Wednesday, May 30, 2012

571. AN EULOGY TO A FRIENDSHIP

*


AN EULOGY APOLOGY TO A FRIENDSHIP 


பதின்ம வயதில் நானும் அவனும் நண்பர்களானோம். சமீபத்தில் அவன் சாகும் வரை அது தொடர்ந்தது.  இளம் வயதிலேயே பெற்றோர்களை இழந்து விட்டான். உறவினரின் உதவியால் படித்தான். படிப்பில் புலி தான். அதிகம் கஷ்டப்படாமலேயே நல்ல மதிப்பெண்கள் வாங்குவான். பள்ளிப் படிப்பு முழுவதும் ஏழை மாணவர்களுக்கென பள்ளியில் தனியாக இருந்த விடுதியில் படித்தான். கல்லூரிக்கு வந்ததும் முதன் முறையாக ஒரு சுதந்திரப் பறவை என்ற அனுபவம் அவனுக்கு. அதுவே வாழ்வின் முதல் தப்பை செய்வதற்கு ஏதுவாயிற்று. அதிக சுதந்திரம் ... கல்லூரி போகாமல் வீட்டில் மாட்டிக் கொண்டான். பெரிய தப்பில்லைதான்.  ஆனால் படிப்பைத் தொடராமல் எங்கோ ஓடிவிட்டான். சில மாதங்கள் கழித்துத் திரும்பி வந்த போது நான் பேச மறுத்து விட்டேன். சந்திக்கும் இடமெல்லாம் கோவிலில் தான். அப்போதெல்லாம் தினமும் கோவிலுக்குப் போகும் வழக்கம் உண்டு. படித்த பள்ளியை ஒட்டிய கோவில் - St. Mary's Church. எனக்காகக் காத்திருப்பான். நான் கண்டு கொள்ளாமல் சென்று விடுவேன். எங்களோடு அப்போது இணைந்திருந்த இன்னொரு நண்பன் மூலம் தூது வந்தது. வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டான் என்ற கோபம் எனக்கு. ஒரு வழியாக மீண்டும் இணைந்தோம்.

நான் கல்லூரி மாணவனாக இருந்த போதே அவன் வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டான். மதுரையில் அப்போதிருந்த Spencer's-ல் வேலைக்குச் சேர்ந்திருந்தான். முதலில் இருந்த மேனேஜருக்குச் செல்லப்பிள்ளை போன்று இருந்தான். அவர் கொடுத்த ஆதரவில் அவன் all in all alaguraja ஆகி விட்டான். எந்த சீட்டிலும் உட்கார்ந்து எந்த வேலையையும் பார்க்க அவனால் முடிந்தது. அந்த மேனேஜருக்குப் பின் வந்த மேனேஜர்கள் எல்லோரும் அவனிடம் கேட்டு கம்பெனியை நடத்தியது எனக்கு நன்கு தெரியும். 

இப்போது ஒரு தனிக்காட்டு ராஜா. தனியாகத் தங்கியிருந்தான்.சின்னக் கடன்கள் .. பெரிய தொல்லைகள் .. தப்பி வந்து காலை நன்கு ஊன்றினான். வாழ்க்கை நன்கு போனது. விளையாட்டுத் தனம் நிறைய. இன்னும் நினைவில் இருக்கிறது ... ’சவாலே சமாளி’ படம் ... வெறும் இடமாக மட்டுமே இன்னும் இருக்கும் தேவி தியேட்டரில் படம். முதல் நாள் படம் பார்க்கப்  போனோம். கூட்டத்தைப் பார்த்ததும் ‘வாடா .. போய்டுவோம்’ என்றேன். கொஞ்சம் பொறு என்றான். பூட்டியிருந்த கேட் பக்கம் போய் அங்கே நின்றவரிடம் ஏதோ சொன்னான். கதவு திறந்தது; நேரே போய் டிக்கட் வாங்கிட்டு  வந்து என்னை உள்ளே அழைத்துச் சென்றான். எப்டிடா என்றேன். C.T.O.  என்றான். அப்டின்னா என்ன என்றேன். Commercial Tax Office(r) என்றான். என் தோள் உயரத்திற்கு தான் இருப்பான். சின்ன உடம்பு. ஏண்டா உன்னைப் பார்த்த பிறகும் கூட எப்படிடா ஏமாந்து போயிர்ராங்க?  உனக்கும் எப்டிடா இந்த தைரியம்?’ என்றேன். அதெல்லாம் தானா வரணும்’பா என்றான். அப்படியே கொஞ்ச நாள் சில தடவை C.T.O.புண்ணியத்தில் டிக்கட் வாங்கினோம். எதுக்கு ரிஸ்க் என்று நான் வலியுறுத்திய பின் அதை விட்டு விட்டான்.

