Monday, September 23, 2013

467. என் குட்டையைக் குழப்பியவர்கள் ... 1

*

"You are a deadly perfectionist".
"இல்ல'ண்ணே!"
"ஏம்'பா இல்லன்னு சொல்றே?"
"என்னைப் பொருத்தவரை perfectionist அப்டின்னா, அவர் ராத்திரி சரியா 12 மணிக்கு எழுந்திருச்சி.. டெய்லி கேலண்டரிலிருந்து அன்றைய தேதியைக் கிழிக்கணும்'ணே! நான் அந்த அளவு perfectionist இல்லை".
"அடப் பாவி! அப்படியும் ஒண்ணு இருக்கா?"


* * * * * * * *

(casabianca  கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.)


Casabianca கதைல வர்ர பையன் மாதிரி மடையனாக இருக்கக்கூடாது.
என்ன கதைண்ணே அது?
கதை சொன்னேன்.
ஏ'ண்ணே, அந்த பையன் செஞ்சதுதான் சரி'ண்ணே.
இல்லப்பா ... பையனோட அப்பா கூட அந்தக் களேபரத்தில் தப்பியிருக்கலாம். இப்படி நெருப்பு எரியும்போது தப்பிக்க வேண்டாமா?
இல்லண்ணே .. அப்பா சொன்னதை அப்படியே கடைப்பிடிக்கிறதுதான் சரி.
இல்லப்பா ..  புத்திசாலித்தனம் அப்டின்னு ஒண்ணு இருக்கு. அதையும் நாம பயன்படுத்தணும். அப்பா சொல்லிட்டார் என்பதற்காக அப்படியே 'ஒழுகக் கூடாது'. கண்மூடித்தனமா இருக்கக் கூடாதுல்ல ..
இல்லண்ணே  ... என் மகன் அந்தப் பையன் மாதிரி தாண்ணே இருக்கணும்.
பாவம் உன் மகன்.

*****************************

இன்னைக்கி காலேஜ் வர்ர வழியில ஒரு சண்டை.
ஏண்ணே?
ரெண்டு பேரு ரோட்டை மறிச்சி நின்னுக்கிட்டு கதையடிச்சிக்கிட்டு இருந்தாங்க. ஓரமா நிக்கக் கூடாதான்னு கேட்டேன். பேச்சு வளர்ந்திருச்சி.
அதெல்லாம் நமக்கு எதுக்குண்ணே?
ஏம்'பா .. civic sense அப்டின்னு ஒண்ணு இருக்குல்ல?
அதெல்லாம் பார்க்க முடியாதுண்ணே.
அப்போ நீ இந்த மாதிரி விஷயங்களைக் கண்டுக்க மாட்டியா?
இல்லேண்ணே.. பேசாம ஒதுங்கி வந்திருவேன்.
கண்டுக்க மாட்டியா?
எதுக்குண்ணே ..? அவனுக யாரோ என்னவோ ... நம்ம வழியைப் பார்த்து நாம ஒதுங்கி வந்திரணும்ணே ...
இதையெல்லாம் பார்த்தா உனக்குக் கோபம் வராதா?
வந்தா என்ன லாபம்? BP மட்டும்தான் ஏறும்! 
செல் போன் பேசிக்கிட்டு வண்டி ஓட்டுறவங்களைக் கண்டாலே எனக்குக்   கோபமா வருதே ..
தப்பு'ண்ணே. அவன் போன் .. அவன் பேசிக்கிட்டு போறான். உங்களுக்கு ஏன் கோபம் வருது?
உன்னிட்ட இருந்து நிறைய படிக்கணுமோ!?

----------------------------------
நம்ம காலேஜ்ல இத்தனைப் பிரச்சனை. இதில நியாயத்தின் பக்கம்தானே நாம நிக்கணும்.
நம்ம philosophy வேற'ண்ணே.
என்னப்பா அது?
அண்ணே! ஒண்ணு, எதுலயும் நாம முதல் ஆளா இருக்கணும்; இல்லாட்டி முதல் ஆளோடு நின்னுடணும்.
இது சரியில்லை'ப்பா.
அப்பதான்  வாழ்க்கையை நல்லா வாழ முடியும்.
நியாயத்துக்குப் பக்கம் நிக்கிறது ...?
நமக்கு வாழ்க்கை சுகமா நடக்கணும். அதுக்கு இதுதான் வழி'ண்ணே.
இல்லையே ..உன்ன மாதிரி ஆளுகளுக்கு TIME SERVER அப்டின்னு பேரு. யாருக்கும் - தனக்கும் கூட - அவங்களால் உண்மையா இருக்க முடியாது.
ஆனா, இதுலதான் நம்ம பொழைப்பு நல்லா நடக்கும்'ண்ணே ...?

