மிக நீண்ட பதிவு. 11 ஆண்டுகளுக்கு முன் எழுதிய போது வாசிக்க ஆட்கள் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறீர்களா என்று தெரியவில்லை ...
*
*
Pick the odd man out என்று தேர்வுகளில் ஒரு கேள்வி கேட்கப் படுவதுண்டு. அதுபோல் கீழே ஒரு கேள்வி:
Pick the odd man out:
1. தெக்ஸ்
2. லக்கி லுக்
3. ஞாநி
4. சுகுணா திவாகர்
5. சிறில் அலெக்ஸ்
- இன்னும் கொஞ்சம் பெயர்கள் உண்டு. இப்போதைக்கு இது போதும்.
உங்கள் பதில் என்னவாக இருக்கும்?
ஒருவேளை ஞாநி தவிர எல்லோரும் நம் தமிழ்ப் பதிவர்கள் என்று கொண்டால், சரியான விடை: ஞாநி. சரிதான்.
என் பதிலும் அதுவாகத்தான் இருக்கும்; ஆனால் அதற்குரிய காரணம் மட்டும் வேறு. ஞாநி தவிர மற்ற அனைவரும் நான் அறிந்தவர்கள்; பழகியவர்கள்; நண்பர்கள். ஞாநியை டிவியில் மட்டும்தான் பார்த்திருக்கிறேன்.
பகுதி I:
இந்த மனுஷன் ஞாநி, ஆ.வி.யில் 'ஓ! பக்கங்கள்' & 'அறிந்தும் அறியாமலும்' அப்டின்னு எழுதிட்டு வர்ரார். ஓரளவு தவறாமல் வாசித்து வருகிறேன். நன்றாகத்தான் எழுதிவருகிறார். என்ன ஆச்சுன்னு தெரியலை, பாவம் இந்த மனுஷன் இப்போதைக்கு கொஞ்ச நாளாக நம் தமிழ்ப் பதிவர்களுக்கு punch bag ஆக மாறியுள்ளார்.
முதலில் அவர் எப்படி செக்ஸ் பற்றி எழுதலாம்னு ஒரு சுடு பதிவொன்று வந்தது. அப்போது அதை நான் வாசித்தேன்.மன்னிக்கணும், எழுதியது யார் என்பது மறந்துவிட்டது. தொடர்ந்து தெக்கிகாட்டான் ஒரு பதிவு போட்டார். அவர்களது பதிவில் அவர்கள் வைத்த குற்றச்சாட்டு - ஞாநி என்ன Sexology படித்த மருத்துவரா, அல்லது அத்துறையில் மேற்படிப்பு படித்தவரா; இப்படி அரைவேக்காடுகள் எழுதி அதில் தவறு இருந்துவிட்டால் மக்கள் அப்படியே தவறான ஒன்றை தவறாகப் புரிந்து கொண்டு தவறிப் போய்விட மாட்டார்களா என்ற அங்கலாய்ப்புடன் எழுதியிருந்தார்கள்! நானும் ஞாநியின் அந்தக் கட்டுரைகளையும் வரி வரியாக இல்லாவிட்டாலும் ஓரளவு வாசித்துள்ளேன். வரி வரியாக வாசிக்காததற்குரிய காரணம் 'இதெல்லாம்தான் எனக்குத் தெரியுமே!' அப்படி என்கிற 'மேதாவித்தனம்"தான்.
என்ன எழுதிவந்தார்?
இளம் பருவத்து உடம்பின், மனத்தின் மாறுபாடுகள், அதனால் குழந்தைகளுக்கு வரக்கூடிய குழப்பம், ஊடகங்களில் வரும் சில தவறான தகவல்கள் (சிறப்பாக, masturbation பற்றி) தரக்கூடிய அச்சங்கள் என்பது போன்றவற்றைப் பற்றி எழுதி வந்தார். நம் இளம் வாழ்க்கையை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்தாலே நாம் எல்லோரும் இதைப் போல் எழுத முடியுமே. இதற்கென்று தனிக் கல்வி பெற்று வரவேண்டுமா என்ன? ஆனால் அவர் அப்படி மேம்போக்காக நிச்சயமாக எழுதவில்லை. இந்த அறிவியல் உண்மைகளை, சொந்த அனுபவத்தோடு சேர்த்து ஒரு basic sex education பற்றி யார் வேண்டுமானாலும் எழுதலாமே. அதைத்தான் அவர் செய்தார். நன்றாகவும் செய்திருந்தார்.
