Thursday, February 08, 2007

200. தருமி 200 - விமர்சிக்கிறார், பெனாத்தலார் !!!!!!!!!!!!

*

*


(குங்குமம் பாணியில் படிக்க)

சில புனைபெயர்களைப் பார்த்ததும், ஏன் இந்தப் புனைபெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இவர் என்ற கேள்வி மனதில் எழும்பும். தருமி என்ற பெயர், திருவிளையாடல் நாகேஷையே நினைவுபடுத்த, இந்த எழுத்தாளர் நகைச்சுவைக்காக இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றே தோன்றியது.


விளம்பரங்களைப்பற்றிய சில கேள்விகளோடு உள்ளே நுழைந்தவரைப் பார்த்ததும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் அடுத்ததாகவே Civic Sense பற்றிய கேள்விகளை அள்ளித் தெளித்ததில் சரிதான் - இது நாகேஷ் தருமி அல்ல, "எனக்கு கேக்க மட்டும்தான் தெரியும் - தருமி" எனத் தெரிந்தது.
உள் கேள்விகளையெல்லாம் விட்டுவிட்டாலும், இதுவரை 199 கேள்விகளைக் கேட்டிருக்கிறார். எத்தனையோ பேர் பதில் சொல்ல முயற்சித்தும் இருக்கிறார்கள்.


சர்தர்ஜியின் மகன் சர்தாரிடம் கேட்டானாம்.. "அப்பா உலகத்திலேயே பெரிய மலை எதுப்பா?"

சர்தார் -"தெரியலையேடா கண்ணா"

கொஞ்ச நேரம் கழித்து மகன் "அப்பா, பறக்காத பறவைகளிலேயே பெரிய பறவை எதுப்பா?"

சர்தார் -"தெரியலையேடா கண்ணா"

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து, மகன் "அப்பா, இந்தியாவின் 8ஆவது பிரதம மந்திரி யாருப்பா?"

சர்தார் -"தெரியலையேடா கண்ணா"

மகன் அமைதியாகிவிட்டான்.

கொஞ்ச நேரம் கழித்து சர்தார் "ஏன்ப்பா கேள்வி கேக்கறதை நிறுத்திட்டே? கேள்வி கேட்காட்டி அறிவு எப்படி விருத்தியாகும்" என்றானாம்.


தருமியின் பிரச்சனையும் இதுவேதானோ என்று தோன்றுகிறது. சரியான கேள்விகள், ஆனால் கேட்கப்பட்டவர்களிடமும் கேள்விகள்தான் இருக்கின்றனவே ஒழிய விடை இல்லை.


ஆரம்ப காலங்களிலேயே இவர் கேள்விகளின் (கவலைகளின்) வீச்சு ஆச்சரியப்படவைத்தது. கற்பழித்தவனுக்கே கல்யாணம் செய்துவைக்கும் நீதிபதியைப்பற்றியும் குமுறுவார். காமன்வெல்த்தில் இன்னும் இந்தியா நீடிப்பது அவமானம் என்றும் வாதிப்பார் (நீடிக்கிறதா என்ன?:-)) ஏன் நம் அரசியல்வாதிகளுக்கு நனிநாகரீகம் தெரிவதில்லை என வருந்துவார்!


அப்புறம்தான் ஒரு கியர் மாற்றி மெகா சீரியல்களை ஆரம்பித்தார். ஹிந்திப்போராட்டம் பற்றிய முதல்கைத் தகவல்கள், "நான் ஏன் மதம் மாறினேன்" என்று இன்னுமொரு informative தொடர், இந்தி தெரியாமல் வடநாட்டுக்குச் செல்வதை வீரப்பயணமாக வர்ணித்த தொடர், மரணம் தொட்ட கணங்கள் என்று தேவிபாலா கணக்காக சீரியல்கள் எழுதினாலும், அவ்வப்போது ஜாவா மகாத்மியம், மீனாட்சியம்மா வீட்டு வயசுக்கு மரியாதை கேட்டு, கொ ப செ வாக பதவி உயர்வு பெற்றது என நகைச்சுவைக்கும் மரியாதை கொடுக்கத் தவறவில்லை.


