Monday, April 30, 2007

214. என் வாசிப்பு - 2

முந்திய தொடர்புடைய பதிவு: 209. என் வாசிப்பு –1


திருட்டுத்தனமா வாசிக்க ஆரம்பிச்ச காலத்துக்கு முந்தி எப்பவாவது கல்கண்டு புத்தகம் வாசிச்சதுண்டு. வீட்டுக்கு வழக்கமா வர்ர அண்ணன் ஒருவர்தான் எனக்கு கல்கண்டு புத்தகத்தை அறிமுகப் படுத்தியவர். நான் தமிழ்வாணனின் விசிறியாகிப் போனதைப் பார்த்து அவர் வரும்போது பழைய கல்கண்டுகளை எடுத்திட்டு வருவார். அவர் வர்ரது அனேகமா ஞாயிற்றுக் கிழமையாகத்தான் இருக்கும். அப்போ அந்த நாள்தான் குமுதம், கல்கண்டு இரண்டுமே ஒன்றாக வரும். நிறைய பேர் அந்த இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே வாங்குவார்கள்; ஏனென்று தெரியாது. ஒரே பதிப்பாளர்களோ என்னவோ. நம்ம அண்ணனும் அப்படிதான். அவர்கூட சேர்ந்து கல்கண்டு தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். பைக்கில் போய்க் கொண்டிருந்தவன் லாரியில் இருந்த தகடு வெட்டியதால் தலை தனியாகப் போனாலும் அவன் முண்டம் மட்டும் பல மைல்தூரத்துக்கு பைக்கை ஓட்டிக் கொண்டே போனது என்று ஏதாவது ஒரு ஊர் பெயரைப் போட்டால் வாசிக்க எவ்வளவு நல்லா இருக்கும் ! கல்கண்டு முழுசுமே இதுபோல் டிட்பிட்ஸ்கள் தான். அதுக்குப் பிறகு கேள்வி-பதில். அதுவும் நல்லா பிடிக்கும்.

கல்கண்டு வாசிச்சா சங்கர்லால் பிடிக்காமல் போகுமா? பள்ளி நூலகத்தில் அப்பாவுக்குத் தெரியாமல் புத்தகம் எடுக்க ஆரம்பித்த காலத்தில் முதலில் ஐக்கியமானது தமிழ்வாணனின் புத்தகங்களில்தான். அதுவும் சங்கர்லால் ரொம்ப பிடிச்சிப் போனார். சங்கர்லால் பத்து கேள்விகள் கேட்பார்; ஒவ்வொன்றும் ஒரு கொக்கி மாதிரி அப்டின்னு கதை ஆரம்பிக்குமே, அதிலிருந்து அவர் லூசா டை கட்டிக் கிட்டு ஸ்டைலா இருக்கிறது ரொம்ப பிடிச்சிப் போச்சு. அதனால் மாது, கத்திரிக்காய், மாணிக்கம், வஹாப் என்று எல்லாரும் ரொம்ப நெருக்கமா ஆயிட்டாங்க. அது எவ்வளவு தூரம்னா, சங்கர்லால் காதலிச்சி இந்திராவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அதுக்குப் பிறகு இந்திராவிடமிருந்து டீ வாங்கிக் குடிக்கும்போதெல்லாம் எனக்கு அந்த அம்மா மேல கோபமா வரும். முந்தியெல்லாம் மாதுவிடமிருந்து அடிக்கடி டீ வாங்கிக் குடிப்பாரே அது மாதிரி இப்போ இல்லியேன்னு மாதுவுக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கும்னு நான் நினச்சி மாதுவுக்காக வருத்தப் படுவேன்.

இந்த சமயத்தில தொடர்கதை வாசிக்கிற பழக்கமும் தொத்திக்கிரிச்சி. பள்ளிக்குப் பக்கத்தில் திருமலை நாயக்கர் மஹாலுக்கு எதிரில் ஒரு சின்ன செளராஷ்ட்ர வாசகசாலை; நிறைய பத்திரிகைகள் இருக்கும். கல்கி, குமுதம், விகடன், அமுதசுரபி, சுதேசமித்ரன் – இப்படி நிறைய. எந்தப் பத்திரிகை என்றென்று வரும்னு தெரியும்; அன்னைக்கே போய் அந்தந்த தொடர்கதைகளை வாசித்தாகணும். பெரியவங்க யாராவது அந்தப் புத்தகத்தை வாசிச்சிக்கிட்டு இருந்தா, பக்கத்தில போய் உட்கார்ந்து கிட்டு அவரையே, ஏதோ ஒண்ணு எதுக்காகவோ அண்ணாந்து பாத்துக்கிட்டு உக்காந்து இருக்குமே , அதுமாதிரி பாத்துக்கிட்டு இருப்பேன். பாவப்பட்டு என்னப்பான்னு அனேகமா கேட்டிருவாங்க. ஒரே ஒரு கதைன்னு சொல்லிட்டு வாங்கி படிச்சிருவேன்.

