*
கல்லூரி பசங்க மூணுபேரு அவங்க கல்லூரி முதல்வரைக் கொன்னுட்டாங்களாமே ... இதை ஒரு ஐந்து வருஷத்துக்கு முந்தி சொல்லியிருந்தா நான் ரொம்ப ஆச்சரியப்பட்டிருப்பேன். ஏன்னா என் அனுபவம் அப்படி. நான் 33 வருஷமா வேலை பார்த்த கல்லூரியும் சரி .. அங்குள்ள எங்க மாணவர்களும் சரி .. அப்படித் தங்கமா இருந்தது.
வேலை பார்த்தா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேலை பார்க்கணும் அப்டின்னு எல்லோரும் நினைக்கிற அளவிற்குக் காலம் காலமாய் இருந்தது எங்கள் கல்லூரி. மற்றக் கல்லூரி ஆசிரியர்களே எங்கள் கல்லூரிக்காகவே அங்கே வேலை பார்க்கிற எங்களை கொஞ்சம் பொறாமையோடு பார்த்து, கல்லூரிக்காகவே எங்களுக்குத் தனி மரியாதை கொடுத்ததைப் பல தடவை அனுபவித்திருக்கிறேன். நிறைய சுதந்திரம். நிறைய சலுகைகள். அந்தக் கல்லுரியில் வேலை பார்ப்பதே அப்படி ஒரு சுகம். அழகான ஆசிரிய-மாணவ உறவுகள்.
ஆசிரியர்களுக்குத்தான் அப்படியென்றால் இங்கு மாணவனாக இருப்பதும் தனிப் பெருமை. மதுரையில் அமெரிக்கன் கல்லூரி மாணவன் என்றால் இளைஞர் உலகத்தில் தனியிடம் தான். அட ... கல்லூரி மாணவிகளிடமே அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்குத் தனியிடம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ONE SIDE OF OUR COLLEGE
கல்லூரி என்றாலே ragging என்றெல்லாம் சொல்லுவார்களே ... அப்படியெல்லாம் எங்கள் கல்லூரியில் கிடையாது. சூழலே வேறு, ஆண்டின் ஆரம்பத்தில் admission forms கொடுக்க ஆரம்பித்த நாளே கல்லூரிக்குள் ஒரு தற்காலிக கூரை ஷெட் ஒன்று போட்டிருப்பார்கள். அதில் விரும்பும் சீனியர் மாணவர்கள் புதியதாக admission வாங்க வரும் மாணவர்களுக்கு அறிவுரை கூறத் தயாராக இருப்பார்கள். புதிதாக வரும் மாணவர்கள் எந்த பாடம் எடுத்திருக்கிறார்கள்; எந்தப் பாடத் திட்டத்தில் சேரலாம் போன்றவைகளைச் சொல்வார்கள்.
அதைவிட அவர்களின் உதவி புதிய மாணவர்களுக்கு, அதிலும் கிராமத்திலிருந்து வரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கும், அவர்கள் பெற்றோர்களுக்கும் மிகவும் வசதியாக இருக்கும். இந்த மாணவர்களே admission-யை முழுவதும் நிரப்பித் தர உதவுவார்கள். புது மாணவர்களுக்குத் தொல்லை தருவது தங்கள் மதிப்பெண்களுக்கு admission form-ல் attestation பெறுவது. வெளியூரிலிருந்து வரும் மாணவன் ... பாவம் attestation வாங்க எங்கே போவான்? அதற்காகவே volunteer ஆக உதவுவதற்காக இருக்கும் மாணவர்கள் விடுமுறையிலும் கல்லூரிக்கு வரும் ஆசிரியர்களின் உதவியோடு உடனே attestation வாங்கிக் கொடுத்து விடுவார்கள். admission form வாங்க வருபவர் சில நிமிடங்களில் அதனை முழுவதுமாக பூர்த்தி செய்து, உடனே கல்லூரியில் கொடுத்து விட்டுச் செல்லும் நிலைமை இருக்கும். எனக்குத் தெரிந்த வேறு எந்தக் கல்லூரியிலும் இப்படி சீனியர் மாணவர்கள் புதிய மாணவர்களுக்கு இப்படி உதவுவது இருப்பதாகத் தெரியவில்லை.
Thanks to Dr. Silas who introduced this 'May I Help' counter.
admission form போடும் போது கிடைக்கும் இந்த இன்ப உதவி இன்னும் நீடிக்கும். மாணவனுக்கு இடம் கிடைத்த பிறகு கல்லூரி ஆரம்பிக்கும் நாளன்று கல்லூரிக்குள் நுழைந்ததும் சீனியர் மாணவர்களால் வரவேற்கப்படுவார்கள். இன்று சீனியர்களுக்கு வகுப்பு இருக்காது. volunteers மட்டும் இருப்பார்கள்.
