Sunday, November 16, 2008

273. மீண்டும் - வந்தனம்..வந்தனம்...மகா ஜனங்களுக்கு வந்தனம்

*

*

24.04.2005-ல் முதல் பதிவு; நம் தமிழ்மணப் பதிவுலகத்தின் 465-வது netizen என்று நினைக்கிறேன். 02.10.2005-ல் 78 வது பதிவு -- 78.வந்தனம்..வந்தனம்...மகா ஜனங்களுக்கு வந்தனம். -- முதல் முறை நட்சத்திரமாக ஆனதும் இட்ட பதிவு. அதனால் அதே தலைப்பு இன்றும்.


அந்த முறை நட்சத்திரமானது மிகவும் கிளர்ச்சியாயிருந்தது உண்மை. இந்த முறை மறுபடியும் நட்சத்திரமானது நிச்சயமாக முதல் முறை கொடுத்த அளவிற்குக் கிளர்ச்சியைக் கொடுக்கவில்லை என்றாலும் மிக்க மகிழ்ச்சியே. இம்முறை முதல்முறை இல்லாத சிறிது தயக்கமும் சேர்ந்து கொண்டது. முதல்முறை ஆசை ஆசையாய் மகிழ்ச்சியோடு மதியிடமிருந்து வந்த மயிலை வாசித்து மகிழ்ந்ததுபோல் இப்போது இல்லைதான். அதோடு முதல்முறை ஏதோ நான் நன்றாக எழுதுவதால் என்னைத் தேடி அந்த பெருமை வந்ததாக நினைத்தது மாதிரி இப்போது என்னால் நினைத்துக் கொள்ள முடியவில்லை. இருந்திருந்து எதற்காக எனக்குக் கொடுத்திருப்பார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றியது; தோன்றுகிறது. முதலில் கொஞ்சம் தயக்கமிருந்தாலும் 'சரி, பதிவர்களின் தலைவிதி' என்று நினைத்துக் கொண்டு சம்மதித்தேன். அதோடு எனக்கே ஒரு சந்தேகம் வந்து விட்டது என் மீதே!


பதிவெழுத ஆரம்பித்தபோது என்ன எழுதிவிடப் போகிறோம் என்று நினைத்து ஆரம்பித்தாலும் அதன் பின் என் மனதுக்கு நிறைவான பல பதிவுகளை அந்த முதல் ஆண்டிலும் அதற்குப் பின்பும் சில காலம் வரை எழுதியதாகத் தோன்றியது. இன்றும் அப்படித்தான் பழைய என் பதிவுகளை வாசிக்கும்போது தோன்றுகிறது. ஆனால் இப்போதெல்லாம் அதுபோன்ற பதிவுகளை என்னால் கொடுக்க முடியவில்லை என்பது கஷ்டமாயிருக்கிறது. பதிவுகளின் எண்ணிக்கை மட்டுமல்லாமல் எழுதும் விஷயங்களும் சரக்கில்லாத விஷயங்களாகவே இருந்து வருவது 'அவ்வளவுதான் சட்டியில' என்ற எண்ணத்தைத்தான் கொடுக்கிறது. 200-வது பதிவை பெனாத்தல் சுரேஷின் விமர்சனப் பதிவாக பதிவேற்றினேன். அதில் அவரும் முன்பு போல் variety-ஆக எழுதவில்லை; ஆழமாகவும் எழுதுவதில்லை என்று கூறியிருந்தார். உண்மைதான். ஆனாலும், ஏதோ முதலில் எல்லாம் பெரிய writer-ஆக இருந்ததுபோலவும் இப்போது writer's block வந்துவிட்டது போலவும் ஒரு அயர்ச்சி. இந்த அயர்ச்சியிலிருந்து ஒருவேளை வெளியே வர இந்த நட்சத்திர வாரம் ஒரு வரமாக அமைந்துவிடாதா என்ற ஒரு நப்பாசை ...

முயற்சிக்கிறேன் ... அதற்கு முன் ..

