Thursday, January 18, 2007

196. ரஜீவ் & Sam - க்கு ஜே!

*

*

அந்தக் காலத்துல சினிமாவிலயும் சரி, உண்மையான் வாழ்க்கையிலேயும் சரி ஒரு ஜோக் உண்டு: போன்ல யாரும் பேசினா, பேசினவங்க எப்படி பேசுனாங்க.. அப்டின்னு ஒருவர் கேட்க போன் பேசியவர்,' அவர் மூஞ்சியா தெரிஞ்சுது.. அவர் கோபமா பேசினாரா இல்லையான்னு தெரிஞ்சுக்கிறதுக்கு அப்டினு சொல்லுவாங்க.. இப்போ அது உண்மையாய் ஆகிப் போச்சாமே..இந்துவில் வீடியோ போன் பற்றி ஒரு செய்தி வந்திருக்கு. http://www.hindu.com/2007/01/07/stories/2007010700101100.htm தொலைபேசியில் அழைப்பவர்கள் முகம் தெரியுமாமே; அதுவும் நம்ம ஊருக்கே வந்திருச்சாமே! கலிகாலம் / நவீனகாலம் !

இதை வாசிச்சதும் 'பழைய நினைப்புடா பேராண்டி'ன்னு பழைய நினைவுகள் ரீவைண்ட் ஆயிருச்சு.

ஏற்கெனவே என் முதல் போன் அனுபவத்தைச் சொன்னேன். 15 வயசு வரை போனைத் தொடக்கூட இல்லைன்னா பாருங்களேன். அந்தக் காலத்தில தொலைதூரம் போன் பேச வேண்டியிருந்தால் trunk call பண்ணணும். அதுக்கு காத்திருந்து லைன் கிடச்சு, பேசுறதுக்கு பல நேரம் நேரேயே போய் சொல்லிட்டு வந்திரலாம்னு தோணும். அப்படியே லைன் கிடச்சாலும் அந்த ஊருக்கே போன் இல்லாமலே பேசுனாலும் கேக்கிறது மாதிரி சத்தம் போட்டுப் பேசணும். இந்தக் கூத்துகள் எல்லாம் தபால் நிலைய தொலைபேசிகள் மூலம்தான் பெரும்பாலும். ஏன்னா சொந்தத்தில போன் வச்சுக்கிறது என்பதே தொண்ணூறுகளில்தான் பலருக்கும் சாத்தியமாயிற்று.

எண்பதுகளில் நண்பனொருவன் வசதியாயிருந்த போது கட்டிய பணத்திற்கு வீட்டுக்கு போன் வர - அப்போதெல்லாம் பணம் கட்டி ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் ஆன பிறகே கிடைக்கும் - அப்போதைய நிலையில் அவனுக்கு அது தேவையில்லை என்றானதால் நீ எடுத்துக் கொள்கிறாயா என்றான். 'போன் வச்சுக்கிற அளவுக்கு எல்லாம் நாங்கள் பெரிய ஆளுக இல்லையப்பா' என்று சொல்லி வேண்டாமென்று விட்டு விட்டேன். அதிலிருந்து ஓரிரு ஆண்டுகள் ஆனதும் அடடா, வாங்கியிருக்கலாமோ என்று தோன்ற அதனால் புதிய இணைப்புக்குப் பணம் கட்டினேன். மறந்தும் போனேன். 96-97 -ல் எதிர் வீட்டுக்காரருக்கு (பிள்ளாயாரும் பால் குடித்தார் பதிவில் வந்தவர்) புதிய இணைப்புக்குரிய முன்னேற்பாடுகள் நடக்க ஆரம்பித்தன. அவர் எனக்கும் பிறகே முன் பணம் கட்டியவர் என்பது தெரியும். அதனால் இணைப்புக்கு வந்தவர்களிடம் சாதாரணமாக இதைச் சொல்லி எனக்கு எப்போது வரும் என்று கேட்டேன். சீக்கிரம் வந்து விடும் என்றார்கள். அதே மாதிரி ஓரிரு நாட்களில் வந்தும் விட்டார்கள். ஆனால் பின்னால் ஒரு தனிக்கதை நடந்திருக்கிறது. எதிர் வீட்டு நண்பர் தொலைபேசித் துறையில் சிலரைத் தனியாகக் 'கவனித்திருப்பார்' போலும். ஆனால் நான் போய் கேட்டதால் எனக்கும் இணைப்பைத் தந்து விட்டு அவருக்குக் கொடுத்ததால் எனக்கும் கொடுக்க வேண்டியதாயிற்று என்று சொல்லி அதற்கும் அவரையே 'கவனிக்கச்' சொல்லி விட்டார்களாம். எப்படியோ 'நல்லார் ஒருவர் 'கவனித்ததால்' தெருவில் எல்லோர்க்கும் இணைப்பு' என்றாயிற்று!