திரைப்பட விமர்சனங்கள் என்று தனிப்பட்டு செய்யாவிட்டாலும், நல்ல திரைப்படங்களுக்காக (அவருக்கும் எனக்கும் பல இடங்களில் நல்ல திரைப்படம் என்றால் என்ன என்ற கருத்து ஒத்துப்போகிறது) ஆதங்கப்படுவார், டிவி தொடர்களைக் கண்டு வெதும்புவார். திடுதிப்பென்று கவிதைகளை மொழிபெயர்த்து ஆச்சரியப்படுத்துவார்.


பின்னூட்டங்களுக்கு இவர் கொடுக்கும் மரியாதை அருமை. நேரம் எடுத்தாலும், பொறுமையாக ஒவ்வொரு வரிக்கும் பதிலை அளிப்பதாக இருக்கட்டும், தனக்குத் தெரியாத விஷயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள் என ஒப்புக்கொள்வதாக இருக்கட்டும், விவாதம் வி-வாதமாக மாறும்போது சரி இத்தோடு போதும் என புல்ஸ்டாப் வைப்பதாகட்டும், விவாதக்களத்தை வழிநடத்துவதில் பல விஷயங்கள் இவரிடம் கற்றுக்கொள்ளலாம்.


எனக்கு இவரிடம் ஒத்துப்போகாத விஷயங்கள் பல இருந்தாலும் பெரும்பான்மையானவை கிரிக்கெட் மசாலா சினிமா போல தனிப்பட்ட விருப்புவெறுப்புகள் சார்ந்தவை - ஒரு விஷயத்தை மட்டும் முக்கியமாகக் குறிப்பிட்டுவிடுகிறேன். முகம் மறைத்து எழுதும் பதிவர்கள் பற்றிய இவரது தீவிரமான கருத்துக்களோடு நான் ஒத்துப்போகவில்லை. முகம் மறைப்பது தன் கருத்தில் உள்ள நம்பிக்கையின்மை என்பது இவர் கருத்து. நான் மாறுபடுகிறேன். தீவிரமான கருத்துக்களை வெளியிடுவோர் பல காரணங்களால் முகம் மறைக்கலாம், போலித்தனம், அடையாளத் திருட்டு, அவதூறு நோக்கம் இல்லாதவரை முகம் மறைப்பது தவறல்ல என்பது என் கருத்து. இருக்கட்டும்..முழுக்க ஒத்துப்போனால் வாழ்க்கை போரடித்துவிடும்.


சமீப காலங்களில் இட ஒதுக்கீடு, சமூக நீதி போன்றவை சார்ந்த பதிவுகளில் அதிக பங்களிப்பு இருந்தாலும், ஆரம்ப காலங்களில் இருந்த Versatality குறைந்துவிட்டதுபோல உணர்கிறேன். பரந்த களங்களில் பங்கேற்கக்கூடிய திறமை உள்ளவர் ஓரிடத்தில் மட்டும் ஒடுங்கிவிடக்கூடாது என்பதனால் இந்த விண்ணப்பமே தவிர, சமீப காலப் பதிவுகளை எதிர்த்து அல்ல.


எப்படி இருப்பினும், தெளிவான, யாரையும் காயப்படுத்தாத, மெல்லிய நகைச்சுவை கொண்ட தமிழ்நடையால், முகப்புக்கு வந்த அடுத்த நொடி க்ளிக் பெறும் தருமியின் பதிவுகள். அதே போல, மறுமொழியப்பட்ட பதிவுகளில் வந்தாலும் உடனே க்ளிக்க வைக்கும் விவாதங்கள் - இதே வீரியத்துடன் தொடர விரும்புகிறேன்.


200க்கு வாழ்த்துகள்.

முதல் பதிவில் வேறு யாரும் பின்னூட்டம் போடாத காரணத்தாலே எனக்கு இந்த வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள்.


*

*

43 comments:

இலவசக்கொத்தனார் said...

ஆஹா. இந்த பதிவை நான் இது வரை பார்க்காமலேயே போயிட்டேனே.

200 பதிவுக்கு வாழ்த்துக்கள்.

நம்ம ஐடியாவைக் காப்பி அடிச்சுட்டு ஒரு நன்றி கூட சொல்லாததுக்கு கண்டனங்கள்!:))

பெனாத்தல்,

இவரு கேக்குற கேள்விகளுக்கு பொறுமையா பதில் சொல்லறது விக்கி பசங்க மட்டும்தான்னு நினைக்கறேன்!!

