Thursday, August 05, 2010

422. சிங்கப்பூர் -- இந்தோனேஷியா

*
மு.கு.: ஊர் சுற்றின போது நிறைய படங்கள் எடுத்தேனா ... அவைகளை முறைப்படுத்த தேவையான அடோப் (Adobe)படுத்து விட்டது. அதை எடுத்து, அடுத்த உயர்பதிவு போடுவதற்குள் எனக்காச்சு .. அதற்காச்சு என்றாகிப் போச்சு ... அதனால் இத்தொடர் இடுகைகளை இட காலங்கடந்து விட்டது. மன்னிக்கவும். இனி ... தொடரும்.


எனக்கு வர்ர சந்தேகங்களை நீல வண்ணத்தில் கேட்டிருக்கேன். பதில் தெரிஞ்ச புண்ணியாத்துமாக்கள் பதில் சொன்னா நல்லா இருக்கும்.

*

மே 25, 2010

காலையில் கிளம்பி இந்தோனேஷியாவின் ஒரு தீவான Bantom-க்குப்  பயணம். அடுத்த நாட்டுக்குப் போறோம்னு நினப்பு. ஆனால் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக  படகில் பயணம்; அடுத்த நாடு போயாச்சு. போகும்போது நடுவே சின்னச் சின்னத் தீவுகள். சிங்கையிலிருந்து பிரிந்தாலும் அடுத்த நாடு போய்ச்சேர்ந்த பின்னும் திரும்பிப் பார்த்தால் சிங்கையின் கான்க்ரீட் காடுகள் தெரிந்தன.

இந்தோனேஷியா போய்ச் சேர்ந்ததும் விசாவுக்குப் பணம் கட்டணும். நான், ப்ரபா, திருமதி ப்ரபா மூவருக்கும் சேர்த்து 48 அமெரிக்கன் டாலர் கட்டணும். 50 டாலர் கொடுத்துட்டு மீதிக்காக காசு கொடுத்தார்கள். வாங்கிப் பார்த்தால் ஆயிரக் கணக்கில் எக்குத் தப்பான காசு! அடுக்கடுக்கா ருப்பியா நோட்டு! அதாவது இந்தோனேஷிய ருபிய்யா ...  (இன்றைய நிலையில் ஒரு அமெரிக்கன் டாலர் = 8800 இ.ருபிய்யா; சிங்கை டாலர் = 6600; நம்ம ரூபாய் ஒண்ணுக்கு 190 இ. ருபிய்யா. எனக்கு சிரிப்பா வந்து சிரிச்சிட்டேன். அப்போ நண்பர் ப்ரபா ரொம்ப கோவிச்சிக்கிட்டான். நம்ம ஊர்ல வந்து ஒரு டாலர் கொடுத்த அமெரிக்க ஆளிடம் நாம் 45 ரூபாய் கொடுத்ததும் அவன் கேலியாகச் சிரித்தால் நமக்கு எப்படி கடுப்பாகும். அதேபோல்தானே இப்போ இந்தோனேஷிய மக்களுக்கு இருக்கும் அப்டின்னான். நான் அதுக்குப் பிறகு இந்தோனேஷியாவில் சிரிக்கவே இல்லையே!

ஆனாலும் என்னங்க அந்த ஊர்ல ... இதுவரை நாலைந்து தடவை currency-களை மாற்றியாச்சாம். ஒவ்வொரு ப்ரெசிடென்ட் வந்ததும் தன் படத்தைப் போட்டு currency-களை மாற்றி விடுவார்களாம். எல்லாமே ஆயிரக்கணக்கில்தானாம். 
!உதாரணமா ஒரு காப்பி குடிச்சா ஏறக்குறைய 15 ஆயிரம் இ. ருப்பியா.
கொஞ்சம் ஸ்பெஷலா குடிச்சா இருபதாயிரம் ருப்பியா.போனா போகுதுன்னு ஒரு Levis ஜீன்ஸ் (பெயரு அப்படி போட்டிருந்திச்சி!) வாங்க நினைச்சீங்கன்னா எம்புட்டு காசு கொடுக்கணும் தெரியுமா?
299 ஆயிரம் காசுல 30% கொடுத்து மீதி 209 ஆயிரம் ருபிய்யா கொடுத்தா போதும். (அதாவது, அமெரிக்க டாலருக்கு -  24; சிங்கை வெள்ளிக்கு - 32; நம்ம ஊரு ரூ. 1100!) ஆனா காப்பி 100 ரூபாயா??