ஒரு தடவை நண்பன் ஒருவன் எப்படிடா இத்தனை புத்தகத்தில் இவ்வளவு தொடர்கதை வாசிக்கிறாய் என்று கேட்டு எத்தனைத் தொடர்கதைகள் அந்த சமயத்தில் நான் வாசித்து வருகிறேன் என்று ஒரு கணக்குப் போட்டு, அது பத்து பதினைந்து என்று வந்தது. அன்றிலிருந்து இப்போதுவரை உள்ள ஒரு விஷயம் என்னவென்றால், எத்தனை தொடர்கதை வாசித்தாலும் திடீரென்று ஏதாவது ஒரு கதையைச் சொல்லி, போன வாரத்தில் எங்கு கதை முடிந்தது என்று கேட்டால் நினைவுக்கு வராது; ஆனால் அந்தப் பத்திரிகையைத் திறந்து அந்தக் கதையின் முதல் வரியை வாசிப்பதற்கு முன்பே போனவாரத்தில் விட்ட இடம் சரியாக நினைவுக்கு வந்துவிடும். அது என்ன மாயமோ தெரியாது …

பள்ளி முடிக்கும்போதே சங்கர்லாலை விட்டு வளர்ந்து அடுத்து மு.வரதராசனாரின் ரசிகனானேன். கரித்துண்டு அவரது நாவல்களில் முதலில் படித்து, தொடர்ந்து அப்போதைக்கு அவரது எல்லா நாவல்களும் படித்ததாக நினைவு. அப்போதிருந்தே ஒரு ஆசிரியர் பிடித்தது என்றால் ஏறக்குறைய அவரது படைப்புகள் எல்லாவற்றையும் முடிந்தவரை வாசித்துவிடுவது என்ற பழக்கம் வந்தது.

அடுத்து அகிலன். அவரது ஒரு நாவல் - தலைப்பு நினைவில் இருக்கிறது; ஆனால் வெளியே கொண்டுவர முடியவில்லை; அது திரைப்படமாகவும் சிவாஜி நடித்து பின்னால் வந்தது என்று நினைக்கிறேன். கதா நாயகனின் பெயர் தணிகாசலமோ, என்னவோ. அந்தக் கதை வாசித்த போதுதான் முதன் முதலில் கதை வாசித்து கண்ணீர் விட்டது என்பது மட்டும் நன்கு நினைவில் உள்ளது.

அடுத்து நம்ம ஆளு கல்கி. ரொம்பவே மனுஷனைக் கெடுத்துட்டார். வெளியே சொல்ல கொஞ்சம் வெட்கமாதான் இருக்கு. அந்த அளவு “அந்த காலத்து” மேல் ஒரு காதலை ஏற்படுத்திட்டார். எவ்வளவு தூரம்னா, முதல் முறையா பொன்னியின் செல்வன் படித்து முடித்த பிறகு, எங்க பள்ளிக்கருகில் சாலையில் ஒரு பெரிய பள்ளம் தோண்டினார்கள். அடியிலிருந்த மண் மேலாக குவிக்கப் பட்டிருக்குமல்லவா அதில் ஒரு சிட்டிகை எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன். பக்கத்தில் வந்த நண்பன் என்னடா என்று கேட்டதற்கு இது நம்ம பழைய மனுசங்க மிதித்த மண்ணாக இருக்கும்ல என்றேன். உனக்கு கிறுக்குதான் பிடிச்சிரிச்சி என்றான். உண்மைதான். அப்படி ஆகிப் போச்சு. வந்தியத் தேவனாக வாழ்ந்த நினைவுண்டு. பெரிய ஆளா ஆனதும் சைக்கிள், கார் வாங்கினாலும் ஒரு குதிரையும் வாங்கி அதில் வந்தியத்தேவன் மாதிரி போக வேண்டுமென்று ஆசைப்பட்டதை இப்போது வெளியே சொன்னால் எல்லோரும் சிரிப்பீர்களோ? போங்க .. போங்க .. சிரிச்சா சிரிச்சிட்டுப் போங்க!

