*
சினிமாப் பாடல்களில் அந்தக் காலத்தில் குரலுக்குத்தான் முதலிடமா இருந்திருக்கு(தி.பாகவதர் காலம்); பொறவாட்டி ரெண்டும் சேர்ந்து இருந்தாலும் வார்த்தைகள் தெளிவா தெரிந்த காலம் (மெல்லிசை மன்னர் காலம்); கொஞ்சம் இசைக்கருவிகள் அதிக இடம் பெற்ற காலம்(ராசா); ஆனா இப்போ இசைக்கருவிகளின் பிரளயத்தில் வார்த்தைகளை முயற்சித்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியுது.சிலசமயம் கண்டே பிடிக்க முடிவதில்லை. அதிலும் ஆண்குரல்களை ஓரளவு கண்டுபிடிக்க முடிந்தாலும் பெண்குரல்களைக் கண்டுபிடிப்பது மிக சிரமமாயிருக்கிறது.
உதாரணமா, நான் அவனில்லை படத்தில் பெண்பாடகி (சாதனா சர்க்கம்??) பாடும் -
ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்னாச்சு? - இந்த வரிகளைக் கடைசி வரை நானாகக் கண்டுபிடிக்க முடிந்ததில்லை!
ஏன் பெண்குரல்களில் ஆண்குரல்களில் போல் எளிதாக சொற்களைக் கண்டுபிடிக்க முடிவதில்லை?
****************************************உதித் நாராயணன் என்று ஒன்று இருக்கிறதே .. அதைத் தமிழ்ப்படங்களில் பாட அழைத்துவந்த மகானுபவன் யாருங்க? ரஹ்மானா?
அழைத்து வந்தாச்சு; அதுவும் ஒண்ணு ரெண்டு பாடிரிச்சி; "பருவா இல்லை". ஆனால் அதோடு விடாம இன்னும் ஏன் அதைப் பாடவைத்து நம்ம கழுத்தை அறுக்கிறாங்க எல்லோருமா சேர்ந்து. அப்படி என்ன நம் தமிழ் இசை இயக்குனர்களுக்கு நம்மேல் கோவம்; 'அது' மேல் அப்படி ஒரு பாசம்?
**************************************** escalator = தமிழில் தானிப்படி என்று வச்சுக்குவோமா? என் கேள்வி அது அல்ல. உசரமா நம்மைத் தூக்கிட்டு போற படிக்கட்டை escalator அப்டின்றோம். ஆனால் சம தளத்தில் தானாக நகர்ந்து நம்மை 'முன்னேற்றுகிறதே' அந்தவகை தானியங்கிகளுக்கு ஆங்கிலத்தில் என்ன பேருங்க?
****************************************முந்தியெல்லாம் இவ்வளவு கிடையாதே .. ஏன் இப்போவெல்லாம் என் கிட்ட பணம் கொட்டிக் கிடக்குது; அத உனக்குத் தந்தே ஆகணும்; உன் விவரத்தை ரகசியமா அனுப்பு அப்டின்றமாதிரி மயில்கள் தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கு. கோஃபி அன்னன் பெயர்லகூட ஒண்ணு வந்துச்சி. ஒருவேளை ஏமார்ரவங்க நிறைய ஆகிட்டாங்களோ? இந்த மாதிரி மயில்கள் வர்ரது (அதாவது, ரொம்ப பேர் ஈனா வானாக்கள் இங்க அதிகம்னு நினச்சி..)நம்ம ஊர்ல மட்டும் நிறையவா இல்ல, இது ஒரு அகில உலக நிகழ்வா?
****************************************அமைச்சரே! மாதம் மும்மாரி மழை பெய்கிறதா? அப்டின்னு ராசா கேக்கிறதுமாதிரி நிறைய நாடகங்களில் ...சினிமாக்களில்... கதைகளில் ... ராசா என்ன கூட்டுப் புழுவாகவா இருந்திருப்பார். ஊர்ல நாட்ல மழை பெஞ்சா ராசாவுக்குத் தெரியாமலா போய்விடும்?
யாரோ எப்பவோ எழுதி அது இன்னமும் தொடருதோ? என்ன கொடுமை சரவணன் இது?
****************************************