வயதானதாலோ, 'நீண்ட நெடுங்காலமாக' பதிவுலகில் இருப்பதாலோ என்னதான் முயற்சித்தாலும் பழைய கதைகளை, பழைய காலத்தைத் திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியாதெனவே தோன்றுகிறது. "எங்க காலத்திலெல்லாம் .." என்று சொல்லித்தான் ஆகவேண்டியதிருக்கிறது. இப்போதுகூட பாருங்களேன். முதல் தடவை நட்சத்திரமாக இருந்த போது பதிவுலகில் இருந்த நல்ல சில பதிவர்கள், நண்பர்கள் இப்போது பதிவுலகத்திலிருந்தே விலகி நிற்பது அல்லது முழுமையாகவே விலகி விட்டது மனதை உறுத்துகிறது. அவர்களின் எழுத்து, கருத்துக்கள் ஏனைய திறமைகள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன. ஒரு நீண்ட பட்டியலே தரலாம். பழைய பதிவுகளைத் தூசி தட்டிப் பார்க்கும்போது பின்னூட்டங்களில் வந்து தட்டிக் கொடுத்தவர்கள், தட்டிக் கேட்டவர்கள், விட்டுக் கொடுத்தவர்கள், விட்டுக் கொடுக்காதவர்கள், புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்டவர்கள், மடத்தனமாகப் பதில் சொன்னவர்கள், தேன் தடவி வார்த்தைகளைத் தந்தவர்கள், விஷம் தோய்த்த எழுத்தம்புகளை எய்தியவர்கள் என எத்தனை எத்தனை பேர். தங்கள் தனித்திறமைகளால் தனித்து நின்றவர்கள் - இப்படிப் பலர். பெயர்களைச் சொன்னால் நீநீநீ..ண்டு விடும்.

Folks, I miss you all . But ...

... men may come and men may go,
But I go on for ever -- என்று பதிவுலகம் நகர்ந்துகொண்டே, வளர்ந்து கொண்டே போகிறது -- மாற்றங்கள் மட்டுமே மாறாதவை என்பதை நினைவூட்டிக் கொண்டே.--

66 comments:

cheena (சீனா) said...

அன்பின் அண்ணன் தருமி

நட்சத்திர நல்வாழ்த்துகள்

மீண்டும் வருவேன்

இது மீ த பர்ஸ்டுக்காக

துளசி கோபால் said...

ஆஹா.......வாங்க நட்சத்திரமே.....

ஆமாம். நாளைக்குத்தானே வரணும். இப்படி நேரங்கெட்ட நேரத்தில் ஜொலிக்க வந்தா என்ன அர்த்தமாம்?
(பந்திக்குத்தான் முந்திக்கணும். இங்கெயுமா?)

'மீண்டும் மீண்டும் வா....' இப்படி ஒரு பாட்டு இருக்கு. அதைப்பாடி(?) உங்களை வரவேற்கின்றேன்.

cheena (சீனா) said...

aakaa - மீண்டும் நடசத்திரப் பதிவர்
Men may Go - Men may Come - But Dharumi Goes on for ever - மாற்றங்கள் ஒன்றே மாற்றமில்லாதது.

பின்னூட்டங்களை வைத்து பதிவர்களீன் குணாதிசயங்களை பட்டியலிட்ட விதம் அருமை.

தட்டிக்கொடுத்தும்,
தட்டிக்கேட்டும்,
விட்டுக்கொடுத்தும், விட்டுக்கொடுக்காமலும், புத்திசாலித்தனமாகவும், மடத்தனமாகவும் மறு மொழி இட்டவர்களூம், இனிய சொற்களைத் தந்தவர்களூம், நஞ்சொத்த சொற்களால் தாக்கியவர்களும் ஆக பலவகைப்பட்ட பதிவர்கள் - சந்தித்த அனுபவம் - பேசுகிறது.

அயர்ச்சியிலிருந்து வெளிவர நல்வாழ்த்துகள்

தருமி said...

பந்திக்கு முந்தணுமோ இல்லையோ, பந்தி வைக்க முந்தணும்ல ..

என்னன்னு தெரியலைங்க, துளசி. இன்னைக்கே போடணும்னு சொன்னாங்க. ஒருவேளை இப்போ ஞாயிற்றுக் கிழமையே ஆரம்பித்து விடுகிறார்கள் போலும் என்று நினைத்து, அவர்கள் கேட்டதுபடியே போட்டுட்டேன்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

வருக.
ஆமாம்,ஞாயிற்றுக் கிழமையிலிருந்து என்று சொன்னாலும் வரும் நட்சத்திரம் பெரும்பாலும் தயாராக இருக்கமாட்டார்கள்.
எனவே மணமுகப்பும் மாற்றத்தைச் சொல்லாது.
ஆனால் நீங்களே அறிவித்து விட்டீர்கள்,நல்லதுதான்...