98-ன் இறுதியில் புது வீடு மாறினோம். மனித நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதி மாதிரிதான். எங்கள் காலனியில் மொத்தமே பதினொரு வீடுகள் மட்டுமே. அதிலும் எங்கள் வீடு கட்டக் கடைசியில். யார் வீட்டிலும் போன் கிடையாது. 11 புதிய இணைப்புத் தூண்கள் வைத்துதான் இணணப்பு கொடுக்க முடியும் என்பதால் எங்கள் பழைய இணைப்பு இங்கே வர காலம், காசு இரண்டுமே அதிகம் ஆகும்னு எல்லோரும் பயம் காட்டினார்கள். ஆனால் இரண்டாவது மாதத்திலேயே பட படன்னு சில ஆட்கள் தூண்களோடு வந்தார்கள். சட சடன்னு நட்டுவிட்டுப் போய் விட்டார்கள். அதிலிருந்து இரண்டாவது நாளே இணைப்பைக் கொடுத்துவிட்டுப் போய் விட்டார்கள். டிப்ஸ் / காபி கொடுக்கக் கூட காலம் தரவில்லை. அதென்னவோ எனக்கும் தொலைபேசித் துறைக்கும் அப்படி ஒரு பிணைப்பு !! ஏறக்குறைய அடுத்த ஓராண்டு வரை 11 வீட்டுக்கும் நம்ம வீட்டு போன்தான் ஒரே இணைப்பு. தனி மவுசுதான். அதோடு ரொம்ப கஷ்டமும் கூட. ஒவ்வொருவர் வீட்டுக்கு வரும் அழைப்புகளுக்கு நானே வீடுதேடி சென்று மறு அழைப்பு வைத்துக் கூப்பிட்டு வரவேண்டும். தூரத்தில் உள்ள வீட்டினரை அழைப்பதற்கென்றே ஒரு லேசர் லைட் வாங்கி.. ..ம்ம்.. அதுவே ஒரு தனிக் கதை. தொலைபேசித் துறைக்கும் எனக்கும் இருந்த அந்த பிணைப்பு இன்று வரை இருக்கும் போலும். அகலப்பட்டை வந்த போதும்கூட எல்லாமே in a jiffy...

Alvin Toffler எழுதிய FUTURE SHOCK நினைவுக்கு வருது. எதிர்காலத்தில் வரப் போகும் பெரும் மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ள நாம் தயாராக வேண்டும்; இல்லையென்றால் அது ஒரு பெரிய அதிர்ச்சியாக - shock - இருக்குமென்கிறார். என் வயசுக்காரங்களுக்கு நிச்சயமாக இந்த தொலைபேசித் தொடர்புகளின் வளர்ச்சியின் வேகம் மிகவும் பிரமிப்பூட்டுவதாகத்தான் உள்ளது. இன்னொரு உண்மைக் கதையும் உண்டு. நண்பன் ஒருவன் அமெரிக்கா சென்று 9 மாதம் கழித்து வந்தவன் pager பற்றி என்னிடம் வியந்து கூறிக்கொண்டிருந்தான். சொல்லும் வரை கேட்டுக் கொண்டிருந்து விட்டு, 'அட பையா, அது நம்ம ஊரு மதுரைக்கே வந்திருச்சு' என்ற போது அதிர்ச்சியும், ஆச்சரியமும் அவனுக்குத்தான். அவன் மதுரையை விட்டுச் செல்லும் போது இல்லாத ஒரு technology அவன் திரும்பி வருவதற்குள் இங்கு சாதாரண ஒன்றாகி இருந்தது.

