Tuesday, June 16, 2015

843. ஆண்டவனால் அல்ல ... அப்பாவால் எழுதப்பட்ட “தலைவிதி” (தருமி பக்கம் 29)









*



யாகப்பன் சாரின் குட்டுகிற கையும், மனப்பாட சக்தி இல்லாமையும்  கணக்கிலிருந்து என்னை ஓட.... ஓட விரட்டின. ஏறத்தாழ வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடி விட்டேன். எஸ்.எஸ்.எல்.சி. மார்க் எல்லாம் இந்தக் காலத்தில் வெளியே சொல்ல முடியாத அளவில் தான் இருந்தது. இந்த ‘டோட்டல் மார்க்’ அப்டின்ற விஷயத்திலும் எனக்கு ஒரு குறை உண்டு.வாழ்க்கை முழுவதும் இந்த மதிப்பெண்கள் தொடர்ந்து வரும் என்ற நினைப்பெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. படிக்கணும் ... பாஸ் பண்ணணும் அப்டின்னு படிச்சது தான். நிறைய மார்க் வாங்க வேண்டும் என்ற முனைப்பே இல்லாமல் .... படித்தேன் .... தேர்ச்சி பெற்றேன் ... அவ்வளவு தான். வாத்தியார் பிள்ளைகளெல்லாம் மக்கு என்பதை நிரூபித்தேன். இதில் உள்ள ஒரு விஷயம் என்னன்னா ... அப்பாவும் ஒரு ஆசிரியர். நிறைய மார்க் எடுக்கணும் .. அதுதான் உன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்றெல்லாம் ஒரு ஆசிரியரோ, என் அப்பாவோ என்னிடம் ஒரு தடவை கூட சொன்னதில்லை. சித்தன் போக்கு ... சிவன் போக்கு என்பார்களே அது மாதிரி ஏதோ படித்து .. எதேதோ எழுதி .. எப்படியோ தேர்ச்சி பெற்றேன். ‘டோட்டல் மார்க்’, அதன் முக்கியத்துவம் எல்லாம் கல்லூரிக்குள் நுழைந்த பிறகு தான் தெரிய வந்தது. ஏன் அப்பாவும், மற்ற ஆசிரியர்களும் அப்போது வழிகாட்டவில்லை என்று தெரியவில்லை.


 பள்ளியில் கணக்குப் பாடம் பயமுறுத்தி விட்டதா. அதனால் கல்லூரியில் கணக்குப் பக்கமே போகக் கூடாதுன்னு நினச்சேன். அதற்கு ஏற்றது மாதிரி என் அப்பா தனித் தேர்வுகள் மூலம் பி.ஏ. பட்டம் முடித்து, அதே கையோடு பி.எட். படிக்க சில மாதங்கள் சென்னைக்குச் சென்றார்கள். குறுகிய காலப் படிப்பாம். என்னை பாளையங்கோட்டைக்கு அனுப்பி அங்கிருந்த சித்தப்பா பொறுப்பில் என்னை விட்டு விட்டார்கள். சித்தப்பா சேவியர் கல்லூரியில் இடம் வாங்கக் கூட்டிக் கொண்டு போனார். என்ன பாடம் படிக்கப் போகிறாய் என்றார். முன்பே யோசித்ததை வைத்து, கணக்குப் பாடம் இல்லாமல் natural science group எடுத்தேன். அதில் தமிழ், ஆங்கிலம் அடுத்து மூன்றாம் கோர்வையில் 4 பாடங்கள் இருக்கும். natural sciences (zoology + botany), physical sciences (chemistry + physics), economics and advanced Tamil- இந்த கோர்ஸைத் தேர்ந்தெடுத்தேன். இதை எடுத்து வகுப்பில் சேர்ந்த பிறகு அப்பா தாம் ..தூம் என்று குதித்தார். கணக்கெடுத்திருந்தால் என்னென்னமோ ஆக்கியிருப்பேன்/ ஆகியிருப்பாய் என்றார். நான் மனதுக்குள் சந்தோஷமாகக் குதித்துக் கொண்டேன்.

P.U.C. 'E' section. அப்போது என் வகுப்பில் படித்த ஒருவரை பல ஆண்டுகள் கழித்துச் சந்தித்தேன்.  வகுப்பு, அதில் நானிருந்த இடம், பாடம் எடுத்த ஆசிரியர்கள் என்று இருவரும் பரிமாறிக் கொண்டோம். படிக்கும் போது எனக்கு  கணக்கில் இருந்த வெறுப்பு விஞ்ஞானப் படிப்புகள் மேலும் தொற்றிக் கொண்டது. ஆங்கிலமும், அதை விட பொருளாதாரமும் மிகவும் பிடித்துப் போய் விட்டது.  பொருளாதார விற்பன்னர் ஆக வேண்டிய நான் வேறு வழியில் அடுத்த ஆண்டு தள்ளி விடப்பட்டேன் - அப்பாவினால்.

பழைய பதிவிலிருந்து இரு பத்திகள்:    P.U.C. இரண்டாம் term முடிந்ததும் வாழ்க்கையில் சிறிது வெளிச்சம். அரையாண்டு மதிப்பெண்கள் வந்ததும் கல்லூரி முதல்வர் Father சூசை வகுப்பிலிருந்து சிலரைக் கூப்பிட்டனுப்பினார். முதல் term-ல் சாதா மாணவனாக இருந்தவன் இப்போது  நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். ’இப்படியே படி,  இரண்டாம் வகுப்பு கட்டாயம் கிடைக்கும் என்று ஆசி கொடுத்தார். (இரண்டாம் வகுப்பே அப்போ அப்படி கஷ்டம்!)

