Tuesday, March 27, 2007

208. பார்த்தது, கேட்டது, படிச்சது

இதுவரை ...

1. சுரேஷ் கண்ணன் --> 2. கார்த்திக் --> 3. மோகன்தாஸ் --> 4. பொன்ஸ் --> 5. இராம் --> 6. வரவனையான் --> 7. தருமி --> ?


இந்த ஆளு வரவனையானுக்கு எப்படியோ மூக்குல வேர்த்திருச்சி போல. நான் அவரது பெயரை weird chain-ல கோர்த்துட்டு தமிழ் மணம் வந்து பாத்தா அதே நேரத்தில என்னைய இந்த பா.கே.ப.-ல மாட்டி விட்டுருக்கார். என்ன பொருத்தம் இந்த பொருத்தம், போங்க.

பார்த்தது அப்டின்றதுல பார்த்த சினிமாவைப் பத்திதான் மக்கள்ஸ் எழுதறது மாதிரி தெரியுது. அதே மாதிரி கேட்டதில பாட்டு, படிச்சதுல கதைப் புத்தகங்கள் அப்டின்னு தெரியுது. முன்னால் போன மூத்தவங்க, பெரியவங்க போட்ட கோட்டைத் தாண்டலாமா? நம்ம வழி தனி வழி அப்டின்றதெல்லாம் நமக்குச் சரியா வருமா?


பார்த்தது:

வெறும் தூர்தர்ஷன் மட்டும் இருந்தபோது சில சமயம் பார்க்கக் கிடைச்ச படங்கள் மாதிரி இப்போ அதிகமா கிடைக்கிறதில்லைன்னு நினைக்கிறேன். தலைவிதியே அப்டின்னு இருக்கிற ஒரே சேனலைப் பார்த்துக்கிட்டு இருந்த காலத்தில, வெகு தற்செயலா பார்த்த படம் Oh! God. George Burns அப்டின்னு பெருசு ஒருத்தர் கடவுளா நடிச்சிருப்பார். பயங்கர சிரிப்புப் படம் மாதிரி; ஆனா நிறைய விஷயத்தோட உள்ள ஆழமான, அழகான படம்.

ஆரம்பத்திலேயே வயசான ஆளா, பேக்கு மாதிரி கடவுள் வந்து முன்னால் நின்னதும் ஹீரோ ஆடிப் போயிடுவார். ஏன் என்னிட்ட வந்தீங்க? அப்டின்னு கேட்டதும், கடவுள் Why not? அப்டிம்பார். அடுத்து ஏன் இப்படி வயசான கோலத்தில வந்தீங்க அப்டின்னதும் மறுபடி Why not? ரத்தினச் சுருக்கமான வசனங்கள்; ஆனால் ரொம்பவே பொருள் பொதிஞ்ச வசனங்களாக இருக்கும். கிறித்துவ மத போதகர்களையும், அவர்களது தகிடுதத்தங்களையும் காட்டுவாங்க. ஆனா, பொதுவா கடவுள் கொள்கைகள், மத நம்பிக்கைகளை வைத்து எடுத்த படம். கடைசியில் கடவுள் மனசு வெறுத்து திரும்பிப் போறத பாத்தா நமக்கே மனசு கஷ்டமாயிரும். ரொம்ப பிடிச்சி போச்சு அந்தப் படம்.

இந்தப் படத்தை அடிப்படையாக வைத்துதானோ என்னவோ தமிழில் பிரபாகாரன் இயக்கத்தில் கடவுள் அப்டின்னு ஒரு படம் வந்தது. வசன சிக்கனமும் பொருள் பொதிவான வசனங்களும் ஆங்கிலப் படத்தின் அடிப்படை என்றால் நம் படத்தில் ஒரே பேச்சு..பேச்சு..அதுவும் மேடைப் பிரசங்கம் மாதிரி. subtle அப்டின்னு ஒண்ணு நம்ம தமிழ்ப்படங்களில் எப்போதுதான் வருமோ?

படிச்சது:

படித்த புத்தகங்கள் அப்டின்னதும் முதலில் நினைவுக்கு வருவது பொன்னியின் செல்வன். பள்ளி மாணவப் பருவத்திலேயே இரண்டுமுறை வாசித்து பின் 67-69 வாக்கில் கல்கியில் மீண்டும் தொடராக மணியம் படத்தோடு வரும்போது, மொத்தமாக பைண்டு செய்ய வேண்டுமென்று வாராவாரம் வாங்கிச் சேமித்து, கடைசிவரை பைண்டு செய்யாமலேயே வைத்திருந்து, வேலையிலிருந்து ஓய்வு பெரும் வேளையில் மஞ்சளாக ஒடிந்துவிடும் நிலையில் இருந்த கதைக் கட்டை அரைமனசோடு தூக்கிப் போட்டது ...என்று எல்லாமே அந்தப் புத்தகத்துக்கு ஒரு தனி மரியாதையைக் கொடுத்தாகி விட்டது. ஆனால் ஒரு சந்தேகம்; இப்போதும் கதை பிடித்த கதையாக இருப்பதற்குக் காரணம் சின்ன வயசில் படித்து அந்த வரலாற்றுக் காலத்தைக் காதலித்து ...அதனால் இப்படி ஆயிற்றா, இப்போது படித்திருந்தால் அந்த பிடிப்பு இருந்திருக்குமா என்றெல்லாம் கேள்விகள் அவ்வப்போது வருகின்றன.

