Monday, October 08, 2012

595. ஒரே வார்த்தை; ஒரே அறை .. நட்பு காணாமல் போச்சு! - காணாமல் போன நண்பர்கள் ... 5

*  
இது  அதீதம் இணைய இதழில் செப்ட் முதலிதழில்  வெளி வந்தது.
*


1958-ல் ........... 

எதிர்த்தாற்போல் நிற்பவரின் முகத்தில் ஓங்கி பொளேர்என்று நான் அறைந்தது வாழ்க்கையில் மூன்றே மூன்று முறைதான் நடந்தது. முதல் தடவை தான் இது.

என் பள்ளி நாட்களில்  தெற்கு வாசல் மார்க்கட் பகுதி மட்டும் கூட்டம நிறைந்த பகுதியாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் தெற்கு வாசல் மார்க்கட்டிலிருந்து தெற்கு மாரட்டு வீதி முழுவதும் ஒரே சந்தை தான். இதில் இப்போது அந்த வீதி ஒரு வழிப் பாதைவேறு. எப்படியோ மக்களும் வாகனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் தங்கள் வழியைப் பார்த்துக் கொள்கிறார்கள்.   மார்க்கெட்டிலிருந்து கிழக்கே உள்ள காளியம்மன் கோவில் வரை ஏறக்குறைய மாலை வரை பெருங்கூட்டம் தான். இப்போதெல்லாம் அந்தப் பக்கம் போனாலேயே நம் சின்ன வயதில் பார்த்த தெருதானா என்று சந்தேகம் வந்து விடுகிறது. அவ்வளவு நெருக்கும் மனிதக் கூட்டம். நாங்கள் குடியிருந்த பழைய வீட்டின் வாசலை இப்போது போய் பார்த்தேன்.  அம்மாடி .. சின்னூண்டு வாசலாகப் போய்விட்டது. நெடுக அந்த வாசல் இருட்டுக்குள் நீளமாகப் போனது. யார் அங்கு இருக்கிறார்களோ என்ற நினைப்பில் உள்ளே போகவில்லைஒரு நாள் முயற்சிக்கணும்.
எண் 1 போட்டது தான் பழைய வீட்டு வாசல். ஆனாலும் அந்தக் காலத்தில இம்புட்டு சிறுசா இல்லை. எண் 2 போட்டது நான், தாவூது, அத்தா மூணுபேரும் உக்காந்து பேசுன திண்ணை.


இந்த வீட்டிற்கு மேற்குப் பக்கத்தில்பருப்புக் கடைஎன்று ஒன்று பெரிதாக இருந்தது. அரிசி, பருப்பு, மாட்டுக்கான புண்ணாக்கு என்று பல வகை இருந்தன. ஆனால் எல்லோரும் சொல்வது பருப்புக் கடை என்று தான். அந்தக் கடை இருந்த அந்த வீட்டின் உரிமையாளர் அதற்கு அடுத்த வீட்டில் இருந்தார். அவர் பெயரெல்லாம் தெரியாது. அப்பா பெரிய பள்ளிக்கூடத்து ஆசிரியரா .. அதனால் அந்த ஏரியாவில் கொஞ்சம் பிரபலம் தான்.  நானும் வாத்தியார் பையன்என்ற பெயரில் சுற்றி வந்தேன். பருப்புக் கடைக்காரர், அடுத்த வீட்டு பாய் எல்லோருக்கும் என்னை நன்கு தெரியும்.
சிகப்பு கலர்ல 1 போட்டது பழைய வீட்டு வாசல். பச்சைக் கலர்ல 3 போட்டிருக்கிறது பருப்புக் கடை. அதுக்கு அடுத்த வீடுதான் தாவூது வீடு.

