Thursday, October 17, 2019

1068. 5, 8 ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வா?


A GUEST ARTICLE ...


*

பேராசிரியர் வின்சென்ட்* அவர்களின் கட்டுரை

*



5, 8 ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வா?

இந்த இரண்டு வகுப்புகளில் பொதுத் தேர்வு தேவையா என்பதை விவாதிப்பதற்கு முன்னர் தேர்வுகளே அவசியம்தானா என்று பார்க்க வேண்டும்.

இன்று தேர்வுகள் எதற்காக நடத்தப்படுகின்றன? ஒரு மாணவர் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சிபெற்றிருக்கிறாரா என்று கண்டுபிடிப்பதற்காகவே தேர்வுகள் (examinations) நடத்தப்படுகின்றன. பத்தாம் வகுப்பில் அவர் பெறுகின்ற மதிப்பெண்களைக் கொண்டு அவரைப் பதினொன்றாம் வகுப்பில் சேர்க்க ஒர் அளவு கோலாகத் தேர்வு பயன்படுகிறது. அதுபோல பன்னிரெண்டாம் வகுப்பிற்குப் பின்னர் மேல்படிப்பிற்குச் செல்ல தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் (சில வேளைகளில்) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மேற்படிப்புகளில் சேர ஒரு குறிப்பிட்ட குறைந்த அளவு மதிப்பெண் தேவைப்படுகிறது. சில அரசுப்பணிகளில் சேரவும் பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி குறைந்த அளவு தகுதியாக எடுத்துக்கொள்ளப் படுகிறது. அப்படியானால் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள், அல்லது பருவத் தேர்வுகள் எனபனவெல்லாம் என்ன? அவற்றைக் குறிக்க சோதனைகள் (tests) என்ற சொல்லைப் பயன்படுத்துவோம். இப்போது எட்டாம் வகுப்பு வரையில் ஆண்டு இறுதியில் நடத்தப்படும் ‘தேர்வுகள்’ அடுத்த வகுப்பிற்கு அனுப்புவதற்காக நடத்தப்படுவதில்லை.

சோதனைகளும் தேர்வுகளும் பின் எதற்காக நடத்தப் படுகின்றன? நடத்தப்படவேண்டும்?

ஒரு சோதனையை நடத்துவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்:
1.   ஒரு இயல் அல்லது ஒரு அலகு நடத்தி முடிக்கப்பட்ட பிறகு அதற்கான ஆசிரியர் / கலைத்திட்டம் எழுதியவர் வரையறுத்த நோக்கங்கள் நிறைவேறினவா என்று கண்டறிய.

2.   ஒவ்வொரு மாணவரும் (கவனியுங்கள் ‘ஒவ்வொரு மாணவரும்) குறிப்பிடப்பட்ட நோக்கங்களில் தேர்ச்சிபெற்றுவிட்டாரா என்று கணக்கிட. இதற்கு performance assessment என்று பெயர். அதாவது மாணவரின் செயல் திறன் வெளிப்பாட்டை அளவிட.

3.   இந்த அளவிடல் மூலம் ஒரு மாணவரின் செயல்திறன் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை வெளிப்படுகின்றதா என்று காண முடியும்.

4.   ஆசிரியர் பயன்படுத்திய பயிற்றுவிக்கும் முறை (instructional procedure) சரியானதா என்பதை ஆசிரியருக்கு எடுத்துக் காட்டும். அப்போது ஆசிரியர் தான் பயிற்றுவிக்கும் முறையை தேவையானால் மாற்றிக்கொள்வார்.

5.   ஆசிரியர் பயன்படுத்திய சோதனைக் கருவி (testing tools) தவறானதாக இருக்கலாம். எடுத்துக் காட்டாக ‘ மாணவர் தமிழில் பிழையின்றி எழுதுகிறார்’ என்பது ஆசிரியர் நோக்கமாக இருக்கும்போது வினா மாணவர் யாரோ வேறு ஒருவர் எழுதியதை எழுதுவதற்கு வாய்ப்பளித்தால் நோக்கத்திற்கும் நடத்தைக்கும் தொடர்பில்லை. அல்லது “மாணவர் ஆங்கில உரையாடலில் பங்கு கொள்கிறார்’ என்பது சிறப்பு நோக்கமாக இருக்கும்போது மாணவரை உரையாடல் ஒன்றை எழுதச் சொல்லும் போது சோதனை தவறானதாக ஆகிவிடும்.

