Monday, July 24, 2017

944. குழம்பிக் கிடக்கும் காலை நேரத்து மணித்துளிகள்




*


 இந்தக் காலைத் தூக்கத்திற்கு ஒரு முடிவு கட்டணும்னு நினைக்கிறேன். முடியவில்லை. அரை குறைத் தூக்கத்தில் எத்தனை நினைவுகள் … எத்தனைக் கற்பனைகள் … எத்தனை அரைக் கனவுகள். போதும் போதும் என்றாகி விட்டது இன்று.

காலையில் எழுந்து நடக்கச் செல்ல வேண்டும் என்ற துணைவியாரின் உத்தரவிற்கு அவ்வளவு எளிதில் கட்டுப்பட முடியவில்லை. ஆனால் சிறிது விளையாட்டு, சிறிது நடை என்பதற்கு ஓரளவு கட்டுப்பட்டு காலை 6 மணிக்கு எழுந்திருக்க முயல்கிறேன். ஆனால் அதற்குத் தடையாக பல மனத் தடைகளை நானே உருவாக்கிக் கொள்கிறேன். உதாரணமாக இன்று எழுந்தேன். முதுகின் கீழ்ப்பக்கம் சிறிதே வலி. அதுவும் படர்ந்த இடத்தில் வலி. அது இதய நோயாளிகளுக்கு அச்சம் கொடுக்கும் வலி. அந்த வலி இருப்பது போல் தோன்றியது. அதையே சாக்காக வைத்துக் கொண்டு படுத்து விட்டேன். ஒவ்வொரு முறையும் இது போல் ஏதாவது ஒரு சாக்கு கிடைக்கும்.


இதையும் மீறி விளையாட்டு + நடைக்குப் பல நாள் சென்றும் விடுகிறேன். இன்று போல் தொடர்ந்து தூங்கும்போது வரும் அனுபவம் அவ்வளவு நன்றாகவும் இல்லை.

இன்று என்ன நடந்தது என்றால் …

 கைப்பேசியிலிருந்து மெல்லிய அழகான ஒரு இசை. எழுந்து அணைத்து விட்டு படுத்து விட்டேன். அம்மாடி …….. என்னென்னவோ மனதுக்குள்ளோ மண்டைக்குள்ளோ ஒரே நாடகங்கள் தான்.

முந்திய இரவு எள்ளுப் பொடி வைத்து தோசை சாப்பிட்டேன். அதற்காகவா இத்தனை நீள நினைப்புகள் எள்ளுப்பொடி மீது வரும். எப்படியோ … இரண்டு கை நிறைய எள்ளுப்பொடி இருக்கிறது. வெறும் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வது? ஒரு கடைத் தெருவில் நிற்கிறேன். ஒரு carry bag கேட்கிறேன். தடை செய்யப்பட்டதால் ஒன்றிலும் பை கிடைக்கவில்லை. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன் நான் வைத்திருந்த பழுப்பு வெண் நீளக் கால்சட்டையை அப்போது அணிந்திருக்கிறேன். அதன் இடது பக்கக் கால் பகுதியை மடித்து அதனுள் எள்ளுப்பொடியைப் போட்டாச்சு. அப்போது Valet parking செய்து சாப்பிட்டு முடித்ததும் நம் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து நம்மிடம் கொடுப்பார்களே அது போல் என் வண்டியை என்னிடம் ஓட்டிக் கொண்டு வந்து ஒருவர் சாவியைக் கொடுக்கிறார். நன்றி சொல்லி டிப்ஸ் கொடுக்கிறேன். ஆனால் வந்த வண்டி என்ன தெரியுமா? என் இரு வண்டிகளும் இல்லாமல் ஒரு பழைய பச்சைக் கலர் டி.வி.எஸ்.50 தகர டப்பா. அதிலும் இரு mud guardகளும் முன் பக்கம் சக்கரத்தோடு ஒட்டி ஒழுங்காக உள்ளன. ஆனால் பின் பக்கம் லூசாக ஆடிக்கொண்டே இருக்கின்றன. அந்த வண்டியில் ஏறி எள்ளுப்பொடி விழாமல் வண்டியை ஓட்டிச் செல்கிறேன். மழை பெய்து சாலையில் தண்ணீர் கட்டிக் கிடக்கிறது.

இப்படி ஒரு கனவு பின்னணியில் ஓடுகிறது. ஆனால் அதனோடு சேர்த்து இன்னொரு கனவும் முன்னணியில் ஓடுகிறது. காலையில் எழுந்ததும் நன்கு நினைவில் இருந்தது. இப்போது மறந்தே போய் விட்டது. நினைவுக்குள் வந்தால் மறுபடி தொடர்கிறேன்.

 இரண்டு கனவுகள் … ஒவ்வொன்றும் ஒவ்வொரு லேயரில் மாறி மாறி வந்து கொண்டே இருந்தன. குழப்பங்கள் …

ஏழரை எட்டு மணி நேரம் வரை ஒரு கிழடு தூங்கணுமா என்ன? இருந்தாலும் காலையில் எழ முடியவேயில்லையே. இதில் நாலரை மணிக்கு மேல் தூங்கவே முடியாது என்று சொல்லும் என் போன்ற வயதான ஆட்களைப் பார்க்கும் போது அவர்களைப் பார்த்துப் பொறாமை படுவதா, அல்லது பாவப் படுவதா என்ற ஐயம் எழுகிறது.

காலையில் நாலரை … கடவுளே! அந்தப் பொழைப்பு எனக்கு வேணவே வேண்டாம் சாமி! எட்டு மணி வரை கட்டையைக் கட்டிலில்கிடத்தினால் என்ன சந்தோஷம் என்பது அந்தப் பாவப்பட்ட மக்களுக்கு எப்படி தெரியப் போகுது!

பேசாமல் கைப்பேசியில் அழைப்பு மணி வந்ததும் எழுந்து விளையாடப் போவது நல்லது என்று இப்போது தோன்றுகிறது.

ஆனால் காலையில் …. தூக்கமே பல முறை விஞ்சுகிறது.



 *

2 comments:

G.M Balasubramaniam said...

பாசிடிவ் எண்ணங்கள் புத்துணர்ச்சி தரும் உடல் நம் கட்டுக்கு அடங்கி இருக்க வேண்டும் சாம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தூக்கம் ஒரு சுகம்தான். அதே சமயம் நம் கட்டுப்பாட்டை மீறும்போது சிக்கல்தான் ஐயா.

Post a Comment