Thursday, March 28, 2019

1036. எங்க காலத்திலெல்லாம் ... 3 -- சைக்கிள் ஓட்டுவோமா?






*

நம் எல்லோர் வாழ்க்கையிலும் நிச்சயமாக நடந்திருக்கும், நடக்கும் ஒரு விஷயம் சைக்கிள் ஓட்டப் பழகுவது. ஆனால் அது எப்படி நடந்தது .. எத்தனை நாள் நடந்தது ... எத்தனை தடவை விழுந்து எழுந்தோம் என்பதெல்லாம் வேறு வேறு தான். ஆனால் தட்டுத் தடுமாறி பழக ஆரம்பித்து எப்படியெல்லாமோ செய்து கடைசியில் சைக்கிள் ஓட்ட பழகி விட்டோம்.

எனக்குத் தெரிந்து சைக்கிள் ஓட்டத் தெரியாத ஆண் ஒரே ஒருவரை மட்டும் என் வாழ் நாளில் எனக்குத் தெரியும். எத்தனை தூரமானாலும் நடந்தே தான் போவார். இப்போதாவது சைக்கிளைப் பழகலாமே என்று கேட்டேன். இதுவரை நடந்தே பழகி விட்டது. இப்படியே இருக்கட்டும் என்றார். இவர் எங்கள் கல்லூரியில் ஒரு பேராசிரியர். இன்னொருவரும் கல்லூரியில் இருந்தார். அவரிடம் சைக்கிள் பழகச் சொல்லி நண்பர்கள் வற்புறுத்தியதில் அவரும் சரி என்றார். அப்போது அவருக்கு வயது ஐம்பதுக்கும் மேல். அவர் ஒரு ஆய்வக உதவியாளர். கல்லூரி வளாகத்தில் கோடை விடுமுறையில் இளைஞர்கள் சிலர் அவருக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். கொஞ்சம் பாவமான ஆள் அவர். பழக ரொம்ப கஷ்டப்பட்டார்.

 ஒரு நாள் மதிய நேரம். அந்தப் பேராசிரியர் நடந்து வந்து கொண்டிருந்தார். எங்கள் கல்லூரிக்குப் பக்கத்தில் உள்ள நாற்சந்தியில் அப்போது போக்குவரத்து போலீஸ் வாகனத்தை ஒழுங்கு படுத்த நிற்பார்கள், அன்று மதியம் வயதான ஒருவர் சைக்கிளின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு சைக்கிள் ஓட்டிக் கொண்டு காவல்துறைக்காரரைத் தாண்டி போயிருந்திருக்கிறார். பார்த்த போலீஸ்காரருக்கு வந்ததே கோபம். விசில் ஊதி அவரை நிற்க வைத்து யார், என்ன ஏது என்று கேட்டிருக்கிறார். அந்த மனுஷனும் அவருக்கு ஏன் கோபம் வந்தது என்று புரியாமல் பதில் சொல்லியிருக்கிறார். இந்தக் கல்லூரியில் தான் வேலை பார்க்கிறேன் என்றும் சொல்லியுள்ளார். போலீஸ்காரருக்கு நம்பிக்கையில்லை. தற்செயலாக சைக்கிள் ஓட்டத் தெரியாத பேராசிரியர் அந்த இடத்தைத் தாண்டும் போது போலீசிடம் மாட்டியவர் பரிதாபமாகக் கூப்பிட்டிருக்கிறார். அவர் போய் மீட்டு வந்திருக்கிறார். அப்போது போலீஸ்காரரும் பேராசிரியரும் ஏன் அப்படி சைக்கிளைச் சின்னப் பசங்க மாதிரி பின்னாலிலிருந்து ஓட்டி வந்தீர்கள் என்று கேட்க, அவர் பரிதாபமாக, இப்போது தான் சைக்கிள் ஓட்ட பழகிக்கொண்டிருக்கிறேன்; இன்னும் முழுதாகப் பழகவில்லை; ஏற இறங்க தெரியாது; அதனால் இப்படி ஓட்டி வந்தேன் என்றாராம். காவல் துறை ஆளும் சிரித்துக் கொண்டே விட்டு விட்டாராம்.

சரி.. இந்தக் கதை இப்போது இங்கே எதற்கு? அதாவது ஒவ்வொருவரும் சைக்கிள் பழகும் விதம், அதற்கெடுக்கும் நேரம் என்றெல்லாம் வித்தியாச வித்தியாசமாக இருக்கும்னு சொல்லணும்னு சொல்ல நினச்சி ... அப்போ இந்தக் கதை நினைவுக்கு வர அதைச் சொல்லிட்டேன். சரி... இனி என் கதைக்கு வருவோம்.
அந்தக் காலத்தில இப்போவெல்லாம் இருக்கிற மாதிரி சைக்கிளெல்லாம் வீட்டுக்கு ஒண்ணு என்றெல்லாம் இருக்காது. எல்லோரிடமும் சைக்கிள் இருக்காது; இருக்க முடியாது. ஏன்னா அதெல்லாம் அப்போ அது ஒரு rare commodity! அதே மாதிரி இப்போ குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் முன்பே சைக்கிள் வாங்கிக் கொடுக்கிறோமே ... அதெல்லாம் அப்போ கிடையாது. சின்னப் பசங்க - பசங்க மட்டும் தான்; பெண்களுக்கெல்லாம் சைக்கிள்  வாசனை கூட கிடைக்காது - சைக்கிள் பழகணும்னா வாடகை வண்டி தான். பலரும் அப்போவே சின்ன சைக்கிளில் ஓட்ட பழகிடுவாங்க. ஆனா நான் ஒரு வாத்தியார் மகன் தானே. வாத்தியார் பிள்ளை மக்குன்னு சொல்வாங்கல்ல .. அதை நான் அப்போவே prove பண்ண ஆரம்பிச்சிட்டேன். அட.. அதான் சின்ன வயசில அப்படி என்றாலும் வளர்ந்த பிறகும் என் வயதுக்காரர்கள் சைக்கிள் ஓட்டப் பழகியும் என்னால் முடியவில்லை.