எங்கள் வீட்டிற்கு கிழக்குப் பக்கம் நாலைந்து வீடுகள் தாண்டியதும் உயர்ந்த படிக்கட்டோடு ஒரு முக்கு வீடு. அப்போது அது எங்கள் ஏரியாவின் தபால் நிலையம். படிக்கட்டும் நல்ல உயரம். அதோடு முன்னால் தகரத்தில் ஒரு சாய்ப்பு இருக்கும். அந்த வீட்டிற்குப் பக்கத்திலேயே ஒரு பெரிய முன் விளக்கு. மெர்க்குரி விளக்குன்னு நினைக்கிறேன். நல்ல பிரகாசமா இருக்கும். அதனால் எங்க தெருப் பசங்கள் ராத்திரி படிப்பதற்கு வசதியாக இருக்கும். குளிர் காலத்திலும் மழைக் காலத்திலும் படிக்க எங்களுக்கு வசதி.
4-ம் எண் தான் அந்தக் காலத்து  தபால் நிலையம். எங்களுக்குப் படிக்க இடம் (திண்ணை) கொடுத்த இடம்.

எங்கள் வீட்டுக்கு அடுத்த கீழ்ப்பக்கத்து வீட்டில் முன்புறம் ஒரு திண்ணை இருக்கும். அந்த வீட்டின் கதவு திறந்தே நான் பார்த்தது இல்லை. இந்த வீட்டு பாய், பருப்புக்கடைக்கு அடுத்த வீட்டுக்கார பாய்க்கு உறவினர். இந்த வீட்டின் பின்புறம் எங்கள் வீட்டு மெத்தையிலிருந்து பார்த்தால் நன்கு தெரியும். முன்பக்கத்தில் இருந்த அந்த வீடு சின்னது தான். ஆனால் அதன் பின்னே ஏறத்தாழ 20 சின்னச் சின்ன ஓட்டு வீடுகள் இருக்கும். எல்லாம் வாடகைக்கு இருப்பவர்கள். ஏழைகள். என் மெத்தைக்கு அடுத்து நேரே கீழே இருந்த ஒரு வீட்டில் யாரோ ஒரு பெண்ணுக்கு பேய் பிடிக்குமாம். ராத்திரி நான் வேறு எங்கள் மொட்டை மாடியில் தனியாக இருப்பேனா .. அப்போவெல்லாம் ரொம்ப பயமாக இருக்கும். அந்தப் பெண் போடும் சத்தம் கொஞ்சம் வேடிக்கையாகவும், ரொம்ப பயமாகவும் இருக்கும். ஏன் வேடிக்கைன்னு சொல்றேன்னா ... அந்த அம்மா பேய் வந்த போதெல்லாம் ஆ .. ஆஆ .. இ...ஈன்னுமாதிரி சத்தம் போடும். என்னடா .. பேய் வந்து அ, , , படிக்குதுன்னு பேசிக்குவோம்.

அடடா ... நண்பனைப் பத்தியும் அவனுக்கும் எனக்குமான சண்டையைப் பற்றிச் சொல்ல வந்தவன் ரொம்பவே scenario பத்தி  சொல்லிட்டேனோ ... சரி .. விஷயத்துக்கு வருவோம்.

அந்த பருப்புக் கடைக்கு அடுத்த வீடு சொன்னேனே ... அந்த பாய் அந்த ஏரியாவில் இருந்த முஸ்லீம்களில் ரொம்ப முக்கியமான ஆள். அவருக்கு வேண்டியவர் தான மதுரை முனிசிபாலிடி மெம்பராக தேர்தலில் நின்றார். அப்போ மதுரை முனிசிபாலிடியாக இருந்தது மட்டுமல்ல ... அப்போ நடக்கும் தேர்தல்களில் கட்சிப் பெயர்கள் ஏதும் இருந்ததாக நினைவில்லை. நினைவில் இருக்கும் பெரிய விஷயம் என்னவென்றால் அப்போதெல்லாம் ஓட்டு போட சின்னம் என்று ஏதும் இருக்காது. எனக்கு பச்சை பொட்டி ... உனக்கு சிகப்பு பெட்டி .. அவருக்கு நீலப்பெட்டி ... இப்படிதான் இருக்கும். பெட்டியின் கலர் சொல்லித்தான் ஓட்டுக் கேட்பார்கள். மக்கள் அம்புட்டு கல்வியறிவோடுஇருந்திருக்காங்க போலும்!  அதோடு அப்பவே கொஞ்சம் காசும் தேர்தலில் விளையாடியது. வெற்றிலையில் நாலணா, எட்டணா வைத்துக் கொடுத்து, பொட்டியின் கலரைச் சொல்லி, அதில் ஓட்டுப் போடச் சொல்வார்கள். வெற்றிலையில் காசு வைத்துக் கொடுத்தால் சத்தியம் பண்றது மாதிரியாம். அதனால் அந்த ஓட்டெல்லாம் நமக்குத்தான் அப்டின்னு மக்கள் பேசிக்குவாங்க. ஒரு நாள் தேர்தல் நேரத்தில் என் அப்பாவும் அந்த பாயும் இதையெல்லாம் பேசிக்கொண்டு இருந்தைக் கேட்டேன்.

