Friday, April 24, 2015

833. JK பற்றி ஜெ.மோ.*

இன்று வாசித்தவைகளில் இரு பதிவுகள் என்னை ஈர்த்தன. அவைகளிற்கு  என் பதிவுகளில் இடம் கொடுத்துப் பத்திரப்படுத்த வேண்டும் என்று நினைக்க வைத்தன. என்னை ஈர்த்த பதிவுகள் மேலும் பலர் கண்ணில் படுமே என்ற நினைப்பில் அவைகளை மீள் பதிவுகளாகவும் இட ஆசை.

ஒன்று -  JK  பற்றி  ஜெ.மோ.

என்ன ஈர்த்த ஜெயகாந்தனையும் அவர் படைப்புகள் சிலவற்றையும் பற்றி ஜெ.மோ. பேசிய உரையின் தொகுப்பில் இருந்து சில பகுதிகளை இங்கு தந்துள்ளேன். ஜெ.மோவின் புதிய சில விளக்கங்கள், sharp wits of JK - சில இங்கு இடம்பெறுகின்றன.

இரண்டாவது - ரகுவீரன் என்பவர் பிராமண சாதியை முன்னிறுத்தி 20 கேள்விகளை தனது பதிவில் கேட்க, அவைகளை அமெரிக்க வாழ் மதுரைத் தமிழன் த்னது பதிவில் இட்டிருந்தார். அதற்கான பதில்களை இக்பால் செல்வன் தந்துள்ளார். நல்ல பதில்கள். ஆகவே அவைகளையும் இங்குப் பதிவிட ஆவல். இக்பால் தன் பதிவில் முதல் 10 கேள்விகளுக்குப் பதிலாக முதல் பதிவை இட்டிருக்கிறார். அவர் அடுத்த பத்துக்கும் பதிலளித்த பின் இரண்டையும் இணைத்து இன்னொரு பதிவில் இடுகிறேன். இக்பால் பதிவின் இணைப்பைத் தந்துள்ளேன்:அமெரிக்காவாழ் மதுரைத் தமிழனின் கேள்விக்கு என்ன பதில் ?


இப்பதிவில் -                         ஆலமர்ந்த ஆசிரியன்


 12- 4- 2015 அன்று கோவையில் நிகழ்ந்த ஜெயகாந்தன் அஞ்சலிக் கூட்டத்தில் ஆற்றிய உரை, எழுத்துவடிவம்


ஜெயகாந்தன் சிரித்தார் “தமிழ் இயல்பிலேயே ஆண்மையான மொழி. அழகான ஒரு ஆணுக்கு மகள் அவன் சாயலில் இருந்தால் பேரழகியாக இருப்பாள். அதுதான் மலையாளம்” என்றார்.

”மனமே முகமா சிரிக்கணும்னா மனம் சுத்தமா இருக்கணும். பாருங்க முகமும் உடம்பும் அழகில்லாத சிந்தனையாளர்கள் உண்டு. ஞானிகள் உண்டு. கண்ணும் சிரிப்பும் அழகா இல்லாத சிந்தனையாளர்களே கிடையாது. ஏன்னா சிரிப்புங்கிறது என்ன? சிந்துறது. சிந்துறதுக்குப்பதிலா ஒரு துளிகூட மிச்சமில்லாம மொத்தமா கவுத்து ஊத்தினா அதான் சிந்தனையாளனோட ஞானியோட சிரிப்பு”

”பருந்து வானிலேறுவதன் அழகு. அது சிறகையே அசைப்பதில்லை. அதை விண்ணில் ஒரு கண்ணுக்குத் தெரியாத சரடு கட்டிச் சுழற்றிக் கொண்டிருப்பது போலத் தெரியும். அது பறப்பதில்லை மிதக்கிறது. சுழற்சியின் ஒரு புள்ளியில் மிக இயல்பாக மேலேறுகிறது. மேலேறுவதற்காக அது எதையும் செய்வதில்லை. பறப்பதற்காகக்கூட அது எதையும் செய்வதில்லை. அதை மேலேற்றுவது விண்ணகமாக மாறி நின்றிருக்கும் காற்று ஒளி. சின்னஞ்சிறு பறவைகள் எவ்வளவு சிறகடிக்கின்றன. எவ்வளவு பரிதவிக்கின்றன. சிறகசைக்காத பறவையின் உயரத்தை அவை அறிவதேயில்லை”.

