Wednesday, September 07, 2022

1184. பல்வலியும் ராசாவும்*


பல் மருத்துவரைப் பார்க்கப் போனேன். நீளமாக, காலை நீட்டி உட்காருவது போலிருக்கும் படுக்கை நாற்காலியில் படுக்கப் போட்டார்கள். மருத்துவர் வந்தார். என்னைப் பரிசோதிப்பதற்கு முன் மாஸ்க் எல்லாம் போட்டுக்கொண்டு தயாராகிக் கொண்டிருந்த மருத்துவர் என்னைப் பார்த்து, “ சார்.. என்ன பிரச்சனை “என்றார். பிரச்சனையே இல்லை என்றேன். செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு என்னை (முறைத்துப்) பார்த்தார்! கண்ணில் ஒரு கேள்விக் குறி. “பல்லே இல்லை; அதுதான் பிரச்சனை” என்றேன். இப்படி ஆரம்பித்தது பல்சேவை!

வீட்டில் நால்வர். நானும் பிள்ளைகளும் காலை, இரவு என்று ஒழுங்காகப் பல் துலக்கினோம். பாஸ் காலையோடு சரி. ஆனால் பாருங்கள் .. எங்கள் மூவருக்கும் பல்வலி..பல் பிடுங்கல்கள், root canal மருத்துவம் என்று தொடர்ந்து வந்தன. எனக்கு இருபதுகளில் ஆரம்பித்த தொல்லை தொடர்ந்து வந்ததில் இறுதியில் பல் ஏதுமில்லா நிலைக்கு ஏறத்தாழ வந்து விட்டேன். முன்னால் பற்கள் இருந்ததால் வெளியே சிரித்துச் சமாளித்தேன். ஆனால் சாப்பிட அரைக்கும் பற்கள் வேண்டுமாமே... அதற்கு நான் எங்கு போய் கடன் வாங்குவது என்ற நிலை வந்ததும் மருத்துவரிடம் சென்றேன்.

பல்லுக்கெல்லாம் லட்சக் கணக்கில் செலவாகும் என்றெல்லாம் தெரியாது. பழையன கழிதலும் புதியன புகுதலும் பல்லுக்கு சின்ன வயசில் மட்டும் தான் நடக்குமாம். இப்போதெல்லாம் பல்லு போச்சுன்னா bridge போடணுமாம்; அல்லது implant செய்யணுமாம். பல்செட் காலமெல்லாம் மலையேறிப் போச்சாம்.

நாலைந்து நாளாகத் தொடர்ந்து சென்று மருத்துவம் செய்து வருகிறேன். பல் டாக்டர் என்றாலே வலி தான் நினைவுக்கு வரும். அந்தப் பயம் நிறைய இருந்தது. ஆனால் சும்மா சொல்லக் கூடாது. ஒரு பல் பிடுங்கப்பட்டது. எழு பல்கள் root canal செய்யப்பட்டன. அது ஒரு டாக்டரம்மா (Dr. Mohana, 7806959533).. இதுவொரு டாக்டரய்யா (Dr. Praveen Kumar, 9940548982). இதுவரை வலியேதும் இல்லை. அந்த நீள நாற்காலியில் நீண்ட நேரம் படுத்திருந்ததால் கொஞ்சம் முதுகில் வலி. A good magic combo. இரு மருத்துவர்கள் .. இதுவரை தொல்லையில்லாத, வலியில்லாத மருத்துவம். root canal செய்தும் வலிக்கவில்லை என்று சொன்னால் மகள்கள் நம்ப மறுக்கிறார்கள்.

இன்னும் ஒரு மகிழ்ச்சியான விஷயம். எனக்கும் மருத்துவர்களுக்கும் அப்படியொரு good rapport. very pleasant people and that made me write this.

நேற்று ஞாயிற்றுக் கிழமையும் சென்றேன். டாக்டர் மூன்று பற்களுக்கு மட்டும் root canal செய்தார். இந்த க்ளினிக்கில் பிடித்த இன்னொரு விஷயம் ஒரு பெரிய டிவியில் இயற்கைக் காட்சிகள் மட்டும் ஓடிக் கொண்டிருக்கும். மிக மிக அழகான ரம்மியமான காட்சிகள். ஆனால் அதோடு வரும் இசை ... அடேயப்பா... வெறும் ஒற்றை பியானோ என்று நினைக்கின்றேன். அத்தனை சுகம் அதைக் கேட்பது. (எப்படியாவது நகலெடுக்க நினைத்திருக்கிறேன்). ஆனால் ஞாயிற்றுக் கிழமை என்பதால் வழக்கமான நோயாளிகள் இல்லை. நானும் இன்னொருவர் மட்டும். அதனால் டாக்டர் வேலையை ஆரம்பித்தவருக்கு இசையில்லாமல் இருந்தது பிடிக்கவில்லை. துணைக்கு இருக்கும் மகேஷிடம் பாட்டுப் போடச் சொன்னார். மகேஷ் சின்னப் பையன். என்ன பாட்டு இருக்கும் அவனிடம். இரண்டு மூன்று குத்துப் பாட்டு ஓடியது. வாய்க் கொப்பளிக்க எழுந்தவன் “ஏம்பா .. எங்க ராசா இல்லையா?” என்றேன். டாக்டரும் உடனே பாட்டுகளை மாற்றச் சொன்னார். ஆஹா ... ராசா வந்தால் தனி ரகம் தானே. அது மட்டுமா ... டாக்டரும் தன் வேலையில் கருத்தாக இருந்தாலும் பாட்டுகளையும் மெல்ல முணுமுணுத்துக் கொண்டே பாடிக்கொண்டு வேலையைத் தொடர்ந்தார். எனக்கு ஒரு சின்ன கஷ்டம் ... பாட்டு கேட்கும்போது தன்னிச்சையாக வரும் தலையசைத்தலோ, கால்களால் மெல்ல தாளமிடுவதையோ தவிர்க்க வேண்டியதிருந்தது. ஆனால் ராசாவோடு பயணம் செய்ததால் root canal-ம் எளிதாகப் போனது.  


                                                       


இந்த மருத்துவமனையில் இன்னொரு நல்ல காரியம். மருத்துவம் பார்த்த அடுத்த நாள் அங்கு வேலை பார்க்கும் முதுகலையில் பரிசும் பட்டமும் பெற்ற பெண்மணி, பாமினி நம்மைத் தொலை பேசியில் அழைத்து, சுகம் விசாரிக்கின்றார். ( ஒரு சின்ன சந்தேகம் நமக்கு மட்டும்தான் இது போன்ற அழைப்பா என்று நினைத்தேன். அனைத்து “பல்லர் & பல்லி”களுக்கும் அவ்வாறு அழைத்து சுக நலம் விசாரிப்பது பழக்கமாம்.)


இன்னும் பல் மருத்துவம் தொடர்ந்து செல்லும். ஆனால் பயந்த அளவு தொல்லையில்லை என்பதில் மகிழ்ச்சி.


No comments:

Post a Comment