Thursday, January 02, 2014

703. தருமி பக்கம் (12) - அந்தக் காலத்தில . . . .




*
அதீதம் இணைய இதழில் வந்தப் பதிவின் மறுபதிப்பு


 *



இரண்டரை வயதிலிருந்து ஐந்தாவது வயதில் அப்பா & புது அம்மாவோடு மதுரை வந்து பள்ளியில் சேர்வது வரை வாழ்க்கை காசியாபுரத்தில் தான் கழிந்தது. வீட்டில் அனைவரும் ஏதாவது வேலை செய்பவர்களே. அப்பம்மா, சித்தி - இருவரும் காட்டு வேலைக்கு அனேகமாக போய் விடுவார்கள். வீட்டில் இருந்த மூத்த அத்தைமார்கள் இருவரும் ஆசிரியை வேலைக்குப் படித்து விட்டு, பாட்டையா வைத்து நடத்திய பள்ளியில் வேலை செய்து வந்தார்கள். நான் வீட்டில் இருந்த போது அத்தைமார்களில் மூத்தவர் nun ஆவதற்காக, போய் விட்டார். அடுத்த அத்தை நம் பள்ளிக்கூடத்தில் டீச்சராக இருந்தார்கள். அவர்கள் பொறுப்பில் நான். அவர்களோடு நானும் பள்ளிக்குப் போய் விடுவேன்.

அத்தையோடு வேலை பார்த்த இன்னொரு டீச்சரும், அத்தையும் நல்ல நண்பர்கள். அவர்களும் எங்களோடு மதியம் சாப்பிட எங்கள் வீட்டுக்கு வந்து விடுவார்கள். அந்த டீச்சர் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் இன்னொரு ஊரிலிருந்து வருவார்கள் என்று நினைக்கிறேன். அவர்களைப் பற்றிச் சொல்லும் போது ‘குருவன்கோட்டை’ என்ற ஊர் பெயரைச் சொல்லுவார்கள். அந்த டீச்சரையே குருவங்கோட்டை டீச்சர் என்று தான் சொல்வார்கள். அவர்களை எனக்கு நிறைய பிடிக்கும்.இந்த இரண்டு பேர் கைகளைப் பிடித்துக் கொண்டு நான் பள்ளிக்குப் போகும் காட்சி இன்னும் சிறிது நிழலாடுகிறது.

குருவங்கோட்டை டீச்சர் பற்றி ஒண்ணே ஒண்ணு நினைவுக்கு வருகிறது. அப்பாவுக்கு அடுத்த கல்யாணத்திற்குப் பெண் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த டீச்சர் பெயரும் அடிபட்டது. எனக்கும் இவர்கள் அம்மாவாக வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.

வீட்டில் செல்லப் பிள்ளை. பள்ளியிலும் சின்னப் பையனாக இருந்ததால் எல்லோருக்கும் செல்லம். ஊரில் எங்கு போனாலும், ‘பாவம் ... தாயில்லாப் பிள்ளை’ என்று பாவம் போல் பார்க்கும் உறவினர்கள். இதைச் சொல்லும் போது மட்டும் வயசான பிறகு கூட கஷ்டமாக இருக்கும். ஆனால் எனக்கு எந்த இழப்பும் அப்போது இருந்ததோ என்னவோ ... அப்படியேதும் நினைவில்லை. அதை நினைக்கும் படி ஒரு நிகழ்வு அவ்வப்போது ஒன்று நடக்கும். அப்பா மதுரையிலிருந்து ஊருக்கு வருவார்கள். அப்பா வந்ததும் எல்லோருக்கும் அம்மா நினைவு வந்து விடும் போலும். உடனே என்னை மாற்றி மாற்றி தூக்கி வைத்துக் கொண்டு எல்லோரும் அழுவார்கள். நானும் அழுதிருக்கிறேன். அவ்வளவு தான்.

