Saturday, November 03, 2007

240. தருமி - ஒரு நாட் இரவுக் குறிப்பு

தருமி - ஒரு நாட் இரவுக் குறிப்பு

அல்லது

தூக்கத்தில் பிறந்த பின்நவீனத்துவம் ... ?

அல்லது

ஃப்ராய்டைத்தான் கூப்பிடணும்!


நேற்று இரவு பார்த்த படம் RAINCOAT. O Henry-யின் கதைத் தழுவலாக இந்தியில் அஜய் தேவ்கன், ஐஸ்வர்யா நடித்தது. மொத்தம் ஆறே ஆறு கதாபாத்திரங்கள் - நாயகன், நாயகி, நாயகனின் அம்மா, நண்பன், நண்பனின் மனைவி, வீட்டுச் சொந்தக்காரன். இதில் நாயகனின் அம்மா, நண்பன் இருவருக்கும் இரண்டு இரண்டு வசனம் இருக்கலாம்; நண்பனின் மனனவிக்கு அரைப் பக்க வசனம் -ஆனாலும் மிகவும் அழுத்தமான, கதையின் மய்யப் புள்ளியைக் காட்டும் வசனம்; வீட்டுச் சொந்தக்காரனுக்கு ஒன்றரைப் பக்க வசனம். மீதி முக்கால்வாசிப் படம் முழுவதும் நாயகன் ஒரு நாற்காலியில் சிகரெட்டுப் பிடித்துக்கொண்டிருக்க, பக்கத்தில் ஒரு கட்டிலில் காலைக்கட்டிக் கொண்டு ஐஸ்வர்யா அமர்ந்திருக்க, இருவரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கதைப்படி காலை ஆரம்பிக்கும் கதை இரவோடு முடிகிறது. costume, sets ... இப்படி எந்தச் செலவுமில்லாமல் எடுத்த படத்தில் ஐஸ்வர்யா நடித்தது ஆச்சரியாகத்தான் இருந்தது. அவரது glamour-க்கு எந்த அவசியமுமில்லை. படத்தின் கடைசி ஐந்து நிமிடம், அதிலும் தன் நிலைமையைப் புரிந்து கொண்டதால் நண்பனின் மனைவியின் கடந்த கால நினைவுகளைப் புரிந்து கொள்ளும் நாயகன் "திருமணத்திற்குப் பிறகு நீங்கள் அவரைச் சந்தித்தீர்களா?" என்று கேட்கும் கேள்வி அழகு என்றால், அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் சொல்லும் பதிலின் ஆழம் ...

இன்னொரு பெருமூச்சு ... இப்படியெல்லாம் எப்போது தமிழ்ப் படம் வரும்? அதையும் ரசிக்கும் நிலைக்கு எப்போது நம் தமிழ் ரசிகர்கள் உயர்வார்கள்? (இது பலருக்கு உறுத்தும்; அதுமாதிரி ரசனைதான் உயர்வென்று எப்படிக் கூறப் போச்சுன்னு வந்திராதிங்க'ப்பு!)

அது போகட்டும் ...

இப்பதிவு இந்தப் படத்தைப் பற்றியதல்ல. படம் பார்த்தேன். தூங்கப் போனேன். உடனே தூங்கியும் விட்டேன். இரவெல்லாம் உடல் நன்றாகவே தூங்கியது. விழித்திருந்தது எது - அது மூளையா, மனமா - தெரியவில்லை. ஒரே ஒரு விஷயத்தைச் சுற்றிச் சுற்றி அந்த "அது" -மூளையோ, மனசோ (இனி அதை "அது" என்று சொல்லிவரப் போகிறேன்.)- தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது. அட! இயங்கி வந்ததோ என்னவோ சரிதான்; ஆனால், 'அது' இயங்கி வந்தது இரண்டே இரண்டு ஆங்கிலச் சொற்களைச் சுற்றி சுற்றிதான். allure & allude என்ற இரண்டு சொற்களைச் சுற்றிச் சுற்றியே 'அது' வந்ததுதான் ஏனென்று தெரியவில்லை. இந்த இரு வார்த்தைகளுமே பார்த்த படத்துக்கோ முந்திய பகலில் நடந்த நிகழ்வு எதற்குமோ தொடர்பில்லா வார்த்தைகள். பின் ஏன் இந்த இரு வார்த்தைகளை மட்டும் 'அது' சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்?

allure = The power to attract through personal charm
allude = Make a more or less disguised reference to


