Saturday, August 19, 2017

947. எங்கள் கோவிலில் ஒரு அதிசயம் .........




*

திடீரென்று பிரிவினைக்கார சபைக்காரரும், கிறித்துவ ஊழியம் செய்பவரும், எங்கள் பகுதியில் குடியிருப்பவரும், பழக ஆரம்பித்ததிலிருந்தே உறவு முறை சொல்லி அழைத்து நட்பு பாராட்டும் நண்பரிடமிருந்து ஒரு வாட்சப் செய்தி வந்தது. எங்கள் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் (கத்தோலிக்க) கோவிலில் ஒரு அதிசயம் என்று செய்தி வந்தது. இரண்டு படங்களுடன் வந்த செய்தி அது.

ஒரு படம் இது தான்: --->
                                               

அதனோடு எங்கள் பங்குத் தந்தை (Parish Priest) கொடுத்த செய்தியும் இருந்தது. செய்தி இது தான்: 


அன்பார்ந்தவர்களே .. 
கிறிஸ்து அரசரின் பெயரால் வாழ்த்துகள்.

நேற்று காலையிலிருந்து எம் பங்கில் புதிதாய் கட்டிக் கொண்டிருக்கும் ஆலயத்தின் பீடப்பகுதியில் நற்கருணைப் பேழை அதற்கு மேல் அமைக்க இருக்கும் கிறிஸ்து அரசர் சுருப இடத்தில் அன்னை மரியாள் கொடிப் பிடித்து  தம் திரு மகனை வரவேற்பது போல நிழல் படிந்திருக்கிறது. 

இது உண்மையிலேயே இறைவன் திருவுளம் என்றால் 
கிறிஸ்து அரசருக்கும், அன்னை மரியாளுக்கும் 
புகழ் உண்டாவதாக !!!!!

என்றும் இறையன்பில்
Fr. மரிய மிக்கேல்
பங்குத் தந்தை, 
கிறிஸ்து அரசர் தேவாலயம்,
விளாங்குடி, மதுரை




பிள்ளையார் பால் குடித்த கதையும்,  மும்பையில் சிலுவையிலிருந்து வந்த ரத்தம் என்று சொன்னதை எடமருக்கு தவறென கண்டு பிடித்ததும் “அவிசுவாசியான” (மூமின்!!) எனக்கு நினைவுக்கு வந்து தொலைத்தது.  (Sanal Edamaruku is an Indian author and rationalist. He is the founder-president and editor of Rationalist International.)


Sanal Edamaruku  -  Miracle-buster


 ஆனாலும் ஆர்வம் விடுமா?  உடனே வண்டியை எடுத்து விரைந்தேன் கோவிலுக்கு.


 புதியதாகக் கட்டிக் கொண்டிருக்கும் கோவில். இப்போது வழிபாடுகள் கீழ்த்தளத்தில் - எதிர்காலத்து வண்டி நிறுத்தும் இடம் - நடந்து வருகின்றன. வீட்டுக்கார அம்மா கோவிலுக்குப் போகும் போது அவர்களை கீழே
அனுப்பி விட்டு கோவிலின்மேலே  உள்கட்டுமானத்தை ரசிப்பது வழக்கம். ஞாயிறு கூட சில ஆட்கள் அலங்கார வேலை செய்து கொண்டிருப்பார்கள். நெற்றியில் விபூதி பூசிக்கொண்டு நகாசு வேலை செய்யும் அவர்களைப் பார்ப்பது நன்றாக இருக்கும். சின்னச்சின்ன சித்திர வேலைப்பாடுகளைச் செய்து கொண்டிருப்பார்கள். மிக அழகான வேலைப்பாடுகள் உள்ளே இப்போது நடந்து கொண்டிருக்கின்றன். முதல் தடவை பார்த்த போது பிரமித்துப் போனேன்.  என்ன அழகான வேலைப்பாடுகள். Wondering about the symmetry and beauty of the inner decorations



இன்று உள்ளே போனேனா ... கோவிலில் சின்னக் கூட்டம் இருந்தது. விசேஷ வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.  பூக்கள், மெழுகுவர்த்தி, ஜெபங்கள் என்று மக்கள் ஈடுபாட்டோடு இருந்தனர். 

 ஆலயத்தின் பீடத்தின் நடுவில் புதிய சிமெண்ட் சுவற்றில் கருமையான உருவம் ஒன்று. பெண்ணின் முதுகுப்பக்கம் காண்பிப்பது போல் ஒரு உருவம் தெரிந்தது. வலது கையை சிறிது உயர்த்தி ஏதோ ஒன்றைப் பிடிப்பது போன்ற ஒரு உருவம் தெரிந்தது. மக்கள் பலரும் மலர் வைத்து, மெழுகு திரி ஏற்றி ஜெபம் செய்து கொண்டிருந்தார்கள். எந்த நம்பிக்கையாளனுக்கும் இதைப் பார்த்ததும் நிச்சயம் பக்தி பொங்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.  பார்ப்பதற்கு அப்படியே ஒரு பெண்ணின் உருவம். கையில் எதையோ ஏந்திக் கொண்டு நிற்பது போன்ற தோற்றம். மரியாளை நம்புவோருக்கு அது நிச்சயம் ஒரு மரியாளின் உருவம் தான்.