எண்பதுகளின் ஆரம்பத்தில் படித்த இன்னொரு ஆங்கில நாவல் - மூன்று முறை நான் வாசித்த மற்றொரு புத்தகம் - Exodus by Leon Uris. ஆசிரியர் சொல்லாமலே தெரிந்துவிடும், ஒரு யூதர்; இரண்டாம் உலகப் போரில் அவர்கள் குலம் பட்ட கஷ்டம்; தமக்கென ஒரு நாடு வேண்டும் என்ற வெறி எப்படி ஒவ்வொரு யூதனிடமும் தோன்றி, அப்படி ஒரு நாட்டை யூதர்கள் எப்படி நிறுவினார்கள்; என்று ஒரு உண்மை வரலாற்றை கற்பனை + நிஜ பாத்திரப் படைப்புகளோடு உலவ விட்டு எழுதப்பட்ட நாவல். என்னையறியாமல் ஓவ்வொரு முறையும் என்னை அழவைத்த நாவல். இதைப் படித்த பின் சில ஆண்டுகள் முன்பு வரை நான் ஒரு pro-israelites ஆகவே இருந்து வந்தேன்; கதையின் தாக்கம் அவ்வளவு. ஆனால் அவர்களின் மேல் கொண்ட பிரமிப்பு இன்னும் நீங்கிய பாடில்லை. அதுவும் ஆங்கில நாவல்கள் அதிகம் வாசித்த காலத்தில், எழுதப்படும் நாவல்களில் பெரும்பான்மை யூதக் கதாசிரியர்களால் எழுதப்பட்டதைப் பார்க்கும் போது நிறம்ப ஆச்சரியம்தான்.


கேட்டது:

நமக்கு இசை தெரியாது; புரியாது. ஆங்கிலப் பாடல்களை ரசிக்குமளவிற்கு ஆங்கில அறிவோ, மேற்கத்திய இசை அறிவோ கிடையாது. மிச்சம் இருக்கிறது கொஞ்சூண்டு instrumental music (KennyG, Yanni ..) அதையும் விட்டா நம்ம தமிழ் சினிமாப் பாட்டுக்கள் .... தமிழ் சினிமாப் பாட்டுக்கள்தான்.. அதைத் தவிர வேறொன்றும் தெரியாது. அப்படி கேட்ட சினிமாப் பாட்டுக்களில் கேட்ட மாத்திரத்தில் மந்திரம் போட்டுக் கட்டியது போல் கட்டிப் போட்ட பாட்டுக்கள் நாலைந்து...

தஞ்சையில் 1966-70 வரை வாழ்க்கை. புகைவண்டி நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் இருந்த ஒரு டீக்கடை நமக்கு மாமூலான கடை. டீ நல்லா இருக்குமோ இல்லையோ, 24 மணி நேரமும் பாட்டு கேட்டுக்கிட்டே இருக்கும். அதனாலேயே நம்ம குரூப்புக்குப் பிடிச்ச joint அது. ஒரு நாள் இரவு டீ குடிக்க வந்தவங்க ஒரு பாட்டை கேட்டுட்டு அப்படியே சமஞ்சு போய் நின்னுட்டோம். பாட்டு முடிஞ்சதும் எங்கள் (நேயர்) விருப்பம் அறிந்து கடைக்காரர் ரிக்கார்டை தொடர்ந்து மூன்று தடவை போட்டார் எங்களுக்காக. பாட்டைக் கேட்ட மூன்று பேருமே சிவாஜி ரசிகர்கள். எங்களுக்குள் ஒரு விவாதம்: இந்தப் பாட்டில் இசையமைப்பாளர், பாடிய டி.எம்.எஸ். இந்த இரண்டிலும் யார் வின்னர்?; இப்படிப்பட்ட பாட்டை டி.எம்.எஸ். பாடியிருந்தால் நிச்சயமாக அது சிவாஜிக்காகத்தான் இருக்க வேண்டும். அப்படியானால் இசையமைப்பாளர்- விசுவநாதன் - ராமமூர்த்தி, டி.எம்.எஸ்., சிவாஜி மூன்று பேரில் யாருடைய திறமை மிகவும் சிறப்பாக இருக்குமென்று பார்க்கவேண்டும் என்று நினைத்தோம். நாங்கள் நினைத்தது மாதிரியே அந்தப் பாடல் இடம்பெற்றது சிவாஜி நடித்த படம்தான். படம் பார்த்த பிறகு ஒருமனதாக நாங்கள் வெற்றியாளராகத் தேர்ந்தெடுத்தது: டி.எம்.எஸ்.தான்.

படம்: வியட்நாம் வீடு
பாட்டு: உன் கண்ணில் நீர் வழிந்தால் .....
இன்றும் அந்தப் பாட்டைக் கேட்டால் சிவாஜி - பத்மினி நினைவுத் திரையில் வருவதை விடவும், தஞ்சாவூரில் நாங்கள் நின்று கேட்ட அந்த டீக்கடை முன்னால் நின்று மீண்டும் கேட்பதுபோல்தான் தோன்றும்.