6.   ஆசிரியரது / கலைத்திட்டம் எழுதியவரது ஒரு பாட அலகின் சிறப்பு நோக்கங்களை நிறைவேற்றும் அளவிற்கு மாணவருக்குத் தகுதியும் நாட்டமும் இருக்கின்றனவா என்பதையும் சோதனை காட்டும். அதாவது மாணவரின் நுழைவு நடத்தை (entering behaviour) எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்தே மேலே சொன்ன அனைத்தும் சாத்தியப்படும். மாணவரது நுழைவு நடத்தை தேவையான அளவு இல்லாவிட்டால், மாணவரை அந்த அளவிற்கு ஆயத்தப்படுத்துவது ஆசிரியர் கடமை. எடுத்துக்காட்டாக, கூட்டல் கழித்தல் தெரியாத மாணவருக்கு பெருக்கல் வகுத்தல் சொல்லித் தரமுடியுமா?

7.   மாணவர் தனது தேர்ச்சியைத் தெரிந்துகொண்டு தனது படிப்பு யுத்திகள், நடைகள் (strategies of learning and learning styles) ஆகியவற்றை மாற்றிக்கொள்ள முடியும்.

8.   வகுப்பறையில் மாணவரைக் குழுக்களாகப் பிரிக்க உதவும்.

9.   இப்போது அடுத்த வகுப்பிற்கு ஒரு மாணவர் தகுதியானவரா என்று கண்டுபிடிக்கப் பயன்படுகிறது.

பெரும்பாலும் இச் சோதனைகள் ஒரு அலகு அல்லது இயல் முடிவில் முறைசார்ந்த அல்லது முறை சாராச் சோதனை முறையில் (formal or informal testing) நடைபெறும். இதனால் தேர்வு பற்றிய அச்சமோ பதற்றமோ மாணவருக்கு இருக்காது; ஆசிரியருக்கும் இருக்காது. இந்த முறையில் காலாண்டு அரையாண்டு, ஆண்டு இறுதித் தேர்வுகளுக்கான அவசியமே இல்லாது போகும். சோதனைத் தாள்கள் மாணவர் கற்றலுக்கும் புரிந்துகொள்வதற்குமுரிய கருவிகளாகவே இருக்கும். (aids to comprehension).   Work sheets என்று சில பள்ளிகளில் பயன்படுத்தப் படும் வினாத் தாள்கள் இந்நோக்கத்திற்காக, வகுப்பறையில் பயன்படுத்துவதற்காக ஏற்பட்டவை.

தேர்வுகளின் முறைகளும் மாறவேண்டும். வெறும் எழுத்துத் தேர்வு மட்டும் இல்லாமல் திட்டச்செயல் முதலானவற்றின் மூலம் சோதிக்கமுடியும். நான்காம் வகுப்புக்குழந்தைக்கு ‘உங்கள் பகுதியிலிருந்து வந்த புகழ்மிக்க தட கள ஓட்டக்காரர் பற்றி கட்டுரை எழுதுக,’ என்ற தலைப்புக் கொடுக்கிறார்கள். இங்கல்ல, அமெரிக்காவில். நமது ஊர் குழந்தையும் எழுதுகிறது. மாணவர் ஒரு மாதத்தில் வாசித்து முடிக்கும் நூல்களின் அடிப்படையிலும் மதிப்பெண் உண்டு. குழந்தையின் வயதிற்கும், படிப்புக்கும் ஏற்ப புத்தகங்கள் வகுப்பறையிலும் பொது நூலகங்களிலும் கிடைக்கும் என்பது வேறு விஷயம். இங்கே ஸ்மார்ட் வகுப்பறைகளுக்குப் பணத்தை வீணாக்குவதற்குப் பதிலாக வகுப்பறை நூலகங்களும் சோதனைச் சாலைகளும் அமைக்கலாமே? குழந்தைகளுக்கான நூல்களும் தமிழில் இப்போது வரத்தொடங்கி விட்டன.