--------------------------


Sunday, September 22, 2013

682. என்று வரும் மதங்களைத் தாண்டும் அந்தச் சமூகம்?



 *
இன்றைய இந்துவில் வந்த ஒரு கட்டுரையின் தமிழாக்கம். பிடித்த கருத்தாக இருந்தது. சிறிது தமிழ்ப்படுத்தி சில பகுதிகளைக் கொடுத்துள்ளேன்.


*


 http://www.thehindu.com/opinion/open-page/lets-aim-for-a-posttheistic-society/article5154603.ece  


Let’s aim for a post-theistic society 

மேலெழுந்தவாரியாகப் பார்த்தாலே மனித வரலாற்றில் மதங்களுக்காக நடந்த போர்களே அதிகம்.

மதங்களின் பிறப்பு இனம் தெரியாத அச்சத்தில் எழுந்தது. ஆனால் இன்றைய அறிவியல், இயற்கை மீது மனிதனுக்கு இருந்த பல அச்சங்களைப் போக்கி விட்டன. அந்த அச்சங்கள் இன்று பொருளற்றுப் போய்விட்டன.

வாழ்வில் நம்முடைய ஒழுக்கங்கள் மதங்களிலிருந்து பிறக்கவில்லை; ஆனால் நம்முள் குடியிருக்கும் மனித நேயத்திலிருந்தும், அடுத்தவரின் துயரைக் கண்டு துன்புறும் நமது மனத்திலிருந்தும் தான் பிறக்கின்றன. இந்த நேய உணர்வு எல்லா உயிரினங்களுக்கும் பொதுவல்ல.

 ’மதங்கள் என்பவை மனிதத்தின் உயர்நிலைக்கு எதிரானவை’ என்கிறார் நோபல் பரிசு பெற்ற ஸ்டீவன் வெய்ன்பெர்க்.

இயற்பியல் நோபல் பரிசை வெய்ன்பெர்க்கோடு இணைந்து பெற்றவர் பாகிஸ்தானின் அப்துஸ் சலாம் என்பவர். இவர் மத்திய கீழ்த்திசை நாடுகளில் கல்வியை மேம்படுத்த முயன்றார். ஆனால் அந்நாட்டுத் தலைவர்கள் இவருக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. ஏனெனில் அறிவியல் மத நம்பிக்கைகளைக் குலைத்துவிடும் என்று அவர்கள் நம்பினார்கள்.

மதங்களைத் தாங்கிப் பிடிப்போர் உலகில் நாம் காணும் துன்பங்களும் துயரங்களும் கடவுள் தனக்குப் பிடித்தோரின் நம்பிக்கையைச் சோதிக்கவே செய்கிறார் என்று சொல்வதுண்டு. கான்சரில் அவதியுறும் ஒரு சின்னக் குழந்தையின் பெற்றோரிடம் இதை அவர்கள் சொல்லிப் பார்க்க வேண்டும். கடவுளுக்கு இப்படிப்பட்ட துன்பம் தரும் பெரும் சக்தியிருந்தால் அந்தக் கடவுள் மிக மிகக் கொடூரமானது.

ஐன்ஸ்டீன் கடவுள் நம்பிக்கை என்பது முட்டாள்தனமான மூடநம்பிக்கை என்றார்.

தத்துவ மேதை காலின் மேக்கின் கடவுள் நம்பிக்கையற்றவர்களை மூன்று வகையான நாத்திகர்கள் என்று வரையறுக்கிறார்.
atheists – தங்கள் கருத்துகளை மற்றவர்கள் ஒத்துக் கொள்கிறார்களா என்றெல்லாம் கவலைப் படாதவர்கள்;
anti-theists – மதங்களை அதன் தீமைகளுக்காக வெறுத்து, அவைகளை எதிர்ப்பவர்கள்.
ஆனால் எதிர்காலம் POST-THEISTIC மக்களால் நிரப்ப்ப்படும். இவர்களுக்கு மதங்களே ஒரு பொருட்டல்ல.

 உலகத்தை அறிவால வெல்ல வேண்டும். அதைத் தவிர்த்து அடிமைத் தனமாக அச்சத்தினால் கட்டுப்பட்டுக் கிடப்பது தவறு.

கடவுள் என்ற கருத்தாக்கம் ஒரு தனிமனிதனுக்கு உகந்ததல்ல. நல்லதொரு உலகத்திற்கு அறிவு, இரக்கம், தைரியம் போன்றவை தேவை; பழையனவற்றைக் கட்டிப்பிடித்துத் தொங்குவதோ, என்றோ யாரோ சொன்னவைகளைப் பற்றிக் கொண்டு நம் அறிவை அடமானம் வைப்பதோ தேவையில்லாதது.


