Tuesday, February 24, 2009

291. கூடல் நகரின் பதிவர் கூட்டமும் "தொடர் ஓட்டமும்" - 3

*
தொடர்புடைய ஏனைய பதிவுகள்:
1.289. கூடல் நகரின் பதிவர் கூட்டம்.
2.290. கூடல் நகரின் பதிவர் கூட்டமும் "தொடர் ஓட்டமும்" - 1
3.293. தமிழார்வலர்களுக்கு ஓர் அறைகூவல்!
*

மதுரைப் பதிவர் கூட்டத்தில் நடந்த தமிழ்ச் சொற்கள், மற்றைய மொழிகளின் ஒலிகள் பற்றிய விவாதம் பற்றியும், அதன் பின் சற்றே நடந்த தொடர் விவாதங்களைப் பற்றியும் மாணவ நண்பனும், இப்போது எங்கள் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் உள்ள கோவிந்தராஜனிடம் (கோவிந்தரானிடம் அல்ல; அவன் 'ஜ' தான் போடுவானாம்.)பேசிக்கொண்டிருந்தேன். அவன் கூறிய கருத்துக்கள் எனக்கு ஒத்துவந்ததுபோல் தெரிந்தாலும் சொன்ன டெக்னிக்கலான செய்திகள் புரியவில்லை. அவைகளை எழுதித் தாயேன் பதிவில் போட்டு விடுகிறேன் என்றேன். மனமுவந்து எழுதிக் கொடுத்துள்ளான். பதிவிடுகிறேன்.

இனி உங்கள் பாடு; அவன் பாடு.

=========================================
OVER TO GOVINDARAJAN ........

=========================================

மொழித்தூய்மை குறித்த விவாதம் நீண்ட வரலாற்றை உடையது. தமிழ்மொழியைப் பொறுத்த அளவில் இவ்விவாதங்களும் அதன் தொடர்ச்சியாக எழுந்த சீர்திருத்தங்களும் மாபெரும் அசைவியக்கத்தை ஏற்படுத்தின. இந்நிலையில் இன்றுவரை அறிஞர்களிடமும், மொழியியலாளர்களிடமும், தமிழ்ப் பற்றாளர்களிடமும் கிரந்த எழுத்தைப் பயன்படுத்தி எழுதலாமா (எடு: ஹ, ஷ, ஜ, ஸ போன்றவை) என்ற விவாதமும் அவ்வாறு இதுவரை எழுதப்பட்டு வந்துள்ள, மக்களிடம் நிலைபெற்றுவிட்ட பல சொற்களுக்குப் புதுத் தமிழ்ச் சொற்களைக் கொண்டு வந்து சேர்க்கலாமா என்ற விவாதமும் சிறப்பான ஓரிடத்தைப் பெற்று வந்துள்ளன. பழந்தமிழர்களிடமும் இதுபற்றிய சிந்தனை இருந்து வந்துள்ளது என்பதை இங்குப் பதிவு செய்ய வேண்டும். தமிழ்மொழியின் முதல் இலக்கணமான தொல்காப்பியத்தில் பின்வரும் இரு நூற்பாக்கள் சிறப்பிடம் பெருகின்றன.

1. இயற்சொல், திரிசொல், திசைச்சொல்; வடசொல் என்று
அனைத்தே செய்யுள் சொல்லே (எச்சவியல்: 1)

2. வடசொற் கிளவி வடஎழுத்து ஓரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே (எச்சவியல்:5)

இயற்சொல் என்பது செந்தமிழ்நாட்டில் வழங்கும் சொற்கள் ஆகும். கேட்டவுடன் பொருள் தவறாமல் புலப்பட வேண்டும். (இது இயல்பான சொ:. எடு - சோறு, பால்)

திரிசொல் என்பது இயற்சொல் திரிந்து வருவது ஆகும். இது கவிதையில் பெரிதும் பயின்று வரும். இதில் எளிதில் பொருள் புலனாகாது.
(எடு - கிளி = கிள்ளை எனத் திரிந்தது.
மயில் = மஞ்ஞை எனத் திரிந்தது.)

திசைச்சொல் என்பது செந்தமிழ் நாட்டைச் சுற்றி 12 நாடுகளில் (நிலங்கள்) பேசப்படும் சொற்கள்.

வடசொல் என்பது வடமொழிச் சொல்.

