Sunday, October 02, 2011

530. சின்னச் சின்ன கேள்விகள்

*

எங்கள் பகுதி புதிதாக மதுரை பெருநகரப் பகுதியில் இணைந்து விட்டது. தேர்தலும் வந்து விட்டது. வேகமாகத் தான் வேட்பாளர்கள் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதுவரை நான்கு வேட்பாளர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்து ஓட்டு கேட்டார்கள். ஏதோ புது வழக்கம் போலும். ஒவ்வொருவரும் ஒரு துண்டு எடுத்து வந்து தோளில் போர்த்தி ஓட்டு கேட்டார்கள். (பக்கத்தில் செல்லூர் பகுதி தறித் துண்டுகளுக்குப் பெயர் போன இடம். செல்லூர் கடைகளில் துண்டு விற்பதற்காக அட்சய திருதி மாதிரி ஏதோ பொய் சொல்லி துண்டு போடச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போலும். ) எல்லோரின் துண்டையும் அந்த வேட்பாளர்களுக்குத் திருப்பி தோளில் போட்டு வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டேன்.

பக்கத்து வீட்டுக்காரங்க துண்டை வாங்கிக்கிட்டாங்கல்லா என்று தங்க்ஸுக்கு வருத்தம்.

*** *** *** *** ***

புதுவை மாநில கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரம் 10-ம் வகுப்புகூட முடிக்கவில்லையாம். என்னே நமது ஜனநாயகம்! ’விவஸ்தை’ அப்டின்னு ஒரு வார்த்தை உண்டு. அது நினைவுக்கு வந்தது. யாருக்கு விவஸ்தை இல்லை - பதவி கொடுத்தவருக்கா?; வாங்கியவருக்கா?; இதெயெல்லாம் கண்டுக்காமல் தலைவிதியேன்னு போகிறவர்களுக்கா?

ஆனால் அமைச்சர் 10 படிச்சி, தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று, அடுத்து ஒரு ‘டிகிரி’ வாங்கணும்னு ரொம்ப கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதினார் அப்டின்னு தினசரியில் வாசிச்சதும் மனசு அப்படியே எங்கேயோ போய்ட்டுது.

ஆனால் அடுத்த நாளே அவர் தேர்வு எழுதாம, அதுக்கு ஒரு ஆளை அனுப்பிச்சிட்டார் அப்டின்னு செய்தி. மந்திரின்னா அதுகூட இல்லைன்னா எப்படி?

இப்போ தமிழ்நாட்டு கல்வி அமைச்சர் இதை புலன் விசாரணை செய்யப்போகிறாராம். ஏற்கெனவே பாண்டி முதலமைச்சர் தன் ”வழக்கத்தை” காப்பி அடிச்சிட்டார்னு ’மம்மி’ கோபத்தில் இருக்கிறாராம். கூட்டணிக் கட்சிகளைக் கேட்காமலேயே பாண்டி முதலமைச்சர் தன் அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்ததில் அவருக்குக் கோபம். இப்போ ஒரு அமைச்சர் கிடைத்திருக்கிறார். கஞ்சா வைத்து கைது செய்வது பழைய பழக்கம். இப்போது என்ன நடக்குமோ?

*** *** *** *** ***

19 ஆண்டுகளுக்கு முன்னால் வாச்சாத்தி பாலியல் குற்றங்கள் நடந்தன. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னால் குற்றம் செய்தவர்கள் ஒரு நீதியரசரால் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். (இனி அடுத்த உயர்நிலைக்குத் தண்டனை பெற்றவர்கள் போகலாம்.)

எப்படியோ 19 ஆண்டுகள் ஆனாலும் செய்த குற்றம் தொடர்ந்து போய் அவர்களைத் தண்டித்திருக்கிறது.

இப்படி ஒரு நீதியரசர். ’மம்மி’யின் பிறந்த நாள் பரிசளிப்பு வழக்கில் C.B.I வழக்குப் பதிய பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டதால் குற்றத்தையே விட்டு விட்டார் இன்னொரு பெரிய நீதியரசர். வழக்கு போடாததால், செய்த குற்றம் இப்போது குற்றமில்லாமல் போய்விட்டது என்றொரு புதிய தத்துவத்தைப் பிறப்பித்து விட்டார்.

முன்பொரு நீதியரசர் டான்ஸி வழக்கில் குற்றம் செய்தவரை ‘தியானம்’ செய்யச் சொல்லி உத்தரவிட்டார். எப்படியெல்லாம் தப்பிக்கிறாங்கப்பா ...!

பொறந்தா ஒரு அரசியல்வாதியா பொறக்கணுங்க ... யாருக்கும், எதற்கும், எந்தக் குற்றத்திற்கும் தண்டனை இல்லை!