அப்போதெல்லாம் பெரிய சைக்கிள்கள் என்றால் அவை 3 வகைப்படும்: 24 இஞ்ச், 22 இஞ்ச், 18 இஞ்ச் என்ற ரேஞ்சில் இருக்கும். எல்லாம் அந்த முக்கோண பார் இருக்கே .. அதில் முன்னால் உள்ள இரு பார்களும் சேரும் உயரம் இப்படி மூணு வகையாக இருக்கும். 24 இஞ்ச் வண்டி பார்க்கவே ரொம்ப உயரமா இருக்கும். அடுத்ததுதான் சாதா சைக்கிள். அடுத்து சின்ன சைக்கிள்கள். பையன்களுக்கானது. ஆனால் 24ம், 18ம் எப்போதாவது தான் கண்ணில் படும். அதுவும் 18 இஞ்ச் சைக்கிள் வச்சிருந்தா கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம் அந்தப் பையன் பணக்கார வீட்டுப் பையன் என்று.

யார் யாரோவெல்லாம் சைக்கிள் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். “மிடியலை” என்றாகிப் போனது. ஒரு வழியாக குரங்கு பெடல் போடப் பழகினேன். அப்டின்னா என்னன்னு உங்களுக்குத் தெரியுமா? முக்கோண பார் வழியே வலது காலை போட்டுக் கொண்டு, இடது காலை பெடலில் வைத்து ஓட்டணும். பொதுவாக பழகும் போது அரைப் பெடல் தான் போட முடியும். சடக்கு ... சடக்குன்னு பெடல் போட்டு ஓட்டுவோம். பொதுவா பொது ஜனங்களுக்கு இப்படி வர்ர பசங்களைக் கண்டாலே பிடிக்காது. நாங்க பேசாம ஓட்டிக் கொண்டு போனாலும் திட்டுவார்கள். ஆனால் அரைப் பெடல்  என்றாலே கேசு இப்போது தான் பழகுதுன்னு தெரியுமே ... அதனால் திட்டுவார்கள். ஆனால் எங்கள் காதில் பொதுஜனத் திட்டுகள் விழவே விழாது.

அப்பாவிடம் - நல்ல வாத்தியார்; ஆங்கிலம், கணக்கும் சொல்லித் தருவதில் வித்தகர்’ பெரிய உழைப்பாளி; டியூஷன் படிக்க வரிசை கட்டி மக்கள் (பரம்பரையாகக் கூட) வருவார்கள் - ஒரு மாணவன் வருவார். 18 இஞ்ச் சைக்கிளில் வருவார். திண்டுக்கல் ரோட்டில் பரம்பரையாக பிரபலமாக இருந்த பேக்கரி கடைக்காரரின் மகன். என்னைவிட ஒரிரு வயது அதிகமாக இருக்கலாம். அவர் ஒரு நாள் சைக்கிளை எங்கள் வீட்டின் முன் நிறுத்திக் கொண்டிருந்தார். நான் அவரையும் சைக்கிளையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். என் மூஞ்சில சோக ரேகை ஓடியிருக்கும் போலும்! என்னைப் பார்த்து சைக்கிள் வேணுமா என்று கேட்டார். வேணும்னு கேட்டு அது நயினாவுக்குத் தெரிஞ்சா .. அம்புட்டு தான். அதனால் யோசிச்சி நின்றேன். அப்பாட்ட சொல்லலை என்றார் அந்த அன்பு அண்ணன். ஒரே சிரிப்பு. சைக்கிளைக் கொடுத்து விட்டு மாடியேறிப் போய் விட்டார்,