அந்த பாயின் மகன் பெயர் தாவூது. நல்ல சிகப்பா, சதை போட்டு கொஞ்சம் குண்டாக இருப்பான். அவனோடு எப்போதும் ஒரு பையன் இருப்பான். இந்தக் காலத்து வார்த்தையில் சொல்லணும்னா, அவன் தாவூதுக்கு ஒரு அல்லக்கை. கறுப்பா ஒல்லியா சின்ன பையனா இருப்பான். தாவூதும் நானும் சேர்ந்து விளையாடியிருக்கிறோம். நானும் அவன் வீட்டுக்கு கிறிஸ்துமஸ் பலகாரம் கொடுக்க  போயிருக்கிறேன்.  தாவூதின் அத்தாவுக்கு  நானும், அவனும்  நல்ல நண்பர்களாக இருக்கணும் என்று ரொம்ப ஆசை. சேர்ந்து விளையாடுங்கப்பா என்று அடிக்கடி சொல்வார்.

ஒரு நாள் நான், தாவூது, அவனது அல்லக்கை மூன்று பேரும் எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டுத் திண்ணையில் விளையாடிக்கொண்டிருந்தோம். திடீரென எனக்கும் தாவூதுக்கும் ஏதோ பிரச்சனை. விவாதித்துக் கொண்டிருந்தோம். தாவூதுக்கு ரொம்ப கோபம் வந்து என்னை, ‘போடா சு**என்று மூன்றெழுத்துக் கெட்ட வார்த்தையால் திட்டி விட்டான். நானெல்லாம் அப்போ ரொம்ப சுத்தம்”. மயிர் என்றாலே கெட்ட வார்த்தை என்று நினைத்த நல்ல காலம் அது! தம்பி, தங்கச்சி யாரும் இதைச் சொல்லிட்டா அப்பாட்ட போட்டுக் குடுத்து அடி வாங்கிக் கொடுக்குற அளவுக்கு அந்த வார்த்தைன்னாலே ஒரு ‘இது’!!  தாவூது இப்படி சொன்னதும் என் கோவம் உச்சிக்குப் போய் விட்டது. ஓங்கி அவன் கன்னத்தில் பொளேர் என்று அறைந்து விட்டேன். சிவத்த பயலா .. அப்படியே கன்னம் சிவந்து போச்சு. அல்லக்கை சும்மா குதிச்சான். அப்படியே எதிர்த்தாற்போல் நின்றேன். தாவூது கலங்கி நின்றான். நான வீட்டுக்குப் போய் விட்டேன்.

நான் அப்போவெல்லாம் ரொம்ப பயப்படுவது என் அப்பாவிற்குத் தான். இப்படி சண்டை போட்டேன் என்று தெரிந்தால் நல்லா உழும்’. ஆனால் இந்த தடவை நான் அப்பாவுக்குப் ப்யப்படவேயில்லை. தாவூது அவன் அத்தாவிடம் சொல்லுவான்; அவர் நேரே வீட்டுக்கு வருவார்; அப்பாவிடம் போட்டுக் குடுப்பார். நல்லா நமக்கு விழும்’ ... இப்படி ஒரு screen play  தயார் செய்து விட்டிருந்தேன். இருந்தாலும் அப்பா மேல் இந்த தடவை பயம் வரவில்லை. சத்தியத்தின் support இருந்ததால் இருக்குமோ!