பங்குத் தந்தையும் இருந்தார். (என் புத்தகம் கூட ஒன்று அவரிடம் உண்டு. வீட்டுக்கு ஒரு முறை வந்த போது கொடுத்திருந்தேன். என்னைப் பற்றி அவருக்குத் தெரியும். ஆனால் என் புத்தகம் என்ன சொல்கிறது என்பது பற்றி இதுவரை அவருக்குத் தெரியாது.) அவரிடம் படம் எடுக்கலாமா என்று கேட்டேன். எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.



.
எங்கள் பங்குத் தந்தை
Fr. மரிய மிக்கேல்

படம் எடுத்ததும் மனசுக்குள் நாமும் ஒரு எடமருக்கு என்ற நினைப்பு வந்தது எனக்கு. 

பீடத்தின் பின்பக்கம் சென்று பார்க்க நினைத்தேன். பீடம் பின்பக்க சுவரிலிருந்து சிறிது முன்னால் தள்ளி இருந்தது . பின் பக்கம் சென்றேன். அது இப்போதைக்கு அங்கு வேலை செய்பவர்களின் தங்கும் இடமாக இருந்தது. பீடத்தில் உருவம் தெரிந்த இடத்திற்கு நேரே பின்னால் சென்று பார்த்தேன். அங்கும் - படத்தில் இருப்பது போல் - ஒரு வட்டமான இடத்தில் சுவற்றில் ஈரம் பாய்ந்திருந்தது. மதுரையில் சமீபத்தில் நல்ல மழையும் பெய்திருந்திருந்தது. அந்த இடத்தைத் தொட்டுப் பார்த்தேன். நீரின் ஈரம் தெரிந்தது.  அந்த 




இடத்திற்கு மேல் சுவற்றின் உயரத்திலும் சிறிது ஈரம் தெரிந்தது.  மழையின் விளைவு என்று மனதிற்குள் தோன்றியது.



அங்கு வேலை செய்து கொண்டிருந்தவரை அழைத்து எப்படி அந்தச் சுவற்றில் ஈரம் வந்தது என்று கேட்டேன். அவர் சாரலில் நனைந்திருக்கும் என்றார். ஆனால் மூடிய அறை. அங்கு எப்படி சாரல் அடித்திருக்க முடியும் என்றேன். தெரியவில்லை என்றார். 

அடுத்து அவரிடம் முன் பக்கம் உருவம் தெரிவதும், பின்னால் ஈரம் இருப்பதும் ஒரே சுவரா என்று கேட்டேன். அவர் தனித்தனி சுவர் என்றார். அப்படித் தெரியவில்லையே என்றேன்.  

பீடத்திற்கு நேர் மேலே ஒரு வட்டம் வெளிச்சம் வர திறந்தே இருந்தது. ஆனால் அங்கிருந்து தண்ணீர் இறங்கி இப்படி ஒரு உருவம் வர நிச்சயமாக எந்த வழியும் இல்லை. பின்னாலிருந்தும் நீர் கசிந்து வரவும் வழியில்லை.

நேற்றிருந்த அதே அளவில் தான் இன்றும் உருவம் தெரிகிறதாம். ஈரம் காய்ந்திருக்குமே என்ற நினைப்பில் கேட்டேன். நேற்றை விட இன்று தான் அதிகமாகத் தெரிகிறது என்றார் ஒருவர்.

பிள்ளையார் பால் குடித்த கதை மாதிரி இது சட்டென்று அவிழவில்லை. 

பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விளக்கம் கிடைத்தால் தருகிறேன்.


இப்போதைக்கு கீழே உள்ள இரு நிகழ்வுகள் பற்றியும் படித்துக் கொள்ளுங்கள் - விருப்பமிருந்தால்!

JUST CLICK THEM:

https://www.theguardian.com/world/2012/nov/23/india-blasphemy-jesus-tears

http://dharumi.blogspot.in/2006/04/154.html



 *



Friday, August 18, 2017

946. சுதந்திர நாள் விழா ........2017




*

பூங்காவில் இன்னும் புதிதாக விடுபட்ட வேலையை முடிக்க தீர்ப்பின் நகலுக்காகக் காத்திருக்கிறோம். எனவே, இந்த ஆண்டு பூங்காவிற்கு வெளியே எமது சுதந்திர நாள் விழா நடந்தேறியது.

இந்த ஆண்டு பூங்காவின் வெளியே ……….