*** *** *** *** ***

நில அபகரிப்பிற்காகத் தனியமைப்பு எல்லாம் வைத்து பழைய அமைச்சர்களை (சிறிது நாட்களுக்காவது) சிறையில் போடுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அப்படியே கொஞ்சம் பழைய கதைகளையும் எடுக்க சொல்லுங்க’ப்பா! அந்த ஊரு என்ன .. சிறுதாவூரில் தலித்துகள் நிலத்தை எடுத்ததையும் சேர்த்து எடுங்க ... ஆமா, ஏன் அந்த நிலைத்தை இழந்தவர்கள் இதுவ்ரை எந்த நியாயமும் தேடலை.

நம்ம கம்யூ. ஆளுங்க இதுவரை கூட்டணியில் இருந்தவங்க. இப்போ வெளியே தூக்கிப் போடப்பட்டவங்க .. இப்போவாவது அவர்களுக்கு சிறுதாவூரும் நினைவுக்கு வருமா?

*** *** *** *** ***

ஒரு பதிவு இப்போது தான் பார்த்தான். தொடுப்பு எடுக்க மறந்து போனது. ஸ்விஸ் வங்கிகளில் பணம் போட்டிருக்கும் நம்ம ஊர் ஆட்கள் - ராஜீவ் காந்தி, ப. சிதம்பரம், கருணாநிதி, ஸ்டாலின், ஆ. ராசா பெயர்களும் உண்டு - பற்றி விக்கிலீக்ஸ் கொடுத்த பட்டியல் கொடுத்திருந்தது.

அது ஒன்றுமே நடக்காதா?????

நாமும் பேசாமல் அந்த லிஸ்டை அடிக்கடி பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்ள வேண்டியதுதானா???

*** *** *** *** ***

நாமளும் தான் காலங்காலமாய் இணையப் பதிவர்களாக இருக்கிறோம். ஆனால் அதைப் பற்றியெல்லாம் யாரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்களேன்னு தோணுச்சு. எப்போன்னு கேட்கிறீங்களா? இன்றைய Times of India -ன் Madurai Times-ல் ஒரு கட்டுரை. அனுஷா வின்சென்ட் என்பவர் எழுதியிருக்கிறார். யாரைப் பற்றி தெரியுமா? Tam-Bram பதிவர்களைப் பற்றி மட்டும் ஒரு கட்டுரை. special category!!??

அதன் தொடுப்பைக் கொடுக்க முயற்சித்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் கட்டுரையாசிரியருக்கே ஒரு மயில் போட்டிருக்கிறேன் - தொடுப்பு கொடுக்கச் சொல்லி!

*** *** *** ***

12 comments:

SURYAJEEVA said...

நல்ல கேள்விகள்... சமூகத்தை உசுப்பி விடுங்கள்... அந்த சிறுதாவூர், எங்க இருக்கு என்கிறார்கள் சிவப்பு துண்டு தலைவர்கள்... கவனிக்க தோழர்கள் என்று குறிப்பிடவில்லை...

Victor Suresh said...

சின்னச் சின்ன கேள்விகளாக இருந்தாலும், நல்ல நல்ல கேள்விகளாக இருந்தன.

"அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்வான்" என்பார்கள். நீங்கள் பிற்பாதியில் நம்பிக்கை இல்லாதவர். எனவே முற்பாதியை மட்டும் பார்ப்போம். அரசன் என்றும் கொல்வான்; எதுவும் செய்வான்; அவனுக்கு வாழ்நாளில் தண்டனை கிடையாது என்பதுதான் இன்றைய நடைமுறை.

எனக்கு அவ்வளவாக சட்ட ஞானம் கிடையாது. இருந்தாலும், தெரிந்த வரையில் ஒவ்வொரு குற்றத்திற்கும் இவ்வளவு நாட்களுக்குள் வழக்குப் பதிய வேண்டும்/சட்ட முறையீடு செய்ய வேண்டும் என்று உள்ளது. அது தாண்டி விட்டால் தப்பித்து விடலாம்.

சார்வாகன் said...

வ‌ண‌க்க‌ம் அய்யா,

/பக்கத்து வீட்டுக்காரங்க துண்டை வாங்கிக்கிட்டாங்கல்லா என்று தங்க்ஸுக்கு வருத்தம்./

துண்டைக் கொடுத்துதா‌ன் மக்கள் த‌லையில் துண்டை போடுகிறார்க‌ள் என்று தெரிந்தும் துண்டை வாங்கு ப‌வ‌ர்க‌ளை என்ன‌ செய்வ‌து.
தேர்தல் மதுரையில் களை கட்டுது போல தெரியுது!!!!!!.

/ஆனால் அடுத்த நாளே அவர் தேர்வு எழுதாம, அதுக்கு ஒரு ஆளை அனுப்பிச்சிட்டார் /

வழ‌க்க்மா கள்ள ஓட்டு போட்டு ஜெயிக்கிற மாதிரி நினைச்சுட்டார் பாவம்!