சைக்கிளை எடுத்தேன். இதுவரை அரை பெடல் மட்டும், அதுவும் 22 இஞ்ச் சைக்கிளில் ஓட்டியிருக்கிறேன். ஆனால் இது 18 இஞ்ச். அரை பெடல் போட்டா கால் தட்டும்,.  ஆனால் நமக்குத் தெரிஞ்சது அது மட்டும் தானே. அதுவும் முதல் முறையா 18 இஞ்ச் சைக்கிள். அதுவே ஒரு பெரிய கிக்! சைக்கிளில் இதுவரை ஒழுங்காக சீட்டில் உட்கார்ந்து ஓட்டியதே இல்லை. சரி... என்று சந்தோஷத்தில் சைக்கிளில் பெடலைக் கொஞ்ச தூரம் உதைத்துக் கொண்டு ஓடணும். (ப்ளேன் டேக் ஆப் ஆவதற்கு முன் தரையில் ஓடி பிறகு மேலெழும்புமே .. அது மாதிரி) அப்படியே அரைப்பெடலா மாறணும். நானும் ஓடி அரைப்பெடல் போட்டுட்டேன். வண்டி எளிதாக ஓடியது. நமது ஆய்வக உதவியாளர் மாதிரி ஓட்டினேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன். தடுமாற்றம் ஏதுமில்லை. ஒரே மகிழ்ச்சி! அப்படியே அந்த மகிழ்ச்சியில் வலது காலை எடுத்து பார் மேல் சந்தோஷமா வச்சேன். அடப் பாவமே ... என்ன ஆச்சு தெரியுமா? பார்ல இருந்து கால் வழுக்கி பாருக்கு மேல கால் போயிருச்சி. அதாவது சாதாரணமா சைக்கிள் ஓட்டுவோமே... அதே மாதிரி கால் போயிருச்சி. என்ன பண்றதுன்னு தெரியலை. ஆனால் சீட் குட்டையா பக்கத்திலே இருந்ததா ...அதில் ஏறி உட்கார்ந்து விட்டேன். என்ன ஆச்சரியம். அப்படியே சைக்கிள் ஓட்டி விட்டேன்.

ஆக ... நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன். அப்பாடா ...!

அதென்னவோ .. அத்தனை பேர் சொல்லிக் கொடுத்து வராததை நானே கண்டு பிடித்ததாக எனக்கொரு நினைப்பு.

இதிலென்ன ஆச்சரியம் என்றால் நான் நீச்சல் படித்ததும் இதே மாதிரி தான். வயித்தைச் சுத்தி கயிறு கட்டி, குளத்தில இடுப்பைப் பிடிச்சி காலை அடிக்க வைத்து, .. இன்னும் என்னென்னமோ நடந்தது. ஆனால் நீச்சல் வரவேயில்லை. ஆனால் ஒரு விடுமுறையில் அப்பாதுரை - அந்த வயதில் என்னைப் போல் பொன்னியின் செல்வனின் விசிறியாக இருந்தவன். ஆனால் நான் அதிலிருந்து வெளி வந்த பின்னும், அப்பாதுரை தன் மூத்த மகளுக்கு பூங்குழலி என்று பெயர் வைத்தான் - என்னை சும்மா பேச்சுத் துணைக்கு அவன் குளிக்கப் போகும் கிணற்றுக்குக் கூட்டிப் போனான். ஒண்ணு சொல்லணுமே ... இப்போவெல்லாம் அது மாதிரி எங்கே தண்ணி கிணத்தில இருக்கும்! தரை மட்டத்திற்கு தண்ணீர் தளும்பி நின்னுது. கொஞ்சம் சின்ன கிணறு. மூலைப்படி இருந்தன. அப்பாதுரை ஒரு மூலைப்படியில் இறங்கி குளி என்றான். பயந்து போய் ஆனாலும் துணிந்து இறங்கிக் குளித்தேன். அங்கிருந்து எதிர்த்த மூலைப்படிக்கு கொஞ்ச தூரம் தான் இருந்தது. அப்பாதுரை ’சும்மா ஒரு உந்து உந்தி வாடா’ என்று தைரியம் கொடுத்தான். என்னமோ நல்ல நேரம் .. தைரியம் வந்து ஒரு உந்து தான். எதிர்ப் பக்கம் போய் விட்டேன். அப்பாதுரை கை கொடுத்து தூக்கி விட்டான். அடுத்து எதிர்ப் பக்கம் போ என்றான். முதலிலாவது அவன் மூலைப் படியில் நின்றான். இப்போது ஆளில்லை மூலைப் படி. உந்தினேன். கல்லைப் பிடித்துக் கரையேறினேன்.

ஆஹா .... நீச்சலும் சைக்கிள் மாதிரியே பழகி விட்டேன்.

ஒரே சுயம்பு தான்.


*     *     *

எனக்கு ஒரு சந்தேகம். இப்போவெல்லாம் சின்னப் பசங்க நமக்கு முன்னால் கையை விட்டுட்டு சைக்கிள் ஓட்டும் போது, ‘என்னடா இது... சின்னப்பிள்ளைத் தனமா இருக்கு; இதெல்லாம் தப்பில்லையா?’ அப்டின்னு நம்ம பழைய காலத்தை மறந்திட்டு திட்டுவோம்ல. ஆனாலும் நாமளும் ஒரு காலத்தில் அப்படி ஓட்டின பசங்க தானே!

சந்தேகம் என்னன்னா ...

கையை விட்டுட்டு சைக்கிள் ஓட்டாத ஆளுக யாருமே இருக்க முடியாது என்பது என் தியரி.

இது சரியா?

இதுவரை யாராவது சின்ன வயசில கையை விட்டுட்டு சைக்கிள் ஓட்டாமல் இருந்திருந்தால் அவர்கள் பின்னூட்டத்தில் “ஆமென்” என்று போடவும்.






