Sunday, January 24, 2021

1148. எங்க காலத்திலெல்லாம் …. 8 - சோறு
*என் வயதுக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டசாலிகள். வாழ்க்கையில் எத்தனை பெரும் மாற்றங்களைத் தொடர்ந்து இன்னும் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். பல மாற்றங்களையெல்லாம் நாங்கள் ஒரு காலத்தில் நினைத்தும் பார்த்ததில்லை. உதாரணமாக, அந்தக் காலத்தில் எல்லாம் யாரோடாவது தொலைபேசியில் பேசிய பிறகு அதைப் பிறரிடம் சொல்லும் போது யாராவது ஒருவர், அவர் எப்படிப் பேசினார்? .. கோபமாகப் பேசினாரா..? என்றெல்லாம் கேட்பாளர்கள். ஆனால் தொலைபேசியில் பேசியவர் உடனே, “நானென்ன அவர் மூஞ்சிய பார்த்தா பேசினேன்” என்பார்கள். ஆனால் இன்று மிகச் சாதாரணமாக வீடியோ காலில் முகம் பார்த்துப் பேசுகிறோம். பிறந்த நாளிலிருந்து செல்போனோடு விளையாடும் சின்னப் பசங்களான(??!!) உங்களுக்கு இதெல்லாம் பெரிதாகத் தெரியாது. ஆனால் நடந்து வந்த மாற்றங்களைப் பார்க்கும் போது எங்களை மாதிரி ‘பெருசு’களுக்கு ஆச்சரியம் .. அதிசயம் … இப்படி எவ்வளவோ. எங்கள் வாழ்க்கை அந்தக் காலத்தில் எப்படி இருந்தது என்று சொன்னால் தானே உங்களுக்குப் புரியும்.

கொஞ்சம் சொல்கிறேன் .. ஒவ்வொன்றாய். ஆனால் எல்லாம் என் அனுபவத்தில் நான் பார்த்தவைகள் .. கேட்டவைகள் -- செய்தவைகள் தான். ஒரு மத்தியதரத்துப் பையனாக வளர்ந்தவனின் அனுபவங்கள். மேல்தட்டு மக்கள் யாரும் வாசித்து, இதெல்லாம் இப்படியெல்லாம் இல்லையேன்னு நினைக்கலாம். அப்படி நினைத்தால் அவர்களுக்கு அந்தக் காலத்து மிடில் க்ளாஸ் பற்றித் தெரியவில்லை என்று கொள்ளலாம். (ஏற்கெனவே இதே தலைப்பில் ஏழெட்டுப் பதிவுகள் போட்டிருக்கிறேன். இது ஒரு தொடர்ச்சி...)

Future shock என்ற நூலின் ஆசிரியரான Alvin Toffler முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை fashions மாறி மாறி வருமென்றார். அதோடு மாற்றங்களுக்கு நாம் நம்மைத் தயாரான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வரும் மாற்றங்கள் பல மிகுந்த அதிர்ச்சியளிக்கும். அதற்குத் தயாராக நம்மைத் தயார்செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லியுள்ளார், அவரது மூன்று நூல்களும் - trilogy - Future Shock; Third Wave and Power Shift - தொடர்ந்து நடைபெறப்போகும் மாற்றங்களைப் பற்றி எழுதப்பட்ட சிறந்த நூல்களாக பெயர் பெற்றன. இது போன்ற மாற்றங்கள் பலவற்றை நேரில் பார்த்த என்னைப் போன்ற ஒருவன் சொல்லும் ‘பழைய காலத்துக் கதை’ இது.

முதன் முதல் எதைப் பற்றி எழுதலாமென யோசித்த போது சோறு பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. சாப்பாட்டிலிருந்து ஆரம்பிக்க ஆசை. வேறொன்றுமில்லை ..  சமீபத்தில் பழைய வார இதழ்கள் சில கண்ணில் பட்டன. அம்மா சமைக்கும் படங்கள். அதில் பார்த்த ஒரு படம். அம்மா ஒருவர் அரிசியில் கல் பார்த்துக் கொண்டிருப்பது போல் ஒரு படம். 


சுளவு - அப்படின்னா என்னன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமா? - அதன் இன்னொரு பெயர் முறம். இப்போதெல்லாம் இந்த சுளவு ப்ளாஸ்டிக் / நெகிழியில் வருகிறது. 

                                                   

இதன் பயன் இப்போதெல்லாம் அதிகமில்லை, ஆனால் அந்தக் காலத்தில் கட்டாயமாக ஒவ்வொரு சமையலறையின் சுவற்றிலும் ஒரு ஆணியில் தொங்கிக் கொண்டிருக்கும். பனை நாறில் செய்வார்கள். தானியங்களை அந்தக் காலத்தில் இதை வைத்துப் ‘புடைப்பார்கள்’. சரி … நாம் சோற்றுக்கு வருவோம் …

சோறு ஆக்குவதற்கு முன் அரிசியில் அம்மாமார்கள் கட்டாயம் கல் பார்க்க வேண்டும். இப்போதெல்லாம் வரும் அரிசியில் எந்தக் கல்லும் மண்ணும் இருப்பதில்லை. அட .. ரேஷன் அரிசியில் கூட கல் இருப்பதில்லை. அந்தக் காலத்தில் கல்லில்லாத அரிசி இருந்ததில்லை. அரிசியின் ஊடே நிறைய கல் கிடக்கும். சுளவில் அன்றைய அளவிற்கு அரிசி எடுத்து அம்மாமார்கள் உன்னிப்பாக அதிலிருக்கும் கல்லை எடுப்பார்கள். ஏன் தட்டில் வைத்துப் பார்ப்பதை விட அந்தக் காலத்தில் சுளவில் வைத்து தான் பார்ப்பார்கள். அதன் முரட்டு மேற்பரப்பு ஒரு வேளை கல்லையும் அரிசியையும் பிரிக்க ஏதுவாக இருந்திருக்கலாம்.