அதென்னவோ இப்போ நினச்சாலும் வந்தியத்தேவன் அந்த முதல் அத்தியாயத்தில் குதிரையில் அந்தக் காவேரிக் கரையோரம் போறது கண்ணுக்கு முன்னால வருது. ஐந்து பாகத்தில் மூன்றாம் பாகம்தான் பெரியது என்று நினைக்கிறேன். அதில் நடுபாகத்தில்தான் வந்தியத் தேவனை சிறையில் பெரிய பிராட்டி குந்தவி போய் பார்ப்பார்கள். அடே! முதலில் ரசித்த காதல் ஜோடி வ.தேவன் – குந்தவி ஜோடிதான்! பெரிய பழுவேட்டரையர் இருக்காரே அவரைப் பார்த்தாலே ஒரு பயம் கலந்த மரியாதை.

இதுவரை தமிழில் ஒன்றும் ஆங்கிலத்தில் ஒன்றும் என இரு நாவல்களைத்தான் மூன்று முறை வாசித்துள்ளேன். தமிழில் பொன்னியின் செல்வன். அதை இரண்டாம் முறை வாசித்துக் கொண்டிருக்கும்போது, மேலே சொன்ன வந்தியத்தேவனைச் சிறையில் குந்தவி பார்த்து பேசிவிட்டுப் போகும் இடம் வரை படித்து விட்டு, அப்படியே மெய்மறந்து அண்ணாந்து படுத்துக் கிடக்கும்போதுதான் எனது S.S.L.C. தேர்வு முடிவுகள் செய்தித்தாளில் வெளிவந்து, அதில் தேர்வு பெற்றோர் பட்டியலில் என் எண் வராததால் நண்பர்கள் விழுந்தடித்து வீட்டிலிருந்த என்னை வெளியே இழுத்துக் கொண்டு போனது நினைவில் நிற்கும் இன்னொரு விஷயம்.

18 comments:

தருமி said...

//ஆசை ந்றைவேறியதா??
//

ஓ! ஆசை நிறைவேறியதே .. அதப்பத்திகூட எழுதி இருக்கிறேனே..! - இங்கே..
'குதிரை' கிடைத்ததும் எக்கச்சக்க சந்தோஷம். என் குதிரைக்குக் கொடுத்த விலை 2,500.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

அது என்ன?என் தேர்வு எண் பெற்றோரில் வராததால்//புரியவில்ல்லை.பதிவு முழுமை பெறவில்லையோ?...ஆனால்,ஒன்று நிச்சயம்.நானும்,பொன்னியின் செல்வன் படித்துவிட்டு,நல்ல புயலில் ஒரு ஓடத்தில்,கடலில் அலைகளுடன் மேல் எழும்பி , விழுந்து புரண்டு...என கற்பனைகள் நீண்டு கொண்டே போகும்.இன்றும் அந்த ஆசை குறையவில்லை.பார்ப்போம்.

ஓகை said...

//அதென்னவோ இப்போ நினச்சாலும் வந்தியத்தேவன் அந்த முதல் அத்தியாயத்தில் குதிரையில் அந்தக் காவேரிக் கரையோரம் போறது கண்ணுக்கு முன்னால வருது.//

வந்தியத்தேவன் அந்த முதல் அத்தியாயத்தில் குதிரையில் வருவது வீராணம் ஏரிக்கரையில்.

பூங்குழலியைப் போலொரு பாத்திரப் படைப்பை அனுபவித்ததில் ஏற்பட்ட பிரமிப்பு எனக்கு அடுத்த பிறவியிலும் தொடரும்.

தருமி said...

பொன்னியின் செல்வன்,
திருத்தி விட்டேன்; நன்றி.

பொன்னியின் செல்வன் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் சரியான பதிவுக்கு வந்துவிட்டீர்களோ?

தருமி said...