 *




Sunday, March 24, 2019

1035, எங்க காலத்திலெல்லாம் ... 2 FROM A CLEAN SLATE .......





*
பென்சிலைப் பத்தி எழுதிட்டு அதோட  உட்டுட்டா   நம்ம சிலேட்டுக்குக் கோபம் வருமா வராதா? வருமில்ல ... அதான் அதப் பத்தியும் இப்பதிவு. ஆனால் இந்தப் பதிவு 2014 அக்டோபர் மாதத்தில் எழுதியது. தேடிப்பிடித்து மறுபடியும் போட்டுருவோம்னு போட்டிருக்கேன்... ஒரு தொடர்சிக்காக.

                                                              *        *            *

FROM A CLEAN SLATE .......






*
to start with a clean slate - என்று ஆங்கிலத்தில்  ஒர் idiom சொல்வார்கள். இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு tablet என்றால் என்னவென்று தெரிந்திருக்கும். ஆனால் slate என்றால் என்னவென்று தெரியுமா என்பது சந்தேகமே. எங்கள் காலத்தில் எங்களின் முதல் கல்வித் துணையே இது தான். இப்போவெல்லாம் பெரிய புத்தக மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு பிஞ்சுக் குழந்தைகள் பள்ளிக்குப் போவது போல் நாங்கள்


போனதில்லை. ஒரு சின்னத் துணிப்பை. அதற்குள் ஒரு ஸ்லேட். இரண்டு மூன்று புத்தகங்களும் நோட்டுகளும் மட்டுமே எங்களுக்கு இருந்தன. இதில் ஸ்லேட் மட்டுமே எங்கள் கல்விக்கு முதல் பிள்ளையார் சுழி.

இது எதனால் செய்யப்பட்டது என்றெல்லாம் தெரியாது. ஆனால் ஏதோ ஒரு கல்லிருந்து செதுக்கி எடுத்திருப்பார்கள் போலும். கருப்புக் கலரில் இருக்கும். சுற்றிலும் மரத்தால் ஆன ப்ரேம் இருக்கும். அப்பா ஸ்லேட் வாங்கியதும் என் பெயரை தமிழில் ஒரு பக்கமும், ஆங்கிலத்தில் இன்னொரு பக்கமும் ப்ரேமில் எழுதி விடுவார்கள். முதலில் இந்த ஸ்லேட்டில் எழுத  ஸ்லேட் குச்சி இருக்கும். இந்தக் குச்சியும் ஸ்லேட் செய்ற பொருளிலிருந்தே செய்வார்களோ என்னவோ .. அதுவும் கருப்பாக இருக்கும். பொதுவாக இந்தக் குச்சிகள் வழு வழுன்னு எழுதாது. நடுவில ‘கல்லுக் கோடு’ எழுதும் போது விழும். அதாவது சொற சொறன்னு எழுதிவிடும்.

சில ஆண்டுகள் கழித்து இந்த ஸ்லேட் போய் தகர ஸ்லேட் வழக்கிற்கு வந்தது. பழைய ஸ்லேட் கீழே விழுந்தால் எளிதாக உடைந்து விடும். அநேகமாக எங்கள் ஸ்லேட்கள் இது போல் கீழே விழுந்து கீறிப் போயிருக்கும். சுற்றியிருக்கும் ப்ரேமினால் பிழைத்திருக்கும். நாங்களென்ன use & throw காலத்திலா வாழ்ந்தோம்?  அதனால் கீழே விழுந்தாலும் உடையாத தகரத்தில் ஸ்லேட் வந்தது. ஆனால் இந்த ஸ்லேட் கணக்கில் இரண்டு நஷ்டக் கணக்கு உண்டு. முதல் நட்டம் - எளிதாக இதன் மேல் அடித்துள்ள கருப்பு பெயிண்ட் போய், ஸ்லேட் வழு வழுன்னு ஆகிவிடும். எழுதினால் எழுத்துகளே பதியாது. இரண்டாம் நட்டம் கொஞ்சம் சீரியஸானது. ப்ரேம் கழண்டு போனாலும் ஸ்லேட்டைத் தூரத் தூக்கிப் போட முடியாது. தகர ஸ்லேட் இல்லையா.. உடையாமல் முழுசாக இருக்கும். இதனால் வெறும் மொட்டையான ஸ்லேட் கையில் இருக்கும். பல பசங்கள் தீவிரவாதிகளாக மாறி மொட்டை ஸ்லேட்டை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம். யாரையாவது இதை வைத்து மண்டையில் போட்டால் பெரிய வெட்டே விழும்.

இப்போ இதெல்லாம் போய் plastic slate வந்து விட்டது. இன்னொண்ணு... எழுதி அழிச்சிக்கலாம்னு ஒரு ஸ்லேட்  -magic slate அப்டின்னு வந்திருச்சு. ஆனால் இப்போ ஸ்லேட் என்றாலே என்னென்ன தெரியாத மாதிரி ஆகிப் போச்சு. ஸ்லேட்  ... குச்சிகள் எல்லாம் தொல்பொருளாக மாறி விட்டன.