*

(The writer is on the faculty of the Department of Physics, Indian Institute of Science, Bangalore. Email: profvasant@gmail.com)


*

Friday, September 20, 2013

681. தருமி பக்கம்: IMPORTED FROM NORTH INDIA







*
அதீதம் இணைய இதழின் தருமி பக்கத்தில் வந்த கட்டுரையின் மறு பதிவு:

*



மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டோம். தனித்தனி மாகாணங்கள். ஒரு மாகாணத்திலிருந்து அடுத்த மாகாணம் போனால் வாழ்க்கை நிறைய வேற்றுமைகளோடு இருக்கின்றன. மொழி, பழக்க வழக்கங்கள் எல்லாம் புதிது. உள்நாட்டுக்குள்ளே இருக்கும்போதே அயல் நாட்டில் இருப்பது போன்ற உணர்வு. அடுத்த மாகாணம் - ஆந்திரா. இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை போய் முழுவதுமாக அந்நியப்பட்டு நின்றேன். அங்கே பேசும் தெலுங்கும், இந்தியும் புரியவில்லை. பேசிய ‘சில்லறை ஆங்கிலம்’ அங்கு சுத்தமாகப் புறக்கணிக்கப்பட்டது. ‘ராஷ்ட்ர பாஷா’ இருந்தால் தான் பேசுவோம் என்ற முரட்டுத்தனத்தோடு மக்கள் இருந்ததைப் பார்த்தேன். அடுத்த மாநிலத்திலேயே இப்படி!

நல்ல வேளை .. கேரளா செல்லும் போது இந்த உணர்வு அதிகம் இல்லை. பெண்களூரிலும் கொஞ்சம் பிழைத்துக் கொண்டேன். இந்த வேறுபாடுகளின் நடுவே சில பழக்க வழக்கங்கள் இங்கும் அங்கும் சென்று விடுகின்றன. நம் ஊர் இட்லி, தோசை, சாம்பார் கொஞ்சம் அங்கு பெயரளவில் அடி படுகிறது. ஆனாலும் மக்கள் மொத்தமாக இட்லி தோசைப் பக்கம் விழுந்து விடவில்லை என்றே நினைக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் சாப்பிட ரெடி என்பது மாதிரி சிறிது பரவியிருக்கிறது. ஆனால் வடக்கிலிருந்து பெரும் பழக்கங்கள் நம்மை சுத்தமாக அடிமைப் படுத்தி விட்டன என்று நினைக்கிறேன்.

முதல் மாற்றம் - உடை மாற்றம். சேலையும், தாவணியும் போய் சூடிதார் வந்து விட்டது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு நல்ல மாற்றம். எல்லா வயதினருக்கும் எல்லா ‘சைஸ்’ ஆட்களுக்கும் பொருத்தமாக இருக்கிறது. விலையும் நம் சேலைகளை விட குறைவே. இந்த சூடிதார் வரும்போது பலர் வெறுப்புக் கொடி தூக்கியது இன்றும் நினைவில் இருக்கிறது. ந்ண்பர் ஒருவர் கல்லூரியில் பேராசிரியர். முதுகலை வகுப்பில் ஒரு மாணவி சூடிதாரில் வந்ததும் நண்பர் போர்க்கொடி தூக்கி விட்டார். சூடிதாரில் வகுப்புக்கு யாரும் வந்தால் நான் வகுப்பெடுக்க மாட்டேன் என்று ஒரு ’போராட்டம்’ ஆரம்பித்தார். வெற்றியும் பெற்றார்.



அவரோடு ஒரு பட்டறைக்குச் சென்ற போது நான் டி-ஷர்ட் போட்டு சென்றிருந்தேன். அதை அவர் கண்டிக்க, அன்று இரவில் நண்பர்களோடு விவாதங்கள் தொடர்ந்தன. சூடிதார் நிகழ்ச்சியை அவர் சொல்லி தன் வெற்றி பற்றியும் எங்களிடம் சொன்னார். அவருக்கு சூடிதார் அவலட்சணமாகத் தோன்றியது. எனக்கோ அது angelic dress! கடைசியில் நான் அவரின் மகளின் வயதைக் கேட்டேன். என் சின்ன மகள் வயது ... நாலைந்தாவது வகுப்பு. அப்போது அவரிடன் சொன்னேன் .. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து அவர் மகளே சூடிதார் தான் கேட்பாள்; நீங்களும் வாங்கிக் கொடுப்பீர்கள்  என்றேன். அப்படியே நடந்தது. ஆனால் இன்றும் கூட சேலை தான் எல்லா இடங்களிலும் ’செல்லுபடி’யாகின்றது. முக்கியமாக கல்லூரிப் பேராசிரியைகள் பாவம் இன்னும் சேலையில் தான் செல்ல வேண்டியதுள்ளது போலும் - even in co-ed colleges. பாவம் .. அவர்களும் சூடிதாருக்கு வந்தால் எல்லோருக்கும் நல்லது. ஆனால் பலருக்கு இதில் இன்னும் விருப்பமில்லை என்பதும் தெரிகிறது. எப்படியோ வடக்கின் உடை இப்போது நம் உடையாக மாறிப் போய் விட்டது.