ஓகை,
நன்றி.
அதென்னவோ ..பூகோளப் பாடத்தில் எப்பவுமே ரொம்ப வீக். அதோடு, "பொன்னி"யின் செல்வனை காவிரியை விட்டுப் பிரிக்க முடியவில்லை ..

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

அது சரி.தேர்வு முடிவு என்ன?பெரிய மர்மம்..எல்லோரும் மண்டையை உடைத்துக் கொள்ளட்டும் என்ற நினைப்போ?ஹா..எனக்கு தெரியுமே.ஹி,ஹி.

தருமி said...

பொன்னியின் செல்வன்,
ஆமாங்க ஆமா .. நீங்க நினச்சதேதான் !

உண்மைத்தமிழன் said...

தருமி ஸார்.. எனக்கும் என் தந்தை படிக்கக் கற்றுக் கொடுத்த முதல் புத்தகம் அமரர் கல்கி அவர்களுடையதுதான். சிவகாமியின் சபதம். அப்போது கல்கியில் வெளி வந்திருந்ததை பைண்டிங் செய்து வைத்திருந்தார் என் அப்பா. அதன் பின்புதான் பொன்னியின் செல்வனைப் படித்தேன். கீழே வைக்க முடியவில்லை. அவ்வளவு விறுவிறுப்பு.. மிகச் சரியாக நானும் பத்தாம் வகுப்பு தேர்வு நடந்த சமயத்தில் இப்புத்தகத்தைக் கையில் தூக்கிக் கொண்டே திரிந்தேன். கடைசியில் அந்தப் புத்தகம் தொலைந்து போய்விட்டது என்று சொல்லி என்னை ஏமாற்றி பத்தாம் வகுப்புத் தேர்வுக்குப் படிக்க வைத்தார் என் சகோதரி. கடைசி நாள் வரலாறு, புவியியல் தேர்வு எழுதி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது என் அக்கா அதைக் கையில் கொடுத்து இப்ப இதைப் படிச்சுத் தொலை என்றார். இன்றைக்கும் நினைத்துப் பார்க்க இதமாக இருக்கிறது.

அதில் எனக்குப் பிடித்தது குந்தவையும் வானதியும் அவரவர் காதலர்களைப் பற்றிப் பூடகமாகப் பேசும் பேச்சுக்கள் அனைத்தும். அப்பா.. தமிழில் இவ்ளோ வார்த்தைகளா என்று என்னை யோசிக்க வைத்தது. இப்போதும் தமிழில் படிக்க நினைப்பவர்களுக்கு நான் சிபாரிசு செய்யும் புத்தகம் இதுதான்..

அப்புறம் பேராசிரியரே.. அந்த "பத்தாம் கிளாஸ் நம்பரை பேப்பர்ல காணோம்.." மேட்டர் சஸ்பென்ஸா இருக்கே? நான் வேற இனமானப் பேராசிரியர்ன்னு சொல்லிருக்கேன்.. காப்பாத்துங்க ஸார்.. அப்புறம் எனக்கு இங்க சங்கு ஊதிருவாங்க.. ))))))))

Gnaniyar @ நிலவு நண்பன் said...

"என் வாசிப்பு "என்னை வாசிக்கத் தூண்டுகிறது

தென்றல் said...

தருமி, நல்லா இருக்குங்க.. உங்க வாசிப்பு அனுபவம்....! அதுவும்...

/பெரிய ஆளா ஆனதும் சைக்கிள், கார் வாங்கினாலும் ஒரு குதிரையும் வாங்கி அதில் வந்தியத்தேவன் மாதிரி போக வேண்டுமென்று ஆசைப்பட்டதை இப்போது வெளியே சொன்னால் எல்லோரும் சிரிப்பீர்களோ? போங்க .. போங்க .. சிரிச்சா சிரிச்சிட்டுப் போங்க!
/
;) :)

'கல்கண்டு-தமிழ்வாணன்' சொன்னவுடனே... கல்கண்டு- ல வர லேனா தமிழ்வாணனின் 'ஒரு பக்க கட்டுரைகள்' ரொம்ப விரும்பி படிப்பேன். (இன்னும் வருதானு தெரியல ?) அதப்பார்த்துட்டு, என் நண்பன் 10 பாகங்கள் கொண்ட லேனா தமிழ்வாணனின் 'ஒரு பக்க கட்டுரைகள்' எனக்கு பிறந்த நாள் பரிசா கொடுத்தான்... இன்னும் 'என் நூலகத்தில்' பத்திரமாக இருக்கிறது.. அன்பின் அடையாளமாக ...

