எனது வகுப்பிலிருந்த 8 மாணவர்களில் நான் ஒருவனே வீட்டிலிருந்து வந்து படித்தவன்; மற்ற எல்லோருமே விடுதி மாணவர்கள். அந்தக் காரணத்தை வீட்டில் சொல்லி நானும் பெரும் பொழுதை விடுதியில் கழிப்பதுண்டு. பிள்ளை விடுதியில் இருந்து நல்லா படிக்கும்னு வீட்டில நினைச்சுக்குவாங்க. நான் விடுதியிலே அதிகம் இருந்ததால் பலர் என்னையும் விடுதி மாணவனாக நினைத்தது உண்டு; விடுதித் தேர்தலுக்கு என்னிடம் ஓட்டுகூட கேட்பார்கள். அப்போதெல்லாம் எங்கள் கல்லூரிக்குத் தமிழை வைத்து ரொம்ப நல்ல பெயர். அடிக்கடி பெரிய தமிழ் அறிஞர்கள் அழைக்கப்பட்டுச் சிறப்புக் கூட்டங்கள் நிறைய நடக்கும். முத்தமிழ் விழா மிக நன்றாக இருக்கும். கல்லூரி நிர்வாகத்தினரே 'தமிழ்நாடு' என்றொரு நாளிதழ் நடத்திவந்தார்கள். தமிழ்ப் பேராசிரியராக அப்போது இருந்த இலக்குவனாரின் தமிழார்வ தாக்கத்தால் கல்லூரி நிர்வாகமும், அதன் தமிழ் ஈடுபாட்டால் மாணவர்களிடமும் தமிழ்ப் பற்று நிறைந்திருந்தது. அதே சமயத்தில் தமிழ்நாட்டு அரசியலில் தி.மு.க.வின் கை ஓங்கிக் கொண்டிருந்தது. அதற்கு ஏற்றாற்போல் அவர்கள் இந்தி எதிர்ப்பைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். காங்கிரஸ் மேல் மக்களுக்குப் பரவலாக இருந்த அதிருப்தியை வெறுப்பாக மாற்றும் நிலையை ஆளுங்கட்சியாக இருந்த அவர்கள் இந்தி எதிர்ப்பை எதிர் கொண்ட வகையில் ஏற்படுத்திவிட்டார்கள்.
தி.மு.க.வினரின் இந்தி எதிர்ப்பு மாணவர்கள் மத்தியிலும் பரவியது. இந்தியை எதிர்த்து மாநில அளவில் ஜனவரி 25-ம் நாள் ஒரு பெரிய போராட்டம் நடத்த மாணவர்கள் தயாரானார்கள். எல்லா ஊர்களிலும் ஊர்வலங்கள் நடத்தத் திட்டம். ஆனால் எங்கள் கல்லூரி மாணவர்களில் சிலருக்கு போராட்டத்தை அதன் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் யோசனை கொடுக்கப்பட்டது. எங்கள் தமிழ்ப் பேராசிரியரின் முழு ஆதரவு அதற்கு இருந்தது. திட்டம் தீட்ட உயர் குழுக் கூட்டம் என் வகுப்பு நண்பனின் விடுதி அறையில் நடந்தது. அவன், விடுதிக்கே சார்மினார் சிகரெட் தானம் பண்ணும் புண்ணியவான் என்பதைத் தவிர வேறு ஏதேனும் காரணம் இருந்ததாகத் தெரியவில்லை. அன்று நானும் விடுதியில் தங்கியிருந்தேன்.
