Tuesday, July 12, 2016

897. ஜாகிர் நாய்க் ..

* ஜாகிர் நாய்க் பற்றி வந்த, வரும் செய்திகள் ஏற்கெனவே இருந்த சில ஆச்சரியங்களைப் புதுப்பித்தன. எப்படி இந்த ஆள் இத்தனை விஷயங்களை நினைவில் வைத்து left and right மேற்கோள் காண்பிக்கிறாரே … அதுவும் வெறும் குரான் மட்டுமின்றி பைபிள், இந்து வேதம் என்று எல்லாவற்றையும் மனப்பாடமாக ஒப்பிக்கிறாரே என்றொரு ஆச்சரியம் இருந்தது. ஆனால் என் வாழ்வில் நான் சந்தித்த சில கிறித்துவர்களும் இத்தகைய இமாலய சாதனைகளை செய்பவர்களாக இருந்தது பார்த்தும் வியந்திருக்கிறேன். அவர்களில் இருவர் பற்றி மட்டும் உங்களுக்கும் சொல்லட்டுமா?


 முதல் ஆள் என் வெகு நெருங்கிய உறவினர். எனது நாற்பதுகளில் என்னோடு மிகவும் நெருங்கிப் பழகியவர். உறவுக்கும் மேல் என்னிடம் மிக அன்போடு இருந்தவர். பள்ளி வகுப்பு முழுவதும் அவர் முடிக்கவில்லை. படிப்பு ஏறவில்லை என்றார். சாதாரண வேலையில் இருந்தார். ஆனால் மனுஷனுக்கு அபார நகைச்சுவை உணர்வு. பத்து நிமிடம் யாரிடமும் பேசிக்கொண்டிருந்தால் அதற்குள் அவர்கள் மாய்ந்து மாய்ந்து சிரித்துக் கொண்டிருப்பார்கள். அந்த காலத்தில் வடிவேலு கிடையாது. இவர் அப்படியே பழைய வடிவேலுவின் உடல்வாகோடு இருப்பார். நகைச்சுவை உணர்வும் அதிகம். அவர் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும். என்னோடு சேர்ந்து அவரும் மதங்களைப் பற்றிய கேள்விகளை எழுப்புவார். வடிவேலுவிற்கு ஒரு படத்தில் ஒரு ‘வியாதி’ இருக்குமே … விலாவில் கைவைத்து கிச்சு கிச்சு மூட்டினால் ’மிக நன்றாகப்’ பேசுவாரே … அதைப் போல் இவருக்கும் உண்டு. விலாவில் கை வைத்தால் ஒரு பெரிய கெட்ட வார்த்தையோடு ஒரு துள்ளு துள்ளுவார். சுற்றியிருக்கும் யாரைப் பற்றியும் கவலையில்லை. ஆனாலும் அது ஒரு involuntary reaction தான்!

 திடீரென்று அவரது வீட்டில் ஒரு உடல் நலக்குறைவுப் பிரச்சனை. மருத்துவர்கள் உடம்பில் பிரச்சனையில்லை என்றார்கள். ஆக .. அடுத்து கடவுளிடம் தானே போவோம். போன இடத்தில் இவருக்கு ஒரு புது அனுபவம். அவர் நேரடியாக என்னிடம் சொன்னதைச் சொல்கிறேனே … ஒரு கிறித்துவக் கோவிலுக்குப் போய் வரச்சொல்லி நண்பர்கள் சொன்னதின் பேரில் அக்கோவிலுக்குச் சென்றுள்ளார். பீடத்தை நோக்கி உட்கார்ந்திருந்தாராம்.திடீரென்று பார்க்கும் போது தன் முதுகு பீடத்தை நோக்கித் திரும்பி இருந்ததாம்! (சுற்றி இருப்பவர்கள் சும்மாவா இருந்தார்கள்?) ஆகவே இந்தக் கோவில் / இந்த கிறித்துவ சபை தனக்கு ஏற்றதல்ல என்று “பரிசுத்த ஆவியே” உணர்த்தியதாக உணர்ந்திருக்கிறார்.


தன் வீட்டிலேயே ஒரு “புதிய” சபை ஆரம்பித்து விட்டார். உபவாசக் கூட்டங்கள் நடத்துவாராம். பங்கு பெறும் சிறு கூட்டத்திற்கு அவரது வீட்டிலேயே ஜெபம் முடிந்ததும் சாப்பாடு. – இது வரை எனக்கு அவரிடம் தொடர்பு இருந்தது. அப்போது என் வீட்டிற்கும் வந்து போய்க்கொண்டு இருந்தார். எனக்கே ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்தார்.


