Wednesday, September 20, 2023

1249. சநாதனம்னா என்னாங்க ...3



சநாதனம்னா என்னாங்க ...3




1946ல் அம்பேத்கர் “யாரிந்த சூத்திரர்கள்?” என்ற ஒரு கேள்வியை எழுப்பி, ஒரு புதிய பிரக்ஞ்யை சமுக வெளிக்குக் கொண்டு வந்தார். தாங்கள் யார்?; எங்கே இருக்கிறோம்?; என்னவாக இருக்கிறோம்? என்ற எந்த சுயமதிப்பீடும் இல்லாத “பாவப்பட்ட மக்களாக” இன்னும் இருப்பது தான் அவர்களின் இன்றைய பரிதாப நிலை.
இதைப் பற்றி விரிவாக எழுதப்பட்ட நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். விரைவில் அச்சில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
அதிலிருந்து சில பகுதிகளை அவ்வப்போது இங்கு தர நினைத்துள்ளேன்.
***********
இந்திய அரசியல் சட்டமைப்பும் சூத்திரர்களுக்குப் பல புதிய உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஆனால் ரிக் வேதமும், மனு தர்மமும் அவர்களை இன்னமும் காலங்காலமாய் இருந்து வரும் அடக்குமுறைகளிலேயே அடக்கி வைத்துள்ளது. அந்த இடைக்கால முறைகளே இன்னும் நீடிக்கின்றது. ஆனால் ஹரப்பா நாகரிகத்தில் இவர்கள் பல உரிமையோடு இருந்த மக்கள்தான். அவர்கள் சமூக, அரசியல், மதத் தலைவர்களாக இருந்தவர்கள்தான். பொருளாதாரத்திலும் மேம்பட்டு இருந்த மக்கள்தான். புதிய கிராமங்களையும் நகரங்களையும் உருவாக்கிய பண்பட்ட மக்கள்தான். தங்களுக்குப் பிடித்த தங்கள் கடவுள்களை நேரடியாகப் பூசித்த மக்கள்தான். கடலோடி திரவியம் தேடிய பெரும் மக்கள் கூட்டம்தான். தங்களைத் தாங்களே முறையாக, குடியாட்சித் தத்துவங்களோடு தங்களையே ஆண்டு கொண்ட மக்கள்தான். ஆனால் இத்தனை உரிமைகளையும் அவர்கள் இழந்துவிட்டனர்... அவர்களிடமிருந்து அவை வன்மையாய் பிரித்தெடுக்கப்பட்டு, பிய்த்தெடுக்கப்பட்டு விட்டன. உரிமைகளை இழந்தனர்; சுதந்தரம் இழந்தனர்; சமத்துவம் பறிக்கப்பட்டு விட்டது; சமய உரிமைகள் பறிபோயின. ரிக் வேத காலத்து கால்நடைப் பொருளாதாரத்தோடு ஆரிய பிராமணர்கள் நாட்டிற்குள் நுழைந்ததும் இவை அனைத்தும் நடந்தேறின. வர்ணாஸ்ரமம் தலையெடுத்து ஆண்டான் அடிமை உறவுகள் கட்டமைக்கப்பட்டன; கட்டியெழுப்பப்பட்டன.
அந்தக் காலகட்டத்திலேயே சூத்திரர்கள் போர்க்கொடி தூக்கியிருந்தால் அவர்களது மத உரிமை நிலைநாட்டப்பட்டு இருந்திருக்கலாம். சனாதன தர்மம் கிறித்துவ மதம்போல் வேறு உருவெடுத்திருக்கலாம். சூத்திரர்கள் அரசியல் அதிகாரங்கள் நிலைநாட்டப்பட்டு தேசிய அளவில் அவர்கள் வேறுவித மக்கள் கூட்டமாக வெற்றிகரமாக மாறியிருந்திருக்கலாம்.

No comments:

Post a Comment