ஆனால் என் screen play தோத்துப் போச்சு. தாவூது போய் அத்தாவிடம் போய் சொல்லியிருக்கிறான். அல்லக்கை நல்லா தூபம் போட்டிருந்திருக்கிறான். மாலை நேரம். அல்லக்கை என் வீட்டுக்கு வந்து,  வா .. உன்னை அத்தா கூப்பிடுறார்அப்டின்னான். நானும் வெளியே வந்தேன். அடுத்த வீட்டுத் திண்ணையில் அத்தா உட்கார்ந்திருந்தார்; கோபத்தோடு என்னைப் பார்ப்பார் அப்டின்னு நினச்சேன். அவர் ரொம்ப சாதாரணமாக என்னைக் கூப்பிட்டார். பக்கத்தில் நிற்க வைத்துக் கொண்டார்.

என்னப்பா ... தாவூதை அடிச்சியா?’ என்றார்.

ஆமா.

எதுக்குப்பா அவனை அடிச்ச்?’

கெட்ட வார்த்தை சொல்லித் திட்டினான். அதான் ...

என்ன வார்த்தை சொல்லித் திட்டினான்?’

இங்க தான் ஜார்ஜ் ஒரு ஸ்கோர் பண்றான். (யாரு ஜார்ஜுன்னு கேக்றீங்களா? அது நான் தான்!)

அப்டி சொல்ற வார்த்தையா இருந்தா, நான் ஏன் அவனை அடிக்கப் போறேன்என்றேன்.

அத்தா என்னை இழுத்து அணைத்துக் கொண்டார். தாவூதைப் பார்த்து அவனை அப்படி திட்டினீயா? என்றார். அவன் தலையை ஆட்டினான். அவனைப் பாரு .. அந்த வார்த்தையைக்கூட அவன் சொல்ல மாட்டேங்குறான். ஆனா நீ அப்படி சொல்லி அவனைத் திட்டியிருக்க. இனிமே அவனை மாதிரி அந்த வார்த்தையெல்லாம் நீயும் பேசக்கூடாதுஎன்றார். தாவூதும் தலையை ஆட்டினான்.

அத்தா எங்க ரெண்டு பேரையும் பார்த்து, ‘இன்னும் ரெண்டு பேரும் ந்ல்ல பிரண்ட்ஸா இருக்கணும்என்றார், இருவரும் தலையை ஆட்டினோம். சரிப்பா ... நீ வீட்டுக்குப் போஎன்று முதுகில் தட்டி என்னை அனுப்பி வைத்தார்.

அதன் பின்னும் எனக்கும் தாவூத்துக்கும் ஒத்து வரலை. கொஞ்சம் தனித் தனியாகி விட்டோம். பின்னாளில் அந்த தெருவில் இருந்த,  இருக்கும் இன்னொரு நண்பர்  பேரா. ஜாபர் ஹூசைனிடம் கேட்டேன். தாவூது, என்னை மாதிரி இல்லாமல், நல்லா படிச்சி C.A. முடிச்சி, ஆடிட்டராகிட்டான் என்றார். அதோடு ஒரு கல்யாண மண்டபம் தெற்கு வெளி வீதியில் கட்டியிருக்கிறான் என்றார்.

எனக்கும் அவனைப் பார்க்கணும்னு இன்னும் ஆசைதான் ... ஆனாலும் கொஞ்சம் ஒரு இதுவாக இருக்கிறது.


பின்கதை:
கெட்ட வார்த்தைன்னா அப்ப்டி ஒரு காண்டோடுஒரு காலத்தில் இருந்திருக்கிறேன். அப்படி இருந்த நான் எப்படி ஆனேன்??