/பொறந்தா ஒரு அரசியல்வாதியா பொறக்கணுங்க ... யாருக்கும், எதற்கும், எந்தக் குற்றத்திற்கும் தண்டனை இல்லை! /

அரசியல்வாதிகள் வீட்டில் பிறந்தால் உருவாகலாம்.இல்லையெனில் ரொம்ப கஷ்டம்!!!!!!!
நன்றி

Indian said...

//அனுஷா வின்சென்ட் என்பவர் எழுதியிருக்கிறார். //

Can you give the title of the article?

Couldn't find any related article here

Indian said...

//ஒரு பதிவு இப்போது தான் பார்த்தான். தொடுப்பு எடுக்க மறந்து போனது. ஸ்விஸ் வங்கிகளில் பணம் போட்டிருக்கும் நம்ம ஊர் ஆட்கள் - ராஜீவ் காந்தி, ப. சிதம்பரம், கருணாநிதி, ஸ்டாலின், ஆ. ராசா பெயர்களும் உண்டு - பற்றி விக்கிலீக்ஸ் கொடுத்த பட்டியல் கொடுத்திருந்தது.

அது ஒன்றுமே நடக்காதா?????

நாமும் பேசாமல் அந்த லிஸ்டை அடிக்கடி பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்ள வேண்டியதுதானா???
//

அது போலியான பட்டியல் என்று நினைக்கிறேன்.

naren said...

//இன்றைய Times of India -ன் Madurai Times-ல் ஒரு கட்டுரை. அனுஷா வின்சென்ட் என்பவர் எழுதியிருக்கிறார். யாரைப் பற்றி தெரியுமா? Tam-Bram பதிவர்களைப் பற்றி மட்டும் ஒரு கட்டுரை. special category!!??//

இதற்கு எல்லாம் போய் ஆதங்கப்படலாம சார்.

”மேன்மக்கள் மேன்மக்களே”

naren said...

நீதியரசர் * மம்மி - பெரிய விஷயத்தில் முக்கியமான சம்பவம்.

பள்ளி கூடத்தில் படிக்கும் சிறுமியை, அப்பள்ளி ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமைக்கு உடபடுத்தியுள்ளார்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி முன் பொது நல வழக்கு.

தலைமை நீதிபதி, இது ஒரு நாடா, காடா, ஸ்கூலா, ஆசிரியர்களா, போலீஸா....என்று திட்டிவிட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை என்ற கேட்டதற்கு, வில்லன் போலிஸ் அளித்த பதில்.

“ என்னுடைய கடவுளே, உங்களின் மாண்புமிகு சகோதரர் நீதியரசர் அவர்களை பெயிலில் விட்டுவிட்டார்”

தலைமை நீதிபதி வில்லன் போலிஸிடம் காட்டிய கோபத்தை சக நீதியரசரிடம் காட்ட முடியுமா. அதனால் பெயிலை இரத்து செய்ய நடவடிக்கைகள் எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

தலைமை நல்ல மனிதர் ஆனால்........

சார்வாகன் said...

அய்யா வணக்கம்
இந்த தளம் பார்த்தேன் மிகவும் பிடித்து இருந்தது.உங்களுக்கு உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன்.

http://www.proof-of-evolution.com/index.html
பாருங்கள்
நன்றி

சித்திரவீதிக்காரன் said...

அய்யா, எங்கள் பகுதியிலும் சிலர் துண்டு போட்டு தான் ஓட்டு கேட்கிறார்கள். இவங்களுக்கெல்லாம் ஓட்டு போட்டோம்னா நம்ம பட்ஜெட்லயும் துண்டு விழும்கிறதை தான் இப்படி சொல்லாமல் சொல்கிறார்கள் போல.

என்னுடைய சின்ன கேள்வி

தினசரி 'நட்பூ நட்பூ'ன்னு ஆயிரம் எஸ்.எம்.எஸ் அனுப்புறாங்க. அப்புறம் ஏன் இங்க ஆயிரக்கணக்குல சாதி இருக்கு?

நன்றி.

அ. வேல்முருகன் said...

அடே ஆவடி பக்கம் கூட ஐந்தாறு துண்டு சேர்ந்தது என்று என் தம்பி கூட சொன்னான். ஒரே மாதிரி சிந்திக்கிறான் அரசியல்வாதி

தருமி said...

//எங்கள் பகுதியிலும் சிலர் துண்டு போட்டு தான் ...//

//ஆவடி பக்கம் கூட ஐந்தாறு துண்டு சேர்ந்தது...//

சித்திரவீதிக்காரன், வேல்முருகன் ,

அப்டின்னா இந்த தேர்தலே ’துண்டு தேர்தலோ’ என்னவோ!!!

நம்பிக்கைபாண்டியன் said...

அரசியல்வாதிகள் கழுத்தில் நாம் துண்டு போடும் காலம் வந்தால்தான்(கடன் வாங்கியவர்கள் கழுத்தில் துண்டு போட்டு இழுப்பது போல்) நம்போன்றவர்களின் ஆதங்கம் தீரும்!

Post a Comment