அம்மாடியோவ் ... இந்தோனேஷியாவில் இருக்கிறப்போ இந்தக் கணக்கைப் போட்டு மண்ட காஞ்சதுதான் மிச்சம்!!

முதல்ல ஒரு கடற்கரைக்குக் கூட்டிட்டு போனாங்க .. அங்க ஒரு புத்தர் சிலை பெருசா ...
ஏன் புத்தருக்கு நெத்தியில ஒரு பொட்டு? (நம்ம ஊரு டச்சப் தானா?)

விச்ராந்தியா போன புத்தருக்கு கழுத்தில எப்படி இம்புட்டு நகை?

எப்பவும் புத்தருக்கு காது நீளமா வளர்ந்து தொங்கிப் பாத்ததாக நினைவு. இங்கே இல்லையே?
பிறகு ஊருக்குள்ள போனோம். அப்படியே நம்ம ஊருதான். சந்து, பொந்துன்னு இருக்கு. நம்ம ஊர்ல மாதிரி மெல்ல அப்படியே ரோட்டு மேல ஊட்டை இழுத்துக் கட்டுவோமே அதே மாதிரி இருந்திச்சி. ரெண்டு மூணு இடத்துக்குக் கூட்டிட்டு போனாங்க நம்ம டூரிஸ்ட் ஆளுங்க ..  கேக் செஞ்சி விக்கிற வீடு, போலோ டி-ஷ்ர்ட் விக்கிற கடை, ஒரு பிரம்மா மாதிரி இருந்த ஒரு சாமி கோவில் -- எல்லாமே நம்ம ஊர் ட்ரேட் மார்க்தான்.

ஆசியாவிலேயே பெரிய புத்தர் கோவில் அப்டின்னு ஒரு இடத்துக்குப் போறதாகச் சொன்னாங்க. சரி .. நம்ம கோவில் மாதிரி இருக்கும்னு பார்த்தா ... மூணு பெரிய ஹால் .. அதுக்குள்ள பெரிய சாமிகள் .. எல்லாரையும் பார்த்தா புத்தர் மாதிரி இருக்கு.. ஆனா வேற வேற பேரு போட்டிருக்கு ...

அங்கங்க மக்களிடம் கதை கேட்டேன் ... ஒண்ணும் பலன் இல்லை. நீங்க தெரிஞ்சவங்க இருந்தா கொஞ்சம் சொல்லுங்க.  

அந்த மீசை வச்ச ஆளு யாரு?  


 மேரி மாதா மாதிரி ஒரு அம்மா (?)
இருக்காங்க .. அவங்க யாரு?
இப்படி சிரிக்கிற இந்த பெரிய ஆளு யாரு?


அடுத்து முக்கியமான விஷயம்... இந்த ஊர்ல மசாஜ் பயங்கரமாம். ஒரு வீட்டுக்குக் கூட்டிட்டு போனாங்க. மசாஜ் செஞ்சிக்கிட்டோம். நல்ல சுத்தமான படுக்கை. மறைப்பு போட்டு தனித்தனியா மசாஜ் செஞ்சிக்கிட்டோம். அதென்னவோ .. எங்க கூட வந்திருந்த ஒரு மத்திய வயது பெண்கள் கூட்டம் ஏகக் கலகலப்பு. என்ன மொழியிலோ சத்தமாகப் பேசிக்கொண்டு (சைனா..?), ஏகச்சத்தமாய் சிரித்துக் கொண்டு ...ரொம்ப என்ஜாய் செஞ்சிக்கிட்டு இருந்தாங்க. எனக்கு மசாஜ் செஞ்ச பையன் எந்த ஊருன்னு கேட்டேன், இந்தியா அப்டின்னேன். உடனே ..ஹா ... ஷாருக் கான் அப்டின்னான். எனக்கு ரொம்ப சோகம் .. நம்ம உலக நாயகன் பெயரெல்லாம் தெரியலையேன்னு!
                                                              


இதெல்லாம் சுத்திட்டு சாப்பிடப் போனோம். பக்கத்தில சில கைப்பொருள் விற்பனை அங்காடி. நல்லா இருந்தது.
சாப்பிடப் போனோம். எல்லாம் கடல் உணவு. புதிது புதிதாக என்னென்னவோ இருந்தது, ஒன்றையும் விடவில்லை. எல்லாவற்றையும் ருசி பார்த்தோம். Sepia, hermit crab, lobster, Clams...

