*
உங்கள் நூலான 'My Road to Atheism from Christianity' பற்றிய என் திறனாய்வு / எண்ணங்கள்.
அன்புள்ள சாம் தாத்தா,
காலம் தாழ்த்தி அனுப்பியுள்ளேன்; மன்னிக்கவும்.
நூலைப் பற்றிச் சொல்வதற்கு முன் ஒரு வார்த்தை; உங்கள் நூலை எங்களுக்காகச் சமர்ப்பித்தமைக்கு மிக்க நன்றி.
நூலை எழுதும்போது எங்களை நினைவில் வைத்திருந்தமைக்காக மகிழ்ச்சி; ஆனால் என் அம்மா இப்படியெல்லாம் நினைத்து மகிழ்ச்சியடைய மாட்டார்கள் என்றே நினைக்கின்றேன்.
உங்கள் நூல் மெல்ல, மென்மையாக ஆரம்பிக்கும் என்று நினைத்து வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் நீங்கள் மதங்களை அடியோடு மறுத்து முதல் பக்கங்களிலிருந்தே மிகத் திண்மையோடும், வேகத்தோடும் உங்கள் எதிர்ப்பைக் காண்பித்திருக்கிறீர்கள் . மேல்பூச்சாக, எதையும் பூசி மெழுகாமல் இந்த நேரடித் தாக்குதல் என் முழு மரியாதைக்குரியது.
இளம் வயதிலேயே இறை மறுப்பாளர்களாக மாறுபவர்களின் பகுத்தறிவு போலல்லாமல், நீங்கள் உங்கள் முதிர்ந்த வயதில் மாறியது மிகவும் வித்தியாசமான ஒன்று. இதன் மூலம் உங்கள் வாழ்வின் ஒரு பெரும் பகுதியை நான் புரிந்து கொள்ள முடிந்தது.
முதல் இயலிலேயே எவ்வாறு குழந்தைப் பருவத்திலேயே நம் சூழலிலிருந்தே அனைத்தையும் – அது சரியானதோ, தவறானதோ – உள்வாங்கிக் கொள்கிறோம் என்பதை கூறியுள்ளீர்கள். (இந்த இரண்டில் ‘நம்பிக்கை’ எந்தப் பக்கம் உள்ளது என்பதை நான் விவாதிக்கப் போவதில்லை.) ஆயினும் எவ்வாறு சூழல் நம்மோடு இணைந்து கொள்கிறது என்பதை என்னால் எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
“எவ்வாறு நூற்றுக் கணக்கான ... ஆயிரக் கணக்கான நம்பிக்கையாளர்கள் தங்கள் உயிர்களேயே, முழு வாழ்க்கையையே அர்ப்பணித்த ஒன்றை நானெப்படி கேள்விக்குட்படுத்த முடியும்? அப்படி கேள்வி எழுப்பினாலே அது ஒரு அவர்களுக்கு எதிரான ஒன்றாக அல்லவா தோன்றுகிறது. இதுபோன்ற எண்ணங்களினால் தான் அனைத்துக் குழந்தைகளும் தங்களின் பெற்றோர் கற்றுக் கொடுத்த வழியிலேயே செல்கிறார்கள்.
ஒரு வேளை ஞாயிற்றுக் கிழமைகளில் பங்கெடுக்கும் குழந்தைகள், விவிலிய வகுப்புகளுக்குப் பிறகு தங்கள் பெற்றோரிடம் ஏனிப்படி ஞாயிற்றுக் கிழமைகளில் உயிரை வாங்குகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்புவதே அவர்களின் முதல் போர்க்குரலாக இருக்கலாம்.
ஆனால் நான் என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் போது இது போன்ற ஒரு கட்டுப்பாடான சூழல் என் வாழ்க்கையை நான் செம்மையாக நடத்துவதற்கு மிக அதிகமாக உதவியுள்ளது.
இப்படிச் சொல்வதினால், நான் மதங்கள் தவறானவை; ஆனால் அது கற்றுத் தரும் பாடங்கள் சரியானவை என்று சொல்வதாக எடுத்துக் கொள்ள முடியாது. பதிலாக, நான் என் வாழ்க்கையையும், என் வளர்ச்சியையும் இறைநம்பிக்கை மூலம் சீர்படுத்தி வந்துள்ளேன் என்பதை நிச்சயமாக உணர முடிகிறது; உறுதியாகக் கூற முடிகிறது.