இங்கு திசைச் சொல்லும், வட சொல்லும் ஆய்வுக்குரியன. தமிழகத்தில் பொங்கர் நாடு, ஒளி நாடு, தென்பாண்டி நாடு, குட்ட நாடு, குடநாடு, பன்றி நாடு, கற்காநாடு, சீத நாடு, பூமி நாடு, மலையமானாடு, அருவா நாடு, அருவா வட தலை நாடு எனப் பன்னிரண்டு பகுதிகளில் பேசப்பட்டு வரும் சொற்கள் திசைச் சொற்கள்.

எடுத்துக் காட்டாக, தென்பாண்டி நாட்டார், எருமை என்பதைப் 'பெற்றம்' என்பர். இங்கு கவனிக்க வேண்டியக் கருத்து என்னவென்றால், சங்க காலத்தமிழ்ப் புலவர்கள் அப்பகுதியில் பேசப்படும் சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளனர்.

அடுத்து, ஓய்மா நாட்டு நல்லியக் கோடன் என்பவனைப் புகழ்ந்து பாடிய புலவர் நத்தத்தனார் அந்நாட்டுப் பகுதியில் பேசப்படும் 'கேணி' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். கேணி என்பது சிறுகுளத்தைக் குறிக்க அந்த ஓய்மாநாட்டுப் பகுதி மக்கள் பயன்படுத்தும் சொல்லை அப்படியே புலவர் தன் பாடலில் பயன்படுத்துகிறார். நத்தத்தனார் சென்னைக்கருகில் உள்ள நல்லூரைச் சேர்ந்தவர்.

ஒரு பகுதியில் சிறப்பாகப் பயின்று வரும் சொல்லை அப்படியே எவ்வித மாற்றமுமின்றிச் சங்ககாலப் புலவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கருத்தாகும். தமிழர்களின் ஆவணப்படுத்துகின்ற, வரலாற்று நுண்ணுணர்வை வெளிப்படுத்துகின்ற ஒன்றாகவே இதை நாம் காணவேண்டும்.

அடுத்து, வடசொல் எனபதற்கு வட மொழியின் ஒலிகளை நீக்கி தமிழ் எழுத்துக்கள் கொண்டு அமைந்த சொற்கள் என்று தொல்காப்பியர் விளக்கம் தருகிறார். அதாவது, வடசொற்களை வடமொழியின் ஒலிகளை நீக்கி எழுதவேண்டும்.

எடுத்துக் காட்டாக, கமலம், திலகம் போன்றவை தமிழ் எழுத்துக்கள் கொண்டு அமைந்த வடசொற்கள். ரிஷபம் என்பதை இடபம் என்றும், ரிஷி என்பதை இருடி என்றும், பங்கஜம் என்பதை பங்கயம் என்றும் எழுத வேண்டும்.

இவ்வாறு எழுதுவதற்கு நன்னூல் விதிகளைத் தந்துள்ளது. (நன்னூல் - 147) விதி இவ்வாறாக இருந்தாலும், பழந்தமிழர் வேற்றுச் சொற்களைத் தமிழ்ப்படுத்தி ஏற்றுக் கொண்டனர் என்பதாலும் சில ஒலிகளை அவ்வாறு எழுதிவந்துள்ளனர் எனத் தெரிகிறது. பழந்தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்களில் இது காணப்படுகிறது.

ஸாலகன் - (கி.மு. 2-ம் நூற்றாண்டு மாங்குளம் கல்வெட்டு)
அஸீதன் - ,, ,,
கோஸிபன் -(கி.பி. 2-ம் நூற்றாண்டு மறுகால்தலை கல்வெட்டு)

இதைக் காணும்போது இரு நிலைகளிலும் சொற்கள் பயன்பட்டு வந்துள்ளன எனத் தெரிகிறது. நாம் வடசொல் அல்லது வேற்றுமொழிச் சொல்லை எழுதும்போது தமிழ் எழுத்து கொண்டு எழுதவேண்டும் என்னும்போது நாம் தமிழ் மொழி அல்லாத சொல்லை இனங்கண்டு கொள்கிறோம். இனம் கண்டு கொண்ட பிறகே சேர்க்கிறோம். இது வரலாற்றுச் சிறப்புத்தன்மை கொண்ட மொழித் தத்துவம். இந்தோ-ஆசிய மொழிகளில் உள்ள பல சொற்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று திராவிட மொழியியல் அறிஞர்கள் எமனோ மற்றும் பந்ரோ நிறுவியுள்ளனர். அவற்றைச் சேகரித்து திராவிட வேர்ச்சொல் அகராதி (Dravidian Ethymological Dictionary) என்ற பெயரில் வெளிக்கொணர்ந்துள்ளனர்.