Octopus இருந்திச்சான்னு நினைவில்லை. உலகக் கால்பந்தாட்டம் நடக்கும்போது நம்ம ஆக்டோபஸ் பால் இருந்தாரே ... அவரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் நான் இந்த சாப்பாட்டை நினச்சிக்கிட்டேன். அதுவும் அந்த  hermit crab சாப்பிட்டது ஒரு தனிக் கலைதான். கொஞ்சூண்டு ஒரு முரட்டுக் கால் மட்டும் shell-க்கு நடுவிலிருந்து எட்டிப் பார்க்கும். அதைப் பிடித்து இழுத்து, முழுசா வெளியே எடுத்து ... அத உடுங்க ... நல்லா இருந்திச்சி.

இதெல்லாம் முடிக்கும்போது சரியாக என் காமிரா சார்ஜ் முடிஞ்சி போச்சு. charger சிங்கையில் .. படம் எடுக்க முடியாம போச்சு. கைத்தொலைபேசி காமிராவில் ஒண்ணிரண்டு படம் எடுக்கலாமேன்னு ரொம்ப லேட்டாதான் நினைவுக்கு வந்தது.

ஒரு பெரிய Mallக்கு கடைசியாகக் கூட்டி போனார்கள். எல்லாம் சிங்கை மாதிரி .. அதாவது சிங்கை மாதிரி... கட்டிடம், escalator எல்லாம். ஆனால் அந்த richness was missing. மக்களிடம் ஆங்கிலம் பேசினால் ... ம்ம்..ம்.. ஒண்ணும் எடுபடலை. ஆனாலும் கடைகளில் இருந்த சில பையன்களும், பெண்களும் கொஞ்சம் பழகினார்கள். ஆனால் அவர்களிடம் school-ல் படிச்சீங்களான்னு கேட்டாக்கூட அந்த  school அப்டின்ற வார்த்தை அவர்களுக்குப் புரியலை. ஒரு பெண் ஒரு பேனாவைக் கொடுத்து கையை நீட்டி எழுதச் சொன்னாள். school அப்டின்னு எழுதினதும் ஆஹா .. போனோமே .. அப்டின்னு சொன்னது மாதிரி இருந்திச்சி. மற்றபடி ஒரு ஆங்கில வார்த்தையும் தெரியலை.

நிலமை இப்படி இருக்கும்போது திருமதி ப்ரபாகரை ஒரு மாணவர் கூட்டம் திடீரென்று ஒட்டிக் கொண்டது. நான் தொலைவில் வரும்போது பார்த்தேன். 4 மாணவிகள், 4 மாணவர்கள் காமிரா, handy cam எல்லாம் வைத்து சூழ்ந்து கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் 'உங்களுக்கேத்த ஆளு வந்துட்டாரு'ன்னு என்ன கைய காமிச்சிட்டு அவங்க ஒதுங்கிக்கிட்டாங்க. பசங்களுக்கு ஒரு assignment  போலும். வெளிநாட்டுக்காரங்களைப் பார்த்து கேள்வி கேட்டு ஒரு ரிப்போர்ட் கொடுக்கணும் போலும். சரின்னு தலையை ஆட்டினேன். பத்து நிமிஷம்னு கேட்டு ஏறக்குறைய ஒரு மணி நேரம் மாறி மாறி கேள்வி கேட்டு ... ஓடிச்சி. ஆனாலும் இரு பெண்கள், ஒரு பையன் மட்டுமே கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் பேசினார்கள்; மற்றவர்கள் எல்லோரும் தலையாட்டிகள்! பர்க்கா போடுவது பற்றிகூடபேசினோம் .. அவர்கள் எல்லோருமே இஸ்லாமியர்களாம். ஒரு மணி நேரம் நன்றாகப் போனது. பேசி முடித்து பிரபாகரைத் தேடும்படி ஆச்சுது. அந்த மாணவர்களிடம் எங்கேயாவது என் நண்பர்களைப் பார்த்தால் எனக்குச் செய்தி சொல்லுங்கள் என்றேன். பாவம் .. மூன்று குழுக்களாகப் பிரிந்து, ப்ரபாகரையும் அவர் துணைவியாரையும் பிடித்து நிற்க வைத்து என்னிடம் சேதி வந்து சொன்னார்கள். ஆசிரிய - மாணவ உறவுபோல் மிக நன்றாக இருந்தது. பிரியா விடை பெற்றோம்!