எங்கள் ஸ்லேட்டை refurbish செய்ய வேண்டியது முக்கிய கடமை. அதுவும் தேர்வுக் காலத்திற்கு முன்பு ஸ்லேட்டைப் புதுசாக்க முழு முயற்சியெடுப்போம். அதிலும் இரண்டு மூன்று grades இருந்தது. முதல் முறை ரொம்ப சிம்பிள். வீட்டின் அடுப்படியில்  இருக்கும் கட்டைக் கரியை எடுத்து வைத்துக் கொண்டு ஸ்லேட்டை நன்கு கழுவிக்கொண்டு அதன் பின் எடுத்து வந்த கரியின் மெதுவான பாகம் வைத்து ஸ்லேட்டில் அழுத்தித் தேய்ப்போம். அதன் பின் காய வைத்து விடுவோம். காய்ந்த பின் கழுவினால் ஸ்லேட் ரெடி. 

இன்னொரு advanced method ஒன்றும் இருந்தது. இதில் கரித்துண்டுகள் சிலவற்றை ஊமத்தங்காய் என்று ஒரு செடி இருக்கும். அதன் காய்களோடுசேர்த்து அம்மியில் வைத்து அரைத்து, அதனை எடுத்து எங்கள் ஸ்லேட்டில் தேய்ப்போம். ஆனாலும் இது முக்கியமாக பள்ளியில் உள்ள கரும்பலகைக்கு மட்டுமே பொதுவாக இந்த  advanced process நடந்தேறும். அம்மிக் கல்லுக்குப் பதில் பள்ளிக்கூடத்தில் எங்காவது ஒரு மூலையில் உடைந்த அம்மிக் குழவி ஒன்று கட்டாயம் கிடைக்கும். ஆசிரியர்கள் கரும்பலகைக்கு ஒரு நாள் ஓய்வு கொடித்து, இந்த வேலை மேற்கொள்ளப்படும். கரி கொண்டு வர சிலர் ... ஊமத்தங்காய் பறித்து வர சிலர் ... அரைத்துக் கொடுக்க சிலர் .... கரும்பலகையில் தேய்க்க சிலர் ... கடைசியில் கரும்பலகையைக் கழுவ சிலர்.  அப்பாடா ...ஒரு பெரிய division of labour ! சட்டையெல்லாம் கரியாக்கி  வீட்டில் கிடைத்த அடிகளைப் பற்றிய விளக்கம் அடுத்த நாள் கட்டாயம் கிடைக்கும்!

ஸ்லேட் ரெடின்னா குச்சியும் ரெடியாக வேண்டுமே. அந்த கருப்புக் குச்சிக்கு மட்டும் தான் இந்த மெதட் பயன் படுத்துவோம். குச்சி மேல் லேசாக நல்லெண்ணெய் தேய்த்து. நல்ல கல் தரை மேல் குச்சியை வைத்து பாதத்தை வளைத்து அதன் மேல் வைத்து லேசாக மேலும் கீழும் குச்சியைத் தரையில் தேய்ப்போம். இதில் ஒரு பிரச்சனை. எவ்வளவு மெல்ல தேய்த்தாலும் குச்சி உடைந்து விடும். ஒரு முழு நீளக் குச்சி இந்த மெக்கானிசத்தால் துண்டு துண்டாக உடைந்து விடும். ஆனாலும் ‘மாப்போல’ எழுதும்ல ..! அதாவது மாவு மாதிரி எழுதும்ல ..! அதைவிட குச்சி உடைந்து விடக்கூடாதென்பதற்காக, குச்சியை அதிகமாக அழுத்தாமல் மெல்ல மெல்ல அதனைத் தேய்க்க வேண்டும். அப்படித் தேய்க்கும் போது நமது கடமையில் கண்ணாக .. அல்லது காலாக இருக்க வேண்டும். நினைவு வேறு எங்கு திரும்பினாலும் காலின் அழுத்தம் கூடி குச்சி உடைந்து விடும் என்ற அபாயகரமான நிலை. உண்மையிலேயே இது ஒரு மோன தவம் மாதிரி. அம்புட்டு ஜாக்கிரதையாக செய்யணும்!

ஸ்லேட் பரிமாண வளர்ச்சில் கட்டை ஸ்லேட்டிலிருந்து தகர ஸ்லேட் வந்தது. இதே போல் எழுதும் குச்சிகளிலும் பரிணாம வளர்ச்சி இருந்தது. முதலில் கருப்புக் குச்சி மட்டும் தான் கிடைக்கும். கொஞ்ச நாள் கழித்து மாவில் செய்த கலர் குச்சிகள் கிடைத்தன. பழையதுக்குப் பெயர் ஸ்லேட் குச்சி. இப்போ இருவகை குச்சி வந்ததால் இந்தப் புதிய குச்சிக்கு ’மாக்குச்சி’ என்று நாமகரணமிட்டோம். பழைய ஸ்லேட் குச்சி மாதிரி இதுவும் அதே நீளத்தில் கிடைக்கும். அதுவும் குச்சியின் சைடில் கலர் கலரா கோடுகள் இருக்கும். ஆனாலும் சோகம் என்னன்னா ... குச்சியில் கலர்க் கோடுகள் இருக்கும். ஆனால் எழுதும் போது ஒரே வெள்ளைக் கலரில் தான் எழுதும்.  only B & w; no colour at all!   :(

இந்த ஸ்லேட் & குச்சிகளோடு வேறு சில accessories அதிர்ஷ்டம் இருந்தால் அவ்வப்போது கிடைக்கும். அவைகள் கடல்நுரையும், கடல் குச்சிகளும்.



