Sunday, March 15, 2020

1086. சிறுமலையில் ஒரு நாள்




*

37 ஆண்டுகளுக்கு முன் என் மாணவன் காமாட்சி. 12 மார்ச் மாதம் நண்பன் காமாட்சியின் மகள் திருமணம். திண்டுக்கல்லில். அழைத்திருந்தான். சென்றிருந்தேன். முந்திய நாள் காலையிலேயே மதுரையிலிருந்து சேவுகன் என்னைக் காரில் “கொத்திக் கொண்டு’ (pick up செய்துகொண்டு) திண்டுக்கல் சென்றோம். சென்னையிலிருந்து மூவர் - அழகுராமன், குமார், பாஸ்கர் - வந்திறங்கினர். காமாட்சி வரவேற்கக் காத்திருந்தான். அங்கிருந்து அருகிலுள்ள சிறுமலை விடுதி ஒன்றிற்கு எங்களை அனுப்பி வைத்தான்.
சின்ன மலைதான். ஆனால் 18 கொண்டைப் பின் வளைவுகள். காலை ஒன்பது மணிக்கு அங்கு அடைந்ததும் நாங்கள் தங்குமிடத்திலிருந்து பார்த்தால் எங்களுக்குக் கீழே வெண்மேகம் குடைபிடித்திருந்தது. பார்க்க அருமை. வெயில் வந்தும் நமக்குக் கீழே மேகம் பார்த்தது ஆச்சரியமாக இருந்தது.
மாலை திண்டுக்கல்லிற்கு நிச்சயதார்த்த விழாவிற்காகக் கீழிறங்கினோம். ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு உயரத்தில் வரும் போது ஒரு கொண்டைப் பின் வளைவில் திரும்பினோம். எங்களின் இடது பக்கம் ஒரு காட்டெருமை நின்று கொண்டிருந்தது. தன்னையறியாமல் சேவுகன் வண்டியின் வேகத்தைக் குறைக்க, இடது பக்கம் முன்னல் அமர்ந்திருந்த எனக்கும் அந்த அழகு பைசனுக்கும் இருந்த இடைவெளி ஐந்தாறு அடிகள் இருந்திருக்கும். என்ன ஒரு ராயல் லுக்! அத்தனை அழகு .. கம்பீரம் .. மொழு மொழுவென்று லட்சணமாக நின்று கொண்டிருந்தது. தீர்க்கமான கண்கள் . எல்லோரும் சேவுகனை வண்டியை விரைவு படுத்தச் சொன்னோம். வண்டிக்கு முன்னால் ஒரு பெண் எருமை கன்றுடன் அமைதியாக நின்று கொண்டிருந்தது. தாண்டியதும் தான் எங்களிடமிருந்து ஒரு பெருமூச்சு வந்தது.
வேறென்ன .. நல்ல திருமண விழா. சுவையான உணவு. அன்பான உபசரிப்பு. மீண்டும் மலையேறி காலையில் கல்யாணத்திற்கு வந்திருந்து உண்டு கழித்து வீட்டுக்கு விரைந்தோம் - ஆனால் எல்லாம் சிறுமலைக்கே உரிய மலைப்பழம் ஆளுக்குக் கொஞ்சம் வாங்கிக் கொண்டு தான். அதேபோல் திண்டுக்கல் போய் பிரியாணி சாப்பிடாமல் வர முடியுமா? முதல் நாள் மதிய உணவிற்கு வேணு பிரியாணி தேடி வந்தது.
சில படங்கள். அவைகளில் மோசமான படங்கள் - நான் எடுத்தவை. நன்றாக உள்ள படங்கள் எடுத்தது குமார் & அழகுராமன்.




























*



1 comment:

Post a Comment