Saturday, January 25, 2014

705. நான் ஏன் இந்து அல்ல ....7




*





*
தொடர் பதிவுகள்:   1 ......     2 .....     3 .....  4..........  5..............  6 ...........  7..................

*


இந்துக்களின் மரணமும் நம்முடைய மரணமும்
6

 ஒரு சாதியில் பிறந்து விட்ட பிறகு நம்மில் மிகச் சிலரே சாதிக் கலாச்சாரத்தை விட்டு உணர்வோடு வெளியேறுகிறோம்.

 ஒரு பார்ப்பனன் என்பவன் உயிர்வாழ்வது என்பது சாவதற்கே என்று எண்ணுகிறான். சாவே முக்தியைக் கொடுக்கும் என்று நம்புகிறான். (148)

தலித் பகுஜன்களுக்கு வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அது இவ்வுலக வாழ்க்கை மட்டுமே. நாம் ஒரு முறை மட்டுமே பிறக்கிறோம்; ஒரு முறை மட்டுமே இறக்கிறோம். (154)

தலித் பகுஜன்கள் ஒரு வெள்ளாட்டையோ அல்லது செம்மறியாட்டையோ அல்லது ஒரு கோழியையோ பலி கொடுத்து அதில் ஒரு பகுதியைக் கடவுளுக்குப் படைக்கிறார்கள். அதுவும் வளமான ஒரு வாழ்க்கை வேண்டியோ, சொர்க்கத்திற்குப் போக வேண்டும் என்ற தேவையின் அடைப்படையிலோ நடப்பதல்ல. பயம் என்பது முற்றிலும் கிடையாது என்பதல்ல. ஆனால் பயம் குறித்து தத்துவ நியாயம் ஏதும் தலித் பகுஜன்களிடம் இல்லை. பயத்திலிருந்து விடுதலை அடைய  கடவுளின் ஆசி தேவையில்லை..(156)

இறந்தவர் உடல் முன் தண்ணீர் எடுத்துச் செல்வது ஒரு வழக்கம். அது முக்கியமான நிகழ்வாகும். அதைக்கூட (தலித் பகுஜன்) பெண்ணே செய்கிறாள். இங்கே மகன் என்பவன் வயதான பெற்றோர்களைப் பாதுகாக்க வேண்டியவனாகக் கருதப்படுகிறான். சொர்க்கத்தில் இடம் தேடித் தருபவனாக இல்லை. சொர்க்கம் என்கிற கருத்துக்கே இங்கே இடம் இல்லை. (158)







7
நமது குறிக்கோள்: தலித் மயமாதல்
இந்து மயமாதல் அல்ல


சுதந்திரப் போராட்டத்தின் போது பார்ப்பனத் தலைவர்களும் அவர்கள் கருத்தியல்களும் சாதிக்கு எதிரான சமத்துவக் கருத்தினை உருவாக்க முயற்சிக்கவில்லை.
மொகலாயர் காலத்திலும் ஆங்கிலேயர் காலத்திலும் ஆட்டங்கண்ட பார்ப்பன சாதிவெறி சக்திகளை மறுபடியும் நிர்மாணிக்கத் தேவையான அக்கருத்தியலையும் உதவிகளையும் செய்தார்கள். பார்ப்பனிய தேசியத்தைக் கட்டியெழுப்புவதின் ஊடாக ராசாராம் மோகன்ராய், காந்தி ஆகியோரும் வெவ்வேறு கால கட்டங்களில்  மேல்சாதி ஆதிக்கத்தை நிறுவுவதற்குத் தம்மால் இயன்ற பங்காற்றினார்கள். (162)

விடுதலைக்குப் பிறகு இந்த ஆதிக்கச்  சக்திகளே அனைத்து வகையான அதிகாரங்களையும் சுற்றி வளைத்துக் கொண்டார்கள்.

கல்வியில் இட ஒதுக்கீட்டின் விளைவாக தலித் பகுஜன அறிவு ஜீவிகள் எழுச்சியுற்று நவீனப் பார்ப்பனியத்தைப் பல்வேறு நிலைகளில் சிதறடிக்க முயன்றார்கள். பார்ப்பனிய  மேட்டிமைச் சக்திகள் இதனை உணர்ந்து கொண்டு தம்மை வெறி கொண்ட இந்துத்துவ அமைப்பாக வடிவமைத்துக் கொண்டு, மண்டல் எதிர்ப்புக் கருத்தியலை பரப்பின.

