Tuesday, February 28, 2023

1216. நண்பகல் நேரத்து மயக்கம் (நடுவுல சில பக்கத்தைக் காணோம்)





*

புது மாப்பிள்ளைக்கு மண்டையில் அடி பட்டுதா ...அது அவர் மெடுல்லா ஓப்லாங்கேட்டாவைத் தாக்கியதா ... அதுனால ரெண்டு நாள் நல்லா தூங்குறதுக்கு வரைக்கும் ஞாபக சக்தி இல்லாம போச்சுதா ... இப்படிப் போச்சு “நடுவுல சில பக்கத்தைக் காணோம்” அப்டின்ற படத்துல. நல்லா தூங்கி எழுந்தச்சதும் கதாநாயகனுக்கு  எல்லாம் சரியா போயிருது. ஜாம் ஜாம்னு கல்யாணம் நடக்குது. இது நம்ம கதை. நன்றாக இருந்தது. உண்மைச் சம்பவம் என்றும் சொன்னார்கள்.


                           

இப்போ ஒரு மலையாளப் படம்: நண்பகல் நேரத்து மயக்கம். ஆனா வேளாங்ககன்னிக்கு கேரளாவில இருந்து வந்த ஜேம்ஸுக்கு அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகலை. தூங்கி எழுந்திருக்கிறதே புது வாழ்க்கை தான் அப்டின்ற குறள் பத்தித் தெரிஞ்சுக்கிறார்.   “.... உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு”  என்ற குறளை ரசிக்கிறார். ஆனால் ஊருக்குத் திரும்பும் போது குட்டித்தூக்கம் போட்டு எழுந்திருப்பவர் புதிதாய் பிறக்கிறார்,  தூங்குவதற்கு முன் தமிழ்ப்ப்பாட்டு வேண்டாம் ..மலையாளப்பாட்டைப் போடச்சொல்லி அதட்டுகிறார். காலைச் சிற்றுண்டியில் தமிழர் சாப்பாடு பிடிக்காமல் முழுங்கி வைக்கிறார். ஆனால் தூங்கி எழுந்ததும் முழுத் தமிழனாக மாறி, வழியிலிருந்த ஒரு கிராமத்துக்குள் செல்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சந்தைக்குப் போய் திரும்பி வராத ஆளான சுந்தரமாக மாறி, கிராமத்தில் அதகளம் பண்ணுகிறார். தான் ஒரு தமிழன் .. அந்தக் கிராமத்தில்பிறந்து வளர்ந்தவன் என்று உறுதியாகச் சொல்கிறார். பழைய வழக்கத்தின் படி காலையில் பால் ஊற்றுவதற்கு ஊரெல்லாம் சுற்றுகிறார்.

கிராமத்து மக்களுக்கும் தலை சுத்துது ...  அவரோடு வந்த அவரது மலையாளக் குடும்பத்தாருக்கும், உறவினருக்கும் தல சுத்துது. பார்க்கப் போன நமக்கும் தல சுத்துது.

படத்தில் நான் மிகவும் ஆச்சரியப்பட்ட விஷயங்களைத் தொகுப்பதற்குத்தான் இதை எழுதவே ஆரம்பித்தேன்.

முதல் விஷயம்:

நான் மலையாளப்பபடம் பார்ப்பதென்றால், அதில் கட்டாயம் subtitle இருக்கிறதா என்று பார்ப்பேன். அதில்லாமல் மொழியை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.  ஆனால் இந்தப் படத்தைப் பார்க்கும்போது மலையாளத்து ஆட்களுக்கு நம்மை (என்னை) விட தமிழ் நன்கு புரியும் என்று தோன்றியது. அதோடு நம்மூர் குப்பை நடிகர்களின் படங்களுக்குக் கேரள ரசிகர்கள் அதிகம் என்று வேறு கேள்விப்பட்டிருக்கிறேன்.  “பாட்டி மொழி” என்பதால் அவர்களுக்குத் தமிழ் நன்றாகப் புரிகிறதோ?

இரண்டாம் விஷயம்:

நம் தமிழ் நாட்டுப் பண்பாடு, பழக்க வழக்கங்கள் எல்லாம் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் இயக்குநர். அதைவிட தமிழ்ப்படத்தில் எனக்குப் பிடித்த, ஆனால் அதிகம் பிரபலம் ஆகாத சில நடிகர்களைச் சரியாகத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருப்பார்.  பூ ராமு, இன்னுமொரு நீள மீசைக்காரர், கொஞ்சம் ரெளடி லுக் வைத்திருக்கும் ஒரு நடிகர் - இந்தப் படத்தில் சைக்கிளில் மம்முக்காவைத் தேடி சுற்றுவார், சுப்ரமணியபுர்த்தில் வந்த காமெடி-வில்லன் போன்றவர்கள் எல்லாம் வருகிறார்கள். சரியான தேர்ந்தெடுப்பு. ஆனால் இதில் மனைவியாக வரும் ரம்யா பாண்டியனை நான் அடையாளம் காணாமலேயே இந்தப் படம் பார்த்து விட்டேன். வேறு சில ஆய்வுகளை வாசித்த பிறகே அவர் இப்படத்தில் வந்தார் என்பது எனக்குத் தெரிந்தது.