இவையெல்லாம் நமது பள்ளிகளில் நடப்பதில்லையே என்று ஆசிரியர்களும் கல்வியாளர்களும் கவலைப்படவேண்டாம். இவற்றை நடைமுறைப்படுத்துவது ஒன்றும் கடினமில்லை. நமது ஆசிரியர்களுக்குத் தகுந்த பயிற்சியளித்தால் மிகச் சிறப்பாகவே இவற்றை நிறைவேற்றுவார்கள்.

மிக நுணுக்கமாகக் கவனிக்க வேண்டியது: ஒவ்வோர் அலகுக்கும் சிறப்பு நோக்கங்கள் (specific objectives/ learning outcome) எவை என்பது தெளிவாக நடைமுறைப்படுத்தக் கூடிய முறையில் வரையறுக்கப்படவேண்டும்.
அப்படியானால் பொதுத் தேர்வுகள்?

இப்போது நடத்தப்படும் பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளின் மதிப்பெண்களுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அரசாங்கப் பொதுத்தேர்வு மதிப்பெண்களை மதிக்காமல் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒரு கல்லூரியில் பட்டப் படிப்பு படித்த மாணவருக்குக்கூட பட்ட மேல் வகுப்பில் சேர்க்க நுழைவுத் தேர்வு வைக்கிறார்கள். இவ்வளவு ஏன்? அரசாங்கமே தான் வழங்கிய மதிப்பெண்ணை நம்பாமல் பணியில் சேர்க்கத் தேர்வுகள் நடத்தும் வேடிக்கையையும்தான் பார்க்கிறோம். பி.ஈ. பட்டம் பெற்றவர் பணியில் சேர நுழைவுத் தேர்வு எழுதியாக வெண்டும். நீட் தீர்வுகள் அரசாங்கப் பொதுத் தேர்வுகளைக் கேலிக் கூத்தாக்கிவிட்டன.

அப்படியானால் தேர்வுகள் தேவையில்லையா? தேர்வுகள் வேண்டாம். அவ்வப்போது வகுப்புச் சோதனைகள் வேண்டும். அவற்றின் மூலம் மாணவரின் தேர்ச்சியை மட்டுமின்றி இன்னும் முதலில் குறிப்பிட்ட பலவற்றை ஆசிரியரும் மாணவரும் கலைத் திட்டம் வகுப்போரும், பயிற்சியாளரும் தெரிந்து கொள்ள முடியும். தேர்வு பற்றிய அச்சம், பதற்றம் இருக்காது. இச் சோதனைகள் நமது பள்ளிகள் சிலவற்றில் இப்போது நடத்தப் படும் சுழல் தேர்வு (cycle test) இல்லை. ஒவ்வொரு பாடத்திலும் ஓர் அலகு அல்லது இயல் முடிந்தவுடன் நடத்தப்படும் சோதனை. சோதனைகளே இனிமையாக இருக்கும். அகமதிப்பீட்டுத் தேர்வுகள் வைத்து ஆண்டு முழுவதுமே கல்லூரிகளில் தேர்வு நடத்தும் கூத்தும் இருக்காது.

வகுப்புச் சோதனைகளை வரவேற்போம். வேண்டாம் தேர்வுகள்.


-          ச.வின்சென்ட்
    

*   ஆங்கிலத்துறை பேரா. வின்சென்ட்  இதுவரை எழுதிய, மொழியாக்கம் செய்த நூல்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 50 நூல்களை மிக எளிதாகத் தாண்டி விடும். இப்போது நமது புதிய கல்வித்திட்டம் பற்றி ஆழ்ந்து புரிந்து கொண்டு, அதைப் பற்றி கட்டுரைகள் எழுதியும், தன் தொடர்ந்த பேச்சுகள் மூலமாகவும் அதனைப் பற்றிய தன் கருத்தைப் பரப்பிக்கொண்டு வருகிறார்.


*










1 comment:

டிபிஆர்.ஜோசப் said...

இந்த அசுர திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை இத்தகையவர்கள்தான் முன்னின்று நடத்தவேண்டும்.

Post a Comment