நீங்க சொன்ன பல கருத்துக்கள் (முகம் மறைப்பது உட்பட) நீங்கள் சொன்னதுதான் என் கருத்தும்.

மீண்டும் வாழ்த்துக்கள் தருமி(ஐயா!)

இலவசக்கொத்தனார் said...

வார்ப்புருவில் பல இடங்களில் பூச்சி பூச்சியாய் தெரியுதே. சரி பண்ணக்கூடாதோ?

சிறில் அலெக்ஸ் said...

200க்கு வாழ்த்துக்கள். இன்னும் உங்கள் சிறந்த கருத்துக்களை பதிப்பீர்கள் எனும் நம்பிக்கை உள்ளது.

எங்களை தொடர்ந்து 'வழிகாட்ட வேண்டுமென்று வணங்கினோம்'

தொடர்ந்து 'ஒன்றே குலமென்று..' பாடவும்

:)

வசந்தன்(Vasanthan) said...

இருநூறுக்கு வாழ்த்து.

துளசி கோபால் said...

200 ரன்களுக்கு வாழ்த்து(க்)கள்.

நல்லா நின்னு நிதானமா ஆடறார். நல்லா இருக்கணும்.

இலவசக்கொத்தனார் said...

//வார்ப்புருவில் பல இடங்களில் பூச்சி பூச்சியாய் தெரியுதே. சரி பண்ணக்கூடாதோ?//

பூச்சி கொல்லிகளை உபயோகித்து புதிய வலைப்பூ மலரச் செய்த தருமி வாழ்க வாழ்க!!

Gurusamy Thangavel said...

இருநூறுக்கு வாழ்த்துக்கள் :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

200க்கு வாழ்த்துக்கள்.

புது வார்ப்புருவுக்கும் வாழ்த்துக்கள்.

அதென்ன தருமியோட வார்ப்புருல Christmas tree?

Unknown said...

தருமி சார் 200க்கு வாழ்த்துக்கள். பினாத்தலாரின் அழகான அலசல் பதிவு நன்றாக வந்துள்ளது.

TBR. JOSPEH said...

டபிள் செஞ்சுரி அடிச்ச உங்களுக்கு வாழ்த்துக்கள்.

பினாத்தலாரின் அலசலும் அழகு!

வாழ்த்துக்கள்.

நெல்லை சிவா said...

தூள்..தூள்..தூளே.. வாழ்த்துக்கள் அய்யா!

- யெஸ்.பாலபாரதி said...

வாத்தியாரைய்யாவுக்கு வாழ்த்துக்கள்!

ஜோ/Joe said...

யோரோ எழுதிக்கொடுத்த தருமியின் தவறான பாட்டுக்கே 1000 பொற்காசு என்றால் ,சரியாக எழுதபட்ட 200 பதிவுகளுக்கு என்ன கொடுக்க முடியும். வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் வாரி வழங்குகிறோம்.

G.Ragavan said...

(இரு)நூறாண்டு காலம் வாழ்க
போலிகள் இல்லாமல் வளர்க
பதிவுலகில் புலவன் உன் போலே
கேள்விகளைக் கேட்பதில் உன் போலே
(இரு)நூறாண்டு காலம் வாழ்க
போலிகள் இல்லாமல் வளர்க

அருமையான விமர்சனம். உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம் ஐயா. எடுத்து விடுங்கள். பெனாத்தலார் அருமையான விமர்சனங்கள் செய்திருக்கிறார். பொருத்தமாகவும் கூட.

ஞானவெட்டியான் said...

நன்றி.
வாழ்க!
வளர்க!!

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//யாரோ எழுதிக்கொடுத்த தருமியின் தவறான பாட்டுக்கே 1000 பொற்காசு என்றால் ,சரியாக எழுதபட்ட 200 பதிவுகளுக்கு என்ன கொடுக்க முடியும். வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் வாரி வழங்குகிறோம்.

//

Repeat! :)

rv said...

பெரீய்யப்பா,
அதுக்குள்ள டபுளா? வாழ்த்துகள்!