நாகை சிவா said...

பந்திக்கும் முந்து பதிவுக்கும் முந்து போல ;)

மீண்டும் நட்சத்திர பதிவர் ஆனதுக்கு வாழ்த்துக்கள் & பல நாள் கழித்து சந்திப்பதால் வணக்கங்கள்

துளசி கோபால் said...

அவுங்க ஞாயித்துக்கிழமை நமக்குத் திங்கக்கிழமை இல்லையோ!!!!

உண்மைத்தமிழன் said...

வாங்க பேராசிரியரே..

வருக.. வருக..

நட்சத்திரம் என்கிறார்களே.. அதென்ன வால் நட்சத்திரமா..

தாங்கள் ஏற்றுள்ளதால் கேட்கணும்னு தோணுச்சு..

நல்லபடியா எங்க பேரைக் காப்பாத்துங்க சாமியோவ்..

Unknown said...

வாழ்த்துக்கள் தருமி ஐயா.
நட்சத்திரப் பதிவுகளுக்காக வெயிட்டிங்.

ராஜ நடராஜன் said...

மீண்டும் நட்சத்திரமா!!!(என் கண் எப்பவுமே அந்தக் கட்டத்துக்கு தாண்டுவதேயில்லை.நேரே பதிவின் தலைப்புக்களுக்குத்தான்)

வாழ்த்துக்கள் ஐயா.

Thekkikattan|தெகா said...

மீண்டுமா :-))))!

இருந்தாலும், ஓவர் தன்னடக்கம் உடம்புக்கு ஒவ்வாது தருமியோவ்வ்வ்... :-P .

நந்து f/o நிலா said...

நட்சத்திர வாழ்த்துக்கள் தருமி சார். உங்கள் ஸ்பெஷல் அனுபவபூர்வ பதிவுகளை நட்ச்சத்திர வாரத்தில் எதிர் பார்க்கிறோம். கற்றுக்கொள்ள...

கோவி.கண்ணன் said...

:)
மதுரைக்காரய்ங்களுக்கு மட்டும் ஏன் 2 தடவை அதிர்ஷ்டம் அடிக்குது ? இதுல எதோ சூது இருக்கு,

:)

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள்..ஜொலியுங்கள்..

குமரன் (Kumaran) said...

வாங்க ஐயா. முதல் தடவை நீங்க நட்சத்திரம் ஆனதுக்குப் பின்னாடி தான் நான் எழுதத் தொடங்கினேன் போல. அதனால அப்ப கவனிக்கலை. இந்த வாரம் கவனிக்கிறேன்.

கவனிக்கிறேன்னா தப்பா நினைக்கக் கூடாது. படிக்கிறேன். முடிஞ்சா - அந்த அளவுக்கு சரக்கு இருந்தா - பின்னூட்டும் போடறேன்னு சொல்றேன். அம்புட்டு தான். :-)

Anonymous said...

படிக்க ஆவலாய் இருக்கிறோம்.

rapp said...

வாழ்த்துக்கள் சார்:):):) (ஆனா நைசா மத்த நட்சத்திரப் பதிவர்களை வாரிட்டீங்களே:):):))

இலவசக்கொத்தனார் said...

ஷ்டார் ஆனதுக்கு வாய்த்துகல்!! :))

கபீஷ் said...

//
சுல்தான் said...
வாழ்த்துக்கள் தருமி ஐயா.
நட்சத்திரப் பதிவுகளுக்காக வெயிட்டிங்.
//
Repeat..
Will comment later as I cant comment in Tamil right now.
Hope this week will be a great weak for you and will refresh you

ஜோ/Joe said...

வாங்கையா வாத்தியாரய்யா!

SurveySan said...

வாழ்த்துக்கள் :)

உடனே, வா.ஆயிரம் பாத்து, விமர்சனத்தை இந்த வாரத்தில் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

துளசி கோபால் said...

அப்பாடா..............

திண்ணை காலியாயிருச்சு.வாங்க வந்து நல்லா குந்துங்க.

ஆரம்பிக்கட்டும்,கச்சேரி:-)

குசும்பன் said...

முதலில் வாழ்த்துக்கள் ஐயா!!!

