள்ளன
என்பதைப் பட்டியலிட்டிருக்கிறார். மக்களிடையே ஒற்றுமையை வளர்க்காமல், அவர்களைப் பிரித்து மதங்கள் நடத்திய
மோதல்களை, கொடூரங்களை
வரலாறுதோறும் நம்மால் காண முடிகிறது. ”சாதாரண மக்கள் மதங்களை நம்புகிறார்கள், அறிவாளிகள் அவற்றை நிராகரிக்கிறார்கள், அரசியல்வாதிகள் பயன்படுத்திக்
கொள்கிறார்கள்”, என்கிறார்
ரோமன் நாட்டு தத்துவவியலாளர் செனக்கா. ”பகுத்தறிவாளன் ஏற்றிவைக்கும் விளக்கை
அணைப்பதற்கென்று ஒவ்வொரு ஊரிலும் ஒரு சாமியார் இருக்கிறார்” என்று பிரெஞ்சு
நாவலாசிரியர் விக்டர் ஹியூகோ எழுதினார். ”மதங்கள் மக்களிடையே பயங்களை வளர்த்து
மனிதகுலத்துக்குப் பெரும் கேடுகளை விளைவித்துள்ளன” என்கிறார் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்.
கம்யூனிசக்
கோட்பாடுகளையும், இருபதாம்
நூற்றாண்டின் துவக்கத்தில் சோவியத் யூனியன் அரசு ஃபாசிஸ்டு எதிரிகளிடமிருந்து
தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எடுத்த நடவடிக்கைகளையும் தவறென்று நூலாசிரியர்
குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ரஷ்யப் புரட்சியின் பின்புலம் பற்றி ஆங்கில
வரலாற்றாளர் E.H.Carr பதினாறு
தொகுதிகளாக எழுதியுள்ள ஆவணத்தைப் படித்தால் மட்டுமே லெனினும், ஸ்டாலினும் அன்று சந்தித்த எண்ணிலடங்கா
பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள முடியும்.
நூலின் இறுதியில் அறிவியலுக்கும், மதநம்பிக்கைகளுக்கும் இடையிலான
வேறுபாட்டினை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். அறிவியல் ஆதாரங்கள் இல்லாமல்
எதையும் ஏற்றுக்கொள்ளாது. ஆனால் கடவுள் நம்பிக்கைக்கோ ஆதாரங்கள் எதுவும்
தேவையில்லை. “உண்மை எது என்பதை அறிந்துகொள்ள வேண்டிய தேவை நம்பிக்கைக்கு
இருப்பதில்லை” என்று தத்துவியலாளர் நீட்சே குறிப்பிடுகிறார். ஆத்திகம், நாத்திகம் குறித்த விவாதங்கள் திறந்த
மனதுடன் வெளிப்படையாக நடந்திடவேண்டும். விருப்பு, வெறுப்புகளைத் தாண்டி கருத்துகளை
முன்வைத்து உரையாடல்களை மேற்கொள்வதே சிறப்பானது என்ற கருத்துடன் நூல் முடிவடைகிறது.
கிறித்துவத்திலிருந்து
நாத்திகம் நோக்கி தான் பயணித்த பாதையை தருமி (Dharumi) நேர்மையுடனும், துணிச்சலுடனும் எழுதியுள்ளார்.
நாத்திகம் பொதுவாகவே மதவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியாத தத்துவமாகும். ஆயினும்
எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் தங்கள் மதக்கட்டுப்பாடுகளை மீறி நாத்திகம் பேசவே
செய்கிறார்கள். நாத்திகம் இன்று வேகமாக வளரும் தத்துவமாக இருக்கிறது. நார்வே, ஸ்வீடன், டென்மார்க் ஆகியநாடுகளில் 80% மக்கள் நாத்திகர்கள் என்பது
ஆச்சரியமளிக்கும் தகவலாக இருக்கிறது. மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும்
தத்துவமாக நாத்திகம் இந்த நூற்றாண்டின் இறுதியில் இருக்கும் என்பதில் ஐயம்
எதுவுமில்லை. மதவாத அரசியல் கோலோச்சும் இன்றைய சூழலில் தருமி எழுதியுள்ள இதுபோன்ற
நூல்களின் தேவை நிறையவே இருக்கிறது. மதம் எனும் மாயையிலிருந்து மக்கள்விடுபட
வேண்டும் அல்லவா?
நூலின் விவரம்:
நூல்:
கிறித்துவத்திலிருந்து நாத்திகத்திற்கு நான் நடந்துவந்த பாதை (My Road to ATHEISM
from Christianity)
ஆசிரியர்:
தருமி (Dharumi)
வெளியீடு:
எதிர் வெளியீடு
விலை:
ரூ.299
கட்டுரையாளர்:
பெ.விஜயகுமார்
(Prof. P.Vijayakumar)
Secretary,
Indian School of Social Sciences,
Madurai Chapter,
Madurai.