பெனாத்தலார் வாழ்த்துரை அருமை! எனக்கும் நீங்க niche ஏரியாவுக்கு போயிட்டீங்களோ சமீபகாலமான்னு தோணுது. (பொதுவா எழுதுனா மட்டும் வந்து கவனிச்சியான்னு எகத்தாளம் செய்யப்படாது!:))

நூறுக்கு உங்கள போட்டோ பினிஷ்ல பீட் பண்ணினேன். ஆனா இருநூறுக்கு நான் இன்னும் பக்கத்திலேயே வரலை. நீங்க என்னடான்னா வெப்லாக்ஸ்லாம் கூட போயிட்டு வந்துட்டீங்க. வாழ்த்த வயது நிறையவே இருக்குதோனு சந்தேகமா இருக்கு. :))

ச.சங்கர் said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

எத்தனை பதிவுகள் போட்டாலும் உங்களின் "நான் ஏன் மதம் மாறினேன்" சீரியல்கள்தான் மிகவும் பிடித்தவை.

மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு அதுதான் உங்களின்மேல் ஒரு பார்வையை பதிக்கச் செய்தது.

உங்களிடம் இருக்கும் மிகச் சிறந்த பண்பு அல்லது எனக்கு மிகவும் பிடித்தது:

அடுத்தவர் தானாகச் சொன்னால் தவிர அவர்களின் சொந்த விசயங்களைக் கேட்பது இல்லை.எடுத்தவுடன் ஊர்/கல்யாணம்/பிள்ளை/வேலை/சம்பளம்.....etc போன்ற கேள்விகளையே கேட்கும் நமது (இந்தியக் கலாச்சாரம்) மக்களின் மத்தியில் வாத்தியாரிடம் யிடம் எனக்கு மிகவும் பிடித்த பண்பு!!

தமிழ் வலைப்பதிவர்களில் கடவுள் சம்பந்தமான விசயங்களில் எனது எண்ண ஓட்டத்துடன் இருப்பவர் என்ற முறையில் ஸ்பெஷல் வாழ்த்துகள்!

நிறைய எழுதுங்கள்

குமரன் (Kumaran) said...

தருமி ஐயா. தங்கள் தனிமடலை இன்று காலை பார்த்த போதே 200வது பதிவிற்கான அழைப்பு தான் என்று எண்ணினேன். அந்த அழைப்பு மடலே அருமையாக இருந்தது. வந்து பதிவைப் படித்தால் பெனாத்தலாரும் கலக்கியிருக்கிறார். Concise and Direct to the point. உங்கள் வழக்கமான பதிவுகள் போல் இல்லை (ச்சும்மா.... :-) )

துளசி அக்கா சொன்ன மாதிரி நின்று நிதானமாக ஆடுகிறீர்கள். இல்லையேல் இந்த எண்ணிக்கையை எப்போதோ தொட்டிருப்பீர்கள்.

200க்கு வாழ்த்துகள். வணக்கங்களுடன்.

குழலி / Kuzhali said...

எப்போது கவனிக்க ஆரம்பித்தேன், என்னுடைய இடஒதுக்கீடு(மறுபங்கீடு) பதிவில் ஒரு பின்னூட்டம் தருமி அய்யா இட்டிருந்தார், அதில் நூல் பிடித்து அவரின் பதிவுக்கு போனேன், அதிலிருந்து இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய நேரடி தகவல்களோடு எழுதிய பதிவு என்று தருமி அய்யாவின் தொடர் வாசகனாகிவிட்டேன்.... வெகு சில கருத்துகளில் மட்டுமே(அப்சல் தூக்கு தண்டனை) எதிர்கருத்துகளை கொண்டிருந்தோம், மதம் பற்றிய பதிவுகளை படித்தாலும் அங்கே விவாதம் எதுவும் பெரிதாக செய்யவில்லை, ஏனெனில் அவ்வளவுதான் அதில் எனக்கு அறிவு, என்னமோ நான் விவாதம் விதண்டாவதம் செய்வதிலெல்லாம் எனக்கு அறிவு இருப்பதாக நினைத்துக்கொள்கிறாயோ என கேட்பது என் காதில்விழுகிறது தான் என்ன செய்வது, சில பதிவர்களின் வலைப்பதிவை புத்தகமாக்கினால் நலமென்று நான் நினைப்பதுண்டு, அதில் ஒன்று தருமி அய்யாவுடையது.