//முதல் தடவை நட்சத்திரமாக இருந்த போது பதிவுலகில் இருந்த நல்ல சில பதிவர்கள், நண்பர்கள் இப்போது பதிவுலகத்திலிருந்தே விலகி நிற்பது அல்லது முழுமையாகவே விலகி விட்டது மனதை உறுத்துகிறது.//

:((((

தருமி said...

சீனா,
//அயர்ச்சியிலிருந்து வெளிவர நல்வாழ்த்துகள்//

முயற்சி செய்துதான் பார்ப்போமே அப்டின்னு ஒரு 'இது'!
நன்றி.

தருமி said...

அறிவன்,
அப்படியா? என் மிது தப்புதானோ என்று தோன்றுகிறது.
நன்றி.

தருமி said...

நாகை சிவா,
//பல நாள் கழித்து சந்திப்பதால்..//

ஏன் இப்படி 'டூ' உட்டிட்டீங்க? இனிம 'பழம்' . சரியா?

தருமி said...

உ.த.,
//நல்லபடியா எங்க பேரைக் காப்பாத்துங்க சாமியோவ்..//

அது எப்படிங்க .. உங்க பேரை நான் எப்படி காப்பாத்துறது. அதுவும் என் பேர் இருக்குற ஒருப்பில ..

தருமி said...

சுல்தான்,
நந்து,
பாச மலர்,
சின்ன அம்மிணி,

மிக்க நன்றி

தருமி said...

ராஜநடராஜன், தெக்ஸ்,

அதென்ன ரெண்டு பேரும் பேசிவச்சது மாதிரி //மீண்டும் நட்சத்திரமா!!!(// அப்டின்னு சவுண்டு உடுறீங்க. இது ஒண்ணும் நல்லா இல்லை. எப்படியோ ஒரு சான்ஸ் கிடச்சா ... உட மாட்டேங்கிறீங்களே..

:(((

தருமி said...

கோவி,
//மதுரைக்காரய்ங்களுக்கு மட்டும் ஏன் 2 தடவை அதிர்ஷ்டம் அடிக்குது ?//

சங்கத்துக்காரக் இல்லியா நாங்க .. அதான்.

ஆமா ஏன் இப்படி சொல்றீங்க? வேற யாருன்னு நினைவில்லையே...

தருமி said...

rapp,
//நைசா மத்த நட்சத்திரப் பதிவர்களை வாரிட்டீங்களே..//

நெசமா என்ன சொல்ல வர்ரீங்கன்னு தெரியலைங்க. யாரை எப்படி வாரிட்டேன்னு சொல்றீங்க?

enRenRum-anbudan.BALA said...

புரொபசர் சார், மீண்டும் நட்சத்திரமானதற்கு வாழ்த்துகள் :)

தங்களது "பழைய" நட்சத்திர வாரத்தில் எழுதிய ஒரு பதிவு (தங்கள் சிறுவயது நிகழ்வுகள் பற்றியது) இன்னும் என் மனதிலேயே நிற்கிறது. அதில் உங்கள் தாய் தந்தையைப் பற்றி அழகான நடையில் சொன்னது நினைவிருக்கிறது !!!

எ.அ.பாலா

தருமி said...

கொத்ஸ்,
//...வாய்த்துகல்!! //

எழுத்துப் பிழை மாதிரி தெரியவில்லையே. ஏதோ நுண்ணரசியலாக இருக்குமோ .. ஏன்னா சொல்றது கொத்ஸ்ஸாச்சே!

enRenRum-anbudan.BALA said...

புரொபசர் சார், மீண்டும் நட்சத்திரமானதற்கு வாழ்த்துகள் :)

தங்களது "பழைய" நட்சத்திர வாரத்தில் எழுதிய ஒரு பதிவு (தங்கள் சிறுவயது நிகழ்வுகள் பற்றியது) இன்னும் என் மனதிலேயே நிற்கிறது. அதில் உங்கள் தாய் தந்தையைப் பற்றி அழகான நடையில் சொன்னது நினைவிருக்கிறது !!!
எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

அந்தப்பதிவை கண்டுபிடித்து விட்டேன், Prof :)

http://dharumi.blogspot.com/2005/10/81.html

தருமி said...

குமரன்,
//முடிஞ்சா - அந்த அளவுக்கு சரக்கு இருந்தா - பின்னூட்டும் போடறேன்னு சொல்றேன்//

இதுக்கு ஒரு பொழிப்புரை தேவைப் படுதே!
இப்படி வச்சுக்குவோமே.. சரக்கு இருந்தாலும் இல்லாட்டியும்கூட பின்னூட்டம் போடுங்களேன்.