ஜெ.கே. எப்போதும் அவர் மானுடத்திரளுடன் பேசிக்கொண்டிருந்தார்….. தஸ்தயெவ்ஸ்கி தன்னுடன் பேசிக்கொண்டவன். கார்க்கி மக்களுடன் பேசியவன். ஷெல்லியை, வால்ட் விட்மனை, பாப்லோ நெரூதாவை அந்த ஓசையை ஏற்றுக்கொண்டுதான் நாம் மதிப்பிடுகிறோம்.

பாரீஸ் அதில் ஒரு குறியீடு. ஜெயகாந்தனை வெற்று இடதுசாரி என்பவர்கள் அந்த நாவலை சரியாகப்புரிந்துகொள்ளாதவர்கள். அந்த நாவலை இன்றுவரை தமிழில் யார்தான் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்? ….. சாரங்கனின் இசை கொண்டாட்டம். சேஷையாவின் இசை விரதம்,. சாரங்கனின் இசை கோட்டைக்குமேல் காற்றில் துடிக்கும் கொடி. அவன் தந்தையின் இசை மூடியவாயிலில் முகம் உறைந்து தெரியும் சிலை. …. நம்முடைய பண்பாட்டின் மையமான ஒரு இடத்தை ஐரோப்பாவின் பண்பாட்டின் சாரமான ஒரு புள்ளியுடன் உரையாடவைக்கும் பாரீஸுக்குப்போ எந்தெந்த கோணத்தில் எல்லாம் பேசப்பட்டிருக்க வேண்டிய நாவல். உண்மையிலேயே தெரியாமல் கேட்கிறேன் நண்பர்களே, நாம் பெரிதும் கொண்டாடிக் கொண்டிருக்கும் தமிழ் சிற்றிதழ் இலக்கியச்சூழலில் இத்தனை ஆணித்தரமான ஒரு பண்பாட்டுப் பிரச்சினையைப் பேசிய இன்னொருநாவல் எது? … ஜெயகாந்தன் இசைகுறித்துச் சொல்லும் நுண்ணிய வரிகளை இந்த பண்பாட்டு மோதலின் அல்லது உரையாடலின் வெளிப்பாடுகளாக வாசிக்கமுடிந்தால் நாம் அடைவது முக்கியமான ஒர் இலக்கியப்பிரதியை.

------ ஜெயகாந்தனில் பாரதி நிகழ்வது ஓர் அற்புதம். எதிரர்பாராமல் சொடுக்கப்படும் சாட்டையின் ஒலி. பாரதியின் வரிகளை அவர் ஒவ்வொருமுறையும் புதியதாகக் கண்டடைகிறார் என்று கண்டிருக்கிறேன். … “பாரதி பாரதி என்கிறீர்களே, பாரதி எழுதியிருக்காவிட்டால் என்ன செய்திருப்பீர்கள்?” என்று யாரோ கேட்டபோது “நான் எழுதியிருப்பேன்” என அவர் சொன்னதாகச் சொல்வார்கள். … நானே அவரிடம் சொல்லியிருக்கிறேன். பாரதி பாடல்களை அவர் பாடும்போது அவரது சொந்தக்கவிதைகளை பாடுவது போலிருக்கிறது என்று, “ஆம், அவை என் சொந்தக்கவிதைகள். அவை நாமனைவருக்குமே சொந்தமானவை என்றாலும் எனக்கு ஒரு தனியுரிமை உண்டு. தந்தை ஊருக்குத்தானமாககொடுத்த நிலத்தில் நின்றபடி என் தந்தை கொடுத்த நிலம் இது என்று உணரும் மகனைப்போன்று நான் உணர்கிறேன்” என்றார் ஜெயகாந்தன்.