மாணவர் விடுதிகள், துறைகள் என்று தனித்தனியாக சீனியர் மாணவர்கள் மேஜை போட்டு, வரும் புதிய மாணவர்களை வரவேற்று அவர்கள் விடுதிக்குச் செல்ல உதவுவார்கள். முதல் நாளன்று காலையில் புதிய மாணவர்களுக்கு கூட்டம் ஒன்று - ORIENTATION - நடக்கும். வழக்கமாக கல்லூரி முதல்வர் தமிழில் மாணவர்களை வரவேற்றுப் பேசுவார். பெற்றோர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும். கூட்டம் முடிந்ததும் புதிய மாணவர்கள் தங்கள் தங்கள் துறைக்குச் செல்வார்கள். volunteers அவர்களை வழி நடத்தி துறைக்கு அழைத்துச் செல்வார்கள். ஆசிரியர்கள் துறைகளில் காத்திருந்து துறை பற்றிய விளக்கங்கள், ஏனைய எதிர்பார்ப்புகள் என்றெல்லாம் பரிமாறுவதுண்டு.
மதியம் புதிய மாணவர்களுக்கு கல்லூரி விடுதிகளில் உணவு. புதிய மாணவர்கள், volunteers, ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து மதிய உணவு. என் அனுபவத்தில் ஒரு முறை வெளிநாட்டு மாணவன் ஒருவன் என் அருகில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் அழ ஆரம்பித்து விட்டான். என்னப்பா என்று கேட்டால், I never thought that I could sit with my masters in a lunch table என்று உறுக்கமாக அழுது கொண்டே பேசினான். இப்படி கல்லூரி வாழ்வை ஆரம்பிக்கும் ஒரு மாணவனுக்கு கல்லூரியின் மீதோ, ஆசிரியர்கள் மீதோ எவ்வளவு நம்பிக்கையும், பாசமும் இருக்கும்.
மீண்டும் மாலையில் துறையில் சந்திப்பு. இப்போது பொதுவாக volunteers பொறுப்பேற்றுக் கொள்வார்கள். மாணவர்களை கல்லூரியின் பல இடங்களுக்கு - நூலகம், மைதானம், வகுப்பு நடக்கும் பல கட்டிடங்களும் அவர்களின் பெயர்களும், N.C.C., N.S.S. - போன்ற இடங்களுக்கு volunteers அழைத்துப் போவார்கள். மாலை மறுபடி ஒரு கூட்டம். இப்போது கல்லூரித் தலைவர் ஆங்கிலத்தில் உரையாற்றுவார்.
புதிய மாணவர்கள் மூன்றாம் நாள் தான் சீனியர் மாணவர்களைச் சந்திப்பார்கள். ஆனால் அதற்குள் பல volunteers அவர்களுக்குப் பழகியிருக்கும். volunteers சீனியர்கள் அநேகமாக இதற்குள் புதியவர்களுக்கு ‘அண்ணனாக’ மாறியிருப்பார்கள். இச்சூழலில் ஏது ragging!! எல்லாமே smooth sailing தான்.
------------------
மாணவர்களுக்கு கல்லூரி வாழ்க்கையின் முதல் நாள் இவ்வளவு இனிமையாக இருக்கும். ஆனால் கடைசி நாள் அவர்களையும், அவர்கள் மனத்தையும் உலுக்கியெடுத்து விடும். CANDLE LIGHT CEREMONY . கல்லூரியின் இறுதி வேலை நாளின் மாலையில் துறை வாரியாக மாணவர்களும், ஆசிரியர்களும் அமர்ந்து ஒரு high tea முடித்து விட்டு, கல்லூரியின் பெரு மன்றத்திற்குள் வெள்ளை ஆடையோடு அமைதியாக நுழைந்து அமர்ந்திருக்க வேண்டும். Schubert-ன் Ave Maria என்ற symphony இசை மெல்லியதாகத் தவழ்ந்து வரும்.What a gripping music!
மண்டபத்தின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு மேடையில் ஒரே ஒரு குத்து விளக்கு மட்டும் எரியும். அதிலிருந்து ஆசிரியர்கள் தங்கள் மெழுகுவர்த்தியை ஏற்றி, மாணவர்களிடையே வந்து அவர்களின் மெழுகுவர்த்திகளில் ஒளியை ஏற்றுவார்கள். இருண்ட மண்டபம் சில நிமிடங்களில் மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில் ஒளிரும். வெளியே வரும் மாணவர்கள் மண்டபத்தின் சுவர்களில் மெழுகுவர்த்திகளை ஆங்காங்கே வைத்து விட்டு வந்த பின் இருளில் பார்க்கவே அந்த மண்டபம் ஒளியால் மின்னும்.
