Friday, February 10, 2017

926. சல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு ஒரு நினைவுச் சின்னம் கட்டுவோம்*


*

”லென்ஸ்’ என்ற அமைப்பு, தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், ”ஐடியாஸ்’ என்ற 3 அமைப்புகள் மெரீனா போராட்டம் பற்றிய ஒரு கருத்தரங்கை நேற்று (9.2.17) நடத்தினார்கள்.

பலர் போராட்டங்களில் நடந்த நிகழ்வுகள், மனதைத் தொட்ட நிகழ்ச்சிகள், போராட்டம்  முடிந்த முறை, காக்கிச் சட்டைகளின் உண்மை நிறம் …. என்று பலவற்றையும் பேசி முடித்தார்கள். அவைகளில் என் மனதில் பதிந்த சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்:

நானும் கூட இது போன்ற போராட்டங்கள் என்று 1965ல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், அடுத்து இந்த போராட்டம் என்று இரு போராட்டங்களைப் பற்றி மட்டும் எழுதினேன். ஆனால் 1935ல் நடந்த ஒரு போராட்டம் பற்றி இங்கு பேசிய பிறகு அறிந்து கொண்டேன். அப்போராட்டம் பலராலும் மறக்கப்பட்ட ஒன்றாக ஆகி விட்டது. ஒரு வேளை அப்போராட்டம் பெரியார் தலைமையில் நடந்ததால் அப்படி ஒதுக்கப்பட்டிருக்குமோ என்றார் திரு. பாண்டியன்.

கூட்டம் முடிந்து கேள்வி நேரத்தில் விழுந்த மூன்று கருத்துகளைக் குறிப்பிட விழைகிறேன்.

கூட்டம் முடியும் தறுவாயில் ஒரு இளைஞன் வெடித்தான். இதெல்லாமே தோல்வி தவிர வேறொன்றுமில்லை. இன்னும் சல்லிக்கட்டு என்பதை ஜல்லிக்கட்டு என்று சொல்லிக் கொண்டு தான்  இருக்கிறோம்.  வடமொழி ஆளுமையை விட்டு நாம் இன்னும் விலகவில்லை என்று சினந்து கூறினான். நாமும் வடக்கின் வழியில் தான் சென்று கொண்டிருக்கிறோம் என்று எனக்கும் தோன்றியது.

 அடுத்து ஒரு இளைஞன் இப்போராட்டங்களில் அரசியல் கலக்காமல் பார்த்துக் கொண்டது ஒரு தவறு என்றான். போராட்டம் காக்கிக் கலகத்தில் முடிந்ததற்கும் இதுவே காரணம் என்றான். இது ஒரு அரசியல் குடைக்குள் வர வேண்டும். அதுவே போராட்டங்களுக்கு ஒரு முகமும், முனைப்பையும் கொடுக்கும் என்றான். அரசியல் உருவாக்கம் தேவை என்றான்.

இறுதியாகப் பேசியவர் பேசியது எனக்கு மிகவும் பிடித்தது:  குப்பத்து மக்கள் போராட்டத்தைத் தாங்கிப் பிடித்து உதவி செய்து காக்கிச் சட்டைகளின் அபிஷேகத்தையும் பெற்றுக் கொண்டார்கள். பாவம் அந்த மக்கள். நம்மோடு நின்று அதற்காக அடி வாங்கி பெரும் நட்டம் அடைந்தார்கள். 

அரசு, காக்கிகள் அழித்த சந்தையை 40 லட்சம் செலவில் கட்டித் தருவதாக உறுதி அளித்திருக்கிறதாம். ஆனால் நடுவில் கமிஷன் எல்லாம் போக 20 லட்சம் ரூபாயில் அவர்களுக்கு ஒரு சந்தை ஒருவேளை உருவாகலாம். அது நிச்சயம் போதாது.ஆகவே போராட்டக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு குளிர் அறைகளோடு கூடிய மீன் சந்தை ஒன்றைக் கட்டிக் கொடுக்கலாம். ஆர்வத்தோடு போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களும், I.T. நண்பர்களும் முன்னெடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அவர்களோடு நிச்சயமாக சேர்ந்து கொள்ளும்.
என்னைப் பொறுத்தவரை அப்படி ஒரு அமைப்பு கட்டி முடிக்கப்பட்டால் அது  மெரினா போராட்டம் / ஜனவரி 18 போராட்டம் / தை மாதப் போராட்டம் / சல்லிக்கட்டுப் போராட்டம் நடந்ததை காலம் காலமாய் நினைவு கூறும் அடையாளச் சின்னமாக  நிலைத்து நின்று என்றும் இந்தப் போராட்டத்தின் உயர்வை உரத்து வரலாற்றிற்கு நிரந்தரமாகச் சொல்லிக் கொண்டிருக்கும்.

இப்பதிவு உங்களுக்குப் பிடித்ததோ பிடிக்கவில்லையோ … நிச்சயம் இந்தக் கடைசிப் பத்தி பிடித்தவர்கள் பலர் இருப்பீர்கள். இப்பதிவை FBல் SHARE செய்து/ blogல் மறு பதிவிட்டு  பலரின் பார்வைக்கு எடுத்து செல்ல உதவுங்களேன்.மறு பதிவுகளை blogல் இடுவோர் அதன் தொடுப்பு முகவரிகளை பின்னூட்டத்தில் இடும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.*

5 comments:

தருமி said...

இது போன்ற பொது நிகழ்வுகளை முன்னின்று ஆனந்த விகடன் நடத்துவதுண்டு. நாம் நன்கொடைகளை ஆ.விக்கு அளித்து அதன் மூலம் இதனைச் செய்யலாமே என்பது என் எண்ணம்.

இராய செல்லப்பா said...

இதெல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. 'மாணவர்கள்' அல்லது 'இளைஞர்கள்' என்ற வர்க்கம், நிலையான ஒன்றல்ல. It is purely transitionary. நீங்கள் எதிர்பார்க்கும்படியான நிலையான காரியங்களைச் செய்வதற்கு நிரந்தரமில்லாத ஓர் அமைப்பினால் சாத்தியமில்லை. எனினும், குப்பத்து மக்களுக்கு நன்மை செய்தாகவேண்டும் என்ற தார்மீக ஆதரவு யார்மூலமாக வெளிபட்டாலும் நல்லதே.

- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல யோசனைகள்... செயல்பட வேண்டும்...

G.M Balasubramaniam said...

எல்லா பல நிகழ்வுகளையும் போல் இதுவும் மறக்கப்படும் எனக்கு ஏனோ இது யாரும் திட்டமிடாமலேயே ஸ்பொண்டேனியசாக நடந்தது என்று தோன்றுகிறது இன்னொரு முறை இப்படி நடத்திக்காட்ட முடியுமா. நினைவு அகங்கள் எல்லாம் தேவை இல்லாதது என்று தோன்றுகிறது

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அருமையான கருத்தினை வெளிப்படுத்தியுள்ளீர்கள் ஐயா.

Post a Comment