"கடல் நுரை”

கடல் அலைகள் கரையில் வந்து மோதும் போது நுரையாக இருக்கும். இந்த நுரையெல்லாம் ஒண்ணா சேர்ந்து, அதன் பின் வெயிலில் காய்ந்து இது உருவாவது என்று எங்கள் ‘ஆராய்ச்சி மூளை’ சொல்லியதால் இதை கடல் நுரை என்று எல்லோரும் சொல்வோம். இது நாகணவாய் - ஆக்டோபஸ்ஸிற்கு க்ளோஸ் சொந்தக்காரர் - என்ற கடல்வாழ் உயிரின் ஷெல்.  பரிணாமத்தில் உடலின் உள்ளே சென்று விட்டதாம். இதன் உட்புறம் மெதுவாக இருக்கும். இந்தக் ‘கடல் நுரை’ வைத்து அழித்தால் ஸ்லேட் நன்றாக இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.


SEA URCHIN
அடுத்து இன்னொரு கடல்வாழ் உயிரியின் மேல் தோலில் உள்ள சின்ன மெல்லிய குச்சிகள் - நாங்கள் இதைக் கடல் குச்சி என்று சொல்வோம். ஆனால் சுண்ணாம்பினால் ஆன இந்தக் குச்சிகள் பெரும்பாலும் கீச் ..கீச்.. என்று தான் எழுதும். இருந்தாலும் கிடைத்தற்கரிய பொருள் என்பதால் எங்களுக்கு அதன் மேல் ஒரு கிக் உண்டு


"கடல் குச்சி”

பெரியப்பாவின் மகன் - அண்ணன் ஒருவன் உண்டு. என்னைவிட இரு வயது மூத்தவன். எல்லா நல்ல விஷயமும் "ஏனைய விஷயமும்" (இதையும் வாசித்துப் பாருங்களேன்!) காதில் முதலில் ஓதியவன் இவனே. நானும் இவனும் சேர்ந்தே பள்ளிக்கூடம் செல்வதுண்டு. அவன் ஐந்தாவது படிக்கும் போது ஒரு நாள் நடந்து போய்க்கொண்டிருந்தோம். (அப்புறம் என்ன ஆட்டோவிலோ... காரிலோவா போயிருக்க முடியும்?!) அப்போது தனது ஸ்லேட்டை எடுத்து ஏதோ எழுதுவது போல் செய்தான். பின் மெல்ல கையால் எழுதியதை அரையும் குறையுமாக அழித்தான். கீழே தன் பெயரை முழுவதுமாக எழுதினான். என்ன பண்ற? அப்டின்னு கேட்டேன். ’வீட்டுப்பாடம் எழுதலை ... அதான் இப்போ எழுதினேன்’ என்றான். ஸ்லேட்டில் எழுத்து இருந்தது மாதிரியும் இல்லாதது மாதிரியும் தெரிந்தது. என்னன்னு கேட்டேன். ‘நான் வீட்டுப்பாடம் எழுதுறதெல்லாம் இப்படித் தான்’ என்றான்.  நான் முயற்சித்தேன். execution சரியாக வரவில்லை. உட்டுட்டேன்!



அதீதம் இதழில் வந்த பதிவின் மறு பதிப்பு


*

Saturday, March 23, 2019

1034.. எங்க காலத்திலெல்லாம் .... 1 “புழுக்கைப் பென்சில்”







ஆச்சு .. எப்படியும் கணக்குப் பண்ணிப் பார்த்தால் இது மாதிரி ஒரு குட்டைப் பென்சில் ஒன்றைப் பார்த்து 65 வருஷம் ஆகியிருக்கும். அதற்குப் பிறகு இப்படி ஒரு பென்சிலைப் பார்த்ததே இல்லை. நேற்று நண்பர் ஒருவரைப் பார்க்க அவர் அலுவலகத்திற்குப் போயிருந்தேன். இந்தப் பென்சிலுக்கு ஒரு நெகிழி மூடியையும் போட்டு மேசை மேல் வைத்திருந்தார். பார்த்ததும் எனக்கு எங்க காலம் நினைவுக்கு வந்தது.

 மொதல்ல எங்க காலத்தில இந்த மாதிரி பட்டை போட்ட பென்சிலைப் பார்க்க முடியாது. எல்லாமே ரவுண்டான பென்சில்கள் தான்.அழகு அழகு வண்ணத்தில் எல்லாம் பார்க்க முடியாது. அப்போ பென்சில்களின் பின்பக்கத்தில் அழிப்பான் - ரப்பர் - இருக்காது. ஒரு வேளை நாங்க அந்தக் காலத்தில் தப்பே இல்லாம எழுதியிருப்போமோ? அதான் ரப்பர் வைக்கவில்லையோ? இருக்கும்.