இந்த மாற்றங்கள் எல்லாமே 1985-95-ற்குள் நடந்ததாகத்தான் எனக்கு நினைவு. இந்த பெரும் மாற்றங்களுக்கு அடிகோலியது ரஜீவ் காந்தியின் காலத்தில்தான். அவர் முயற்சி எடுக்காவிட்டிருந்தாலும் காலப் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனாலும் அவரது ஆட்சிக் காலத்தில் அவர் கொடுத்த முனைப்பே இன்றைய வளர்ச்சிக்கு வித்திட்டன. Sam Pitroda-வை அறிவியல் ஆலோசகராகக் கொண்டு அவர்கள் போட்ட 'பிள்ளையார் சுழி'யின் பலன் இன்று நாம் உலகின்முன் முன்னிறுத்தப் படுவதற்கு பெரும் துணையாக உள்ளது. Sam Pitroda -வுக்கு முழுச்சுதந்திரம் தந்து தொலைபேசித் தொடர்பை ரஜீவ் வளர்க்கச் சொன்னதாகச் சொல்லுவார்கள். அறுபது, எழுபது தாண்டிய கட்டைகள் கூட இன்று கணினியின் முன்னால் உட்கார்ந்து தங்கள் பழைய நினைப்புகளை ப்ளாக் வழியாக மற்றோருடன் பகிர்ந்து கொள்ள முடிகிறதென்றால் அதற்கு ஆரம்பம் கொடுத்தவர்களுக்கு நன்றி சொல்கிறேன்:

ரஜீவ் & Sam - க்கு ஜே!

8 comments:

இலவசக்கொத்தனார் said...

ரஜீவ் & Sam - க்கு ஜே! இது சிலகாலம்.

ரஜீவ் & Sam - க்கு முக! இது சிலகாலம். :))))

இலவசக்கொத்தனார் said...

அதுனாலதான் ஜே போடறதுக்குப் பதிலா ஓ போட சொல்லறது. பாத்தீங்களா காலம் மாறிக்கிட்டே இருக்கு. :)

தருமி said...

கொத்ஸ்,

அடப்பாவி மனுஷா!

இல்லாத உள்குத்தை என் தலைப்பிலேயே சொருகிட்டீங்களே, அய்யா !

Anonymous said...

நான் பிறக்கும் போது சரி,இப்பொழுதும் சரி போன் எப்பொழுதும் இருந்தது ,இருகின்றது...அதனால் தான் என்னமோ போன் எல்லாம் பெரிய விஷயமாக தெரியவில்லை.ஆனால் கைத் தொலைப்பேசியின் வளர்ச்சி மட்டும் பிரமிக்க வைக்கின்றது.

தருமி said...

துர்கா,

உங்களின் இந்த பிரமிப்பு என் பிரமிப்பின் நீட்சி. ஒவ்வொரு காலகட்டத்திற்கும், அந்தந்த தலைமுறைகளுக்கும் ஏற்றாற்போல் மாறி வரும் பிரமிப்புகள்...

தருமி said...

மருத புல்லட் பாண்டி சொன்னது ...

யோவ் பெருசு ஒம்ம மோடம், நெட்டு பின்னாடி நானும் கடப்பாரையும் இருக்கிறத மறந்துட்டு சுயபுராணம் பாடதீங்க்்

தருமி said...

மருத புல்லட் பாண்டி,

என்னங்க'ணா இப்படி சொல்லிட்டீங்க..
ஒங்க ரெண்டு பேரையும் மறப்பேனா?

ஆனா ஒண்ணுங்க'ணா, இது சுய புராணம் இல்லீங்க'ணா... நம்ம sam pitroda புராணம்தாங்க'ணா ..

தருமி said...

மருத புல்லட் பாண்டி
சொன்னது...

அப்பாடா, நம்மதும் தமிழ்ம்ணத்தில வந்திருச்சு'பா !!

(ஆனா இன்னும் ஒழுங்கான வழியில வரலையே'பா ! - தருமி)

Post a Comment