போலீஸ்கார மீசை என்போம். அது போயிருந்தது. ’என்னய்யா. உங்க ஜீசஸ் மீசை தாடியெல்லாம் வைத்திருந்தாரே!’ என்றேன். சாத்வீகமாகச் சிரித்துக் கொண்டிருந்தார். காலங்கார்த்தாலேயே இரண்டு மணிக்கு எழுந்து ஜெபிப்பேன் என்றார். காலையில் செய்யும் ஜெபத்தை ஜீசஸ் கண்டிப்பாகக் கேட்பதாகச் சொல்லியிருக்கிறாராம். ’அட … அவருக்கு ஏது காலையும் மாலையும். நமக்கு காலைன்னா ஐரோப்பாகாரனுக்கு மாலையாச்சே’ன்னு geography எல்லாம் சொன்னேன். அதற்கும் ஒரு சிரிப்பு. என் வீட்டில் ஜெபம் செய்ய வேண்டுமென்றார். சரியென்றேன். அசத்தி விட்டார் போங்கள். கையில் இருக்கும் பைபிளைப் புரட்டவில்லை. ஆனால் வசனங்களைப் பிட்டுப் பிட்டு வைத்தார். அதற்காக அவர் கொடுத்த விளக்கமும் மிக அற்புதமாக இருந்தது. கத்தோலிக்க மக்களுக்கு இல்லாத ‘ஞானம்’ அவருக்கிருந்தது. எனக்கும் கூட பைபிளில் இருந்த ஒரு சந்தேகத்தைக் கேட்டேன். நான் எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல பதில் சொன்னார். காலையில் எழுந்து ஜெபம் செய்வது. பைபிளைக் கரைத்துக் குடித்திருப்பது, நல்ல விளக்கங்கள் தருவது, பழைய நகைச்சுவை உணர்வுகள் சுத்தமாகப் போய் பக்தி உணர்வுகளோடு இருந்தது ….


எனக்கு மிகவும் பெரிய ஆச்சரியம். இதெல்லாம் எப்படி என்றேன். வழக்கமாக இது போன்ற எல்லா கிறித்துவர்களும் சொல்லும் பதிலைச் சொன்னார். “எல்லாம் பரிசுத்த ஆவி கொடுத்த கொடை” என்றார். முழு நம்பிக்கையாளனாக இருந்தார். முன்பு போல் என்னோடு சேர்ந்து கடவுள்களைக் கேள்வி கேட்பதும், கேலி செய்வதும் முற்றிலும் போயிருந்தன. “நீங்களும் ஒரு நாள் மாறிவிடுவீர்கள்” என்று எனக்கு ஆசியோ / சாபமோ கொடுத்தார்!


புறப்படும்போது இன்னொரு டெஸ்ட் செய்து விடுவோமேன்னு நினைத்து அவரது விலாவில் கைவைத்து கிச்சு கிச்சு மூட்டினேன். ஒன்றுமே இல்லை. ‘என்ன’ய்யா?’ என்றேன். ’அதையெல்லாம் பரிசுத்த ஆவி எடுத்துக் கொண்டு விட்டார்’ என்றார். அது அடுத்த ஆச்சரியம். ஆனால் அவருக்கு பைல்ஸ் பிரச்சனை உண்டு. முன்பே இருந்தது. சில நிமிடங்கள் கழித்து பைல்ஸ் பிரச்சனை இன்னும் இருக்கிறதா என்று கேட்டேன். இன்னும் சரியாகவில்லை என்றார். கிச்சு கிச்சு பிரச்சனையை வைத்து விட்டு, இந்த பைல்ஸ் பிரச்சனையை உங்கள் பரிசுத்த ஆவி எடுத்திருக்கலாம் என்றேன். சிரித்துக் கொண்டே சென்று விட்டார்.