இதிலும் பல கனவுலகத்திற்கேயான பல பின்புலங்களில் இந்த வார்த்தைகளை, அதன் பொருளைத் தேடித் தேடி 'அது' போகின்றது. காடு, மேடு, மலைமுகடு என பல இடங்களில் சஞ்சரித்ததாகத் தோன்றியது. இரு சொற்களுக்குமே பொருள் எனக்கு /அதற்கு (?) நன்கு தெரியும். இருப்பினும் கனவா அல்லது நனவா அதில் நான் பொருள்தேடி அலைகிறேன். முதல் சொல்லுக்குப் பொருளும் அந்தச் சொல்லை வைத்து வாக்கியங்களும் அமைக்கிறேன். இரண்டாவது சொல்லுக்குப் பொருள் சொல்கிறேன். ஆனால் 'எதுவோ' அதை மறுக்கிறது. அச்சொல்லை வைத்து வாக்கியம் அமைக்க முயலாது தடுமாறுகிறேன். அந்தக் கோபத்தில் ஒரு மலையுச்சியில் இருந்து எதையோ ஓங்கி உதைத்துத் தள்ளுகிறேன். அனேகமாக நான் உதைப்பது அந்த வார்த்தை 'allude'- யைத்தான் என்று நினைக்கிறேன். நான் மலை முகட்டுக்கு இந்தப் பக்கமிருந்து உதைக்க அந்தப் பக்கம் போய் அது விழுகிறது. மலைமுகடு பனிபடர்ந்து வெள்ளை வெளேரென்று இருந்ததாக நினைவு. ஜோலி முடிந்தது என்று கைகளைத் தட்டு விட்டுக்கொண்டு திரும்புகிறேன். பின்னால் ஏதோ சத்தம். திரும்பிப் பார்த்தால் மீண்டும் 'allude'! இந்தப் போராட்டம் துவந்த யுத்தமாகவே இரவு முழுவதும் நடந்தது போல் நினைவு.

வழக்கம் போலவே 7 மணிக்கு விழிப்பு வர, இன்று தங்கமணிக்கு ட்ரைவர் வேலை பார்க்கத் தேவையில்லை என்ற நினைவு வரவும் மீண்டும் தூங்க முயன்றேன். தூங்கினேனா, இல்லை கனவுகளில் இருந்தேனா என்பது தெரியாத ஒரு நிலை. இரவில் வந்த இரு வார்த்தைகளுகே மீண்டும் வந்து விளையாட்டு காண்பித்தன. இப்போது அரைகுறைத் தூக்கம் என்பதாலோ என்னவோ இரவில் 'அது' செய்த விஷயங்கள் மீண்டும் நினைவுக்கு ஒவ்வொன்றாய் வர அதை முன்னிலிருந்து பின்னாகவும், பின்னாலிருந்து முன்னாகவும் நினைவு படுத்த முயன்றேன். ஏனோ அப்போது பின்நவீனத்துவம் என்பது மண்டைக்குள் எட்டிப் பார்த்தது. இதுதான் பின்நவீனத்துவமோ என்று ஒரு கேள்வியும், இதுதான் அது என்று ஒரு பதிலுமாக ஒரு சேரத் தோன்றியது.

* இப்படி யாருக்காவது வெறும் வார்த்தைகள் - வார்த்தைகள் மட்டுமே - கனவில் வந்திருக்கின்றதா?

* முன்பின் தொடர்பில்லாமல் இரு வார்த்தைகள் கனவில் வந்து வதைத்ததேன்?

* அதுவும் why did allude elude so much?


*** பின்குறிப்பு: இப்பதிவை சுகுணாவோ, அய்யனாரோ அவர்கள் நடையில் எழுதியிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும் என்று தோன்றுகிறது - சீரியசாத்தான் சொல்கிறேன்!

40 comments:

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

நான் ஒருமுறை (ஆத்திகத்தை விட்டு சிறிதே விலகிக் கொண்டிருந்த நேரம்) சிதம்பரம் நடராஜர் கோவில் சென்றிருந்தேன். உள்ளே, கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தபோது, ஏதோ பூஜைக்காக பலவித வாத்தியங்களையும் வாசித்துக் கொண்டிருந்தார்கள். அந்த ஒலி மனதில் உண்டாக்கும் உணர்வுகளை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். நான் சற்றே திறந்த விழிகளுடன், 'ஓம் நமசிவாய' என்று மனதில் சொல்லிக் கொண்டே வலம் வந்தவாறிருந்தேன். முடித்த போது நான் உச்சரித்துக் கொண்டிருந்தது 'எக்சிஸ்டென்ஷியலிசம் எக்சிஸ்டென்ஷியலிசம் ' என்று. எப்படி, எப்போது ஓம் நமசிவாய-விலிருந்து எக்சிஸ்டென்ஷியலிசத்துக்கு வந்தேன் என்று யோசித்துப் பார்த்தும் ஒன்றும் விளங்கவில்லை. :)

Ayyanar Viswanath said...