நன்றி

குமரன் (Kumaran) said...

என்னுடைய பின்னூட்டம் கிடைக்கவில்லையா தருமி ஐயா?

தருமி said...

பத்மா சொன்னது --

வாழ்த்துக்கள் தருமி. நானெழுத ஆரம்பித்த பின் சில மாதங்களுக்கு பிறகு ஆரம்பித்து என்னை கடந்து சென்ற உங்கள் சாதனை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இப்போது வலை உலகம் பக்கம் அதிகம் வர வாய்ப்பு இருப்பதில்லை.

பாராட்டுக்கள். 200 இன்னும் பலவாக, சிந்திக்க தூண்டும் படியாக உங்கள் எழுத்துக்கள் இதே போல தொடரட்டும்.

ஜொள்ளுப்பாண்டி said...

200 க்கு வாழ்த்துக்கள் தருமி சார் !!;)))

rv said...

நான் இட்ட பின்னூட்டமெங்கே? எங்கே? எங்கே?????

வெளிகண்ட நாதர் said...

அந்த காலத்திலே எம் ஜி ஆர் படங்கள் செய்யும் '200 நாட்களையும் தாண்டி வெற்றிகிறமாக ஓடுகிறது' என்பதை தருமியால் மட்டுமே செய்ய முடியும், வாழ்த்துக்கள்!

தாணு said...

//எத்தனை பதிவுகள் போட்டாலும் உங்களின் "நான் ஏன் மதம் மாறினேன்" சீரியல்கள்தான் மிகவும் பிடித்தவை.

மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு அதுதான் உங்களின்மேல் ஒரு பார்வையை பதிக்கச் செய்தது.//
பலூன் மாமாவின் கருத்துதான் என்னுடையதும்.
வாழ்த்துக்கள். பொண்ணுக்கு பரீட்சை முடியட்டும், உங்களுடன் போட்டியிட வருகிறேன்!!!

லிவிங் ஸ்மைல் said...

200 பதிவா..!!


கேள்வியின் நாயகன், பா.கா.ச. வின் மதுரை தலைவர் எங்கள் மாண்புமிகு தருமி தாத்தா அவர்கள் பதிவுகள் 200 கண்டிருப்பதை மனமார வாழ்த்துகிறேன், மன்னிக்கவும் வணங்குகிறேன்...

இதோ உன்னால் பா.கா.ச.வின் மணிமகுடத்திற்கு மேலும், ஒரு வைரம் சேர்ந்துள்ளது..


ஹை!! ஒரே பின்னூட்டத்தில ரெண்டு உள்குத்து...

:-)

ilavanji said...

தருமி சார்,

200 க்கு வாழ்த்துக்கள்!

நீங்க, சிறில், பெனாத்தல்னு 200 போட்ட மக்கா எல்லாரும் சேர்ந்து ஒரு எலைட் க்ளப் ஆரம்பீங்க! எங்கள மாதிரி ஜீனியரு பசங்க எல்லாம் எப்படி சுறுசுறுப்பா பதியறதுன்னு பாடம் படிக்க வாரோம்! :)))

thiru said...

அய்யா,

என் எழிய வணக்கங்கள்! உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இன்னும் தொடரப்போகிற சாதனைகளுக்கும் வணக்கங்கள்!

enRenRum-anbudan.BALA said...

200 க்கு வாழ்த்துக்கள்!

Pl. make a visit to my blog for my 300th (shortly !) :)))

Thangamani said...

மண்டபத்துல யாரோ எழுதிக்கொடுத்தாக்கும்னு நினைச்சுக்கிட்டே வாசிச்சுக்கிட்டே வந்தேன். :)))

நல்லா இருக்கு, உங்க மற்ற பதிவுகள் போல.

அதிலயும் சர்தார்ஜி ஜோக் ரொம்ப நல்லாருக்கு. அதனால சொல்றது என்னன்னா கேள்வி கேக்குறது ரொம்ப முக்கியம்! பதில் சொல்றதவிட. ஏன்னா பதில் எப்படியாவது, எங்க இருந்தாவது கிடைச்சிடும். கேள்வி மட்டும் உள்ள இருந்து தான் வரனும்.அப்பத்தான் நல்லது...

