Tuesday, July 21, 2015

850. சின்னச் சின்ன கேள்விகள்


*

 


நமது அரசுகளும் சட்டங்களும் எதற்கும் லாயக்கில்லை என்று எனக்கு அடிக்கடி தோன்றும். வருஷக் கணக்கா ஆச்சு ... இன்னும் கூட மக்களை ஒரு ஹெல்மட் போட வைக்க அரசுக்கும் காவல் துறைக்கும் வக்கில்லை. சட்டம் போடும் போது யோசித்து சரியான சட்டம் கொண்டு வரணும். சட்டம் போட்ட பிறகு சரியாக அதை நிறைவேற்ற வேண்டும். நம் அரசு போடும் சட்டமும் சரியாக இருப்பதில்லை. எதையோ அரை குறையாக ஒரு சட்டம் போடுவார்கள். அவர்களே அதைப் பின்பற்ற மாட்டார்கள். மக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். நாட்டின் சட்டத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற நினைப்பு நமக்கோ சுத்தமாகக் கிடையாது. அடிப்பேன், உதைப்பேன் என்றால் நம் மக்கள் கொஞ்சம் பயப்படலாம். அதற்கு நம் நாட்டில் வழியே கிடையாது.

எனக்கு தெரிந்த வரையில் அரசும் ஹெல்மட்டும், அரசும் ஆட்டோ மீட்டரும், என்றும் தொடரும் பெருங்கதை ... நீண்ட கதை. இன்னும் வண்டி ஓட்டிக் கொண்டே செல் பேசும் மூடர்களை மாற்ற முடியவில்லை. நாம் தான் அவ்வளவு மோசமா? இல்லை ... இல்லை நமது அரசுகள் தான் அந்த அளவு திறனற்றதா?

சில நாள் அமெரிக்க அனுபவத்திலும், ஒரு வார சிங்கை தங்கலிலும் நான் பார்த்த civic sense ஏன் இன்று வரை நம் நாட்டில் கொண்டு வர முடியவில்லை என்பது ஒரு பெருங்கேள்வியாக மனதில் நிற்கின்றது . அமெரிக்காவில் ஒரு நள்ளிரவு.  நடந்து வந்து கொண்டிருக்கிறேன். சிறு கிராமம் தான். நாற்சந்தி. சிகப்பு விளக்கு எரிவதால் தனியாக வந்த ஒரு வண்டி பச்சைக்காகக் காத்திருக்கின்றது. ஆச்சரியமாக இருந்தது. ஒரு மாலின் வெளியே parking lotலிருந்து காரை எடுக்கும் போது STOP என்று ஒரு போர்ட் இருந்தது. எங்கள் காரை ஓட்டி வந்தது ஒரு கல்லூரி மாணவன். ஓடும் கார்கள் அந்தப் பக்கத்திலேயே இல்லை, இருந்தும் அவன் காரை அந்த மஞ்சள் கோட்டில் நிறுத்தி, பின்  வண்டியை எடுத்தான். கார் ஏதும் இல்லையே... அப்போதும் நிறுத்த வேண்டுமா என்று கேட்டேன். அவன் சொன்ன பதில்: STOP MEANS STOP! விதிகளுக்கு பணியும் இந்த புத்தி நமக்கு எப்படி வரும்? வருமா ...?

இங்கே ஹெல்மட்டை பெட்ரோல் டாங்க் மேலே வைத்து ஓட்டினால் தான் மரியாதை. சட்டைத்தை மீறினால் நீ ஹீரோ ... இந்த உணர்வு நமக்குள் பொதிந்து இருக்கிறது. ஏன்? எப்படி? பதில் தெரியவில்லை.