அது ஒன்றும் பெரிய அறிவியல் கட்டுரை அல்ல; மக்களை எளிதாக சேரக்கூடிய ஓர் ஊடகத்தில் தனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பை பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டு நான்கு நல்ல விஷயங்களை, நான்கு பேர் தெரிந்து கொள்ள காரணமாயிருந்துள்ளார். அந்த ஒரு புதிய நல்ல முயற்சிக்காக அவரை வாழ்த்த வேண்டும்.
அந்தந்த துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள் மட்டும்தான் எழுதவேண்டும் என்றால் நானும் நீங்களும் எதை எழுத முடியும். என் முந்திய பதிவு நம் தமிழ் சினிமா இயக்குனர்களை நோக்கி எழுதப்பட்டது. சினிமா பார்ப்பவன் என்பதைத் தவிர எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? நீ முதலில் போய் நாலைந்து படம் இயக்கிப் பார்த்துவிட்டு அதன் பிறகு இதையெல்லாம் எழுது என்று யாரும் சண்டைக்கு வரவில்லையே.
அது சினிமா, அதுவும் நீ உன் பதிவில் எழுதுகிறாய்; யார் அதைப் படிக்கிறார்கள்(!)? அப்படியே படித்தாலும் அதன் தாக்கம் பெருமளவில் இருக்காது; ஆனால், ஆ.வி. பொன்ற ஒரு வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவதும், பதிவுகளில் எழுதுவதும் ஒன்றா என்பீர்களாயின், நிச்சயமாக ஞாநி செக்ஸ் பற்றியெழுதியதில் என்ன தகவல் தவறு கண்டீர்கள் என்று சொல்லுங்கள். அதைவிட்டு விட்டு, எழுதுவதே தப்பு என்பது என்ன நியாயம்? அப்படியென்றால், ஹைகூ பற்றியும், சங்கப் பாடல்கள் பற்றியும் ஏன் சுஜாதா எழுதுகிறார் என்றா கேட்பீர்கள்? இல்லை, வெண்பா பற்றி நம் பதிவர்கள் ஜீவாவும், கொத்ஸும் எப்படி எழுதலாம்; அவர்கள் என்ன வித்வான் தேர்வு எழுதினார்களா, இல்லை, புலவர் பட்டம் பெற்றார்களா? என்றா கேட்பீர்கள்? செல்லாவும் CVR-ம், ஆனந்தும் எங்கே போய் நிழற்படக் கலை பற்றிப் படித்துப் பட்டம் பெற்றுவிட்டு வந்து கட்டுரை எழுதுகிறார்கள்? இப்படியே கேட்டுக் கொண்டே போனால் ....
யாரும் எதையும் எழுதுவதற்கு இந்தந்த தகுதி வேண்டுமென்று சொல்ல நமக்கென்ன அருகதை. அருகதை என்பதைக் கூட விடுங்கள். யாரும் எதையும் எழுதலாம்; எழுதட்டும். ஆனால் தவறாக எழுதியதாகத் தெரிந்தால், வாருங்கள், உண்டு இல்லை என்று பார்த்துவிடுவோம்.ஞாநி பாலியல் பற்றி இதுவரை எழுதியதில் உள்ள தகவல் பிழைகளைப் பட்டியலிடுங்கள். நாமா அவரா என்று பார்த்துவிடுவோம். அதைவிட்டு விட்டு அவன் அதை எழுதக் கூடாது; இவன் இதை எழுதக் கூடாதென்பது ஒரு வேடிக்கையான விவாதம் மட்டுமல்ல; எழுதுபவனுக்கு வேதனையானதும் கூட. அதோடு இதுபோன்ற விஷயங்களை நீங்கள் சொல்லும் "படித்தவர்களை" வைத்து எழுதச் சொல்லிப் பாருங்கள்; படிக்க ஆளிருக்காது. வேறொன்றுமில்லை; அவர்கள் அனேகமாக ஆழமாக எழுதுவார்கள் பல ஆதாரங்கள் அது இது என்று. அப்படிப்பட்ட அறிவியல் கட்டுரைகளை எத்தனை பேர் வாசிப்பார்கள்.