இங்கு கவனிக்க வேண்டிய மற்றொன்று சில வேற்றுச் சொற்களின் ஒலிகளை மாற்றவேண்டும் என்பதே வலியுறுத்தப்படுகிறது. மொழி பெயர்க்காமல், ஒலிபெயர்த்து (தமிழ் ஒலி) எழுதப் படவேண்டும் என்பது முன்வைக்கப்பட வேண்டியதாகும். கல்வெட்டுக்களில் காணப்படும் பல சொற்கள் கடன் சொற்களாகும்.ஆனால் அவை அனைத்தும் பெயர்ச்சொற்கள். வினைச் சொற்களைத் தமிழ் கடன் வாங்கியதில்லை என்பதை உற்று நோக்கவேண்டும். திரு. ஐராவதம் மகாதேவனின் "Early Tamil Epigraphy" இதனை உறுதி செய்கிறது. கடன் வாங்கப்பட்ட பெரும்பாலான சொற்கள் சமயம் தொடர்பான வேற்றுமொழிச் சொற்கள்.

இதன்மூலம், கூடிய மட்டும் தமிழ்ப்படுத்தி வேற்றுச் சொற்களை எழுதி வந்துள்ளனர் என்றும், அதே வேளையில், வேற்று ஒலிகளை (கிரந்த) எழுத்துக்கள் பயன்படுத்தியும் எழுதி வந்துள்ளனர் என்று தெரிகிறது. மேலும், மொழியில் கடன் வாங்காமல், சொற்பரிமாற்றம் போன்றவை இருந்தால்தான் அம்மொழி பேசியோர் மற்ற நாடுகளுடன் வைத்திருந்த தொடர்பை ஆய்வு செய்ய முடியும். முழுவதுமாக மொழித்தூய்மை பேணப்படும்போது இவ்வாய்ப்பு சாத்தியமற்றுப் போகும். தமிழ் மொழி பேசியவர்கள் மற்ற நாடுகளுடன் கொண்டிருந்த வாணிகத் தொடர்பு, பொருள் தேட வேற்றுநாடு சென்றமை போன்றவை இலக்கியத்தில் பயின்று வந்துள்ள சொற்கள் கொண்டு நம்மால் அறிய முடியும். இவ்வாறான ஆய்வை தமிழ் அறிஞர்கள் எஸ்.வையாபுரிப் பிள்ளை, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், மயிலை சீனி.வேங்கடசாமி போன்றவர்கள் முன்னெடுத்துச் சென்றுள்ளனர். எத்தனை வகையான வேற்று ஒலி, மொழி சொற்கள் ஒரு மொழியில் கலக்கிறதோ அத்தனைக்கும் தனிப்பட்ட வரலாறு உண்டு. அது ஒரு மொழியின் நீண்ட வரலாற்றினைச் செம்மைப்படுத்துவதாகவே அமையும்.

11 comments:

வால்பையன் said...

கி.பி இரண்டாம் நூற்றாண்டிலேயே இதற்கு ஒரு முடிவு கட்டி ஏற்று கொண்டாயிற்றா?

அப்படியானால் இனி ஜாலிஜம்பர் என்று அழைக்கலாமா?
இல்லை
”மகிழ்ந்துகுதிப்பான்” என்று புது பெயர் இடலாமா?

ஆதவன் said...

can i get govindarajan no. please send the no to thamizhstudio@gmail.com

thanks,
thamizhstudio.com

சாலிசம்பர் said...

//எத்தனை வகையான வேற்று ஒலி, மொழி சொற்கள் ஒரு மொழியில் கலக்கிறதோ அத்தனைக்கும் தனிப்பட்ட வரலாறு உண்டு. அது ஒரு மொழியின் நீண்ட வரலாற்றினைச் செம்மைப்படுத்துவதாகவே அமையும்.//

அய்யா,
அப்படியானால் மணிப்பிரவாள நடை இருந்ததே, அது வரவேற்கத்தகுந்த ஒன்றா?

குமரன் (Kumaran) said...

ஆகா. அருமையான கட்டுரை. மிக எளிமையாக விளக்கியிருக்கிறார். இக்கட்டுரையைப் படித்த பின்னர் கணியை நோக்கி கை கூப்பி வணங்கினேன். என் வணக்கங்களை கோவிந்தராஜன் ஐயாவிடம் சேர்த்துவிடுங்கள் தருமி ஐயா. அவரையும் பதிவுகள் எழுத அழைத்து வாருங்கள் ஐயா. கூடல் நகரத்தின் தமிழ்ப்பெருமை பதிவுலகத்திலும் நிலைநாட்டப்படும்.

இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் இவற்றைப் பற்றி அறிந்திருந்தேன். ஐயா தந்த விளக்கங்களால் இப்போது இன்னும் எளிமையாக புரிந்தது. ஐயாவின் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

Narayanaswamy G said...

@Jolly Jumper

If u want to save the essence of Tamil, you can save it with the usage of pure tamil words. Not with changing the way a word sounds. Thats like killing the essence of the other language. For Example, saali sampar sounds yucky and does not make any sense. Insteas Jolly Jumper sounds farely well and this adaptation has not only been with tamil. English is very strong in the world today just because of this adaptability. Restaurant is not an english word....it comes from French. Catamaran is not an english word it comes from our Kattumaram. If the adaptability is not there, you are killing growth.

Narayanaswamy G said...

am actually waiting for a comment from TBCD.....

சாலிசம்பர் said...

//If u want to save the essence of Tamil, you can save it with the usage of pure tamil words. Not with changing the way a word sounds. Thats like killing the essence of the other language.//

கடப்பாரை,
கட்டுமரத்தை கட்டமரான் என்று உச்சரிக்க வெள்ளையர் தயங்கவில்லை.தமிழ் மொழியைக்கொலை செய்கிறோம் என்றும் குற்றவுணர்ச்சி கொள்ளவில்லை.பிறமொழிச் சொற்களை விரும்பி ஏற்றுக்கொண்ட ஆங்கிலம் ,பிறமொழி உச்சரிப்பை தவிர்த்துவிடுகிறது,அதனாலேயே அம்மொழி வளர்கிறது.

//For Example, saali sampar sounds yucky and does not make any sense.//

english என்பதை 'ஆங்கிலம்' என்று எழுதுகிறோம்.அர்த்தமற்றுத் தோன்றுகிறதா?

TBCD said...

1) இயன்ற வரையில் தமிழ்ற்சொற்களையே பயன்படுத்துவது [இயற்சொல், திரிசொல்(ஏதேனும் தெரிந்திருந்தால் மட்டுமே :P)]

2) பெயர்சொற்களை வேற்று மொழிக்குறிப்புடன் கூடிய வேற்று மொழிச் சொற்களாக இருந்தால், கூடியவரை தமிழ்ப்படுத்தி ஒலிப்பது, எழுதுவது

இது நான் தற்காக்கும் நிலை

TBCD said...

இதற்கு நான் வழங்கும் காரணம்/ஏரணம்,

ஒட்டகத்தைக் கூடாரத்தினுள் கொஞ்சம் விட்டதன் பலனை இன்று அனுபவிக்கின்றோம்/றீர்கள். பேசுவது தமிழா, இல்லை தங்கலீசா என்று தெரியாமலே பிளந்துக்கட்டுகிறார்கள்/றீர்கள்.

தமிள் மெழி எங்கல் டாய் மொளி என்று பேசுவதில் எனக்கு உடன்பாடுகிடையாது.

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து மக்களே, பேசும் பொழுது "taamil naadu" என்று பேசுவதன் காரணம், அவர்களுக்கு ஆங்கிலத்தின் மீதுள்ள பற்று மட்டுமே காரணம் அல்ல.

அக்காலக்கட்டத்தில் வடசொல்லை தவிர்க்க முடியாத போயிருக்க வாய்புகள் உண்டே.

TBCD said...

எனக்கு ஆங்கிலத்தில் "ழ"வைச் சேர்க்க வேண்டும். "ஜ","ஸ" வைச் சேர்க்க சொல்பவர்கள் இனிமேல்,
tamiழ் என்று ஆங்கிலத்தில் எழுதும் போதும் எழுத வேண்டும். ஏன்னா ஆங்கிலத்தில் "zh" போட்டா "ழ்" என்பது தமிழ்நாட்டை தாண்டினால் எவனுக்கும் தெரியாது. அட ஆங்கிலம் தான் எல்லா மொழிக்குறிப்பும் ஏற்றுக்கும்மே, தமிழையும் ஏற்கட்டுமே. என்ன நாஞ் சொல்லுறது.

TBCD said...

எங்கே விட்டேன் என்று தெரியவில்லை தருமி ஐயா..

அதனால்..இப்போ போகின்றேன்.

ஆனால்,(பின்னுட்டம் வெளியிட்டப் பின்பு) மீண்டும் வருவேன்

Post a Comment