 ஹெல்மட் போடு என்று ஒரு சட்டம் போட்டாகி விட்டது. போடுவது தான் முறை. இதில் இரு கருத்துகளுக்கு இடமில்லை. வழக்கறிஞர்களே ஹெல்மட்டை எரித்தாலும் (யார் ஹெல்மட்டை எடுத்து எரித்திருப்பார்கள்? யாராவது அவர்களிடம் கேஸ் கொண்டுவந்த அப்பாவி யாராவது ஒருவரின் ஹெல்மட்டாகத்தான் இருக்கும்!) சட்டம் போட்டான பின் அதனை மதிக்கப் பழக வேண்டும். சட்டங்களை, விதிகளை மதிக்கும் நிலை வர வேண்டும்.

‘அவர்களுக்கு’ ingrained ஆக இருப்பது நமக்கு ஏன் வரவே மாட்டேனென்கிறது?

****************

2
 சாலைகள் படு மோசம் ... வீதிக்கு நாலு டாஸ்மாக் ... குடிவெறியோடு வண்டி ஓட்டிக் கொண்டு வருவது “நார்மல்” ... காருக்குள் உட்கார்ந்து செல்லும் நீதிபதிக்கு இரு சக்கர வண்டிக்காரர்களின் லாப நட்டம் எப்படிப் புரியும்? உச்ச கோடைகாலத்து வெயிலில் ஹெல்மட் போடுவது எளிதா? ... பின்னால் இருப்பவரும் ஹெல்மட் போட வேண்டும் என்பது இரட்டைத் தாழ்ப்பாள். எதற்கு இது? ...

வழக்கமாக நம் நாட்டில் விதிகள் போடப்படும்; நாம் அதை வழக்கம் போல் மீறுவோம். அரசும் அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள். இது தான் இங்கு நியதி. ஆனால் இந்த முறை ஹெல்மட்டை எதிர்த்து பொது மக்களும் பல கேள்விகள் எழுப்பியுள்ளனர். ஆச்சரியம் தான். 

வழக்கமாக நம் மக்களுக்கு எதிர்க்கேள்விகள் கேட்பதே தெரியாது. குச்சி எடுத்தால் குனிந்து போய்க்கொண்டிருக்கும் வர்க்கம் நாம்; ஆனால் இம்முறை ஹெல்மட்டுக்கு எதிர்க்குரல் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள்.

இதில் எனக்கு ஒரு சந்தோஷம். நம் நாட்டில் 'புரட்சி’ என்ற வார்த்தைக்கே பொருள் தெரியாது. சே குவாரா பனியன் போட்டுக் கொள்வார்கள், அவர் யாரென்று கேட்டால் அவரைப் பற்றி ஏதும் தெரியாது என்பார்கள். அப்படி வளர்ந்த நமக்குள் இப்படி ஒரு ஹெல்மட் புரட்சி நடப்பது பார்த்ததும் ஒரு சின்ன சந்தோஷம் - மக்களுக்கும் கொஞ்சம் புரட்சிக் கருத்துகள் இருக்கிறதே என்று.

****************

3

1ம் 2ம் எதிர் எதிர் கருத்துகளாக தோன்றுகிறதோ....?

ஹெல்மட் போட வேண்டும் என்று சட்டம் வந்தால் மதித்து ஹெல்மட் போடு.

அது தவறு என்று நினைத்தால் ஹெல்மட் போட்டுக் கொண்டு சண்டை போடு.

****************

4


நிறைய விளம்பரப் படங்கள் மிக அழகாக எடுக்கப்படுகின்றன. 30 35 வினாடிகளில் அழகான ஒரு கதை சொல்லி விடுகிறார்கள். சமீபத்தில் வந்த Tanshq 20% விலைக்குறைப்பு விளம்பரம் அழகாக அர்த்தமுள்ளதாக இருந்தது. ஆனால் இந்த விளம்பரம் ஒரு short period advertisement தான். 20% கழிவு இருப்பது வரை மட்டும் போடப்படும்,

Air tell video விளம்பரங்களும்... சுருக். ஆனால் நறுக்!