தருமி said...

ஜோ,
கபீஷ்,
மிக்க நன்றி

தருமி said...

சர்வேசன்,

//தனிப்பட்ட முறையில் சூர்யாவையும், கௌதமையும் பிடிக்குமென்றால் நிச்சயம் பார்க்கலாம் - மோகன்தாஸ்.//
எனக்கு சூர்யாவை ரொம்பவே பிடிக்குது. அதனால் பார்த்து ஏதாவது எழுதணும். ஒண்ணும் இல்லாவிட்டாலும்

/எனக்கு அவ்ளோ மோசமா தெரியல. இ...ழு...த்தாலும், போரடிக்காத இழுவை ;)// அப்டின்னு நீங்க சொன்னது மாதிரி சொல்லிறலாமான்னு நினச்சிக்கிட்டு இருந்தப்போ,

//நல்ல சினிமாவை நேசிக்கும் மிகச் சொற்பமான நபர்களுக்கு நிச்சயம் இத்திரைப்படம் பிடிக்கலாம். அய்யனார்.// இதை வாசித்ததும் படம் ரொம்ப நல்லா இருக்குன்னு எழுதிர்ரதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்.

தருமி said...

enRenRum-anbudan.BALA,
மிக மிக நன்றி பாலா. இன்னும் அந்தப் பதிவை நினைவில் வைத்திருப்பதற்கும் தனிப்பட்ட நன்றி. மீண்டும் போய் வாசித்து வந்தேன். எனக்கும் மிகப் பிடித்த பதிவு அது -- பின்னூட்ட மனிதன் விவகாரம் தவிர!

ரொம்ப வருத்தம் என்னன்னா அதே மாதிரில்லாம் இப்போ எழுதத் தெரியலையேன்னுதான்.

மீண்டும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

தருமி, வாழ்த்துகள்.

எப்படியாவது 50 களின் மதுரையை நீங்கள் எழுதவேண்டும்.

பள்ளிகள்,மதுரையின் சாரல், அழகு அப்போது இருந்த சுத்தம்,

வீதிகளின் அகலம்.பஸ்கள் சென்ற அழகு. எல்லாமே.
எனக்கு அந்த மதுரையை பாக் டு த பாஸ்ட் படமாகப் பார்க்க ஆவலாக இருக்கிறது.

seik mohamed said...

நட்சத்திர நல்வாழ்த்துகள்

தருமி said...

நன்றி பார்சா குமரன்

தருமி said...

வல்லிசிம்ஹன்,
Develop a story from the following hints அப்டின்னு XII பசங்களுக்கு தேர்வுகளில் ஒரு கேள்வி இருக்கும்; அது போல் கொடுத்திருக்கிறீர்கள். இதுவரை அது என் syllabus-ல் இல்லை; இருப்பினும் சேர்க்க முயல்கிறேன்.

நன்றி

ஆயில்யன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் அய்யா!


கடந்த காலங்களை பற்றி சொல்லுங்கள் எங்களுக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் செய்திகளை எடுத்துக்கொள்ளமுடியும் :)

Bharath said...

வாழ்த்துக்கள் அய்யா.. முதல் ரவுண்டில் கலக்கியதுபோல் இரண்டாவது இன்னிங்ஸிலும் செஞ்சுரி அடிப்பீர்கள் என்று நம்புகிறோம்..

SP.VR. SUBBIAH said...

தருமி சார்!
நட்சத்திர வாழ்த்துக்கள்!

☼ வெயிலான் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ஐயா!

கண்மணி/kanmani said...

ஆகா நானும் உங்களைப் போலத்தான் போலும்.ஏதோ எழுதி கிழிப்பதாக நினைத்து இப்போ என்ன எழுத எனத் தெரியாமல்.....
ஆனால் நீங்கள் நிறைய நல்ல விஷ்யங்களைத் தந்திருக்கீங்க.இன்னமும் தருவீங்க.
சலிப்பு என்பது வயசானா [எழுத்துக்கு] வருவதுதான்;)

வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்

Nilofer Anbarasu said...

நட்சத்திர நல்வாழ்த்துகள்

பாலகுமார் said...

//... men may come and men may go,
But I go on for ever -- //

நட்சத்திர நல்வாழ்த்துகள் !

கானா பிரபா said...