மூன்றாம் விஷயம்: 

ரீ ரிக்கார்டிங். ரீ ரிக்கார்டிங் என்றால் பின்னணி இசை என்று தானே பொருள்? இங்கே இசை ஏதுமில்லை. படம் முழுவதும் பின்னணியில் கிராமத்து ஆட்கள் வீட்டிலிருந்து வரும் ரேடியோ, தொலைக்காட்சி பெட்டியிலிருந்து வரும் வசனங்களும், பாட்டுகளும் தான். எம். ஆர். ராதாவின் புரட்சி வசனம், புராணக் கதைகள், பழைய சினிமா பாட்டுகள்... என்று அடுக்கடுக்காய் பின்னணி இசையாக வருகின்றன. நம்முடைய தமிழ்ப்படங்கள், அதன் தாக்கங்கள் எல்லாம் தெரிந்து  அவைகளை இயக்குநர் தேர்ந்தெடுத்திருக்கிறார்.  அந்த ரசனையும், மெனக்கெடலும் அதிக ஆச்சரியமளித்தது.

நான்காம் விஷயம்:

தேனி ஈஸ்வர். நல்ல D.O.P.  அவர் வெறும் போட்டோகிராபராக இருந்து, காலெண்டர்களுக்குப் படம் எடுத்த காலத்திலிருந்து சினிமாட்டோகிராபர் ஆனதுவரை எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். (தன் முதல் திரைப்படத்தில் அதிக ஏமாற்றம் கொடுத்திருந்தார்.) அப்படத்தைத் தவிர்த்து விட்டால் அவரது தரம் பற்றி நன்கு தெரியும். மேற்குத் தொடர்ச்சி மலையில் அவரை அதிகம் ரசித்தேன். இந்தப் படத்திலும் அந்தக் கிராமத்தையை நமக்கு அப்படியே அள்ளித் தந்திருப்பார். முதல் காட்சிகளில் பயங்கர க்ளோஸ் அப் காட்சிகள். பின்னால் வருவது எல்லாமே வைட் ஆங்கிள் காட்சிகள். ஓரிடத்தில் ஒரு சீனில் இரண்டு வீட்டு சன்னல்கள் தெரியும். இடப்பக்கம் உள்ள சன்னலில்  ஜேம்ஸின் மலையாள மனைவி சோகத்தோடு இருப்பது தெரியும். வலது பக்க சன்னல் சற்று உள்ளடங்கி தெரியும். அதில் சுந்தரனின் மனைவி – ரம்யா கிருஷ்ணன் – தெரியும். ரசித்தேன். ஆனால் ஓரிடம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ரோட்டில் அவர்கள் வந்த வண்டி நிற்கும். வண்டிக்கு இப்பக்கமும் அப்பக்கமும் முழுவதுமாக ஒரு விரிந்த சோளக் காடு. காமிரா பொட்டியை ஓரிடத்தில் நிலையாக நிற்கும். பஸ் முன் இருவர் பேசிக்கொண்டிருப்பார்கள்.  காமிராவை ஒட்டி இரு பக்கமும் இரண்டு சோளத்தட்டை கொண்ட இரு செடிகள் ஆடிக் கொண்டிருக்கும். Very artificial. தேவையில்லாமல் அப்படி ஒரு Set up. Both were so symmetrical. Appears very contrived.

இந்தப் படத்தில் மூன்று முக்கிய புள்ளிகள். 1. பின்னணி இசைக் கோர்வைகள்; 2. படப்பிடிப்பு – ஒரு கிராமத்தைச் சுற்றிச் சுற்றி அலுக்காமல் எடுத்து, நம்மையும் அந்தக் கிராமத்தோடு ஒட்டி விடுகிறார் ஈஸ்வர். 3. மம்மூக்கா. ரொம்ப டல்லான, சீரியசான, தமிழை வெறுக்கும் மலையாளத்து மனுஷன், ஜேம்ஸ் & சண்டியர்தனம் பண்ணும் முரட்டு தமிழ் மனுஷன் - சுந்தரம். ரெண்டுமே இயல்பா இருந்ததைப் பார்க்க அத்தனை ஆச்சரியம். பெரிய நடிகர் தான். நல்ல வேளை சூப்பர் நடிகரில்லை அவர்.

தூங்கி எழுந்த கதாநாயகனுக்கு அனைத்தும் சரியாகி விட்டது. திரும்பி கூடப் பார்க்காமல் கிராமத்தை விட்டு விலகி பஸ் நோக்கி முதல் ஆளாய் நடக்க ஆரம்பித்து விடுகிறார். சுந்தரத்தின் குடும்பத்தைப் பார்த்து, ஜேம்ஸின் மனைவி கும்பிட்டு விடை பெறுகிறார். சுந்தரம் குடும்பம் அங்கே நிற்பதைப் பார்க்கும் போது நம்மையறியாமல் அவர்கள் மேல் பாசமும் இரக்கமும் பீரிடுகிறது.

கடைசியாக ஒரு சந்தேகம்: இந்தப் படத்தை ஒரு magical fantasy என்று வகைப்படுத்தலாமா? ஏன்னா .. என்னன்னே தெரியலை. எப்படி ஜேம்ஸுக்கு அந்த ஊரு, அந்த ஆளு சுந்தரம், அவரது பழக்கவழக்கங்கள் எல்லாம் தெரிந்தது. சுந்தரம் ஆவி அவர் மேல் இறங்கி விட்டதா? என்ன ஆச்சு? எப்படி ஆச்சு? அல்லது பலரும் சொல்வது போல் இது ஒரு குறியீட்டுப்படம் ...  அல்லது இன்னும் என்னென்னமோ சொல்வாங்களே ... அது மாதிரி படமா?

 


No comments:

Post a Comment