இந்துமயமாக்கக் கொள்கையை நாம் இரண்டு வழிகளில் முழுமையாக எதிர்க்கிறோம். ஒன்று: இந்துத்துவா ஒரு நாளும் மனிதத் தன்மையான தத்துவமாக இருந்ததில்லை. மதங்களின் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான நிறுவனமாக இந்து மதம் இருந்து வந்துள்ளது. இந்தியாவில் உள்ள தலித்பகுஜன்களின் வேதனை மிக்க  வாழ்வே இந்தக் கொடூரத்தன்மைக்கும் சான்றாக அமைகிறது. இரண்டு: எதிர்காலத்திலாவது இந்து மதம் மனிதத் தன்மை உடையதாக மாறப்போவதாக அறிவித்தாலும் அதற்கான சாத்தியமே இல்லை. ஏனென்றால் மதங்களின் வரலாறே இன்று முடிவுக்கு வந்து கொண்டுள்ளது. (163)

தலித் மயமாக்குதல் -  தலித் பகுஜன்கள் தான் கிராம சமுதாயத்தில் கடினமாக உழைக்கக் கூடியவர்கள். அவர்களுக்கு உழைக்கும் சக்தியே சொத்தாகும்.

இதற்கு மாறுபட்ட நிலையில் மேல்சாதியினர் உற்பத்தி சாராத சோம்பேறிகளாக உள்ளனர். என்றென்றைக்கும் சொகுசான வாழ்க்கை பற்றிய அவர்களுடைய கண்ணோட்டத்தின் விளைவாக அவர்களின் வாழ்க்கை மதிப்பீடுகள் சிதைந்து போனவையாக உள்ளன. (167)

உற்பத்தி சார்ந்த வேலையிலிருந்து விலகியிருப்பதால் தான்  பார்ப்பனிய இந்து சமூகம் தனிவுடைமைக் கோட்பாடுகளில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கிறது. (168)

தலித் பகுஜன்களுக்கு உழைப்பே வாழ்க்கை. வயிற்றுக்கு உணவு எப்படியோ அவ்வாறே உடலுக்கு உழைப்பு என்பது பழக்கமாகி விட்டது. (169)

தலித் பகுஜன்களுக்கு உழைப்பே வாழ்க்கையாக இருக்கிறது. இந்துக்கள் இதைத் தலைகீழாக்கி ஓய்வுக்குப் பிறகு தான் உழைப்பு என்றார்கள்.  ஓய்வே வாழ்க்கை என்கிற பழைய கோட்பாடு வாத்ஸ்யாயனின் காம சூத்திரம் என்ற நூலில் முன்மொழியப் பட்டுள்ளது. (172)

மண்டல் இயக்கமோ உழைப்பே வாழ்க்கை என்பதை உலகப் பொதுவாக்கியது. (173)

பார்ப்பனக் குடும்பங்களில் காணப்படும் சமூக அரசியல் ஆணாதிக்க அமைப்பே இந்திய சமுதாயம் முழுமைக்கான அமைப்பாக எடுத்துக் காட்டப்படுகிறது; இதற்கு நேரெதிரான தலித் பகுஜன் குடும்ப அமைப்பு இருப்பதாகவே காட்டிக் கொள்வதில்லை. இதன் காரணமாக வெளிநாட்டு வரலாற்று ஆசிரியர்களும் சமூக விஞ்ஞானிகளும் பார்ப்பனியக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே இந்தியப் பண்பாட்டையும், வரலாற்றையும் மதிப்பீடு செய்கிறார்கள்.

இந்தியாவில் தலித் பகுஜன் சனநாயகமும் பார்ப்பன சர்வாதிகாரமும் இரண்டு முரண்பட்ட அம்சங்களாகச் சிவில் சமூகத்தில் வெளிப்படுகின்றன. பார்ப்பன அமைப்புகள் சமுதாயத்தையும் அரசியல் அதிகார அமைப்பையும் தன் ஆதிக்கத்திற்குள் கொண்டு வராதிருந்தால் தலித்பகுஜன் சனநாயக அமைப்புகள் மேலோங்கி உற்பத்தியை ஆதாரமாகக் கொண்ட ஒரு வலுவான சமூகத்தை உருவாக்கியிருக்கலாம்.(176)