நட்சத்திர வாழ்த்துக்கள் தருமி சார்

Narayanaswamy G said...

சூப்பர் ஸ்டாரு கோன் மன புஸதி....
நன்ன புள்ள மேன சங்கோய்!

சொளராஷ்ட்ர மக்களிடம் கேட்டு அர்த்தம் தெரிந்து கொள்ளவும்...(சரியாத்தான் எழுதிருக்கேன்னு நெனைக்கிறேன்....)

குமரன் (Kumaran) said...

//முடிஞ்சா - அந்த அளவுக்கு சரக்கு இருந்தா - பின்னூட்டும் போடறேன்னு சொல்றேன்//

ஒரு சொல் விட்டுப் போனதால அருத்தம் எப்படியெல்லாம் மாறிப் போகுது பாருங்க. 'அந்த அளவுக்கு என்கிட்ட சரக்கு இருந்தா'ன்னு சொன்னேன். இனிமே பொழிப்புரை தேவைப்படாதுன்னு நினைக்கிறேன். :)

குமரன் (Kumaran) said...

//முடிஞ்சா - அந்த அளவுக்கு சரக்கு இருந்தா - பின்னூட்டும் போடறேன்னு சொல்றேன்//

ஒரு சொல் விட்டுப் போனதால அருத்தம் எப்படியெல்லாம் மாறிப் போகுது பாருங்க. 'அந்த அளவுக்கு என்கிட்ட சரக்கு இருந்தா'ன்னு சொன்னேன். இனிமே பொழிப்புரை தேவைப்படாதுன்னு நினைக்கிறேன். :)

அமர பாரதி said...

நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள் தருமி சார்.

தருமி said...

ஆயில்யன்,
கடந்த காலம்தானே .. இதோ வந்துகிட்டே இருக்கே...

ilavanji said...

டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்!
எங்க தருமிசார் டபுள் ஸ்டார்!!

அசத்துங்க! :)

தருமி said...

பரத்,
//இரண்டாவது இன்னிங்ஸிலும் செஞ்சுரி அடிப்பீர்கள் ..//

என்னங்க இதுவரை யாருமே சொல்லலை என் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் .. அப்ப, அதில செஞ்சுரின்னா சொல்றீங்க..ஏதோ night watchman மாதிரி இருந்துட்டு போனதால்ல நினச்சிக்கிட்டு இருக்கேன்!

தருமி said...

சுப்பையா,
வெயிலான்,
Nilofer Anbarasu
சோலைஅழகுபுரம் - பாலா
கானா பிரபா
அமர பாரதி,

மிக்க நன்றி அனைவருக்கும்.

தருமி said...

கண்மணி,
//நானும் உங்களைப் போலத்தான் போலும்.//

நிச்சயமா இல்லவே இல்லைங்க. உங்க நகைச்சுவைப் பதிவுகள் எவ்வளவு நல்லா இருக்கும். எனக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் வருமா?
அது ஏன் இப்ப எழுதுறதையே இவ்வளவு குறைச்சிட்டீங்க? நீங்கல்லாம் நிறைய எழுதணுமுங்க... வாங்க

தருமி said...

என்ன குமரன் எம்புட்டு சரக்கு உள்ள ஆளு அப்டின்றதுதான் எல்லாத்துக்கும் தெரியுமே... கட்டாயம் வாங்க.

தருமி said...

ரொம்ப சந்தோஷம் இளவஞ்சி

G.Ragavan said...

வருக வருக... இந்த வாரம் மீண்டும் இனிய வாரமாக அமைய வாழ்த்துகள்.

இந்தப் பதிவின் பின்னூட்டங்கள் சொல்லும்... நீங்கள் மறுபடியும் நட்சத்திரமானதன் சிறப்பை. :) தொடருங்க..தொடருங்க... தொடர்ந்துக்கிட்டேயிருங்க.

தருமி said...

நன்றி ஜிரா.
இன்னும் அஞ்ஞாத வாசம்தானா?

பொன்ஸ்~~Poorna said...

//men may come and men may go, //
தருமி, என்னைச்(எங்களை) சேர்க்காம விட்டுட்டீங்களே!!!

தருமி said...

பொன்ஸ்,
சொன்ன ஒரிஜினல் ஆளை உட்டுட்டு என்னப் பிடிச்சா நானென்ன பண்றதுங்க..?
people அப்டின்னு மாத்திப் போட்டுக்குவோமே!

Post a Comment