ஆனால், இப்போது அமெரிக்கா நோக்கி மக்கள் பயணப்பட்டு விட்டார்கள். ஜீன்ஸ், ஷார்ட் டாப்ஸ் போடுவது நன்றாகவே இருக்கிறது; மக்களுக்கு வசதியும் அதிகம். financially quite good!! ஆனால் அடுத்த படி எது என்று நினைத்தால் கொஞ்சம் பயம் தான். சிங்கப்பூரில் பார்த்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன்!

ஆக, சூடிதார் நமது உடையாகவும் மாறி விட்டது. நல்லது. ஆனால் அடுத்த ஒரு கெட்ட பழக்கமும் குடியேறிவிட்டது.
பான் / பாக்கு/ ஜர்தா ... என்று பல பெயர்களில் வந்தது இந்தக் கெட்ட பழக்கம். இதனோடு சேர்ந்த இன்னொரு கெட்ட பழக்கமும் சேர்ந்தே வந்து விட்டது. ஒரு சுவர்,  சுவரின் மூலை கிடைத்து விடக் கூடாது. அங்கெல்லாம் சிகப்பு வண்ணத்தில் துப்பி .... கடவுளே! ... காணவே கண்கூசும் அளவிற்கு அலங்கோலம். சுவர்கள் மட்டுமா கெட்டு நிற்கின்றன. நுரையீரலுமல்லவா ..! சமீபத்தில் வந்த ஒரு செய்தி: தமிழ்நாட்டில் பாக்கிற்கு அடிமையாகிப் பலருக்கு கான்சர் வந்துள்ளதாக அச்செய்தி சொன்னது.

அடுத்தப் பிரச்சனை பெரும் தலைவலி கொடுத்து விட்டது. இதற்குப் பதில் தேட இந்து மதம் என்றால் என்ன என்ற பெரும் கேள்வியையே அலச வேண்டியதாகிறது. சமீபத்தில் முர்ளி மனோகர் சொன்னது போல் இந்தியக் கிறித்துவர்கள் 'கிறிஸ்தி இந்துக்கள்' என்றும், இஸ்லாமியர்கள் 'அகமதிய இந்துக்கள்' என்றும் பெயரிடப்படும் நிலைமைக்கு வந்தாயிற்று. எது இந்து மதம்? யார் யாரெல்லாம் இந்துக்கள் என்ற அடிப்படைக் கேள்விக்குச் செல்லும்படி ஆகின்றது. ஏற்கெனவே என் ‘மதங்கள்’ என்ற தலைப்பின் கீழ் பல இடங்களில் சொல்லியுள்ளேன். ( ////முஸ்லிமா இல்லாதவன், கிறித்தவனா இல்லாதவன் எல்லோரும் இந்துன்னு வைப்பதால் வரும் குழப்பம் இது...மற்றவர்களையும் 'ஒரு வசதி'க்காக 'இந்து'வாக வைத்திருப்பதை வைத்து இதில் தவறான அனுமானத்துக்கு அடிகோலுவது முறையில்லை. //இதை நான் முழுமையாக ஒத்துக் கொள்கிறேன். தங்கமணியின் பதிவில் இக்கருத்தையும் வைத்துள்ளேன். இந்தக் கருத்துக்காகத்தான் நான் காஞ்சையாவை மேற்கோளிட்டிருந்தேன்.//)  மீண்டும் அதே கருத்தை இங்கும் சொல்ல வேண்டியதுள்ளது. இதற்கு எதிர்க் கருத்தாக //Ekam Sat, viprah bahutha vadanthi என்ற உபனிட உண்மையை ஏற்ற அனைத்து மதமும் இந்து மதமே. அதை உணர மறுக்கும்...// என்ற விவாதமும் உண்டு.

ஆனால் ஆங்கிலேயர் நடத்திய மக்கள் கணக்கெடுப்பில் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த மத மக்களைத் தவிர ஏனையோர் அனைவருக்கும் ஒரே பெயராக ‘இந்து’ என்ற பெயர் வந்ததோ, ’இந்து’ என்ற சொல்லே இடத்தைக் குறிக்க வந்த சொல் என்றெல்லாம் விளக்கங்கள் கொடுத்தாலும் விவாதங்கள் என்னவோ தொடர்கின்றன.  இன்னும் எங்கள் கிராமத்து பக்கங்களில் வாழ்வோருக்கு ’பெரிய தெய்வங்கள்’ பெரும் பொருட்டல்ல; குல தெய்வங்களும், முன்னோருமே (சிறு) தெய்வங்களாக உள்ளார்கள் என்பதே இன்னுமொரு சான்று.

