Sunday, December 01, 2019

1074. சில திரைப்படங்கள்.






*


 ஐந்து நாள் சென்னைப் பயணம். முதலிரு நாள் பேரப் பிள்ளைகள். அதன் பின் எல்லாரும் படிக்கப்போய்ட்டாங்க. மொழி பெயர்ப்புக்காக புத்தகத்தையும் பேப்பர்களையும் கையோடு எடுத்துச் சென்றிருந்தேன். முதல் நாள் நாலு பக்கம் எழுதினதோடு சரி. ஊர் சுத்தலை. ஆளை முழுசா முழுங்கிடுமே .. அந்த சோபாவிற்கு உள்ளே கை காலு எல்லாத்தையும் தூக்கி அதன் உள்ளே போட்டுக்கிட்டு ஒரே ஒரு பாரமான விஷயத்தை மட்டும் கையில் எடுத்துக்கிட்டேன் - ரிமோட். பிள்ளை வீட்ல டிவி சீரியல் கிடையாது  ஆனால் netflicks, prime video ரெண்டுமே இருந்துச்சா  .. வரிசையா பல படங்கள்... ரெண்டு நாள் ...



1. ஜல்லிக்கட்டு

நடிகர்கள் யாரும் இல்லை. சொல்லப்போனால் ஒரே ஒரு மாடு மட்டும் தான் படத்தில் வரும் முக்கிய பாத்திரம். ஆனாலும் அந்த மாடு மாதிரி படமும் வேகமாகப் போனது. ஒரே ஒரு செருப்பில் ஒரே நடிகர்; இங்கே பலர் வருவாங்க .. போவாங்க .. ஆனா மாடு  மட்டும் தான் நமக்குத் தெரிந்த ஒரே charecter. அது தான் ஹீரோ; கிராமத்துக்காரங்க அனைவரும் ஹீரோவைத் துரத்தும் வில்லன்கள்.

2. TO LET

நிறைய பரிசுகள் வாங்கிய படங்கள். படப்பிடிப்பு. நடிப்பு, இயல்புத் தன்மை படத்தில் பிடித்த விஷயங்கள். வாடகை வீடு தேடுவதில் ஒரு பாவப்பட்ட உதவி சினிமா இயக்குநரின் பொருளாதார இயலாமையைப் பார்க்க பாவமாக இருந்தது. Just a very plain movie. காசில்லா மக்களுக்கு வரக்கூடிய ஒரு சாதாரண விஷயம் என்பதால் படம் என்னைத் தொடவில்லை.

3. அசுரன்

படத்தில் தனுஷின் நடிப்பு, அவரது இரு பிள்ளைகளின் நடிப்பு  என்று நிறைய பேர் எழுதி விட்டார்கள். ஆனால் படத்தின் மையப் புள்ளியை எல்லோரும் தவற விட்டு விட்டார்களோ என்று தோன்றுகிறது. காலம் காலமாய் இருந்து வரும் பஞ்சமி நிலத்தைப் பற்றிய புரிதல் விட்டுப் போனது போல் பல திரைப்ப்ட திறனாய்வுகளைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றியது.
இந்தக் கம்பு சுத்ற வேலையைத் தமிழ்ப்படங்கள் கைவிடுவதாகவே இல்லை. சுற்றி நிற்கும் அனைவரையும் கதாநாயகன் தனுஷ் ஒற்றை ஆளாய் - சின்ன மகன் அப்போது நன்றாகவே வேடிக்கை பார்க்கிறான்! - அடித்துக் கொல்லும் போதும், கை ஈட்டி நெஞ்சில் குத்தி முதுகு வழியே எட்டிப் பார்த்த பிறகும் ஹீரோ நெத்தியில ஒரு சின்ன ப்ளாஸ்டருடன் வரும் போது .. வெற்றிமாறனோ வேறு எந்த இயக்குநரோ படம் யார் எடுத்தாலும் இந்தக் காட்சிகள் தான் தமிழ்ப்படங்களில் தொடருமா என்ற கேள்வி மனதில் எழுந்தது. என்னமோ போங்க ...
இந்தப் படம் நன்றாக இருக்கிறது.. நடிப்பு ரொம்ப சூப்பர்னு சொன்னாங்கன்னு தான் பார்த்தேன். பார்த்ததும் பரவாயில்லை என்று நினைத்தேன் அடுத்த படம் பார்க்கும் வரை ...