Britto Hostel-ல் தங்கியிருந்தேன். Warden, Father ஜார்ஜுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். அடிக்கடி திட்டு வாங்குவேன்; பைன் வேறு போடுவார்.  ஆனால் இரண்டாம் term முடிந்து ஜனவரியில் விடுதிக்கு வந்ததும் என் மேல் ஒரே அன்பைப் பொழிந்தார். இரண்டு நாள் கழித்து தன் அறைக்கு வரச்சொல்லியனுப்பினார். ஏதோ வாங்கிக் கட்டப் போகிறோமென நினைத்து பயந்து கொண்டே போனேன். மறுபடியும் ஒரே அன்பு. என்ன ஆச்ச்சுன்னா ... அவர்தான் எங்களுக்கு economics பாடம் எடுத்தார். எங்கள் வகுப்பில் முதல் மார்க் 58; எனக்கு 56. வகுப்பில் இரண்டாவது மார்க். 50க்கு மேல் வாங்கியது நானும் இன்னொருவனும் மட்டும் தான். அட .. நம்ம ஹாஸ்டல் பையன் நல்ல மார்க் எடுத்துட்டானேன்னு ஒரே அன்பாகிப் போச்சு. வருடம் இறுதி வரை அது நீடித்தது.  அது மட்டுமல்லாமல், எனக்கும் economics மேலே ஒரே லவ்வாகிப் போச்சு. கல்லூரியில் டெஸ்ட் எல்லாம் சீரியசாக நடக்கும். என் பக்கத்திலிருந்த மூன்றாமாண்டு economics அண்ணனை விடவும் நான் நிறைய additional sheets வேகமாக நிறைய வாங்கி எழுதியதை அண்ணன் ஹாஸ்டல் முழுவதும் பரப்பிட்டார்லா ..!



 P.U.C. முடிந்தது. பிரின்சிபல் கொடுத்த ஆசீர்வாதம் பயனில்லாமல் போயிற்று. மூன்றாம் வகுப்பு தான். ரிசல்ட் வந்தது... பார்த்தது இன்னும் நினைவில் உள்ளது. பெருத்த ஏமாற்றம்.

அடுத்து பொருளாதாரம் B.A.வில் சேர்ந்து ஏறத்தாழ 30 நாளும் முடிந்தது. பாடமும் பிடித்து, இனி  ‘பின்னிடலாம்னு’ நினச்சிக்கிட்டு இருந்த போது அப்பா shortened B.Ed. கோர்ஸ் முடிச்சிட்டு மதுரைக்கு வந்தாங்க. நான் B.A.வில் சேர்ந்தது தெரிந்ததும் அந்த படிப்பு வேண்டாம். மதுரையில் B.Sc. கோர்ஸில் சேர்த்து விடுகிறேன் என்று சொல்லி மதுரை வரச் சொல்லி விட்டார்கள். காலங்கடந்த முயற்சி. வேறு எதிலும் இடம் இல்லை... விலங்கியலில் ஒரே ஒரு சீட் என்றிருக்க அதை வாங்கிக் கொடுத்து விட்டார்கள்.

தலைவிதி ...  அங்கே, அப்போது ஆழமாக எழுதப்பட்டு விட்டது   :(





*

11 comments:

சார்லஸ் said...

நீங்கள் ஒன்று நினைக்க விதி ஒன்று நடக்க கடைசியில் நல்ல இடத்தில் நல்ல வேலை பார்த்திருக்கிறீர்கள் . எல்லாம் நன்மைக்கே! ஒருவேளை எகனாமிக்ஸ் முடித்திருந்து ஒட்டடை படிந்த காற்றாடியின் கீழே அமர்ந்து குமாஸ்தாவாக வேலை பார்த்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

Mahesh said...

ம்ம்ம்ம்...
இதெல்லாம் நடந்து பல ஆண்டுகள் ஆயிருந்தாலும், நேற்று நடந்ததுபோல் சம்பவங்கள் மரக்காம
எழுதிய விதம் அருமை சார்.

G.M Balasubramaniam said...

நடந்ததெல்லாம் நன்றாகவே நடந்தது. என்று இப்போது தோன்றுகிறது இல்லையா.?

தருமி said...

G.M Balasubramaniam,
//நடந்ததெல்லாம் நன்றாகவே நடந்தது. என்று இப்போது தோன்றுகிறது இல்லையா.?//

மன்னிக்கணும். இல்லை.

தருமி said...

mahesh,

வாழ்க்கையை திசை திருப்பிய சம்பவங்கள் இல்லையா...?

தருமி said...

சார்லஸ்,
அந்தப் படம் என்ன ...7 B தானே... ?

முடியும் காலத்தில் இரு பக்கங்களையும் இப்படி திருப்பி திருப்பி போட்டு பார்ப்பதும் ஒரு வேடிக்கை தான். இல்லையா...?

கரந்தை ஜெயக்குமார் said...

கடந்த கால நினைவுகளை அசை போட்டுப் பார்ப்பதும் இன்பம்தான்
நன்றி ஐயாஹ
தம+1

”தளிர் சுரேஷ்” said...

நம் நினைப்புக்கள் எல்லாம் நடப்பதில்லை! என் விருப்பங்களும் இப்படித்தான் நிறைவேறாமல் போனது!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இதுபோன்ற திருப்பங்கள் பலரது வாழ்வில் நடக்கின்றன. நாம் நினைப்பது ஒன்று, நடப்பது வேறொன்று. தங்களது அனுபவம் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட அனுபவம் போல இருந்தது.

சார்லஸ் said...

12 B படத்தை சொல்ல வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். இரு வாழ்க்கை வாழ்ந்து பார்த்தால் நல்லாத்தான் இருக்கும் .

Packirisamy N said...

தடம் மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இல்லாத காலகட்டத்தில் வாழ்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

Post a Comment