சீக்கிரம் பெரிய சபையாக வளர்த்து விடுவார் என்று நினைத்தேன். அதே போல் மொட்டை மாடியில் கூடிய கூட்டம் வளர்ந்து, இப்போது பெரிய கோவிலாக ஒன்று கட்டி ஜெபக்கூட்டங்கள், உபவாசக் கூட்டங்கள், மதிய உணவு என்று பெரிதாக வளர்ந்து விட்டதாகப் பலரும் சொல்லி அறிந்தேன். கம்ப்யூட்டர் படித்த மகனும் அப்பாவோடு இருந்து ‘யேசுவின் பிள்ளை’யாக இருக்கிறானாம். வழக்கமாக எல்லா கிறித்துவப் பிரசாரகர்கள் போலவே கார், வீடு என்று இப்போது நன்கிருப்பதாக அறிந்தேன். மகிழ்ச்சி. என்னோடு அவருக்கு ஏதும் பிரச்சனை இல்லையென்றாலும் என் வீட்டாரோடு உறவுகள் அறுந்து விட்டதாக அறிந்தேன். அயலானை நேசி … உன் சகோதரனோடு சமாதானம் செய்து விட்டு அதன் பின் என் பின்னே வா என்று ஏசு சொன்னதாகச் சொல்வதெல்லாம் புத்தகத்தில் உள்ளது தானே … கட்டாயம் அதைப் பின்பற்ற வேண்டுமா என்ன??!! அதுவும் கடவுளையே பிரச்சாரம் செய்பவர்களுக்கு இந்தச் சின்ன விஷயங்களெல்லாம் தேவையா என்ன??!!


இது அதிகம் படிப்பறிவில்லாத என் உறவினரின் நிஜக்கதை. இன்னொன்று என் நண்பனின் அம்மாவும் பெரியம்மாவும். வெகு நாள் முன்பு நடந்தது. இருவரும் கிழவிகள். வெள்ளைச் சேலை … கருப்புப் புத்தகம் (பைபிள்) என்று எப்போது பக்தியாக இருப்பார்கள். முதன் முதல் ‘அப்பாடா … எம்புட்டு இவ்வளவு பைபிள் தெரிந்து வைத்துள்ளார்கள்’ என்று நான் ஆச்சரியப்பட்டதும் இவர்களைப் பார்த்து தான். படிப்பெல்லாம் மிகவும் கொஞ்சம் தான். ஆனால் பைபிள் அத்து படி. அதுவும் அவர்கள் பிரிவினைச் சபைக்காரர்களா? என்னைப் போன்ற கத்தோலிக்கர்களைக் கண்டால் அவர்களுக்கெல்லாம் நாங்கள் கொஞ்சம் ’தாழ்த்தப்பட்ட மக்கள்’ தான். கொஞ்சம் எள்ளி நகையாடுவார்கள் – நீங்கள் மாதாவைக் கும்பிடுகிறீர்கள் … உங்களுக்கு பைபிளில் என்ன சொல்லியிருக்கிறது என்பதே தெரியாது … உ;ங்களுக்கும் இந்துக்களுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை … குற்றச் சாட்டுகள் இப்படியே போகும்.


இந்தப் பழைய கதைகள் எல்லாம் ஜாகிர் நாய்க் பற்றிப் பேசும்போது நினைவுக்கு வந்தன. நான் சொன்ன மூவரையும் விட மருத்துவ டிகிரி முடித்த பெரிய படிப்பாளி .. அந்த இரு பாட்டிகள் போன்று வீட்டுக்குள் பிரச்சாரம் செய்பவரா இவர். அல்லது தனது சொந்த ஊரில் மட்டும் பிரச்சாரம் செய்யும் என் உறவினர் போலவா இவர்? அதையெல்லாம் தாண்டி உலகம் எத்திசையிலும் செல்லும் பெரும் பிரச்சாரகர் அல்லவா?


அதனால் தான் குரானோடு நிறுத்தாமல் இன்னும் இரு புத்தகங்களையும் நன்றாக மனனம் செய்திருக்கிறார். ஆனாலும் இதுவரை அவரது வீடியோக்களை நிறைய கேட்டிருக்கிறேன். அவர் கொடுக்கும் மேற்கோள்களைப் படிக்கத் தேடிய போது இது வரை இரண்டு மேற்கோள்கள் தவறாக இருப்பதாகப் பார்த்தேன்.ஒன்று முன்பு … விவரம் தெரியவில்லை. இப்போது நேற்று தேடிய போது அவர் கொடுத்த மேற்கோளை வாசிக்கத் தேடினேன். காணவில்லை. இன்னொரு காணொளியில் Sex with slaves என்கிற தலைப்பில் தேடிய போது 8:60 வசனம் என்று சொன்னார். வாசிக்கத் தேடினேன். காணவில்லை. அந்த காணொளியில் வசன எண்களை அவர் மிக வேகமாகச் சொல்கிறார். என்ன ஏது என்று தெரிவதற்குள் தாண்டி விடுகிறது. ஆனால் இந்த 8:60 என்பது sub-title ஆகவும் வந்தது. நல்ல சாமர்த்தியம் தான், ஒரு halo effect இவருக்குக் கிடைக்கிறது.