கெட்ட வார்த்தை பக்கமே நான் போனதில்லையா. 1970 அக்டோபர் மாதம் ஒரு பைக் வாங்கினேனா ... அப்போ வண்டி ஓட்ட சொல்லிக் கொடுத்த நண்பரோடு மதுரை ஆல்பர்ட் பாலத்தில் அவரைப் பின்னால் வச்சிக்கிட்டு போனப்போ .. எவனோ ரோட்டில் தப்பா வண்டி ஓட்டினானா ...  உடனே நான் முட்டாப்பயலே ...என்பது போன்ற ரொம்ப நீட்டான வார்த்தைகளால் அவனைத் திட்டினேன். ஆனால் பின்னாலிருந்த நண்பர் - அவ்ர் பெயர் எதுக்கு .. வேணாமே ... - இப்படியெல்லாம் திட்டக் கூடாது ... சிறுசா சொல்லணும் ... effective ஆக இருக்கணும் அப்டின்னு ஒரு ரெண்டு எழுத்து கெட்ட வார்த்தை சொல்லிக் கொடுத்தார். அது தான் ஆரம்பம்.

கொஞ்ச நாளிலேயே கத்துக் கொடுத்தவரே ஆச்சரிய்பப்டும் அளவிற்கு அந்த ரெண்டெழுத்துக் கெட்ட வார்த்தைக்கு முன்னால் இன்னும் கொஞ்சம்பண்புத்தொகையெல்லாம்  சேர்த்து பயங்கர expert ஆய்ட்டேன். நம் நண்பரே அசந்துட்டார்னா .. பாத்துக்கங்களேன்.

அட .. அதைவிட இன்னொரு நிகழ்ச்சி. பின்னால் ரவி என்ற நண்பன் உட்கார்ந்திருந்தான்.பயலுக்கு என்னை விட இருபது வயது கம்மி; நல்ல பயல். சுத்தமா கெட்ட வார்த்தை ஏதும் பேச மாட்டான். நாங்கள் போகும் போது சந்துக்குள் இருந்து ஒருத்தன் சைக்கிளில் திடீர்ரென்று வர ...நாங்கள் எப்படியோ ப்ரேக் அடித்து நிற்க ... அவன் சறுக்கி விழுந்தான். விழுந்தவன் எழுந்ததும் என்னைப் பார்த்து கெட்ட வார்த்தையோடு ஏதோ சொன்னான். சும்மா ... ஆவேசம் வந்திருச்சில்ல .. எடுத்து உட்டேன். மதுரையின் சங்கத் தமிழை ... சும்மா பீறிட்டு வந்திருச்சில்லா .. செமையாக் கொட்டித் தீர்த்தேன். விழுந்த பயல் அசந்துட்டான் ... வண்டிய எடுத்துட்டு ஓடியே போய்ட்டான்.

கொஞ்ச தூரம் போனதும். ரவி ஒரு டீக்கடையில் நிப்பாட்டச் சொன்னான். நிறுத்தி விட்டு என்னப்பா ஏதும் அடி .. கிடி பட்ருச்சான்னு கேட்டேன். 

இல்ல சார் .. கொஞ்சம் மூச்சு வாங்கணும்என்றான். 

எதுக்கு?’ என்றேன்.

எப்டி சார் ... இம்புட்டு வார்த்தை தெரிஞ்சிருக்கு .. அதுவும் சட சடன்னு வருதுஎன்றான்.

அது எல்லாம் ஒரு flow-வில வர்ரது தானே!என்றேன்.

ஆனா பாருங்களேன் ... அன்னைக்கி ஒரு வார்த்தை காதில் விழுந்ததும் எப்படி கோபம் வந்திச்சி .. இப்போ என்னடான்னா  .. வண்டி வண்டியா வார்த்தைகள் வந்து விழுதுன்னு நினச்சிக்கிட்டேன்.  

அப்படி இருந்த நான் இப்படியாயிட்டேனே!!


*
10 comments:

P T Chenthil kumar said...

arumai

P T Chenthil kumar said...

Arumai

suvanappiriyan said...