இதுவும் நல்லாதாங்க இருக்கு ..இதென்ன அநியாயத்துக்கு எல்லாரும்(கதிர்,உஷாராமச்சந்திரன்..) குறிப்புகளை எழுத தொடங்கினா நாங்கலாம் எங்க போறது :)

ரெயின் கோட படம் பற்றிய தகவலுக்கு நன்றி இங்கமர் பெர்க்மென் இந்த மாதிரி ஒரு படம் பண்ணியிருப்பார் மொத்த படமும் காலைல தொடங்கி மாலைல முடிஞ்சிடும் (வைல்ட் ஸ்டாபெர்ரிஸ்)
அதே மாதிரி கேமிராவ ஒரே இடத்தில வைத்தே மொத்த படத்தையும் எடுத்திருப்பாங்க ( ஹிட்ச்காக்கின் த ரோப்)..இப்பலாம் பெருமூச்சு விடுறத நிறுத்தியாச்சி :)

இரண்டு குறிப்பிட்ட வார்த்தைகள் மட்டும் மண்டைக்குள்ள சுழன்றபடியே இருக்கும் சிக்கல் எல்லாருக்கும் வர்ரதுதான்...ஃப்ராய்ட் என்ன தியரி வச்சிருக்காருனு தெரியல ..எனக்கு தெரிந்தவரை நம் அணுகுமுறைகள் வேறொரு தளம் நோக்கி போகும்போது இயல்பாகவே கண்ணில் படும் புதிய வார்த்தைகள் மீது ஒரு கவர்ச்சி இருக்கும் அந்த கவர்ச்சியோட நீட்டிப்புதான் நம்ம விடாம அலைக்கழித்தபடி இருக்கும்
உதாரணத்துக்கு இந்த அல்லது,இருக்கலாம், ஸ்லாஷ் போட்டு எழுதுவது மூலமா நாம் நம்பும் பன்முகத் தன்மையை வெளிக்காட்டி கொள்வது..சொல்லப்போனா நம்மால் எழுதப்படும் எல்லா சொற்களுமே நம்ம வெளிப்படுத்தும் ஒன்றாகத்தான் இருக்க முடியும்..

வேற மாதிரி யோசிச்சா தூங்க போறதுக்கு முன்னால இது போன்ற படங்கள் பார்த்தா இப்படித்தான் ஆகும் :)

தருமி said...

வித்யாசாகரன்,
//ஆத்திகத்தை விட்டு சிறிதே விலகிக் கொண்டிருந்த நேரம்..//
இப்போது உள்ள "தூரம்" என்ன?

தருமி said...

தூங்க போறதுக்கு முன்னால இது போன்ற படங்கள் பார்த்தா இப்படித்தான் ஆகும் //

இருக்கும் .. இருக்கும்..!

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

ரொம்ப தூரம் வந்துட்டேன்னுதான் நினைக்கிறேன். :)
அதாவது நாத்திகன்னு நண்பர்கள் மத்தியில வெளிப்படுத்திக்கொள்ளுமளவுக்கு. என்னுடைய ப்ரொஃபைல்ல அப்படின்னு போட்டுக்கறேன். வீட்டுல இன்னும் தெரியாது. மறுபடியுமான்னு நொந்துடுவாங்க. பள்ளிக் காலத்துல கொஞ்ச வருஷம் தீவிரமா இருந்தேன். அதுக்கப்புறம் ரொம்பத் தீவிரமா நம்பிக்கை பின்னாடி அலைஞ்சுட்டு இப்போ ரெண்டு வருஷமா மறுபடி நான் நான்-பிலீவர். :)
மறுபடி மதம் பிடிக்காது.

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

http://vidyasa.blogspot.com/2006/03/blog-post.html

ஜமாலன் said...

இரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள அர்த்தம் உங்களது
//costume, sets ... இப்படி எந்தச் செலவுமில்லாமல் எடுத்த படத்தில் ஐஸ்வர்யா நடித்தது ஆச்சரியாகத்தான் இருந்தது. அவரது glamour-க்கு எந்த அவசியமுமில்லை.//
இவ்வாக்கியத்தில் வரும் ஐஸ்வர்யாவின் galmour-ன்மையால் வந்ததுதான். an attractive or tempting quality உள்ள ஐஸ் without giving a precise name or explicit identification ல் படத்தில் காணப்பட்டதால் ஏற்பட்ட முரண்.

இரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள மற்ற இரு அர்த்தங்கள் கீழே.

allure:highly attractive quality: an attractive or tempting quality

allude:mention indirectly: to refer to something or somebody indirectly, without giving a precise name or explicit identification

பிராய்டு கனவுகளை நினைவிலியின் ராஜபாட்டை என்கிறார். இதனை பொறுத்திப்பார்த்தால் கனவின் விளக்கம் உங்களுக்குப் புரியக்கூடும்.

கனவு என்பது மொழிபோல கட்டமைக்ப்பட்டிருக்கும் நினைவிலியின் வெளிப்பாடு. அது உருவமாகவோ வார்த்தையாகவோ குறியீடாக வரலாம். நினைவு மனத்தால் அழுத்தப்பட்ட வேட்கை நினைவிலியிருந்து ஆற்றலின் உள் அழுத்தததால் வெளிப்படும் ஒரு வடிவம் கனவு. கனவிற்கு ஒவ்வொரு மதமும் ஒரு பலன் வைத்திருக்கிறது. பொதுவாக கனவில் வரும் பாம்ப ஆண்குறி வேடகையையும். நீர் பணவெட்கையையும் குறிக்கும் என்கிறார்கள். நீங்கள் வார்ததைகளுடன் உறவு கொண்டிருப்பதால் வார்ததையாக வந்துவிட்டது போலிருக்கிறது.