அப்போதுதான் நினைவுக்கு வந்த தொலைபேசிக் காமிராவில் எடுத்த படம் இது:

Mall-லிருந்து  பெரிய்ய்ய்ய ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். போகும் வழியிலேயே எங்களை அழைத்துச் சென்ற டுரிஸ்ட் கைடு ஐவி தனியாக எங்கும் போக வேண்டாம் என்று எச்சரித்தார். நம்ம ஊர் Omni மாதிரி ஒரு Van  டாக்சியாக ஓடியது. அந்த வண்டியில் ஏறிவிடாதீர்கள். உள்ளூர் மக்களுக்கே அந்த டாக்சி அபாயகரமானது என்றார்.

ஒன்பது மாடி ஹோட்டல். கீழே மிக அழகான ஒரு நீச்சல் குளம்.

 ராத்திரி ஒரு மணி நேரம் நீச்சல். இரவு ஏசியில், பெரிய படுக்கையில் நல்ல தூக்கம் ...

காலைச்சாப்பாடு அந்த ஹோட்டலில்தான். ஆஹா ... நல்ல சாப்பாடு. எப்படியும் ஒரு ஐம்பது ஐட்டம் இருந்திருக்கும். அரிசிச் சோறு போன்றவைகளைத் தொடவேயில்லையே ... மற்றவைகளைத் தீர்த்துக் கட்டினோம்.

பதினோரு மணி போல் இந்தோனேஷியாவிலிருந்து மீண்டும் படகில் புறப்பட்டு சிங்கைக்கு வந்தோம்.


இந்தோனேஷியா அப்படியே பல வகையில் நம்மூர்தான். (அ)சுத்தம், மடத்தனமான traffic, சைக்கிள் கேப்புல நாம வண்டி ஓட்டுவோமே அதேமாதிரிதான் அங்கும்... பலரின் முக அமைப்பும் நம்மூரோடு ஒன்றித் தெரிந்தது. இங்கே மாதிரி அங்கேயும் இரண்டு சக்கர வண்டிகள் அதிகம். கார்கள் கம்மி. நம்ம ஊர் M 80 வண்டி மாதிரி ஒரு சீனா வண்டி. சைக்கிள் கேப்புல .... நம்ம ஊர் மாதிரி. தெரு முக்குகள், அங்கே நிற்கும் நான்கு சக்கரக் கடைகள், கண்ட இடத்தில் கார், வண்டிகளை நாம் நிறுத்துவது போலவே அங்கும். அந்தக் காட்சிகளை எடுக்க முடியாமல் காமிரா இல்லாமல் போனது வருத்தம்.*

எடுத்த நிறைய படங்களைப் பார்க்க  

இங்கே ....(1) ,  
இங்கே ....(2),  
இங்கே .... (3),  
இங்கே .... (4)  

போகணும்.


18 comments:

யாசவி said...

தலைவரே,

இந்தோனேசியா என்பது இன்னொரு இந்தியா.

நீங்கள் ஜாவா போனால் ரொம்ப ஆச்சர்ய படுவீர்கள்.

நீங்கள் போனது Batom என நினைக்கிறேன்

Batom = Low cost Singapore.

மசாஜ் ஆண்கள் செய்வதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன் ;)

யாசவி said...

For follow up

மருத புல்லட் பாண்டி said...