அது மட்டுமின்றி, எனது பெற்றோர் என் சிறுவயதிலிருந்தே இறைவனின் நிழல் என் மீதிருப்பதை மகிழ்ச்சியோடு பார்த்த வேளைகளை நினைத்துப் பார்க்கிறேன். அதனால் என் பெற்றோர் பெற்ற மகிழ்ச்சியை நானும் உணர்ந்துள்ளேன். அந்த மகிழ்ச்சி என்னைக் காப்பாற்றி வரும் கடவுளுக்கானதா, அல்லது, என் பெற்றோரின் மகிழ்ச்சிக்கானதா ...?
வீட்டை விட்டுக் கிளம்பும் ஒவ்வொரு வேளையும் என் அம்மா என் நெற்றியில் புனித நீரை வைத்து ஆசிர்வதித்து அனுப்பும் வேளையில் அவர்கள் மனதில் எழும் திருப்தியும், அது என்னைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையும் அவர்கள் மனதில் நிச்சயம் எழுந்திருக்கும். அது உண்மைதானா? … எதுவாயினும், இந்த உணர்வுகள் நிச்சயமாக மிக மிக உண்மையானவை. (ஆனால் அதே போல் மதமும் அவ்வாறு உண்மையானது தான் என்றும் என்னால் சொல்ல முடியாது.)
மதங்களை வைத்து வீட்டில் குடும்பம் அனைவரும் ஒன்று கூடியிருக்கும் போது அந்த நிகழ்வு எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லையா? இல்லை .. தோன்றியது. ஆனால் அவைகளில் மதம் இல்லாமலிருந்தால் ... ஒரு வேளை அவ்வாறு இன்னும் பெரிதாகத் தெரிந்திருக்கலாம்.
திரும்பிப் பார்க்கும்போது, ஒவ்வொரு முறையும் மதங்களோடு இணைத்துப் பார்க்கும் போது, என்னை அப்போது சூழ்ந்திருக்கும் உறவுகளும், நண்பர்களும் எனக்கு முக்கியமானவர்களாகப் பட்டனர். அப்போதெல்லாம் இறையுணர்வு மேலோங்கி நிற்கவில்லை என்ற அளவில் நானொரு தீவிர நம்பிக்கையாளனாக இல்லை. நீங்கள் சிறுவயதில் இருந்தது போல் நான் அத்தனை தீவிரமான நம்பிக்கையாளன் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன்.
மதங்கள் இல்லாத ஒரு வாழ்வு ... அது நன்றாக இருக்குமோ என்று எண்ணிப் பார்க்கிறேன். மிகவும் கடினமான கேள்வி அது. எதிர்காலத்தில் அப்படி ஒரு நிலை வருமோ? .. தெரியவில்லை ... வரலாம். நூறாண்டுகள் கழித்து அப்போது வாழும் மக்கள் நாம் இப்போது மதத்தின் பெயரால் செய்து வருபவைகளை நினைத்து ஏளனமாகச் சிரிக்கலாம். ஆனால் மனித மனதில் எப்போதும் நாம் கடந்து வந்த காலத்தைப் பற்றிய் தேடல் இருந்து கொண்டே இருக்கும். அந்தக் காரணத்தால், மதங்களிலிருந்து நாம் தப்பிக்கவே முடியாது. மக்கள் எப்போதும் நமது வேர்களைத் தேடிக் கொண்டேயிருப்பவர்கள் தான்.
அனைத்து முடிவுகளும் பகுத்தறிவினாலும், ஆழ்ந்த அறிவார்ந்த சிந்தனகளாலும் மட்டுமே எடுக்கப்படும் ஓர் அறிவார்ந்த உலகம் உருவாகலாம். ஆனால் அப்படிப்பட்ட உலகில் மதங்கள் தரக்கூடிய கழிவிரக்கம் இல்லாமல் அது வறண்டு விடும். ஏனெனில் மதங்கள் நம்மை கழிவிரக்கம் கொண்டவர்களாக மாற்றி விடும் என்பதையும் விட, அவைகள் நாம் கழிவிரக்கம் கொள்வதற்கான வழிகளைக் காண்பிக்கன்றன. (ஆயினும் பல நேரங்களில் மதங்கள் இதற்கு நேர் எதிர்மறையான உணர்வுகளையும் கிளப்பக் கூடியவைதான்.)