:))

200 பதிவு வளர்ந்து 2000 ஆக வாழ்த்துகள்!!

இராம்/Raam said...

200 பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா :)

Boston Bala said...

Francis Bacon - “if a man begins with certainties he shall end in doubts; But if he be content to begin with doubts, he shall end in certainties.”

வாழ்த்துக்கள் தருமி

சிவபாலன் said...

தருமி அய்யா

200 க்கு வாழ்த்துக்கள்!!

தொடரட்டும் .. விரைவில் 500 ஐ எட்ட வாழ்த்துக்கள்!!

தருமி said...

நன்றியறிவிப்பு …

முதலில், என் வேண்டுகோளுக்கிணங்கி இப்பதிவை தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வு மிளிற, ஒரு தொகுப்புரையாகவும், திறனாய்வாகவும் இப்பதிவைத் தந்த பெனாத்தலாருக்கு மிக்க நன்றி.

அவர் குறிப்பிட்ட இரு காரியங்களுக்கு என் பதில்கள்: முதலாவதாக, versatility பற்றியது. முன்பு இருந்ததாகக் கூறியுள்ளமைக்கு முதலில் நன்றி. Versatility இருந்ததோ என்னவோ, variety இருந்ததென்னவோ உண்மைதான். அது குறைந்ததற்கு என்ன காரணம் என்று கேட்டுப் பார்த்துக் கொள்கிறேன்; சரியான பதில் தெரியவில்லைதான். சீரியசாக எழுதஎடுத்துக் கொண்ட விஷயங்களை எழுதிய பின்னும், கியர் மாற்றாமல் அதே கியரில் பயணம் தொடர்கிறதென்று நினைக்கிறேன். கியர் மாற்றணும்; மாற்றுவேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

அடுத்து, பதிவர்களின் முகத்திரை பற்றியது. கட்டாயம் எல்லோரும் முகம் காண்பித்து, தங்கள் தங்கள் எழுத்துக்களை ‘அப்பா பெயர் தெரியாத அனாதைப் பிள்ளைகளாக’ ஆக்கி விடாமல் இருக்க வேண்டும் என்ற என் கருத்தில் முன்பே ஒரு சின்ன மாற்றம் சொன்னேன் – எழுத்துக்காரர்களின் முழு விவரம் இல்லாவிட்டாலும், ஏதோஒரு புனைப்பெயரோடாவது எழுத வேண்டும் என்றேன். இன்னும் அதே கருத்தே. ஒரு பின்னூட்டத்தில் இரண்டு அனானிகள் வர, அதில் ஒருவருக்கு நான் நன்றி சொல்லவும், இன்னொரு அனானியை ‘போட்டுப் பார்க்க’ வேண்டுவதற்காகவாவது எனக்கு வித்தியாசம் தெரியவேண்டாமா? ஒருவருக்கு ஒரு புனைப்பெயர் என்ற நிலையாவது இருக்க வேண்டுமென்பதில் இன்னும் உறுதியாகவே நிற்கிறேன். ஆனால் இப்போதோ நேரத்திற்கு நேரம் ஒவ்வொரு புதுப்பெயரோடு பின்னூட்டமிடுபவர்களும், பதிவிடுபவர்களும் நிறைந்து விட்ட இந்த நேரத்தில் என்னைப் போன்றவர்கள் மிகக் குறைந்த அளவே இருப்போம் என்றாலும் …. பெனாத்தலார், கொத்ஸ், Let us agree to disagree. Okay?

கொத்ஸ்,
உங்களது 100வது பதிவில் செய்ததைக் காப்பி அடித்திருக்கிறேன். கோபித்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு 100 ஆவது பதிவிலே வந்த ஐடியாவை விட்டு விட்டு வேறு ஏதாவது புதிதாகச் செய்ய எனக்கு 200-வது பதிவிலும் வரவில்லை பார்த்தீங்களா? // இவரு கேக்குற கேள்விகளுக்கு பொறுமையா பதில் சொல்லறது விக்கி பசங்க மட்டும்தான்னு நினைக்கறேன்.// ஓ! அந்த அளவு “விவரமான” கேள்விகளா கேக்குறேன்னு சொல்றதுக்கு நன்றிங்க.