தருமி said...

உண்மைத் தமிழன், (அப்புறம் நாங்களெல்லாம் யாருங்க?)

உங்களுக்கு முதல் புத்தகமே கல்கியா...ரொம்பத்தான் இருக்கு GENERATION GAP :)

எங்க S.S.L.C.அப்டிங்கிறது 11-ம் வகுப்புங்க

//மேட்டர் சஸ்பென்ஸா இருக்கே? //
என்னங்க சஸ்பென்ஸ்..?
அதான் பொன்னியின் செல்வனே சொல்லிட்டாங்கல்லா!

அதென்னங்க, நமக்கு இப்படி ஒரு பட்டம் கொடுத்திட்டீங்க..?? !!!

தருமி said...

நிலவு நண்பன், தென்றல்,
வரவேணும் .. வரவேணும் ..முதல் தடவைன்னு நினைக்கிறேன்.

நன்றி.


தென்றல்,
இங்கேயும் ஒரு தலைமுறை இடைவெளி !!
நான் சொல்றது அப்பா (ஒரிஜினல்!) தமிழ்வாணன்; நீங்க சொல்றது மகன் தமிழ்வாணன் !

உண்மைத்தமிழன் said...

//உண்மைத் தமிழன், (அப்புறம் நாங்களெல்லாம் யாருங்க?)

உங்களுக்கு முதல் புத்தகமே கல்கியா...ரொம்பத்தான் இருக்கு GENERATION GAP :)

எங்க S.S.L.C.அப்டிங்கிறது 11-ம் வகுப்புங்க//

ஐயா சத்தியமா நீங்களும் உண்மைத்தமிழர்கள்தாங்க.. என்ன விஷயம்னா நிஜமா கடந்த 10 வருஷமா என்கிட்ட பழகுற எல்லாரும் சொல்ற ஒரு வார்த்தை.. "ரொம்ப உண்மை பேசுற கண்ணா.. இது மெட்ராஸ¤க்கு உதவாது.. சீக்கிரமா திண்டுக்கல்லுக்கு பேக்கப் ஆகப் போற.. ஜாக்கிரதை.. பட்.. பட்டுன்னு பேசாத.. விட்டுக் கொடுத்துப் போ.." அப்படி இப்படின்னு டெய்லி அட்வைஸ் மழைதான்.

அப்ப இருந்தே இந்த 'உண்மை'ன்ற வார்த்தை நம்ம வாழ்க்கைல டெய்லி ஒலிச்சிருச்சுங்கய்யா..

நிஜமா என் வலைத்தளத்துக்கு நான் மொதல்ல வைச்சிருந்த பேரு 'உண்மைவிளம்பி.'. அப்படியே வைச்சு அதுலயே மேட்டரையெல்லாம் ஏத்தி வைச்சிருந்தேன்.

திடீர்ன்னு பல பேரோட வலைத்தளத்தை மேய்ஞ்சிட்டிருக்கும்போது 'தமிழ், தமிழர், தமிழன், தமிழர்கள்'னு ஒரே தமிழா இருந்துச்சா.. சரி 'உண்மைத்தமிழன்'னு பேர் போட்டு இவுககிட்ட கேள்வி கேட்டா எப்படியிருக்கும்னு மனசு தோணுசச்சு.. டக்குன்னு அந்த வலைத்தளத்தை ஒரே நிமிஷத்துல டெலிட் பண்ணிட்டு இதை ஓப்பன் பண்ணிடடேன்..

'என்னை'யச் சொன்னாலும் 'நம்மளை'ச் சொன்னாலும் ஒண்ணுதானுங்கய்யா..

அப்புறம் பாருங்க.. பொன்னியின் செல்வன் லேசா கோடு போட்டுக் காட்டியிருந்தும் நம்ம புத்திக்கு வரலீங்க ஐயா.. உங்க 11-ப்பூ.. பியூஸின்னு சொல்ற பழைய செலபஸ்னு.. எங்கண்ணன்தான் அந்த செலபஸோட கடைசி பேட்ச். சொல்லிருக்காரு.. ஆனா இப்ப மறந்து போச்சு.. (உண்மைக் காரணம் : நீங்கள் 'வயதானவர்' என்ற எண்ணம் அப்போது எனக்குத் தோன்றவில்லை)

பட்டம் கொடுத்ததுக்குக் காரணம் வேற ஒண்ணுமில்லீங்க.. நீங்க கணீர் குரல்ல அஞ்சாம, கெஞ்சாம, நோகாம பேசுனீங்க பாருங்க.. அதான்.. நம்ம ஒரு பிட்டை போட்டு வைச்சிருந்தா, அங்கிட்டு வரும்போது ஒரு வாய் காபித்தண்ணி குடிச்சுக்கலாம்னுதான்..