அவ்வளவு ஆராய்ச்சி தேவையில்லை எனில்.. "தூக்கத்தில் பிறந்த பின்நவீனத்துவம் ... ?" என்றும் வைத்துக் கொள்ளலாம்.

இதனை ஒரு நகைச்சுவை மாதிரியான பின்னோட்டமாக கருதிக் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும். அல்லது தமிழ்மணம் இன்ற சுவராஸ்யமாக இல்லை என்றும் நீங்கள் எண்ணிக் கொள்ளலாம்.

G.Ragavan said...

கையக் குடுங்க சார். எதுக்குன்னா....இந்தக் கனவுகளுக்கும் எனக்கும் ரொம்பவும் நெருக்கம். இந்தச் சொற்கள் இப்பிடியெல்லாம் வந்து படுத்தியிருக்கு. சொற்கள் மட்டுமில்ல. சமயத்துல சொற்றொடர்களும். பாட்டும். ஒரு குறிப்பிட்ட இசைக்கோர்வையும். இன்னும் சொல்லப் போனா.... ஒரு குறிப்பிட்ட நினைவும். அதாவது கனவுலயும் வரும் நினைவு. முந்தியெல்லாம் கண்ட கனவை தெனமும் நண்பர்களோட மெயில்ல பகுந்துக்கிறுவேன். இப்ப நேரமின்மையால கொறஞ்சு போச்சு. இதுல பாருங்க... கனவுலயே..இது கனவு..நாளைக்கு இத நெனவு வெச்சி மெயில் அனுப்பனும்னு வேற தோணும். இதுக்கெல்லாம் குண்டக்க மண்டக்கன்னா எதுவும் பேரு வெச்சிறாதீங்க சாமிகளா.... :))))))))
பெண்ணைப் பெற்றவன் அப்படீங்குற கதையே...கனவுல நடிகர் திலகம் வந்து சொன்னதுதானே. பாதி ராத்திரியில எந்திரிச்சி உக்காந்து எழுதுனேன்.

ரெயின்கோட் பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். ஆனா பார்த்ததில்லை. Singing in the rain படம் பார்த்திருக்கீங்களா? இல்லைன்னா பாருங்க. ஒங்களுக்குப் பிடிக்கும். வங்காளப் படங்கள் ஒங்களுக்குக் கிடைக்கும்னா...நான் பரிந்துரைக்கிறது பஞ்சரமேர் பகான் (bancharam-er bagan). கன்னடத்துல பூதய்யனு மக ஐயூ.

இலவசக்கொத்தனார் said...

ஒரு ஒற்றை விரல் சுழட்டல் உண்டா, ஒரு பஞ்ச் டயலாக் உண்டா, ஒரு அம்மா /அக்கா செண்டிமெண்ட் டயலாக் உண்டா, வெளிநாடு சென்று அரைகுறை ஆடைகளில் நடுரோட்டிலோ மரத்தைச் சுத்தியோ ஆடும் ஆட்டங்கள் உண்டா, ஒரு பாடலில் நாட்டைத் திருத்தும் நிகழ்வுதான் உண்டா? இதெல்லாம் இல்லாமல் ஒரு படம், அதைப் பார்த்து ஒரு பெருமூச்சு!! என்னத்த சொல்ல!!

போகட்டும், நான் பின்னூட்டமிட வந்தது அப்படத்தைப் பற்றி அல்ல.(அப்புறம் எதுக்குடா இம்புட்டு நேரம் அதைப் பத்தி பேசின எனக் கேட்டால் நான் இனவெறி எனக் கூவவேண்டியது வரும்!)

கனவுகள் - ஒரு சுவாரசியமான மேட்டர். என்ன காலையில் எழுந்தால் பாதிக்கும் மேல் மறந்து விடுகிறது. ஆனாலும் கனவு காண்பது சுவாரசியமான ஒரு விஷயம். சொற்றொடர்கள் வந்து படுத்தியதாய் ஞாபகம் இல்லை. நீங்கள் பார்த்த படம் போல், நான் பார்க்கும் படம் போல் வித்தியாசமாக முழு நீளக் கனவுகள் வந்ததுண்டு. சில நேரங்களில் துண்டு துண்டாக ஒன்றோடொண்டு சம்பந்தப்படாத பிட்களும் உண்டு. கனவு முடிவதற்காகவே துயில்கலையாமல் படுத்த நாட்களும் உண்டு.

காலை உணவை சுவாரசியமாக்க இரவில் கண்ட கனவைப் பற்றி மகனோடு பேசும் வழக்கம் உண்டு. அப்பொழுது விரைவில் உணவு வாய்க்குள் செல்ல வேண்டும் என்பதற்காக வராத கனவுவைப் பற்றி வண்டி வண்டியாய் பேசுவதும் உண்டு.

கனவே கலையாதே.., கனவு காணும் வாழ்க்கை யாவும்....., கனாக் காணும் கண்கள் மெல்ல.... எல்லாம் பிடித்த பாடல்கள்!