ஒருவேளை நான் இதுவரை பேசியது உங்களுக்குச் சில இடங்களில் சுய முரணாகத் தோன்றலாம் – ஒன்றைச் சொல்லி விட்டு உடனே அதற்கான எதிர்மறைக் கருத்தைக் கூறியிருக்கலாம். நான் இன்னும் ஓர் உறுதியான முடிவெடுக்காமல் இருக்கிறேன்; ஒரு வேளை அப்படியே எப்போதும் இருந்து கொள்ளலாமென நினைக்கின்றேனோ? … அப்படியும் இருக்கலாம்.
ஆனால் ஒன்று. உங்கள் புத்தகம் என்னை இன்னும் ஆழமாக நினைக்க வைத்திருக்கிறது. உங்களுக்கு ஒரு Hitchens கிடைத்தார்; உங்களை ஆழமாக நினைக்க வைத்தார்; உங்கள் “நம்பிக்கையை” இறை மறுப்பாக மாற்றினார். எனக்கு ...?
இந்தத் திறனாய்வு உண்மைகளுக்கு எதிராக வேற்று உண்மைகளைக் கொடுப்பது போன்ற முயற்சியல்ல; நம்பிக்கைகளுக்கு எதிரான உங்கள் கருத்துகளில், விவாதங்களில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டும் நோக்கமும் இல்லை. பதிலாக, உங்கள் வாழ்வின் நிகழ்வுகளை என் வாழ்க்கையோடு ஒத்திட்டுப் பார்க்கும் ஆசையே இந்தத் திறனாய்வு.
இறுதியாக, மதங்களை எதிர்த்துப் போராட வேண்டியதில்லை; மாற்றாக, நமக்கு நாமே தேர்ந்தெடுத்துக் கொள்வது – நம்பும் பக்கம் இருக்கவா; இல்லை, எதிர்ப் பக்கம் இருப்பதா? என்பதை நம் மனதிற்குள் நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும். மனித மனம் தோற்பதை எப்போதும் ஒப்புக் கொள்வதில்லை. இறை மறுப்போ அனைத்து மதங்களுக்கும் எதிரானது. இதனால் எதிரில் உள்ள ஒருவனும் தோல்வியை விரும்புவதில்லை; ஏனெனில் அவன் தோற்றால் அவனது அடையாளமும் முற்றாக அழிக்கப்பட்டு விடும். மனித மனம் – ஈகோ – மிகவும் அனைத்து மதங்களையும் விட ஊதிப் பெரிதானது.
-----
குறிப்பு:
ஜெப்ரி ஆர்ச்சரின் சிறுகதைத் தொகுப்பை ஒரே மூச்சில் சமீபத்தில் வாசித்தது போல் உங்கள் நூலையும் அவ்வாறே வாசித்து முடித்தேன். எடுத்தேன் ... படித்தேன் ... முடித்தேன். கடந்த சில ஆண்டுகளில் இவ்வாறாக விரைவாகப் படித்த இரு நூல்களில் உங்களுடையதும் ஒன்று.
குறிப்பு:
நூலின் தலைப்பு எனக்கு மிகவும் பிடித்தது. இறைமறுப்பு தேடிக் கண்டடைய வேண்டிய ஒன்று; சொந்த முயற்சி எடுத்து அடைய வேண்டிய ஒன்று. ஒரு மதம் (Christianity) பிடிக்காததால் அப்படியே மாறிக் கொள்ளலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம் என்பதல்ல.
உங்கள் நூலை வாசிக்கும் அனுபவத்தைக்கொடுத்தமைக்கு நன்றி. இன்னும் உங்களின் அதிக நூல்களை வாசிக்கக் காத்திருக்கிறேன்.
2 comments:
உங்கள் பேரனின் நூல் விமர்சனம் பிரமிக்கச் செய்கிறது. ஆழ்ந்து சிந்தித்து எழுதப்பட்ட கட்டுரை. "மனித மனம் எப்போதும் தோல்வியை ஒப்புக்கொள்ளாது". எனவே இந்தவொரு சிந்தனை மாற்றமும் ஏற்படாமல் போகிறது.. என்று மிக அழகாகக் கூறியுள்ளான். என்னவொரு மனந்திறந்த பேச்சு! என்னுடைய பாராட்டுதலைத் தெரிவியுங்கள்.
தாத்தா எவ்வழி!
பேரன் அவ்வழி!
I mean தெளிந்த சிந்தனையில்.
கடத்தி விட்டேன் -- உங்கள் வரிகளை!
Post a Comment