நண்பன் ஏற்கெனவே சொல்லியிருந்தான் அந்தக் கூட்டத்தப்பற்றி. இரவு 11 மணிக்கு ஓரளவு விடுதி அடங்கியபின் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க நான் ஒரு பார்வையாளனாக அறையின் ஓரத்தில் நண்பனோடு அமர்ந்திருந்தேன். கூட்டம் சேர ஆரம்பித்தது. முக்கிய முன்னணி மாணவர்கள் - காமராசன், காளிமுத்து. முன்னவர் எனக்கு ஓராண்டு ஜுனியர்; பின்னவர் இரண்டாண்டு. அப்போதெல்லாம் கல்லூரியே காமராசனுக்கு விசிறிதான். பேச்சில் இயற்றமிழும், கவிதை நடையும் கொஞ்சும். அவர் பேசும்போது அவர் வாய் ஒருவிதமாகக் கோணும்; அதுவும் அழகுதான் , போங்கள். பெருந்தலைவர் காமராஜர் எங்கள் கல்லூரிக்கு ஒருமுறை வந்தபோது, 'தலைவர் காமராஜருக்கு மாணவன் காமராசன் தரும் வரவேற்பு' என்று பேசிய வரவேற்புரை, ரோடை ஒட்டி இருந்த அந்த அவசர மேடை எல்லாமே இன்னும் நினைவில் இருக்கிறது. காமராஜரே அசந்து நின்றார்; தன் உரையில் அதைக் குறிப்பிடவும் செய்தார். அதுபோன்ற உரைதரும் நிகழ்ச்சிகளுக்கு கல்லூரிக்கே அவர் ஒரு show-piece'. அவரைப்பேச வைத்து மாணவர்களைக் கேட்க வைப்பதற்காகவேகூட சிறப்புக்கூட்டங்கள் நடத்துவதுபோலத் தோன்றும். அவரில்லாவிட்டால் 'substitute'ஆக வருவது காளிமுத்து. இவருடைய தமிழ், ஆற்றொழுக்கு. ஆனால், காமராசனது வீச்சோ கல்லும் காடும் தாண்டி வரும் காட்டாறாகவும் வரும்; மற்றொரு நேரத்தில் சோலைகள் ஊடேவரும் தென்றலாகவும் வரும். பின்னால் கவிஞன் காமராசன் என்று கொஞ்சகாலம் எல்லோருக்கும் தெரிபவராக இருந்தார். 'கருப்புப் பூக்கள்' என்று நினைக்கிறேன் - அவரது பேசப்பட்ட கவிதைத் தொகுப்பு. சில சினிமா பாடல்கள்கூட எழுதினார். அடுத்தவர்தான் இப்போதைய சட்டசபையின் அவைத்தலைவர்.
கூட்டம் ஆரம்பமானது. முதலில் போராட்டத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. எனக்கோ ஆச்சரியமான ஆச்சரியம்.அந்த முன்னணி மாணவர்களின் 'தீரத்தை'விட என்னை அதிகம் பாதித்தது அவர்களது'சுதந்திரம்'. நானோ வீட்டுப்பறவையாக, முளைத்த சிறகுகள் வெட்டி விடப்பட்டனவா, இல்லை அவைகள் அன்று வரை மட்டுமல்லாது அதற்குப் பிறகும் பல ஆண்டுகளுக்கு வளராமலே இருந்துவிட்டதா தெரியவில்லை; பாவப்பட்ட ஜென்மம்போல வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கத்தான் முடியும். ஆனால் இவர்கள் மட்டும் எப்படி 'வீட்டுப்பறவைகளாக' இல்லாமல் 'விடுபட்ட' பறவைகளாக இருக்கிறார்கள் என்ற ஆச்சரியம்.அந்த 'விடுபட்ட' பறவைகள், குறிக்கப்பட்ட நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே 'அண்டர்கிரவுண்ட்'ஆகிவிடவேண்டுமென்றும்,போராட்ட நாளில் கல்லூரி மாணவர்கள் அனைவரையும் கல்லூரி வாசலில் திரட்டி வைத்திருக்க வேண்டுமென்றும், அப்போது நமது முன்னணி மாணவர்கள் 'டிராமெட்டிக்'காகத் தலைப்பாகை சகிதம் சாதாரணத் தோற்றத்தில் வந்து மாணவ கூட்டத்தில் கலந்துவிடவேண்டுமென்றும், அன்று அந்த அறையில் இருந்த மாணவர்களுக்கு மட்டுமே அது தெரியுமாதலால் அவர்கள் அந்த முன்னணி மாணவர்களைச் சூழ்ந்து போலீஸிடமிருந்து தனிமைப்படுத்திவிட வேண்டுமென்றும், சட்ட எரிப்பைப் போலீஸ் தடுப்பதற்குமுன்பே முடித்துவிடவேண்டுமென்றும், அவர்கள் கைது செய்யப்பட்ட பின் மாணவர்களை மதுரையின் நான்கு மாசி வீதிகளைச் சுற்றி ஊர்வலம் செல்ல திரட்டிச்செல்லவேண்டுமெனவும் திட்டம் தீட்டப்பட்டது. அப்போது ஒரு அப்பாவிக்குரல் கேட்டது, சட்ட எரிப்புக்கு சட்டப்புத்தக்திற்கு எங்கே போவது என்று. பட்டென வந்தது ஒரு பதில். ஏதாவது நம்ம நோட்ஸ் ஒண்ணை எரிச்சால்போதும் என்று ஒரு பதிலும், அதை அடுத்து, எரிச்சிட்டா அதுக்குப்பிறகு சட்டமும், நம்ம நோட்சும் எல்லாம் ஒண்ணுதான் என்ற தத்துவமும் வந்தது. அப்படியாக, கடைசிச் சட்டப்பிரச்சனையும் தீர்த்துவைக்கப்பட்டது.
குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், கல்லூரி வாசலின் முன் உள்ள மண்டபத்தின் அருகில், தலையில் முண்டாசுடன் 'எரிப்பாளர்கள்' வந்து சேர்ந்தது; மாணவர்கள் மத்தியில் புகுந்தது; மாணவர் கூட்டம் அரண் அமைத்தது; நடுவில் நின்று'சட்டம்' எரித்தது - எல்லாமே 'மிலிட்டரி ப்ரஸிஷனோடு' நடந்தேறியது. சட்டம் எரித்தவர்கள் கைதானார்கள்; புதிய வேகம் பிறந்தது. மாணவர் ஊர்வலம் நகருக்குள் மாசி வீதிகளில் வலம் வந்தது. கீழவாசலுக்கு வரும்போதே மற்ற கல்லூரி, பள்ளி மாணவர்களால் ஒரு பெரும் பேரணி உருவானது. தெற்கு மாசி வீதி வரை அமைதி காத்தேன் -ஏனெனில் அதுவரை நம்ம ஏரியா! யாராவது பாத்துட்டுப் போய் வீட்டுல வத்தி வச்சா என்ன பண்றது? மேற்கு மாசி வீதி அடைந்தபோது கூட்டம் பெருகியது; மாணவர்களின் உற்சாகம் கரைபுரண்டது. மாணவர்களின் வரிசையிலிருந்து விலகி, கோஷம் போடும் பணி தரப்பட்டது.
"டவுண்...டவுண்.."என்று லீட் கொடுக்க, மற்ற மாணவர்கள் "இந்தி" என்று பதில் தர வேண்டும். என்ன, ரொம்ப சாதாரணமாகத் தெரிகிறதா? அதுதான் இல்லை.திடீர் திடீர் என்று பல சுருதிகளில், ஏற்ற இறக்கங்களோடும், நீ...ட்...டி முழக்கியோ, டக்கென்றோ நான் கூற பதில் அதற்குச் சரியாக அதே காலக்கட்டுப்பாட்டோடு, அதே சுருதியோடு, அதே ஸ்தாயியில் கொடுக்கப்பட வேண்டும்; எவ்வளவு கவனத்துடன் சொல்லவேண்டும் தெரியுமா? வெறும் 'மெக்கானிக்கலாக' சத்தம் போட்டதாக நீங்கள் நினைத்துவிடக்கூடாது. இதோடு, 'பிஸிக்கல் இன்வால்வ்மெண்ட்'டும் தேவை; கையை ஆட்டி, குதித்து... தொண்டை தாங்குமளவிற்கு லீட் கொடுத்தேன். மேலமாசி வீதியிலிருந்து வடக்கு மாசி வீதியில் பாதிவரை தொண்டை ஒத்துழைத்தது. அவ்வப்போது வீட்டு ஞாபகம் வந்து பயமுறுத்தினாலும் பணி தொடர்ந்தது. ஆனாலும் அப்பாவுக்கு வேண்டியவர் ஒருவர் ஊர்வலத்தில் என்னைப்பார்த்துவிட்டு, அப்பாவிடம் 'வத்தி' வைக்க (சும்மா சொல்லக்கூடாது; உங்க பையன் நல்லாவே கோஷம் போட்டு லீட் பண்ரான்.) அது பிறகு வீட்டில் 'வெடித்ததும்' - ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..