70-ல் மதுரை வந்து அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியனாகி விட்டாலும் பழைய தொடர்பு விடாமல் நண்பர்களைப் பார்க்கச் சென்று அப்போதைய எங்கள் வழக்கம்போல் மாலையில் தஞ்சையிலிருந்து புறப்பட்டு திருச்சியில் தொடர்ந்து இரண்டு படம் பார்த்துவிட்டு இரவு ஒரு மணி அளவு புகைவண்டி நிலையம் அருகே வந்தோம். நான் மதுரை செல்ல வேண்டும்; நண்பர்களிருவரும் தஞ்சை செல்ல வேண்டும். இன்னும் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் காத்திருக்க வேண்டியதிருந்தது. கை கொடுத்தது இங்கே இன்னொரு டீக்கடை. வசந்த மாளிகை படம் வெளிவருவதற்குள் பாட்டுக்கள் வெளிவந்திருந்த நேரம். நாங்களே முதல் முறையாக அந்தக் கடையில்தான் அப்படப் பாடல்களைக் கேட்டோம். அந்த இரண்டு மணி நேரத்துக்குள் எங்களுக்காக ஐந்தாறு முறை திரும்ப திரும்ப "இரண்டு மனம் வேண்டும்" என்ற பாட்டைக் கேட்டோம். ஆனால் இந்தப் பாடலைப் பொறுத்தவரை பாடலைவிட நாங்கள் காத்திருந்தது, அந்தக் காத்திருப்பில் மீண்டும் மீண்டும் அந்தப் பாடலைக் கேட்டது என்று அந்த situation effectதான் மனதில் தேங்கி நின்று விட்டது.

வருடம் நினைவில் இல்லை. மகள்களோடு தெருவில் நடந்து வந்து கொண்டிருக்கும்போது ஒலிபெருக்கியின் சத்தத்திற்குப் பயந்து வேகமாக நடந்து கொண்டிருந்த போது ஒரு பாட்டைக் கேட்டதும் மூவரும் ஒதுங்கி நின்று முழுப்பாட்டைக் கேட்டோம். நிரம்பவே வித்தியாசமாக கவிதைக்காகவும், இசைக்காகவும் நின்று கேட்ட பாடல் ரஹ்மானின் முதல் படம் புதிய முகத்தில் உள்ள "கண்ணுக்கு மையழகு..."

இப்போது சமீபத்தில் டிவியில் ஒரு பாட்டு வர, ஆரம்பமே பிடித்துப்போக - பாட்டு ரொம்ப பிடிச்சா விஷுவலைப் பார்ப்பதில்லை - பாட்டை மட்டும் கேட்டுக் கொண்டு வரும்போது ஏனென்றே தெரியவில்லை .. பாட்டு முடிவுக்கு வரும் வேளையில் கண்ணில் கொஞ்சம் கண்ணீர்; ஒரு மாதிரி மனசு என்னமோ பண்ணியது. ஏன் முதல் முறை அப்பாட்டு கண்ணீர் வரவழைத்தது என்று தெரியவில்லை. பாட்டு முடிந்ததும் மகளுக்குத் தொலைபேசியில் பாட்டைப் பற்றிச் சொல்லி என்ன படம் என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

படம்: ஒரு நாள்; ஒரு கனவு
பாட்டு: காற்றில் வரும் கீதமே ...


சரி... இப்போ இன்னொரு ஆளை இந்தச் சுற்றுக்கு சொல்லணும். +2 -க்குக் கஷ்டப்பட்டு படிச்ச மகள்கூட சேர்ந்து கஷ்டப்பட்டுட்டு, இப்போ கொஞ்சம் ரிலாக்ஸா இருக்குறாங்க தாணு. அப்படியெல்லாம் ஒரு பதிவரை இருக்க விடலாமா? வாங்க தாணு ...


1. சுரேஷ் கண்ணன் --> 2. கார்த்திக் --> 3. மோகன்தாஸ் --> 4. பொன்ஸ் --> 5. இராம் --> 6. வரவனையான் --> 7. தருமி --> 8. தாணு

Saturday, March 24, 2007

207. I'M A LOUSY GUY ...

காலச்சுத்தின பாம்பு கடிக்காம விடாது அப்படிம்பாங்க. இந்ததும் அப்படித்தான் ஆகிப் போச்சு. இந்த weird விஷயம் சுத்துல வருதுன்னு பாத்ததுமே எந்தப் பாவி எப்போ வந்து காலச்சுத்துமோன்னு நினச்சுக்கிட்டு இருந்தப்போ கோவி.க. வந்திட்டார்.(இப்படி சொன்னா கோவி.க. கோவிக்க மாட்டாருன்னு தெரியும்!)

ஏதோ உன்னிட்ட இருக்கிற நல்ல விஷயத்தை எடுத்துவுடு அப்டின்னா சடார்னு எடுத்து உட்டுருக்கலாம். அவ்வளவு நல்ல விஷயம் உங்கிட்ட இருக்கான்னு கேக்காதீங்க. நல்லதுன்னு நினச்சிக்கிட்டு இருக்கிறது ஒண்ணு ரெண்டு; அதை படக்குன்னு சொல்லிடலாம். இப்போ நம்மளப் பத்தியுள்ள விஷயத்தில எல்லாமே கொஞ்சம் இந்த weird டைப்புதான். அதில எதன்னு எழுதறது அப்டின்னு ஒரு யோசனை. எல்லாம் problem of plenty!

உன்னைப் பத்தி சுருக்கமா சொல்லு'பா அப்டின்னு யாரும் கேட்டா வழக்கமா மேலே இருக்கிற தலைப்பைச் சொல்லிடுவேன். அதான் நமக்குப் பொருத்தமா இருக்கும். அதனால கேட்டிருக்கிற weird பத்தி நிறையவே சொல்லலாம். ஆனா நாளைக்கு தலைய வெளிய காமிக்க முடியாதேன்னு யோசனையா இருக்கு. அதனால சொல்லக் கூடியதா பாத்து ஒரு நாலு,- இல்ல அஞ்சு சொல்லணுமோ, - சொல்லலாமுன்னு துணிஞ்சிட்டேன்.