தலித் பகுஜன்களின் கலாச்சாரத்தையும் நாகரீகத்தையும் அழிக்க இந்துத்துவா எவ்வளவோ முறை முயன்றும் அதனால் வெற்றி காண இயலவில்லை. (177)

எதிர்காலம் – வருங்கால இந்தியா தலித்பகுஜன்களின் இந்தியாவாக இருக்கும்.
வரலாறு நெடுக தலித் பகுஜன்கள் துயரங்களையையே அனுபவித்து வந்துள்ளார்கள்.
தலித்துகள் விடிவடைவதன் மூலம் தான் மற்றவர்கள் அதாவது மேல்சாதியினரும் விடுதலையை அடைய முடியும். ஆனால் இந்தப் போராட்டம் துன்பமும் துரமும் நிரம்பியதாகவே இருக்கும். இரண்டு வரலாற்றுப் போராட்டங்களிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது. முதல் நிகழ்வு: 1990ல் நடந்த மண்டல் போராட்டம். இரண்டாம் நிகழ்வு: 1993ல் உத்திரப் பிரதேசத் தேர்தல் 1990 நிர்வாகம் தலித் மயமாவதை ஆதிக்க சக்திகள் வன்முறையால் எதிர்த்தார்கள். மண்டல் முழுவின் ஒரு சில பரிந்துரைகளை நடைமுறைப் படுத்திய காரணத்திற்காக ஜனதா தள அரசைப் பார்ப்பன சக்திகள் கவிழ்த்தன. 1993ல் மாநில அளவில் தலித் பகுஜன் அரசு பதவியேற்றதும் உத்திரப் பிரதேச சட்டசபையைப் பார்ப்பன சக்திகள் ரத்தக் களறி ஆக்கின. 1993 டிசம்பர் 16ல் சட்டசபை கூடியதும் பார்ப்பன ஆதிக்க வெறியர்கள் தலித்பகுஜன்  உறுப்பினர்கள் மீது செருப்புகளை வீச ஆரம்பித்தார்கள். இதுவரை ராட்சதர்கள், மிலேச்சர்கள், திராவிடர்கள், சண்டாளர்கள் என்றெல்லாம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்கள் ஆட்சிக்கு வந்து  விட்டார்களே என்ற ஆத்திரம் அவர்களை வெறி பிடித்தவர்களாக ஆக்கியது. ஆனால் தலித் பகுஜன் சக்திகள் இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமது நிலையில் உறுதியாக நின்று அதை எதிர்கொண்டார்கள். பார்ப்பனர்கள் தலித் பகுஜன் சக்தி என்றால் என்னவென்று சுவைத்தார்கள். செய்தித் தாள்களில் இவற்றை நாம் வாசித்தோம். இதுவே வருங்கால வரலாற்றுக்கு முன் மாதிரியாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. (179)

உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சாதிகள் கீழானவர்கள் என்கிற கருத்து அவர்கள் சிந்தனையை நஞ்சாக்கி விட்டது. உலகில் உள்ள எந்த ஆளும் வர்க்கமும் இந்திய பார்ப்பனியச் சாதிகளைப் போல மனிதத் தன்மையற்றதாக இல்லை. அவர்களை உற்பத்தி சார்ந்த தொழில்களில் தள்ளி அவர்களுடைய கவனத்தை ஆலயம், அதிகாரம்,அலுவலகம் போன்றவற்றிலிருந்து திசை திருப்புவதன் மூலம் அவர்களிடம் மனிதத் தன்மையை மீளுருவாக்கம் செய்ய்ய வேண்டும். (180)

அதிகாரத்தைக் கைப்பற்றுவது கூட எளிது. ஆனால் தலித் மயமாக்குவதைத் தீவிரப் படுத்தாவிட்டால் கைப்பற்றப்பட்ட அரசியலதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வது முடியாததாகி விடும். சம்புக ராஜ்ஜியத்தின் தோல்வியும், இராவண ராஜ்ஜியத்தின் தோல்வியும் புராதன கால நிகழ்ச்சி என்றால், தமிழகத்தில் திராவிடக் கட்சியின் அரசியலதிகாரம் ஒரு பார்ப்பனப் பெண்ணின் கைக்கு மாறியது சமீப காலச் சான்றாகும். தமிழகத்தின் ஆட்சியைப் பார்ப்பன ஆண்கள் கைப்பற்றும் காலம் வெகு தூரத்தில் இல்லை.


                                                      


*




No comments:

Post a Comment