அடி வாங்கும் அளவிற்கு யாரோடும் சண்டை போட்டு, கடைசியில் அடிவாங்காமல் தப்பித்த நேரங்கள் பல உண்டு.  ஒரு சின்னப் பயல் comment அடிக்க நாங்கள் திட்டி அனுப்பினோம். ரீகல் தியேட்டர் முன் சூடான டீ குடித்துக் கொண்டிருந்தோம். அப்போது நாங்கள் நாலு நண்பர்களாக நின்றிருந்தோம். எங்களிடம் திட்டு வாங்கிய பசங்க பத்துப் பதினைந்து பேரோடு கூட்டமாய் நின்று ‘ரெடி’யாகிக் கொண்டிருந்தார்கள். திரும்பிப் பார்த்தேன். என் நண்பர்கள் இருவரும் அப்பீட் வாங்கிட்டாங்க. நின்றது நானும் அவனும் மட்டும் தான். சரி .. இன்னைக்கு நல்ல பூசை கிடைக்கப் போகுது என்றேன். இரு பார்ப்போம் என்றான். கூட்டத்தின் தலைவர் ஆளனுப்பி கூப்பிட்டனுப்பினார். அவர் யார்னு தெரியாது; வேணும்னா அவரை வரச்சொல் என்று சொல்லியனுப்பினேன். கூட்டமாக வந்து சுற்றி நின்றார்கள். கையில் இருக்கும் டீயைக் குடிக்காமல் வைத்திரு என்று ஒரு அட்வைஸ் கொடுத்தான். எங்களின் ஒரே தற்காப்பு ஆயுதம் அது.

’கூப்பிட்டா வரமாட்டீங்களோ’ .. தல கேட்டுச்சு.
’நீங்க யாருன்னே தெரியாது. இதே மாதிரி நான் கூப்பிட்டா நீங்க வந்திருவீங்களோ’ன்னு ஒரு கேள்வி கேட்டான். தலைக்கு சுதி கொஞ்சம் குறைந்தது.
’என்ன  .. நம்ம பசங்களைப் பார்த்து செருப்பால அடிப்பேன்னு சொன்னீங்களா?’ என்றார்.
’ஆமா சொன்னேன். ஆனா அடிக்காம விட்டது தப்பு’ன்னேன். தலைக்கு இன்னும் சுதி இறங்கியது.
’என்ன இப்படி பேசுறீங்க?’
’உங்களுக்கும் எனக்கும் ஒரே வயசு இருக்கும். தெருவில  போற ஒரு சின்னப் பயலைப் பார்த்து நீங்க செருப்பைக் கழட்டி அடிப்பேன்னு காரணமில்லாம சொல்லுவீங்களா?’ என்றேன். தலையை நம்ம பக்கம் இழுத்துட்டேன்.