அப்பா மதுரையிலிருந்து வரும் போது ஏதாவது வாங்கி வருவார்கள். அதில் இரண்டு மட்டும் நன்கு நினைவில் இருக்கிறது. இந்தக் காலத்தில் திராட்சைப் பழம் பல வகைகளில் இருப்பது போல் அப்போது இல்லை. கொட்டைஇல்லாத பழமெல்லாம் இப்போது கிடைக்குதே ... அதெல்லாம் அப்போதெல்லாம் சுத்தமா கிடையாது. நல்லா புளிக்கும் பச்சைத் திராட்சை தான் எங்கும் கிடைக்கும். அதோடு கொஞ்சம் லேசாகப் புளிக்கும் கருப்புத் திராட்சை அப்பா வாங்கி வருவார்கள். அப்போது அதெல்லாம் (எளிதில்)கிடைக்காத தின்பண்டம்! அதெல்லாம் மதுரையிலிருந்து தான் வரணும்!

ஒரு தடவை எனக்கு அப்பா ஒரு மூன்று சக்கர சைக்கிள் வாங்கி வந்தார்கள். இப்போவெல்லாம் மற்ற பொருட்கள் மாதிரி இது போன்ற சைக்கிள்களும் disposable தானே! ஆனால் அப்பா எனக்காக வாங்கி வந்த சைக்கிள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டில் இருந்தது. மூன்று தலைமுறைகளை அது பார்த்து விட்டது. என் பிள்ளைகள் அதனை ஓட்ட முடியாது போயிற்று; ஆனால் தம்பி, தங்கைகள், அவர்கள் பிள்ளைகள் என்று அத்தனை வருஷம் இருந்தது. ஏனெனில், இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. எல்லாமே solid iron.  வெறும் முரட்டு இரும்புக் கம்பி தான் handle bar. கைப்பிடிக்கு ஒரு ரப்பர் கைப்பிடி இருக்கும். உட்காரும் இடமும் சரியான கனத்தில் ஒரு இரும்புத் தகடு வளைத்து வைத்திருக்கும். சக்கரங்களும் செம சாலிட். டயர் இருக்கும் இடத்தில் கட்டி ரப்பரில் சக்கரத்தின் வளைவுக்குள் ஆழமாகச் செருகி இருக்கும். சைக்கிள் நல்ல பச்சைக் கலர். சக்கரங்களின் பக்கச் சுவர்கள் மட்டும் சிகப்பு. (எங்கள் வீட்டில் ‘ஆகி வந்த’ இன்னொரு பொருளும் இதே போல் மூன்று தலைமுறை தாண்டி வந்தது. எனக்குப் பயன்படுத்திய தொட்டில் கம்பு அது. பட்டையாக, கறுப்பு நிறத்தில் ஒன்று இருந்தது - மூன்று தலைமுறைக்கு!)

அடேயப்பா ..! ஊருக்குள் வந்த முதல் மூன்று சக்கர சைக்கிளாக அது தான் இருக்க வேண்டும்! யாரும் அது மாதிரி மூன்று சக்கர சைக்கிள்களை ஊரில் பார்த்திருக்க மாட்டார்கள்! அனேகருக்கும், பெரியவர்களுக்கும் சேர்த்து அது ஒரு அரிய காட்சிப் பொருளாக இருந்தது. சைக்கிள் வந்தது, துணி மாதிரி ஒன்றினால் - flannel மாதிரி - அது சுற்றப்பட்டு வந்து சேர்ந்தது. வீட்டில் ‘ஹாலில்’ ஒரு தூண் சொன்னேனே அது பக்கத்தில் எப்போதும் நிற்கும். எனக்கு ஓட்டத் தெரியாது. என்னைவிட ஓரிரு வயது மூத்த அண்ணன் துரைசாமி வீட்டுக்கு வந்திருவான். அவன் சைக்கிளை வீட்டில் தட்டடி தாண்டி, தெற்குப் பக்கம் வெற்றிடமாக இருந்த இடத்திற்குத் தூக்கிக் கொண்டு வருவான். நான் அவனோடு வந்து சைக்கிளில் உட்கார்ந்தால் அவன் என்னை வேகமாக பின்னாலிருந்து தள்ளிக் கொண்டு வருவான். எல்லோருக்குமே சின்னப் பிள்ளைப் பருவத்தில் ஒரு accident நடக்குமே ... சைக்கிள் accident .. அது எனக்கும் நடந்தது. காலை பெடலுக்குள் விட்டு, அடிப்பட்டு, ரத்தம் ... துரைசாமி என்னை உட்டுட்டு, பயந்து ஓடியே போய்ட்டான்.

