Monday, October 07, 2013

688. காதல் தேவையில்லை என தள்ளி வையுங்கள்.











*
என்  பழைய பதிவுகள் சிலவற்றில் என் ‘கண்ணீர்க் குரல்”.  கேட்டுப் பாருங்கள்:


இந்தப் படத்தில நீங்க எதிர்பார்க்கிற எல்லாமும் இருக்கும் - பாட்டு, டான்ஸ், குத்துப் பாட்டு, சென்டிமென்ட், காமெடி - இப்படி எல்லாம் வச்சிருக்கோம். தயவுசெஞ்சி எல்லோரும் தியேட்டருக்கு வந்து படம் பாருங்க அப்டிம்பாங்க. ஐயா, சாம்பார் செய்யும்போது சாம்பார் பொடி மட்டும்தானே போடணும்; ஸ்டாக்கில இருக்கிற பொடி எல்லாத்தையும் ஒண்ணா போடுவேன்னா, அது என்ன குழம்புன்னு சொல்றது. அதைச் சாப்பிட்டு தொலைக்க வேண்டியதிருக்கே ... (உன்ன யாரு படம் பார்க்கச் சொன்னா அப்டின்னு கேட்டுராதீக !)
 -------------------------------------------
  ‘என்னடா இது? நம்ம தமிழ் திரைப்பட இயக்குனர்கள் - ’திலகத்’திலிருந்து ’இமயம்’ - வரைக்கும் யாருக்கும் காதல் என்பதைத் தவிர மையப்புள்ளியாக வேறு ஏதாவது வாழ்க்கைப் பிரச்சனையை வைத்து படம் இயக்கவே தெரியாதா?” என்பது எனது பல காலத்து பிலாக்கணம். அப்பாடா ... கொஞ்சம் நல்ல முடிவுகள், வளர்ச்சிகள் தெரியுது. 
யுத்தம் செய்
நந்தலாலா
பயணம்
ஆடுகளம்
அழகர்சாமியின் குதிரை
----------------------------------------------
இப்படி ‘மசாலா’ படங்களாக இன்னும் எத்தனை கால்த்திற்குத்தான் பார்த்துக்கொண்டே இருக்கப் போகிறோம். ஆங்கிலத்தில் சொல்வார்களே -genre - என்று அதுபோல வகைப்படுத்தப் பட்ட படங்களைப் பார்க்கும் காலம் வரவே வராதா? நம் இந்தியப் படங்களில்தான் இப்படி ‘எல்லாமும்’ சேர்ந்த சினிமாக்கள் வருகின்றன. action, thriller, musical, mystery, suspense, western, war stories என்று எத்தனை வகைகள் மற்ற எல்லா மொழிப்படங்களிலும் இருக்கிறதே ...

 ----------------------------------------------------
 -- இவையெல்லாம் என் முன் அழுகைப் பதிவுகளில் எழுதியவை. சோகம் தான். பின் இருக்காதா? எந்தப் படம் எடுத்தாலும் காதல் மட்டுமே மையப்புள்ளியாகக் கதைகள். அதுவும் ஒரே மசாலா. காரமே இல்லாத மசாலா. எப்படியாவது உலக சினிமாக்களில் வருவது போன்ற genre movies வரவே வராதா என்ற ஏக்கம் எனக்கு. ஆனால் தமிழ்ப்படங்களில் அப்படி ஒரு நிலை வரவே வராது என்பதே இணையப் பதிவுலகத்திற்குள் நுழைந்த போது நான் கொண்டிருந்த எண்ணம். காதல் இல்லாத படம் என்றால் அந்தக் காலத்தில் வந்த ‘அந்த நாள்’ படமும், ஜெயகாந்தனின் ஓரிரு படங்களும் நினைவுக்கு வந்து செல்லும். அவ்வளவே.

இப்படிப் போய்க்கொண்டிருக்கும் போது புது விடியல் போல் இப்போது வரும் படங்களில் பல காதலைப் புறந்தள்ளி விட்டு புதிய வகைப் படங்களாக வர ஆரம்பித்துள்ளன.  சமீபத்தில் வந்த விஜய சேதுபதியின் மூன்று படங்களும், மிஷ்கினின் கதாநாயகி என்று யாருமில்லாமல் வந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நேற்று நான் பார்த்த மூடர் கூடம் படமும் புதிய அலை ஒன்று கோலிவுட்டில் நொப்பும் நுரையுமாக பொங்கி வருவது போல் தோன்றுவது நல்லதொரு மகிழ்ச்சியான விஷயம்.