கடைசி வார ஆ.வி.யில் அரவாணிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். நான் உயிரியல் படித்தவன்தான். இருப்பினும் எனக்கும் புதிய தகவல்களாக இருக்குமளவிற்கு அந்தக் கட்டுரையை ஞாநி எழுதியுள்ளார். தயவு செய்து வாசித்துவிட்டுச் சொல்லுங்கள் - அது ஒரு நல்ல தகவல் நிறைந்த கட்டுரையா இல்லையா என்று.
யார் எழுதுகிறார்கள் என்பதா முக்கியம்; எழுதப்பட்டது சரியானதுதானா என்பதுதானே முக்கியம்.
பகுதி II
அதே ஞாநி கலைஞர் ஓய்வு பெறவேண்டிய நேரமிது என்று ஒரு கட்டுரை எழுதிவிட்டார். கெட்டுது போங்க நிலமை ..
இவர் எப்படி இதைச் சொல்லலாமென கண்டனங்கள். ஞாநியென்ன தெருவில் போகும் எவனும் கேட்கலாம் இந்தக் கேள்வியை. காரணம் கலைஞர் இப்போது நமது முதலமைச்சர். என்னை ஆள்பவன் இப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பதில் எந்த ஒரு குடிமகனுக்கும் ஓர் அளவுகோல் இருக்கும். ஏன், எம்.ஜி.ஆர். பேசக்கூட முடியாமல் இருந்தாரே (அப்போ நாங்க வேற, கல்லூரி ஆசிரியர்கள் ஸ்ட்ரைக் செஞ்சிட்டு, சிறைக்குள் மாட்டிக்கிட்டு இருந்தப்போ, முதலமைச்சரின் உடல் நிலையினால் எங்கள் விடுதலை நீட்டிக்கப் பட்ட போது .. )பேச முடியாத ஆளெல்லாம் அந்த நாற்காலியில் இருந்தால் இப்படித்தான் என்றுதான் பேசினோம்; தவறில்லையே அதில்.
அதோடு நரைத்த தலையோடு எந்த அரசியல் தலைவர் இருந்தாலும் 'அடுத்தது யார்?' என்று ஒரு பெரிய கேள்விக் குறியோடு ஊடகங்கள் வலம் வருவது உலகளாவிய ஒரு விஷயம். தி.மு.க. கட்சிக்காரர்களையும் சேர்த்தே சொல்கிறேன் - சென்ற தேர்தல் முடிந்து கலைஞர் முதல்வர் ஆனதும் இன்னும் ஓரிரு மாதங்களில் ஸ்டாலின் முதல்வராக்கப் பட்டு, கலைஞர் கட்சித்தலைமையில் இருந்துகொண்டு வழி நடத்துவாரென்பதுதானே எல்லோரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அவ்வளவு ஏன், சமீபத்தில் சேலத்தில் அவர் பேசியதை வைத்து விரைவில் அரசியல் மாற்றம் வரும் என்ற பேச்சு கட்சி வட்டாரங்களிலேயே வந்ததே. ஒருவேளை எல்லோரும் நினைத்தது போல் அப்போதே ஸ்டாலினுக்குப் பட்டம் சூட்டியிருந்தால் (Stalin is definitely my personal choice.) சில விஷயங்கள் நடந்தேறாமல் போயிருந்திருக்கும். இப்போது ஸ்டாலினுக்கே போட்டி என்பது போன்ற சேதிகளுக்கு இடமில்லாமல் போயிருந்திருக்கும்.
But all these are just hypothetical...
விஷயத்துக்கு வருவோம்.
ஞாநி இந்தக் கட்டுரைக்கு எதிர்ப்புகள் வருமென்று தெரிந்தே எழுதியிருக்கிறார் என்பது அவரது முதல் பத்தியிலேயே தெரிகிறது. //பாரதி வழியில் பேசாப் பொருளைப் பேசத் துணியும் ஒரு முயற்சி!// (ஆச்சரியக்குறியும் அவர் போட்டதுதான்!!) இந்தத் துணிச்சலுக்காகவே அவருக்கு என் வாழ்த்துக்கள். Calling a spade a spade (
இதில் ஒன்பதாவது )எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால்.