//ஆனா பாருங்களேன் ... அன்னைக்கி ஒரு வார்த்தை காதில் விழுந்ததும் எப்படி கோபம் வந்திச்சி .. இப்போ என்னடான்னா .. வண்டி வண்டியா வார்த்தைகள் வந்து விழுதுன்னு நினச்சிக்கிட்டேன்.//

கர்த்தரை ஏற்றுக் கொண்டு ஏசுவை இறைத் தூதராக ஏற்றுக் கொண்டீர்கள் என்றால் பல வசவுகளிலிருந்து தப்பிக்கலாம். இறப்புக்குப் பிறகு டார்வினோ நாத்திகமோ கை கொடுக்கப் போவதில்லை.

தெரிஞ்சதை சொல்லிட்டேன். அவ்வளவுதான். இதுக்கு மேல உங்க இஷ்டம். :-(

கையேடு said...

அது என்ன சார் ரெண்டெழுத்து வார்த்தை.. 1* 1 லெட்டர் போட்டு க்ளூ குடுங்களேன்.

நான் நல்ல புள்ளைன்னு வேற எப்படிதான் காமிச்சிகிறது.. :)

தருமி said...

//இறப்புக்குப் பிறகு டார்வினோ நாத்திகமோ கை கொடுக்கப் போவதில்லை.

தெரிஞ்சதை சொல்லிட்டேன். அவ்வளவுதான். இதுக்கு மேல உங்க இஷ்டம். :-(//

இறப்புக்குப் பிறகு டார்வினோ நாத்திகமோ, அல்லாவோ, ஏசுவோ, பிள்ளையாரோ கை கொடுக்கப் போவதில்லை.

தெரிஞ்சதை சொல்லிட்டேன். அவ்வளவுதான். இதுக்கு மேல உங்க இஷ்டம். :-(

துளசி கோபால் said...

அட! ஜார்ஜுக்குள் இப்படி ஒன்னு இருக்கா!!!!!

Jenil said...

//
கர்த்தரை ஏற்றுக் கொண்டு ஏசுவை இறைத் தூதராக ஏற்றுக் கொண்டீர்கள் என்றால் பல வசவுகளிலிருந்து தப்பிக்கலாம். இறப்புக்குப் பிறகு டார்வினோ நாத்திகமோ கை கொடுக்கப் போவதில்லை.

தெரிஞ்சதை சொல்லிட்டேன். அவ்வளவுதான். இதுக்கு மேல உங்க இஷ்டம். :-( //

What will happen at the MOST... Willbe HELL.. Dharumi SIR no problem NAAN irrukean companniku.. WE will all enjoy there... Just think if u go to HEAVEN wat will happen ?? we shud be talking to Suvana Piriyan... But think about HELL we have DARWIN, EINSTIEN, HITLER, GANDHI, STALIN, AKBAR, ALEXANDER, wow the list will be going on ... HELL will be more intresting that HEAVEN :) :) :) :)

தருமி said...

அது சரிதான், ஜெரில்.
நாம் ஜாலியா பேசிக்கிட்டே .. பேசிக்கிட்டே ஜாலியா இருக்கலாம்.

ஆனா சு.பி.கூட இருந்தா “பேசவே” வேணாமாமே ... அதான் ‘ஒரு மாதிரியா’ இருக்கு

:-(

செல்வநாயகி said...

//இறப்புக்குப் பிறகு டார்வினோ நாத்திகமோ கை கொடுக்கப் போவதில்லை.

தெரிஞ்சதை சொல்லிட்டேன். அவ்வளவுதான். இதுக்கு மேல உங்க இஷ்டம். :-(//

இறப்புக்குப் பிறகு டார்வினோ நாத்திகமோ, அல்லாவோ, ஏசுவோ, பிள்ளையாரோ கை கொடுக்கப் போவதில்லை.

தெரிஞ்சதை சொல்லிட்டேன். அவ்வளவுதான். இதுக்கு மேல உங்க இஷ்டம். :-( ///////

I enjoyed this answer:))

தருமி said...

செல்வநாயகி,

long time ... no see ..


Post a Comment