இந்தக் கல்லிலும் பல வகை உண்டு. அரிசி மாதிரியே பொடிக் கற்கள் உண்டு. அநேகமாக இது அம்மாமார்கள் கைகளில் சிக்காது. ஆனால் மிகச் சரியாக அப்பாமார்கள் பல்லில் தான் இது கடி படும். அப்போதெல்லாம் ஒரு வழக்கமான ஜோக் ஒன்றினை அப்பாமார்கள் அடிப்பது வழக்கம். “வீடு கட்டணும்னு சொல்லிக் கிட்டே இருக்கியே. இந்தா .. இந்தக் கல்லை எடுத்துப் பத்திரமாக வை. வீடு கட்டும் போது உபயோகமாகும்”. சில கற்கள் நன்றாகப் பெரிதாக இருக்கும். கறுப்பு அரிசிகளும் இருக்கும். அம்மாமார்கள் இதை அத்தனைப் பொறுமையாக உட்கார்ந்து பொறிக்கியெடுக்க வேண்டும். எப்படி எடுத்தாலும் கற்கள் கண்களுக்குத் தப்பி விடும். அதுவும் பழைய சோறு சாப்பிடும்போது கடைசி மிச்ச சோற்றில் நிச்சயம் பொடிக் கற்கள் ஓரிரண்டாவது கிடைக்கும். ‘கும்பா’ - (அது என்னவென்று தெரியுமா? நான்வாழ்ந்த நெல்லை மாவட்டத்தில் ‘சம்சாரிகள்’ வீட்டில் ( அட .. சம்சாரின்னா யாருன்னு தெரியுமா? விவசாயிகளை அப்படி சொல்வார்கள்.) பித்தளையில் அரைவட்ட வடிவில் இருக்கும். அடியில் வட்டமான base இருக்கும்.) விளக்குபவர்கள் விளக்கி வைத்தால் தங்கம் போல் ஜொலிக்கும். இதில் சாப்பிட்டால் நிச்சயம் கடைசியில் உள்ள சோற்றில் நிறைய பொடிக் கற்கள் கிடக்கும். கும்பாவில் ஒரு பிரச்சனை உண்டு. அது என்னவென்றால் உங்கள் side dish வைக்க அதில் இடமிருக்காது. வேண்டுமானால் அதைத் தனித் தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இளம் வயதில் இதில் சாப்பிடுவது தான் எனக்குப் பிடிக்கும். ஊருக்கும் போகும் போது அப்பம்மா தட்டில் சோறு போடுவார்கள். நானோ கும்பாவில் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவேன். கல்லூரி நாட்களில் சொந்த ஊர் போகும்போது எப்படியாவது ஒரு கும்பா வேண்டும் என்று அப்பா, அம்மா இருவர் வீடுகளிலும் தேடினேன். மேலே இருக்கும் பழைய பாத்திரங்களையெல்லாம் உருட்டித் தேடிப் பார்த்தேன். எல்லாம் காணாமல் போய்விட்டது. ஒரு antique value-வுக்காகவாவது ஒன்று வேண்டும் என்று தேடியும் கிடைக்காமல் போய் விட்டது.

ஏன் அப்போது அரிசியில் கல் இருந்தது; பின் எப்படி அது இப்போதெல்லாம் இருப்பதில்லை என்பது எனக்கு ஒரு பெரிய கேள்வி. இளைஞனாக இருந்த போது எனக்குத் தெரிந்த ஒரு அரிசிக் கடைக்காரர், ‘எடை கூடணும் என்பதற்காக கற்களைக் கலப்பார்கள்’ என்றார். அதோடு இன்னொரு செய்தியையும் - நான் நம்ப முடியாத செய்தியாக எனக்குத் தோன்றியது - அரிசியில் கலப்பதற்காகவே மெஷின் வைத்து பொடிக் கற்களைச் செய்து விற்கிறார்கள் என்றார்.

எப்படியோ அன்றைய கல் நிறைந்த அரிசிக்கும், இன்று கிடைக்கும் கல்லில்லாத அரிசிக்கும் காரணம் என்ன என்பது எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் .. கேட்டுக் கொள்கிறேன்.பி.கு.  சோறு  என்பதற்குப் பதிலாக ‘சாதம்’ என்று ஆரம்பித்து வைத்தது யாருங்க ....?2 comments:

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யம். முறத்தை ‘சொளவு’ என்போம். Antique value-வுக்காக சில வெள்ளிக் கும்பாக்களை பாதுகாத்து வருகிறேன். /அன்றைய கல் நிறைந்த அரிசிக்கும், இன்று கிடைக்கும் கல்லில்லாத அரிசிக்கும் காரணம் என்ன/ .. இது புரியாத புதிர்தான்.

தொடருங்கள்.

Packirisamy N said...

//எப்படியோ அன்றைய கல் நிறைந்த அரிசிக்கும், இன்று கிடைக்கும் கல்லில்லாத அரிசிக்கும் காரணம் என்ன என்பது எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் .. கேட்டுக் கொள்கிறேன்.//

அந்த காலத்தில் நெல் அடிக்கும் களம் மண் களமாக இருந்தது. இப்பொழுதெல்லாம் சிமென்ட் களம்தான் அதிகமாக இருக்கிறது.அதனால் நெல்லில் கல், மண் கலந்துவிடும் வாய்ப்புகள் குறைவு.

Post a Comment