A clean desk is the sign of a sick mind - இது கல்லூரியில் நம்ம மேசைக்கு முன்னால் ஒரு போஸ்டர் ரூபத்தில எப்பவும் இருக்கும். இல்லைன்னா நம்ம மேசைய பார்க்குறவங்க பதறிடமாட்டாங்களா. நமக்கு நேர் எதிர் மறையான இன்னொரு பேராசிரியர்; அப்படி ஒரு சுத்தமா இருக்கும் அவர் மேசை. எது எதுல இருக்கும்னு மனுஷன் கண்ணை மூடிக்கிட்டு சொல்லிடுவார். நானும் அவரும் பேசும்போது 'எத எங்க வச்சேன்னு தேடுறதிலய என் லைஃப்ல பாதி போயிடும்போல' என்றேன். அவர் 'நான் எத எத எங்க வைக்கணும்னு நினைச்சே பாதி லைஃப் போயிருது' அப்டின்னார், ஆகா, அப்படியா எப்படியோ ரெண்டுபேரு கணக்கும் ஒண்ணாத்தான இருக்குன்னு அப்படியே எப்போதும் இருக்கிறதுன்னு ஒரு "நல்ல" முடிவையெடுத்து இன்னைக்கி வரைக்கும் தவறாம (எப்போதும் போல) அப்படியே இருக்கிறேன். ம்னசுதானங்க சுத்தமா இருக்கணும், இல்லீங்களா...!

procrastination - அப்டின்னு ஒரு வார்த்தை படிச்சேங்க. அத அப்படியே வாழ்க்கையில ஒரு லட்சியமா வச்சிக்கிட்டேன். (நாசமா போய்ட்டேன்...) எந்த வேலையையும் உடனே ஆரம்பிச்சோம்; முடிச்சோம்னு கிடையாது. எல்லாமே அந்த eleventh hour rush தான். ஆனா எப்படியோ செய்ய வேண்டியதை செஞ்சிருவேன் - ஆனால் எல்லாமே நம்ம pace தான். ஒரே வார்த்தையில் சொல்லணும்னா முழுச்சோம்பேறி. 'நாளை' என்பதில் அப்படி ஒரு நம்பிக்கை.

பொதுவாகவே ஒரு சண்டைக் கோழி. அதில தார்மீகக் கோபம் அப்டின்னு ஒரு வார்த்தை வேற தெரிஞ்சு போச்சா. அது சும்மா புசு புசுன்னு வந்திரும். நாலு வினாடி இருக்கும்போதே போ.. போ..ன்னு சிக்னலில் கையைக் காமிச்ச தாணாக்கார ஐயாவைப் பாத்து 'நீங்க இப்படி 4 செகண்டு இருக்கும்போது போங்கன்னு சொல்லுங்க; அதனாலதான், நீங்க இல்லாட்டி 7 செகண்டு இருக்குபோதே நாங்க கிளம்புறோம்' அப்டின்னு இன்னைக்குக் காலையில கூட ஒரு போலீஸ்கார ஐயாகிட்ட சொன்னேன். அது என்னமோ அந்த நிமிசத்தில நினைக்கிறத செஞ்சிட்டா, சொல்லிட்டா at least மனசுக்கு ஒரு நிம்மதி. அதே மாதிரி traffic rules மீறுற ஆளுக, பைக்கில போய்க்கிட்டே எச்சி துப்புற மனசப் பிறவிகள், கைத் தொலைபேசிய கழுத்துப் பேசியாக வச்சிக்கிட்டு போற ஜென்மங்கள் எல்லாத்தையும் பார்த்து சவுண்டு உடறது தன்னாலேயே வந்துருது. பின்னால் உக்காந்துகிட்டு வர்ர தங்கமணி எவ்வளவு திட்டினாலும் வாங்கிக் கிட்டு நான் ரோட்ல போற இந்தமாதிரி ஆளுகளைத் திட்டுறது வழக்கம். தங்க மணிக்கு இப்போ ஒன்றரை மாசமா கொஞ்சம் நிம்மதி. ஏன்னா இப்போவெல்லாம் முழு தலைக்கவசம் போட்டுட்டுப் போறதால யாரையும் திட்ட முடியலை; ஒரே சோகமா இருக்கு....

இன்னொரு உடன்பிறந்த வியாதி. வெட்டி அரட்டை. எங்க எப்போ சான்ஸ் கிடச்சாலும் நேரம் போறதே தெரியாது.பிடிச்ச மக்கள் அல்லது பிடிச்ச மேட்டர் கிடச்சுதுன்னு வச்சுக்கங்க.. அது பாட்டுக்கு நேரம் போறது தெரியாம கச்சேரி தொடரும். அதில இன்னொரு வழக்கமும் தொத்திக்கிரிச்சி. என்னன்னா, அதான் devil's advocate வேலை. துறையில எல்லாரையும் 'போட்டுப் பார்த்துக்கிட்டு' இருந்த தலய (Head of the Dept-தான்) அடிப்பட்ட எல்லாருமா உக்காந்து இழவு கொட்டிக்கிட்டு இருப்போம். நான் திடீர்னு அவர் சைடு எடுத்து பேச ஆரம்பிப்பேன்; மக்களுக்கு வர்ர வெறுப்பைப் பார்க்கணுமே ...

நம்ம மாணவர்கள் கிட்ட அனேகமா விடைபெறும் சமயத்திலோ அல்லது வேறு சரியான தருணத்திலேயோ ஒண்ணு கட்டாயமா சொல்றது உண்டு: Take me as a model in your life; and you would be a great success. (இந்த இடத்தில் கொஞ்சம் pause ...) But the only thing, take me as a negative model. அப்புறம் இவ்வளவு மோசமான ஆள்ட்ட படிச்சிட்டு போற பையன் நல்ல படியா வரணுமே அப்டிங்கிற ஒரு கரிசனம் ஒரு வாத்தியாருக்கு இருக்கணுமா இல்லையா?