மூடர் கூடம் ஒரு black humour படம். வழக்கமான காமெடி மாதிரி இல்லாமல், கதாபாத்திரங்கள் சீரியஸாக ஏதாவது பேச நமக்கு அது வேடிக்கையாக இருக்கிறது. காமெடி படம் என்றாலே அங்கு லாஜிக் பேசப்படக்கூடாது. இங்கும் அப்படித்தான். ஒரு வீட்டுக்குத் திருடப் போனால், அஙக வர்ரவன் போரவனையெல்லாம் அங்கேயே அடச்சி வச்சிக்கிட்டு இருக்க் முடியுமான்னு சீரியசான கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது. வடிவேல், சந்தானம் டைப் காமெடி கிடையாது.  மூடர்களின் கூடம் ஒன்றில் நாமும் ஒரு ஓரத்தில் நின்று அங்கு நடக்கும் கூத்துகளைப் பார்த்திருக்க வேண்டும்.

டைரக்டர் நவின் படத்திற்கு நடிக்க வருபவர்கள் அனைவருக்குமே தலை கீழாக நிற்க முடிந்தால் மட்டும் நடிக்க வாருங்கள் என்று சொன்னாரோ என்னவோ... முக்கிய பாத்திரங்கள் நால்வரைத் தவிர படத்தில் வரும் முக்கால்வாசி பாத்திரங்கள் தலை கீழாக நிற்கிறார்கள். கதாநாயகி .. காதல் .. டூயட்... டிஷ்யும் டிஷ்யும் எதுவும் கிடையாது. கண்ட பாத்திரங்களுக்கெல்லாம் - நாய்க்கும் கூட - flash back இருக்கிறது. கடைசியில் வரும் moral மிக நன்றாக இருக்கிறது.

இயக்குனர்கள் இப்போது genre பிரித்துப் படமெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இசை இயக்குனர் விசய் ஆண்டனி சமீபத்தில் சொன்னது போல் படத்தில் எதற்குப் பாட்டுகள் என்ற நிலைக்கு உயர ஆரம்பித்து விட்டார்கள். வழக்கமான தமிழ் மசாலாவை விட்டு விலகி புதிதாக, புதிய முறையில் படம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். வளர்க தமிழ்ப்பட இயக்குனர்களே.

இயக்குனர்களே! காதல் மட்டும் படத்திற்கு வேண்டும் என்ற ஓட்டைத் தத்துவத்தைத் தள்ளி வையுங்கள். வளருங்கள்.

தமிழ் ரசிகர்களும் நல்ல தரமான ரசிகர்களாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள் போலும். மூடர் கூடம் பார்க்க நினைத்தால் முதலில் மதுரையில் எந்த தியேட்டரிலும் ஓடவில்லை என்றார்கள். நேற்று தேடிப்பார்த்த போது ஒரே ஒரு தியேட்டரில் ஓடிக்கொண்டிருப்பது தெரிந்ததும், நானும் ஓடிப் போய் படம் பார்க்கப் போனேன். பொதுவாக முதலிரு நாட்களிலேயே இருபது பேர், முப்பது பேர் மட்டும் தியேட்டரில் பயந்து கொண்டே உட்கார்ந்து படம் பார்ப்பது மாதிரி இல்லாமல், நல்லதொரு எண்ணிக்கையில் படம் பார்க்க வந்திருந்தார்கள். இயக்குனர்களே நீங்கள் வளர்ந்தால் நாங்களும் வளர்ந்திருவோமுல்ல  ....

அடுத்து ஒரு தைரியமான இயக்குனர் 90 நிமிடங்களுக்கு மட்டும் படம் எடுக்க ஆரம்பிக்க வேண்டும். இன்னும் படம் பாடல், டிஷ்யூம் இல்லாமல் ‘சிக்’கென அழகான வடிவோடு நல்ல படங்கள் விரைவில் வெளி வரும் என்று நம்புகிறேன். இரண்டு ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி .. இன்னும் தொடர வேண்டுமென்று ஆவல்;
-------------------------------------------


பி.கு.

இயக்குனர் நவீன் அதிர்ஷ்டம் இல்லாதவர். மூடர் கூடத்தில் ஒரு இஸ்லாமியப் பெண் இந்துச் சாமி கும்பிடுகிறாள்; திருநீறு இட்டுக் கொள்கிறாள்; பொட்டு வைத்துக் கொள்கிறாள்; தமிழ் மணப்பெண் போல் அலங்கரித்து இந்துப் பையனைத் திருமணம் செய்யப் போகிறாள்.

ஒரு வேளை நம் சகோக்கள் இதற்காக மம்மி உதவியுடன் ஒரு போராட்டம் நடத்தியிருந்தால விஸ்வரூபம் மாதிரி இந்தப் படம் மிகவும் வெற்றிகரமான படமாக ஓடியிருந்திருக்கும். நவீனுக்கு .... வடை போச்சே!