4. ARTICLE 15

இந்திப் படம். தலித்துகளின் நிலையைச் சொல்லும் படம். மூன்று பெண்கள் .. அதில் இருவர் மரத்தில் தொங்குகிறார்கள்; gang raped. இன்னொரு பெண் காணாமல் போய் விடுகிறாள். தகப்பன்கள் விரட்டப் படுகிறார்கள். காவல் துறை எல்லாம் தெரிந்தும்  கண்களை மூடிக்கொள்கிறது. புதிதாக ஒரு ஐ பி எஸ் ஆபிசர் வருகிறார். ஒரு பிராமணர். தன் தந்தையின் ஆசைக்காக தேர்வு எழுதி இப்பதவிக்கு வருகிறார். அவருக்கும் அவரது காதலிக்கும் நடுவில் வாட்சப்பில் மூலம் நடக்கும் விழிப்பூட்டல்களும் விவாதங்களும் மிக அழகு.
வெகு இயற்கையான படம். செயற்கைத்தனம் ஏதுமில்லா படம். படம் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று நினைக்க வைத்த படம். தமிழ் உலகம் எப்போது அந்த நிலைக்கு உயருமோ தெரியவில்லை. விரைந்து நடக்கும் என்றே நினைக்கின்றேன்; எதிர்பார்க்கின்றேன். அதில் போராட்டக்காரராக வரும் தலித்திய தலைவர் ஓர் இளைஞர். தலை சாய்க்க நேரமில்லாமல் போராட்டக் களத்தில் இருப்பவர். சுட்டுக் கொல்லப்படுகிறார். அவரது கடைசி வசனம் மனதைத் தைத்தது.

you're  a sweeper  என்று எடுத்தெறிந்து பேசுபவரை எதிர்த்து How long I have to be a sweeper என்று சொல்லும் பதில் படத்தின் அடிப்படையைப் பேசுகிறது

சகதிக்குள் இறங்கி பெண்ணைத் தேடிய ஆபிசர் அதன் பின் காய்ந்த ஜீன்ஸ் போட்டிருந்த ஒரு தவறு மட்டும் தான் கண்ணில் பட்டது. படம் முழுவதும் நம்மைக் கட்டிப் போட்டு வைக்கிறது. படம் பார்த்ததும், பரியேறும் பெருமாள் படம் நினைவுக்கு வந்தது. நாம் ஒன்று ஒரேயடியாக ஒண்ணுமில்லாமல் போகவில்லை. ஆனால் பரி.பெரு. மாதிரி படங்கள் நிறைய வரணும் - both in content and quality.


5.கும்பளாங்கி இரவுகள் - KUMBALANGI NIGHTS

தீவுக்குள் இருப்பது போல் கேரளாவில் சுற்றி தண்ணீர் இருக்கும் வீடு ஒன்றில் நான்கு சகோதரர்கள். ஆனால் அவர்களின் அப்பா, அம்மாவிற்குள் சில கலாட்டாக்கள் .. குளறுபடி. ஒரேஅப்பாவுக்கு இரண்டு மனைவிகளிடமிருந்து   இரு பிள்ளைகள் என்பது மாதிரி கலாட்டாக்கள். வெட்டிச் சண்டை போடும் அவர்களுக்குள் ஒரு சகோதரனின் காதல்-கல்யாணத்திற்காக ஒற்றுமை வருகிறது. ஒரு பெரிய ஹீரோ .. சின்ன ரோலில் வருகிறார். அவர் பெயர் ... சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஹீரோவாக வருவாரே .. அவர் தான். பெயர் நினைவுக்கு வந்த பிறகு அதைச் சேர்த்து விடுகிறேன்.
மிக அழகான இடங்கள்.. வெகு அழகான படப்பிடிப்பு. ஓடிப்போய் அந்த இடத்திற்குப் போவோமா என்று நினைக்க வைக்கும் இடங்களை அத்தனை அழகாகப் படம் பிடித்திருந்தார்கள். Smooth and lovely movie.