அறுபது எழுபதுகளில் உலகை தழுவி நிறைத்த அந்த எழுச்சிக்கு வேறெந்த தமிழிலக்கியப் பதிவாவது நமக்கு உண்டா? ”இங்கிருக்கவேண்டும் என்பதற்காக எழுதவந்தவன் அல்ல நான். நான் வாழவேண்டும் என நான் எழுதவில்லை. என் மக்கள் வாழவேண்டுமென நான் எழுதினேன். அவர்கள் வாழத்தொடங்கிய பின் இவ்வெழுத்துக்கள் பொருளிழந்து போகும் என்றால் அதுவே அவற்றின் சிறப்பு என்றே சொல்வேன்”

அக்கினிப்பிரவேசம் ஜெயகாந்தனின் புகழ்பெற்ற சிறுகதை. … அவள் விரும்பித்தான் அவனுடன் செல்கிறாள். விரும்பி என்றால் நேரடியாக விரும்பி அல்ல. அவள் மேல்மனம் விரும்பவில்லை. அது பயப்படுகிறது. தவிர்க்க நினைக்கிறது. அவள் ஆழ்மனம் விரும்புகிறது. ஆழ்மன இச்சையை மேல்மனதின் எச்சரிக்கையால் கட்டுப்படுத்தும் அளவுக்கு அவளுக்கு முதிர்ச்சி இல்லை, அவ்வளவுதான். …. அன்னை நீரூற்றி அவளைக் குளிப்பாட்டுகிறாள். ஆனால் அப்போது அவள் வாயில் அவன் கொடுத்த சூயிங் கம் ஒன்றை மென்றுகொண்டிருக்கிறாள். ‘சீ கருமம், அதை துப்பு’ என்கிறாள். நண்பர்களே, அவள் அசைபோடுவது எதை? எவ்வளவு பெரிய படிமம்! எந்த விமர்சகராவது அதைச் சுட்டியிருக்கிறாரா என்று நானும் பார்த்திருக்கிறேன். நான் பத்தாண்டுகளுக்கு முன் ஜெயகாந்தனைப்பற்றி எழுதிய கட்டுரையில்தான் அதை முதன்முதலாகச் சுட்டிக்காட்டினேன். வாசகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கிளர்ச்சி அடைந்தனர். அந்தக்கதை இப்போதுதான் புரிகிறது என்றனர். வெளிவந்து நாற்பதாண்டுக்காலம் கழித்து. இன்னமும் வாசிக்கப்படாத ஜெயகாந்தன் கதைகளே அதிகம் என்று சொன்னால் நம்புங்கள். … அக்னிப்பிரவேசத்திலேயே எத்தனை உட்குறிப்புகள். அவள் பெயர் கங்கை. பாவங்களை கரைப்பவள். ஆகவே பாவங்களுக்கு அப்பாற்பட்டவள் அவள். கங்கைக்குப் பங்கமில்லை என்ற சொல் இன்றைக்கும் நம்மிடம் உண்டு. அக்னிப்பிரவேசம் என்பது சீதை செய்தது. இங்கே அக்கினியாக நிற்பது நீர். நீரெல்லாம் கங்கை அல்லவா? … அந்தக்கதை அத்தனை பெருங்கொந்தளிப்பை ஏன் உருவாக்கியது? அதிலுள்ள முக்கியமான ஒரு பண்பாட்டுக் குறிப்பால்தான். அவளை தொடர்ந்து அம்மன் என்கிறார். செப்புத்திருமேனியில் வடித்த கன்னியாகுமரி, மீனாட்சி, உமை போன்ற அம்மன் சிலைகளைக் கண்டிருக்கிறீர்களா? சிறிய முலைகள். சிறிய தோள்கள். அப்படியே ஒரு கையால் எடுத்துவிடக்கூடியவள் போல, அம்மன் போல அவளிருந்தாள் என்கிறாள் ஜெகே. அம்மன் நீரில் நனைந்து சாலையில் காத்திருக்கிறது. … அவளைக் கவரவந்தவன் இந்திரன் . பிரபு. இந்திரனை பிரபு என்பது நமது மரபு. “தெரிந்துதான் பெயரைப்போட்டீர்களா?” என்று கேட்டேன். “ஆமாம், இந்திரன் தேவப்பிரபு அல்லவா?” என்றார். அம்மனை இந்திரன் கவரும் ஒரு புதிய புராணம். எவ்வளவு சீண்டக்கூடிய கதை. எத்தனை அராஜகமான கதை. அம்மன் என்றும் கன்னிமை என்றும் நம் மரபு சொல்லும் அனைத்தையுமே உடைத்து முன்னால் வைத்துவிடுகிறார் ஜெகே. அதுதான் அந்தக்கதை.