தருமி said...

வித்யாசாகரன்,

ஊஞ்சல் மீண்டும் பின்னுக்கும் போகலாம் என்கிறீர்களோ? ஊஞ்சலில் இருந்தால் இது ஒரு அசெளகரியம்... இருந்த இடத்திலேதான் ஆட்டம். :(

தருமி said...

ஜமலன்,
ம்ம்..ம்
சும்மா சொல்லக் கூடாது. ஷெர்லாக் ஹோம்ஸ்தான் நீங்கள். எப்படி இப்படி ஒரு முடிச்சு கண்டுபிடித்தீர்கள்...?

நன்றி.

தருமி said...

ஜிரா,
நல்ல வேளை .. நம்மள மாதிரி 'கேசு'கள் இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டதில ஒரு சந்தோஷம்.

//பெண்ணைப் பெற்றவன் அப்படீங்குற கதையே...கனவுல நடிகர் திலகம் வந்து சொன்னதுதானே.//
அடப் பாவி மனுஷா! அந்த அளவுக்குப் போயிரிச்சா? அதுவும் அவரே வந்திருக்கார் .. ம்.. கொடுத்த வச்ச மனுஷந்தானய்யா ..! இன்னும் யார் யார் வந்து கதை சொல்றாங்கன்னு எனக்கு மட்டுமாவது சொல்லுங்களேன். :)

ஜமாலன் said...

நல்லவேளை சாம்பு என்றொ சங்கர்லார் என்றோ கணேஷ் வசந்த் என்றோ சொல்லாமல் போனீர்கள்.

தருமி said...

கொத்ஸ்,
//நான் இனவெறி எனக் கூவவேண்டியது வரும்//
பிடிபடலையே .. தெரியும்ல நான் ஒரு மொடாக்கு அப்டின்னு!

நீங்க சொன்ன பாட்டுல இரண்டாவதும் மூணாவதும் அவரவர்கள் குரலுக்காகவே கேட்கலாமே. ரெண்டுமே ரத்தினங்கள்தான்.

பையனிடம் இப்ப நீங்க ரீல் சுத்துங்க .. பொறவாட்டி அவன் உங்ககிட்ட -to his old man! - சுத்துவான். இல்ல .. நினச்சுப் பாருங்க, சந்தோஷமா இருக்கில்ல ..

தருமி said...

ஜமாலன்,
சொல்றதை ஒரிஜினல் பாத்திரத்தோடு சொல்லிருவோமேன்னுதான் .. மற்றதெல்லாம் வழித்தோன்றல்கள்தானே. இல்லியா?

jeevagv said...

சார்,
தூக்கத்திலிருந்து எழுதுவது எப்படி - என்கிற தலைப்பில் மணிமேகலை பிரசுரத்தில் இன்னமும் புத்தகம் ஏதும் வெளியிடலையாம்! - உங்களை கூப்பிடுகிறார்களாம். :-)

allure செய்யும் ஒருவராக எதிர்பார்த்த நடிகை allure ்ச்செய்யாமல் உங்களை allude செய்ததினாலா?

allude & allure இரண்டும் ஒரே ஓசை் நயத்துடன் வருவதால் எளிதில் அடிமனதில் எப்போதாவது தங்கி இருக்கலாம்். கனவுக்கு அன்றைய முன்னாள் நிகழ்வுகள் தான் காரணம் என்றில்லையே. எத்தனையோ நாட்களுக்கு முன்னால் நடந்ததும் நம் நினைவில் இருந்து மறைந்ததும் காரணமாக இருக்கலாம். அது subconscious மனதின் தேடலின் விளைவு.

தூங்கிப்பின் காலை எழுந்தவுடன் conscious மனதால் புரிந்து கொள்ள முடிந்த கனவுகள் மட்டுமே நம் நினைவில் நிற்கின்றன. ஒப்புமையால் அதானால் புரிந்து கொள்ள இயலாத கனவுகள் நம் நினைவுக்கு வருவதற்கு முன்பாகவே புறந்தள்ளப் படுகின்றன. நமது consciousness ்மமட்டும் ஞானிகள் சொல்லும் super consciousness என வளர்ச்சி அடைந்திருந்தால், எல்லா கனவுகளின் பொருளையும் உணர்ந்து கொள்ள முடியுமோ என்னவோ.

Unknown said...

பார்ட்னர்,

ரெயின்கோட் படம் இயல்பான கதை மாதிரி தெரியுது.நேற்று மாயக்கண்ணாடி பார்த்தேன்.ரொம்ப இயல்பா எடுத்திருக்காங்க.எந்த மிகைப்படுத்தலும் இல்லை.

கதாநாயகனுக்கு இருக்கும் ஹாலோவை தமிழ்படங்களில் பாரதிராஜா,பாக்கியராஜ் மாதிரி சிலர் உடைச்சிருக்காங்க.