இப்படியே சொல்லிக்கிட்டு போகலாம்; ஆனால் தாங்க மாட்டீங்க. போனா போகுது உட்டுர்ரேன். வர்ட்டா ...

ஓ! அடுத்து ஒரு அஞ்சு பேர மாட்டி உடணும்ல... ம்ம்..ம் யாரந்த பாவப்பட்ட மனுசங்க ..

1. ஜோ
2. திரு
3. குழலி
4. வரவனை
5. பாலபாரதி
(சே! எப்படிங்க இப்படி? முதல் ஆளு ஒரு எழுத்துக்காரர்; இரண்டாவது இரண்டெழுத்துக்காரர்... எப்படி அமைஞ்சி போச்சு, பாருங்க ..!)
ஐயா, சாமிகளா நீங்க ஏற்கெனவே மாட்டியிருந்தீங்கன்னா, இன்னொரு ஆளை substitute-ஆ இறக்கிவுட்டுடுங்க..

Wednesday, March 21, 2007

206. அன்புள்ள வித்யாவிற்கு,

அன்புள்ள வித்யாவிற்கு,

கோபமான உன் ( இக்கடிதத்தில் மட்டும் ஒருமையில் உன்னை (உரிமையோடு) அழைத்துக் கொள்கிறேன்; சரியா?) பதிவைப் பார்த்தேன். அதைத் தொடர்ந்த வேறு இரு பதிவுகளையும் பார்த்தேன். ஏற்கெனவே நீ கெளதம் -வேட்டையாடு விளையாடு - பற்றி எழுதியதையும் வாசித்திருக்கிறேன். உன்னைக் குறை சொல்லித்தான் இக்கடிதம் எழுதப் போகிறேன்.

திருநங்கைகள் முகவரி இல்லாதவர்களாக இருக்கிறார்கள்; அவர்களுக்கு குடும்ப அட்டை கொடுப்பதில்லை; வாக்கு அடையாள அட்டையோ, வாக்குரிமையோ இல்லை; இன்னும் மற்ற எந்த சமூக அங்கீகரிப்புகளும் இல்லை; இன்னும் சமூகத்தில் அவர்களின் கஷ்டங்கள் என்னென்ன - இதெல்லாம் எப்போது எனக்குத் தெரியும் தெரியுமா? நீ பதிவுலகிற்குள் வந்து எழுதிய பிறகே முழு வீச்சோடு தெரியும். அதற்கு முன்பு இந்த அளவு சமூகத்தில் ஒதுக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுகிறீர்கள் என்பதே தெரியாது.

காலங்காலமாய் அரவாணிகள் என்றால் தொடத்தகாதவர்களாகவோ, கேலிப் பொருளாகவோதான் கருதப்பட்டு வந்துள்ளார்கள் என்பது உண்மை. சமூகத்தில் பலரும் இதே மனநிலையோடு இருந்தவர்கள்தான் -என்னையும் சேர்த்தே. இது தவறு என்ற மனமாற்றத்தைச் சிலராவது பெற்றது மிகச் சமீப காலத்தில்தான். உன்னைப் போல் சிலர் படித்து, அப்படிப்பு தந்த உந்துதலிலும், இதுவரை பெற்ற கசப்பான அனுபவங்களாலும் எழுந்து நிற்கிறீர்கள்; நாங்களும் உங்களைப் புதுக் கோணத்தில் இப்போதுதான் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம். ஆனாலும் சமூகம் மிகவும் பெரியது; உங்கள் போராட்டம் இன்னும் வலிமையோடு எழவேண்டும். சமூக மாற்றம் நோக்கி நகரவேண்டும். அதை நீங்கள் நன்றாகச் செய்து வருகிறீர்கள்தான். ஆனாலும் இன்னும் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் இந்த மனமாற்றம் வர காலமாகும்.

அந்தக் காலம் வரும்வரை நீ சொல்லும் தவறுகள் நடப்பது, தொடர்பது இயல்பே. அதைத் தடுக்க, மாற்ற போராட்டம் தொடரவேண்டியதுதான். ஆனால், அந்தப் போராட்டம் தனிநபர்களைச் சாடுவதால் நின்று விடாது. இப்படி மக்களை எளிதில் சென்று சேரும் மீடியாக்களில் இப்படியெல்லாம் தரக் குறைவாகக் காண்பித்தால் சமூக மாற்றம் எப்படி ஏற்படும் என்று கேட்கலாம். ஆனால் தனிநபர் சாடுதலால் மட்டும் அந்த சமூக மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியுமா, என்ன?

கெளதமோ, ராதிகாவோ திருநங்கைகளைக் கேவலப்படுத்தும் குறிப்பிட்ட நோக்கத்தோடுதான் இப்படி எடுத்திருப்பார்கள் என்று தோன்றவில்லை. அதோடு நமது மீடியாக்களில் யாரைத்தான் கேவலமாகச் சித்தரிக்கவில்லை. கல்லூரி ஆசிரியர்களையும், போலீஸ்காரர்களையும் கேலி செய்வது நமது சினிமாக்காரர்களுக்கு மிகவும் பிடித்த விஷயமாச்சே. வெண்ணிற ஆடை மூர்த்தி, டைப்பிஸ்ட் கோபு, மதன் பாப், குமரி முத்து இன்னும் சில ஆட்களையே கல்லூரி பேராசிரியர்களாகக் காண்பிப்பதுதானே வழக்கம். எந்தப் படமும் - நம்மவர் உட்பட - கல்லூரி வகுப்பைச் சரியாக இதுவரை காண்பித்ததாகச் சரித்திரமே கிடையாதே.