நானும் மதுரைல எட்டு வருஷம் இருந்தேனுங்கய்யா.. சொக்கிகுளம்.. லேடி டோக் காலேஜுக்கு நேர் எதுத்தாப்புலதான் வீடு.. அது ஒரு தனி சோகக்கதைங்கய்யா.. தனிப்பதிவா போடலாம்னு எழுதி வைச்சிருக்கேன்.. அது போயிருச்சு 85 பக்கத்துக்கு மேல.. எப்ப வேணும்னு சொல்லுங்க.. போட்டுடறேன்..

தருமி said...

உண்மைத் தமிழன்,

// 'உண்மைத்தமிழன்'னு பேர் போட்டு இவுககிட்ட கேள்வி கேட்டா எப்படியிருக்கும்னு மனசு தோணுசச்சு.. //

ஓ! "உண்மை பேசும் தமிழன்" அப்டின்றதை உண்மைத் தமிழன் அப்படின்னு போட்டுக்கிட்டீங்களோ? சரி..சரி..

//'என்னை'யச் சொன்னாலும் 'நம்மளை'ச் சொன்னாலும் ஒண்ணுதானுங்கய்யா..
//
அதுவும் சரிதான் .. மதுரையும் திண்டுக்கல்லும் .. ஒண்ணுக்குள்ள ஒண்ணு ..

//நீங்கள் 'வயதானவர்' என்ற எண்ணம் அப்போது எனக்குத் தோன்றவில்லை//
ஆரு.. உங்க அண்ணனைச் சொல்லுதியளா ..? :)

85 பக்கம் சுயசரிதை எழுதிட்டீங்களா? பரவாயில்லைங்க ... நானும் எழுதணும்னுதான் நினைக்கிறேங்க ..ஆனா முடியலை. முயற்சிக்கணும். உங்க கதைய எடுத்து உடுங்களேன் - பகுதி பகுதியா.

பட்டத்துக்கு - சரியோ, தப்போ - நிச்சயமாக காப்பித் தண்ணி உண்டு. வந்திருங்க.

Thekkikattan|தெகா said...

த்தரும்மி,

ஒரு குதிரையும் வாங்கி அதில் வந்தியத்தேவன் மாதிரி போக வேண்டுமென்று ஆசைப்பட்டதை இப்போது வெளியே சொன்னால் எல்லோரும் சிரிப்பீர்களோ? //

அது எப்படிங்கானும் எனக்கு வந்த அதே ஆசையும், பிறகு முதல் நாள் மாலை, "மாலை மலரில்" காணாமல் போன எனது பத்தாவது பரீட்சை எண் போலவே உங்களுக்கும் நடந்திருப்பது கண்டு ஆச்சர்யமாக இருக்கிறது. ஏதோ ஒரு மிஸ்ஸிங் லிங்க் நம்மை இணைப்பதைப் போல ஒர் உணர்வு...

நல்லா இருக்கீகளா....?? இப்ப தெக்கிக்காட்டான் சிக்கிக்கிட்டான் :-)))

தருமி said...

டெல்பின்,
ஹி .. ஹி .. குழல்விளக்கு ..!!

தருமி said...

ஹாய் தெக்ஸ்,
looooong time... nooooooooo see !!

என்னப் பொருத்தம் இந்தப் பொருத்தம் !

ஒரு வழியா வந்துட்டீக .. இனிம ஆவர்த்தனத்த ஆரம்பிச்சிர வேண்டியதுதானே .

S Murugan said...

தருமி அவர்களே, உங்களின் 'என் வாசிப்பு' என் வாசிப்பாகவே இருந்தது.நான் சிறு வயதில் நூலகத்தில் முடங்கிக் கிடந்த நாட்களை 'என் வாசிப்பு' நினைவு படுத்திவிட்டது.

Post a Comment