எல்லா ரசனைக்கும் தமிழில் இடம் இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.'நல்ல ரசனை' படங்கள் வரும் அதே சமயத்தில் 'கெட்ட ரசனை:)' படங்களும் வரட்டும்.ஒரே மாதிரி படங்களா எடுத்துகிட்டிருந்தா அந்த திரையுலகத்தில் வெரைட்டியே இல்லாம போயிடும்.

தருமி said...

ஜீவ்ஸ்,
வேணாங்க .. நூறு வயது வரை வாழ்வதெப்படி? அப்டின்னு ஒரு நூல் எழுதின கொஞ்ச நாள்ல ஆசிரியர் தமிழ்வாணன் அகால மரணமடைஞ்சது நினைவுக்கு வருது. நான் அப்படி ஒரு புத்தகம் எழுதினால் அப்புறம் எனக்கு கனவே வராமல் போய்ட்டா ... ?

ஐஸ்வர்யா விஷயம் நீங்க சொல்றதும் சரியாத் தெரியுது. ஆனால் அதோட //கனவுக்கு அன்றைய முன்னாள் நிகழ்வுகள் தான் காரணம் என்றில்லையே.// இது ரொம்ப பொருத்தமா இருக்கு.

கதிர் said...

தூக்கத்திலும் பிறழும் பின்நவீனத்துவம். இதிலிருந்து பிறழ்ந்த வாக்கியங்களே பின்நவீனத்துவம்னு சொல்ல வர்றீங்களா?.
ஒருமுறை துபாய்க்கு வாங்க மந்திரிச்சி விட்டுடலாம். கைவசம் தகடு எடுக்கற ஒருத்தர் இருக்கார். வைக்கறதும் எடுக்கறதும் அவருக்கு கைவந்த கலை. :)

தருமி said...

பார்ட்னர்,
//ஒரே மாதிரி படங்களா எடுத்துகிட்டிருந்தா அந்த திரையுலகத்தில் வெரைட்டியே இல்லாம போயிடும்.//

நானும் அதேதான் சொல்றேங்க.

சிவாஜியையும்,கில்லியையும், மலைக்கோட்டையையும் மட்டும்தான் நாங்க ஆதரிச்சி ஓட வைப்போம்னு நம்ம தமிழ் ரசிகர்கள் இருக்காங்களேன்னுதான் சொல்றேன்.

நல்ல படங்களில் நடிக்க மாட்டோம் அப்டின்னு விரதம் காக்கிற நம் தமிழ்நாட்டு தலைமகன்களான நடிகப் பெருமக்கள் இருக்காங்களேன்னுதான் சொல்றேன்.

ஏன் இதுல்லாம் படம் இல்லையான்னு முட்டாள்தனமான படங்களுக்கு நம் படித்த ரசிகப் பெருமக்கள் 'மரியாதை' கொடுக்கிறாங்களேன்னுதான் சொல்றேங்க.

G.Ragavan said...

// தருமி said...
ஜிரா,
நல்ல வேளை .. நம்மள மாதிரி 'கேசு'கள் இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டதில ஒரு சந்தோஷம். //

என்ன சார்.. கேசு லூசுன்னு சொல்லிக்கிட்டு...அழகா...தமிழ்ல கற்றாரைக் கற்றாரே காமுறுவர்னு சொல்லிப் பாருங்க.....எங்கயோ போயிருவோம்ல :))))))

////பெண்ணைப் பெற்றவன் அப்படீங்குற கதையே...கனவுல நடிகர் திலகம் வந்து சொன்னதுதானே.//
அடப் பாவி மனுஷா! அந்த அளவுக்குப் போயிரிச்சா? அதுவும் அவரே வந்திருக்கார் .. ம்.. கொடுத்த வச்ச மனுஷந்தானய்யா ..! இன்னும் யார் யார் வந்து கதை சொல்றாங்கன்னு எனக்கு மட்டுமாவது சொல்லுங்களேன். :) //

ஆகா... ஏதோ சொல்ல முடிஞ்சதச் சொல்லீட்டேன். நீங்க வில்லங்கத்துல மாட்டி விடப் பாக்குறீங்களே. ஏற்கனவே கள்ளியிலும் பால்..காதல் குளிர்னு பேரு ரிப்பேரு.

// செல்வன் said...
எல்லா ரசனைக்கும் தமிழில் இடம் இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.'நல்ல ரசனை' படங்கள் வரும் அதே சமயத்தில் 'கெட்ட ரசனை:)' படங்களும் வரட்டும்.ஒரே மாதிரி படங்களா எடுத்துகிட்டிருந்தா அந்த திரையுலகத்தில் வெரைட்டியே இல்லாம போயிடும். //

செல்வன், வெரைட்டி வேணுந்தான். கண்டிப்பா வேணுந்தான். ஆனா சோத்துக்கு ஊறுகாய்னு வெரைட்டி வெச்சா தாவலை. ஊறுகாய்க்குச் சோறுன்னு வெச்சா! அங்கதான இடிக்குது.

இலவசக்கொத்தனார் said...