கதை இப்படியிருக்க ஆரிய / பிராமண / வைதீக / புராண இந்து தெய்வங்கள் இன்று வேரூன்றி விட்டன. புத்த மதம், ஜைன மதங்களை உண்டு செரித்த பின் இப்போது மீதியிருப்பது இந்து மதம் மட்டுமே. இந்த மதங்களின் தாக்கத்தின் தொடராக பிள்ளையார் வந்து சேர்ந்து விட்டார். ஆதி கடவுள் என்ற பெயரில் நடுவில் இங்கு வந்தவரே பிள்ளையார். பிள்ளையார் வெறும் பிள்ளையாராக மட்டும் வந்திருந்தால் பிரச்சனையில்லை. ஆனால் இப்போது பிள்ளையார் சதுர்த்தி என்ற விழா ஒன்று பெரும் பிரச்சனையாக வளர்ந்துள்ளது. ’எங்களது சாமியைக் கும்பிடுவது உனக்கேன் எறிகிறது?’ என்றும் ஒரு இந்து கேட்கலாம். ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பிள்ளையார் சதுர்த்தி இப்போதும் பரிணாமம் ஏதும் இல்லாமல் இருந்திருந்தால் இந்தக் கேள்விக்குப் பிரச்சனையில்லை. ஆனால் விழா என்ற பெயரில் ஆண்டு தோறும் ஒரு பிரச்சனை எதற்கு என்பதுவே இப்போதைய கேள்வி. வட இந்தியர் வளர்த்து விட்ட பிள்ளையார் இன்று தென்னாட்டிலும் வீங்கி மதத் தீவரவாதத்தின் ஒரு அங்கமாக மாறிவிட்டார்.

பல ‘குரு பூஜைகள்’ .. சில கலவரங்கள், குத்து, வெட்டு. இதோடு இப்போது பிள்ளையார் சதுர்த்தி ஆட்டங்கள். சாமியும் சாதியும் நம் தலையெழுத்துகள். யார் தான் அவைகளை அழித்து, திருத்தி எழுதிவிட முடியும் ??

இதோடு இன்னொரு கேள்வி: வடக்குக் கலாச்சாரம் இங்கே தென்னக மக்களிடம் ஊடுற முடிகிறது. வந்தோரை வாழவைக்கும் தென்னகம்! ஆனால் நமது கலாச்சாரங்கள் அங்கே எதுவும் அப்படி  ஊடுற முடியவில்லையே. ஏன்?



*

Monday, September 16, 2013

680. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்







*



அமெரிக்காவில் பச்சைக் கலரில் பளபளக்கும் sign boards பார்க்கும் போது, இங்கல்லாம் போர்டு கூட எம்புட்டு அழகா இருக்குன்னு நினச்ச காலம் உண்டு. இப்போ நாமளும் ‘வல்லரசா பாதிக்குப் பாதி’ ஆகிட்டோமா ... நம்ம ஊர்லயும் அந்த மாதிரி போர்டுகள் வந்தாச்சு. நல்லாத்தான் இருக்கு. ஆனால், இதில் ‘பிரதான சாலை’ அப்டின்னு பெரிய சாலைகளில் போர்டு வைத்திருக்கிறார்கள். நானும் தமிழ் வளர்த்த மாமதுரையில் மட்டும் தான் இப்படி ஒரு போர்டு வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். தமிழ் வளர்த்த நம்ம ஊரில் இப்படி பிரதான சாலைன்னு எழுதியிருக்காங்களேன்னு வருந்தினேன். பதிவர் சந்திப்புக்குச் சென்னை வந்த போது தான் சென்னையிலும் இதே பெயர்ப் பலகைகளைப் பார்த்தேன். இது மாநில அரசின் கைவண்ணம் என்று புரிந்தது. எதுக்கு ’பிரதான’ சாலைன்னு எழுதணும்; பெருஞ்சாலை ... அட .. முக்கிய சாலைன்னு கூட எழுதியிருக்கலாமே! இப்படி ஒரு ’பிரதானம்’ சாலைகளுக்குத் தேவையான்னு ஒரு கேள்வி. (தமிழ் வாழ்க.)

சோனாப்ரியா அப்டின்னு மரியான் படத்தில ஒரு பாட்டு. அப்டின்னா என்ன? அதே மாதிரி இன்னொரு பாடலில் ஆரோமலே ... அப்டின்னு தொண்டை கிழிய ஒரு பாட்டு வரும். அதென்ன ஆரோமலே .. எனக்குத் தெரியலை. ஏதோ மலையாள சொல் என்று நினைக்கிறேன். பொருள் என்னங்க ...?