ரப்பர் இல்லாதது மாதிரி அப்போவெல்லாம் பென்சில் சீவி .. அதாங்க .. sharpener - ஏதும் இருந்த மாதிரி நினைவில் இல்லை. பின்னாளில் தான் வந்தது. நாங்கள் பென்சில் சீவுவதற்கு ஏற்றது மாதிரி அப்போ வர்ர ப்ளேடுகள் இருக்கும். அதை வச்சி தான் பென்சில் சீவுவோம். ஒரு தடவை என் அப்பாவின் சவரப் பெட்டியிலிருந்து ஒரு ப்ளேடு எடுத்து பென்சில் சீவிட்டு அப்பா பெட்டியில்  திருப்பி வைத்து விட்டேன். அடுத்த நாள் அப்பா ஷேவ் பண்ணும் போது சரியாக சிரைக்க முடியவில்லை. அப்பா கழட்டிப் பார்த்த போது அதில் பென்சில் சீவும் போது விழும் கோடுகள் இருந்தன. அப்பா என்னைக் கூப்பிட்டு இத வச்சி பென்சில் சீவினியா? என்றார். ஆம் என்றேன். அப்பா அம்மாவிடம் ‘இந்தப் பயலைப் பாரு. ஒரு ப்ளேடைக் கெடுத்துட்டான். முடிய வெட்டவே மாட்டேங்குது’ என்று கம்ப்ளெயின்ட் வாசித்தார்கள். அப்போது நான் ஆரம்பப் பள்ளியில் படித்திருப்பேன் என்று நினைக்கின்றேன். அப்போ எனக்கு ஒரு ஆச்சரியம். என்னடா இது .. ஒரு பென்சிலையே அழகா சீவுது. இத்தனூண்டு சின்ன முடியை அது வெட்டாதான்னு ஒரு பெரிய கேள்வி. அதுக்குப் பதில் தெரிய சில வருசங்கள் ஆச்சு!

ஆனா அந்தக் காலத்திற்குப் பிறகு வந்த ப்ளேடுகள் எல்லாம் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் ப்ளேடுகள். அதை வைத்துப் பென்சில் சீவ முடியாது. ஒரு வேளை இந்தக் காலத்தின் கட்டாயத்தினால் தான் புதிதாகப் பென்சில்  sharpener 
கண்டு பிடித்திருபார்களோ ... இருக்கும்; அப்படிதான் இருக்கும். அது காலத்தின் கட்டாயம். ஆனால் ப்ளேடு காலத்தில் இன்னொரு பழக்கம் இருந்தது.  பென்சிலைச் சீவி அந்த மரத்தூள்களைப் புத்தகங்களுக்கு நடுவில் சேமித்து வைப்போம். அது நிறையாகச் சேர்ந்ததும் அதைப் பாலில் ஊற வைத்தால் ‘அழி ரப்பர்’ கிடைக்கும் என்ற விஞ்ஞான மூளை எங்களுக்குள் உறங்கிக் கொண்டிருந்தது. மயிலிறகை புத்தகத்திற்குள் ஒழித்து வைத்தால் அந்த ஒற்றை மயிலிறகுகள் ‘குட்டி’ போடும் என்பது போன்ற விஞ்ஞான உண்மை அது!

எங்களுக்கு அந்தக் காலத்தில் ஐந்தாம் வகுப்பு வரை பென்சில் மட்டும் தான். அப்போது பால் பாய்ண்ட் பேனா, ஜெல் பேனா போன்றவைகள் ஏதுமில்லை, இருந்தது பென்சிலும். பேனாவும் - அதுவும் மை ஊத்தி எழுதும் fountain pen மட்டும் தான். பேனா ஐந்தாம் வகுப்பிற்குப் பிறகுதான் பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி அனுமதிப்படும். ஆகவே ஐந்தாம் வகுப்பு வரை எங்களுக்குப் பென்சில் மட்டும் தான். இப்போது மாதிரி மொத்தமா பென்சிலை வாங்கிப் போட்டோமா .. பிள்ளைகள் ஒவ்வொன்றாக எடுத்துப் பயன்படுத்துவார்கள் என்ற மாதிரி எல்லாம் அப்போது கிடையாது. ஒரு பென்சில் வாங்கிக் கொடுப்பார்கள். தொலைந்து போகாமல் வைத்திருக்க வேண்டும். இப்போது பென்சில் டப்பா இருக்கிறதே .. அதெல்லாம எங்க காலத்தில இல்லை. அதனால் ரொம்ப பத்திரமாக வைத்திருப்போம். இப்போவெல்லாம் அங்கங்க நிறைய குட்டிப் பைகள் வைத்து Back bag இருக்குமே .. அது எல்லாம் ஏது எங்களுக்கு. காக்கித் துணி மாதிரி முரட்டுத் துணியில் கைப்படி வைத்து ஒரு பை. அதில் ஒரு மூலையில் பென்சில் தூங்கும்.