வழக்கமாக இந்த விழாவின் படிப்பு முடித்து வெளியேறும் மாணவர்களின் உணர்ச்சிகளை அதிகமாகவே தூண்டி விட்டு விடும். பல ஆண்டு மாணவர்களோடு இந்த உணர்ச்சிப் போராட்டத்தில் நானும் இருந்ததை இன்றும் எண்ணும்போது கொஞ்சம் மனசு தடுமாறுகிறது. ஆயிரத்தி தொன்னூறு தொன்னூற்றைந்து ஆண்டு வரை இந்த நாளில் மாணவர்கள் தங்கள் துறைகளுக்குச் சென்று தங்கள் உணர்வுகளின் மேலீட்டால் கலங்குவதோ, அழுவதோ ஒரு தொடர் நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் இருக்கும். A very sentimental day ........ No American College student can forget this day.
-----------------
பல முறை என் கல்லூரி மாணவர்களின் ‘நன்னடத்தை’ என்னைப் புல்லரிக்கச் செய்துள்ளன. ஒரு உதாரணம். கல்லூரியின் MAIN HALL தனது 90வது ஆண்டை முடித்த போது அதை ஒரு விழாவாக எடுக்க முடிவு செய்யப்பட்டது. என் நல்லூழ். நான் அதன் coordinator ஆக இருந்தேன். அந்த நாளை COMMEMORATION DAY என்று கொண்டாடினோம். (சில ஆண்டுகள் தொடர்ந்து நடந்த இந்த இனிய விழா கல்லூரித் தலைமை மாறியதும் நின்று போனது இன்னொரு சோகம்!) மதியத்திலிருந்து விழாக்கோலம். ஒரு பக்கம் மாணவர்களின் ஆட்டம் .. பாட்டம். இன்னொரு பக்கம் food court .. மகிழ்ச்சியால் எல்லோரும் மூழ்கி இருப்போம். பட்டிமன்றமும் நடந்தது. எல்லா நிகழ்ச்சிகளுக்கும் முத்தாய்ப்பாய் இறுதியில் ஒரு ஒலி-ஒளிக் காட்சி.
நான் பொறுப்பில் இருந்த முதல் வருடத்தில் மெயின் ஹாலைப் பின்னணியாக வைத்து, 90 ஆண்டுகளுக்கு முன் பசுமலையிலிருந்த சிறு கல்லூரி இந்தப் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டதை வைத்து, அந்தக் காலத்து கல்லூரி முதல்வர் எடுத்த அந்த நல்ல முடிவை நாடகமாக்கினோம். மெயின் ஹாலைச் சுற்றி மாணவர்களை நிற்க வைத்து, மேலே மாணவ-நடிகர்கள் நடித்தார்கள். அவர்களுக்குப் பின்புலமாகக் கீழிருந்து ஒலி தந்தோம். இதில் நாங்கள் மறந்தது - இது மாணவர்களுக்குப் புதிய ஒரு நிகழ்வு. மாணவிகளும் நிறைய் உண்டு. எங்கும் இருள். யாருக்கும் எந்த தொல்லையும் இருக்கக்கூடாது. ஆனால் இதை நாங்கள் முதலில் நினைத்துப் பார்க்கவில்லை. ஆகவே ‘பந்தோபஸ்து’ ஏதும் திட்டமிடவில்லை.
விளக்குகள் அணைந்தன. எங்கும் இருட்டு. ஒரே ஒரு விளக்கு ஹாலின் முன்பக்கம் ஒளிர்ந்தது. அந்த ஒளியில் ‘ஜெபம்’ நடந்தது. பின் ஒலி-ஒளி நிகழ்ச்சி. நிகழ்ச்சியில் நடிகர்கள் ஹாலின் உள்ளும், மேலும் கைகளில் தீவட்டிகளோடு நடித்தார்கள் - 90 ஆண்டுகளுக்கு முந்திய நிகழ்வல்லவா! புதிய கட்டிடம் கட்டப்பட்டதாக நடித்தார்கள். அதன் முடிவில் YANNY-ன் ஓசைப் பின்னணியோடு ஒரு தீப்பிழம்பு கீழிருந்து கட்டிடத்தின் உச்சிக்கு எழும்பியது விழாவின் அது உச்ச கட்டமாக இருந்தது.