இந்த துரைசாமியை வயதான காலத்தில் ஊருக்குப் போகும் போது  தேடிப்போய் பார்ப்பேன். நன்றாக கள் குடித்துப் பழகிக் கிடந்தான். நான் போகும் போது, எல்லோர் காதுக்கும் எட்டுவது மாதிரி என்னை ‘டேய்’னு சத்தமா கூப்பிட அவனுக்கு ரொம்ப பிடிக்கும். ‘என் தம்பின்னு’ எல்லோருக்கும் சத்தமாக அறிமுகம் செய்வான். நான் ‘இளைஞனாக’ இருந்த போதே, அவன் கல்யாணம் ஆகி, பிள்ளைக் குட்டிகளோடு ‘கிழவனாகப்’ போயிருந்தான்.

accidentகுப் பிறகு நானே ஓட்டிப் பழகிட்டேன். அத்தைமார்கள் கைப்பிடித்து பள்ளி போன நான், சைக்கிளில் அவர்களோடு பள்ளிக்குப் போனேன். வீட்டுக்குப் பின்னால் தானே பள்ளி. அங்கே பள்ளி மைதானத்தில் ஒரு ’வாதமடக்கி மரம்’ ஒன்று பெரியதாக நிற்கும். இந்த மரத்தை நான் நிறைய எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன். ஆனால் மதுரையிலோ வேறு இடங்களிலோ அந்த மரத்தைப் பார்த்ததில்லை. அதன் காய்களை கிளி நன்கு சாப்பிடும். நாமளும் சாப்பிடலாம்; ஆனால் சாப்பிட்டால் காது சரியாகக் கேட்காமல் போய் விடும் என்பார்கள். (யாரும் இப்போ என்னை கூப்பிட்டீங்களா? .. காதில் ஒண்ணும் விழலை; அதான் கேட்டேன்!) 
அந்த மரத்தின் அடிப்பகுதி சிறிது வளைந்து மேலே போகும். அந்த வளைவு தான் நம் வண்டிக்கு parking lot!

பாட்டையா வீட்டில் அப்போது இன்னொரு பழைய பொருள் இருந்தது. பழைய கிராம போன் பெட்டி. சினிமாவில பார்க்கிறது மாதிரி பெரிய குழாய்

 அது.. இதெல்லாம் இதில் கிடையாது. சரியாக ஒரு சதுரப்பெட்டி .. மூடியோடு இருக்கும். HMV கிராம போன். பெட்டியின் மூடியின் உள்பக்கம் பாட்டு கேட்கும் நாய் உட்கார்ந்திருக்கும். அந்த நாயின் பெயர் என்ன என்று தேடிப்பார்த்தேன். - Nipper! அந்தப் பெட்டியும், அதனோடு நாலைந்து ரிக்கார்டுகளும் இருக்கும். எல்லாம் கிறித்துவ சாமிப் பாட்டுகள். எப்போதாவது மேலிருந்து கீழ் இறங்கும். அதுவும் பொதுவாக அதைப் பார்க்கவே யாராவது வருவார்கள். அப்போது நாலைந்து பாட்டு போடுவார்கள். அதற்கு “ஊசி’ கிடைப்பதெல்லாம் கஷ்டம்னு சொல்லி நிப்பாட்டிடுவாங்க. அந்தப் பெட்டிக்குள்ள இருந்து எப்படி சத்தம் வருகிறது  என்று எனக்கு அன்றும் சரி, இன்றும் சரி. ஒரே ஆச்சரியம் தான்.



*



3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மலரும் நினைவுகள்
என்றென்றும்
மங்காத
நினைவலைகள்.
அருமை ஐயா

ப.கந்தசாமி said...

//அந்தப் பெட்டிக்குள்ள இருந்து எப்படி சத்தம் வருகிறது என்று எனக்கு அன்றும் சரி, இன்றும் சரி. ஒரே ஆச்சரியம் தான்.//

அதுக்குள்ள ஒரு ஆள் ஒளிஞ்சிட்டிருக்கிறதைப் பாக்கலிங்களா?

வவ்வால் said...

தருமிய்யா,

தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

Post a Comment