கிறித்துவப் பிரச்சாரகர்களிடம் கேட்டால் பரிசுத்த ஆவி மூலம் அனைத்தும் தங்களுக்குச் சாத்தியமானது என்பார்கள். இஸ்லாமியர்கள் எப்படி இம்புட்டு தெரிஞ்சி வச்சிருக்கீங்கன்னு கேட்டால் என்ன சொல்வார்களோ தெரியாது? ஒரு வேளை .. ஜிப்ரேல் ….?

 நேற்று பார்த்த ஜாகிர் காணொளியில் - (https://www.youtube.com/watch?v=Hy27jcEGn_g)விந்தையாக ஒன்று சொன்னார். ஏன் அடிமைகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், மகர் கொடுத்து திருமணம் செய்து கொள்ள முடியாத ஏழைகள் இப்படி அடிமைகளைத் திருமணம்செய்து கொள்ளலாம் என்று குரானில் சொல்லியிருக்கிறது என்றார். மகர் கொடுக்க முடியாதவன் அடிமைப் பெண்களை வைத்திருப்பானா என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. அதோடு அடிமைகளை வைத்திருப்பது பற்றிச் சொல்லும் போது குரானில் சொல்லியிருப்பது Guantánamo Bayல் உள்ள அடிமைத்தனத்தை விட மேல் என்றார்! அதாவது ஜெயிலில் மேற்கொள்ளப்படுவதை விட குரான் மேல்  என்றால் என்ன பொருள்? குரானுக்குப் போட்டி  போட ஒரு ராணுவ சிறை தான் கிடைத்ததா?!

 இக்காணொளியில் சொன்ன மேற்கோள்களைக்காண முயன்றேன்; முடியவில்லை. யாராவது உதவலாம்.


 *

3 comments:

G.M Balasubramaniam said...

மதங்கள் பற்றி அதிகம் சிந்திக்கும் எழுதும் நீங்கள் என் தளத்தில் நான் பதிவிட்டிருந்த தெய்வத்தின் குரலையும் வர்ணாசிரம தர்மத்தையும் படித்தீர்களா/ உங்கள் கருத்தறிய ஆவல்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இவை போன்ற நிகழ்வுகளில் வாசிப்பும் புரிதலும் நபருக்கு நபர் மாறும் என்ற நிலையில் அவரவர்களின் நம்பிக்கையும்கூட ஒரு முக்கியமான பங்கினை வகிப்பதாகக் கொள்ளலாம்.

வேகநரி said...

உங்களுக்கு தெரிந்த சாதனையாளர்கள் இருவர் தகவல்கள் சுவாரஸ்யம்.
ஜாகிர் நாய்க் பேச்சை நானும் ரசிப்பேன். வேகமாக அடிச்சுவிடணும். தனி திறமை தான் அவர் போன்றவர்களின் முன்னேற்றத்திற்கு காரணம். அவர்களின் புகழ் பரப்ப சிலர் இருந்தால் அவர் புகழைபரப்பி அந்த பகுதி மக்களிடம் அப்படி இப்படி பல செய்திகளை சொல்லி அவர்களை நம்பவைக்க வசதியாக இருக்கும். ஜாகிர் நாய்க் புகழ்பரப்பும் பக்தர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் அவரது ஆங்கில பேச்சை கேட்டு கிறிஸ்துவ,இந்து இளைஞர்கள் கவரபெற்று வழக்கம் போலவே அலை அலையாக இஸ்லாமை ஏற்று கொள்கிறார்கள். அதன் காரணமாக தீய சக்திகள் அவர் மீது கடுப்பாக இருக்கிறார்கள் என்பது.
எனக்கு தெரிந்து இவரின் பேச்சை கேட்பது நீங்க, நான், சகோ சார்வாகன், பகடு,நரேன்,இன்னும் சில காபீர் பயலுக தான். மற்ற தமிழர்கள் எல்லாம் ரசித்து கேட்பது சந்தானம், வடிவேலு,விவேக் பேச்சை தான்.

Post a Comment