ஆனால் முட்டாள் தனமான சில விளம்பரங்கள் ஆண்டுக்கணக்காகத் தொடர்ந்து வருகின்றன. நம்ம அண்ணன் சரத்குமார் சட்டையைக் கழற்றி வீசி ஒரு நாய் பிடிக்கிற பொண்ணைக் காப்பாற்றுவாரே .... இந்த விளம்பரம் மகாக் கேவலம் என்பது எடுத்தவர்களுக்குத் தெரியாதா? இத்தனை நாள் அதை ஓட விட்ட பின்னும் அந்த கம்பெனியாருக்கு எந்த வித negative feed back கிடைத்திருக்காதா ....? எப்படி இன்னும் தொடர்கிறது?

ஒரு இந்தி நடிகர் ’பாஸ்’ என்று ஒரு பனியனுக்கு வருவாரே .... கடவுளே எங்களைக் காப்பாத்தப்பா ......

அப்படியே இந்த ஆச்சி மசாலாவிற்கு வரும் தேவயானி டீச்சர் விளம்பரத்தையும் தூக்குங்க’ப்பா. போரடிக்குது. அந்த ஆளு மீசை வேறு ரொம்பவே உறுத்துகிறது ....!

*

 

13 comments:

Mahesh said...

காரை ஓட்டி வந்தது ஒரு கல்லூரி மாணவன். ஓடும் கார்கள் அந்தப் பக்கத்திலேயே இல்லை, இருந்தும் அவன் காரை அந்த மஞ்சள் கோட்டில் நிறுத்தி, பின்  வண்டியை எடுத்தான்.
கார் ஏதும் இல்லையே... அப்போதும் நிறுத்த வேண்டுமா என்று கேட்டேன். அவன் சொன்ன பதில்: STOP MEANS STOP! விதிகளுக்கு பணியும் இந்த புத்தி நமக்கு எப்படி வரும்?
வருமா ...?////

எனக்கு தெரிந்து கண்டிப்பா வராது சார்.
அவர்களை பார்த்து நாம் கத்துக்க பல நல்ல நல்ல விசயங்கள் இருக்கு.
***தலைப்பு பார்த்தேன் சார்...
நாளைக்கு பார்க்கலாம்...
எதாவது மாற்றம் இருக்கானு.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

3 வது கருத்து மிக சரியானது. சட்டம் திருத்தம் செய்யப் படும்வரை அதை மீறுவது சரியில்ல .
இங்கே நேர்மையை விதிகளை கடைபிடிக்கும் துணிவு நிறையப் பேருக்கு இல்லை. இங்கே விதி மீறுவது வீரம். திரைப்படங்கள் அதை ஊக்குவிக்கின்றன.
பொருள் பொதிந்த கேள்விகள் ஐயா

வேகநரி said...

சின்னச் சின்ன கேள்விகள் அல்ல, மிக அருமையான சமூகத்திற்கு தேவையான சிந்தனை உங்களுடையது.
அங்கே ஸ்டாப் என்றால் ஸ்டாப் தான், இங்கே சட்டைத்தை மீறினால் ஹீரோ. நண்பர் ஒருவர் சொன்னார் கிரீஸ் நாடு தனது மக்களிடம் கடன் தரும் ஐரோப்பிய நாடுகளின் நிபந்தனைகளை ஏற்கலாமா அல்லது கூடாதா என்று வாக்கெடுப்பு நடத்தியது போல், ஹெல்மெட்டு தேவைதானா என்று அரசு தமிழக மக்களிடம் வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்ற கருத்தும் பல தமிழர்களிடம் இருக்கிறதாம்!!!

PV said...