சிறில் அலெக்ஸ்,
//…தொடர்ந்து 'வழிகாட்ட வேண்டுமென்று …// நல்ல ஆளு பார்த்தீங்க, சிறில்! நன்றி

வசந்தன், துளசி, முத்து லட்சுமி, தங்கவேல், டி.பி.ஆர். ஜோசப், நெல்லை சிவா, யெஸ்பா, ஞானவெட்டியான்,
அனைவருக்கும் மிக்க நன்றி

செந்தில் குமரன்,
வீடு மாறுவதற்கு இராம் உதவி செய்து கொண்டிருந்தார் ஓவ்வொரு படியாக. அப்போது ஒரு மூன்று வடிவங்களைக் காண்பித்து இதில் எது வேண்டுமென்றார். பார்த்ததில் பார்த்ததும் பிடித்தது இந்த வார்ப்புரு. இதைச் சொன்னேன். சிறிதாக இருந்தது பெரிதாகத் திரையில் தோன்றியதும், இராமிடம் chat-ல் நான் சொன்னது: எப்படி க்றிஸ்துமஸ் மரம் இருக்கும் இதைத் தேர்ந்தேன். அடி மனதில் இன்னும் கிறித்துவம் ஒட்டிக் கொண்டிருக்கிறதோ என்று இராமிடன் சொன்னேன். ஆனால் அதற்குப் பிறகு நம் தேசிய வண்ணச் சேர்க்கை இருப்பதும் பிடித்தது. இங்கே வந்து பார்த்தால் எனக்கு வந்த கேள்வியை நீங்களும் கேட்டிருக்கிறீர்கள்!!! பதில் என்ன செந்தில் குமரன்??

ஜோ,
//..சரியாக எழுதபட்ட 200 பதிவுகளுக்கு..// நற்சான்றிதழுக்கு நன்றி, ஜோ.

ஜிரா,
// …போலிகள் இல்லாமல் வளர்க .. //
நடக்கிறதெல்லாம் பார்த்தா அப்படியெல்லாம் முடியுமான்னு தெரியலையே, ஜிரா.

கல்வெட்டு,
//.. எத்தனை பதிவுகள் போட்டாலும் உங்களின் "நான் ஏன் மதம் மாறினேன்" சீரியல்கள்தான் மிகவும் பிடித்தவை.//
மிக்க நன்றி.

இராமநாதன்,
// இருநூறுக்கு நான் இன்னும் பக்கத்திலேயே வரலை. நீங்க என்னடான்னா,..// மொதல்ல ரஷ்யாவில மாணவ வாழ்க்கை. ஆனால் இப்போ ஒழுங்கா வேலைய பாத்துக்கிட்டு இருக்கீங்க அப்டின்னு தெரியுது. கட்டாயமா அந்த niche விட்டு விட்டு வெளிய வந்திர்ரேன், சரியா?

குமரன்,
இனியாவது ‘concise and direct to point’ இருக்க முயற்சிக்கிறேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். (முடிஞ்சாதானே!) இதுவரை இருந்தமாதிரி இல்லாம புதுசா இனிமே மாற முடியும்னு தோணலை.

குழலி,
//.. சில பதிவர்களின் வலைப்பதிவை புத்தகமாக்கினால் …// கிடைத்த நற்சான்றிதழ்களில் இதையே பெரிதாக, பெருமையாக நினைக்கிறேன். நன்றி

பத்மா,’
//… என்னை கடந்து சென்ற உங்கள் சாதனை …// இதற்குக் காரணம் வெள்ளிடை மலை! இதெல்லாம் சாதனையோடு சேர்த்தியில்லை.

ஜொள்ளுப் பாண்டி, வெளிகண்ட நாதர்,
மிக்க நன்றி.

தாணு எழில்,
// உங்களுடன் போட்டியிட வருகிறேன்!!!/// காத்திருக்கிறேன். வாருங்கள் .. உங்களுக்காச்சு .. எனக்காச்சு …

லிவிங் ஸ்மைல்,
// ஒரே பின்னூட்டத்தில ரெண்டு உள்குத்து” ஒண்ணுதானே புரிஞ்சிது. அப்ப இன்னொண்ணு … ??

