இப்போதைய மோடி ஆட்சி, நெருக்கடிக் காலத்தை(1975-77)விட மிக மோசமான சர்வாதிகார ஆட்சியாக உள்ளது. ஆனால், சூடேறிக் கொண்டிருக்கும் தண்ணீருக்குள் உள்ள தவளைகளைப் போல, அதன் தீவிர தன்மை நாம் உணர்வதில்லை.
பீமா கோரேகான் வழக்கையும் அதில் கைது செய்யப்பட்டவர்களின் வாழ்க்கைக் கதைகளையும் படித்தால் இதன் தீவிரத் தன்மை உணர முடியலாம். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் சாதாரணமானவர்கள் அல்ல. நாட்டின் புகழ்பெற்ற அறிவாளிகள், சமூகத் தொண்டிற்கு வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அவர்களும் சரி, மற்றவர்களும் சரி, தங்களுக்கு இப்படி ஒருநிலை நேராது எனக் கருதி இருந்தனர். ஆனால் மோடி ஆட்சிக் காலத்தில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.
உடல் நலம் பாதித்த நிலையில் தண்ணீரை உறிஞ்சிக் குடிக்க ஸ்ட்ரா கேட்டு, அளிக்கப்படாத நிலையில், மரணமடைந்த சமூகநலத் தொண்டர் ஸ்டேன் சாமி,
90 சதவீதம் மாற்றுத் திறனாளியான, சிறையில் வதைப்பட்டதன் காரணமாக, 10 ஆண்டுகள் விசாரணைக் கைதியாகவே சிறையில் வாடி, விடுதலையடைந்த கொஞ்ச காலத்தில் மரணமடைந்த, மனித உரிமைப் போராளி பேராசிரியர் சாய்பாபா,
அம்பேத்கரின் பேத்தியை மணந்த, பேராசிரியர் ஆனந்த் தெல்டும்டே, இப்படி பலரின் கதை இந்தப் புத்தகத்தில் உள்ளது.
நக்சல் / மாவோயிஸ்ட் ஒழிப்பு என்கிற பெயரில் மோடி அரசாங்கம் நாடு முழுவதும் மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளும் மனித தன்மையற்றவை; சட்ட விரோதமானவை; அடிப்படை ஆதாரங்கள் ஏதுமில்லாதவை. இதனை இந்தப் புத்தகத்தை வாசிப்பதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
பீமா கொரேகான் வழக்குக் கைதிகள் போன்று, நாட்டில் எண்ணற்ற அரசியல் கைதிகள் ஊபா சட்டத்தில் கைதாகி, கேள்விகள் அற்று சிறை வாடி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ்.-பாஜக கும்பலுக்கு ஆபத்தாக உள்ள சமூகச் செயல்பாட்டாளர்கள், சிறுபான்மைச் சமூகச் செயல் வீரர்கள் முதலானவர்களுக்கு ஊபா சட்டம். மைய நீரோட்ட அரசியல்வாதிகளுக்கு அமலாக்கத் துறை. இதுதான் இன்றைய நிலை.
இதைக் காண மறுத்து, எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கின்றது என, நெருப்புக் கோழிகளைப் போல, மண்ணில் தலைகளைப் புதைத்துக் கொள்ள விரும்புகிறோம்.
+++
நாம் இன்று உள்ள நிலைமை, ஆழ்ந்த சித்திரத்தை இந்நூல் வழங்கலாம். இந்நூலை, பேராசிரியர் சாம் ஜார்ஜ் (தருமி) தமிழாக்கம் செய்துள்ள்ளர்.