The Hindu - இப்படி ஏன் பெயர் வச்சாங்கன்னு தெரியலை. (பாக்.கில் The Muslim அப்டின்னு ஒரு பத்திரிகை இருக்கோ?)இப்படி ஒரு பெயர் இல்லாம The Indian என்று வச்சிருந்தா நல்லா இருந்திருக்குமேன்னு நான் நினைத்ததுண்டு. ஆனால் இப்போ அவர்களே இன்னொரு தமிழ் தினசரி ஆரம்பிக்கப் போறதாக சொல்லி நானும் 6 மாதத்திற்கு சந்தா கட்டியாச்சி. இன்றைக்கு அந்த தினசரி வருகிறதாம் வந்து விட்டது.. என்னிடம் சந்தா வாங்க வந்தவரிடம் ஒரு feed back கொடுத்தேன். ஏன்னா அப்போ அந்த தினசரிக்கு ‘காமதேனு’ அப்டின்னு பெயர் வச்சதாகக் கேள்விப்பட்டேன். இந்தப் பெயர் The Hindu என்ற பெயரை விட மோசமா, மத வாசனையோடு இருக்கேன்னு சொன்னேன். ஆனால் இப்போ அந்த தினசரி ‘தி இந்து’ என்ற பெயரிலேயே வருகிறதாம்து. ஏதோ இது கொஞ்சம் பரவாயில்லை. இனி தி இந்து(ஆ) / தி இந்து(த) என்று அடைப்புக்குள் மொழி குறித்து போட்டுக் கொள்ள வேண்டியது தான். தி இந்து என்பதற்குப் பதில் வெறுமனே இந்து என்றாவது வைத்திருக்கலாமோ? ’தி’ எதற்கு?

தி இந்து  -- இது தினசரியின் தலைப்பு. இதன் tag line -- தமிழால் இணைவோம். quite a good parody!!!!!!!! நல்லா இருக்குல்ல ...!

விநாயகர் சிலைகள் விசர்ஜனம் நிறைவு ... விசர்ஜனம் என்றால் என்ன? தெரிந்து கொள்ள தி இந்து (த) பக்கம் 5-ல் பாருங்கள்!

(முதல் நாளல்லவா. நிறைய பக்கங்கள். ஜெயமோகன் கட்டுரை, கி.ரா. கட்டுரை வந்துள்ளன.  சிலர் வாழ்த்து சொல்லி தங்கள் படங்களோடு ஒரு முழுப்பக்கத்தை நிரப்பியுள்ளனர். அதில் ‘தமிழர்களைத்’ தேடிப்பார்த்தேன். அப்படி யாரும் இருந்தார்களா என்று தெரியவில்லையே?)

ஒரு காலத்தில் தமிழ்ப்படங்களில் வரும் பாத்திரங்களோடு சாதிப் பெயர்கள் வரும். அனேகமாக அவை - ஐயர், முதலியார், பிள்ளை, செட்டியார் என்பதோடு நின்று விடும். அவர்கள் எல்லாம் ஒரு வேளை உ. சாதிகளோ? அதன் பின் காலம் மாற சாதிப் பெயர்கள் மறைந்து விட்டன. இப்போது அந்தப் பழைய பெயர்கள் எல்லாம் போய் விட்டன. ஆனாலும் தேவர் சாதி நேரடியாகவோ, மறைமுகமாகவோ எக்கச் சக்கமாக வழங்கப்பட்டு வருகின்றன. இது என்றாவது மறையுமா?

சாதிப் பெயர்கள் மாதிரி பிராமணத் தமிழ் அன்றும் இன்றும் ஓங்கி ஒலிக்கிறது. வரும் விளம்பரங்களில் அறுபது எழுபது விழுக்காட்டில் பிராமணத் தமிழ் ஒலிக்கிறது. காரணம் புரியவில்லை. இதெல்லாம் விளம்பரப் படம் எடுப்பவர்கள் செய்யும் கோமாளித் தனமா?  இல்லை விளம்பரதாரர்களின் ‘புத்திசாலித்தனமா’? இந்த மொழியைப் பயன்படுத்துவதால் எதிர்ப்புகள் ஏதும் இருக்காது என்று விளம்பரதாரர்கள் ஏன் நினைப்பதில்லை?

ஏன் இப்படியே போயுண்டு இருக்கு?ஏதோ காபிக்கு பேஷ் .. பேஷ் .. அப்டின்னு சொல்லிண்டா பரவாயில்லை. இன்னும் பலதுக்கும் அப்படியே ஏன் சொல்லிண்டு இருக்கணும்? நாமளும் அதக் கேட்டுண்டே இருக்கணுமோ??