இளவஞ்சி,
// நீங்க, சிறில், பெனாத்தல்னு 200 போட்ட மக்கா எல்லாரும் சேர்ந்து ஒரு எலைட் க்ளப் ஆரம்பீங்க..//!..//
அட நீங்க ஒண்ணு … ஒவ்வொருத்தரும் எண்ணிக்கையில எங்கெங்கேயோ போயிட்டாங்க. அன்னைக்கிப் பார்த்தேன். பாடும் நிலா S.P.B.க்கான பதிவில் 365 நாளில் 370 பதிவுகளோ என்னவோ போட்டிருக்காங்க… சும்மா, ஜெட் எல்லாம் கெட்டுது போங்க… அவ்வளவு அவர்மேல் டெடிகேஷனாக இருக்கணும். ஆனாலும் நீங்க ரொம்பவே மோசம்.

திரு, என்றென்றும்-அன்புடன் பாலா, தங்கமணி, இராம்,
மிக்க நன்றி.

பாஸ்டன் பாலா,
பாஸ்டன் பாலா பேக்கன் பாலாவா மாறி கொடுத்துள்ள நல்ல ஒரு மேற்கோளுக்கும், என் பதிவோடு அதைப் பொருத்தியமைக்கும் மிக்க நன்றி.

பொன்ஸ்~~Poorna said...

200 வந்தாச்சா!! இப்பத் தான் பார்க்கிறேன்.. வாழ்த்துக்கள்...

நீங்க கவிதையெல்லாம் மொழி பெயர்த்திருக்கீங்களா? ஹிந்தி எதிர்ப்பு பற்றிய பதிவுகள், காமெடி பதிவுகள், இதெல்லாம் நான் படிச்சதே இல்லை.. ஒவ்வொன்றாக படிக்கணும்..

// எத்தனை பதிவுகள் போட்டாலும் உங்களின் "நான் ஏன் மதம் மாறினேன்" சீரியல்கள்தான் மிகவும் பிடித்தவை.//
கல்வெட்டு சொல்வதை வழிமொழிகிறேன்

// உங்களிடம் இருக்கும் மிகச் சிறந்த பண்பு அல்லது எனக்கு மிகவும் பிடித்தது:

அடுத்தவர் தானாகச் சொன்னால் தவிர அவர்களின் சொந்த விசயங்களைக் கேட்பது இல்லை.எடுத்தவுடன் ஊர்/கல்யாணம்/பிள்ளை/வேலை/சம்பளம்.....etc போன்ற கேள்விகளையே கேட்கும் நமது (இந்தியக் கலாச்சாரம்) மக்களின் மத்தியில் வாத்தியாரிடம் யிடம் எனக்கு மிகவும் பிடித்த பண்பு!! //
எனக்கும் எனக்கும்.. :)


வார்ப்புரு மாத்தியாச்சா? கலக்கலா இருக்கு! :)))

Swamy Srinivasan aka Kittu Mama said...

Congrats on ur 200th post.
500, 1000, 2000 enna posttitte irukka ennudaya vaazthukkal.
pazhaya post ellam neram kedaikum podhu vaasikiren tharumi.

தருமி said...

சிவபாலன்,
மிக்க நன்றி

தருமி said...

பொன்ஸ்,
ரொம்ப பிஸியா இருக்கவேண்டியதாப் போச்சுன்னு படிச்சேன். எல்லாம் நல்லபடியா நடந்தது என்றே நம்புகிறேன்.

வந்ததும் இங்கு வந்தமைக்கும், கொடுத்துள்ள வாக்குறுதிக்கும் நன்றி

தருமி said...

கிட்டு,
புதிதாக வந்துள்ளீர்கள் என நினைக்கிறேன். அதற்கும், பொன்ஸ் மாதிரி நீங்களும் கொடுத்துள்ள வாக்குறுதிக்கும் நன்றி.

Unknown said...

இந்தி சாதிகளுக்கு இடஒதுக்கீடு தரும் 'தமிழ்'நாடு அரசு

தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாமல் வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.

நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.

இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.

தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.

கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.

எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.

தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.

இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.

கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.

தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?

Post a Comment