கலைஞரை எங்கும் குறையாகப் பேசாமல் அவரது வயது, அதனால் அவருக்கு இயல்பாக ஏற்படக்கூடிய தொல்லைகள் இவைகளைப் பற்றிப் பேசிவிட்டு, இனி அவர் //அடைய வேண்டிய புதிய புகழும் எதுவும் இல்லை; சந்திப்பதற்கான புதிய விமர்சனங்களும் இல்லை// என்று சொல்லி ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்திருப்பதைக் கூறுகிறார்.இத்தனைக்கும் பிறகு //பதவியைத் தூக்கி எறிய வேண்டாம்; கை மாற்றிவிட்டுப் போவதற்கு ஏன் தயங்குகிறீர்கள்?// என்று கேட்டிருப்பதில் என்ன தவறு என்பது எனக்குப் புரியவில்லை.
இதில் என்ன உள்குத்து இருக்கிறது?
//தனக்குப் பாதுகாப்பாக நடந்துவரும் ஆற்காடு வீராசாமியிடம் கருணாநிதி சொல்கிறார்: "பாத்ரூம்ல
கால் இடறிடுச்சு. வேட்டி ஈரமாயிடுச்சு. வேற வேட்டி மாத்திக் கட்டிக்கிட்டு வர லேட்டாயிடுச்சு"// - இது ஞாநி எழுதியுள்ளது. தடித்த எழுத்துக்கள் என்னுடையவை. அந்த தடித்த எழுத்துக்களை விலக்கி விட்டு மறுபடியும் வாசித்துப் பாருங்கள்.
'ஒண்ணுக்குக்கு போக முடியாமல் வேட்டியை ஈரமாக்கிக்கொண்டார்' என்று ஞாநி எழுதுகிறார் - இப்படி உள்ளது சுகுணாவின் பதிவில். கண்ணகி சிலை விவகாரத்திலும் இதே போல் ஒரு பதிவில் (எந்தப் பதிவென்று தெரியவில்லை)ஒரு குற்றச்சாட்டு. அதையும் வாசித்துப் பார்த்தேன். ஞாநியின் கூற்றில் தவறில்லை. குற்றச்சாட்டில் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்குமான முடிச்சுதான் இருந்தது. அந்த விகடன் ஏதென்று தெரியாததால் இங்கு முழுதாக அதை மேற்கோளிட முடியவில்லை.
என்னை, என் நாட்டைத் தலைமை தாங்குபவன் அறிவாளியாக இருக்க வேண்டும் - எல்லோரும் எதிர்பார்ப்பதுதான்; தவறில்லையே! அவன் திறமைசாலியாக இருக்க வேண்டும் - எல்லோரும் எதிர்பார்ப்பதுதான்; தவறில்லையே! அதேபோல் நல்ல திடகாத்திரக்காரனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு. சொல்லப் போனால் முழு ஆற்றலோடு இயங்க நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது நமது உரிமை.
கிளிண்டனையும், டோனி ப்ளேயரையும், இன்றைய புஷ்ஷையும் பார்க்கும்போதும், நமது சங்கர் தயாள் சர்மாக்களையும், வாஜ்பாய்களையும் பார்க்கும்போதும் சங்கடமாகத்தான் எனக்கு இருக்கிறது. சொல்வது தவறென்றாலும் சொல்கிறேன்: இதில் முந்தியவருக்கு நான் வைத்த பெயர் lame duck. அதன்பிறகு வாஜ்பாயும் அப்படி ஆனபோது முந்தியவருக்கு lame duck -senior என்ற பட்டத்தையும், பிந்தியவருக்கு lame duck (both literally and figuratively )- Junior என்ற பெயரையும் வைத்தேன்.