*


*




Wednesday, September 04, 2013

679. என் வாழ்க்கையில் நான் கடந்து வந்த ‘பெரும் அதிசயங்கள்’ .!





*
அதீதம் இணைய இதழில் தருமி பக்கத்தில் வந்த என் கட்டுரையின் மறு பதிப்பு .....

*

முதலிலேயே ஒன்று சொல்லி விடுகிறேன். என் வாழ்க்கையில் எனக்கு அதிசயங்களாகத் தெரிந்தவைகளைச் சொல்லப் போகிறேன். அதையெல்லாம் படிச்சிட்டு ...  ப்பூ .. இம்புட்டு தானான்னு படித்து விட்டு சிரிக்கிற ஆளுக நிறைய இருக்கலாம். அவர்களுக்கு ஒரு வார்த்தை. இப்போதே இதை வாசிப்பதை நிறுத்தி விடுங்கள். இதையும் மீறி வாசித்து விட்டு, 'இதப் போய் ஏன்’யா அதிசயம் அப்டின்னு சொன்ன ...?’ அப்டின்னு கேள்வி கேட்டுட்டு நிற்கக்கூடாது. எனக்கு அன்றைய தேதியில் அவை அதிசயம். இப்போ எனக்கே அது ஒண்ணுமில்லாமல் இருக்கலாம். ஆனால் அன்று .. அது அதிசயம் தான்.

ஒரு உதாரணம் சொல்றேனே ... இப்போவெல்லாம் நம்ம பெயரை ஒரு பிரிண்டரில் கொடுத்து அடிச்சிக்கலாம். your name in printed form. இது இப்போ அம்புட்டு ஈசி. ஆனால் ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன் அதெல்லாம் முடியாது. கல்யாண அழைப்பிதழில் மட்டும் தான் முதல் முதலாக உங்கள் பெயரை print-ல் பார்க்கலாம் என்பது மாதிரியான நிலை. அப்போ electronic typewriter வந்தது. நம்ம ஊர்ல நான் பார்த்த்தில்லை. Foreign - அதாவது அமெரிக்காவிலிருந்து ஒரு கடிதம் உங்கள் பெயர் போட்டு வந்தால் அதில் முகவரியில் உங்கள் பெயரை printed form-ல் பார்க்கலாம். அப்படி வருகின்ற கடிதங்களை என்ன செய்கிறோமோ, ஆனால் அது வந்த உறையைப் பத்திரமாக கொஞ்ச நாளாவது வைத்திருப்போம். நம் பெயரை print-ல் பார்க்கிறது அப்படி ஒரு அதிசயம். சொல்லுங்க .. எனக்கு இது அந்தக் கால அதிசயம். உங்களுக்கு ...?

அட .. நம்மல்லாம் தம்மடிக்கிற கோஷ்டியாச்சே. ஆசைக்கு cigar lighter வாங்கணும்னு ஆசை வரும். ஒண்ணு வாங்குவோம். அதுக்கு பெட்ரோல் போட என்ன செய்வது? இப்போது மாதிரி ஆளாளுக்கு ஒன்று இரண்டுன்னு பைக் வச்சிருந்தோமா .. கிடையாது. யாராவது ஒரு நண்பனோட நண்பனோட நண்பனின் மாமா ஒருத்தர்ட்ட ஒரு பைக் இருக்கும்.. மறுபடி இதே ரூட்ல ... நண்பன், நண்பன், நண்பனின் மாமா என்ற ரூட்ல போய் பெட்ரோல் போட்டிருவோம். ஆனால் அதை வைத்து சிகரெட் பத்த வைக்க நாங்க படும் பாடு. முதலில் cigar lighter-யைத் தலைகீழா பிடிச்சிக்கிட்டு கை சுழுக்கிக் கிட்டா உதறுவோமே அது மாதிரி நல்லா கையை உதறணும். இருக்கிற சுழுக்கு எல்லாம் போய்டும். அத உடுங்க .. இப்போ லைட்டரைப் பத்த வைக்கணும். நிச்சயமாக முதல் ஐந்து தடவையில் பொறி வரும்; நெருப்பு வராது. ஒரு கணக்கு போட்டா 5-10 தடவை முயற்சி செய்தால் ஒரு தடவை ஒரு சிகரெட் பத்த வச்சிரலாம்.