எந்தக் குழப்பமும் இல்லை. விளக்குகள் அணைந்ததும் ஓரிரு விசில்கள். அவ்வளவே. நிகழ்ச்சி முழுவதும் இனிமையான அமைதியில் நடந்தது, தீப்பிழம்பு மேலெழுந்த போது யாரோ ஒரு மாணவன் நிலவியிருந்த அமைதிக்குள்ளிருந்து தனிக்குரலில் உரத்துப் பாட ஆரம்பித்தான்: (வாழ்க அவன்.) HAPPY BIRTHDAY TO YOU .... கூட்டமும் அவனோடு சேர்ந்தது. தன்னிச்சையாக ஆரம்பித்த அந்தப் பாடல் பலரின் கண்களில் கண்ணீரைக் கொண்டு வந்தது. ஆடிப் போய் விட்டேன்.
Thanks to Dr. Sudhnandha for starting commemoration day functions..
Thanks to Dr. Prabakar & Dr. Kali Sundar for the lovely light-sound show.
இது போன்று பல இடங்களில் எங்கள் கல்லூரி மாணவர்களின் நடத்தை பெருமை தேடித்தரும் நேரங்களாக இருந்திருக்கின்றன. நாங்களா சொல்லிக் கொடுத்தோம். அவர்களிடம் அது innate ஆக இருந்திருக்கும் போலும். அந்தப் பெருமை எனக்கு எப்போதும் என் கல்லூரி மாணவர்களைப் பொறுத்து இருந்தது.
ஆனால் ......
-------------------------------------
OTHER SIDE OF OUR COLLEGE
கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்கள் கல்லூரியில் ஒரு குழப்பம்.கல்லூரியை ஆரம்பித்த அமெரிக்க மிஷநரிகள் கல்லூரிச் சட்டத்திலேயே இது பொதுமக்களுக்கான கல்லூரி என்று ஆணித்தரமாகக் கூறி இக்கல்லூரி கிறித்துவக் கட்டுப்பாட்டிற்குள் வராது என்று எழுதி வைத்துவிட்டுப் போனார்கள். ஆனால் இப்போது கல்லூரிகள் எல்லாமே வியாபாரம் தானே. ஆகவே கிறித்துவ சபை C.S.I. கல்லூரியைத் தங்கள் பிடிக்குள் கொண்டுவர முனைந்தார்கள். இப்போது அவர்கள் கையே மேலோங்கி நிற்கிறது. முறையற்ற வழியில் தங்கள் பிடிக்குள் கொண்டு வந்து விட்டார்கள். இதற்கு பல அதர்ம வழிகள். அதில் ஒன்று சில மாணவர்களைத் தங்கள் பக்கம் இழுத்து ..... அதில் பெரும் வெற்றியும் பெற்று விட்டார்கள். அந்த மாணவர்கள் “ஆடிய ஆட்டத்தின்’ சில படங்கள் மட்டும் இங்கே. எங்கள் கல்லூரி மாணவர்களா இவர்கள் என்று நொந்து போய் எடுத்த படங்கள் இவை.
கல்லும் கட்டையும் கல்விக் கருவிகளாகி விட்டன |
வெளியிலிருந்து வேடிக்கை பார்த்த பாதிரிகள் |
இன்னும் இத்தகைய ’அருமையான’ படங்களைப் பார்க்க விரும்பினால், இங்கே செல்லுங்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் வண்டிகளைச் ‘சரியாக’ அடையாளம் கண்டு உடைத்துப் போட்டனர்.
இப்படி ஒரு செயலை கனவிலும் எதிர்பார்க்காத நான் ஒரு நண்பரிடம், ‘இதைப் பார்த்த பிறகாவது எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் ‘ராமன் ஆண்டாலென்ன ... ராவணன் ஆண்டாலென்ன ...’ என்று நினைக்கும் ஆசிரியர்கள் - அதுவும் ‘பக்தி’ மிகுந்த ஆசிரியர்கள் மனம் மாற மாட்டார்களா?’ என்று கேட்டேன்.
நண்பரின் பதில் அதிர்ச்சியடைய வைத்தது. பக்தியான ஒரு ஆசிரியர், ‘இது போல் இன்னும் நடந்தால் தான் போராடுபவர்களுக்கு ‘நல்ல புத்தி’ வரும்’ என்று சொன்னாராம். அடக் கடவுளே ....!
உண்மை வெல்லும் என்கிறார்கள். நிஜமாகவா .... பார்க்கலாம்.
*
ஒன்று புரிகிறது. மாணவர்களில் பலரும் பச்சை மண்கள் தான். எப்படி படைக்கிறோமோ அது போல் அவர்களும் மாறி விடுகிறார்கள் போலும்.
எங்கள் கல்லூரியில் தடியெடுத்தான் ... சமீபத்தில் பார்த்த நிகழ்வில் கத்தி எடுத்திருக்கிறான்.
*
*