பாசு இப்பவாது புல்லட் அருமை தெரிஞ்சு இருக்கும். இந்தோனேசியர்கள் கங்கா புத்திரர்கள் அப்படின்னு நான் போனப்ப சொன்னாங்க

மருத புல்லட் பாண்டி said...

பாசு இப்பவாது புல்லட் அருமை தெரிஞ்சு இருக்கும். இந்தோனேசியர்கள் கங்கா புத்திரர்கள் அப்படின்னு நான் போனப்ப சொன்னாங்க

kavisiva said...

அய்யா நீங்க வந்தது பத்தாம் தீவுக்கா? அப்படீன்னா நம்ப ஆட்கள் கட்டியிருக்கற கோவிலை மிஸ் பண்ணிட்டீங்களே! சின்ன்ச்ஞ்சிறு கோவில்தான். ஆனால் இங்குவாழும் இந்தியர்களையும் பார்த்திருக்கலாம்

தருமி said...

//நீங்கள் போனது Batom என நினைக்கிறேன்//

ஆமாம் .. பெயரை இப்போது சேர்த்திட்டேன்

//மசாஜ் ஆண்கள் செய்வதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன் ;)//

:(

தருமி said...

புல்லட்டு,
//இப்பவாது புல்லட் அருமை தெரிஞ்சு இருக்கும். //

எப்பவே தெரிஞ்சிருச்சி

தருமி said...

kavisiva,

//இங்குவாழும் இந்தியர்களையும் பார்த்திருக்கலாம்//

அடடா ... மிஸ் பண்ணிட்டோமோ!

Unknown said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

kavisiva said...

ஐயா அந்த தீவின் பெயர் பத்தாம் (Batam).

அடுத்தமுறை வரும்போது மிஸ் பண்ணாம பாருங்க.

கோவி.கண்ணன் said...

நான் இங்கிட்டு 12 ஆண்டுகளாக குப்பைக் கொட்டுறேன், இன்னும் அந்த இடங்களை எட்டிப் பார்க்க நேரம் வாய்க்கவில்லை.

படங்கள் நன்றாக இருக்கிறது.

மாதா போல இருக்கும் அம்மா மதர் புத்தாவாம் சீனர்கள் சொல்லுவார்கள், மதரை வணங்குபவர்கள் மாட்டிறைச்சி உண்ண மாட்டார்கள்

தருமி said...

//அடுத்தமுறை வரும்போது மிஸ் பண்ணாம பாருங்க.//

அஅஅஅடுத்த முறையா ... சிங்கைப் பதிவர்கள் மறுபடி கூப்பிடுவாகளா??!!

தருமி said...

கோவீஸ்,
//அந்த இடங்களை எட்டிப் பார்க்க நேரம் வாய்க்கவில்லை.//

நீங்க தான் தமிழ்நாட்டுக்கு சீசன் டிக்கெட் வச்சிருக்கீங்கல்லா ..

எஸ்.கே said...

படமெல்லாம் மிக நன்றாக உள்ளது சார்!

ஆ.ஞானசேகரன் said...

//நம்ம ஊர்ல வந்து ஒரு டாலர் கொடுத்த அமெரிக்க ஆளிடம் நாம் 45 ரூபாய் கொடுத்ததும் அவன் கேலியாகச் சிரித்தால் நமக்கு எப்படி கடுப்பாகும். அதேபோல்தானே இப்போ இந்தோனேஷிய மக்களுக்கு இருக்கும் அப்டின்னான். நான் அதுக்குப் பிறகு இந்தோனேஷியாவில் சிரிக்கவே இல்லையே!//

உண்மைதான் ஐயா.... அவங்க ஊருக்கு அவங்க காசுதானே மதிப்பு...

சிறப்பான பதிவு... மகிழ்ச்சி
நானும் ஒரு முறை சென்றுள்ளேன்

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றீ. அருமை. வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

இந்தோனேஷியா பயணக்கட்டுரை அருமை. வாழ்த்துக்கள்.

வடுவூர் குமார் said...

ஒரு முறை ஜகர்த்தா விமான நிலையத்தில் இறங்கியவுடன் வாகனங்களின் ஹாரன் அப்படியே காதை கிழித்து நம்மூரை ஞாபகப்படுத்தியது.

Post a Comment