இந்த மாதிரி இருக்கிறப்போ நண்பன் தேவராஜ் - அனேகமாக 1970-வது வருடமாக இருக்கும் - ஒரு நாள் நான் சிகரெட் எடுத்து பத்த வைக்கிறப்போ அவன் தன் புதிய லைட்டரை எடுத்தான் .. க்ளிக்கினான் .. நெருப்பு வந்தது. Vini, Vici, Vidi மாதிரி எல்லாம் சுருக்கமா முடிஞ்சிது. நண்பனும் பெரிய ஜூலியஸ் சீசர் மாதிரி சிலுப்பிக்கிட்டான். என்னடா இதுன்னு கேட்டோம். electronic lighter என்றான். மாமா அமெரிக்காவிலிருந்து அனுப்பினார் அப்டின்றது மாதிரி ஒரு கதை சொன்னான். நாங்கள் மூன்று நாலு பேர் அதைப் பரிட்சித்துப் பார்க்க கேட்டோம். தனியொருவர் கோரிக்கைளைப் புறந்தள்ளி விட்டான். பின் கடைசியாக கூட்டணி முயற்சியில் மூன்றே மூன்று முறை க்ளிக் செய்ய அனுமதித்தான். என்ன ஆச்சரியம். மூன்று க்ளிக் ... மூன்று முறையும் ஜிவ்வென்று நெருப்பு வந்தது. நம்ப முடியவில்லை .. நடந்தது ... அதான் அதிசயம்.

அமெரிக்காவிலிருந்து வர்ர ஆளுகளிடமிருந்து பால் பேனா வாங்குறதும், அவங்க அதுக்காகவே அவைகளை வாங்கிட்டு வர்ரதும் ஒரு வழக்கம். அதில் Bic அப்டின்னு ஒரு பேனா ரொம்ப எனக்குப் பிடிக்கும். (இப்படி கிடைக்கிற  பேனாவா சேர்த்து வச்சி ஒரு நாள் எடுத்துப் பார்த்தா டப்பா முழுவதும் பேனாக்கள் மசியாக ’வாந்தி’ எடுத்து வைத்திருந்தன. அத்தனை பேனாவையும் தூக்கிப் போட்டுட்டேன்.
ஆனாலும் அந்தக் ‘கிறுக்கு’ இன்னும் கொஞ்சம் மீதியிருக்கு.
இப்போவெல்லாம் சேர்க்கிறது கொஞ்சம் பெயர் வாங்கின பேனாக்கள் - Cross 4; sheaffer 2 .. இந்த மாதிரி  இருக்கு.)

இந்த சீசன்ல சூரின்னு நண்பன் ஒருவன் அமெரிக்கா போய்ட்டு வந்தான். ஒரு பால்பேனா எடுத்தான். பேனாவைத் திறந்து அதன் முனை சிமிண்டு தரையில் விழுவது போல் போட்டான். எடுத்தான். எழுதினான். அழகாக எழுதியது. (அப்போ அமெரிக்காவில் இது தான் அந்தப் பேனாவிற்குரிய விளம்பரம் என்றான்.) ஆகா .. ரொம்ப நல்லா இருக்கே என்று பார்த்தேன். பேனாவைத் திறக்க முயற்சித்தேன். நண்பன் அது use-and-throw பேனா என்றான். அப்போதெல்லாம் நம்ம ஊர்ல அப்படி பேனாவெல்லாம் இல்லை; ரெண்டு ரூபாய்க்குப் பேனா, முப்பது பைசாவிற்கு ரீ பில் இருந்த காலம் அது. Reynolds பேனா அது. அந்தப் பேனாவைப் பார்த்து அப்படி ஒரு ஆச்சரியம்; அப்போ அது ஒரு அதிசயம்.

1977க்கு முன்பு. ரூபனுக்கு எப்பவுமே அமெரிக்க நண்பர்கள் குழு அதிகம். எங்கள் கல்லூரியில் அப்போது அவன்தான் நூலகத் தலைவர். ஒரு நாள் நூலகம் போய்ட்டு அவன் அறைக்குப் போனேன். செம சைஸில் ஒரு கொகோ கோலா பாட்டில் இருந்தது. 2 லிட்டர். அம்புட்டு சைஸில் ஒரு கொகோ கோலா பாட்டிலை அதுவரைப் பார்த்ததில்லை. இங்கே சின்ன பாட்டிலில் ’கலர்’ இருக்கும். வாங்கிட்டு வாயில ஊத்தி முடிச்சிட்டு போகணும். இது என்ன இம்மாம் சைஸில் ஒரு பாட்டில்! ‘எதுக்குப்பா இம்மாம் பெருசு?’ அப்டின்னேன். ’பார்ட்டி அது இதுக்கு இப்படி இருக்கும்’ என்றான். ஆனாலும் அந்தப் பாட்டிலைப் பார்த்ததும் நமக்கும் மேலை நாட்டுக்கும் ரொம்ப ‘தூரம்’ இருக்குன்னு நினைத்தேன். அந்த சைஸில் பாட்டில் பார்த்த்து அதிசயமாக இருந்தது. இது போல் இன்னும் சில இருக்கு. பிறகு பார்ப்போம் ........


*