தல அதுக்கப்புறம் என்ன நடந்துதுன்னு கேட்டு. அந்தப் பசங்களை என் முன்னால்  நாலு தட்டு தட்டிட்டு,’தப்பா எடுத்துக்காதீங்க’ அப்டின்னு என்னைப் பத்தி விசாரித்தார். வீட்டு ஏரியா சொன்னதும் ‘அட .. நம்ம ஏரியா .. எப்ப வேணும்னாலும் என்ன தேவையின்னாலும் சொல்லுங்க’ அப்டின்னு ஒரே ப்ரண்ட்லியா ஆய்ட்டார். அந்தக் கூட்டம் அவர்கள் பாஷையில் என்னையும் அவனையும் தொட்டுத் தொட்டு வணக்கம் சொல்லிட்டு கலைந்தாய்ங்க. நிம்மதியாயிருந்தது. தூரத்தில் நின்னு வேடிக்கை பார்த்த இரு நண்பர்களும் அதன் பின் வந்து சேர்ந்தார்கள். இப்ப தெரியுதா யார் யார் நண்பர்கள் அப்டின்னேன்.

இப்படிப் பல நிகழ்வுகள். ரீகல் தியேட்டர் முன்னால் குதிரைகள் தண்ணீர் குடிக்க ஒரு நீள தண்ணீர்த் தொட்டி இருக்கும். அதற்குப் பக்கத்தில் நின்று கொஞ்சம் சில்லறைகளை வாரி இறைத்து, அதைச் சின்னப் பசங்கள் பொறுக்குவதை வேடிக்கை பார்த்த ஒரு வெள்ளைத் தோல் அயல்நாட்டுக்காரனை நாலு நல்ல கேள்வி கேட்டோம். மன்னிப்பு கேட்டபடி போனான் அவன்.  ஏறத்தாழ பின்னாளில் அதே இடத்தில் நின்று வானத்தைப் பார்த்து கையை ஆட்டி ஆட்டிப் பேசி கொஞ்ச ஆட்களையும் அதே போல் நின்று வானத்தைப் பார்க்க வைத்திருக்கிறோம். குறும்புக் கலவையாக 
நாட்கள் சென்றன

.

வேளானக்கன்னி போய் மொட்டை போட்டுக்கொண்டு என் வீட்டிற்கு வந்தான். அவனைச் சாமியாக்கி, நான்  கையில் கூஜாவோடு அவனது சிஷ்யனாக வேடம் போட்டு எடுத்துக் கொண்ட படம் ..............அவன் கையிலிருப்பது Oxford Pocket Dictionary !!
அனேகமாக எழுபதின் கடைசிகளில் எடுத்த படமாக இருக்கலாம்.


 
காலம் கடந்தது. கல்யாணம் எல்லாம் முடிந்தது. Spencer-யை விட்டு வெளியே வந்தான். ஒரு ஆயுர்வேத மருந்துக் கம்பெனியில் சேர்ந்தான். பெயர் அதிகம் தெரியாதிருந்த கம்பெனியை அடுத்த 13 ஆண்டுகளில் தென் தமிழ்நாட்டில் நிலைபெறச் செய்தான். சுய வளர்ச்சியும் நன்கிருந்தது.  என் கல்லூரி வேலையில் வந்த சம்பளத்தை விட இரு மடங்கு சம்பாதித்தான். 13 ஆண்டுகள் ஆனபோது கம்பெனியில் சில மாற்றங்கள். நியாயமாக இவனுக்கு வர வேண்டிய உயர்வு இவனுக்குக் கிடைக்கவில்லை. இவன் வேலை பார்த்த கம்பெனியின் எதிர் கம்பெனி இவனை வேலைக்கழைத்தார்கள். எவ்வளவோ சொன்னேன் .. சொன்னோம். இதுவரை 13 ஆண்டுகளாக உழைத்த ஒரு கம்பெனிக்கு எதிர்த்து இப்போது என்னால் வேலை செய்ய முடியாது என்றான். மருத்துவக் கம்பெனிகளில் இது ஒன்றும் புதிதல்ல. இருந்தும் யார் சொல்லையும் கேட்கவில்லை. இது அவன் வாழ்க்கையின் பெருந்தவறாகப் போனது,.நாற்பதுகளின் கடைசியில் எடுத்த இந்த முடிவிற்குப் பின் அவன் எந்த ஒழுங்கான வேலையுமில்லாமல் இருக்கும் படி ஆகிப் போனது. கிடைத்த சில வேலைகளும் ’ஏதோ .. ஒரு வேலை’ என்றாகிப் போனது.