//பையனிடம் இப்ப நீங்க ரீல் சுத்துங்க .. பொறவாட்டி அவன் உங்ககிட்ட -to his old man! - சுத்துவான். இல்ல .. நினச்சுப் பாருங்க, சந்தோஷமா இருக்கில்ல ..//

இப்போவே இது டூ வே டிராபிக்தான். நீங்க வேற!

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

இன்னும் ஊஞ்சலில் இல்லை என்றுதான் சொல்ல வந்தேன்.
ஆனால், சென்ற முறை மாதிரி சும்மா வசனம் பேசுவதில்லை வீட்டில்.
இந்த நம்பிக்கை சிலருக்குத் தேவைப்படுகிறது போலும். அவர்களிடம் வாதாடி என் நேரத்தை வீணாக்குவதில்லை. சில சமயம் வாதாடுவதே நம் கருத்தின் மேலான நமது சந்தேகத்தைப் போக்கத்தானோ என்று தோன்றும்.
இந்த நம்பிக்கை செய்துள்ள நல்ல காரியஙகளைக் கண்டு வியப்பதுண்டு.
ஆனால் நான் மீண்டும் அங்கு செல்வேனென்று தோன்றவில்லை.

அவ்வப்பொழுது யாராவது கல்கி சாமியார் போல வந்து கொண்டிருந்தால் போதும், இந்த உறுதி குலையாமலிருக்கும். சும்மா விளையாட்டுக்கு! :)

தருமி said...

//இந்த நம்பிக்கை செய்துள்ள நல்ல காரியஙகளைக் கண்டு வியப்பதுண்டு. //

மிகவும் சரியான வியப்புதான்.
தன்னம்பிக்கை கிடைப்பதற்கு 'சாமி' பயம் மிக அவசியம்தான்.

cheena (சீனா) said...

நம்ம சிற்றறிவுக்கு கொஞ்சம் அப்பாற்பட்ட விசயம் போலெ இருக்கு - கிளான்ஸ் வுட்டுட்டு வந்துட்டேன் - sorry

துளசி கோபால் said...

கையைக் கொடுங்க இப்படி.
முதலில் 'காலாயிரத்துக்கு' வாழ்த்து(க்)கள்.


சொற்கள் இப்படிப் பலநாள் வந்து மனசைச் சுத்திக்கிட்டு இருந்துருக்கு.

வெளியே சொன்னால் 'வேற லிஸ்ட்'டில் சேர்த்துருவாங்கன்னு 'மூச்சு'விடலை.

இப்பத்தெரிஞ்சுபோச்சு, நான் 'தனியா இல்லைன்னு:-))))

ramachandranusha(உஷா) said...

தருமி ஐயா, முதலில் உங்களுக்கு ஹிந்தி இவ்வளவு தெரியுமா புரியுமா :-) ரெயின் கோட் மொழி
புரியாததால் என்னால் ரசிக்க இயலவில்லை. ஜெயகாந்தனின் பிரபல நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற படம், அதற்கு குறையாக வைக்கப்பட்ட விமர்சனம், படம் முழுக்க நாயகனும், நாயகியும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் என்று. பொது ரசனை என்று உண்டு,
சிவாஜி ஓட அதுதான் காரணம். நான் பார்த்துவிட்டு, எந்த... க்கு இந்த படம் இப்படி ஓடுகிறது என்று
புலம்பிக் கொண்டு இருக்கிறேன்.

பி.கு //*** பின்குறிப்பு: இப்பதிவை சுகுணாவோ, அய்யனாரோ அவர்கள் நடையில் எழுதியிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும் என்று தோன்றுகிறது - சீரியசாத்தான் சொல்கிறேன்// ஏன் இப்படி
பயமுறுத்துறீங்க :-)

வல்லிசிம்ஹன் said...

தருமி சார்,
சினிமாக்கள் ராத்திரித் தூக்கத்தில் விளளயாடுவது உண்டு.
வார்த்தைகள் தூக்கத்தில் வந்ததில்லை. நினைவில் நனவில் சுற்றி வரும்.
கொஞ்ச நாட்களுக்கு அந்த வார்த்தையே நிறைய புழங்குவேன்.

in this ,maybe alluring aAishvarya was alluding to something different ,other than her glamour:)
and that have made you wonder and wander in the sleep.....

ஜமாலன் said...

//ஒருமுறை துபாய்க்கு வாங்க மந்திரிச்சி விட்டுடலாம். கைவசம் தகடு எடுக்கற ஒருத்தர் இருக்கார். வைக்கறதும் எடுக்கறதும் அவருக்கு கைவந்த கலை.//

தம்பி கமிஷன் எதாவது இருந்தா கொஞ்சம்பேர அங்க அனுப்பி வைக்கலாம். இல்லாட்டா அந்நத மோடி மஸ்தான ஒரு பதிவு போடச் சொல்லுங்களேன்.

தருமி said...

தம்பி,
நானென்னவோ 'பிறந்த' அப்டின்னுதானே எழுதியிருக்கேன். நீங்களா ஒரு ‘ழ’வைச் சேர்த்துக்கிறதா?