திருநங்கைகளைக் காலம் காலமாக சினிமாவில் கேவலப்படுத்தி வந்ததை எல்லோருமே அறிவோம். ஆனாலும், உங்கள் வாழ்க்கையைப் பற்றி, உங்கள் வேதனைகளைப் பற்றித்தெரிந்து கொள்ளும் முன்பு அவைகள் என்னைப் போன்றவர்கள் மனத்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவேயில்லையே. We took it all for granted. அது அப்படித்தான் என்ற பார்வை. அந்தப் பார்வை மாறியது (என்னைப் பொறுத்தவரையாவது ) மிகச் சமீபமே.

இதுவரை இருந்த சமூகத்தின் பார்வையும் கருத்தும் மாறிவரும் நேரம் இப்போதுதான் ஆரம்பித்துள்ளது. To quote Churchill: This is not the end, not even the beginning; it is just the end of the beginning. அவ்வளவு ஏன்? திருநங்கைகளின் இந்த அவல வாழ்க்கைக்கு அடிப்படைக் காரணம் என்ன? அவரவர்களது குடும்பங்களிலேயே அந்தப் புரிதல் இல்லையே. அதனால்தானே அவர்கள் வாழ்க்கையில் இத்தனை வேதனைகள். பெற்றவர்களுக்கே புரியாததும், புரிந்த பிறகும் அதை ஒத்துக் கொள்ள முடியாத மூடிய மனதும் இருக்கையில் மொத்த சமூகத்திடம் இன்றைய நிலையில் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்துக் காரியங்களும் உடனே எளிதாகக் கிடைத்துவிடாதே. காலம் எடுக்கும்; அதுவரை புரியாதவர்களைப் புரியவைக்கும் முயற்சிகளை எடுங்கள். நிச்சயமாக நம் பதிவுலகத்தில் இப்போது உள்ளோர் அனைவருக்கும் நல்ல புரிதல் கிடைத்திருக்கும் உன் எழுத்துக்களால். ஆனால் தனி மனித வசை பாடுதல் மூலமாக அதைச் செய்வது சரியாக இருக்காது.

ஓரிரு வாரங்களுக்கு முன் Oprah Winfre -யின் Talk Show ஒன்றைப் பார்த்தேன். அதையும்கூட முதலில் இருந்தே பார்க்கவில்லை, நடுவில் இருந்துதான் பார்த்தேன். இரண்டு இரட்டையர்கள். Transgenders. அதில் ஒரு இரட்டையரில் ஒருவர் பெண்ணாகவே இருந்து வர, அடுத்தவர் தன் 40வது வயதில் ஆணாகத் தன்னை மாற்றிக் கொண்டவர் - breast-யை அறுவை சிகிச்சையால் எடுத்து விட்டு, artificial penis -யை பொருத்திக் கொண்டவர்; இன்னொரு இரட்டையரில் ஒருவர் பெண்ணாகவே இருக்க அடுத்தவர் ஹார்மோன்கள் எடுத்து ஆணாக தாடியோடு காட்சியளித்தார். மாற்று சிகிச்சை செய்துகொள்ள ஆவல் இல்லை என்றார். அவர்களது மன, உடம்பு பற்றிய நேரடிக் கேள்விகளும் பதில்களுமாக நிகழ்ச்சி நடந்தது. அவர்களது குடும்பத்தினரின் புரிதல் அவர்களுக்குத் துணை நின்றிருந்திருக்கிறது.
breast, penis, size of penis, vagina, scrotum, - போன்ற வார்த்தைகள் பங்கேற்றவர்களாலும் மற்ற பார்வையாளர்களாலும் மிகச் சாதாரணமாகப் பேசப்பட்டன. அந்த நிகழ்ச்சியைப் பார்த்த போது, அந்தச் சமூகத்தில் transgender-களைப் புரிந்துகொள்ளும் நிலையினையும், அங்கு நிலவிய maturity-யையும் பார்க்கும்போது நாம் எல்லோரும் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என்று தோன்றியது. sex-யை மறை பொருளாக வைத்து மனத்தில் நிறைய சகதியைச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.

வித்யா, போராடுங்கள். உங்களின் போராட்டக்களத்தின் இன்றைய நிலையையும் மனதில் கொள்ளுங்கள். நடக்கும் தவறுகள் தனிமனிதத் தவறுகளல்ல; ஒரு சமூகத்தின் மொத்தத் தவறு.

தனக்கு வந்தாதான் தலைவலியும் காய்ச்சலும் என்ற பழமொழி நினைவில் இருந்தாலும் .. உன் கோபம் இன்னும் முறையாக வெளிப்பட்டு மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்ற ஆசையில் இதனை எழுதியுள்ளேன். புரிந்து கொள்வாய் எனவும் நம்புகிறேன்.

அன்புடன்,
தாத்தா

தொடர்புடைய ஏனைய பதிவுகள்:
http://livingsmile.blogspot.com/2007/03/r.html
http://elavasam.blogspot.com/2007/03/blog-post_21.html
http://kuzhali.blogspot.com/2007/03/blog-post_21.html








And miles to go .......