இப்போது 'மாணவ அலை' வடக்கு மாசி வீதிக்குள் பாதி நீளத்தைத் தாண்டியது. அங்குதான் காங்கிரசின் மாவட்ட காரியாலயமிருந்தது. அந்தக் காலத்தில் அந்த வீதியே மதுரை அரசியலில் ஒரு 'சென்சிட்டிவான'பகுதியாக இருந்து வந்தது.அந்தப் பகுதியில் தெருவே கொஞ்சம் சுருங்கி இருக்கும். ஊர்வலத்தின் எங்கள் பகுதி அங்கே போய்ச்சேருவதற்குள் அங்கே ஏதேதோ நடந்துவிட்டிருந்தது. காரியாலயத்தின் முன் நிறுத்திவைக்கப் பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் ஜீப் எரிந்து கொண்டிருந்தது. எங்களுக்கு முன்பே சென்றிருந்த மாணவக் கண்மணிகளின் வேலைதான் அது. அதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் அதில் அதிகம்பேர் பள்ளி மாணவர்கள்! தீயணைப்பு வீரர்கள் வந்து சேர்ந்திருந்தார்கள். நாங்கள் அந்தப் பகுதிக்குப் போய்ச் சேரும்போது ஒரு கயிறிழுப்புப் போட்டியே நடந்துகொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் தங்கள் நீர்க்குழாய்களோடு ஜீப்பை நோக்கி வருவார்கள்; ஜீப்பின் முன்னால் வந்து சரியாக அவர்கள் தண்ணீரைத் திறந்துவிட்டவுடன் ஒரு பெரிய மாணவர்கூட்டம் அப்படியே அவர்களை மறித்து பின்னேறச்செய்யும். தீயணைப்புப்படையின் மேலதிகாரிகள் மாணவர்களைச் சமாதானப்படுத்த முயற்சிப்பார்கள். மீண்டும் நீர்க்குழாய்கள் ஜீப்பை நோக்கி வரும்; மீண்டும் அவர்கள் திசை திருப்பப்படுவார்கள். இந்த 'விளையாட்டு' தொடர்ந்தது. மாணவர்களுக்கு ஜீப் முழுமையாக எறிந்துவிட வேண்டுமென்ற உயர்ந்த குறிக்கோள்; தீயணைப்புப் படையினருக்கோ எரியும் ஜீப் வெடித்து உயிர்ச்சேதம் ஏதும் நடந்துவிடக்கூடாதே என்ற பதைபதைப்பு.
இதற்குள் போலீசும் வந்தது. கூட்டத்தை அடக்கமுடியாதலால் கண்ணீர்ப்புகை குண்டு போட முடிவெடுத்தார்கள். முதல் குண்டு நான் இருந்த பகுதியிலேயே, நான் நின்ற இடத்திற்குச் சிறிதே முன்னால் வந்து விழுந்தது. ஒரே புகை மூட்டம். கூட்டம் சிதறியது. முகமெல்லாம் எரிச்சல். கண்களின் எரிச்சல் தாங்க முடியவில்லை. பக்கத்தில் ஒதுங்க இடம் தேடினேன். எல்லா வீட்டுக்கதவுகளும் மூடியிருந்தன். ஏதோ ஒரு வீட்டின் உயர்ந்த திண்ணை இடம் கொடுத்தது. ஆனால் நான் போவதற்குள் அது 'ஹவுஸ்புல்'. எப்படியோ ஓரத்தில் தொற்றிக்கொண்டேன். திடீரென்று என் காலைக் கட்டிப்பிடித்துக் கொண்டு என் இடுப்பு உயரமே ஒரு பள்ளிச்சிறுவன் - சிறிது நேரம் முன்பு வரை அவனும் நானும் ஒரேமாதிரி 'போராளிகள்'- அழுதுகொண்டு தொற்றிக்கொண்டான். எல்லோரும் ஒருவர் மீது ஒருவராக பெருகிவந்த கண்ணீரோடு போராடிக்கொண்டிருந்தோம். எங்களுக்குப் புகலிடம் கொடுத்த வீட்டுக்குள்ளிருந்து பெரியவர் ஒருவர் கை நிறைய சின்ன வெங்காயங்களோடு வந்தார். 'இதைக்கசக்கி கண்களில் தேய்த்துக்கொள்ளுங்கள்' என்றார். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்பார்களே, அப்படித்தான் தோன்றியது. என்ன சதித்திட்டமோ என்றுதான் நினைத்தோம். அவரோ 'எனது சுதந்திரப்போராட்ட அனுபவத்தில் சொல்கிறேன்; சும்மா பயப்படாமல் தேய்த்துக்கொள்ளுங்கள்' என்றார். நான்தான் முன்னால் நின்று கொண்டிருந்ததால் நான்தான் முதல் பலிகிடா மாதிரி அவர் கசக்கிக்கொடுத்த வெங்காயத்தை முகத்திலும், கண்களிலும் தேய்த்தேன். பயங்கர ஆச்சரியம். அடுத்த வினாடியே எரிச்சல் போய், முகம் கண் எல்லாம் குளு குளுவென்றாச்சு. எரிச்சல் எல்லாம் 'போயே..போச்சு'. அந்தச் சின்னப் பையனுக்கும் தேய்த்துவிட்டேன். திண்ணையைவிட்டு இறங்கினோம். 'போராளிகள்' எல்லாம் எங்கே? சிதறிய நெல்லிக்காய்கள்தான்!
ஜீப் மட்டும் தனியாய், முழுவதுமாய் எரிந்து எலும்புக்கூடாய் நின்றது.