Sunday, June 04, 2017

942. நீயா நானா? - கரு. பழனியப்பனுக்கு ஒரு ஜே!





*





*



(4.6.17) நீயா நானா? பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. உடனே இதை எழுத ஓடி வந்தேன்.

பெயருக்குப் பின்னால் சாதியைப் போட்டுக் கொள்வது பற்றிய ஒரு கருத்துரையாடல். இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் பரவலாக உள்ள இந்தப் பழக்கம் தமிழ்நாட்டில் இல்லாது இருந்து, இப்போது சிறிதாக இங்கேயும் தலைகாட்ட ஆரம்பித்துள்ள இந்த பழக்கத்தைப் பற்றிய கருத்தாடல்.

தங்கள் உயர்சாதித் தன்மையைக் காண்பிக்கவே இந்த வழக்கம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான். சாதியைப் போட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் குழுவினருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை என்றே  நினைக்கின்றேன். பேசியது அர்த்தமில்லாத உளரல்களாக இருந்தன.க்ளோபல் பள்ளியில் தன் பிள்ளையைப் படிக்க வைக்கும் அந்த தகப்பன் (அந்த ஆள் என்ன சாதி என்று தெரியவில்லை!) தன் கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு சாதியைத் தன் பெயரோடு இணைத்துக் கொண்டாராம். பிள்ளைக்கு பிறந்ததுமே சாதிப் பெயரை வைத்து விட்டாராம். பாவம் .. கல்வி இவருக்கு எவ்வளவு கத்துக் கொடுத்து விட்டது!

சாதிப் பெயர் போடுவது தவறு என்று மூன்று இளைஞர்கள் மிக நன்றாகப் பேசினார்கள். மதுரைப் பையன் பாண்டியன் அழகாகப் பேசி, 50 ஆயிரம் ரூபாயைப் பரிசாகவும் பெற்றான்.

சிறப்பு விருந்தினர்கள் வந்தார்கள். பாவம் ஒரு நாயர் பெண். அது போகட்டும். இன்னொருவர் கரு. பழனியப்பன். எந்த சிறப்பு விருந்தினர்களும் இவ்வளவு குறைவாகப் பேசி இத்தனை பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்ததை  இதுவரை எந்த மேடையிலும் பார்த்ததில்லை.

இது பெரியார் மண் என்றார். கவுண்டர் தோட்டம், வன்னியர் தோட்டம் என்றெல்லாம் கோயம்புத்தூர் பக்கம் சாதாரணமாக சொல்வார்கள் என்று ஒருவர் பேசியிருந்தார். பழனியப்பன் கேட்டார்: “ஏன் அங்கே ஒரு சக்கிலியர் தோட்டம் என்று ஒன்றுமில்லை?”  இங்கே பணம் படைத்தவன், பணம் இல்லாதவன் என்ற வேற்றுமைதான் அதிகமாக இருக்கிறது. சாப்பிடப் போகும் முன் எதிரில் இருப்பவனைப் பார்த்து சாப்பிட்டு விட்டாயா என்று கேட்பது மரபு. பசித்தவனை எதிரில் வைத்து நாம் சாப்பிடுவது தவறு. நீ உன் சாதிப் பெயரைப் போடுவது அடுத்த (தாழ்ந்த) சாதிக்காரனுக்கு வலிக்கும் என்றார்.

சாதிப்பெயரைப் போட்ட ஒருவர் தான் செய்தது தவறுதான் என்றார். பழனியப்பன் தன் பக்கத்தில், எதிர்க்கட்சி பக்கம் அவரை உட்கார அழைத்தார். இதே போல் இன்னும் யார் யார் நினைக்கிறீர்களோ அவர்கள் இந்தப் பக்கம் வாருங்கள் என்றார் கோபி. படபடவென்று ஐந்தாறு பேரைத்தவிர அனைவரும் இப்பக்கம் வந்து விட்டனர்.


பெரியார் மீண்டும், இன்றும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாயிற்று.


அந்த க்ளோபல் பள்ளிப் பெருந்தகை இருந்தாரே அவருக்குக் கொஞ்சமாவது ரோஷம் அது இது என்றிருந்தால் அவர் தன் பையனை எடுத்து அவர் சாதியினர் நடத்தும் பள்ளியில் சேர்க்க வேண்டும். அப்படியெல்லாம் தோன்றும் அளவிற்கா அவருக்கு மசாலா இருக்கப் போகிறது! பழனியப்பன் கொடுத்த சாட்டையடி அவருக்கு வலிக்கும் அளவிற்கு அவரது தோல் அவ்வளவு மெல்லியதல்ல என்றே நினைக்கின்றேன்.


கரு. பழனியப்பனுக்கு ஒரு ஜே!


முதல் ஆளாக கட்சி மாறிய அந்த நல்ல மனிதருக்கும் ஒரு ஜே!

*

8 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நல்ல பகிர்வுக்கு நன்றி ஐயா.

கரந்தை ஜெயக்குமார் said...

பெரியார் மீண்டும், மீண்டும் வெற்றி பெற்றுக் கொண்டேதான்இருப்பார் ஐயா
கரு.பழனியப்பன் அவர்கள் பாராடடிற்குரியவர்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கரு.பழனியப்பன்- அருமை!

திண்டுக்கல் தனபாலன் said...

(முதல்முறையாக) இத்தனைபேர்கள் மாறியது வியப்பு தான்...

'பசி'பரமசிவம் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி.

Packirisamy N said...

//நீ உன் சாதிப் பெயரைப் போடுவது அடுத்த (தாழ்ந்த) சாதிக்காரனுக்கு வலிக்கும் //
சத்தியம்!

ராஜி said...

கரு.பழனியப்பன் பேச்சு எப்பயுமே யோசிக்க வைக்கும். அழகான உச்சரிப்போடு, அர்த்தமுடன் பேசுவார். செமயா இருக்கும். சினிமாவுல பெரிய ரவுண்ட் வந்திருக்க வேண்டியவர்.

வேகநரி said...

ஜாதி வெறுப்பு பிராசாரம் உச்ச கட்டத்தில் இருக்கின்ற தற்போதைய காலகட்டத்தில் இப்படியான தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மிகவும் பயனுள்ளவை.

Post a Comment