சொற்ப சம்பளங்கள்.அவன் பாட்டை அவன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றானது. படித்து முடித்து வளர்ந்து வேலைக்குப் போன மூத்த மகனும் விபத்தில் காலமானான். இயந்திர வாழ்க்கையாகிப் போனது. எனது ஓய்விற்குப் பின் நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடியாது போயிற்று.

அவனும் நானும் கடைசிக் காலத்தில் கையாகாமல் போனால் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டுமென நினைத்திருந்தோம். Euthanasia நல்ல வழியாகப்பட்டது.  செத்த பிறகு எரிக்கப்பட வேண்டுமென நினைத்தோம். (இன்னோரு நண்பன் சொன்னான்: ’செத்த பிறகு உங்களை என்ன செய்தால் உங்களுக்கென்ன? ஏதும் தெரியவா போகுது. பேசாம போவீங்களா’ என்றான். அதுவும் சரிதான்!) Euthanasia செய்து கொள்ள அடுத்தவன் உதவி தேவையாக இருக்கும் என நினைத்திருந்தோம்.

எப்படியோ அவன் மனம் முற்றிலும் மாறியிருந்தது. அது உண்மைதானென்றாலும், தான் குடும்பத்திற்குப் பாரம் என்று தொடர்ந்து நினைக்க ஆரம்பித்து விட்டான். உடல் மனம் எல்லாம் சோர்ந்து போச்சு.

முடிச்சிக்கிட்டான்.

நான் இன்னும் அருகில் இருந்திருக்க வேண்டும் ....*

*

7 comments:

அ. வேல்முருகன் said...

நட்பின் ஆழம்

சார்வாகன் said...

வணக்கம் அய்யா,
படித்த பின் மனம் கனமாக இருப்பது போன்ற உணர்வு.
நன்றி

ராஜ நடராஜன் said...

இந்த மாதிரி அனுபவங்களுக்கெல்லாம் என்னால் உடனே பின்னூட்டம் சொல்லி விடமுடியவில்லை.பல கணங்கள் யோசித்தேன்.

நானும் கூட ஒரு நீண்ட நட்பின் உணர்வை எப்படி எந்தக் கோணத்தில் துவங்குவது என்று தெரியாமல் இன்னும் மௌனம் அடைகாத்துக்கொண்டிருக்கிறேன்.

suvanappiriyan said...

//முடிச்சிக்கிட்டான்.

நான் இன்னும் அருகில் இருந்திருக்க வேண்டும் ....//

சிறந்த இடுகை தருமி சார்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எப்போதெல்லாம் கூட இருந்தேனென்று சொல்லிக்கொண்டே வந்தீர்கள்.. முடிவில் ..

\\நான் இன்னும் அருகில் இருந்திருக்க வேண்டும் // ம்..

அவருக்கு அஞ்சலிகள்.

வல்லிசிம்ஹன் said...

அஞ்சலிகள் சொல்லக் கூட வருத்தமாக இருக்கிறது. இத்தனை தூரம் துணை வந்தவர் தொடர்பில் இருந்திருக்கலாம்.எத்தனையோ விதமான உணர்வுகளை எழுப்பிவிட்டது உங்கள் எழுத்து.முதுமையை நனும் உணரத் தொடங்கி இருக்கிறேன்.
ஆறுதல் அடையுங்கள் தருமி.

கோமதி அரசு said...

நட்பின் இழப்பு ஈடு செய்ய முடியாது.
நல்ல தையரியமானவர்களாய் காண்ப்படுபவர்கள் உள்ளத்தால் பலமில்லாதவர்களாய் இருக்கிறார்களேஎ!

நண்பர்களிடம் மனம் விட்டு பேசி இருந்தால் இந்த நிலை வந்து இருக்காது.

அவர் ஆதமா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

Post a Comment