//கைவசம் தகடு எடுக்கற ஒருத்தர் இருக்கார்.//
அய்யனாரப்பா! காப்பாத்துப்பா .. இங்க ஒருத்தர் என்ன மாட்டிவிடப் பார்க்குறாரு ...

தருமி said...

சீனா,
என்ன இப்படி சொல்லிட்டீங்க ..

தருமி said...

துளசி,

இன்னும் கொஞ்ச நாள் போய் கை குடுக்கிறேன். தவறுதலா ஒரு பத்தைக் கூட்டி முதலில் டைப்பிட்டேன்!

அட! இங்கேயே நீங்க, நான், ஜிரா மூணுபேர் சேர்ந்திட்டோமே! அப்போ இது ஒண்ணும் unique இல்லைன்னு தெரியுது, அதுவரைக்கும் சந்தோஷம்தான்.

தருமி said...

உஷா,
//உங்களுக்கு ஹிந்தி இவ்வளவு தெரியுமா புரியுமா //

ஹி .. ஹி.. தமிழ்ப்படம் தவிர மற்ற எல்லா மொழிப்படத்திலேயும் சப்-டைட்டில் இருக்குமில்ல ..அத வச்சி புரிஞ்சிக்கிறதுதான். இல்லன்னா எனக்கெல்லாம் இந்தி, இங்கிலீசு எல்லாம் எப்படி புரியும், சொல்லுங்க.

//எந்த... க்கு இந்த படம் இப்படி ஓடுகிறது என்று
புலம்பிக் கொண்டு இருக்கிறேன்.//

இந்த ...க்காகத்தான் நான் இன்னும் பார்க்கலை! ஒரு நாள் இன்னைக்கி போயிடறதுன்னு துணிஞ்சி முடிவெடுத்திருந்தேன். அன்னைக்கிப் பார்த்துதானா அந்தப் பாட்டைப் டிவியில் பார்த்து தொலைக்கணும். ஒரு புல்லட் வரும். தலைவர் பாடியே அதை நிக்க வச்சி, ஒரு கண்ணாடி தம்ளருக்குள்ள விழ வைப்பாரே அதைப் பார்த்ததும், படம் பார்க்கணும்கிற ஆசையே புசுக்குன்னு போயிரிச்சி.

நல்ல 'சகாப்தங்கள்' நமக்குன்னு கிடைக்குது பாருங்க !

தருமி said...

வல்லிசிம்ஹன்,
உங்கள் விளக்கம் நல்லாத்தான் இருக்கு. பேசாம ஐஸ்வர்யாவே வந்திருக்கலாம் :)
யாருக்கும் இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்க மாட்டேன்.

ஆடுமாடு said...

தருமி ஐயா, வணக்கம். ரெயின்கோட் சூப்பர் படம். மனதுக்குள் நடக்கும் உள்ளே வெளியே தான் படத்தின் ஒரு வரி கதை. இதை வேறுவிதமாகவும் சொல்லலாம். படத்தில் ஐஸ்வர்யாவின் வீடு உட்பட பல விஷயங்கள் நம்ப முடியாத செட்.
அப்புறம் உங்க allure and allude விஷயம் எனக்கு புரியவில்லை.
ஜமாலன் ஐயா சொன்னதற்கு என் பங்குக்கும் சில விளக்கம்.
//கனவு என்பது மொழிபோல கட்டமைக்கப்பட்டிருக்கும் நினைவிலியின் வெளிப்பாடு//
ஆமா. கனவு என்பது ஆழ்மன உணர்வின் வெளிப்பாடு. இதில் மூன்று விஷயங்கள் இருக்கிறது. ஈகோ, இட் ஈகோ, சூப்பர் ஈகோ. இது மூன்றும்தான் கனவுகளை கொண்டும் வரும் காரணிகள். அந்தந்த தன்மைக்கு ஏற்ப கனவுகளின் ரேஸியோ ஏறும் என்று எங்கோ படித்த நினைவு.

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

//மிகவும் சரியான வியப்புதான்.
தன்னம்பிக்கை கிடைப்பதற்கு 'சாமி' பயம் மிக அவசியம்தான். //
புரியுது! :)
நான் சொல்ல வந்தது கலை, அழகுணர்ச்சி தொடர்பான விஷயங்களையும், அப்புறம் தத்துவ விவாதங்களில் ஈடுபடாமல் அன்றாட வாழ்க்கையில் போராடும் மக்களுக்கான எளிதில் கவலையை மறக்கக் கிடைத்த கடவுள் என்ற போதை மருந்து அல்லது மறக்கடிக்கும் மருந்து பற்றியும்.

cheena (சீனா) said...

ஆனந்த விகடனின் வரவேற்பறையில் தங்களின் வலைப்பூ வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள்.

delphine said...

CONGRATS Dharumi Sir!
So Ananda Vikatan got allured by your writing! Keep going !!!

தருமி said...

நன்றி சீனா. முதல் முதலில் தொலைபேசியில் வாழ்த்தியதற்கும் சேர்த்தே!

தருமி said...

hi doc
that is a nice shot!
thanks

Post a Comment