பென்சில் கதை அதோடு முடிந்ததா என்ன? பென்சிலை அடிக்கடி சீவுவோம். பென்சில் கொஞ்சம் கொஞ்சமாக வேறு வேறு அவதாரம் எடுக்கும்.  இப்போதெல்லாம் அரை நீளத்திற்குக் குறைவான பென்சில்களை  நான் பார்த்ததே இல்லை. எங்க காலத்தில் ‘இத்தனூண்டு’ பென்சிலாகும் வரை அதை விட மாட்டோம். பெத்தவங்களும் அப்படித்தான். அட .. இன்னும் இவ்வளவு நீளம் இருக்கேன்னு சொல்லிருவாங்க. ஆக பென்சில் கால்வாசி சைஸுக்கு வரும் வரை பிரச்சனையில்லை. ஆனால் அதைவிட சின்னதாகப் போனால் வாத்தியார்கள் கோவிச்சுக்குவாங்க. நம்ம நோட்டைத் திருத்தும் போது நம்ம பென்சில்களைத்தான் வாத்தியார்கள் கேட்பார்கள். அப்போது நம் பென்சில் ரொம்பக் குட்டையாக இருந்தால் அதை வகுப்பின் ஓரத்திற்கோ அல்லது ஜன்னல் வழியாகவோ தூர எறிந்து விடுவார்கள். இந்தப் பென்சிலை வைத்து எழுதினால் கையெழுத்து மோசமாகி விடும் என்பது அவர்களது சரியான விஞ்ஞான அறிவு. அந்த மாதிரி இத்தனூண்டு குட்டிப் பென்சிலுக்கு அப்போது வழங்கி வந்த slang என்னவென்று தெரியுமா? “புழுக்கைப் பென்சில்” 

அந்த மாதிரி ஒரு புழுக்கைப் பென்சிலைப் பார்த்ததும் உடனே பழைய்ய்ய நினைவுகள் வந்தன. நம்மளும் நம்ம பென்சில்களும் ... அப்டின்னு ஒரு நினைப்பு வந்தது. ஏன்னா ... படிச்சது ( எங்க படிச்சேன்!?) zoology ... நிறைய படம் வரையணும். அதுனால பென்சிலுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு ரொம்ப நாள் நீடித்தது. பென்சில் ஊக்கை நம்ம இஷ்டத்துக்கு வைத்திருக்க வேண்டியதிருக்கும். ஊசியா ... தடிப்பா .. ஷேட் கொடுக்க கொஞ்சம் நீளமா... இப்படிப் பல மாதிரி இருக்கிறதுனால sharpener இல்லாம பழையபடி ப்ளேடுக்குப் போயாச்சு. ஆனால் அப்ப என்னவோ ஒரு கிக் .. என்னன்னா, sharpener இல்லாம ஆனா அழகா பென்சில் சீவி வச்சிருப்பேன். பைனல் டச்சிற்காக ப்ளேடு வைத்து பென்சில் முனை மீது நெடுங்குத்தா ப்ளேடை வச்சி, ஷேவ் பண்றது மாதிரி தேய்த்து,  பாலிஷா கொண்டு வருவேன். 

ஆனால் அப்போவெல்லாம் சாதாரண பென்சில்கள் கிடையாது. ட்ராயிங் பென்சில்னு விற்கும். அதைத் தான் வாங்குவோம். அதில் 2B, B, HB, 2H, 4H .. என்ற வகைப் பென்சில்களைத் தயார் நிலையில் வைத்திருப்பேன். கருப்பா கண்ணெல்லாம் வரைய  2B பென்சில்; லேசா செதில் மாதிரி வரைய  2H / 4H பென்சில்கள்.  இந்தப் பென்சில்களை கல்லூரிக்கு எடுத்துக் கொண்டு போவதேயில்லை. ஏன்னா ... பென்சில் அம்புட்டு காஸ்ட்லி! 

அப்போ சாதாரண பென்சில் நாலணா / 25 பைசாவாக இருந்தது. இந்த ட்ராயிங் பென்சில்கள் விலை  ஒண்ணே கால் ரூபாய் / ஒண்ணரை ரூபாய். அதுவும் எல்லா கடைகளிலும் கிடைக்காது. கிழக்கு ஆவணி மூல வீதியும், அம்மன் சன்னதி தெருவும் சந்திக்கும் இடத்தில் கிழக்கு ஆவணி வீதியின் முனையில் இருந்த குழாய்க்குப் பக்கதிலிருந்த சுலைமான் பாய் கடையில் தான் அந்தப் பென்சில்கள் கிடைக்கும். பென்சில் பெயர் வீனஸ். இங்கிலாந்தில் செய்யபட்ட பென்சில். பச்சைக் கலரில் இருக்கும். பச்சைக்கலரில் மெல்லியதாக cracks விழுவதுபோல் கோடுகள் இருக்கும்.  

அதன் பின் முதுகலை படிக்கும் போது ஒரு இந்தியன் பென்சில் கிடைக்க ஆரம்பித்தது. பெயர் Engineer. விலை கொஞ்சம் குறைவு. மரக்கட்டை கலரில் மட்டும் தான் இருக்கும். ஆனாலும் வீனஸ் பென்சில்கள் மீது தான் எப்போதும் ஒரு கண்.  





*