*


7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான படங்கள் தற்சமயம் வருகின்றன... இன்னும் முழுவதும் மாறுவது சந்தேகம் தான்...

ராவணன் said...

காதல் இல்லாமல் சினிமாவா?

…அதுக்கு பேசாம மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்க்கலாம்.

…நம் இலக்கியங்களே பாட்டில்தான் உள்ளன. புறநானூறைவிட அகநானூறே நன்றாக இருக்கும். அய்யன் வள்ளுவனும் தன் பங்கிற்கு பல பாடல்களைப் பாடியுள்ளான்.

…வெள்ளக்காரனுக்கு என்ன தெரியும்?

…அவன் அம்மணமாகத் திரிந்த காலத்தில் கோவணம் கட்டி திரிந்தவர்கள் நாம்.

…தாலாட்டா...ஒப்பாறியா...அனைத்தும் பாடல்களே...

…பாடல்களே இல்லாமல் படம் எடுக்கும் சினிமாக்காரர்களை நடு ரோட்டில் நிற்கவைத்து காயடிக்கவேண்டும்.
…அதிலும் காதலே இல்லாமல் எடுத்தால் குடும்பத்துடன் காயடிப்பே..

……பொத்திவச்ச மல்லிகை மொட்டு ...பூத்திருக்கு வெக்கத்தவிட்டு ...

Anonymous said...

நானும் நீங்கள் உணர்வதையே உணர்கிரேன்.

பெரிய இயக்குனர்கள் தயாரிப்பாளர்களான பின்பு, பட இயக்குனர்களே தயாரிப்பாகும் போது வணிக சமரசங்கள் குறைவதால் சிறந்த படங்கள் தொடர்ந்து வரும் சாத்தியங்கள் அதிகமாகின்றன.

மகிழ்வான விடயம்.

Anonymous said...

வணக்கம்
ஐயா

பதிவு அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தருமி said...

ராவணன்
//பேசாம மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்க்கலாம். //

படுத்துட்டு பார்க்கலாமே!
சரியான வில்லனாகத்தான் இருக்கிறீர்கள்!

டிபிஆர்.ஜோசப் said...

காதல் தேவைதானா என்றால் தேவைதான். ஐ மீன் வாழ்க்கைக்கு. அது இல்லாத வாழ்க்கை இனிப்பில்லாத காப்பி போல (எனக்கு இந்த உதாரணம்தான் தெரியும்... ஏன்னா அத ஏறக்குறைய இருபது வருஷமா அனுபவிச்சவன் நான்! - வாழ்க்கைதான் சினிமா அதனால அதுலயும் காதல் வரத்தான் செய்யும். ஆனா காதல் மட்டுமே வாழ்க்கையில்லையே.... அதனால அத மட்டுமே சொல்லிக்கிட்டு இனியும் படம் எடுக்கறது - அதுவும் ஐம்பது வயசு ஹீரோ நாப்பது ஹீரோயின காதலிக்கிறா மாதிரி - இது நிச்சயம் கமலையும் ரஜினியையும் மட்டும் குறிப்பிடவில்லை... இன்னும் சிலரும் இப்படித்தான் இன்றளவும் நடிக்கிறார்கள் - காட்றதுதான் சலிப்பை ஏற்படுத்துகிறது. மூடர் கூடத்தை இன்னும் பார்க்கவில்லை.... ஆனால் நீங்கள் சில தினங்களுக்கு முன்பு விமர்சித்த ஓநாயை நேற்றுதான் பார்த்தேன்....மிஸ்கினின் ட்ரேட் மார்க் இருட்டு, இருட்டு...சலிப்பை ஏற்படுத்தும் இருட்டு... நீங்க காமடி படத்துல லாஜிக் பாக்கக் கூடாதுங்கறீங்க... லாஜிக்குங்கற வார்த்தைக்கு மிஸ்கினுக்கு அர்த்தமே தெரியாதுங்கறா மாதிரி இருக்கு ஓநாய்..... வெளியில வர்றப்போ உங்க மேலயும் கோவம் வந்துது..... ஆனா என்ன பண்றது? ரசனை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமால்ல இருக்கு? மூடர் கூடத்தையும் பாக்கணுங்கற ஆசை வந்துருக்கு.... பார்ப்போம். அதுலயாவது நம்ம ரெண்டு பேர் ரசனையும் ஒத்துப்போவுதான்னு.....

தருமி said...

//வெளியில வர்றப்போ உங்க மேலயும் கோவம் வந்துது..... //

மேயா குல்ப்பா ... மேயா குல்ப்பா ..மேயா மாக்ஸிமா குல்ப்பா .. !!!

Post a Comment