Monday, March 19, 2007

204. Letter to THE HINDU

நான் எழுதிய கடிதம் ஒன்று இந்து தினசரியில் மார்ச் 16-ம் தேதி Letters to the editor-ல் வந்துள்ளதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அக்கடிதம் குறிப்பிடும் ஹரியானாவில் தலித்துகளின் நிலை பற்றி இரு நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள அந்தச் செய்திகளின் லின்க்குகளையும் கொடுத்துள்ளேன். வாசியுங்களேன் ....



Letters to the Editor

முன் குறிப்பு:
நான் எழுதிய கடிதம் மிக அழகாக நறுக்குத் தெறித்ததுபோல் edit செய்யப்பட்டு நான்சொல்லியவிதத்தை விடவும் நன்கு சொல்லப்பட்டுள்ளது. எடிட் செய்தவருக்கு என் பாராட்டுக்கள். இதோ அக்கடிதம்:

System against Dalits

The author of the articles "A system against Dalits" (March 14) and "A Dalit temple's encounter with official India" (March 15) deserves all praise for her perseverance. She has brought to light not only the plight of Dalits of the Bibipur village but also the mentality of our sarkari babus in the Dalits' very last resort to justice — the National Commission for Scheduled Castes.

G. Sam George,
Madurai

To view the articles cited:
March 14th:"A system against Dalits"
March 15th: "A Dalit temple's encounter with official India"

பின் குறிப்பு:
நான் எழுதிய அதே நாளில் வந்த இன்னொரு கடிதமே எனக்கு மிகவும் பிடித்தது. ஆகவே அதையும் கீழே தந்துள்ளேன் உங்கள் பார்வைக்கு:

I must confess that I was one of those who protested against increased reservation for the OBCs when it was announced. But the two-part article exposes how difficult life can get for those born in a supposedly inferior class. As one aspiring to study law in the hope of making some difference to the widespread administrative malfeasance, I felt truly disheartened on reading the article.

Surely, a dual society prevails in our country — one that has an economic growth of 9 per cent and the other that is stuck in the medieval times. The article has made me realise that I must not go by popular response to the things I see. But it must also be said that it was the media that influenced my thinking that Dalits and OBCs do not deserve reservation in a "modern" society like ours. I only wish I could help and was told how to in more such articles.

Srishti C. Kalro,
Bangalore

Monday, March 05, 2007

203. நானும் பெரியாரும்

அனேகமாக எட்டிலிருந்து பத்து பன்னிரண்டு வயதிற்குள் நடந்த விஷயங்கள் இரண்டு நன்கு நினைவில் உண்டு.

முதல் விஷயம்:

மதுரை தெற்கு வாசலில் இருந்த பள்ளி வாசலுக்கு அடுத்தாற்போல் 'தர்பார் ஹோட்டல்', அதற்கு எதிர்த்தாற்போல் ஒரு ப்ராமணாள் உணவு விடுதி - பெயர் மறந்து போச்சு; ஏதோ ஒரு பெண் சாமி பெயர்; சரஸ்வதி ஹோட்டல் என்று வைத்துக் கொள்வோமே - இருந்தன. ஆடிக்கொருதடவை அம்மாவாசைக்கு ஒரு தடவை இந்த இரு உணவு விடுதிகளுக்குள் போனதுண்டு. என்ன, யாராவது ஊரிலிருந்து வீட்டுக்கு வரும் விருந்தினர் அவர்கள் ஆசைக்கு என்னைத் துணைக்கழைத்துப் போனதுதான் அதிகமாக இருந்திருக்கும். அப்போது முதலில் எனக்கு இரண்டு இடங்களிலும் உள்ள ஒரு வித்தியாசம்தான் கண்ணில் பட்டது. யாருக்கும் தண்ணீர் கொடுக்கும்போது தம்ளருக்குள் விரல் படாமல் தண்ணீர் எடுத்துக் கொடுக்கவேண்டுமென்று அம்மா சொல்லிக் கொடுத்திருக்க, இங்கே அந்த இரண்டாவது ஹோட்டலில் அந்த சுத்த பத்தம் இல்லாமல் இருந்ததும், தர்பார் ஹோட்டலில் எண்ணெய் பிசுக்கில்லாத கண்ணடி தம்ளரில் விரல் முக்காமல் தண்ணீர் தருவதும் முதல் வித்தியாசம். இரண்டாவது, தர்பார் ஹோட்டலில் பரிமாறுபவர்கள் வெள்ளைச் சீருடை அணிந்து இருப்பதும், அடுத்த ஹோட்டலில் சட்டை போடாமல் தோளில் ஒரு அழுக்குத் துண்டும், இடையில் தூக்கிக் கட்டிய அழுக்கு வேட்டியுமாக இருப்பது கூட பெரிய வித்தியாசமாகத் தோன்றியதில்லை. ஆனால் தர்பார் ஹோட்டல் பரிமாறுபவர்களை சாப்பிட வருபவர்கள் பெயர் சொல்லியோ, 'சர்வர்' என்றோ அழைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் அந்த அடுத்த ஹோட்டலில் இருப்பவரை எல்லோரும் ஒன்று போல் 'சாமி' என்றும் அழைப்பதும், ஏன் அப்படி அழைக்கிறார்கள் என்ற கேள்வியும் மனசில் எழும்பியதுண்டு.

கொஞ்சம் வயசானதும் தனியாகக் கூட இந்த இரு கடைகளுக்கும் சில முறை சென்றதுண்டு. இப்போது ஒரு பெரிய வித்தியாசத்தைப் பார்த்தேன். இப்போதெல்லாம் ப்ராமணாள் ஹோட்டலில் பரிமாறுபவரையும் எல்லோரும் 'சர்வர்' என்று கூப்பிடுவதைப் பார்த்தேன். யாரும் இப்போது 'சாமி' என்று கூப்பிடுவதில்லை.