Companies do not shoot their own ads. They hire good marketing professionals for that. The professionals are not simpletons as you seem to feel. They calculate the psychological impact on the target watchers after doing a deep ground survey and changing mores and trends. Their ads may annoy you, no wonder and no doubt. But you aren’t their target. For them, you are the annoyance - 
I enjoy seeing the very ads that annoy you because I wonder how clever they are to know have calculated the impact. If the Companies have not seen accelerated profit that may be attributed to the saidimpact, they would have taken the ads off the air. Rahter, they continue as you said. Such ads fall under the categories of Fantasy ads.
There are points we can miss if we insist on seeing an issue only from our own fixed perspective.
Your first part on why we are not having civic sense whereas the foregoers have – is stale. Such complaints were heard in my father’s generation (as he told me); in my generation (from you) and in my son’s generations also – which I am sure, will come. Instead of simply complaining, it would be nice to know from you – a veteran of sorts! - how and why - of the lack of civic sense; and whether it is possible to change our life style and how.

தருமி said...

//... it would be nice to know from you – a veteran of sorts! -...//!!!! you were just kidding . right?

// how and why - of the lack of civic sense...// it is so elementary, Mr,BSV. just the will from the top. i think of Lee Kuan Lew.

தருமி said...

Mr,BSV
//.....I enjoy seeing the very ads that annoy you//

good. your taste. have a nice day!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சட்டங்களுக்கு தம்மை ஆட்படுத்திக்கொள்ள முயல்வதே சாமான்யனையும் மேம்படுத்தும். வெளிநாடுகளில் சட்டத்தை மதிப்பதற்கு சுட்டியுள்ள உதாரணங்கள் அருமை. விளம்பரங்களை அணுகியுள்ள விதம் ரசிக்கும்படி உள்ளது.

”தளிர் சுரேஷ்” said...

மக்களிடையே மாற்றம் வராதவரை சட்டங்கள் இயற்றி பிரயோசனம் இல்லை!

நிர்வாகி (Admin) said...

அது சரி, ஒரு கேள்வி: Englishல comment போடுபவர்களுக்கு English-லயே தான் பதில் சொல்லணுமா என்ன? உங்க தமிழ் எழுத்தைப் படிச்சுட்டுதானே பின்னூட்டம் இடுகிறார்கள், பின் நீங்கள் எதற்க்காக ஆங்கிலத்தில் பதில் சொல்ல வேண்டும்? அவருக்கு தமிழில் எழுத பழக்கமோ, மென்பொருள் வசதியோ இல்லாமலிருக்கலாம். ஆனால் உங்களுக்கு அப்படி இல்லையல்லவா? "பீட்டர்-ing" காரணமாக இருக்க வாய்ப்பில்லை, பின் ஏன்?

என்னமோ சொல்லணும்ன்னு தோணிச்சு சொல்லிட்டேன்.

நன்றி.

தருமி said...

மன்னிக்கணும் தளிர்... definite rules and proper execution இருந்தால் தான் மக்களிடையே மாற்றம் வரும் என நினைக்கின்றேன்.

தருமி said...

இப்படி ஒரு பார்வை இருக்குதோ?
//"பீட்டர்-ing" காரணமாக இருக்க வாய்ப்பில்லை, // அப்படி இருக்க வாய்ப்பில்லையா.....?

சார்லஸ் said...

ஒட்டியும் வெட்டியும் கருத்து சொல்லியிருக்கிறீர்கள் . உங்கள் கருத்துகள் நன்று. எல்லா பக்கமும் யோசித்துப் பார்ப்போமே என்று இரு தரப்பிலும் ஞாயம் சேர்க்கிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே தருமிதான் சார்!

வேகநரி said...

நீங்க சொன்னது மிகவும் சரி தருமி சார்
ஒரு ஹெல்மட்டுக்காக இவ்வளவு கூப்பாடு போடும் மக்களா தானாக மாற்றம் அடைவாகள்?
உறுதியான சட்டங்கள், அதை கடைப்பிடிக்காவிடில் தண்டணைகள் மூலம் அரசு தான் மக்களை சரியான பாதையில் மாற்றமடைய வைக்க வேண்டும்.

Post a Comment