சித்தர்களையும் பாரதியையும் ஜெயகாந்தனைப்போல போட்டுக்கலக்கிக் குலுக்கி வைக்கும் பிறிதொருவரை நான் கண்டதில்லை.

நூறு நூறு ஓங்கூர் சாமிகளை தன் மடியில் அமர்த்திய அந்த ஆலமரத்துக்கு வணக்கம்.

அதன் நிழலெனும் ஞானபீடம் அமர்ந்த ஆசானுக்கு நினைவஞ்சலி.


*

4 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஜெயகாந்தன், ஜெயகாந்தன்தான். அவருக்கு நிகர் அவரே. அவரது எழுத்திலும், பேச்சிலும் உள்ள நுணுக்கம் ஆழமானது, அர்த்தமுள்ளது. பலவற்றைப் புரிந்துகொள்வதென்பது அனுபவத்தால் மட்டுமே முடியும். அல்லது தொடர்ந்து படிப்பதால் மட்டுமே முடியும். அருமையான பகிர்வு.

வேகநரி said...

//அமெரிக்காவாழ் மதுரைத் தமிழனின் கேள்விக்கு என்ன பதில் ?//
இதில் மதுரைத் தமிழனுக்கு கொடுத பதில் ஒன்றில், தமிழர்கள் இந்து மதத்தை விட்டு சட்டபடி மதமான (?)இஸ்லாமுக்கு செல்வார்கள் (இந்து மதத்தை கைவிட்டு பகுத்தறிவுக்கல்ல, இஸ்லாமுக்கு) என்று சொல்லபட்டுள்ளதாக நண்பர் தெரிவித்தார். இப்போ நீங்க தந்த இணைப்பில் தேடி பார்த்தேன் அப்படி ஒன்றையும் காணவில்லை. முதலில் எழுதிவிட்டு பின்பு அழித்திருப்பார்களோ தெரியவில்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//”பருந்து வானிலேறுவதன் அழகு. அது சிறகையே அசைப்பதில்லை. அதை விண்ணில் ஒரு கண்ணுக்குத் தெரியாத சரடு கட்டிச் சுழற்றிக் கொண்டிருப்பது போலத் தெரியும். அது பறப்பதில்லை மிதக்கிறது. சுழற்சியின் ஒரு புள்ளியில் மிக இயல்பாக மேலேறுகிறது. மேலேறுவதற்காக அது எதையும் செய்வதில்லை. பறப்பதற்காகக்கூட அது எதையும் செய்வதில்லை. அதை மேலேற்றுவது விண்ணகமாக மாறி நின்றிருக்கும் காற்று ஒளி.//
ஜெமோ, பருந்து பறப்பதைப் பார்க்கவில்லை. அனுமானத்தில் சொல்லியுள்ளார். எந்தப் பறவையும், ஏதுவுமே மேலேழ நிச்சயம் ஏதையாவது செய்ய வேண்டும். அல்லது எவற்றில் உந்துதலோ வேண்டும்.
இது உண்மை நியதி! எதை ஆதாரமாகவைத்து இந்த அலங்காரப் பேச்சைப் பேசினார் என்பது சாதாரண என் அறிவுக்குப் புலப்படவில்லை.
//அதை மேலேற்றுவது விண்ணகமாக மாறி நின்றிருக்கும் காற்று ஒளி//
இங்கு காற்று ஒளி என்பது காற்று வெளி என வருமோ?!.
காற்று ஒளியானால் எனக்குப் புரியவில்லை. யாராவது விளக்கவும்.
என் சந்தேகம் - தவறிருப்பின் மன்னிக்கவும்

சார்லஸ் said...

ஜே.கே படைப்புகளை அப்போது வாசித்தபோது புரிந்தது புரியவில்லை என்ற இரண்டுக்கும் இடையில் நின்றேன். இப்போது மீண்டும் வாசிக்கும்போது புதிதாக புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கும் . ஜெயமோகன் எழுத்து அதைதான் சொல்ல வருகிறது.

Post a Comment