எப்படி இந்த மாற்றம் நடந்தது என்று எனக்கு அப்போது புரியவேயில்லை.


இரண்டாவது விஷயம்:

வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த தங்கம் ஹேர்கட்டிங் சலூனுக்குத்தான் அப்பா முடிவெட்ட கூப்பிட்டுப் போவார்கள். எப்போதும் அவர்களோடு சென்றுதான் பழக்கம். முடிவெட்டுபவரின் பெயர் தங்கம். எப்போதும் வெள்ளை வெளேரென்று வேட்டி சட்டையில் இருப்பார். நல்ல கருத்த சிரித்த முகம்; சிரிக்கும்போது பளீரென்று தெரியும் பல்வரிசை. அதிர்ந்து பேசிப் பார்த்ததில்லை. அவரது கடையே கொஞ்சம் வித்தியாசம்தான். அப்போதிருந்த சலூன்கள் எல்லாவற்றிலுமே முடிவெட்ட வரும் ஆட்களை விடவும் ஓசிக்கு தலை சீவ, பத்திரிகைகள் படிக்க, அரட்டை அடிக்க என்று ஆட்கள் நிறைந்திருப்பதுதான் வழக்கம். தங்கம் கடையில் அநாவசியமான ஆட்களைப் பார்க்க முடியாது. அதோடு மற்ற சலூன்களில் அப்போதெல்லாம் சுவரே தெரியாத படி அரைகுறை ஆடையில் நிற்கும், படுத்திருக்கும், இன்னும் என்னென்னவோ செய்து கொண்டிருக்கும் பெண்களின் படங்களால் நிரப்பப் பட்டிருக்கும். தங்கம் கடையில் ஒரே ஒரு படம் மட்டும் நடுவில் மாட்டப் பட்டிருக்கும். அது யாரோ அவருடைய சொந்தக்காரர் படம் என்று நினைத்திருந்தேன். முக்கியமாக இன்னும் நினைவில் இருப்பது அவரது கடையின் உயரம். ரோட்டிலிருந்து என் உயரத்திற்கும் மேல் கடையிருக்கும். படிகள் ஏதும் இருக்காது. இரண்டு மூன்று பெரிய கற்கள் போட்டிருக்கும். முதலில் நான் போகும் போதெல்லாம் தங்கம் கீழே நிற்கும் என்னைக் கையைப் பிடித்து மேலேற்றுவார்.

ஏறக்குறைய பத்து பதினொரு வயது இருக்கும்போது முதல் முறையாக அப்பா என்னைத் தனியாக முடிவெட்ட அனுப்பினார்கள். எப்படி என்ன சொல்ல வேண்டும், எப்படி வெட்ட சொல்ல வேண்டுமென்றெல்லாம் instructions கொடுத்து அனுப்பினார்கள். அப்பா கடைக்குக் கூட்டிப் போனபோதும் சரி, இப்போது என்னென்ன சொல்ல வேண்டுமென்று சொன்னபோதும் தங்கத்தை ஒருமையில் பேசிதான் பார்த்திருக்கிறேன். அதனால் நானும் கடைக்குப் போய் முடிவெட்ட நாற்காலியில் உட்கார வைக்கப் பட்டதும் அப்பா சொன்னவைகளை நானும் தங்கத்திடம் சொன்னேன். சொல்லும்போது அப்பா மாதிரியே நானும் ஒருமையில் பேசினேன்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட பின், தங்கம் ' இப்போது எந்த வகுப்பில் படிக்கிறாய்:' என்றார். அப்போது அனேகமாக ஐந்தாம் வகுப்பில் படித்திருந்திருப்பேன். அதைச் சொன்னேன். 'இப்படித்தான் உங்க பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுதாங்களா? வயசுக்கு மூத்தவங்களை இப்படி 'வா', 'போ'ன்னு பேசலாமா?' என்றார். மண்டையில் 'நறுக்'குன்னு ஒரு கொட்டு வச்சது மாதிரி இருந்தது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர் முகத்தைப் பார்க்கவே வெட்கமாக இருந்தது. ஆனால் அவரோ இதைச் சொல்லிவிட்டு அவர் போக்கில் முடிவெட்டிவிட ஆரம்பித்திருந்தார். அவர் முன்னால் நான் குறுகிப் போனதாக அன்றும் உணர்ந்தேன்; இன்று திரும்பிப் பார்க்கும்போதும் அதை உணர்கிறேன். ஆனால், அன்றிலிருந்து தங்கத்தை மட்டுமல்ல வயதுக்கு மூத்தவர்கள் யாராக இருந்தாலும் மரியாதையோடு பேசும் பழக்கம் வந்தது.

சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் இரண்டு விஷயங்கள் புரிந்தன. தங்கத்தின் கடையின் நடுவில் பிரதானமாய் மாட்டியிருந்த படத்தில் இருந்தவர் தங்கத்தின் சொந்தக்காரர் இல்லை, அவர்தான் ஈ.வே.ரா.பெரியார் என்று தெரிந்து கொண்டேன். அது மட்டுமல்லாது, தங்கம் தனது தன்மானத்தைக் காத்துக்கொள்ள காரணமாய் இருந்தவரும், 'சாமி'களை சர்வர்களாக ஆக்கியதிற்குக் காரணமாய் இருந்தவரும் அவர்தான் என்பதும் பின்னாளில் புரிந்தது.