6. VERTIGO

அந்தக் காலத்தில் பார்க்கத் தவறிய ஹிட்ச்காக் படம். இரண்டாவது சீனிலேயே ஹிட்ச்காக் இடமிருந்து வலமாக ஸ்க்ரீனில் நடந்து செல்வார். முதல் சஸ்பென்ஸ் அப்படி மிக எளிதாக நிறைவேறியது. அதன் பின் படம் சாதாரணமாகச் சென்றது. பணக்கார மனைவியைக் கொன்று முழுச் சொத்தையும் அபகரிக்க எண்ணும் கணவன் கதாநாயகனை உளவறிய அனுப்புகிறான். இறுதியில் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டது போல் தெரிகிறது. ஆனாலும் கதாநாயகனுக்கு சில ஐயங்கள். துப்பறிவைத் தொடர்கிறார். இறந்தாகக் கருதப்பட்ட பெண்ணைக் கண்டுபிடிகிறார் - இது நம்ப முடியாத ஒரு ’சினிமா நிகழ்வாக’த் தோன்றியது. அவளைத் தொடர்கிறார். புதிய பறவையில் சரோஜா தேவி செய்தது போல் இங்கே கதாநாயகன் செய்கிறார். அந்தப் பெண் நடிக்க வந்தவர். கதாநாயகன் இதைப் புரிந்ததும், இந்தப் பெண்ணும் தற்கொலை செய்து கொள்கிறார் - அது ஏனென்று தெரியவில்ல; அது தேவையுமில்லை. கடைசி ட்விஸ்ட் இது தான். ஹிட்ச்காக் படம் என்று அது நிருபிக்கிறது. அந்தக் காலத்தில் கேள்விப்பட்டது போல் அத்தனை நன்றாக இல்லை. சாதாரண படம்.


7.REVELATION

மிக அழகான ஒரு தமிழ்ப்படம். பாட்டில்லை .. நடனமில்லை .. யோகி பாபு காமெடி இல்லை. இதனாலேயே இப்படம் ஒரு நல்ல படம் என்பதை நிரூபிக்க முடியும் போலும். சேத்தன் ஹீரோ...விஜய் ஜெயபால் இயக்குநர். ஒரு கேள்விக்குள்ளான குறும்பட நாயகியாக நடித்த லஷ்மிபிரியா கதாநாயகி. என்னைக் கட்டிப் போட்ட படம். இப்படி ஒரு தமிழ்ப்படமா என்று ஆச்சரியப்பட வைத்த அழகான, ஆழமான படம். நாயகன் - நாயகி மத்தியில் நாமும் மாட்டிக் கொள்கிறோம். கல்கத்தா நகரை நேரில் பார்த்த அனுபவம்.மென்மையான மனித உணர்வுகள், தனிப்பட்ட குணவியல்புகள், ஒவ்வொரு கதாபாத்திரங்களோடு ஒன்றி விடுகிறோம். மக்களின் வாழ்வில் இருந்த சின்னச் சின்ன சிக்கல்கள், அதனால் ஏற்படும் இணைப்புகளும் பிரிவுகளும் நம்மையும் உள்ளே இழுத்துக் கொள்கின்றன.