நமக்குப் பிடித்ததை மட்டும்தான் எல்லோரும் எழுத வேண்டுமென்பது எப்படி முதிர்ச்சியான அறிவுள்ள எதிர்பார்ப்பாக இருக்க முடியும். அமெரிக்க அதிபராக தேர்தலில் நிற்பவர்களின் பழைய கால வாழ்க்கையையே புரட்டி எடுத்துப் போட்டு விடுகிறார்கள். யாருடைய தேர்தல் என்று நினைவில்லை. ஆனால், அதிபருக்கு நின்ற ஒருவர் தனது கல்லூரிக் காலத்தில் ஒரு பாட்டில் பியர் அடித்து காவல்துறையிடம் மாட்டியது பத்திரிக்கைகளில் போட்டு பூதாகரமாக்கியது அங்கு நடந்தது. ஒவ்வொரு வேட்பாளரின் தனிப்பட்ட வாழ்க்கை விஷயங்களும் பத்திரிக்கைகளில் அலசப் படுகின்றன. நான் எப்படியும் இருப்பேன்; ஆனால் எனக்குத் தலைவனாக இருக்க வேண்டியவன் ஒழுங்கானவனாக இருக்க வேண்டுமென்பது அந்த நாட்டுக்காரர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் இங்கே அப்படியெல்லாம் ஏதுமில்லை.
நம்மை மாதிரி எல்லாம் (ஒழுங்காக) இல்லாமல் இருப்பதே எல்லா அரசியல்வாதிகளுக்குரிய லட்சணம் என்பது நம் ஊர் ஒழுங்கு. அதுதான் போகிறது, இளம் வயதுக்குரிய ஆரோக்கியமான உடல் நிலையோடு இருக்க வேண்டுமென்பது கூடவா தவறு?
சங்கர் தயாள் சர்மாவையும் வாஜ்பாயியையும் பற்றி நீ முன்பு எழுதினாயா? இப்போது மட்டும கலைஞரைப்பற்றி எழுத வந்துவிட்டாயே அப்டின்னு ஒரு கேள்வி (யெஸ்.பா.,அது நீங்க கேட்டதுதானே?) சரி அய்யா, நான் அப்போது அவர்களைப் பற்றி எழுதாதது தவறுதான் என்று ஞாநி சொல்லிவிட்டால் அவர் இப்போது எழுதியதை சரியென ஒப்புக் கொள்வீர்களா? அன்னைக்கி நீ அது செய்யலை. இன்னைக்கி எப்படி நீ செய்யலாம் என்பது என்ன விவாதம்! அட! யார்மேல கரிசனமோ அவரைப் பற்றி எழுதத்தான் செய்வாங்க - இதுவும் ஒரு வாதம்தான்!
//கருணாநிதியின் உடல்நிலை குறித்துக் கவலைப்படவேண்டியவர்கள் கருணாநிதியும் அவர் குடும்பத்தாரும் அவர் கட்சிக்காரர்களும்தானே தவிர ஞாநியோ நாமோ அல்ல// - இது சுகுணா. இல்லை சுகுணா, அவர் நம் முதல்வர். அவரைப் பற்றி, அவரது செயல்பாடுகள் குறித்து, நாமும் ஞாநியும் கவலைப் படலாம்; படணும். எவனாவது மழைநீர் சேமிப்பு செய்யாம இருந்து பாருங்க அப்டின்னு சொன்னது மாதிரி, எவனாவது ஹெல்மட் போடாம இருந்து பாருங்கன்னு சொல்ற அளவுக்கு மனசுல திண்மை இருக்கணும், மேடைக்குத் துள்ளி ஓடி ஏறி, தொடர்பா பேசுற அளவுக்கு உடம்புல சக்தி இருக்கணும் அப்டின்ற கவலை/எதிர்பார்ப்பு நமக்கும் வேணும்; ஞாநிக்கும் வேணும். ஏன்னா, அவர் பொது மனுஷன்; நம் முதல்வர்.
//சமீபகாலமாக ஜெயலலிதாவை விடவும் கருணாநிதியை மட்டுமே அதிகம் விமர்சிக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.// இதுவும் சுகுணா. என்ன சுகுணா இது? இப்போ ஆட்சி பீடத்தில் இருக்கிறவங்களைத்தான் அதிகமா விமர்சிக்கணும். நீங்களே ஒத்துக்கிறீங்க, அந்த ஆளு ஜெயலலிதாவையும் விமர்சிக்கிறார்; ஆனால் 'சமீபகாலமாக ஜெயலலிதாவை விடவும் கருணாநிதியை மட்டுமே அதிகம் விமர்சிக்கிறார்' அப்டின்றீங்க. அதுதானே இயல்பு.
