Tuesday, December 08, 2020

1138. பேரா. பத்மநாபன் நாயர்

RPN என்றழைக்கப்படும் பேரா. பத்மநாபன் நாயர் மறைந்து விட்டார். அவரது குடும்பத்தாருக்கு என் இரங்கல்கள். 
 எனக்கும் அவருக்குமான தொடர்புகள் இலக்கியம் தொடர்பானதாகவே அந்தக் காலத்திலிருந்து இருந்தது. எங்களுக்குள் ஒரு வேடிக்கை வழக்கமாக நடக்கும். நான் ஏதாவது ஒரு ஆங்கில நூலை வாசித்தால், நாயரிடம் நான் அதை வாசித்தேன். நீங்களென்ன plus 5 or 10 என்று கேட்பேன். அதாவது நான் இப்போது தான் வாசித்திருக்கிறேன்; நீங்கள் எப்போது அதை வாசித்தீர்கள்; 5 ஆண்டுகளுக்கு முன்பா? பத்து ஆண்டுகளுக்கு முன்பா? என்பது அதன் பொருள். இந்த விஷயத்தில் ஒரு தடவை கூட ‘அட .. நான் அதை இன்னும் வாசிக்கவில்லை’ என்று அவர் சொன்னதேயில்லை. அப்படி ஒரு வாசிப்பாளர். Voracious reader என்பார்களே அதற்கு அவர் ஒரு நல்ல உதாரணம். எப்படித்தான் அப்படி வாசிப்பாரோ! அதையும் விட அந்த நூல்களைப் பற்றிய முகவுரை கொடுக்கக் கூடிய அளவிற்கு நினைவில் வைத்திருப்பார். 

 அப்போதெல்லாம் நான் ஒரு புகைப்படக் கிறுக்குப் பிடித்து அலைந்த காலம். எடுக்கும் படங்களை பேரா. வசந்தனிடம் கொண்டுவந்து காட்டுவேன். அவர் ஒரு நல்ல ஓவியர். அழகான ,பொருத்தமான கருத்துகளைத் தருவார். Sun set, sun raise படங்களை என்னிடம் காண்பிக்க வேண்டாம் .. அது யார் எடுதாலும் அழகாகத்தானிருக்கும் என்பார். (அப்போதெல்லாம் போட்டோ எல்லாமே B&W தான்.) அதே போல் ஆங்கிலத்தில் ஏதாவது எழுதி அவைகளை நாயரிடம் கொடுப்பேன். அதுவும் பொதுவாக அவரது SCILET அறைக்குச் சென்று கொடுப்பேன். ஓரிரு நாட்கள் கழித்து அவைகளை அவர் தன் கருத்துகளோடு அனுப்பி வைப்பார். அல்லது நான் போய் வாங்கி வருவேன். ஒரு கட்டுரை. என் பால்ய நினைவுகள். என் அப்பாவின் கல்யாணம். அந்த நினைவலைகளை (https://sixth-finger.blogspot.com/2006/07/30-when-i-look-back1.html) எழுதிக் கொடுத்துவிட்டு வந்திருந்தேன். அடுத்த நாள் காலை. நாயர் என் அறைக்கு அவரே நேரடியாக வந்திருந்தார். என் கட்டுரையைக் கொடுத்தார். ’எப்படி’ என்றேன்.’ 'It is good" என்றார். ‘வேறென்ன சொல்ல முடியும்!” என்று வேடிக்கையாகச் சொன்னேன். அவர், ‘இதுவரை நீங்கள் கொடுப்பதை நீங்களே வந்து வாங்கிக் கொள்வீர்கள்; ஆனால் இந்த முறை நானே தேடிவந்து கொடுக்கிறேன். You know the reason. It was quite good and touched me so much' என்றார். இது போல் நிறைய எழுதுங்கள். எழுத்து இன்னும் வசப்படும் என்றார். அன்று அவர் இட்ட விதை எனக்குப் பெரும் ஊக்கத்தை அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. 

 நானும் அவரும் jail mates. இரண்டாம் முறை MUTA -ஆசிரியர் கழகப் போராட்டத்தில் சிறை சென்ற போது அவரும் வந்திருந்தார். முதல் முறை போலல்லாமல் சிறை வாசம் இரண்டு வாரத்திற்கு மேல் இருந்தது. நானும் அவரும் சிறைக்குள் ஒரு ஓரமாக அடுத்தடுத்து இடம் பிடித்துக் கொண்டோம். ஏனெனில் அப்போது இருவருமே ‘பெரிய’ புகைப்பான்கள்! ஆனால் மனிதருக்குத் தனி நெஞ்சழுத்தம் தான். அங்கிருந்த நாட்களில் அவர் சிறையில் எங்களுக்குத் தயாராகும் உணவைச் சாப்பிடவேயில்லை. வெளியிலிருந்து வரும் பழங்கள், ரொட்டி மட்டுமே அவருக்குப் போதுமென்றிருந்து விட்டார். நானும் கொஞ்சம் இழுத்துப் பார்த்தேன். ஏனோ அவர் சிறையுணவைத் தொடவேயில்லை. அவருக்காகவாவது சிறையிலிருந்து ‘விடுதலை’ பெற வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டேன். 

 அந்த சமயத்தில் பேராசிரியர்கள் பலர் ஒரு குழுவாக சேர்ந்திருந்தோம் - எல்லோருக்கும் இரு மகள்கள். ஏறக்குறைய ஏழெட்டு நண்பர்கள் அப்படி இருந்தோம். அதில் இருவர் மட்டும் மூன்றாம் முறையாக risk எடுத்தார்கள் (Fenn & Gabriel) அவர்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கவே அவர்களை ‘ஜாதிப் பிரதிஷ்டம்’ செய்து விட்டோம்! 

 நாயர் ஒரு நடைப் பிரியர்; ஏனெனில் அவருக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது. அதை வைத்து அவரைக் கேலி செய்வதுண்டு. இன்னொன்று, மனிதர் அத்தனை வாசித்தாலும் கண்ணுக்கு கண்ணாடி போடவேயில்லை. 

 இலக்கியப் பித்தர். மரணம் தழுவும் வரை வாசித்துக் கொண்டு நல்ல உடல் நலத்தோடு இருந்தார். ஆனாலும் நான் அவரைக் கடைசியில் பார்த்தது மருத்துவ மனையில் தான், கழுத்தில் சிறு கட்டி. ஆனால் சின்னாளில் எல்லாம் சரியாகிவிட்டது என்றறிந்தேன். 

  காலம் காலுக்கடியில் நழுவிக்கொண்டிருக்கின்றது. 
இன்னொரு நண்பரின் மரணம் ….

No comments:

Post a Comment