Monday, May 29, 2023

1224. மருத்துவ முகாமில் சில நாள் வாழ்க்கை








முந்திய பதிவு: :

https://dharumi.blogspo/1223-what-life.htmlt.com/2023/05


மருத்துவ முகாம் வாழ்க்கை; கண்ணை மூடித் திறப்பதற்குள் 18 நாட்கள் ஓடிவிட்டன. வாழ்க்கை பழகியது போலும் இருக்கிறது. ஆனாலும் குழந்தைகளைப் பார்க்கும் போது அந்த வேதனைகள் மீண்டும் வந்து தோளில் தொத்திக் கொள்கின்றன. எவ்வித இயல்பான உணர்வுகள் இல்லாத குழந்தைகளைத் தோளில் சுமந்து,  உள்ளுணர்வுகளை அடக்கி வைத்திருக்கும் பெற்றோர்கள். வாழ்க்கையின் அர்த்தமே புரியாமல் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய சூழல். பணம், வேலை, பதவி, அதிகாரம், ஆணவம் என்று சுற்றிலும் இதுவரை பார்த்திருந்து விட்டு, இப்போது உடல் நலம் பற்றி மட்டும், அதுவும் தான் பெற்ற பிள்ளைகளின் உடல் நலத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு அலைந்து திரியும் பெற்றோர்கள்; அதிலும் முக்கியமாக தாய்மார்கள்... இவர்களைத்தான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனாலும் இந்த வாழ்க்கையிலும் அவ்வப்போது சில ஒளிக்கீற்றுகள். மலரின் பெயர் கொண்ட சின்னச் சிநேகிதியுடன் நேற்று பேசிக் கொண்டிருந்தேன். குழந்தை என்னை இரு கேள்விகளால் தோற்கடித்தது. என் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்து, அதில் உள்ள படங்களைப் பார்த்து சில கேள்விகள் கேட்டாள். பதில் சொன்னேன். இன்னொரு கேள்வி கேட்டு மடக்கி விட்டாள். புத்திசாலிப் பெண். அவளுக்குப் பணக்கார தனிப்பள்ளிகளில் இடம் கொடுக்க மறுத்து விட்டார்களாம். அரசுப் பள்ளியில் அனுமதித்துள்ளார்களாம். ஐந்தாம் வகுப்பு. அவளின் அம்மாவிடம் அவளுக்கு நிறைய கதைப்புத்தகங்கள் வாங்கித் தரச் சொன்னேன். படிப்பில் அத்தனை ஆர்வம்; புத்திசாலித்தனத்திற்கும் குறைவில்லை. அவளின் கால்களும் குணமாகி நம்மைப் போன்ற “சாதாரண” நிலமைக்கு வந்தால் மகிழ்ச்சி.

சில மாதங்களேயான சின்னப் பையன். ஓடும் மின்விசிறி, அணைந்து அணைந்து எரியும் மின் விளக்குகள், பேனா-பேப்பர் என்று தன் ஆவலைக் காண்பித்துக் கொண்டு, அப்பாவின் கைகளில் சரிந்து கிடக்கும் பையன். காது கேட்கவில்லையாம். ஏனைய உணர்வுகளும் சரியாக இல்லையாம். பெற்றோர் இருவரும் அனைவருடனும் சிரித்து சிரித்துப் பேசுகிறார்கள். அதுவே  எனக்கு முதலில் ஆச்சரியமாகவே இருந்தது. அவர்களெல்லாம் நிம்மதியாக இரவில் உறங்க முடியுமா? தெரியவில்லை.

மனம் சரியில்லா குழந்தைகள்; கால்களால் நடக்க முடியாத குழந்தைகள்; விந்தி விந்தி நடக்கும் சேட்டைக்காரச் சின்னப் பசங்கள்; யாரிடமும் மிகவும் முரட்டுத்தனமாக நடக்கும் ஆபத்தான சின்னப் பையன் ... இப்படியே பார்த்துக் கொண்டிருந்த நான் ஒரு நல்ல ஆச்சரியமான நிகழ்வு ஒன்றையும் பார்த்தேன். 


இரவு 9 மணிக்கு மேல் சில பையனும் பெண்களும் இங்கிருக்கும் ஒரு சிற்றாலயத்தின் முன்னால் இருக்கும் முற்றத்தில் கூடுகிறார்கள். அடுத்து இரண்டு மணி நேரத்திற்கு அந்த இடம் அமளி துமளியாகி விடுகிறது.  சில குறைகளோடு மருத்துவத்திற்காக வந்திருக்கும், ஆனால் நன்றாக நடமாடக்கூடிய குழந்தைகள் என்று ஒரு சிறு கூட்டம். ஏறத்தாழ 10 குழந்தைகள். நான் அந்த alter-ன் படியில் அமர்ந்திருப்பேன்... இனிமையான காற்றிற்காக. என்னிடம் வந்து பேனா பேப்பர் சில சமயம் கேட்பார்கள். எப்படி இப்படிக் கூத்தடிக்கிறார்கள் என்று யோசித்தேன். பாவம் .. இந்தக் குழந்தைகள் வேறு நோயற்ற குழந்தைகளோடு விளையாடும் வாய்ப்பு பொதுவாக அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கலாம். இங்கு அந்த ஏற்றத்தாழ்வு கிடையாது. அனைவரும் சமம் என்ற உணர்வு இருக்கும் போலும். அதனால் நன்கு சுதந்திரமாக விளையாடுகிறார்கள் என்று நினைத்தேன். ஆடிய பின் வட்டமாக உட்கார்ந்து வேறு விளையாட்டு, பேச்சு என்றிருந்தார்கள். 


ஒரு நாள் இரவு பதினோரு மணி வரை ஆட்டம் தொடர்ந்தது. ஏனென்று நினைத்தேன்; பதில் கிடைத்தது. அவர்களில் ஒரு பத்துவயதுப் பெண். அடுத்த நாள் காலையில் புறப்படப் போகிறாள். ஒரு விதமான farewell party ! என்னிடம் பேப்பர் பேனா வாங்கி அவர்களுக்குள் தொலைபேசி எண்களை வாங்கிக் கொண்டனர். அதில் இன்னொரு சின்னப் பெண் ஊருக்குச் செல்லும் பெண்ணைக் கட்டிப் பிடித்து, “அக்கா, இனிமே நான் உங்களைப் பார்க்கவே முடியாதில்லையா?” என்று அழுதது. சோகம் என்னையும் கட்டிப் போட்டது. அதைவிட அந்தப் பெண் என் முன் வந்து, கண்கலங்கி “தாத்தா, போய்ட்டு வர்ரேன்” என்ற போது ....

 

இன்னும் இங்கே இன்னும் சில நாட்களைக் கடத்தியாக வேண்டும் ....

 


3 comments:

கோமதி அரசு said...

பதிவு நெகிழ்வு.
எல்லா குழந்தைகளும் நலம் பெற்று வாழ வேண்டும்.

ராமலக்ஷ்மி said...

சென்ற பதிவையும் வாசித்தேன். மனதைக் கனக்கச் செய்யும் அனுபவப் பகிர்வு. நீங்கள் எதற்காகச் சென்றிருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. Take care.

தருமி said...

ராமலஷ்மி, எங்களுக்குப் பெரிய பிரச்சனைகள் ஏதுமில்லை. துணைவியாருக்கு முழங்கால் வலி. மருத்துவத்திற்குப் பிறகு சிறிது பரவாயில்லை. அறுவை வேண்டாமென்று இந்த முடிவு.

Post a Comment