இதெல்லாம் போகட்டும். கடைசியாக ஒன்று: ஜெயேந்திரர் விஷயத்தில் ஞாநியின் நிலைப்பாடு நமக்கெல்லாம் உகந்ததாக இருந்ததல்லவா? அப்போது தெரியாத அவரது பூணூல் இப்போது மட்டும் நம் கண்களுக்கு ஏன் தெரியவேண்டும்? நமக்குப் பிடிக்காத ஒன்றை செஞ்சிட்டா உடனே அதைப் பார்க்கணுமா? வேண்டாங்க
.. ஏன் அப்டி சொல்றேன்னா, எ
னக்குத் தெரிஞ்சே ஜாதி மறுப்பை உளமார உணர்ந்து பூணூலைத் தூக்கி எறிஞ்சவங்க இருக்காங்க. அந்தமாதிரி நல்ல மனுசங்களும் நீங்க இப்படி பேசுறதைப் பார்த்து மறுபடியும் பூணூலை எடுத்துப் போட்டுக்கணுமா?
உங்கள் கோபங்கள் எங்கே எப்படி இருக்கணும்னு அப்டீன்ற என் எதிர்பார்ப்பை இடப் பங்கீடு குறித்தான என் கட்டுரைகளில் கூறியுள்ளேன். உங்களைப் போன்ற அரசியல் தொடர்பும் ஆர்வமும் உள்ள இளைஞர்கள் கவனிக்க வேண்டுமென்றே என் கடைசிக் கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன்: சமூகநீதிக்குப் போராடுவதாகக் கூறும் அரசியல், சமூகக் கட்சிகளாவது இந்த தொடரும் அநியாயங்களுக்கு எதிர்க்குரல் கொடுக்கக் கூடாதா? இந்த தொடரும் அநியாயங்களை யாரும் நிறுத்தவே முடியாதா? (இப்பதிவை வாசிக்கும் மக்கள்
அந்த என் பழைய பதிவிற்கும் வந்துவிட்டு போங்கள்; சந்தோஷமாயிருக்கும் எனக்கு)
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: இளம் வயதுக்குரிய உங்கள் கோபம் எங்கே, எப்படி, எதற்குப் பயன்பட வேண்டுமோ அங்கே பாயட்டும். சமீபத்தில் பெங்களூரு I.I.Sc.-ல் தலித் மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொள்ளும்படியான சூழ்நிலை இருப்பதைப் பார்த்துக் கோபப்படுங்கள்; நான் குறிப்பிட்டுள்ள என் பதிவில் கூறியிருக்கும் அநியாயங்களுக்கு எதிராகக் கோபப்படுங்கள்.
ஆனால், ஞாநியின் மீது நீங்கள் கொண்டுள்ள கோபம் கிஞ்சித்தும் நியாயமற்றது. இங்கே உங்கள் கோபமும், சக்தியும் வீண் விரயமாகிறது. இது வேண்டாமே!
பி.கு. நான் யாரை சந்தோஷப்படுத்த இப்படி எழுதியிருக்கக் கூடும் என்று ஐயம் தோன்றும். (இல்லையா, லக்கி?) நானே சொல்லி விடுகிறேன். இக்கட்டுரையை எழுதியது என் திருப்திக்காக, என் மகிழ்ச்சிக்காக மட்டுமே.
*
11 ஆண்டுகள் கழித்து இன்று (16.1.2018) எழுதியது: ஞாநிக்காக எழுதிய பழைய கட்டுரையை அவர் இறந்த அடுத்த நாளில் மீள் பதிவிடுகிறேன்.
பழைய அப்பதிவையும், பின்னூட்டங்களையும் வாசித்துப் பாருங்கள். ப்ளாக் எத்தனை உயிரோட்டத்துடன் அன்று இருந்தது என்பதும் புரியும்.
*