இயக்குனர் ஜெயபால்


லஷ்மிபிரியா நல்ல நடிகை என்பதால் அவர்களைப் போன்றவர்களைத் தமிழ்ப் பட உலகம் புறந்தள்ளி வைத்து விட்டதோ? இந்தப் படத்தைப் பார்த்து முடித்ததும் இன்னும் சில நாளில் விஜய் ஜெயபால் போன்ற இயக்குநர்கள் எண்ணிக்கையில் கூடி விடுவார்கள் என்ற ஒரு நம்பிக்கையும், அட்லீ போன்ற இயக்குநர்கள் தர்த்தியான விஜய் போன்ற நடிகர்களை வைத்து எடுக்கும் படங்கள் குறைந்து விடும் என்ற ஒரு சின்ன நம்பிக்கையும் நெஞ்சில் மெல்ல எழுந்தது.

பரிசிற்குச் செல்லும் இப்படங்கள் ஏன் மக்களுக்குச் சென்றடைவதில்லை?


8. ஆரஞ்சு மிட்டாய்

விஜய் சேதுபதி எழுத்திலும் நடிப்பிலும் தயாரிப்பிலும் உருவான மிக மிக வித்தியாசமான படம். படத்தில் கதை இல்லை. வித்தியாசமான, விட்டேத்தியான ஒரு கிழவர். பெருங்குடும்பத்தில் பிறந்த நிறைய திமிர் பிடித்த அந்தக் கிழவரின் அட்டகாசமும் ஆர்ப்பாட்டமும் நம்மைஅவரின் மீது ஈர்ப்பு கொள்ள வைக்கிறது.  பார்வையாளர்கள் போலவே மருத்து உதவியாளராக வரும் ரமேஷ் திலக்கையும் அந்தக் கிழவர் ஈர்த்து விடுகிறார்.  இந்த நடிகரை அந்தக் காலத்தில் கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் வந்த முதன் முதல் சீனிலேயே எனக்குப் பிடித்தது. விஜய் சேதுபதியின் மகனிடம் தன் தந்தை பற்றிப் பேசும் இடமும், கடைசி சீனில் பாறையில் அமர்ந்து கொண்டு விஜய் சேதுபதியிடம் பேசும் இடம் என்று ஒவ்வொன்றும் மிக அழகாக அமைக்கப் பட்டிருந்தன.


“Life ... is a tale
Told by an idiot, full of sound and fury,
Signifying nothing.” என்ற ஷேக்ஸ்பியரின் மேற்கோள்களைத் தெறிக்க விட்டிருந்தார்கள் 

ஏனிந்த படம் என்னை ஈர்த்தது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு சீனையும் ரசித்துப் பார்த்தேன். விஜய் சேதுபதி என்ற நடிகரையும், மனிதரையும் பிடித்துப் போனதால் ஏற்பட்ட விளைவா என்றும் தெரியவில்லை. எப்படியோ என் இதயம் அப்படிப் பேசுகிறது. இந்தப் படத்தை எடுத்த சேதுபதியின் தைரியத்திற்கும் என் பாராட்டுகள். இரு பாடல்கள் - ஜஸ்டின் பிரபாகரின் (எங்கள் கல்லூரி மாணவர்) இசையமைப்பு பிடித்தது; பின்னணியில் அவரது இசை பொருத்தமாக இருந்தது.




9. EQUALIZER 2

Denzel Washington பிடிக்கும் என்பதால் இப்படத்தை தேர்ந்தேன். ரிட்டையர்ட் சூப்பர் ஏஜெண்டாக வருகிறார். அடிதடி சண்டை .. அது இதுன்னு தீவிரமாகப் போச்சு. கடைசி சீன்ல மழையும் புயலுமாய் கடற்கரையில் அடிக்கும் சண்ட மாருதத்தில் துப்பாக்கி சண்டை. சண்டைன்னு வந்துட்டாலே நம்ம ஹீரோக்கள் அடிக்கிற அடிகளை என்னால் தாங்க முடியாது.






 *

No comments:

Post a Comment